இந்த வலையில் தேடவும்

Wednesday, October 13, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-7


கோவணத்தாண்டி சொல்வது:

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமே மிகுந்த
நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
வீடோ புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றிலீசா, உயிர்த்துணை நின்பதமே.

மஹிதர் சொல்வது:

ஓலை விஷயம் நடந்து சரியாக மூன்று நாட்களாகி விட்டிருந்தன....கனவு மறுபடியும் வரவில்லை....சரி இந்த விஷயம் இப்படியே சரியாகி விடும் என்று திடமாக நம்பினேன்.....அன்று கடையில் அதிகம் கூட்டம் இல்லை என்பதால் சீக்கிரமே பூட்டி விட்டு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குவந்தேன்....அன்று நிமிஷாவை சந்திப்பதாகச் சொன்னதையும் தள்ளி வைத்து விட்டேன்,,,,,,

சென்னை தன் வெப்பப் போர்வையை தற்காலிகமாக கழற்றி விட்டிருந்தது...சூழ்நிலை மனதிற்கு இதமாக இருந்தது...

வீட்டுக்கு வந்ததும் மாலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா "என்னடா சீக்கிரமே வந்துட்ட? அதிசயம்" என்றார்...

"சும்மா தாம்பா" என்றேன்......

அம்மா சமையல் அறையில் பஜ்ஜி செய்து கொண்டிருந்தாள் போலிருந்தது .....சூடான பஜ்ஜியையும் காபியையும் கொண்டு வந்தாள்...

"இந்தா மஹி சாப்பிடு" ....

அம்மா ஒரு வெகுளியான ஆள்...தெய்வ பக்தி அதிகம் உள்ளவள்....கோவில் குளம் என்று போவதென்றால் உயிர்...அப்பாவும் ரிடையர் ஆகி விட்டதால் ரெண்டு பேருமாக அடுத்த மாதம் காசி டூரெல்லாம் போகிறார்கள்....அம்மாவுக்கு என் மீது கொஞ்சம் பாசம் அதிகம்...நான் நண்பர்கள் பார்ட்டி என்று ஊர் சுற்றுவது மட்டும் கொஞ்சம் பிடிக்காது....

"அம்மா இன்னிக்கு பெருமாள் கோவிலுக்கு போறியா? நானும் வரேனே? கார்லயே போலாம்" என்றேன் ...ஏனோ கோவிலுக்குப் போனால் கொஞ்சம் வேறுபட்ட மனநிலை கிடைக்கும் என்று தோன்றியது...
அம்மா "மஹி நீ தான் பேசறியா? பர்த் டே அன்னிக்கு கூட கோயிலுக்கு வராத நீ இன்னிக்கு என்னடான்னா நீயே கோயிலுக்கு போலாம்கற? கனவுல சாமி எதாச்சும் வந்து நல்ல வார்த்தை சொல்லுச்சா"

"கனவுல கழுகு தான் வருது" என்று சொல்ல வந்தவன் "அதல்லாம் ஒண்ணும் இல்லைம்மா ....சும்மா என்னவோ இன்னிக்கு போலாம்னு தோணுச்சு" என்றேன்,,,,,

"சரி ஒரு ஆறே முக்காலுக்கு கிளம்பலாம்.....மஹதியும் டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு வந்துருவா...அவளும் வரட்டும்"...என்றாள் அம்மா ...

மஹதி என் தங்கை...அழகான, அறிவான பெண்...B .E படித்து விட்டு ஒரு எம்.என்.சியில் வேலையில் சேருவதற்கு காத்திருக்கிறாள்....

பெருமாள் கோவிலுக்குப் போவதற்கு ஏழு மணி ஆனது....கோவிலில் கணிசமான கூட்டம் இருந்தது....அன்று ஏதோ ஏகாதசியாம்....பட்டை நாமம் அணிந்த ஒரு ஐயங்கார் மைக்கின் முன் அமர்ந்து ஏதோ பக்திக் கதைஒன்று சொல்லிக் கொண்டிருந்தார்.....

கடவுளுக்கு தீபாராதனை காட்டிய போது சில நொடிகள் மனம் ஒன்றினேன்....கனவு பற்றியெல்லாம் மறந்து போய் மனம் சுத்தமானது போன்ற ஓர் உணர்வு வந்தது....

கோவிலை வலம் வரும் போது மஹதி "என்னண்ணா யாராவது அய்யங்கார் வீட்டு அழகை லவ் பண்ணறியா? இன்னிக்கு உலக அதிசயமா கோயிலுக்கெல்லாம் வந்திருக்க ?" என்றாள்...

நான் ஒரு சென்டிமீட்டர் புன்னகை செய்தேன்...நிமிஷா விஷயத்தை இன்னும் வீட்டில் சொல்லவில்லை.....கூடிய சீக்கிரம் சொல்லி விட வேண்டும்...

அங்கே ஒரு ஓரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் வீதிவலம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தார்....சிலர் பெருமாள் வைக்கப் பட்டிருந்த பீடத்தை தூக்கினார்கள்.....

யாரோ ஒருவர் "ஒரு ஆள் குறையறது....யாராச்சும் வாங்களேன்" என்றார்...

நான் கேட்காதது போல நின்று கொண்டிருந்தேன்....

"மஹி போயேண்டா...அதிசயமா கோயிலுக்கு வந்திருக்க....புண்ணியம் கிடைக்கும் ...சீக்கிரம் கல்யாணம் ஆகும் போ" என்றாள்...

நான் போய் அதன் கழியைப் பிடித்து தோளில் ஏற்றினேன்..... இதெல்லாம் எனக்கு பழக்கமில்லாத விஷயங்கள்....எப்படியோ சமாளித்து பாலன்ஸ் செய்தேன்...அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்த்ததில் பெருமாளை கம்பீரமாக சுமந்து கொண்டிருந்த கருடன் கொஞ்சம் பயமுறுத்தியது.....

கோவிலை சுற்றி ஒரு சிறிய வீதியில் வட்டம் அடித்துத் திரும்பினோம்....

அங்கிருந்து திரும்பி வரும் போது காரில் "இன்னைக்கு மஹி வந்தது அதிசயம்டி..அதுவும் அவன் அதிர்ஷ்டம் இன்னைக்கு சாமியையே சுமக்கற பாக்கியம் கிடைச்சிருக்கு " என்றாள் அம்மா மஹதியைப் பார்த்து....

"அம்மா சாமியை சுமக்குற கருடனையும் சேர்ந்து சுமக்கற பாக்கியம்னு சொல்லுங்க...."என்ற அவள் "ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா ஏதோ மேட்டர் இருக்கு" என்றாள்...

"அதல்லாம் ஒண்ணும் இல்லை...கோயிலுக்கு வராட்டியும் திட்டறீங்க...வந்தாலும் கலாய்கறீன்களே" என்றேன்....
வீட்டுக்கு வருவதற்கு எட்டரை மணி ஆகி விட்டிருந்தது...

"மஹா நீ எப்ப ஜாயின் பண்ணனும்" என்று கேட்டேன்....

வேலை கிடைத்து மூன்று மாதமாக சும்மா இருக்கிறாள்...

"இன்னும் டேட் கன்பார்ம் ஆகலைண்ணா..இன்னொரு தடவை மெயில் பண்ணி கேக்கறேன்" என்றாள்....

சாப்பிட்டு முடித்து என் அறைக்கு சென்றேன்...

டி.வியை ஆன் செய்தேன்...ஏதோ ஒரு திரைப்படத்தின் டிரைலர் எழுநூறாவது முறையாக ஸ்க்ரீனில் ஓடிக் கொண்டிருந்தது....

அணிந்திருந்த சட்டையைக் கழற்றும் போது சில நாணயங்கள் கீழே விழுந்தன....அதனுடன் ஏதோ ஒரு சிறிய பொட்டலமும் விழுந்தது.....பிரித்துப் பார்த்த போது அது ஒரு குங்குமப் பொட்டலம்....அது எப்படி என் பாக்கெட்டில் வந்தது என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தும் தெரியவில்லை....யாராவது போட்டார்களா? அந்தக் கோவிலில் குங்குமம் பொட்டலம் கட்டி எல்லாம் கொடுக்க மாட்டார்கள்....

மறுபடியும் மடித்து வைக்கும் போது தான் அதில் ஏதோ எழுதியிருப்பது போல தோன்றியது....எனக்கு மெல்ல வியர்க்கத் தொடங்கியது....

கோவிலில் பார்த்த கருட வாகனத்தின் முகம் ஒரு முறை மனத்தில் தோன்றி மறைந்தது....

~தொடரும்

முந்தைய அத்தியாயங்கள்:1 2 3 4 5 6

2 comments:

எல் கே said...

romba mirattareenga

Anonymous said...

interesting.