இந்த வலையில் தேடவும்

Monday, August 29, 2011

கலைடாஸ்கோப்-36

லைடாஸ்கோப்-36 உங்களை வரவேற்கிறது

ஒன்று
======

'கஜல்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (காஜோல் அல்ல ! ) சூபி மற்றும் அரேபிய இசைக் கவிதைகள் அவை.உலகில் முதல்
காதல் தோன்றிய போதே முதல் காதல் கவிதையும் தோன்றியிருக்க வேண்டும். மனிதன் எத்தனையோ விதமான காதல் கடிதங்களை எழுதி இருக்கிறான். புறா, அன்னம், காக்கை (?) , மனம், மேகம், நண்பன், டீக்கடைப் பையன், அந்தணர், போஸ்ட்மேன் ,வேலைக்காரி என்று காதல் கடிதங்களுக்கு எத்தனையோ விதம் விதமான ஊடகங்களை உபயோகப்படுத்தியிருக்கிறான்.மர இலை, காகிதம், பனை ஓலை,ரயில் பெட்டி, பள்ளிக்கூட நோட், வான்மேகம் என்று எழுதுவதற்கு நிறைய பொருட்களை உபயோகித்திருக்கிறான்.

'ஆத்தா அத்தோரமா வாரியா' என்பது கூட காதல் கடிதம் தான்.கண்மணி அன்போடு காதலன் என்பதும் கா.க தான். (வெவ்வேறு மன நிலைகளில்) கமல் பாறைகளுக்கு இடையே நின்று கத்துவது போல 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல'. இன்றும் கூட காதல் என்பது நாகரீகப்படுத்தப்பட்ட காமம் தான் என்று சில பேரும் காதல் என்பது உடலைத்தாண்டிய ஒரு தெய்வீக உணர்ச்சி என்று சில பேரும் சண்டை போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.'பிராய்ட்' போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்கள் 'அன்பாவது, தெய்வீகமாவது, மண்ணாவது, மனிதனின் MOTIVE வே காமம் தான். எல்லாம் ஹார்மோன் செய்யும் கூத்து தான்' என்று சொல்வார்கள்.ஆனாலும் உடலைத்தாண்டிய ஏதோ ஒன்று சூட்சுமமாக இருக்கவே செய்கிறது என்று தோன்றுகிறது. கடவுளிடமும் காதல் கொள்ள முடியும். சூபீக்கள் கண் மூடி கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடத் தன்னை மறந்து கஜல்களைப் பாடும் போது ஆகா 'காதல் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்' என்று தோன்றும். இப்போது காதலை திரைப்படங்கள் வியாபாரத் தந்திரமாக ஆக்கி விட்டன.கப்பல் மூழ்கிய கதையில் கூட சைக்கிள் கேப்பில் ஒரு காதலைப் புகுத்தி விடுகிறார்கள்! ஒருவரை ஒருவர் தொடாமல் பாட்டுப்பாடுவதும் மரங்களை சுற்றுவதும் 'ஓல்ட் பேஷன்' ஆகி விட்டது. இன்றைய பெரும்பாலான காதல் பாட்டுகள் 'மியாவ் மியாவ்' 'தீத்தி' 'மச்சி மச்சி' என்றெல்லாம் தெய்வீக வார்த்தைகளை உபயோகப்படுத்தி எழுதப்படுகின்றன.

காதல் கடிதங்கள் பெரும்பாலும் அந்நியன் விக்ரம் எழுதுவது போல ஒருதலைக் காதல் சார்ந்ததாகவே உள்ளன. இதே போல தான் 'கஜல்' களும். தன்னை விட உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் மீது கொள்ளும் காதல்! இவை (காதலின் ) வலியையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே வெளிப்படுத்தும்.
தெய்வீகத்தின் உடனான காதல் தான் மனிதனை முழுமை செய்யும் என்கிறார்கள். மனிதர்களுடன் நாம் கொள்ளும் காதல் , டீக்கடைக் காதல், ரயில் பயணக் காதல், கல்லூரிக் காதல் இவை எல்லாம் நம்மை கிடைமட்டத்தில் முன்னேற்றலாமே தவிர (HORIZONTAL PROGRESSION ) நம்மை உயர்ந்த மட்டத்துக்கு (VERTICAL ) உயர்த்தாது.

தெய்வீகத்தின் உடனான காதலில் வலிகள் அதிகம்.மனிதக் காதலியாவது நாலு நாள் பின் தொடர்ந்தால் ஐந்தாம் நாள் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பாள். தெய்வம் அவ்வளவு சீக்கிரம் RESPOND செய்யாது.அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.மனிதக் காதலுக்கு ஒன்றோ இரண்டோ அல்லது அதிகபட்சம் சின்னத்தம்பி குஷ்பு போல மூன்று சகோதரர்கள் வில்லன்களாக இருக்க முடியும். ஆனால் தெய்வீகக் காதலுக்கு ஐம்புலன்கள் , மனம் ,புத்தி, அகங்காரம் என்று ஏகப்பட்ட வில்லன்கள். நாம் இறைவனை நோக்கி கொஞ்சம் நூல் விட்டாலே பயங்கர ஆயுதங்களைத்
தூக்கிக் கொண்டு அடிக்க வந்து விடுவார்கள் அவர்கள்!.என்ன தான் இருந்தாலும் கடவுள் மேல் கொள்ளும் காதல் ஸ்பெஷல் தான். அஜித்தும் தேவயானியும் கட்டிய காதல் கோட்டைகள் சில காலங்களில் மக்களின் மனங்களில் இருந்து இடிந்து விழுந்து விடும். மீராவின் பஜன்களும் ஆண்டாளின் பாசுரங்களும் உலகம் உள்ள வரை வாழ்ந்திருக்கும்.

அப்துல் ரகுமான் தமிழில் அழகாக கஜல்கள் எழுதி இருக்கிறார். ஆனால் பாடுபொருளாக இறைவனைத் தேர்ந்தெடுக்காமல் காதலியைப் பார்த்து எழுதுகிறார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'மின்மினிகளால் ஒரு கடிதம்' . புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள்..
இதயத்தை உருக்கும் கவிதைகள் அவை.

ஆம்..

என் இருப்பே நீயென்று இருக்கிறேன் நான்
நான் இருப்பதே தெரியாமல் இருக்கிறாய் நீ
தன்னையே நினைத்து சூரியகாந்தி ஒன்று
மலர்ந்து வாடி, வாடி மலர்ந்து,மலர்ந்து வாடி
மருகுவதே தெரியாத சூரியன் போல வலம் வருகிறாய் நீ
என் குரல் நாண் எழுப்பும் ஒலி -உன்
பிரம்மாண்டக் கதவுகளைத் தாண்டாமல்
வாசலிலேயே வாழ்விழந்து விடுகிறதா?
நான் ஏற்றிவைத்த சிறு விளக்கு
உன் தாரகைக் கண்களுக்கு தட்டுப்படவில்லையா?
நான் இசைத்த சுரங்கள் -உன்னை அடையுங்கால்
சுருதி குறைந்து இறுதி ஆகின்றனவா?
உன்-
உலகுக்கு என்னை உருப்பெருக்கிக் கொள்ளும் வில்லை
என்னிடம் இல்லை.
நீயே
உன்னை சிறியதாக்கிக் கொண்டு-இந்த
சிறியவனைத் தேடி வா, சீக்கிரம்!

-ஹி ஹி இது சமுத்ராவின் கஜல்!

இரண்டு
======

சில பேருக்கு மருமகள் ஸ்வீட்டாக இல்லா விட்டாலும் காபி ஸ்வீட்டாக இருக்க வேண்டும்.காபியால் நிறைய கலவரங்கள் மூண்டுள்ளன. நிறைய உறவுகள் முறிந்துள்ளன. காபி சர்வீஸ் சரியில்லை என்று சில திருமணங்கள் கூட நின்று இருக்கின்றனவாம்.கல்யாண மண்டபத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை மேளதாளம் முழங்க வரவேறகிறார்களோ இல்லையோ அவர்கள் 'லேன்ட்' ஆனதும் சுடச்சுட பில்டர் காபி கொடுத்தாக வேண்டும். காப்பிக்கு அடிமையான நிறைய பேரை பார்த்திருக்கிறேன். காப்பியும் ஒரு போதை தான் என்று தோன்றுகிறது. ஆபீசில் சிலருக்கு டான் என்று மூன்று மணி ஆனதும் காப்பி உறிஞ்சவில்லை என்றால் விரல்கள் நடுங்க ஆரம்பிக்கும்.நாம் காபிக்கோ டீக்கோ கொத்தடிமையும் கிடையாது 'காபியா , அய்யே, அந்தப்பழக்கம் எல்லாம் எப்போதும் இல்லை' என்று பில்ட்-அப் கொடுக்கும் பார்ட்டியும் கிடையாது. ஏதோ கொடுத்தால் குடிக்க வேண்டியது.அவ்வளவு தான். சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிக்கடி காபி என்னும் பெட்ரோல் போடவில்லை என்றால் வேலையே ஓடாது.அரை டம்ளருக்கும் குறைவாக காபி கொடுத்தாள் என்று சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு அப்போதே கிளம்பிய உறவுகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இப்போது காப்பியில் எத்தனையோ வெரைட்டிகள் வந்து விட்டன. கேப்புசினோ , எஸ்பிரெஸோ , காபி நிர்வாணா என்று தெய்வீகமான காப்பிகள் கிடைக்கின்றன. (குடித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும்) நாயர் கடையில் கடன் வாங்கி சிங்கிள் டீயோ பை டூ டீயோ குடிக்கும் பேச்சுலர்கள் வாழும் இந்தத் திருநாட்டில் தான் நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்து பரிஸ்தாவில் ஒரு கப் காபி வாங்கிக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.மேல் நாட்டவர்கள் ஒரு XL சைஸ் காபி வாங்கி வந்து நாள் முழுவதும் உர் உர் என்று உறிஞ்சுவார்கள். என்னதான் சொன்னாலும் காபிக்கு உள்ள ஒரு மவுசு குறையாது என்றே தோன்றுகிறது. மேலும் என்றோ ஒரு நாள் ,யாரோ நமக்குப் போட்டுக் கொடுத்த காபியின் சுவை இன்னும் நாக்கிலேயே இருக்கும். அதைப் போல இன்னொரு முறை காபி கிடைக்காதா என்று ஏங்கும்.அப்படிப்பட்டவர்கள் 'என்னம்மா எனக்கு மட்டும் தான் கஷாயமா, அப்பா சும்மா தானே இருக்கார்..அப்பா: அதான் எனக்கு காப்பி கொடுத்திருக்காளே டா' என்ற மொக்கை ஜோக்குகளை நினைத்து தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

காபி என்னும் குண்டு அண்ணனுக்கு கொஞ்சம் இளைத்த சகோதரன் டீ என்று தோன்றுகிறது. காபியை விட டீ ஒரு படி கீழே தான். 'சிங்கிள் டீக்கு சீக்கி அடிச்சவன் நீ' என்று சொல்கிறார்களே ஒழிய சிங்கிள் காப்பிக்கு என்று சொல்கிறார்களா? 'டீ + பன்' என்பதை ஏழைகளுக்கான டிபன் என்று சொல்கிறார்களே தவிர காபி + பன் என்று சொல்கிறார்களா? நாகரீகமான கடைகளை காபி ஷாப் என்று சொல்கிறோம். தெருக்கோடிக் கடையை 'டீக்கடை' 'டீக்கடை பெஞ்சு' என்று தானே சொல்கிறோம்? வறுமையை மிகைப்படுத்தும் எஸ்.ராமகிருஷ்ணன் டைப் கதைகளில் கோமதி சாக்கை விரித்து தூங்கிக் கொண்டிருந்த மகளை 'அடி கழுத எந்திரி ' என்று அடித்து எழுப்பி விட்டு டீ போட விறகு அடுப்பை மூட்டினாள் என்று எழுதுவார்களே தவிர காபி போட என்று எழுத மாட்டார்கள். 'டீ என்பது ஏழைகளின் காபி' என்று சொல்லலாமோ?

சரி. சாம்பார் , சட்னி இது இரண்டையும் காபி டீயுடன் சம்பந்தப்படுத்துங்கள் என்றால் நாம் எல்லாரும் சாம்பார்=காபி சட்னி=
டீ என்று தான் சொல்வோம்.சாம்பார்-டீ, சட்னி-காபி என்று சொல்லமாட்டோம். ஏன்???? இதற்கு ஏதாவது சைக்காலஜி காரணங்கள் இருந்தால் படித்தவர்கள் சொல்லவும். பாமரன் யான் அடுத்த டாபிக்குக்கு 'எஸ்' ஆகிறேன்.

மூன்று
========

இந்த மாஸ்டர்பீஸ் மாஸ்டர்பீஸ் என்கிறார்களே, (நாமெல்லாம் எதை செய்தாலும் அது டம்மி பீஸ் என்பது வேறு விஷயம்) அதை செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மாஸ்டர்பீஸ் என்றால் அதை செய்து விட்டு நாம் அமைதியாகி விட வேண்டும். அதற்குப் பிறகும் இல்லை இதை விட சிறப்பாக செய்வேன் சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறுவேன் என்றெல்லாம் இறங்கினால் (என்ன பாஸ் இறங்கினால் எப்படி வானத்தை அடைய முடியும்? சாரி செயலில் இறங்கினால்) சித்தி சீரியலுக்குப் பிறகும் விடாப்பிடியாக நடித்து நம்மை எரிச்சல் அடையச்செய்யும் ராதிகாவின் நிலைதான் நமக்கும் ஏற்படும். சித்தி தான் ராதிகாவின் மாஸ்டர்பீஸ். இப்போதும் அதே மாதிரி தொடர்ந்து நடிப்பது வெறுப்பேற்றுகிறது. கண்களை சுருக்கிக் கொண்டு கெட்டவர்களைப் (?) பார்ப்பதும், தருமத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் என்று வசனம் பேசுவதும்....

இதன் மூலம் ஒருவரை முயற்சியே செய்யவேண்டாம் முன்னேறவே வேண்டாம் என்று சொல்லவரவில்லை. சில பேருக்கு அவரது வெற்றி வரைபடம் ஒரு உச்ச வரம்பை அடைந்ததும் தொடர்ந்து கீழே இறங்கி விடுகிறது.நாம் அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்க வேண்டாமே என்று தான் சொல்கிறேன்.உதாரணம் ,இந்திய கிரிக்கெட் அணி. உலகக் கோப்பையை வென்றதால் மட்டுமே இந்தியா தான் கிரிக்கெட் சாம்பியன் சச்சின் தான் எங்கள் கடவுள், கிரிக்கெட் வீரர்கள் எல்லாரையும் பாரத ரத்னா(?) ஆக்குங்கள் என்றெல்லாம் கொஞ்சம் ஓவராக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டோம். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் போது நாம் படைக்கும் படைப்புகள் மூன்றாம் தரத்துடன் தான் இருக்கும். கன்னடத்தில் ஹீரோ கணேஷ் நடித்து சக்கை போடு போட்ட படம் 'முங்காரு மளே'! அதற்குப் பிறகு கணேஷ் நடித்த படங்கள் எல்லாம் அட்டர் ஃபிளாப்.இப்போது கன்னட சினிமாவின் காமெடி பீஸ் யார் என்றால் கணேஷ் தான். சில சமயம் சில 'காளான்' எழுத்தாளர்களின் புத்தகங்கள் திடீரென்று முளைத்து பிரபலமாகி
விற்பனையில் சாதனை படைக்கும். அதே மிதப்பில் அவர் எழுதிய இரண்டாவது படைப்பு சீண்டுவார் அற்றுப் போய்விடும்.

சில சிற்பிகள் தங்கள் மாஸ்டர்பீஸை வடித்து விட்டு உடனே தங்கள் விரல்களைத் தாங்களே வெட்டிக் கொண்டதாகக் கேட்டிருக்கிறோம். அபூர்வமான தங்கள் வாழ்நாளின் மாணிக்கமான பாடல் ஒன்று பிரசவித்ததும் தங்கள் நாவை அறுத்துக் கொண்ட பாடகர்களும் இருந்திருக்கிறார்கள். புத்தர்களைப் பிரசவிக்கும் அம்மாக்கள் இறந்து போய் விடுவார்கள் என்று சொல்வதும் இதனால்தான். ஒரு கட்டத்துக்கு மேல் கலைர்கள் பெருந்தன்மையாக தங்கள் துறைகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். 'வில் வித்தையின் உச்சகட்டம் வில்லை வீசி எறிவது' என்பார்கள். இப்போது இந்தப்பக்குவம் எத்தனை
கலைர்களிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. தொண்ணூறு வயது ஆனாலும் கூட 'கலைர்'கள் திரை வசனம் எழுதுகிறார்கள்.இன்னும் பழைய நினைப்பில் அபஸ்வரமாகப் பாடி நம்மை கழுத்தறுக்கிறார்கள். இப்போதெல்லாம் கவிர் வாலியின் கவிதையைப் படிக்கும் போது பயங்கர எரிச்சல் தான் வருகிறது. ஜூ.வி யில் சமீபத்தில் வந்திருந்த வாலியின் ஒரு கவிதையைப் பார்த்து விட்டு அந்தப் பக்கத்தை கிழித்து விடலாமா என்று கூட தோன்றியது.

சரி ஒரு சேம் சைடு கோல்.வாலியின் ஒரு பீஸ்:

எனக்குள் இருந்து
இன்னும் எழுது-
நீ தான் வேர்
நான் வெறும் விழுது!


நான்கு
=======

சின்ன வயதில் இருந்தே இந்த '
காது வலி' என்னைப் படுத்தி வந்திருக்கிறது.காது வலி வரும் போது பாட்டி 'இயர் பட்சில்' அமிர்தாஞ்சனை நனைத்து காதில் சொருகுவாள். சில சமயங்களில் தேங்காய் எண்ணெய் காய்ச்சி கூட ஊற்றி இருக்கிறாள் .கொஞ்ச நேரத்துக்கு 'கின்' என்று இருந்து பின்னர் 'விண் ' என்று மறுபடியும் வலிக்க ஆரம்பிக்கும். இப்போது கடந்த இரண்டு நாட்களாக கா.வ வடுத்தி வருகிறது. பாருங்கள் படுத்தி என்பதை வடுத்தி என்று தப்புத்தப்பாக எழுதுகிறேன். காதுகளைப் பிய்த்து அப்படியே எறிந்து விடலாமா என்று நினைக்க வைக்கும் வலி. சரி என்ன செய்வது காது வலித்தாலும் கலைடாஸ்கோப் வெளிவரும் என்று என் மனத்திடத்தை காட்ட வேண்டாமா? ஓகே ஓகே..கண் வலித்தால் பார்ப்பது கஷ்டம். கை வலித்தால் எழுதுவது கஷ்டம். மூக்கு வலித்தால் சுவாசிப்பது கஷ்டம். காது வலித்தால் கேட்பது கஷ்டமா? இல்லையே.காது கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது.

ஒளி என்பதற்கு நாம் மையம் அல்ல,நாம் தான் முயற்சி செய்து அதை வெளியே செலுத்த வேண்டும் என்பதால் கண்கள் சீக்கிரம் சோர்வடைந்து விடுகின்றன.ஒலிக்கு நாம் தான் மையம். எல்லா ஒலிகளும் நம் முயற்சி இன்றியே நம்மை வந்து அடையும். ஹாயாக அமர்ந்திருக்கும் தாதாவிடம் அவனது அடிப்பொடிகள் சமர்த்தாக வந்து கலெக்சன் சமர்ப்பிப்பது போல! ஒளியின் திசை வெளிநோக்கியது.ஒலியின் திசை உள்நோக்கியது. 112 தந்த்ரா த்யானங்களில் ஒன்று ஒலியை கவனிப்பது. நமக்கு சுற்றிலும் கேட்கும் ஒலிகளை , நாய் குரைப்பதை, யாரோ இருமுவதை, வண்டி போவதை. பாத்திரம் கீழே விழுவதை,காக்காய் கத்துவதை அப்படியே மனத்தின் குறுக்கீடு இல்லாமல் கேட்பது. இது நமக்கு அமைதியைத் தருமாம். (ஞானத்தைக் கூட) காது வலி சரியானதும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.


ஐந்து
======

ஒரு ஹைக்கூ

கண்ணாடியில்
என்னையே
பார்த்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று தோன்றுகிறார்-
என் அப்பா!

ஆறு
======

ஒரு ஓஷோ ஜோக்குடன் முடித்துக் கொள்கிறேன். அய்யோ காதுக்குள் தேள் ஊறுவது போல இருக்கிறது. என் ஆயிரக்கணக்கான வாசகர்களில் (சரி சரி கூல் டவுன்) டாக்டர்கள் யாரும் இல்லையா?

பெர்னி அவன் மனைவியுடன் தன் நண்பன் மோரிஸ் அளித்த விருந்து ஒன்றுக்கு சென்றிருந்தான். விருந்தின் போது தன் மனைவியை அடிக்கொரு முறை 'மானே, தேனே, செல்லம், கன்னுக்குட்டி, டார்லிங், புஜ்ஜியம்மா, டியர், ஸ்வீட் ஹார்ட் என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருந்தான். விருந்து முடிந்ததும்
மோரிஸ்-ஸின் மனைவி ஆர்வம் தாங்க முடியாமல் "உங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது.இன்னும் உங்கள் மனைவியை இப்படி செல்லமாக அழைப்பது வியப்பாக இருக்கிறது"என்றாள்.. பெர்னி மெல்ல அவளிடம் குனிந்து 'ஆக்சுவலி நான் அவ பேரை மறந்துபோய் மூணு வருஷம் ஆகிறது' என்றான்.


முத்ரா

Wednesday, August 24, 2011

அணு அண்டம் அறிவியல் -45

பிரம்மம் எத்தனை பிளவு பட்டாலும் பிரம்மமாகவே இருக்கிறது -உபநிஷத்

அணு அண்டம் அறிவியல் -45
உங்களை வரவேற்கிறது.

[என்ன, எல்லாரும் காலாண்டு பரீட்சைக்கு ரெடியா? நூற்றுக்கு நூறு வாங்குபவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. யார் யார் ஃ பெயில் ஆகிறார்களோ கோழிமுட்டை வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஒரு நாள் பூராம் இடைவிடாமல் டி.வி தமிழ் சீரியல்களைப் பார்க்கும் தண்டனை விதிக்கப்படும்]

E =MC2 இதன் FINISHING NOTES சில..

பெரியது, சிறியது இந்த விஷயங்கள் மனிதனை மிகவும் பாதித்து வந்துள்ளன. (முருகனையும் கூட ! அவ்வையே பெரியது என்ன? என்று கேட்டு அவ்வையாரை கடுப்பேற்றுவார். உலகம் பெரியது; உலகத்தை விட அதைத்தாங்கும் நாகம் பெரியது; அதை விட நாகத்தை விரல் மோதிரமாக அணியும் பார்வதி பெரியவள்;அவளை விட பார்வதியை இடப்பாகம் வைத்த சிவன் பெரியவன். அவனை விட சிவனை உள்ளத்தில் அடக்கிய தொண்டர்கள் பெருமை பெரியது என்று அவ்வையார் அருமையாக விளக்கம் அளிப்பார். )மனிதன் உலகில் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தன்னைச் சுற்றி உள்ள இந்த பூமி, வானம்,சூரியன் இவற்றைப் பகுத்தறிவோடு ஆராயத்தலைப்படவில்லை. பயம் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அப்போது அவனுக்கு பூமி மிகப் பெரியதாக இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு வேறு சில வாழ்வாதாரத் தேவைகள் முக்கியமாக இருந்திருக்கலாம். தினமும் காலையில் சூரியன் வருகிறது.மாலையில் டியூட்டி முடிந்து எங்கோ போய் விடுகிறது அதை எதற்கு தேவையில்லாமல் ஆராய்வது? நம் கேர்ள் ஃபிரண்டை பக்கத்து வீட்டு சாரி பக்கத்து காட்டு முரடன் கடத்திக் கொண்டு போய் விடுவானோ என்பது மட்டுமே அவன் கவலையாக இருந்தது.
பூமி நான்கு மெகா சைஸ் ஆமைகளால் தாங்கப்படுகிறது என்றும் ஆதிசேஷன் தலைமேல் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் மதங்கள் சொல்லப்போய் அவன் அதை அப்படியே நம்பிக் கொண்டு 'மண்டலத்தைத் தாங்கும் மிக வல்லமை பெற்றாய்; மறவாமல் உள்ளம் களித்து ஆடு பாம்பே 'என்று புன்னாகவராளியில் பாடிக்கொண்டு மெளனமாக இருந்து விட்டான். அந்த ஆமை அல்லது நாகம் எதன் மேல் நிற்கிறது ?என்ற பகுத்தறிவுக் கேள்விகள் எல்லாம் அப்போதைக்கு அவனுக்கு டூ-மச்சாக இருந்திருக்கலாம். பூமியின் விளிம்பில் ஒரு மெகாசைஸ் வேலி போடப்பட்டிருக்கும் என்றும் THIS IS THE END என்று போர்டு இருக்கும் என்றும் நம்பினான். அதைத்தாண்டி போனால் அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்றும் நம்பினான். இந்தக் காரணத்தாலேயே மனிதன் கடல்பயணம் செய்து உலகை ஆராயத் தயங்கினான். (கப்பல் விளிம்பில் விழுந்து விட்டால்?) ஆனால் மனிதர்களில் புத்திசாலிகள் தோன்ற ஆரம்பித்தார்கள்.

பூமி தட்டையாக இருந்தால் பூமியில் எல்லாருக்கும் வானத்து நட்சத்திரங்களின் அமைப்பு ஒரே மாதிரி இருக்கும். ஆனால் அப்படி இருக்கவில்லை.பூமி தட்டையாக இருந்தால் கடலில் பயணிக்கும் கப்பல் ஒன்று திடீரென்று நம் பார்வையில் இருந்து மறைந்து விடும். (முதலில் அடிப்பகுதி மறைந்து கடைசியாக பாய்மரத்தின் நுனி மறையாது) .பூமி தட்டையாக இருந்தால் அது கிரகணத்தின் போது நிலவில் ஏற்படுத்ததும் நிழல் ஒரு கோடாக இருக்கும் இப்படியெல்லாம் யூகித்து ஒருவழியாக தனது தாய்பூமியைப் பற்றி (அது ஒரு கோளம் என்று) மனிதன் அறிந்து கொண்டான்.

தான் வாழும் பிரபஞ்சம் மிகப்பெரியது என்று அறிந்து கொள்ள மனிதன் போன நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இது எத்தனை பெரியது என்றால் ஒளியின் கற்றை ஒன்று பிரபஞ்சத்தின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனையை அடைய அதற்கு 26 பில்லியன் (பூமி) ஆண்டுகள் ஆகும். இந்த பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தமாக ஒருவர் பார்க்க முடிந்தால் அதில் நாமெல்லாம் தெரியமாட்டோம். நம்மை விடுங்கள்.மனிதன் கட்டி வைத்திருக்கும் ஈபில் டவர் , சி.என்.டவர் போன்ற விண் முட்டும் கட்டிடங்கள் தெரியாது; எவரெஸ்ட் தெரியாது; பசிபிக் மகாசமுத்திரம் தெரியாது.நம் பூமி கூட தெரியாது. பூமியை விடுங்கள்,1300 பூமிகளை உள்ளடக்கக்கூடிய வியாழன் ?,உஹூம்..நம் சூரியன் கூட மைக்ராஸ்கோப் வைத்துப் பார்த்தால் கூட தெரியாது. நம் பால்வெளி மண்டலம் வேண்டுமானாலும் நம் இரவுப் பயணத்தின் போது தூரத்தில் தெரியும் மங்கலான அறுபது வாட்ஸ் பல்பு போல குட்டியூண்டு தெரியலாம்.சுஜாதா சொல்வது போல நாளை பஸ்ஸில் இரண்டு ரூபாய் பாக்கி சில்லறை தரவில்லை என்று கண்டக்டருடன் சண்டை போட எத்தனிக்கும் போது நம் பிரபஞ்சத்தின் விஸ்தாரத்தை எண்ணிப்பாருங்கள் ஒருதரம்.

ஓஷோவின் ஒரு கதை இப்படிப் போகிறது.

பூமியில் மிகப் பிரபலமாக இருந்த போப் ஒருவர் இறந்ததும் மேலே செல்கிறார். தன்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் சொர்கத்தின் நுழைவாயிலில் தடபுடலாக மாலை மரியாதைகளுடன் வந்து தேவர்கள் தன்னை வரவேற்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டு சொர்கத்தின் கதவருகே செல்கிறார். அந்தக் கதவு நீள அகல உயரம் காணமுடியாமல் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவர் அதைத் தட்டிப் பார்த்து 'நான் தான் பூமியில் இருந்து போப் வந்திருக்கிறேன் (மாலை யானை எல்லாம் ரெடியா?) என்று அப்பாவியாகக் கேட்கிறார் . அவர் குரல் அந்த பிரம்மாண்டத்தில் அவருக்கே கேட்பதில்லை. கதவின் ஒரு சிறு துளை வழியே உள்ளே எட்டிப்பார்க்கிறார். கோடி சூரியன்களைப் பார்த்தது போல அவர் கண் கூசுகிறது.கதவு எதேச்சையாகத் திறந்து அப்போது ஒரு காவலாளி வெளியே வருகிறான். போப் உள்ளே போக முயற்சிக்கிறார். அவரை அவன் தடுத்து நிறுத்தி 'உள்ளே போக அனுமதி இல்லை' என்கிறான். அவர் கோபமாக நான் யார் தெரியுமா? நான் தான் போப் என்கிறார் . அவன் குழப்பமாக போப்பா ? இந்தப் பேரை இதுவரை கேட்டதே இல்லையே ?யார் அது? என்கிறான். போப் வலுக்கட்டாயமாக உள்ளே போக முயற்சிக்கிறார்.இதைப் பார்த்து விட்டு உள்ளே இருந்த சொர்கத்தின் அக்கவுண்டன்ட் வருகிறான். நீங்கள் யார்? என்று கேட்கிறான். நான் பூமியில் இருந்து வருவதாக அவர் சொல்கிறார்.எந்த பூமி என்று கேட்டதற்கு சூரிய மண்டலம் என்று சொல்கிறார் அவர். சூரிய மண்டலாமா? அதன் நம்பர் சொல்லுங்கள் என்கிறான் . போப்புக்கு நம்பர் எல்லாம் தெரியவில்லை.அய்யா நீங்கள் தயவு செய்து எந்த நம்பர் காலக்ஸி,எந்த நம்பர் சப்-காலக்ஸி எந்த நம்பர் சூரியன் எந்த நம்பர் கிரகம் என்று தெளிவாக சொல்லுங்கள்.இல்லை என்றால் வெளியே போங்கள் என்கிறான்.அவருக்கு அழுகை வருவது போல ஆகி விடுகிறது.எனக்கு ஜீசசைத் தெரியும் என்கிறார். 'ஜீசஸா' என்று அவன் கேட்டதும் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறார். அவரது சீரியல் நம்பர் என்ன? இப்போது தான் லட்சத்து நாற்பதாயிரத்து ஐநூறாவது ஜீசஸ் முக்தி அடைந்து இங்கே வந்திருக்கிறார். அவரா? என்று கேட்கிறான். போப் மயங்கி விழுகிறார்!

நாம் சில சமயங்களில் நம்மை மிகப்பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்.'நான் யார் தெரியுமா,நான் தான் அம்பத்தூர் ராஜசேகர்,' என்று வசனம் எல்லாம் பேசுகிறோம்.அப்படிப் பேசும் முன் கொஞ்சம் இந்தக்கதையை நினைவில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

சிறியது என்றால் அதற்கும் சிறியது இருக்கும். பெரியது என்றால் அதற்கும் பெரியது இருக்கும் (If N exists N-1 also exists, if N exists N+1 also exists) என்று மனிதனின் தர்க்க (logical ) மனம் நம்புகிறது. பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்று கையை நீட்டினால் என்ன வரும்? அதுவும் பிரபஞ்சம் தானே? என்று கேட்கிறார் ஒரு தத்துவ ஞானி. இன்றைய இயற்பியல், பிரபஞ்சம் எல்லையற்றது அல்ல என்று நம்புகிறது. ஒரு மீன் தொட்டியின் உள் பக்க விளிம்பில் மீன் இடித்துக் கொள்வதைப் போல நாம் பிரபஞ்சத்தின் விளிம்பில் இடித்துக் கொள்வோம்.(சுவர் இல்லாமலேயே!) அல்லது பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் இருந்து நேர்கோட்டில் போய்க்கொண்டே இருந்தால் மீண்டும் அதே புள்ளியை அடைந்து விட முடியும். (என்ன கொஞ்சம் லேட் ஆகும்!)

சில விஞ்ஞானிகள் இந்த பிரபஞ்சத்தை MULTIVERSE என்று அழைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது நம் பிரபஞ்சம் முடிந்ததும் இன்னொரு பிரபஞ்சம் துவங்குமாம் (நான் இந்த விளையாட்டுக்கு வரலை!) இன்னும் சில பேர் காலக்ஸிகள் பல இல்லை ..ஒன்று தான் இருக்கிறது. டெலஸ்கோப்பில் தெரியும் வேறு காலக்சிகள் நம் பால்வெளி காலக்ஸியின் ஈர்ப்பு லென்சு (GRAVITATIONAL LENS ) ஏற்படுத்தும் பிம்பங்கள் என்கிறார்கள். கண்ணாடிகளில் நம்மையே பார்த்து விட்டு பார் எத்தனை ஆள் என்று சொல்வது போல! (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?) சரி இப்போதைக்கு பெரியதன் வரம்பு பிரபஞ்சம் என்று வைத்துக் கொள்வோம்.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் அது எதில் விரிவடைகிறது?? பிரபஞ்சம் அதைப் படைத்த ஒருவரை (ஒன்றை) விட சிறியது தானே? என்றெல்லாம் கேள்வி கேட்டால் உங்களை ஒருவாரம் க்ளாஸில் இருந்து சஸ்பண்ட் செய்து விடுவேன் ஆமாம்.

இதே போல சிறியது எது என்ற கேள்வியும் சுவாரஸ்யமானது. சிறியது என்ன என்ற கேள்வி முருகனின் questionnaire யில் இருந்ததா என்று தெரியவில்லை. கேட்டிருந்தால் அவ்வை இப்படி பதில் சொல்லி இருப்பாளோ?

சிறியது கேட்கின் நெறி வடிவேலோய்
சிறிது சிறிது சிட்டுக் குருவி
அதனினும் சிறிது குருவியின் சேயாம்
அதனினும் சிறிது சேயுண்ணும் அன்னம்
அன்னப் பருக்கையின் சிறியது கடுகு
அதனினும் சிறியது கடுகுற்ற அணுவாம்
அதனினும் சிறிது அடுத்தவர் புண்பட
அவதூறு பேசும் அன்னவர் மனமே!


ஆனால் அணு என்பது அதன் அணுக்கருவை விட பலமடங்கு பெரியது என்கிறது குவாண்டம் இயற்பியல். அணுக்கருவை விட சிறியவை அதன் துகள்களான ப்ரோடான் மற்றும் நியூட்ரான். அவை கூட குவார்க்குகளின் கட்டுமானங்கள் என்று சொல்கிறார்கள். அவற்றை விட சிறிய துகள்கள் நியூட்ரினோ எனப்படும் துகள்கள்.இவை ஃ போட்டான்களைப் போல நிறை அற்ற குட்டியூண்டு துகள்கள்.ஆனால் போட்டான்களைத் தனியாக நாம் பார்க்க முடியாது.(எப்போது ஆட்டுமந்தை போல ஒன்றாக தான் இருக்கும்.அந்த ஆட்டுமந்தை தான் ஒளியாக நம் கண்ணுக்குத் தெரிகிறது ) இந்த நியூட்ரினோவைப் பார்க்க முடியும் என்கிறார்கள்(நம்பிட்டோம்!)

சில பேர் நாமெல்லாம் ஒரு மெல்லிய கிடத்தட்ட பூஜ்ஜிய தடிமன் உள்ள ஒரு ஒருபரிமாண நூலில் (STRING THEORY ) ஏற்பட்ட முடிச்சுகள் தான் என்று ஏதேதோ சொல்லி
பயமுறுத்துகிறார்கள். இறைவனை குறிப்பிடும் போது கபட நாடக சூத்திர தாரி என்பார்கள் (REF : புரந்தரதாசரின் அபராதி நானல்ல அபராத எனகில்ல கபடநாடக சூத்ரதாரி நீனே[நான் நிரபராதி.நான் எந்த தவறும் செய்யவில்லை..நூல் உன் கையில் இருக்கிறது] ) .சூத்திரம் என்றால் கயிறு அல்லது நூல்.அதாவது இறைவன் கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய நூலால் நம்மை ஆட்டுவிக்கிறானாம். (ஆம்..ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே )பாவைக்கூத்து எனப்படும் பொம்மலாட்டத்தில் பொம்மைகள் அவையே ஆடுவது போல இருந்தாலும் ஒரு மெல்லிய நூல் அவற்றின் கைகால்களில் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். STRING THEORY வருவதற்கு எத்தனையோ காலங்களுக்கு முன் நம் ஆன்மீகப் பெரியவர்கள் இப்படி ஒரு 'க்ளூ' கொடுத்து விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது.
சரி.. ஒரு அசுரனுக்கும் பகவானுக்கும் (முருகனோ, கிருஷ்ணனோ, துர்க்கையோ ) கடுமையான சண்டை நடக்கிறது. அஸ்திர மழை பொழிகிறது! கடைசியில் பகவான் டென்ஷன் ஆகி ஏதோ ஒரு சக்தி வாய்ந்த அஸ்திரத்தை பிரயோகித்து (இதை முதல்லேயே செஞ்சிருக்கலாமே?) அந்த அசுரனை ஆயிரம் துண்டுகளாக பீஸ் பீஸ் ஆக்கி விடுகிறார் . சரி மேட்டர் முடிந்தது சொர்கத்துக்கு சென்று ஒரு ஆயிரம் வருடம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தேரை விட்டு கீழே இறங்கினால் அந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு அசுரனாக மாறி முன்னால் நின்று சிரிக்கிறது!

சரி இதை ஏன் இங்கே சம்பந்தம் இல்லாமல் சொல்கிறேன் (உளறுகிறேன்) என்றால் ஒன் நிமிட்! இது மாதிரி கற்பனைகள் ஃபிக்சன் என்று தோன்றினாலும் இயற்பியல் இதை உண்மை என்கிறது. அதாவது 'm ' நிறையுள்ள ஒரு பொருளைப்பிளந்தால் அது இரண்டாகப் பிளக்கப்பட்டு நமக்கு ஒவ்வொன்றும் 'm ' நிறையுள்ள இரண்டு பொருட்கள் கிடைக்கின்றன. (exactly அந்த அசுரன் செய்தது போல!) ஆனால் இது அசுரன் போன்ற MACROSCOPIC பொருட்களுக்கு நடப்பது அசாத்தியம். பொருட்களை உடைத்துக் கொண்டே போகும் போது ஒரு குறிப்பிட்ட மீச்சிறு எல்லைக்குப் பிறகு அந்த பொருளை உடைக்க நாம் செலுத்தும் ஆற்றல் நிறையாக மாற்றப்பட்டு துண்டுகளின் நிறையோடு சேர்கிறது.சில சமயம் துண்டுகளின் (தனித்தனி) நிறை முதலில் இருந்த பிளக்கப்படாத பொருளின் நிறையை விட அதிகமாக இருக்கிறது. இந்த நிறை-ஆற்றல் சமன்மை(MASS ENERGY EQUIVALENCE) எது உலகிலேயே மிகச் சிறியது என்ற கேள்வியை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. ஒரு எல்லைக்கு மேல் பொருளை நாம் பிளக்க நினைத்தால் அது எதிரியின் ஆற்றலை உள்வாங்கிக் கொள்ளும் வாலி போல , பிளந்த பின்னும் ஒட்டிக் கொள்ளும் ஜராசந்தன் போல செயல்பட்டு நமக்கு போக்குக் காட்டுகிறது.

சிவன் திருவிளையாடலில் கையை நீட்டியதும் எங்கிருந்தோ வீணை திடீரென்று வருமே? இது போன்ற நிகழ்வுகளையும் இயற்பியல் அனுமதிக்கிறது. வீனையையோ அல்லது மாஜிக் நிபுணரின் முயல் போல உயிருள்ள பொருட்களையோ சூனியத்தில் இருந்து கொண்டு வருவது கஷ்டம். ஆனால் PARTICLE ACCELERATOR எனப்படும் துகள் முடுக்கிகளில் இரண்டு துகள்களை எதிரெதிர் திசைகளில் இருந்து கிட்டத்தட்ட ஒளிவேகத்தில் மோத விடும் போது அவைகளின் இயக்க ஆற்றல் புதிய துகள்களாக மாற்றப்பட்டு அவை குவா குவா என்று அழுதவண்ணம் வெளிவருகின்றன. பொருட்களை கடவுள் தான் படைக்க முடியும் என்ற சித்தாந்தத்தை இது தவறு என்று நிரூபித்தது. கணிசமான ஆற்றல் இருந்தால் (WELL , அந்த ஆற்றலை கடவுள் தான் படைக்க வேண்டும்) அதிலிருந்து மனிதன் பொருளைப் படைக்கலாம்.எப்படி இருந்த போதிலும் மனிதன் ஒரு CREATOR அல்ல
CONVERTER தான் என்று சொல்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

துகள் முடுக்கி

மனிதனுக்கு ஒரு கெட்ட பழக்கம். ஏதாவது ஒன்று இருந்தால் அதற்கு எதிரானதும் இருக்கும் என்று நம்புவது. கடவுள்-சாத்தான், சொர்க்கம்-நரகம், ஒளி-இருட்டு , மானேஜர் -வேலை செய்வது என்றெல்லாம். அதே போல பொருளுக்கும் எதிர்ப்பொருள் ஒன்று இருக்கும் என்று நம்புகிறார்கள். (ANTI MATTER ) (தயவு செய்து AUNTY Matter என்று படிக்காதீர்கள்) ஒரு ஹைட்ரஜனை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு எலக்ட்ரானும் ஒரு ப்ரோடானும் மட்டுமே இருக்கின்றன. அதே போல எதிர் ஹைட்ரஜனில் ஒரு பாசிட்ரானும் (எலக்ட்ரானுக்கு எதிர்) ஆன்டி ப்ரோடானும் இருக்கலாம்.ஒரு மேட்டர் அதன் ஆன்டி-மேட்டருடன் மோதினால் இரண்டும் முற்றிலும் காணாமல் போய் நமக்குத் தூய ஆற்றல் கிடைக்கும் என்கிறார்கள்.ஆனால் இந்த ஆன்டி-மேட்டரை பிரபஞ்சம் எங்கும் சல்லடை போட்டு சலித்து தேடினாலும் கிடைக்கவில்லையாம்.(ஒரு பொருளை ஆற்றலில் இருந்து உருவாக்கும் போது அதன் எதிர்ப்பொருளும் நமக்கு இனாமாகக் கிடைக்கும் என்கிறார்கள். அப்படியானால் கடவுள் நமக்கெல்லாம் எதிர்பொருளை (ஆன்டி சமுத்ராவை) எங்கே வைத்திருக்கிறார்?)

முழுவதும் எதிர் துகள்களால் ஆன ஒரு பிரபஞ்சம் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.அங்கே எல்லாமும் உல்டா. (அஹா இதை வைத்து ஒரு அருமையான ஃபிக்சன் நாவல் எழுதலாமே?)அங்கே ஒரே மாதிரியான துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்(LIKE POLES ATTRACT ) . வெவ்வேறு துகள்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும். அங்கே ஈர்ப்பானது பொருட்களை ஒன்றை விட்டு ஒன்று விலக்கும். ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் காதலித்து குழந்தை பெற்றுக் கொள்வார்கள்! கடவுள் சரி பேஜாராக இருக்கிறது இந்த பிரபஞ்சத்தை அழித்து விட்டு வேறு உருவாக்கலாம் என்று நினைத்தால் இந்த இரண்டு பிரபஞ்சங்களையும் அருகருகே கொண்டு வந்தால் போதும். இரண்டும் அழிந்து பயங்கர ஆற்றல் கிடைக்கும்.அந்த ஆற்றலை கடவுள் தன் DIVINE பேங்க்OF PARADISE இல் பத்திரமாக லாக்கரரில் வைத்துக் கொண்டு பின்னர் அதில் இருந்தே கால்கட்டை விரலை சப்பிய படி ஒரு புதிய பிரபஞ்சத்தை செய்வார். [அந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்கு கண்டிப்பாக ஐந்து அறிவு தான் கொடுப்பாராம்]

விண்மீன்களுக்கு இடையே பயணிக்கக்கூடிய INTERSTELLAR பயணங்களுக்கு எரிபொருளாக இந்த எதிர்ப்பொருளைப் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த எதிர்ப்பொருளை செய்வது தான் உலகிலேயே காஸ்ட்லியான விஷயமாம். அதாவது ஒரு பத்து பத்து மில்லிக்ராம் பாசிட்ரான்களை உருவாக்க நமக்கு எத்தனை பணம் வேண்டும் என்று தெரியுமா? ANY GUESS ? கம்மி தான். 1125 கோடி ரூபாய்.(ஸ்பெக்ட்ரம் பணத்தை விட கம்மி தான் என்கிறீர்களா?)

Bye Bye E=MC2 (சிலபஸ்ஸை சீக்கிரம் சீக்கிரமாக முடிக்க வேண்டி இருக்கு..#சமச்சீர் கல்வி!)

சமுத்ரா

மெல்லத் தமிழ் இனி வாழும்!!!

இது மணற்கேணி- 2010 இற்கு அனுப்பிய கட்டுரை. வழக்கம் போல ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. எனவே 'யான் பெற்ற
துன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நல்ல எண்ணத்தில் இதை வெளியிடுகிறேன்.


மெல்லத் தமிழ் இனி வாழும்
===============================

முதலில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம் ...தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.

ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.

இன்றைய ஆதிக்க மொழிகள் பல விதை வடிவில் தூங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ் விருட்சமாக வளர்ந்து நின்று "எழுத்து எனப்படுவ அகரம் முதல்" என்று ஆரம்பித்து செம்மையான ஒரு இலக்கண நூலை வடிக்கும் அளவு உயர்ந்திருந்தது என்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயம்.

அரிதான ஒரு பொருள் நம் அருகில் இருந்தால் அதன் மதிப்பு நமக்குத் தெரியாது என்பார்கள்.நம் தாய்மொழியைப் பொறுத்தவரை அது உண்மையென்றே தோன்றுகிறது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஓர் உயர்ந்த மொழியைப் பேசுகிறோம் என்ற கர்வம் கலந்த பெருமை தமிழ்நாட்டில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ் நாட்டிலேயே திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.நாடாளுமன்றங்களில் தமிழில் பேச மந்திரிகள் தர்மசங்கடமாக உணர வேண்டியுள்ளது

"மெல்லத் தமிழினி வாழும்"- இந்த வாக்கியத்தை இப்போது கொஞ்சம் அலசலாம்..இப்போது தமிழ் எங்கெல்லாம் 'வாழ்ந்து' கொண்டிருக்கிறது என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.பாடப் புத்தகங்களில் தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு வரை வாழ்ந்து விட்டு பின்னர் மறைந்து விடுகிறது. மொழிப் பாடமாகக் கூட தமிழை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை .அப்படியே போனால் போகட்டும் தமிழையும் படிப்போம் என்று தேர்ந்தெடுத்தாலும் மதிப்பெண்களுக்காக மட்டும் "தேரா மன்னா செப்புவதுடையேன்" என்று மனப்பாடம் செய்து விட்டு, தேர்வு முடிந்த மறுநாளே மாணவர்கள் கண்ணகியை மறந்து விடுகிறார்கள். "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" என்று வாசிக்கும் போது எத்தனை பேருக்கு பரவசத்தில் மனதுக்குள் மணி ஒலிக்கும் என்பது தெரியவில்லை.

அறிவியல் தமிழின் நிலைமை இன்னும் பரிதாபம். "Mass Density Variation " என்பதை 'பிண்டத் திணிவு ஏற்ற இறக்கம்" என்றெல்லாம் சொல்ல வேண்டி வருமோ என்று பயந்தே மாணவர்கள் பலர் தமிழ் வழிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில்லை போலும்..

தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டியதுமே தமிழ் தன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது என்பதுதான்.வணிக மயமாகிவிட்ட இன்றைய உலகத்தில் ஆங்கிலம் போன்ற "வணிக ரீதியான" மொழிகளுக்கு முன் தமிழ் போன்ற "கவித்துவமான" மொழிகள் "Utilitarianism" என்ற கொள்கையின் படி பின் தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழ்த் திரைப்படங்களில் தமிழ் வாழ்கிறதா என்றால் அவைகளின் தலைப்பிலும் அவ்வப்போது அரிதாகக் கேட்கும் "முன்பே வா என் அன்பே வா" போன்ற பாடல்களிலும் ஓரளவு வாழ்கிறது எனலாம். பாடப் புத்தகங்களால் செய்ய முடியாதவற்றை திரைப்படப் பாடல்கள் சில சமயங்களில் செய்து விடுகின்றன. "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்" என்ற திருவாசகமும் "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆண்டாள் திருவாய்மொழியும் திரையிசை இல்லாவிட்டால் இளைஞர்களின் வாயில் நுழைந்திருக்குமா என்பது சந்தேகம்.

தொலைக்காட்சிகளில் தமிழ் வாழ்கிறதா என்றால் 'சீரியல்கள்' மூலம் ஓரளவு வாழ்கிறது என்று தோன்றுகிறது. பொதிகை போன்ற சானல்கள் மட்டும் திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் அவ்வப்போது விடாப்பிடியாக நினைவுபடுத்துகின்றன. சில சானல்கள் தமிழ் பேசினால் தங்கக் காசு என்றெல்லாம் கூட அறிவிக்கின்றன.. புத்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் தமிழ் ஓரளவு செழிப்புடனேயே இருக்கிறது. என்ன தான் ஆங்கில நாளிதழ்கள் இருந்தாலும் கையில் ஒரு டம்ளர் தேநீருடன் தமிழ் நாளிதழ் ஒன்றைக் காலை வேளையில் புரட்டும் சுகமே தனி அல்லவா?

சரி இனி தமிழிசைக்கு வருவோம்..இது விவாதத்திற்கு உரிய ஒரு தலைப்பு. சுருக்கமாகச் சொன்னால் கச்சேரிகளில் போனால் போகட்டும் என்று பாடகர்கள் பாடும் "யாரோ இவர் யாரோ", "தாயே யசோதா" போன்ற பாடல்களில் தமிழின் உயிர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் தாளத்தோடு ஒட்டி வர வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை பகுபத உறுப்பிலக்கணம் செய்து விடுகிறார்கள் பாடகர்கள்..

ஆச்சரியப் படுத்தும் இன்னொரு விஷயம் பேச்சு வழக்கில் எவ்வளவோ மருவி கொச்சைப்படுத்தப்பட்டு பல இடங்களில் பலவாறு பேசப்பட்டு வந்தாலும் எழுதுவதற்கு எல்லாரும் "செந்தமிழ்" என்ற 'standard ' ஐ பயன்படுத்துவது தான். பேச்சு வழக்கில் 'உன் மகன் எங்கே?' என்று கேட்டல் 'சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்" என்று ஆரம்பித்து கவிதை பாடுவது என்பது அசாதாரணமான ஒன்று தான்.

அடுத்தபடியாக 'blogspot ' என்று அழைக்கப்படும் வலைப்பூக்களில் தமிழ் கொஞ்சம் தவழ்கிறது. அவற்றில் பெரும்பாலானவை பொழுதுபோக்குக்காக எழுதப்பட்ட குப்பைகள் என்று ஒரு கருத்து நிலவினாலும் தமிழார்வம் கொண்ட வலைப்பதிவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சரி, இவைகளால் மட்டும் தமிழ் இனி வாழ்ந்து விடும் என்று நாம் மெத்தனமாக இருந்து விட முடியுமா? 'மெல்லத் தமிழினி வாழும்' என்று நூறு சதவிகிதம் நம்பிக்கையுடன் நாம் சொல்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

'மொழி' என்பது வெறுமனே நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சாதனம் மட்டும் அன்று. (நிறைய பேர் அப்படி நினைப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று) மொழி என்பது நம்முடன் மனோதத்துவ ரீதியாக இணைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. முன்பின் தெரியாத வெளிநாடு ஒன்றில் எங்கேனும் நம் தாய்மொழி கேட்டால் நாம் பாலைவனச் சோலை போல உணர்வது இதனால் தான். கவிஞர்கள் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று புளகாங்கிதமடைந்து பாடுவதும் இதனால் தான்.

ஆனால் தாய்மொழியின் மீது உள்ள அதீதமான உணர்ச்சிப்பூர்வமான பற்றே அதன் வளர்ச்சிக்கு சில சமயம் தடையாக அமைந்து விடலாம் என்பதை நாம் மறுக்கக் கூடாது. உதாரணமாக உலகெங்கிலும் வியாபித்திருக்கும் மொழியான ஆங்கிலத்தில் எந்த ஒரு கவிஞரும் குறைந்த பட்சம் "I Love English " என்று பாடியிருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் இந்த அதீதமான தமிழ்ப் பற்று ஏனோ சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும், ஆதாயம் தேடும் கவிஞர்களிடமும் ,இலக்கிய வாதிகளிடமும் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்களுக்கு தமிழ் என்பது வெறும் உணர்சிகளை வெளிக்காட்டும் ஒரு சாதனமாகவே இருக்கிறது. அரசியலில் இல்லாத,கவிஞரல்லாத,இலக்கிய வாதியாக இல்லாத ஒருவர் சிறிதே தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினாலும் அவரை தனிமைப்படுத்திப் பார்க்கும் மனோபாவம் ஏனோ நம்மிடம் இருக்கிறது. உதாரணமாக சமீபத்திய நாளிதழ் ஒன்றில் படித்த ஒரு சம்பவம்: தமிழ்ப்பற்று கொண்ட
பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளிடம் தூய தமிழில் "ஐயா, அமருங்கள், அனைவரும் பயணச் சீட்டு வாங்கி விட்டீர்களா" என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம். அவர் அப்படிப் பேசுவதைக் கேட்டு பயணிகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம். தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் சிரிக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனைக்குரிய ஒரு செய்தி? இதே பிரான்சு நாட்டில் பிரெஞ்சில் பேசினாலோ, வட மாநிலம் ஒன்றில் ஹிந்தியில் பேசினாலோ இவ்வளவு ஏன் , கர்நாடகத்தில் "சீட்டி தொகளி" என்று ஆங்கிலம் கலக்காமல் பேசினாலோ யாரும் சிரிப்பதாகத் தெரியவில்லை.

எனவே "மெல்லத் தமிழினி சாகும்" என்று பாரதி பயந்தது நடந்து விடாமல் இருக்க நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். முதலாவது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். தமிழர்கள் தான் உலகின் பூர்வீகக் குடிகள்...தமிழைப் பழிப்பவனை வெட்டு, குத்து என்றெல்லாம் உணர்ச்சிப் பூர்வமாக மக்களை உசுப்பி விடுவதை நிறுத்த வேண்டும். அரசியல் சேர்க்கை காரணமாக தமிழனுக்கு வெளி மாநிலங்களில் மதிப்பும் வரவேற்பும் குறைகிறது என்பதை மறுக்க முடியாது. சென்னையில் சர்வக்யர் சிலையை வைத்த பின்னரே பெங்களூருவில் திருவள்ளுவரின் சிலையை நம்மால் திறக்க முடிகிறது.

தமிழர்கள் 'இந்தி' எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது முன்னோக்குப் பார்வையற்ற ஒரு செயல் என்று கருதுகிறேன். இதன் காரணமாகவே தமிழன் என்றால் முரடன்; பிற மொழிகளை வெறுப்பவன் என்ற முத்திரை நம் மீது குத்தப்பட்டு விட்டது. உண்மை என்னவென்றால் தமிழை உண்மையாக ஒருவர் நேசித்தால் அவர் மற்ற மொழிகளையும் நேசிப்பார் என்பது தான். 'தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளையும் விரட்டு' என்று கூக்குரலிட்டால் அவர் தமிழையும் நேசிக்கவில்லை என்று சொல்ல முடியும்.

அடுத்து தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் தமிழை வலுக்கட்டாயமாக நுழைக்க முயல்வது. அறிவியல் நூல்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் படுத்தப்பட்டு தொல்காப்பியம் போன்று எழுதப்பட்டிருந்தால் அவற்றை யார் தான் படிப்பார்கள்?..எழுதியவர் கூட இன்னொரு முறை படிக்க மாட்டார். "Magnetic Dipole Reversal simulation "என்பதை "காந்த இரட்டை துருவ திருப்புதலின் போலி கணித வடிவம்" என்றெல்லாம் கூறுவது. சில சமயங்களில் பாடப் புத்தகங்களில் கூட இப்படியே கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று மாணவர்களிடையே தமிழின் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறோம் நாம். தமிழ் போன்ற மொழிகள் கவித்துவமான மொழிகள். உணர்வு சார்ந்த மொழிகள். இவற்றை தொழில்நுட்ப மொழிகளின் தரத்திற்கு உயர்த்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவது தேவையற்ற ஒரு செயல். அவ்வாறு செய்வதன் மூலம் நம் மொழியின் இயற்கை அழகையே நாம் அழித்து விடுவோம். உதாரணமாக தமிழில் அன்பு,பாசம்,காதல்,நேசம் என்று பல சொற்கள் இருந்தாலும் ஆங்கிலத்தில் 'love ' மட்டுமே.ஆங்கிலத்தில் ஆதார துகள்களை சொல்லும் போது Electron,Quark,Proton,Neutron,Neutrino,Photon,Muon,Lepton என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தமிழில் அதிக பட்சம் 'துகள்' என்று மட்டுமே கூற முடியும். எனவே மாணவர்கள் அறிவியலை, தொழில்நுட்பத்தை ஆங்கிலத்திலேயே படிக்கட்டும். இது ஒன்றும் தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி அல்ல. புரியவில்லை என்றால் ஓரளவு தமிழ்ப்படுத்தி எடுத்துச் சொல்லுங்கள். இது அவர்களின் வருங்காலத்திருக்கும் உதவியாக இருக்கும்

அப்புறம் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படும் ஒரு வாதம். பாரதி காலத்தில் இருந்தே இது தொடர்வதாகத்தான் தெரிகிறது. தாகூரின் எழுத்துகளுக்கு நிகராக, ஏன் ஒரு படி மேலேயே சென்று நோபல் பரிசு பெரும் தரம் பாரதியின் எழுத்துகளுக்கு இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கவனிப்பாரற்று தான் இருந்தார். இன்றும் தமிழ் நாட்டில் ஒரு திரைப்பட நடிகருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியர்கள் ஒரு லட்சம் கேட்டால் 'அவ்வளவா?' என்று கேட்கிறார்களாம்

"தமிழ்" இனி வாழ்வதற்கு நாம் தமிழ் மீதான ஈடுபாட்டை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். குழந்தை திருக்குறள் ஒப்புவித்தால் "இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ரைம்ஸ் சொல்லு" என்று சொல்லும் மனோபாவத்தை நாம் விட வேண்டும். உண்மை என்னவென்றால் இன்று தமிழ் நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பேருந்துகளில் தமிழில் எழுதியிருக்கும் வழித்தடங்களைக் கூட படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். வெளி மாளிலம் ஒன்றுக்கு செல்லும் போது அந்த மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் நியாயம். நம் மாநிலத்தில் நம் மொழியையே படிக்க முடியவில்லை என்றால்?

பிள்ளைகளை தமிழ் புத்தகங்கள் , செய்தித்தாள்கள்(ளையும்) படிக்கும் படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன தான் சில தமிழ் நாளிதழ்கள் நாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என்று கூவினாலும் இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைக்கிறார்கள். இது ஏன்? தமிழ் நாட்டுக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகளையே கூட "Tamilnadu education minister inagurated Tamil sangam " என்று ஆங்கிலத்தில் படிக்கும் நிலைமையே இருக்கிறது

பள்ளிகளில் மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால் மறுபடியும் 'utilitarianism '.. இயற்பியல் படித்தால் பொறியாளராகலாம். ஆங்கிலம் படித்தால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். உயிரியல் படித்தால் மருத்துவராகலாம். தமிழ் படித்தால் ? கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்தால் வகுப்பில் பாதி மாணவர்கள் உடனே பெயரைப் பதிவு செய்கிறார்கள். "கவிதைப் போட்டி" வைத்தால் , ஒரு மாணவன் பதிவு செய்தாலே பெரிய விஷயம். அதுவும் அந்த மாணவன் ஒரு 'stand out ' போல நடத்தப்படுவதும் வேதனை.

சரி. மெதுவாகவோ, வேகமாகவோ தமிழ் இனி வாழ்வதற்கு ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டிய சில கடமைகள்:

ஆசிரியர்கள்
============
இதில் ஆசிரியர்களின் பங்கு தான் மிக அதிகம் . அவர்கள் கடமைக்காக தமிழைக் கற்றுத் தராமல் ஒரு தெய்வீக மொழியைப் போதிக்கிறோம் என்ற உணர்வுடன் சங்கீதம் கற்றுத் தருவதைப் போல பாடங்களை அனுபவித்து நடத்த வேண்டும். "நேர் நேர் தேமா நிறை நேர் புளிமா, எல்லாரும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்" என்று ஆசிரியரே கூறினால் மாணவர்களுக்கு எவ்வாறு தமிழின் மீது ஈடுபாடு வரும்? தமிழின் எழிலையும் இலக்கியத்தின் நளினங்களையும் நடிகர்.சிவக்குமார் "கம்பன் என் காதலன்" என்ற தலைப்பில் உணர்சிப்பட பேசியிருப்பாரே அது போல சொல்லித் தர வேண்டும். தமிழில் வெளியாகும் நல்ல படைப்புகளை மாணவர்களுக்கு அவர்களே அறிமுகப்படுத்த வேண்டும். இலக்கியங்கள் குறித்து வகுப்பறைகளில் சுவையான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழில் தரமான கதை, கட்டுரைகளை எழுத மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அரசாங்கம்
==========
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்து விட்டால் போதும்.உள்ளே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். தமிழைக் கொலை செய்யும் பாடல்களையும் வசனங்களையும் தயவு தாட்சிண்யம் இன்றி தடை செய்ய வேண்டும். (இன்னும் தமிழ் நாட்டில் நிறைய பேர் தமிழில் ஒரே ஒரு லகரம் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (பாடலாசிரியர்கள் உட்பட)) .அரசியல் கலக்காத செம்மொழி மாநாடுகளை நிறைய நடத்த வேண்டும். கருத்தரங்குகள் சலிப்பு மிக்க இலக்கிய அரங்குகளாக மட்டும் இல்லாமல் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் படி சுவையாக அமைக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடப் புத்தகத்தை இன்னும் எளிமையாகவும் சுவையாகவும் அமைக்க வேண்டும். அரசியல் வாதிகளையும் ஒரு குறிப்பிட்ட கவிஞரையும் மட்டுமே சதா புகழ்ந்து கொண்டிருக்காமல் ,தமிழில் எழுதும் புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். தமிழின் படைப்புகளை மொழிபெயர்த்து உலகுக்கு அறிவிக்க முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்
==============================
===========
இவர்கள் தங்கள் தமிழ் எழுத்துகளால் மக்களை வசீகரிக்க வேண்டும். இளங்கோவடிகள் காலத்து தமிழை எழுதி மக்களை சலிப்புறச் செய்யாமலும் ,'நாக்க முக்க' அளவுக்கு கீழே இறங்காமலும் தமிழை ஓரளவு தரத்துடன் வழங்க வேண்டும். தமிழ் இவ்வளவு அழகான மொழியா என்று படிப்பவர்கள் நினைக்கும் படி எழுத வேண்டும். எழுத்தாளர். சுஜாதா செய்தது போல் புறநானூறு போன்ற இலக்கியங்களை அவற்றின் சுவை மாறாமல் புரியும் படி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

பொதுமக்கள்
===========
இரண்டு பேர் சந்திக்கும் போது இருவருக்கும் தமிழ் தெரிந்திருந்தால் அலட்டிக் கொள்ளாமல் தமிழிலேயே பேச வேண்டும். சினிமாவுக்கும், ஓட்டல்களுக்கும் செலவழிப்பதில் ஒரு பகுதியையாவது நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த இலக்கியங்களையும், தமிழ்ப்பாடல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்

மாணவர்கள்
============
தமிழை மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காமல் அதன் அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்டு மொழிப்பற்றுடன் கற்க வேண்டும்

தொழில் அதிபர்கள், அலுவலர்கள், என்.ஆர்.ஐ கள்
==============================
==============
தமிழுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை;நாம் பங்குச் சந்தை நிலவரத்தை கவனிப்போம் என்றில்லாமல் தமிழை வளர்க்க பொருளாதார ரீதியாக இவர்கள் உதவி செய்ய வேண்டும். கவிதை எழுதத் தெரியாவிட்டாலும் தமிழை ரசிக்கும் தன்மையையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும்

தமிழ் நாட்டின் இசைக் கலைஞர்கள்
==============================
=
திரும்பத் திரும்ப அருணாச்சலக் கவியையும் ,ஊத்துக்காடு பாடல்களையும் பாபநாசம் சிவனையும் பாடிக் கொண்டிருக்காமல் தமிழில் புதிய தெய்வீகப் பாடல்களை அறிமுகப்படுத்த வேண்டும். சாகித்தியம் எழுதுவதற்கு ஒருவர் முற்றும் துறந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனத்தூய்மையுடன் இறைவனை நினைத்து எழுதினால் தமிழ் பலவித ராகங்களில் அருவியாகப் பொழியாதா என்ன? கர்நாடக இசை என்றாலே தெலுங்கு தான் என்ற நிலையை இவர்கள் மாற்றிக் காட்ட வேண்டும்.

சமுத்ரா

Tuesday, August 23, 2011

கலைடாஸ்கோப் -35

லைடாஸ்கோப் -35 உங்களை வரவேற்கிறது

[
போன க.கோ. மரணம் ஞானம் என்று போர் அடித்து விட்டேன். எனவே இதை ஓரளவு ண்மா தர முயற்சி செய்கிறேன்]


ஒன்று
=====

சில சமயம் ஆபீசில் "BULK EMAIL " என்று அழைக்கப்படும் செயின் ஈமெயில்கள் வரும்.'தயவு செய்து என்னை இந்த லிஸ்டில் இருந்து எடுத்து விடுங்கள்' என்று ஒவ்வொருவரும் பதில் அளித்து இன்-பாக்ஸையே
கணத்தில் நிரப்பி விடும் அளவுக்கு இருக்கும். இப்போது இந்த trend (?) நம் ஜிமெயில் ID யிலும் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

சில பேர் இருக்கிறார்கள். தங்கள் ப்ளாக்கில் ஏதாவது எழுதி விட்டு ஏதோ உலக இலக்கியம் படைத்து விட்ட லெவலுக்கு நினைத்துக் கொண்டு அதை தனக்குத் தெரிந்த பதிவர்களுக்கு ஈமெயில் செய்கிறார்கள். சரி அவர்கள் தான் ஏதோ ஆர்வக் கோளாறில் அனுப்பி விட்டார்கள், ஜிமெயில் தான் நிறைய STORAGE அளிக்கிறதே அது பத்தோடு பதினொன்றாக இருந்து விட்டுப் போகட்டும் என்று சிலர் விடுவதில்லை. 'இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம், நீ எழுதியதை ஏதோ HARRY POTTER ரிலீஸ் ஆகும் போது முண்டியடித்துக் கொண்டு போய் வாங்கிப் படிப்பார்களே, அந்த லெவலுக்கு நான் படிக்க விரும்பவில்லை. நீ என்னை 'நான் எழுதியதைப்படி' என்று வற்புறுத்த வேண்டாம்' என்று காட்டமாக REPLY ( REPLY ALL ) செய்கிறார்கள். Professional Ethics என்று அழைக்கப்படும் அலுவலக நன்னடத்தைகளில் ஒரு கம்பெனி கற்றுத் தரும் ஒரு விஷயம்:- கூடுமான வரை மின் கடிதங்களுக்கு REPLY ALL ஐத் தவிருங்கள் என்பது. உங்களுக்கு அனுப்பியவருக்கு மட்டும் பதில் அனுப்புங்கள். (முக்கியமாக சண்டை போடும் போது) தேவையில்லாமல் எல்லாரையும் சேர்த்து அவர்களை எரிச்சல் அடையச் செய்யாதீர்கள் ! அதனால்தானோ என்னவோ கீ-போர்டில் REPLY செய்வதற்கு CTRL +R உம் REPLY ALL செய்வதற்கு CTRL +SHIFT +R உம் இருக்கிறது.(இரண்டாவது ஷார்ட் கட் கொஞ்சம் கஷ்டமாம் !)

இன்னொரு விஷயம்: உலகில் மிக அற்புதமான படைப்புகள் விளம்பரம் செய்யப்படுவதில்லை. (IOW , மோசமான சமாச்சாரங்களுக்கு தான் இந்த வயசிலும் என் சுறுசுறுப்புக்கும் ஆரோக்யத்திற்கும் இது தான் காரணம் என்றெல்லாம் அபத்தமான விளம்பரங்கள் தேவை)ஆனால் விளம்பரமே இல்லாவிட்டாலும் தேன் நிறைய உள்ள மலர்களை எப்படியோ வண்டுகள் தேடிவந்துவிடுவதைப் போல அவை ஒருநாள்
வெளிச்சத்துக்கு வரும். கணிதமேதை ராமானுஜம் மிக அற்புதமான கணிதத் தேற்றங்களை அழுக்குப் பேப்பர்களில் எழுதி யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்திருந்தாராம்.பிக்காஸோ போன்ற ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை சாப்பாட்டுக்காக பழைய சாமான் கடைகளில் போட்டு காசு வாங்கி இருக்கிறார்கள். நாம் என்னடா என்றால் நமீதா அழகா நயன்தாரா அழகா என்றெல்லாம் எழுதிவிட்டு அதை ஊரெல்லாம் பிரகடனம் வேறு செய்கிறோம். எனவே ஒரு வேண்டுகோள்: நீங்கள் நன்றாக எழுதினால் கண்டிப்பாக பார்வையாளர்கள் வருவார்கள்.உங்கள் எழுத்துத் தேன் வாசக வண்டுகளை தானே சுண்டி இழுக்கும் .பல்க் மெயில்களை அனுப்பி தேவையில்லாமல் சிலரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

இரண்டு
=======

நம் வாழ்க்கையில் சில பொருட்கள் நிரந்தரமாக 'காணாமல்' போய் விடும். வெளிநாட்டில் இருந்து பெரியப்பா வாங்கி வந்த வாட்சோ, முதன் முதலில் ஸ்கூலில் பரிசுவாங்கிய புத்தகமோ ,தசாவதார செட்டில் வாமனர் பொம்மையோ இப்படி எத்தனையோ பொருட்கள்;LOST FOREVER !. சில சமயங்களில் இந்த உலகம் ஒரு மெகா கம்ப்யூட்டராக இருக்கக்கூடாதா
என்று தோன்றுகிறது.ஏதாவது ஒன்று காணாமல் போய் விட்டால் FIND என்று கொடுத்து அதைக் கண்டுபிடித்து விடலாம். ஏதாவது தப்பு செய்து விட்டால் UNDO என்று அழுத்தி 'இங்கே எதுவுமே நடக்கலை' என்று ஹாயாக இருக்கலாம். வாழ்க்கையில் தேவையில்லாத நினைவுகளை, 'நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா' என்று யாரோ ஒருவர் என்றோ நம்மைத் திட்டியதை SHIFT +DELETE கொடுத்து நிரந்தரமாக நினைவில் இருந்து அழித்து விடலாம்.
வாழ்க்கையில் ஒரு நிகழ்வை BACKUP எடுத்துவைத்துக் கொண்டு பின்னர் எதிர்காலத்தில் RESTORE செய்து அனுபவிக்கலாம்..ஆனால் வாழ்க்கை ஒரு கம்ப்யூட்டர் அல்ல. NOT EVEN CALCULATOR ! அதனால் தானோ என்னவோ வாழ்வில் சில சுவாரஸ்யங்கள் இன்னும் எஞ்சி இருக்கின்றன.நாம் செத்துப் போனாலும் ரீ-சைக்கிள்-பின்னில் இருந்து திரும்ப வரவழைத்துக் கொள்ளலாம் என்றால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அப்போது மனிதர்களின் மதிப்பே போய் விடும். (இப்போதே 'பெருசுகளை' யாரும் மதிப்பதில்லை!)

ஒருவேளை இந்த உலகம் (கடவுளின்) மெகா கம்ப்யூட்டராக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக மனிதனுக்கு அதன் கண்ட்ரோல்கள் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

[சைடு பிட்: இப்போது கூகிளில் வெந்நீர் வைப்பது எப்படி என்பதில் இருந்து விண்வெளி ஓடம் செய்வது எப்படி என்பது வரை எல்லாம் கிடைக்கின்றன. இன்டர்நெட் காலத்திற்கு முன் எழுத்தாளர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சிறிய தகவல் வேண்டும் என்றாலும் கூட ஒரு நூலகத்துக்கு சென்று எல்லா புக்கையும் கலைத்து அமர்க்களம் செய்து 'இந்த மாதிரி கேஸ் எல்லாம் எங்கிருந்து தான் வருதோ' என்று லைப்ரரியனின் சலிப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டி இருந்திருக்கும்! கூகிளுக்கு கோடி நன்றிகள் ]

மூன்று
=======

EMPLOYERS எனப்படும் வேலை கொடுப்பவர்களுக்கும் EMPLOYEES எனப்படும் வேலை செய்பவர்களுக்கும் எப்போதும் ஒரு 'குளிர் யுத்தம்' நடந்து கொண்டே இருக்கிறது என்று தோன்றுகிறது. இருவரும் ஒத்துப் போனதாக சரித்திரமே இல்லை.பொங்கலுக்கு சுண்ணாம்பு அடிக்க நம் வீட்டுக்கு வரும் முனியம்மாவில் இருந்து .பி.எம் CEO வரை எல்லாருக்கும் இது பொருந்தும். வேலை செய்பவர் எப்போதும் தான் சம்பளத்துக்கு அதிகமாகவே வேலை வாங்கப்படுவதாக நினைக்கிறார். வேலை கொடுப்பவர் தன் தொழிலாளிக்கு அவன் செய்யும் வேலைக்கு அதிகமாகவே சம்பளம் கொடுப்பதாக நினைக்கிறார்.சம்பளமும் வேலையும் வைக்கப்படும் தராசு எப்போதும் சமன் செய்யப்படுவதே இல்லை.பார்க்கப்படும் கண்களைப் பொறுத்து ஒரு பக்கம் எப்போதும் கீழே இருக்கிறது.மேலும் நமக்கு எப்போதும் நாம் அடுத்தவரை விட அதிக வேலை செய்வதாக தோன்றுகிறது."அவன் பெரும்பாலும் சீட்டிலேயே இருப்பதில்லை; காலை பதினொரு மணிக்குதான் ஆபீசுக்கு வருகிறான்; வேலை செய்யும் நேரத்தில் பாட்டு கேட்கிறான்; சிகரெட் பிடிக்க வெளியே போகிறான்.அவனுக்கு மட்டும் அதிக சம்பளம் ..நான் மாடு மாதிரி ராத்திரி பத்து மணிவரை ப்ரோக்ராம் எழுதுகிறேன் (மாடு எங்காவது ப்ரோக்ராம் எழுதுமா??) எனக்கு இன்னும் அதே சம்பளம் ".இந்த லெவலுக்கு புலம்பாத தொழிலாளிகளே இருக்க முடியாது என்று சொல்லலாம்.

எஜமான விசுவாசம் இன்று கம்பெனிகளில் (குறிப்பாக .டி யில் ) வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது. உன்னை நம்பியா நான் எம்.பி.ஏ படித்தேன்? நீ இல்லாவிட்டால் இன்னொருத்தன் என்ற மனநிலையில் தான் இன்று பெரும்பாலான தொழிலாளிகள் இருக்கிறார்கள். 'ஒரு இல், ஒரு சொல், ஒரு வில்' என்று வாழ்ந்த ராமன் இன்று ஐ.டி கம்பெனியில் வேலை செய்தால் 'ஒரு கம்பெனி' என்ற கொள்கையோடு வாழ்வானா என்பது சந்தேகம் தான்.ஆயிரம் ரூபாய் அதிகம் தந்தால் தனக்கு இதுவரை படியளந்த கம்பெனியை தூசி உதறுவதுபோல உதறி விட இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சில பேர் வெளிப்படையாகவே I WORK FOR MONEY; IF YOU WANT LOYALTY, HIRE A DOG என்று பிரிண்ட்-அவுட் எடுத்து ஒட்டி
வைத்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் கம்பெனிகள் சிறியதாக இருந்தன; வாய்ப்புகள் குறைவாக இருந்தன; அதில் வேலை செய்பவர்கள் இருபது வருடம், முப்பது வருடம் என்று ஒரே ஆபீசில் வேலை பார்த்தார்கள்.மானேஜர், டைப்பிஸ்ட், குமாஸ்தா, ஆயா,பியூன்,டீ பையன் என்று எல்லாருக்கும் இடையே ஒரு மெல்லிய அன்னியோன்னியம் இழையோடியது.ஆனால் இன்று கம்பெனிகள் பெருத்து விட்டன.வாய்ப்புகளும் அதிகரித்து விட்டன. கம்பெனியில் 'யாரோ வருவார் யாரோ போவார்' என்ற நிலை தான் நிலவுகிறது. ஒரு BELONGINGNESS , இது என் ஆபீஸ், இது என் நிறுவனம் என்ற உணர்வு இன்றி ஞானிகள் போல ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறார்கள். போன வாரம் வேளையில் சேர்ந்த ஒரு SO CALLED FRESHER இந்த வாரம் இன்று தான் இந்த ஆபீசில் என் கடைசி நாள் (என்னவோ பத்துவருடம் பகலிரவு பாராமல் சர்வீஸ் செய்த லெவலுக்கு பக்கம் பக்கமாக) என்று இ-மெயில் அனுப்புகிறான். கலிகாலம்!

[சைடு பிட்: நான் இன்று வரை கம்பெனி மாற்றவில்லை. ஆனால் மாதம் ஐநூறு ரூபாய் யாராவது அதிகம் தந்தால் என் உயிரினும் மேலான இந்த கொள்கையை மறு பரிசீலனை செய்யக்கூடும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்]


நான்கு
=======

ஏதோ ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு நகைச்சவை காட்சி: வடிவேலுவிடம் இருந்து டியூப் லைட் ஒன்றை வாங்கும் ஒரு ஆள் அதை கரும்பு போல கடித்து தின்ன ஆரம்பிப்பான். 'அவனா நீயி' என்று வடிவேலு கதற , அதுதான் அவனுக்கு லஞ்ச் என்றும் டின்னருக்கு நாலு குண்டுபல்பு தொட்டுக் கொள்ள சீரியல் பல்பு என்று அந்த அக்காட்சி நீளும். ஆனால் உண்மையிலேயே பல்புகள் ஆணிகள் பிளேடுகளை முழுங்கும் 'மகா முளுங்கர்கள்' இருக்கிறார்கள். சமீபத்தில் டி.வி.9 இல் சலீம் ஹைனி என்ற ஒரு ஆளைக் காட்டினார்கள்.நமக்கெலாம் கொஞ்சம் வேகாத அரிசியை சாப்பிட்டு விட்டாலே இரண்டு நாள் வயிறு வலிக்கிறது.இந்த ஹைனி பசித்தால் ஹோட்டலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. பல்பை பொடி செய்து மிக்சர்
போல சாப்பிடுகிறார். பென்சில், ரப்பர், ஒயர்கள், காகிதம், என்று எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கிறார் ஹைனி. அவர் வயிற்றை ஸ்கான் செய்து பார்க்கும் போது அவருக்கு அபாரமான ஜீரண சக்தி இருப்பது தெரியவருகிறது.இன்னொருத்தர் தன் உடம்பில் ஒயர்களைப் பொருத்தி மிக்சி, டியூப் லைட், கிரைண்டர் எல்லாவற்றையும் ஓட வைக்கிறார். (சார், அப்படியே என் லேப்-டாப்பை சார்ஜ் பண்ணிக்கட்டா?) இந்த உலகத்தில் தான் எத்தனை விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்? உலகம் ஒரு மெகா ஜூ..

ஐந்து
=====
ஒரு ஹைக்கூ..

காலையில்
வேலைகளுக்கு இடையே
திடீரென வந்து போகிறது
நேற்றைய இரவின்
கனவு..

ஆறு
====

ஒரு வரைபடம்


ஏழு
====

ஓஷோ ஜோக்.

ஒரு ஜப்பானியன் இந்தியாவில் ஒரு டாக்சியில் ஏறி ஏர்போர்ட் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு ஹோண்டா அந்த டாக்சியை விரைவாக கடந்து சென்றது..அவன் பெருமையாக 'பார், ஹோண்டா , ஜப்பானில் செய்தது' என்றான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு டயோட்டா விரைவாக முந்திச் சென்றது. மீண்டும் அவன் பெருமையாக டிரைவரைப் பார்த்து 'பார்,
டயோட்டா ஜப்பானில் செய்தது' என்றான். சிறிது நேரம் கழித்து ஒரு மிசுபிஷி கடந்து சென்றது.மீண்டும் அவன் டிரைவரைப் பார்த்து 'பார், மிசுபிஷி ஜப்பானில் செய்தது' என்றான் பெருமையாக .டிரைவர் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஏர்போர்ட் வந்ததும் டிரைவர் அவனை இறக்கி விட்டு, 'ஆயிரம் ரூபாய் கொடு' என்று கேட்டான். ஜப்பானியன், 'என்ன அநியாயம் இது , இங்கே இருந்து இங்கே வருவதற்கு ஆயிரம் ரூபாயா' என்று எரிச்சலுடன் கேட்டான். அதற்கு அந்த டாக்சி டிரைவர் 'பார், இந்த மீட்டர், ரொம்ப பாஸ்ட், இந்தியாவில் செய்தது' என்றான்.


முத்ரா


Monday, August 22, 2011

கலைடாஸ்கோப் -34

கலைடாஸ்கோப் -34 உங்களை வரவேற்கிறது.
இந்த கலைடாஸ்கோப்பிலும் ஒரே வண்ணம் தான் தெரியப்போகிறது.ஆம் அது கறுப்பு வண்ணம்!

மரணத்தின் நிறம் என்ன? சந்தேகமே இல்லாமல் நம்மில் பெரும்பாலானோர் கறுப்பு என்று தான் சொல்வோம். தனக்கு பரிச்சயம் இல்லாத, அறியாத ஒன்றுக்கு கறுப்பு வண்ணம் கொடுப்பது தானே மனித இயல்பு?மரணத்தோடு சம்பந்தப்பட்ட எள், காக்கை எல்லாமே கறுப்பு தானே? இன்றும் கூட வீடுகளில் சுப நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு கலரில் துணி எடுக்க மாட்டார்கள்.மேலும் ப்ரம்மாவில் இருந்து ஆரம்பித்து அய்யனார் வரை எல்லாருக்கும் நம்மிடம் கோயில்கள் இருக்கின்றன. எமனுக்கு மட்டும் ஏனோ உலகில் கோயில்களே இல்லை.வாழ்க்கையைக் கொண்டாடும் நாம் மரணத்தை வெறுமனே 'அனுசரிக்கிறோம்' 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்று ஞானிகள் சொல்வது போல எமனுக்கு பயப்படாமல் இருப்பது கூட சரிதான்.ஆனால் நாம் எமனை பெரும்பாலும் அலட்சியம் அல்லவா செய்கிறோம் ? எமன் முடிந்த வரை தாமதமாக வந்து சேரட்டும் என்று அவனுக்கு எருமையை வாகனமாக அளித்த பெருமையும் நம்மையே சேரும். நம்மை வாழ்வின் பல்வேறு வலிகளில் இருந்து விடுவிக்கும் அவனுக்கு நாம் தக்க மரியாதையை அளிக்கத் தவறி விடுகிறோம்!ஆம் மரணம் என்பது மருத்துவத்தின் தோல்வி அல்ல. 'மரணம் மருந்துகளிலேயே சிறந்த மருந்து' Ultimate Medicine!

இதுவரை நிறைய அகால மரணங்களைப் பார்த்திருக்கிறேன்.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் மணம் செய்து கொடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராமல் இறந்து போன மணப்பெண், வேலைக்கு சென்று சம்பாதித்து காப்பாற்றுவான் என்று நினைத்திருந்த பெற்றோர்களை ஏமாற்றி விட்டு, படிக்கும் போதே விபத்தில் சிக்கி உயிர்விட்ட இளைன்,பிறந்த ஒரு வருடத்திலோ இரண்டு வருடத்திலோ தாயின் முலைப்பாலை விஷமாக்கி விட்டு இறந்து போன குழந்தை என்று எத்தனையோ.மனிதனைப் பொறுத்தவரை அவனுக்கு ஒவ்வொரு மரணமும் அகாலம் தான். (EVERY DEATH IS UNTIMELY )ஆனால் மேலே இருக்கும் எமனுக்கு ஒவ்வொரு மரணமும் காலத்திய மரணம் தான் (EVERY DEATH IS TIMELY ) ...ஆம். அவன் கணக்கு வேறு.நாம் போடுவது தப்புக்கணக்கு.

பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வச்சாரு-
இவரு
போன வருஷம் மழையை நம்பி விதை விதைச்சாரு....
ஏட்டு கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு ...
ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு -!!!!

மனிதன் எத்தனையோ சிக்கலான கணக்குகளை எல்லாம் கண்டுபிடித்து வைத்திருக்கிறான். 'டேலி' என்கிறான்.'பாலன்ஸ் சீட்' என்கிறான். ஆனால் இறைவன் போடும் கணக்கை இது வரை மனிதனால் அறிய முடியவில்லை. ஒரு சிறிய கம்பெனிக்கு கணக்குகளை
'டேலி' செய்வதற்குள்ளேயே உயிர் போய் விடுகிறது. அந்த சித்திர குப்தனை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அவன் வைத்திருக்கும் புத்தகம் எத்தனை தடிமனாக இருக்க வேண்டும். 'இன்டெக்ஸ்' மாத்திரம் ஒரு கோடி பக்கங்கள் வருமே? OK JOKES APART !

Birth and death; we all move between these two unknowns.-Bryant H. McGill . இன்னொரு ஆள் என்னைப் போல இன்டர்வியூக்களினால் கடுப்பாகி Death will be a great relief. No more interviews
என்கிறார். அவர் இன்டர்வியூ அட்டென்ட் செய்பவரா இல்லை பிறரை இன்டர்வியூ செய்பவரா என்று தெரியவில்லை. :-) மறுபடியும் JOKES APART !

தன் சொந்த மக்களிடையே அங்கீகரிக்கப்படாத அன்னியனைப் போல வாழும்
ஒரு கவினை ஒத்தது மரணம் என்கிறார் கலீல் கிப்ரான்.ஆம் நம்மை சுற்றி மரணம் சூழ்ந்திருந்தாலும் கூட அதை நமக்கு அந்நியமாகத்தான் பார்க்கிறோம். மரணம் என்பதை நாம் கேட்கத்கூடாத சொற்களின் பட்டியலில் இணைத்து விட்டோம். வீதியில் ஒரு பிணம் போனால் அது உன்னுடைய பிணம் தான் என்று புத்தர் சொல்வதை எல்லாம் நாம் காதில் வாங்குவதே இல்லை.'அய்யய்யோ செத்துப் போயிட்டானா? நல்ல மனுஷன் பாவம்' என்று நாம் என்னவோ அமிர்தத்தை ஐந்து லிட்டர் குடித்து விட்டு பூமிக்கு வந்தது போல பேசுகிறோம்! மரணம் என்பது நம் இடது கைக்கு மிக அருகில் இருக்கிறது என்கிறார் இன்னொரு ஞானி. ஆனால் நாம் எல்லாரும் மரணம் என்பதை ஒரு தூரத்து உறவாகவே பார்க்கிறோம்.(வேண்டா விருந்தாளி!)

நம் குழந்தைகளுக்கு நாம் மரணத்தைப் பற்றி தெளிவு படுத்த தயங்குகிறோம். காமத்தைப் போலவே அவர்கள் மரணத்தையும் சுய புரிதல் செய்து கொள்கிறார்கள்.வீதியில் ஏதாவது இறுதி ஊர்வலம் போனால் பதறியடித்துக் கொண்டு அவர்களை உள்ளே போகச் சொல்கிறோம்.இழவு வீட்டுக்கு போய் விட்டு வந்து வீட்டு வாசலில் குளிக்கும் போது குழந்தைகள் ஏன் என்று கேட்டால் காக்காய் தலைமேல் எச்சம் போய்விட்டது என்று கூறி நழுவி விடுகிறோம்.ஒவ்வொரு தந்தையும் ஒரு விதத்தில் புத்தரின் தந்தை போல தான்.தன் மகன் மரணம் பற்றிய அறிவே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைக்கும் மனோ நிலை.ஆனால் உலகம் பெரியது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக நூற்று எட்டு பேர் இறக்கிறார்கள்.வாழ்க்கை அவர்களுக்கு மிக சீக்கிரமாகவே சவங்களின் தரிசனத்தை அழித்து விடுகிறது. ஆனால் முதல் சவ தரிசனம் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு குழந்தையும் புத்தன் ஆவதில்லை. சரி நாமெல்லாம் தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்து விட்டு தான் சாவோம் என்று ஒரு குழந்தை தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறது.

லிட்டில் ஜானி ஒரு நாள் டீச்சர் பாடம் நடத்தும் போது போர்டையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தானாம்.
இதை பார்த்து மகிழ்ந்த அவள் 'ஜானி ,என்ன இத்தனை ஆர்வமாக பாடத்தை கவனிக்கிறாய்? ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்" என்றாளாம். லிட்டில் ஜானி 'டீச்சர், நீங்க டஸ்டரால அழிச்சதும் போர்டில் இருந்த எழுத்துகள் எங்கே போகின்றன?'

மரணத்துக்குப் பிறகு என்ன ஆகிறது என்பது மனிதனுக்கு புதிராகவே உள்ளது. மரணம் என்பது தூங்குவது போல என்றும் உடைமாற்றுவது போல என்றும் ஞானிகள் சொன்னாலும் (மரணத்துக்கு சமஸ்கிருதத்தில் 'மஹா நித்ரா' என்று ஒரு பெயர் இருக்கிறது) தூங்குவதற்கும் உடைமாற்றுவதற்கும் கவலைப்படாத மனிதன் மரணத்தைப்பார்த்து மட்டும் அஞ்சுகிறான்.

எஸ்.ராமகிருஷ்ணன் அவருடைய 'கதாவிலாசத்தில்' பாரதியாரைப்பற்றிய ஒரு கதை சொல்கிறார். ஒருநாள் பாரதியார் மரணத்தை வெல்வது எப்படி என்று தான் சொல்லப்போவதாக ஊர்முழுவதும் தண்டோரா போடச் சொல்கிறார். மறுநாள் ஒரு பெரிய கூட்டம் கூடிவிடுகிறது. பாரதியார் ஒரு உயரமான இடத்தில் நின்று கொண்டு 'நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமா, அப்படியானால் முதலில் நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும். பிறருக்கு உதவிகள் செய்யாமல் , வெட்டிப் பேச்சுகள் பேசிக்கொண்டு காலம் தள்ளும் நீங்கள் ஏற்கனவே சவங்கள் தான்' என்கிறார். எல்லாரும் பாரதியாரைத் திட்டியபடியே கலைந்து செல்கிறார்கள். மரணத்தின் பயம் என்பது வாழ்வின் பயம் என்கிறார் ஓஷோ. அதாவது இன்னும் வாழவே இல்லையே ,வாழ்வதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் வீணான செயல்களில் வீணடித்து விட்டோமே என்ற பயம்!!மரணத்தை வெல்ல முடியாது ; மரணத்தின் பயத்தை வெல்ல முடியும் என்கிறார் ஓஷோ. அதற்கு ஒரு எளிய உபாயம் நிகழ்காலத்தில் வாழ்வது. மரணம் நாளை வந்தால் என்ன நாற்பது வருடங்கள் கழித்து வந்தால் என்ன? என்று கணத்துக்கு கணம் வாழ்வது. ஒரு ஜென் ஞானியை ஒரு அரசன் கைது செய்து 'முட்டாளே உனக்கு இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்தில் தூக்கு' ஏதாவது கடைசியாக சொல்ல விரும்பினால் சொல்' என்கிறான். அதற்கு அவர் பயங்கரமாக சிரித்து 'இருபத்து நான்கு மணிநேரமா , எனக்கு இருபத்து நான்கு நிமிடங்களே அதிகம் ;நான் நொடிக்கு நொடி வாழ்கிறேன்..மரணம் அடுத்த நொடி வந்தால் என்ன, ஐம்பது வருடங்கள் கழித்து வந்தால் என்ன எனக்கு எல்லாமே ஒன்று தான்' என்கிறார்! எனவே மரணம் என்பது உச்சகட்டமான வாழ்வு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.மரணம் எல்லாருக்கும் சமமாகவே இருக்கிறது. இந்த ஒரு வார்த்தை 'மரணம்' என்பது சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஒரு கற்கண்டாக இருந்திருக்க வேண்டும். மரணத்தை முன்னிறுத்தி தான் எத்தனை பாடல்கள்? கவிதைகள்? பட்டினத்தார் காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்கிறார்.காது அறுந்து போன ஊசியைக் கூட நாம் சாகும் போது எடுத்துப் போக முடியாதாம். நாம் இன்று கருப்புப்பணம் வெள்ளைப் பணம் என்று நம் வீட்டு கடுகு டப்பாவில் இருந்து சுவிஸ் பாங்
க் வரை பணத்தை சேமித்து வைக்கிறோம்.ஒரு நாள் குளிர்கால இரவு. வெளியே பனி வீசுகிறது.முகம்மது நபி தன் மனைவி ஏதோ அசௌகர்யமாக இருப்பதை உணர்ந்து அவள் அடுத்த வேளைக்கு என்று கொஞ்சம் உணவும் மருந்தும் சேமித்து வைத்திருப்பதை அறிகிறார். கோபத்துடன் 'போ, வெளியில் சென்று இதை தானம் செய்து விட்டு வா! அடுத்த வேளைக்கு நமக்கு இறைவன் தருவான் என்கிறார். அவள் 'இந்த கொடும் குளிரில் நம்மிடம் தானம் பெற யார் வருவார் என்று சலித்துக் கொண்டே வெளியே செல்கிறாள்.ஒரு பிச்சைக்காரன் சொல்லிவைத்தது போல அங்கே வருகிறான். நபிகள் 'பார்த்தாயா நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு யாராவது இருந்தால் நமக்கு கொடுப்பதற்கும் கண்டிப்பாக யாராவது இருப்பார்கள், அடுத்த வேளையைப் பற்றிய கவலை இல்லாமல் உள்ளே வந்து உறங்கு' என்கிறார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? அடுத்தவன் வயிற்றில் அடித்து ஏழேழு தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவு சொத்தை பதுக்கி வைக்கிறோம்!

அதிக பட்சம் சுடுகாடு வரை உன்னை வழியனுப்ப உன்னை சேர்ந்தவர்கள் வரக்கூடும்.அதைத்தாண்டி யார் வருவார் என்று பட்டினத்தார் கேட்கிறார்.

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.

ஒருமடமாதும் ஒருவனும் ஆகி இன்பசுகத்தில் உதித்த இந்த உடல் பின்பு மனைவி விழுந்து மடியில் புலம்ப இப்படி ஆகிறதாம்:

விறகுஇடை மூடிஅழள் கொடுபோட
வெந்து விழுந்து முறிந்துநிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
......

ரஜினி பாஷையில் சொல்வதென்றால் 'மீன் செத்தால் கருவாடு, நீ செத்தால் வெறும் கூடு'


எல்லாருக்கும் ,எப்படிப்பட்டவருக்கும் மரணம் வந்து தீரும்.பிரம்மாவுக்கும் சாவு உண்டு என்கிறது ஹிந்து மதம். வேடிக்கையாக சொல்வதென்றால் நாம் 'நித்யத்ரையம் ' என்று வரம் கேட்க நினைத்தால் சரஸ்வதி நம் நாவில் புகுந்து அதை 'நித்யத்சயம்' என்று மாற்றி விடுவாள்.அரக்கர்கள் என்னதான் மேலே சாகக் கூடாது கீழே சாகக்கூடாது என்றெல்லாம் வரம் கேட்டாலும் அவர்கள் வாரத்தில் உள்ளே சில LOOPHOLE கள் காரணாமாக கடவுள்களால் கொல்லப்படுவார்கள். மரணத்தில் இருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது. பரீட்சித்து எழு கோட்டைகளுக்கு உள்ளே கனமான பாதுகாப்புகளுடன் ஒளிந்து கொண்டாலும் எலுமிச்சம் பழத்தில் புகுந்து அவனைக்கொல்ல பாம்பு வந்து விடும்! இந்தக் கதையை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்: ஒரு அரசன் முன் ஒரு நாள் ஒரு கரிய உருவம் தோன்றி 'நாளைக் காலையில் நீ செத்துப் போவாய், எவ்வளவு தூரம் ஓடித் தப்பிக்க முடியுமோ தப்பித்துக் கொள்' என்கிறது. அன்று மாலை அவன் தன்னிடம் உள்ள குதிரைகளிலேயே அதிவேகமாக ஓடும் ஒன்றை எடுத்துக் கொண்டு நிற்காமல் பயணிக்கிறான்.அடுத்த நாள் காலையில் வெகுதூரம் கடந்து வந்து தான் தப்பித்து விட்டதற்காக பெருமூச்சு விடுகிறான். அப்போது மீண்டும் அந்த உருவம் தோன்றி 'நான் தான் உன் மரணம், நீ இந்த குறிப்பிட்ட இடத்தில் சாகவேண்டும் என்று விதி இருந்தது, உன்னை இங்கே வரவழைக்க தான் அப்படி சொன்னேன்' என்றதாம்.ஆம் கடவுளால் கூட மரணத்தை வெல்லும் வரம் அளிக்க முடியாது.ஒரு ஜோக் இப்படி வேடிக்கையாக இருந்தாலும் எல்லாரும் இறந்து தான் ஆகவேண்டும் என்ற மாபெரும் தத்துவத்தை சொல்கிறது.

மொக்கை சாமி , மொக்கை சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். கடவுள் நேர்ல வந்து 'என்னடா வரம் வேணும்?னு கேட்டாராம். இவன் சொன்னானாம்: 'கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது' 'அப்படியே ஆகுக' ன்னு சொல்லிட்டு போயிட்டாராம் கடவுள். ரொம்ப நாள் காட்ல தவம் இருந்த இறுமாப்புல நடந்து வந்துட்டு இருக்கறப்ப ஒரு சாமியார் எதுர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாராம். இவன் சொன்னானாம் : "மொக்கை மாமி" பாவம் அவனுக்கு 'சா' வே வரலை' !


சில நேரங்களில் நாம் சிலரது மரணங்களை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். நம் தாத்தாக்கள் சீக்கிரமாகவே இறந்து விட வயதான பாட்டிகள் நீண்ட நாட்கள் படுக்கையில் இருக்கிறார்கள். எங்கள் சொந்தக்கார பாட்டி ஒருவர் செஞ்சுரி போட்ட பின்னும் இருந்தார். 'ஐயோ பகவான் என் சீட்டை தொலைச்சுட்டான் போல இருக்கே' என்று புலம்புவார். (ஆனால் பகவான் யாருடைய சீட்டையும் தொலைப்பதே இல்லை. லாக்கரில் அது பத்திரமாகத் தானிருக்கிறது)இப்படிப்பட்ட சாவுகளை 'கல்யாண சாவு' என்பார்கள். ஒரு கல்யாணம் போல விமரிசையாக,தடபுடலாக அந்த ஆத்மாவை வழி அனுப்பி வைப்பார்கள். ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவன் இறுதி ஊர்வலத்துக்கு வரும் கூட்டத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்பார்கள். ஆனால் இது எப்போதும் உண்மை அல்ல. பாரதியாரின் இறுதிச் சடங்குக்கு மூன்று பேர் தான் இருந்தார்களாம்.ஹிட்லர் ஒரு அனாதை போல தற்கொலை செய்து கொள்கிறான்!

விகடனில் எப்போதோ வந்த ஒரு கவிதை இப்படி சொல்கிறது:

வெட்டியானுக்கு அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது
உறவுகளுக்கு எல்லாம் ஃபோன் செய்து சொல்லியாகி விட்டது
தப்பட்டை பாடை சட்டி எல்லாம் ரெடி
பேங்கில் இருந்து பணம் எடுத்தாகி விட்டது
அய்யர் இருக்கிறாரா என்று ஊர்ஜிதம் செய்தாகி விட்டது
குழந்தைகளை அத்தை வீட்டில் விட்டாகி விட்டது
இனி தாத்தா சாவது தான் பாக்கி!


நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் மரணம் நம்மை பெரிதாக பாதிப்பதில்லை.சாலை விபத்துகளில் இத்தனை பேர் இறந்தார்கள் என்று அசுவாரஸ்யமாக செய்திகளைக் கேட்கிறோம்.செய்தித்தாள்களில் காலமானார், இறைவனடி சேர்ந்தார், இயற்கை எய்தினார்,விண்ணுக யாத்திரை சென்றார் (இது கொஞ்சம் ஓவர், என்னமோ அமெரிக்காவுக்கு பிளைட் ஏறின மாதிரி) என்று வரும் அறிவிப்புகளை வெறுக்கிறோம். டி.வியில் சாவை முன்னிறுத்தி ஏராளமான காமெடிகள் வருகின்றன. விவேக் பிணத்தின் மேல் போட்டிருக்கும் மாலையை 'அபேஸ்' செய்யும் போதோ , வடிவேலு தன் டீக்கடைக்கு முன் பிணத்தை வைக்கும் போது அவஸ்தைப்படும் போதோ நாம் வாய்விட்டு சிரிக்கிறோம். ஆனால் நமக்கு நெருங்கியவர்கள் யாராவது இறக்கும் போது தான் அதன் வலி நமக்குத் தெரிகிறது.

இப்போது ஒரு கவிதை:

ஈசன் கணக்கு:

கோவிந்தன்
வங்கி சென்று இரண்டு லட்சம் டெபாசிட் செய்தார்...
வரும் வழியில் இரண்டு பிளைட் டிக்கெட் புக் செய்தார்...
மகளுக்கு போன் செய்து
"நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்றார்...
கார் ஷோ ரூமில் லேட்டஸ்ட் காரின் விலை விசாரித்தார்...
வீடு வந்து சாப்பிட்டு
நெஞ்சு வலி என்று சரிந்தார்...
டாக்டர் வந்து பார்த்து விட்டு
"ஆள் போய் பத்து நிமிடம் ஆச்சு " என்றார்...


சரி நல்ல நாள் அதுவுமாக (கிருஷ்ண ஜெயந்தி) என்ன அமங்கலமான பேச்சு? நாமெலாம் சாக மாட்டோம்.ஒரு ஓஷோ ஜோக் பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று கிருஷ்ணனுக்கு அவசர அவசரமாக பூஜை செய்து விட்டு பிரசாதம் ஆன பின்பு நகப்பழத்தையும் வெண்ணையையும் நாமே தின்னலாம்.

ஒரு நாள் முல்லா நசுருதீன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். தனக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்திருப்பவனைப் பார்த்து 'ஸ்டேஷன் வந்ததும் என்னை எழுப்பி விடு' என்று சொல்லி ஒரு இருபது ரூபாய் அவனுக்கு கொடுத்து விட்டு நன்றாக தூங்கி விட்டார். அந்த ஆள் ஒரு பார்பர். எனவே முல்லா கொடுத்த இருபது ரூபாய்க்கு அவர் தூங்கும் போது அவருக்கு
நன்றாக மழிக்க சவரம் செய்து விட்டு விட்டான்.
ஸ்டேஷன் வந்ததும் அவரை எழுப்பி விட்டான்.முல்லா, வீடு வந்து சேர்ந்து முகம் கழுவலாம் என்று பாத்ரூம் சென்று கண்ணாடியைப் பார்த்தார். தான் பார்ப்பதை நம்ப முடியாமல் 'அடப்பாவி, அந்த ஆள் வேறு யாரையோ எழுப்பி விட்டு விட்டானே' என்றார்.சமுத்ரா