இந்த வலையில் தேடவும்

Friday, June 22, 2012

கலைடாஸ்கோப்-67

லைடாஸ்கோப்-67 உங்களை வரவேற்கிறது.

சில Paradox -களைப் பார்க்கலாம். நன்றி: இங்கிலீஷ் விக்கிபீடியா

முதலில் மோன்டி-ஹால் முரண்:


கேம் ஷோ ஒன்றில் உங்கள் முன் மூன்று கதவுகள் இருக்கின்றன. கதவுகளில் ஒன்றின் பின் ஒரு விலை உயர்ந்த பரிசு காத்திருக்கிறது. (உதா: கார்) மற்ற இரண்டு கதவுகளின் பின்னும் ஆடுகள் மட்டுமே இருக்கின்றன (உங்களை 'பக்ரா' ஆக்குவதற்கு). நீங்கள் முதலில் ஒரு கதவை தேர்ந்தெடுக்க வேண்டும்.(ஆனால் அதைத் திறக்கக் கூடாது) கேம் ஷோ நடத்துனருக்கு எந்தக் கதவின் பின் எது இருக்கிறது என்று தெரியும். இப்போது அவர் உங்களுக்கு இன்னொரு கதவைத் திறந்து காட்டுகிறார்.அந்த கதவின் பின்னே ஆடு இருக்கிறது (Of course , ஆடு இருக்கும் கதவையே நடத்துனர் திறப்பார்)இப்போது உங்கள் முன் ஒரு சாய்ஸ் வைக்கப்படுகிறது.நீங்கள் முதலில் குறிப்பிட்ட கதவையே இறுதி முடிவாக வைத்துக் கொள்கிறீர்களா இல்லை வேறு கதவுக்கு (மீதமிருக்கும் மற்றொரு கதவு) மாற விரும்புகிறீர்களா என்று.

கணிதவியலாளர்கள், வேறு ஒரு கதவுக்கு முடிவை மாற்றிக் கொள்வதன் மூலம் வெற்றி வாய்ப்பு கணிசமாக அதிகரிப்பதாக சொல்கிறார்கள்.அது எப்படி அதிகரிக்கும்?என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு கதவைத் தேர்ந்தெடுத்த போது வெற்றி வாய்ப்பு மூன்றில் ஒன்றாக இருந்தது. (1 /3 ) இப்போது கதவை மாற்றிக் கொள்வதன் மூலம் வாய்ப்பு மூன்றில் இரண்டாக அதிகரிக்கிறது (2 /3 )எப்படி?

மூன்று கதவுகளில் இருந்து ஆடு இருக்கும் கதவை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறு = 2 / 3 (இரண்டு கதவுகளின் பின் ஆடு இருப்பதால்)

விளையாடுபவர் முதலில் கார் இருக்கும் கதவை சுட்டிக் காட்டினார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது முடிவை மாற்றிக் கொள்வதன் மூலம் அவரால் வெற்றி பெற முடியாது. விளையாடுபவர் ஆடு இருக்கும் கதவை சுட்டிக் காட்டினால் மட்டுமே (முடிவை மாற்றுவதன் மூலம்) வெற்றி பெற முடியும். விளையாடுபவர் ஆடு இருக்கும் கதவை சுட்டிக் காட்டுவதற்கான வாய்ப்பு (2 /3 ) . இது கார் இருக்கும் கதவை சுட்டிக் காட்டுவதற்கான வாய்ப்பை விட அதிகம் (1 /3 ). எனவே முடிவை மாற்றிக் கொள்வது எப்போதும் நன்மை பயக்கும். பின் வரும் அட்டவணையைப் பார்த்தால் இது புரியும்.


இந்த வெப் சைட்டில் போய் இந்த கேமை விளையாடிப் பாருங்கள். கதவை மாற்றிக் கொள்வதன் மூலம் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பதை நீங்களே உணர முடியும். முதலில் பார்க்கும் போது கதவை மாற்றிக் கொள்வதன் மூலம் வெற்றி வாய்ப்பு அதிகரிப்பது odd -ஆகத் தோன்றுகிறது. ஆனால் இதை நிரூபிக்க முடியும். எனவே இது முரண் என்று அழைக்கப்படுகிறது.


அடுத்து வேடிக்கையான ஒரு முரண். ரொட்டி தவறுதலாக கீழே விழும் போது அதன் வெண்ணை தடவிய பக்கமே தரையில் படும் என்பது மெர்பி விதிகளில் ஒன்று. அதே போல பூனை கீழே விழும் போது (எப்படி விழுந்தாலும்) தன் கால்களால் லேண்ட் ஆகும் என்பதும் ஆய்வு செய்யப்பட்ட ஓர் உண்மை.இப்போது இவை இரண்டையும் இணைத்து ஒரு பூனையின் முதுகில் ரொட்டியை அதன் வெண்ணை தடவிய பாகம் மேலே இருக்கும் படி கட்டி பூனையை கீழே வீசினால் என்ன ஆகும்? ??

இரண்டு கூற்றுகள் தனித்தனியாக சரி. அவற்றை ஒன்றிணைத்தால் முரண் !!! சில பேர் கொஞ்சம் ஓவராகப் போய் பூனை ஈர்ப்பை எதிர்த்து மேலேயே நிற்கும் என்கிறார்கள். :) உங்கள் வீட்டில் பூனை, வெண்ணை, ரொட்டி மூன்றும் இருந்தால் இதை மனைவி இல்லாத போது முயற்சி செய்யலாம். பூனை வெண்ணையை தின்று விடாமல் முதலில் பார்த்துக் கொள்வது முக்கியம்.

அடுத்து முதலை முரண். முதலை ஒன்று ஒரு குழந்தையைப் பிடித்துக் கொள்கிறது. அதன் தந்தையிடம் 'நீ நான் இந்தக் குழந்தையை என்ன செய்வேன் என்று சரியாக ஊகித்தால் (தின்று விடுவேனா இல்லை உன்னிடம் தந்து விடுவேனா) மட்டுமே உன் குழந்தையை உன்னிடம் திருப்பித்தருவேன்' என்கிறது.குழந்தையை திருப்பித் தந்து விடுவாய் என்று தந்தை சொன்னால் எந்த முரணும் இல்லை. ஆனால் குழந்தையை தின்று விடுவாய் என்று தந்தை சொன்னால் இங்கே முரண். இரண்டு விதங்களில் இது முரண். முதலை குழந்தையை திருப்பித் தரலாம் என்று நினைத்து , தந்தை தின்று விடுவாய் என்று சொன்னால் தந்தையின் ஊகம் தவறு. எனவே குழந்தை திருப்பித் தரப்பட மாட்டாது. ஆனால் குழந்தை திருப்பித் தரப்பட மாட்டாது என்றால் தந்தையின் ஊகம் சரி . எனவே குழந்தை திருப்பித் தரப்பட வேண்டும். அடுத்து குழந்தையை வைத்துக் கொள்ளலாம் என்று முதலை முடிவெடுத்து தின்று விடுவாய் என்று தந்தை சொன்னால் தந்தையின் ஊகம் சரி. எனவே குழந்தை திருப்பித் தரப்பட வேண்டும். ஆனால் குழந்தை திருப்பித் தரப்பட்டால் தந்தையின் ஊகம் தவறு என்று ஆகி விடும்.

அடுத்து ஜீனோ புதிர்கள்:


முயல் -ஆமை பந்தயத்தில் முயல் எப்போதும் ஆமையை முந்த முடியாது!

ஆமை எப்படியும் தோற்று விடும் என்று முடிவெடுத்த முயல் ஆமையை நீ முதலில் போ, நான் கொஞ்சம் ஓய்வெடுக்கிறேன் என்று கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறது. இப்போது ஆமை நூறு மீட்டர் கடந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.இப்போது முயல் விழித்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறது.முயல் ஆமை கடந்த தொலைவை (100 மீ)அடைய சில நேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் ஆமை சிறிது தொலைவைக் கடந்திருக்கும்.இப்போது அந்தத் தொலைவைக் கடக்க முயலுக்கு சிறிது நேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் ஆமை கொஞ்சம் முன்னேறி இருக்கும்.இப்படியே போனால் கடைசிவரை முயல் ஆமையை முந்தவே முடியாது.


ஓடும் வாகனத்தை ஒருவர் ஓடிப்போய் பிடிக்க முடியாது.

ஓடுபவருக்கும் வாகனத்துக்கும் உள்ள தொலைவைக் கடக்க முதலில் அவர் அந்தத் தொலைவில் பாதியைக் கடக்க வேண்டும். (1 /2 ) அந்தப் பாதியைக் கடக்க அதில் பாதியைக் கடக்க வேண்டும் (1 /4 ). இப்போது அதன் பாதியைக் கடக்க வேண்டும் (1 /8 )
இப்போது அதன் பாதியைக் கடக்க வேண்டும் (1 /16 ) வெளி தொடர்ச்சியானது என்பதால் இப்படி முடிவில்லாத பாதிகளை அவர் கடக்க வேண்டி இருக்கும்.

நகர்வது (motion )என்பது மாயை ...Arrow paradox

நகரும் அம்பு ஒன்றைக் கருதுவோம். நகர்ச்சி என்பது இட மாற்றம். ஒரு குறிப்பிட்ட கணப் பொழுதில் எந்த விட இட மாற்றமும் ஏற்படுவதில்லை.ஒவ்வொரு கணத்திலும் அம்பு நிலையாகவே இருக்கிறது என்றால் அம்பு எப்போதும் நிலையாகவே இருக்கிறது. எனவே இடப்பெயர்ச்சி என்பது மாயை.

ஒரு பொருள் இருப்பதற்கு வெளி (space ) வேண்டும் என்றால் வெளி இருப்பதற்கும் வெளி (space ) வேண்டும்.

சலூன்காரர் புதிர்:

பார்பர் (சலூன்காரர்) ஒருவர் யாரெல்லாம் தாங்களே ஷேவ் (ஸெல்ப் ஷேவிங்) செய்து கொள்ளவில்லையோ அவர்களுக்கு மட்டும் ஷேவ் செய்கிறார்.பார்பர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்கிறாரா?

லாயர் புதிர்:

கில்லாடியான லாயர் ஒருவர் ஒரு ஆளை தன்னிடம் மாணவனாக சேர்த்துக் கொள்கிறார். ஆனால் அவனிடம் பணம் இல்லை. எனவே தனக்குரிய பீஸை அவன் தன் முதல் கேஸில் ஜெயித்த பின் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். கோர்ஸ் முடிந்ததும் அவர் கோர்ட் ஏறி விடுகிறார். இந்த ஆள் எனக்குரிய பணத்தைத் தராமல் ஏமாற்றி விட்டான் என்று. கோர்டில் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் பணம் இவருக்குக் கிடைத்து விடும். மாணவனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் (மாணவன் தான் எதிர் தரப்பு வக்கீல்.) அவன் தன் முதல் கேசை ஜெயித்ததாக ஆகி விடும்.எனவே இரண்டு விதத்திலும் அந்த ஆள் லாயருக்குப் பணம் தர வேண்டும்.

ஆனால் அந்த கில்லாடி மாணவன் இப்படி விவாதிக்கிறான்: கோர்ட் எனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால் நான் உங்களுக்கு பணத்தைத் தர வேண்டியதில்லை (கோர்ட்டே சொல்லி விடுகிறது) கோர்ட் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினால் நீங்கள் தான் ஜெயித்தீர்கள். நான் தோற்று விட்டேன். எனவே நம் ஒப்பந்தத்தின் படி நான் உங்களுக்கு பணம் தர வேண்டியது இல்லை.

இந்த இரண்டில் யாருடைய வாதம் சரி??

exception paradox :

ஒவ்வொரு விதிக்கும் விதிவிலக்கு உண்டு. எனவே ஒவ்வொரு விதிக்கும் குறைந்தபட்சம் ஒரு விதிவிலக்கு அவசியம். ஆனால் இந்த விதிக்கு விதிவிலக்கு அவசியம் இல்லை.

மேலும்:

'இந்த வாக்கியம் தவறானது'

-எதுவுமே நிரந்தரம் அல்ல என்பதே நிரந்தரம்

-ஒவ்வொன்றுக்கும் எதிர் உண்டு. இதன் படி 'ஒவ்வொன்றுக்கும் எதிர் உண்டு' என்ற வாக்கியத்திற்கும் எதிர் உண்டு. எனவே ஒவ்வொன்றுக்கும் எதிர் இல்லை.

-நம்மால் எதையும் தீர்மானமாக சொல்ல முடியாது. (இதை மட்டும் எப்படி தீர்மானமாக சொல்ல முடியும்?)

card paradox :

அட்டை ஒன்றில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

முன் அட்டையில்: பின் அட்டையில் இருக்கும் வாசகம் உண்மை.
பின் அட்டையில்: முன் அட்டையில் இருக்கும் வாசகம் பொய்.


ஒருவன் பொய் சொல்லும் போதெல்லாம் அவன் மூக்கு நீள்கிறது. 'என் மூக்கு இப்போது நீள்கிறது' என்று அவன் சொல்கிறான். இப்போது என்ன ஆகும்?


ஓஷோ ஜோக்:

ஆங்கில ப்ரொபசர் ஒருவர் டாய்லெட் போய் விட்டு தன் மேட்டரை உள்ளே போட மறந்து விட்டார்.அப்படியே பஸ்ஸில் ஏறி விட்டார். தர்ம சங்கடம் அடைந்த பெண் ஒருத்தி 'ப்ரோபெசர் , உங்கள் லூலூ வெளியே தொங்குகிறது' என்று சொன்னாள்...

டென்ஷன் அடைந்த ப்ரோபெசர் , 'என்ன பேசறீங்க, உங்க இலக்கணம் தப்பு, வெளியே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று present continuous tense ' உபயோகிக்கணும் என்றார்.


கணிதப் பேராசிரியர் ஒருவர் ஏர்போர்டில் பிடிக்கப்பட்டார். பெட்டியின் உள்ளே பயங்கரமான பாம் வைத்திருந்தார்.

'இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்
ப்ரொபெசர்?' என்றார் பாதுகாப்பு அதிகாரி.

'பயணிகளின் பாதுகாப்பு கருதி தான் இதை எடுத்து வந்தேன். ஒரே விமானத்தில் இரண்டு பேர் பாம் வைத்திரு
ப்பதற்கான நிகழ்தகவு கிட்டத்தட்ட பூஜ்ஜியம்' என்றார் அவர்.


சமுத்ரா

Thursday, June 21, 2012

கலைடாஸ்கோப் -66

லைடாஸ்கோப் -66 உங்களை வரவேற்கிறது.


பூனைகளைப் பற்றிய ஒரு கவிதை. -மனுஷ்யபுத்திரன்

பூனை
எச்சரிக்கை உணர்வுள்ள மிருகம்
மழைக்கான அறிகுறி துவங்கும் முன்பே-அது தன்
குட்டிகளை எங்கோ ஒளித்து வைத்துவிடுகிறது.
பூனை உள்ளுணர்வுள்ள ஒரு மிருகம்
எந்த இருட்டிலும் அதற்குத்
தன் பாதைகள் தெரியும்.
பூனை நம்பிக்கையுள்ள ஒரு மிருகம்
எத்தனை நேரம் ஆனாலும் அது
எனக்காகக் காத்திருக்கிறது.
பூனை பிடிவாதமுள்ள ஒரு மிருகம்
அது தனக்கான உணவைப் பெற்றுக் கொள்ளும்வரை
அங்கேயே நின்று கொண்டிருக்கிறது.

-இப்படி நீள்கிறது அந்தக் கவிதை.

எந்த மிருகத்திற்கும் இல்லாத ஓர் அழகு பூனைக்கு இருப்பது போலத் தோன்றுகிறது. மனிதர்களை பயமுறுத்தாத அதன் அளவான உருவம், சிறிய புடைத்த காதுகள், கூர்மையான கண்ணாடி போன்ற கண்கள், மெத்தென்ற உடல்...சில சமயங்களில் பூனை தவம் செய்யும் ஒரு ஞானியைப் போல் மோன நிலையில் உட்கார்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.எனக்கு நாய்களை விட பூனைகளைத் தான் அதிகம் பிடிக்கும். வீட்டுக்கு புதிதாக வருபவர்களை '
ள்' என்று எரிந்து விழுந்து எந்தப் பூனையும் பயமுறுத்துவதில்லை.தங்கள் எஜமான விசுவாசத்தை அந்தப் பிராணிகள் மிகவும் delicate ஆக சூக்சுமமாகவே வெளிப்படுத்துகின்றன .நாய்களைப் போல மேலே வந்து விழுந்து உடலெங்கும் நாக்கால் வருடாமல் நம் கால்களை நாணத்தோடு உரசுகின்றன.மனிதர்களின் மன நிலையை பூனைகள் நாய்களை விட அதிகமாகவே புரிந்து கொள்கின்றன என்றே தோன்றுகிறது.

பூனை, குட்டி போடும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் மெனக்கெடுகிறது. மனித இனம்தான் அடிவயிற்றில் லேசாக வலிவந்தாலே ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறது.பெரும்பாலான மிருகங்கள் SELF DELIVERY தான் செய்து கொள்கின்றன. பீரோக்களின் அடியில், டி.வி வாங்கிய அட்டைப்பெட்டியில், பழைய துணிக்கூடையில், வீட்டு உத்திரத்தில் என்று பூனை தன் குட்டிகளை மிகவும் பாதுகாப்பாக வைக்கிறது.கொஞ்சம் ஆபத்து என்று தெரிந்தாலும் உடனே இடம் மாற்றி விடுகிறது.குட்டிப் பூனைகள் சுற்றி விளையாடிக் கொண்டிருக்க தன் வாலை மட்டும் அசைத்தபடி அரைக்கண் மூடிப் படுத்திருக்கும் தாய்ப் பூனையைப் பார்ப்பது ஒரு பரவசம்!

பூனைகளிடம் இருந்து நாம் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஓஷோ சொல்வது போல RELAXED YET WATCHFUL என்ற விழிப்பு நிலையும் ஓய்வும் கலந்த ஒரு நிலையில் பூனைகள் இருக்கின்றன. நாம் விழிப்பு நிலையில் ஓய்வை மறந்து விடுகிறோம்! பசித்திருந்தாலும் பூனை தன்னை சுத்தம் செய்து கொள்ள மறப்பதே இல்லை. வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் பூனை தன் உடலை வளைத்து எத்தனை குறுகிய இடத்திலும் நுழைந்து முன்னேறிக் கொண்டே இருக்கிறது.பூனை தன்மானம் உள்ள மிருகமும் கூட. பல சமயங்களில் நாம் நிராகரித்த உணவை அது தொடுவதே இல்லை.

என்னதான் வீட்டில் பாலும் தயிரும் போட்டு வளர்த்தாலும் பக்கத்து வீட்டு சமையல் அறையை நோண்டி தயிரும் பாலும் திருடுவதில் சுகம் காண்பதில் பூனை கிருஷ்ண பரமாத்மாவை ஒத்துள்ளது.

பூனை நான்காவது மாடியில் இருந்து குதித்தாலும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்து விடும் என்று படித்த ஞாபகம். அது கீழே லேன்ட் ஆகும் போது தன் உடலையே ஒரு பாராசூட் போல செயல்படுத்துகிறதாம்!

சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் பிங்கி என்ற பூனை இருந்தது. எங்களுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தது. ஒரு முறை நான்கு குட்டிகளைப் போட்டிருந்தது. நான்கு நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல வீட்டை விட்டு எங்கோ சென்றது. ஆனால் பாவம் திரும்பி வரவே இல்லை.என்ன ஆயிற்று, நாய் கடித்து விட்டதா, வாகனத்தில் அடிபட்டு விட்டதா ஒன்றும் தெரியவில்லை. குட்டிகள் பாலுக்காக கத்தத் தொடங்கின. தேங்காய்த் தொட்டியில் வைத்த பாலையும் குடிக்கத் தெரியவில்லை. கடைசியில் குட்டிகள் கண் முன்னே சாவதை விரும்பாத நாங்கள் ஒரு சாக்கில் போட்டு தொலைதூரத்தில் விட்டு வந்து விட்டோம்.இப்போது நினைத்தாலும் மனதை கனமாக்கும் நிகழ்வு அது.


இந்த லிங்கில் எறும்புகளோடு பேச்சுவார்த்தை என்ற கவிதை உள்ளது. எழுதியது வைரமுத்து. படித்துப் பாருங்கள்.
Yesterday I played golf at 11:30 pm, and the day before I went for a long walk at 2 am. It doesn't matter what time it is, and I need less sleep. Simon Wilson, England


பூமியின் (வட அரைக்கோளத்தின்) 'மிக நீண்ட நாள் ' நேற்று வந்திருக்கிறது. (பொதுவாக ஜூன் 21 ). பகல் பொழுது மிக அதிகமாக இருக்கும் நாள்.ஆங்கிலத்தில் இதை Summer Solstice என்று அழைக்கிறார்கள். நமக்கு வெய்யில் காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்ட போதிலும் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் இது வேனிற்காலத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

இப்போது இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தில் சூரியனின் நிலையை வைத்துக் கொண்டு அதன் நேரத்தை ஊகியுங்கள். 6 -7 am என்றோ 6 -7 pm என்றோ சொன்னால் நீங்கள் தப்பு. இந்தப் படம் நடு ராத்திரிக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டது. 'நார்வேயில்' .. இப்போது நார்வே நாட்டுக்கு சுற்றுலா சென்றால் அதன் 'நள்ளிரவு' சூரியனை (Mid night Sun ) நாம் தரிசிக்க முடியும்.வருடத்துக்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அங்கே சூரியன் முழுவதும் மறைவதே இல்லை. தொடுவானத்துக்கு அருகிலேயே எதையோ மறந்து விட்டது போல தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. 'சூரியன் மேற்கே மறைய மறந்தாலும்' 'கிழக்கே உதிக்க மறந்தாலும்' 'விடியாத இரவென்று ஏதும் இல்லை' போன்ற புளித்துப் போன இலக்கிய/சினிமா டயலாக்குகள் வடக்கே நகர நகர செல்லுபடியாகாது.வட துருவத்தில் இன்னும் மோசம். வருடத்துக்கு ஒருமுறை தான் சூரிய உதயம்/அஸ்தமனம்.

வட துருவத்துக்கு அருகேயுள்ள கனடா போன்ற நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களை இது குழப்புகிறது.கோடையில் இரவு ஒன்பது மணிவரை வெளிச்சம் இருக்கிறது. குளிர் காலத்தில் மூன்றரை மணிக்கே இருட்டத் தொடங்கி விடுகிறது. ஆபீஸ் ஆன்சைட்டில் கனடா சென்றிருந்த போது இந்த விஷயங்கள் புதுமையாக இருந்தன.இரவு ஒன்பது மணிக்கு சூரியனைப் பார்ப்பது பரவசமாக இருந்தது.மேலும் அவர்கள் DAY LIGHT SAVINGS என்று சொல்லி கோடையில் வேண்டுமென்றே கடிகாரங்களை ஒரு மணி நேரம் Advanced ஆக திருப்பிக் கொள்கிறார்கள். உண்மையில் காலை ஐந்து மணி தான் ஆகியிருக்கும். ஆனால் ஆறுமணி என்று வைத்துக் கொள்கிறார்கள்.பகல் வெளிச்சத்தை பயன்படுத்திக் கொண்டு மின் விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்று அப்படி செய்கிறார்கள்.'கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி' என்று அஜீத் பாடுவது போல. கனடா ஆபீசில் இன்னும் கடிகாரங்களை அட்ஜஸ்ட் செய்யாதவர்கள் ஒருமணிநேரம் முன்னதாக வைத்துக் கொள்ளவும் என்று அறிவிப்பு செய்தது புதுமையாக இருந்தது.

வெளிநாட்டு சுற்றுலாவில் என் முதல் சாய்ஸ் 'நார்வே' தான்...இந்த ப்ளாக்கின் வாசகர்கள் யாராவது ....(வேண்டாம்..சாரு லெவலுக்கு பில்ட் அப் இப்போதே வேண்டாம்)ஒரு வாரத்துக்கு முன், நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த போது PLAY CHESS AGAINST COMPUTER என்ற ஒரு லிங்க் இருந்தது.சும்மா விளையாடிப் பார்ப்போமே என்று விளையாடத் தொடங்கியதில் இருந்து செஸ் ஆர்வம் தொற்றிக் கொண்டு விட்டது. ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டர் தான் ஜெயிக்கிறது என்பது வேறு விஷயம்.சுமார் இருபது move -களுக்குப் பிறகு எப்படியோ checkmate வைத்து விடுகிறது.!

தன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை அதிகம் மாறாத ஒரே விளையாட்டு சதுரங்கம் என்கிறார்கள். என்னதான் இந்த விளையாட்டு மனிதனுள் இருக்கும் போர்
க்குணத்தை, வன்முறையை அதிகரிக்கிறது (எப்படா அடுத்தவனை வெட்டலாம்) என்று ஒரு சாரார் குற்றம் சாட்டினாலும் செஸ் பொதுவாக மனிதனின் புத்திக் கூர்மையை, பிரச்சனைகளை சுலபமாகத் தீர்க்கும் Problem solving skill களை ,முடிவெடுக்கும் திறமையை, பின்னால் வரும் சிக்கல்களை முன்பே ஊகிக்கும் திறமையை வெகுவாக வளர்க்கிறது என்கிறார்கள்.முடிந்தால் பள்ளிகளில் செஸ் விளையாட்டை கட்டாயமாக்குவது நல்லது. விஸ்வநாதன் ஆனந்த் அளவு சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாவிட்டாலும் CHESS IS FUN !

ஒரு விதத்தில் நம் வாழ்க்கையே ஒரு மிகப் பெரிய சதுரங்க விளையாட்டு தான். விதி நமக்கு எதிராக காய்களை அனாயாசமாக நகர்த்துகிறது. சில சமயம் விதியை நாம் வென்று விடுகிறோம். அல்லது வெல்வதாக நினைத்துக் கொள்கிறோம். பல சமயங்களில் விதி நம்மை இங்கும் அங்கும் நகர விடாமல் நமக்கு check mate வைத்து விடுகிறது.அதற்கு நம் அடுத்தடுத்த நகர்ச்சிகளை முன்பே ஊகிக்கும் திறமை இருக்கிறது.

செஸ்ஸில் போர்வீரன் ஒருவன் கட்டத்தின் அடுத்த முனைக்கு போய் விட்டால் அவனுக்கு ராணியின் பலம் வந்து விடும் என்று நமக்குத் தெரியும். எதிரியை மிகவும் பக்கத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.மந்திரி குறுக்கே மட்டும் நகர்கிறது. மந்திரி என்பவர் குறுக்கு வழிகளில் சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.[இதை இன்றைய மந்திரிகளுக்கு சொல்லித் தரவும் வேண்டுமோ?] ராஜா முக்கியம் என்றாலும் அது ஒரு டம்மி பீஸ் . காட்டில் ஆண் சிங்கம் ஹாயாக உட்கார்ந்திருக்க பெண் சிங்கங்கள் வேட்டையாடுவது போல
செஸ்ஸிலும் ராணி மட்டுமே புகுந்து விளையாடுகிறது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பீஸ் யானை தான். நேர்மையான பீஸும் கூட. குறுக்கே வெட்டுவதில்லை. எப்போதும் நேராகவே செல்கிறது. இதனால்தானோ என்னவோ யானையால் வெட்டுப்படுவது அந்த விளையாட்டில் மிகவும் குறைவாக இருக்கிறது.


சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து client ஒருவர் இங்கே ஆபீசுக்கு வந்திருந்தார். வழக்கம் போல எங்கள் மேனேஜர் அவரிடம் ஓவராக வழிந்து கொண்டு மைசூர் , பேலூர் என்று சுற்றிக் காட்டி நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்.இந்தியர்களின் ஒரு விஷயம் தன்னை மிகவும் ஆச்சரியமூட்டுவதாக அந்த client ,மீட்டிங் இன் போது சொன்னார்.அது, இந்தியர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கும் விதம் விதமான , வகை வகையான , கலர் கலரான இனிப்புகள்.வெளிநாட்டில் டோனட் எனப்படும் இனிப்பை விட்டு வேறு பார்த்ததில்லை என்று அவர் சொன்னார்.சர்க்கரையையும் மாவையும் வைத்துக் கொண்டு எத்தனை இனிப்பு காம்பினேஷன் களை இந்தியர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்று வியந்தார்.


ஒரு சிம்பிளான இனிப்பு கூட இல்லாத இந்திய மதிய உணவை நினைத்துப் பார்ப்பது கஷ்டம் தான். வெளிநாட்டில் ஆபீஸ் நண்பர் ஒருவர் இரவு உணவுக்கு அழைத்திருந்தார்.(மனைவியுடன் வந்திருந்தார்). விருந்து தடபுடலாக இருந்தது. ஆனால் ஸ்வீட் செய்ய மறந்து விட்டார் மனைவி. கடைசியில் சாப்பிட்டு கைகழுவும் போது தான் இந்த விஷயம் அவர் மனைவிக்கு ஞாபகம் வந்தது. ஏதோ செய்யக்கூடாத தவறு நிகழ்ந்து விட்டது போல நெர்வஸ் ஆகி விட்டார் அவர் மனைவி. (மிகவும் traditional போலும்)அய்யோ ஸ்வீட் வைக்கவில்லையே, அது தப்பாச்சே என்று கடைசி வரை புலம்பிக் கொண்டே இருந்தார். நண்பர் பிரிட்ஜில் இருந்த சாக்லேட்டை ஸ்வீட்டாக பாவித்து (ஸ்வீட் எடு கொண்டாடு!) சாப்பிடப் பணிக்கும் வரை அவர் ஓயவில்லை. 'இனிப்பு' என்பது இந்தியர்களின் உணவில் எத்தனை முக்கியமான பங்கு வகிக்கிறது பாருங்கள். காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போடுவது போல தான் இந்த இனிப்பு சமாச்சாரமும். எல்லாம் மங்களகரமாக இருக்கிறது என்று மறைமுகமாக அறிவிப்பது!

இனிப்பை வைத்துக் கொண்டு இந்தியர்களிடையே, குறிப்பாக தென்னிந்தியர்கள் , குறிப்பாக பிராமணர்களிடையே நிறைய வேடிக்கைகள் சண்டைகள் நடந்துள்ளன.மைசூர் பாக்கில் எண்ணெய் சேர்த்து விட்டார்கள், ஜிலேபியில் ஸ்வீட் கம்மி, லட்டு கெட்டியாகப் போய் விட்டது போன்ற ஜுஜுபி மேட்டர்களுக்குக் கூட கல்யாணமே நின்று போகும் அளவு கொண்டு வந்திருக்கிறார்கள். அதே போல இனிப்பு இல்லாத பண்டிகைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.ராம நவமிக்குப் பானகம், விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை , கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு ரவாலட்டு என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு இனிப்பை Associate செய்து விட்டோம் நாம்.

எனக்கு பிடிக்காத ஸ்வீட் என்றால் இந்த so called மைசூர் பாக்.என்ன தான் நெய் விட்டு மிருதுவாக செய்திருந்தாலும் மை.பா என்றாலே மைல் தூரம் ஓடி விடுவேன்.மிகவும் பிடித்தது இந்த so called பாதுஷா.குங்குமப் பூவெல்லாம் போட்டு கலர்புல் ஆக இருக்குமே அதே தான்.அதை சாப்பிடும் போதே ஒரு பரவச நிலை உள்ளிருந்து கிளம்பும். ஜிலேபி கூட ஓகே தான். சிக்கலாக இருந்தாலும் சில சமயங்களில் வாழ்க்கை இனிப்பாகவும் இருக்கிறது என்ற தத்துவத்தை (இந்த தத்துவம் சொல்லும் பழக்கத்தை விட மாட்டான் இவன்!)ஜிலேபியில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஜாமூன் ஓகே தான். ஆனால் அது வாயில் வைக்கும் முன்னரே கரைந்து விடுவதால் அதன் மீது எனக்கு ஒரு அன்பான எரிச்சல்! சரி. இனிப்புகளை பற்றிப் பேசி தேவையில்லாமல் உங்கள் நாவின் உணர்ச்சி நரம்புகளை புடைக்க வைத்த பாவம் தீர்வதற்கு சில ஓஷோ ஜோக்குகள்.
ஒரு ஆள் மிக வேகமாக காரை டிரைவ் செய்ததற்காக ட்ராபிக் போலீசால் பிடிக்கப்பட்டான். அதிவேகத்திற்கான தண்டனை சீட்டு எழுதும் முன் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.

" நான் அப்பவே சொன்னேன், கேட்டா தானே நீங்க? இத்தனை வேகமாகவா போறது? அறிவில்லையா? அங்கே ஹாரன் அடிக்க சொன்னேனே ஏன் அடிக்கலை?எத்தனை தடவை சொல்றது? ஸ்பீடா போக வேண்டாம்னு? திருந்தவே மாட்டீங்களா? காசை தண்டம் அழறதே வேலையாப் போச்சு. நான் சொல்லறதை கேட்டாதானே மூளை மளுங்கிருச்சா?"

ட்ராபிக் போலீஸ் சீட்டை கிழித்துப் போட்டு விட்டு ' சார் , நீங்க போங்க, இந்த தண்டனையே உங்களுக்குப் போதும்' என்றார்.

:):):)

முல்லா நசுருதீன் தியேட்டர் ஒன்றில் இண்டர்வல் முடிந்து சீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

வரிசையின் கடைசியில் அமர்ந்திருந்த ஆளைப் பார்த்து 'என்னங்க , நான் போகறப்ப உங்க காலை மிதிச்சுட்டேனா?' என்றார்.

'ஆமாம்' என்றான் அந்த ஆள். முல்லா மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்து.

முல்லா பக்கத்தில் நின்றிருந்த மனைவியிடம் திரும்பி 'அப்பாடா இது நம்ம வரிசை தான். குழப்பம் தீர்ந்துச்சு' என்றார்.

:):):)

முல்லா நசுருதீன் பயங்கரமாகக் குடித்து விட்டு தன் காரில் ஏறிக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ்காரர் பார்த்து விட்டார்.
'நீங்க காரை ஓட்டப் போறதில்லை தானே?' என்று கேட்டார் டிராபிக் போலீஸ்.
'கண்டிப்பா ஓட்டுவேன். என்ன லூசு மாதிரி பேசறீங்க, இப்ப நான் இருக்கிற கண்டிஷன்ல என்னால எப்படி நடந்து போக முடியும்' என்றார் முல்லா.

:):):)

சமுத்ரா

Friday, June 15, 2012

அணு அண்டம் அறிவியல் -69

அணு அண்டம் அறிவியல் -69  உங்களை வரவேற்கிறது.


I'm so fast that last night I turned off the light switch in my hotel room and was in bed before the room was dark.

-Muhammad Ali

There is a crack in everything, that's how the light gets in.

-Leonard Cohen

'Message from the Past' தெரியும் (உ.தா: நட்சத்திரங்களின் ஒளி) 'Message from the future'??

விஞ்ஞானிகள் சிலர் இன்னும் ஏற்றப்படாத (அணைக்கப்பட்ட) ஒரு விளக்கை வைத்துக் கொண்டு மிக மிக நுண்ணிய சென்சார்களுடன் அது எதிர்காலத்தில் இருந்து ஏதேனும் ஃபோட்டான்களை (ஒளியை) உமிழ்கிறதா என்று சோதனை செய்தனர். இதில் ஒரு லாஜிகல் சிக்கல் இருக்கிறது. விளக்கின் எதிர்காலத்தில் இருந்து போட்டான்கள் உணரப்பட்டன என்றே வைத்துக் கொள்வோம்.இப்போது அந்த விஞ்ஞானிகளில் ஒருவர் கொஞ்சம் crazy ஆக சிந்தித்து அந்த
விளக்கையே உடைத்து விடுகிறார் என்றால் என்ன ஆகும்? இப்போது அந்த விளக்குக்கு எதிர்காலம் இல்லாமல் போய் விடும்.அப்படியானால் அந்த ஃபோட்டான்கள் எங்கிருந்து வந்தன?FASTER THAN LIGHT (FTL ) பார்பதற்கு முன் SLOWER THAN LIGHT பார்த்து விடலாம். சுருக்கமாக...


ஒளியோடு ஒப்பிடும் போது நம் ராக்கெட்டுகள் எல்லாம் நத்தைகள். முதலில் ஒளிவேகத்தை நம்மால் எப்படி நெருங்க முடியும் என்று பார்ப்போம்.


நட்சத்திரங்களுக்கு இடையேயான சாகசப் பயணங்களை மேற்கொள்வதற்கு மாபெரும் சவாலாக இருப்பது அவற்றின் அபாரமான தூரம் என்று பார்த்தோம். ஒளியின் 50 % வேகத்தில் பயணித்தால் கூட நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திற்கு சென்று திரும்பவே (பூமியில்)பதினாறு ஆண்டுகள் ஆகி விடும். ஆனால், விண்கலத்தில் உள்ள மனிதருக்கு சார்பியலின் படி காலம் சுருங்கும் என்பதால் அவருக்கு பூமியைப் பொறுத்து t= t0* Y (gamma) = 16 * 0.866 ~ 14 வருடங்கள் மட்டுமே ஆகி இருக்கும். இந்த லாஜிக்கின் படி மிக மிக அதிக தொலைவில் இருக்கும் நட்சத்திரத் தொகுதிகளுக்கு மிக அதிக வேகங்களில் செல்லும் போது உள்ளே உள்ள விஞ்ஞானி சாகாமல் இளமையாக இருக்க முடியும். (பூமியில் தலைமுறைகள் கடந்த பின்னும்)

ஆனால் நம்மிடம் இப்போது இருக்கும் டெக்னாலஜியை வைத்துக் கொண்டு நம்மால் ஒளிவேகத்தின் 0 .1 % ஐ எட்டுவதே கடினம்.இப்போது உள்ள கெமிகல் propelled ராக்கெட்டுகளை வைத்துக் கொண்டு நம் பக்க்கத்து நட்சத்திரத்திற்கு செல்ல 70 ,000 பூமி வருடங்கள் பிடிக்கும். ராக்கெட்டுகளின் வேகத்தை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என்பதற்கு பின்வரும் டெக்னாலஜிகளை முன்வைக்கிறார்கள்:


*Nuclear engine : ஹைட்ரஜன் அணுக்கருக்களை இணைய வைத்து (fusion) அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை வெளித்தள்ளி விண்கலத்தை முன்னே நகர்த்துவது.[பிரபஞ்சத்தில் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் ஹைட்ரஜனை விண்கலம் போகிற போக்கில் pick செய்து கொள்ளும். [ரயில் நகரும் போது தனக்குரிய நிலக்கரியை தானே கலெக்ட் செய்து கொள்வது போல]


இங்கே சில விஷயங்கள்:1 .இப்படிப்பட்ட ராக்கெட்டுகள் மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அவற்றை பூமியில் இருந்து ஏவுவது கஷ்டம். எனவே இதை பகுதி பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்று அங்கே அசெம்பிள் செய்து ஏவுவது நல்லது . இன்டர்நேஷனல் ஸ்பேஸ்ஸ்டேஷன் இல் ஒரு பொருளுக்கு எடை இல்லை என்பதை கவனிக்கவும். ஏன் எடை இல்லை என்பதை முன்பே பொது சார்பியலில் விளக்கி இருக்கிறோம். இருந்தாலும் once more :-
free-fall 
 'heaven is falling down' என்ற கவிதை ஓரளவு உண்மை. நிலா பூமியை நோக்கி தொடர்ந்து விழுகிறது; ஆனால் ஒவ்வொரு முறையும் அது
மிஸ் செய்கிறது.(பூமி அதன் பாதையை வளைத்து விடுவதால்) . சர்வதேச விண்கலம் பூமியில் இருந்து உயரமாக இருப்பதால் அங்கே பூமியின் ஈர்ப்பு இருக்காது என்று நினைப்பது தவறு. அந்த உயரத்தில் பூமியின் ஈர்ப்பு 11 % மட்டுமே குறைகிறது. அங்கே நிலவும் எடை அற்ற ன்மை (weightlessness) விண்கலத்தின் தொடர்ந்த Free fall ஆல் ஏற்படுகிறது. கம்பி அறுந்த ஒரு லிப்ட் கீழே விழும் போது அதன் உள்ளே எடையற்ற
தன்மை நிலவுகிறது.விண்வெளி நிலையம் ஒரு கம்பி அறுந்த லிப்ட் மாதிரி .. ஆனால் அது ஒரு போதும் தரையை அடைவதில்லை.பூமியை நோக்கி தொடர்ந்து எப்போதும் விழுந்து கொண்டே இருக்கிறது. மேலும், பூமியில் பொருட்கள் எடையை உணர்வது பூமியின் ஈர்ப்பினால் அல்ல. பூமியின் மையத்தை நோக்கிய அவற்றின் free -fall தடை செய்யப்படுவதால். விழுவதால் யாரும் காயம் அடைவதில்லை. விழுவது தடுக்கப்படுவதால் :) ]2. விண்வெளி நிலையத்திற்கு ஒவ்வொரு முறையும் ராக்கெட் விட்டுக் கொண்டு இருக்க முடியுமா? ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டன்டைன்
சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். விண் ஏணி! ஒரு நாள் ஈபில் டவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த ஐடியா தோன்றியதாம். பூமியையும் விண்வெளி நிலையத்தையும் இணைக்கும் ஒரு பெரிய ஏணி! தொப்புள் கொடி!ஏணி விழுந்து விடாதா என்று கேட்டால் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விழாது என்கிறார்கள். பூமியின் சுழற்சியால் ஏற்படும் மையவிலக்கு விசை ஏணியின் மீது செயல்படும் ஈர்ப்பு விசையை கான்சல் செய்து விடும்.ஆனால் இப்படிப்பட்ட கம்பியின் மீது
செயல்படும் இழுவிசை , டென்ஷன் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதால் சாதாரண இரும்பு ஏணிகள் முறிந்து விழுந்து விடும். எனவே கார்பனின் மிக வலுவான பிணைப்பு விசைகளால் பிணைக்கப்பட்ட கார்பன் நானோ டியூப்புகள் இதற்கு உதவலாம் என்கிறார்கள். எனிவே, கூடிய விரைவில் வானிற்கு ஓங்கி உயர்ந்த ஒரு ஏணியை எதிர்பார்க்கலாம்.
3 . விண்மீனிடைப் (inter -stellar )பயணங்களின் போது விண்கலங்களை சீரான வேகத்தில் செலுத்தவோ கண்டபடி முடுக்கவோ முடியாது.
சீரான வேகத்தில் உள்ளே இருக்கும் நபர் எடையற்ற தன்மையை உணர்வார். அவர் படிக்கவும், உணவு சாப்பிடவும்,(ஏன் உடலுறவு வைத்துக் கொள்ளவும்) வசதியாக அவருக்கு விண்கலத்தினுள் பூமி-நிகர் (earth like ) ஈர்ப்பை செயற்கையாக ஏற்படுத்த வேண்டும்.ஈர்ப்பும் சீரான முடுக்கமும் சமம் என்பதால் விண்கலத்தின் ஒரு முனையை புவியின் முடுக்கமான
1g (9.8 m/s2) முடுக்கத்திற்கு தொடர்ந்து முடுக்க வேண்டி இருக்கும்.இதன் மூலம் பயணி பூமியில் இருப்பது போலவே உணர முடியும்.4 . எரிபொருள் தீர்ந்து போகும் பட்சத்தில் விண்கலத்தை (நகர்ந்து கொண்டிருக்கும்) ஒரு கோள் அல்லது நட்சத்திரத்தின் ஈர்ப்பினால் முடுக்கி விட முடியும்.(slingshot )விண்கலம் கோளுக்கு மிக அருகில் செல்லும் போது அதன் வேகம் முடுக்கப்பட்டு அது கோளுடன் சிறிது நேரம் இழுத்துச் செல்லப்பட்டு அதன் வேகம் அதிகரிக்கப்படும். வாயேஜர் விண்கலங்கள் இந்த முறையில் தான் சூரிய மண்டலத்தை விட்டு எரி பொருள் இல்லாமலேயே பறந்தன. சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களில்
ஒளிவேகத்தை மிஞ்ச, மிக மிக அதிக நிறை உள்ள ஒரு விண்மீனின் அருகே விண்கலத்தை பறக்க விடுவார்கள்.(இது இயற்பியல்ரீதியாக சாத்தியம் இல்லை. கோள் அல்லது விண்மீன் நகர்ந்து கொண்டிருந்தால் மட்டுமே இந்த விளைவு வேலை செய்யும்.)5. ஒளி வேகத்திற்கு மிகக் குறைந்த ஸ்பேஸ் பயணங்களின் போது உள்ளே இருக்கும் விண்வெளி வீரர் வயதாகாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.பனிக்காலத்தில் துருவ மிருகங்கள் Hibernate -செய்வது போல வீரரின் ரத்தத்தை குளிர வைத்து அவரை நீண்ட நாள் வாழ வைப்பதற்கு ஆராய்சிகள் நடந்து வருகின்றன.


* பொருள் -எதிர்பொருள் இவற்றை இணைய விட்டு கிடைக்கும் ஆற்றலின் மூலம் ராக்கெட்டை செலுத்துதல் .எதிர்பொருளை உருவாக்குவதும் அதை மற்ற பொருட்களிடம் இருந்து பிரித்து சேமித்து வைப்பதும் இன்று வரை குதிரைக் கொம்பாக இருக்கிறது.

பொருள் -எதிர்பொருள்சரி.

ஒளிவேகத்துக்கு நெருங்கவே இவ்வளவு தடைகள் இருக்கும் போது ஒளிவேகத்தை நெருங்குவதையும் அதை மீறுவதையும் இயற்கையே தடை செய்கிறது. (தடை செய்வதாக இன்று வரை நம்பப்படுகிறது) ஒளிவேகத்தை நெருங்கும் ஒரு பொருள் TIMELIKE என்ற நிலையில் இருந்து SPACELIKE என்ற நிலைக்கு மாறுவதாக சார்பியல் சொல்கிறது.(அதைப் பொறுத்து) நிலையாக இருக்கும் ஒரு பொருளுக்கு காலமாக தோன்றும் இயற்கையின் முகம் அந்தப் பொருளுக்கு வெளியாகத்
தோன்றுகிறது. ஒளிவேகத்தை மிஞ்ச முயலும் ஒரு பொருள் உண்மையில் காலவெளியின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முயல்கிறது.படம் ..உதாரணமாக, மேலே  உள்ள படத்தைப் பார்க்கவும். ராக்கெட் ஒன்று 3 லட்சம் கி.மீ உயரம் உடையதாக கருதுவோம். எனவே,அதன் மேலே உள்ள மூலத்தில் (S ) இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை ஒன்று அடித்தளத்தில்  உள்ள கண்ணாடி (D ) யை அடைய சரியாக ஒரு நொடி ஆகிறது.ராக்கெட் நிலையாக இருக்கும் போது , ஒளி சரியாக ஒரு நொடியில் கீழே  உள்ள இலக்கை அடைகிறது. இப்போது ராக்கெட் ஒளியின் வேகத்தில் மேலே நகருவதாகக் கொள்வோம். ஒளி மூலத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே காலத்தின் நகர்ச்சி இன்றி அந்தக் கணத்திலேயே அது இலக்கு D யை அடைந்து விடும்.(ராக்கெட்டின் மேல் தளம் ஒளிவேகத்தில் வந்து கீழே D  யை  முட்டுவதால்.)இப்போது ராக்கெட் ஒளிவேகத்தை விட அதிகமாக நகருவதாக கற்பனை செய்வோம். அப்படியானால் ஒளி புறப்படுவதற்கு முன்பே இலக்கு D யை அடைந்து விடுகிறது.அதாவது விளைவு (effect ) காரணத்திற்கு (Cause ) முன்பே ஏற்பட்டு விடுகிறது.


எனவே ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விரையும் பொருள் பொதுவாக cause -effect common sense ஐ கேள்விக் குறியாக்குகிறது.


நியூட்ரினோ என்ற  துகள் ஒளிவேகத்தை மிஞ்சி விட்டதாக சமீபத்தில் படித்திருப்பீர்கள். அது உண்மை தானா? (உண்மையில் ஒளியை விட வேகமாகப் பயணிக்கும் , எதிர்காலத்தில் இருந்து செய்தி கொண்டு வரும்
துகளுக்கு டெக்யான் (Techyon ) என்று பெயர்.)இதைப்பற்றி அடுத்த பதிவில் அலசுவோம்.


சமுத்ரா

Monday, June 11, 2012

அணு அண்டம் அறிவியல் -68

The Surest Sign That Intelligent Life Exists Elsewhere In The Universe

Is The Fact That It Has Never Tried To Contact Us.அணு அண்டம் அறிவியல் -68
உங்களை வரவேற்கிறது

அறிவுள்ள வேற்றுகிரக உயிர்களைத் தேடுவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.

முதலில்,
அறிவில் வளர்ந்த வேற்றுக் கிரக மனிதர்கள் தங்கள் தொலைத் தொடர்புக்கு லேசரை உபயோகிக்கலாம்.லேசர், செறிவு மிகுந்த மிகக் குறைந்த அலைநீளம் உள்ள ஒளி என்பதால் அதில் நிறைய செய்திகளை PACK செய்து (ஒளி விரிந்து விடாமல்) நிறைய தொலைவுகளுக்கு அனுப்ப முடியும். லேசருடைய மிகக் குறுகலான frequency band இற்கு நம் ரிசீவர்களை டியூன் செய்வது மிகக் கடினம்.மேலும் வேற்றுக் கிரக மனிதர்கள் சில Compression techniques ஐ உபயோகப்படுத்தி செய்திகளை முழுவதும் அனுப்பாமல் packet களாகப் பிரித்து அனுப்பலாம். ஒரே லக்கேஜை வெவ்வேறு ட்ரெயின்களில் பிரித்து அனுப்புவது போல.இது தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் VIRTUAL CONCATENATION எனப்படும் (VCAT) பார்க்க படம்.இப்படிப்பட்ட packet களை நம்மால் உணர முடிந்தாலும் அது அர்த்தமற்ற சத்தம் (NOISE ) போலவே உணரப்படும்.


anyway , நம்மால் ஏன் பிற நாகரீகங்களின் சிக்னல்களை உணர முடிவதில்லை (FERMI PARADOX)என்பதற்கு விடையாக கீழ்க்கண்ட பதில்களை சொல்கிறார்கள்:

FILTER answer :-

வி
ஞ்ஞானம் என்பது ஒரு கற்பக விருட்சம் போன்றது.அதற்குக் கீழே நின்று கொண்டு நல்லதோ கெட்டதோ எது கேட்டாலும் அப்படியே கிடைக்கும். அது போல விஞ்ஞானத்தால் வளர்ந்த நாகரீகங்கள் முட்டாள்தனமாக தங்கள் விஞ்ஞானத்தால் தங்களையே அழித்துக் கொண்டு வழக்கொழிந்து போகும்.

நந்த வனத்திலோர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி !

Socioeconomic answer :

வேற்றுக் கிரக மனிதர்கள் தங்கள் கலாச்சாரத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

Cosmic Zoo answer :

வேற்றுக் கிரக மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு நம்மைப் பற்றி தெரியும். இந்த உலகத்தையே ஒரு ஜூ போல வேடிக்கை பார்க்கிறார்கள்.

Suburbia answer :

வேற்றுக் கிரக மனிதர்கள் இருக்கிறார்கள்; காலக்ஸிகளின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்தும் இருக்கிறார்கள்;ஆனால் அவர்கள் பூமியைத் தொடர்பு கொள்வதை மிகவும் சலிப்பான விஷயமாகக் கருதுகிறார்கள்.

Hungarian answer

ஹங்கேரியன்
விஞ்ஞானி லியோ ஜிலார்ட் என்பவரால் இந்த பதில் முன்வைக்கப்பட்டது. வே.கி.வாசிகள் ஏற்கனவே நம் பூமியை அடைந்து ஒற்றர்கள் போல நம்முடன் இருந்து கொண்டு வேவு பார்க்கிறார்கள். ஹங்கேரி நாட்டவர்கள் தான் வேற்றுக் கிரக வாசிகள் என்று அவர் வேடிக்கையாக குறிப்பிட்டார். ஹங்கேரி மொழி மற்ற எந்த மொழியுடனும் ஒத்துப் போகாதது இதற்குக் காரணமாக இருக்கலாம்.The null Answer

பிரபஞ்சத்திலேயே வேறு எங்கும் (நாகரீகமடைந்த) உயிர்கள் இல்லை.எல்லாரும் போய் புள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கவும்.


விண்கலம் 1977 ஆம் ஆண்டு பூமியில் இருந்து ஏவப்பட்டு இப்போது சூரிய மண்டலத்தைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறது. சூரிய மண்டலத்தை துல்லியமாக ஆராயும் நோக்கில் இந்த விண்கலம் ஏவப்பட்டது. எதற்கும் இருக்கட்டும் என்று இந்த விண்கலத்தில்
வெளியுலக மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் VOYAGER GOLDEN RECORD வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மின்காந்தத் தகடு. (கேசட்) இதில் நம் பூமியின் பல்வேறு சிறப்புகள் படங்களாகவும் ஒலிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பூமியின் படங்கள், மனிதர்களின் படங்கள், பல்வேறு ஓசைகள்,மொழிகள், இசைத் துணுக்குகள் etc .தகடில் இடம்பெற்றுள்ள
ன. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜிம்மி கார்டரின் செய்தி இப்படி சொல்கிறது:

"பிரபஞ்சத்தை நோக்கி இந்த செய்தியை அனுப்புகிறோம். 200 பில்லியன் நட்சத்திரத் தொகுதிகளை நோக்கி ; பிரபஞ்சத்தில் இருக்கும் அறிவார்ந்த நாகரீகங்களில் ஒன்று இந்த செய்தியை அறிந்து கொள்ள முடிந்தால் அவர்களுக்கு எங்கள் செய்தி: நாங்கள் எங்கள் பூமியைக் கடந்தும் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.உங்களுடன் கைகோர்த்து புதிய உலக நாகரீகங்களின் சேர்க்கைக்குத் தயாராக உள்ளோம்"

52 மொழிகளில் வாழ்த்துச் செய்தி இதில் இடம் பெற்றுள்ளது.(தமிழ் இதில் இல்லை) ஹலோ, நாங்கள் தான் பூமியின் குழந்தைகள் ; உங்களை வாழ்த்துகிறோம், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி போன்ற வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. பிறகு மழை, கடல்,எரிமலை,காற்று, சிம்பான்சி, தவளை, நாய், யானை,குதிரை,திமிங்கலம்,ரயில், இதயத்துடிப்பு, முத்தம் போன்ற சத்தங்கள் இடம்பெற்றுள்ளன.பிறகு உலகின் பல்வேறு கலாச்சாரங்களின் இசை இடம் பெற்றுள்ளது.இந்திய இசையில்ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் ராகம் பைரவ் (கர்நாடக இசையில் தோடி)இடம்பெற்றுள்ளது.

மேலும் இதில் 116 வெவ்வேறு படங்கள் இடம் பெற்றுள்ளன. பூமி, சூரிய மண்டலம்,மனிதர்கள்,மனித உடல் பாகங்கள்,சீனப் பெருஞ்சுவர், தாஜ்மஹால்,etc .

இதில் இடம்பெற்றுள்ள ஆண் மற்றும் பெண் நிர்வாண ஓவியங்கள் முதலில் 'இது தேவை தானா?' என்ற சர்ச்சையைக் கிளப்பின.ஆனாலும்
மனித உடல் பாகங்களை சரிவர தெரிந்து கொள்ள இவை உதவும் என்ற நோக்கில் இவை இடம்பெற்றுள்ளன. கார்ல் சாகன் முதலில் இரண்டு பேரும் கை கோர்த்துக் கொண்டு இருப்பது போல ரொமான்டிக் ஆக வரையலாம் என்று சொன்னதும் பிற
விஞ்ஞானிகள், அப்படி வரைந்தால் இரண்டும் ஒரே உயிரினம் என்று அவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால் ஆண் பெண் உருவங்கள் தனித்தனியாக வரையப்பட்டன.


தப்பித் தவறி கூட யுத்தம், அணுகுண்டு, சண்டை இவை கேசட்டில் இடம் பெறவில்லை (இன்னொருவரிடம் நம்மை நல்லவர்களாகக் காட்டுவதில் தான் நமக்கு எவ்வளவு ஆர்வம்!)

அடுத்து, வேற்றுக் கிரக உயிர்கள் எப்படி இருக்கும் என்ற விவாதம். ஆங்கிலப் படங்களில் வருவது போன்று மண்டை கொஞ்சம் பெரிதாக பச்சைக் கலர் குள்ள மனிதன் இருப்பானா? வே.கி. உயிர்கள் மனிதனைப் போலவே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் அவைகளுக்கு

* சுற்றுப்புறத்தை Sense செய்ய கண்கள் போன்ற அமைப்பு. 3D vision
கிடைப்பதற்கு இரண்டு கண்கள் வேண்டும்.

* இடப்பெயர்ச்சி செய்ய கால்கள் போன்ற அமைப்பு. முதுகெலும்பின் அமைப்பைப் பொறுத்து இரண்டு அல்லது நான்கு கால்கள்

* சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொள்ள குரல்.அடுத்து வே.கி.வாசிகளின் சைஸ் .சயின்ஸ் பிக்ஷன் கதை ஒன்றில் பூமிமனிதர்கள் வேற்றுக் கிரகம் ஒன்றில் லேண்ட் ஆவார்கள்.அங்கே உயிரினங்களே இருக்காது. பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டும் இருக்கும். அதிலெல்லாம்புகுந்து பார்த்து விட்டு யாரும் இல்லை என்று டேக்-ஆப் ஆகி விடுவார்கள்.சிறிது நேரம் கழித்து கட்டிடங்கள் கொஞ்சம் நகர்ந்திருக்கும்! இன்னொரு கதைஒன்றில் வேற்றுக் கிரக உயிரினங்கள் பூமியில் இறங்குவார்கள். அது ஒரு பெரிய கரிய நிறத் தீவு. அதைச் சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைவெள்ளை நிறத் திரவம் இருப்பதைப் பார்ப்பார்கள்.ஹீரோ தன் கண்ணில் ஏதோ உறுத்துகிறது என்று கண்ணைக் கசக்குவார்!

இப்படிப்பட்ட மெகா சைஸ், மற்றும் மினிசைஸ் உயிரினங்கள் இருப்பதைஇயற்பியலின் ஸ்கேல் லா limit செய்கிறது. ஒரு பொருளின் (உயிரியின்)அளவுபத்து மடங்கு அதிகரிக்கும் போது அதன் எடை ஆயிரம் மடங்கு (கன அளவு) அதிகரிக்கும்என்கிறது இந்த விதி.ஆனால் அந்த உயிரியின் சக்தி ,பலம், அளவைப் போன்று நூறு மடங்கு மட்டுமே அதிகரிக்கிறது. எனவே சாதாரண குரங்கை விட கிங்கான்க் குரங்கின் பலம் பத்து மடங்கு குறைவாகவே இருக்கும். கிங் காங் எழுந்து நின்றதும் தன் எடையைத் தானே தாங்க முடியாமல் தொடை எலும்புமுறிந்து கீழே விழுந்து விடும்.மேலும் பெரிய சைஸ் உயிரினங்களில் புவிஈர்ப்பை
எதிர்த்து மூளைக்கு ரத்தத்தை பம்ப் செய்வதும் பிரச்சினை தான் .இதற்குப்பெரிய இதயம் வேண்டும். உயிரியின் மார்புக் கூடில் பெரும்பாலான இடத்தை இதயமே ஆக்கிரமித்து விடும்.(திமிங்கலங்கள் பெரிதாக இருக்கின்றன. அது ஏன்என்றால் தண்ணீர் அவைகளை மேலே தூக்கி விடுகிறது. திமிங்கலங்கள் தரையில் வாழ்ந்தால் அவற்றின் சொந்த இடையே அவைகளை கொன்று விடும்)
இதிலிருந்து அறிவுள்ள வேற்றுக் கிரக உயிரினங்கள் கிட்டத்தட்ட மனிதனின் அளவிலேயே இருக்கும் என்று ஊகிக்கலாம்.

அடுத்து UFO எனப்படும் Unidentified Flying Objects .(
அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்??) சாத்துக்குடி பிழியும் டப்பாவின் மூடி போன்ற ஒரு சமாச்சாரம் வானில் பறந்து வருவது. வேற்றுக் கிரக வாசிகள் தங்கள் வட்ட வடிவ வாகனங்களில் வந்து இறங்கினார்கள் என்ற கட்டுக்கதைகள் காலம் காலமாக பூமியில் வழங்கி வருகின்றன. அவை வெறும்Sensational stories மட்டுமே. ஆனால் அப்படி உண்மையிலேயே UFO க்களை பார்த்தேன் என்றாலும் அவை பெரும்பாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட spacecraft , பலூன்கள் மற்றும் வட்ட வடிவ வண்ணமயமான Lenticular மேகங்கள் மட்டுமே.காரில் பயணிக்கும் போது நம்மைத்தொடரும் வெள்ளிக் கிரகம் கூட சிலசமயம் UFO என்று எடுத்துக்கொள்ளப்படுவதுண்டு,வெப்பநிலை வேறுபாடுகளால் ஏற்படும் காற்றுச் சுழல், கலங்கரை விளக்கங்களின் ஒளி, ரேடார்களின் எதிரொலி, இவையெல்லாம் கூட இருக்கின்றன.எனவே UFO க்களைப் பற்றி ஒரு தெளிவான அறிவியல் பூர்வ கொள்கை இதுவரை இல்லை.

UFO or cloud??சரி. நட்சத்திரங்களுக்கு இடையேயான அபார தூரம், மற்றும் ஒளியின் எல்லைக்குட்பட்ட வேகம் (C)ஆகியவை நம்முடைய 'வேற்றுக்கிரக' ஆர்வத்துக்கு கடிவாளம் போடுகின்றன.மனிதன் தான் ஏடாகூடமாக சிந்திப்பதில் வல்லவன் ஆயிற்றே? வே.கி. உயிரிகளுடன் தொடர்பு கொள்ள வேறு ஏதாவது வழிமுறைகள் , குறுக்கு வழிகள் இருக்கின்றனவா என்று ஒரு கோஷ்டி சிந்தித்துக் கொண்டு இருக்கிறது. டெலிபதி, ஒளியைவிட வேகம், ஸ்பேசில் குறுக்கு வழிகள் (புழுத்துளைகள்) என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. இவைகள் இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இவற்றின் அறிவியல் சாத்தியக் கூறுகளை அடுத்த சில அத்தியாயங்களில் ஆராய்வோம். வேற்றுக் கிரக ஆர்வத்தை இதோடு முடித்துக் கொள்ளலாம்.


சமுத்ரா