இந்த வலையில் தேடவும்

Sunday, October 20, 2013

கலைடாஸ்கோப் -101

கலைடாஸ்கோப் -101 உங்களை வரவேற்கிறது.

 சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று நரி சொன்னதாக நாமெல்லாம் படித்திருப்போம்.இதை ஆங்கிலத்தில் ஸ்டைலாக Cognitive dissonance என்கிறார்கள்.நம்மால் முடியாவிட்டால் சூழ்நிலை மீதோ அடுத்தவர் மீதோ கிரகங்கள் மீதோ பழிபோட்டு விடுவது! ஆக்ஸிடென்ட் ஆகி விட்டால் நான் நேராகத்தான் போனேன். அடுத்தவன் தான் என் மீது வந்து மோதி விட்டான் என்று சொல்வது.பிசினஸ் சரியாக நடக்கவில்லை என்றால் கேது விரய ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இப்படித் தான் இருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வது. உப்புமா சரியாக செய்ய வரவில்லை என்றால் இந்த தரம் அண்ணாச்சிக் கடை ரவை ரொம்ப மோசம் என்று சொல்லி விடுவது! ஏதேனும் தவறு நடந்து விட்டால் அதற்கு நாம் 100% பொறுப்பேற்பதே இல்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம், சரி இப்படியெல்லாம் நடக்கனும்னு விதி! நீயா பண்ணலை , ஏதோ கிரகம் ஆட்டி வைக்குது போ! என்று சமாதானம் சொல்லிக் கொள்வது.

பொருட்களை மட்டும் அல்ல..மனிதர்களையும் சில சமயம் இப்படித்தான் இந்தப் பழம் புளிக்கும் என்று ஒதுக்கி விடுகிறோம்.!!!காதல் தோற்றுப் போய் விட்டால், 'பொண்ணா அவ, ராட்சஸி ' என்கிறோம்! 

****************

கவிதையில் சொல்லப்பட்ட வரிகளை விட்ட சொல்லப்படாத வரிகள் அதிகம் இருக்க வேண்டும் என்கிறார் சுஜாதா.

உதாரணமாக:

ஒன்றையொன்று தொடாதவாறு
அருகருகே நடப்பட்டிருக்கின்றன
இரண்டு வேல்கள்.
ஒன்று சக்தி மற்றொன்று சிவம்.
இரண்டின் நிழல்களும் 
ஒன்றன்மீது ஒன்றாகக்கிடக்கின்றன 
தரையில் சூரியன் சரியசரிய.
திடீரென நீண்டுகொண்டே போகிறாள் சக்தி
துரத்திக்கொண்டே போய் 
சிவம்மூச்சிரைத்துக்கொண்டிருக்க
அந்தி வருகிறது
இருளில் மறைகிறார்கள் இருவரும்.- 

இளங்கோ கிருஷ்ணன் 

இதில் சொல்லப்படாத வரிகள் என்ன என்று யோசித்துப் பாருங்கள்.

இனிமேல் கவிதை எழுதும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சொல்லப்படாத வரிகள்...கதைக்கு அப்படியே opposite .கதைக்கு சொல்லப்படும் வரிகள் , detail ,வர்ணனை முக்கியம்.

சங்க இலக்கியத்தில் ஒரு பிரபலமான பாடல் .

 அற்றைத் திங்கள் அந்நிலவில்  

அந்த மாதம் அந்த நிலவில்
தந்தை இருந்தார் குன்றும் இருந்தது.
இந்த மாதம் இந்த வெண்ணிலவில் 
வெற்றி முரசு வேந்தர்கள்
குன்றும் கொண்டனர் எங்கள் தந்தையும் இல்லையே!

எந்தப் புலம்பல்களும் இல்லாத கச்சிதமான பாடல்....அப்பா இருந்தாரே இப்ப இல்லையே அய்யோ எல்லாம் போச்சே,மோசம் போயிட்டமே  மூவேந்தர்கள் நாசமாப்போக என்ற சீரியல் புலம்பல்கள் எல்லாம் இல்லை! சொல்லப்படாத வரிகள் அதிகம்...சீரியல் என்றதும் நினைவுக்கு வருகிறது.பாலிமர் சானலில் ஹிந்தி சீரியல்களை கடமை உணர்ச்சியுடன் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள்.பெண்கள் பொறுமையின் அணிகலனாக இருப்பது இந்த சீரியல்களை பார்ப்பதாலோ என்னவோ என்று தோன்றுகிறது. பத்து நிமிடம் விடாமல் உங்களால் பார்க்க முடிந்தால் அவார்டே கொடுக்கலாம்.நடிப்பவர்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பார்ப்பது வேறு விஷயம் :) ஆண்கள் எப்போதும் வீட்டுக்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டும் பெண்கள் full மேக்கப் உடனும் வலம் வருகிறார்கள்.சப்பாத்தி சாப்பிடுவது, கொரியர் வருவது, போன் பேசுவது, என்று indoor இல் விலாவாரியாக காட்டுகிறார்கள். 

 வாழ்க்கையில் இரண்டு அணுகுமுறைகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒன்று சின்னச் சின்ன விஷயங்களை, சாதாரண விஷயங்களை கணத்துக்கு கணம் அனுபவிப்பது. இன்னொன்று, அற்ப விஷயங்களில் ஆழ்ந்து போகாமல் தூரத்து விண்மீனை குறிக்கோளாக வைப்பது. நான் ரொட்டி சுடவும், தரை துடைக்கவும், குழந்தைக்கு கழுவி விடவும் பிறக்கவில்லை என்று நம்புவது! 

ஒரு ஜென் கதை. 

ஜென் குரு ஒருவரிடம் சீடர், 'குருவே, நீங்கள் மேற்கொள்ளும் தியானம் எது?' என்று கேட்கிறார்.குரு ," நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன், தண்ணீர் இறைக்கும் போது தண்ணீர் இறைக்கிறேன், தரை துடைக்கும் போது தரை துடைக்கிறேன் , தூங்கும் போது தூங்குகிறேன்" என்கிறார். 

நண்பர் ஒருவர் இந்தியா செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இறங்கி இருப்பது சரிதானா சார்? இங்கே ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் மக்கள்? என்று கேட்டார்.மனிதன் கனவு காண வேண்டுமா? சிறகுகளை விரிக்க வேண்டுமா? இல்லை கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு வாழ வேண்டுமா என்பது கேள்வி. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்று தான். ஒரு மரத்தின் வேர்கள் எத்தனை கீழே செல்கின்றனவோ அதன் கிளைகள் அத்தனை மேலே செல்கின்றன. ஓஷோ ஒரு multi -faceted ஜோர்பா புத்தரை வரவேற்கிறார்.அவன் ஜென்னிலும் வாழ்வான்.விண்ணிலும் வாழ்வான்!

 well , அந்த ஜென் குரு சொல்வது போல சாப்பிடும் போது நாம் சாப்பிடுகிறோமா?? 

சாப்பிடுவதைப் பற்றி இப்படி சொல்கிறார் காஞ்சி பெரியவர்.


வயிற்று உபவாசம் மாதிரியே மௌனத்துக்கும் தர்ம சாஸ்திரத்திலே அனேக காலங்களை விதித்திருக்கிறது. "மௌநேந போக்தவ்யம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்குள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது இன்னொரு வேலையும் தரப்படாது.

 இப்படி விதித்த போதே ருசியையும் கட்டுப் படுத்தியதாக ஆகிறது. "இது வேண்டும். அது வேண்டாம் ; இதற்கு உப்பு போடு, அதற்கு நெய் விடு என்றல்லாம் சொல்ல முடியாதல்லவா? 

சோம வாரம், குரு வாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அனுஷ்டிக்கலாம் .சோமவாரம், குருவாரம், ஆபீஸ் இருப்பதால் ஞாயிற்றுக கிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒரு நாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஓர் example. 

மௌனமும் பட்டினியும், சேர்ந்தால் அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பார மார்க்கத்திலே நன்றாக ஈடுபடுவதை அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக    சிவராத்திரியோ, சஷ்டியோ, ஏகாதசியோ, பட்டினி கிடக்கிற போது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாசிக்கிறவர்கள் நவராத்திரி பூராவும் மௌனமாயிருப்பார்கள். 

 நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக் தேவியான சரஸ்வதிக்கு அபச்சாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நக்ஷத்திரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரை மணியாவது மௌனமாகத் தியானம் பண்ண வேண்டும். 

நன்றி Facebook

 ******************

நண்பர் அப்துல் , ட்விட்டரில் சுகந்தியின் ட்விட்டுகளை படிக்கும்படி சொன்னார்.சில:

முடிந்தவுடன் தான் தெரிகிறது முடை நாற்றமும் ஊசிய முட்டை பிரியாணியும் அருகில் இருந்தது 

காட்டுத்தீயை அணைக்க வாயால் ஊதுகிறாய், பார்ப்போம்

 form -கள் தான் வேறு வேறு. சொல்ல வருவது என்னவோ ஒன்று தான்.

வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் 
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி, 
கொடுங் கோற் கல்லாக் கோவலர் ஊதும் 
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! என்னும் அகநானூறு ஆகட்டும் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற சமகாலப் பாடலாகட்டும் 

"பக்கி, நான் இன்றோடு இறந்துவிடப்போவதில்லை..". மிச்சம் வை என்ற சுகந்தியின் ட்வீட் ஆகட்டும்....காமம் தான் எல்லாமுமா? என்று கேட்டேன். இல்லை எல்லாவற்றிலும் காமம் இருக்கிறது என்றார்.பிராய்டின் unconscious subconscious pre-conscious சமாசாரம் போலிருக்கிறது என்று escape ஆகி விட்டேன்.

சரி...பிராய்டின் counter transference என்று ஒன்று இருக்கிறது. தன்னிடம் சிகிச்சைக்காக வரும் client இடமே மனவியல் மருத்துவர் காதல், அன்பு, பாசம் etc etc கொண்டு விடுவது. மருத்துவர் client ஐ influence செய்வதற்கு பதிலாக உல்டாவாக நடந்து விடுவது.

 ஆஸ்பத்திரி க்குப் போவதில் கூட செக்ஸ் மோடிவ் இருக்கிறது என்று பிராயிட் சொல்வதை எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. நர்ஸை /அல்லது டாக்டரை சைட் அடிக்கலாம் இப்படி ஏதாவது மோடிவ்...என்ன தான் இருந்தாலும் இதுவரை காமம் மற்றும் காதல் இவைகளுக்கு ஒரு clear cut boundary இல்லை....வாட்சன் என்ற மனோவியல் நிபுணர் காமம் ஒன்றாகிவிடும் முயற்சி ;காதல் இரண்டாகும் முயற்சி என்கிறார். காமம் அத்வைதம் காதல் துவைதம்! இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!நாம் பொதுவாக காதல்/அன்பு  தன்னை இழக்கும் முயற்சி என்று நினைத்து வந்துள்ளோம்.

 சரி..இப்போது ஒரு கவிதை...with translation 

He whom love touches
Can enjoy no stability.
And he will tasteMany a nameless hour 

உன்னை காதல் தீண்டினால் 
நிலையில்லாமல் போவாய் 
பெயரில்லாத தருணங்களுக்கு 
கைப்பாவை ஆவாய்

 Sometimes burning and sometimes cold,
Sometimes timid and sometimes bold,
The whims of Love are manifold. 

சில நேரம் எரியும் சிலநேரம் குளிரும் 
சிலநேரம் பதுங்கும் சிலநேரம் முழங்கும் 
காதலின் பைத்தியங்களுக்கு கணக்கே இல்லை! 

Sometimes gracious and sometimes cruel,
Sometimes far and sometimes near,
 Oh, how love With one sole act 
Both strikes and embraces!

 கருணை சிலநேரம் கொடூரம் சிலநேரம் 
அருகே சிலநேரம் தொலைவாய் சில சமயம் 
ஒரே ஆத்மா தான் காதலுக்கு 
ஏன் சில சமயம் அடிக்கிறது?
சில சமயம்  அணைக்கிறது?

 Sometimes light, sometimes heavy,
Sometimes somber and sometimes bright,
 In taking and giving,
Thus live the spirits,
Who wonder here below,
Along the paths of Love. 

சிலநேரம் மென்மை சிலநேரம் வன்மை 
இருட்டில் சிலநேரம் ஒளியில் சிலநேரம் 
காதலர்கள் கொடுத்தும் எடுத்தும் வாழ்கிறார்கள் 
அன்பில் பாதையில் ஆச்சரியத்துடன்! 

-Hadewijch of Antwerp

 ஓஷோ ஜோக்
===========

ஹோட்டலில் குழந்தை ஒன்று எப்படியோ ஒரு ரூபாய் காயனை முழுங்கி விட்டது.

அதன் தாய் 'யாராச்சும் காப்பாத்துங்க, சீக்கிரம்" என்று கதறினாள் .

யாராச்சும் டாக்டர் இருக்காங்களா என்று பரபரத்தனர் மற்றவர்கள்.

எங்கிருந்தோ கோட்டு சூட்டு அணிந்த ஆள் ஒருவன் வந்தான்.

 'பதட்டப் படாதீங்க' என்றவன் குழந்தையின் அருகில் சென்று அதை எங்கெங்கோ தட்டினான். சில நிமிடம் கழித்து அந்த காயன் டங் என்ற சத்தத்துடன் வெளியில் வந்து விழுந்தது. 

நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதன் அம்மா, "ரொம்ப நன்றி " "சார், நீங்க யாரு? டாக்டரா, இல்லை மாய மந்திரம் கற்றவரா?" என்றாள் . 

அந்த ஆள் "இரண்டும் இல்லை..நான் இன்கம்டாக்ஸ்-ஸில் வேலை செய்கிறேன் " என்றான். 

சமுத்ரா