இந்த வலையில் தேடவும்

Tuesday, March 29, 2011

அணு அண்டம் அறிவியல்-18

உங்கள் முன்னே ஒரே இருட்டாக இருக்கிறது. எதிரில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு பந்தை இருட்டில் எறிகிறீர்கள்..அது திரும்ப உங்களிடம் வருகிறது. அந்த பந்தின் வேகம், திரும்பி வர எடுத்துக் கொண்ட ROUND TRIP DELAY இவற்றை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு சுவர் இருக்கலாம் என்று அனுமானிக்கிறீர்கள். இது ஒரு அனுமானம் தானே தவிர அங்கே என்ன இருக்கிறது என்று நமக்கு திட்டவட்டமாகத் தெரியாது. சுவர் தான் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் அது எதனால் செய்யப்பட்டது? அது எப்படிப்பட்டது? அங்கே சுவர் தான் இருக்கிறதா இல்லை ஏதாவது பூதம் நின்று கொண்டு அது நாம் வீசிய பந்தைத் திரும்ப அடிக்கிறதா? எதுவும் தெரியாது ...

இது மாதிரி தான் இயற்பியலின் நிலைமையும். நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியாத அணு மாதிரியான சமாசாரங்களை மறைமுகமாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அணுவை 'காமா' துகள்கள் கொண்டு தாக்கும் போது பெரும்பாலானவை ஊடுருவிப் போய் சிலது மட்டும் 'யூ' turn அடித்துத் திரும்பி வந்தால் அணுவின் மையத்தில் மிகச் சிறிய இடத்தில் நேர் மின் சுமை கொண்ட ஏதோ ஒன்று இருக்கவேண்டும் ஒன்று ஊகிக்க வேண்டியிருக்கிறது.ஆனால் உண்மையிலேயே அணுக்கரு என்ற ஒன்று விலக்கியதால் தான் அவை திரும்பி வந்தனவா , இல்லை முதலில் சொன்னது போல ஒரு குவாண்டம் பூதம் உள்ளே அமர்ந்து கொண்டு நம்மையெல்லாம் ஏமாற்றுகிறதா என்பது தெரியாது.

உள்ளே அணுக்கரு இருக்கிறது என்ற ஒரு அனுமானம் நமக்கு Convenient ஆக இருக்கிறது. பெரும்பாலான கணக்குகளுடன் ஒத்து வருகிறது. உள்ளே பூதம் ஒன்று இருக்கிறது என்று கூட ஒரு model -ஐ நாம் முன் வைக்கலாம்..ஆனால் அது தேவையில்லாமல் நம் calculation - களை கடினமாக்கும்
ஒரு விதத்தில் பார்த்தால் இது குருடர்கள் யானையை தொட்டுப் பார்த்த கதை தான். யானையின் காலைப் பிடித்துப் பார்த்து விட்டு 'யானை தூண் மாதிரி இருக்கும்', காதைத் தடவிப் பார்த்து விட்டு 'யானை முறம் மாதிரி' இருக்கும் என்று குருடர்கள் சத்தியம் செய்து சொல்வதைப் போன்றது தான்..



அணுவை விடுங்கள்..நமக்கு முன் தோன்றி விரியும் இந்த பிரம்மாண்ட பிரபஞ்சமே நமது "மாடல்" தான்.. உண்மை என்னவோ யாருக்குத் தெரியும்? பாக்டீரியா ஒன்று நம் வீட்டு சமையல் அறையின் சிந்திக் கிடக்கும் சிறிய கடுகுகளை கோள்கள் என்றும் நம் வீட்டில் எரியும் பல்புகளை தூரத்து நட்சத்திரங்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.
நம் சூரியன் கூட யாருக்கோ இரவு 'பல்பாக' இருக்கலாம்..யார் கண்டது?

குதியாக உணர்ந்து கொள்ளப்பட்ட உண்மை 'பொய்க்கு'' சமம் என்கிறது உபநிஷத். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் இது வரை அறிவியல் மூலம் உணர்ந்து கொண்ட எல்லாம் பகுதியானவை தான்..அறுதியிட்ட உண்மைகளை நம்மால் விளக்க முடிந்ததில்லை..'இப்படி இருக்கலாம்' என்ற மாடல்களை மட்டுமே முன் வைக்கிறோம். அணு , அணுக்கரு, ப்ரோடான், எலக்ட்ரான், போட்டான், குவார்க் இவையெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா என்பது யாருக்கும் தெரியாது.
இந்த மாடல் நமக்கு சுலபமாக இருக்கிறது. சோதனை முடிவுகளுடன் ஒத்து வருகிறது. அவ்வளவு தான்...உள்ளே என்ன இருக்கிறது? அது எப்படிப்பட்டது என்பதை விளக்க நம்மிடம் எந்த வார்த்தைகளும் இல்லை..

ஒரு பொருள் இன்னொரு பொருளை ஈர்க்கும் 'ஈர்ப்பு' விசையை மிகச் சுலபமாக F ~ M1 M2 என்கிறோம்


இதில் ஒவ்வொரு பொருளின் உள்ளே உள்ள அணுவும் எப்படி இன்னொரு பொருளின் உள்ளே உள்ள அணுவுடன் விசையைப் பரிமாறிக் கொள்கிறது என்றெல்லாம் டூ மச்சாக கணக்கிடுவதில்லை. பொருளை 'மொத்தமான' ஒரு அலகாகவே இங்கே நாம் பார்க்கிறோம்..இது ஒரு விதமான 'பகுதி' உண்மை தான்..ஆனால் பொருளின் ஒவ்வொரு அணுவும் இன்னொன்றுடன் எப்படி ஈர்ப்பு விசையை பரிமாறிக் கொள்கிறது என்று கணக்கிட்டு பின்னர் அவற்றையெல்லாம் கூட்டி முடிப்பதற்குள் இந்த பிரபஞ்சமே அழிந்து விட்டிருக்கும்...

சாதாரண உலகில் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது.. ஒரு ஆள், 'குப்புசாமி' என்று வைத்துக் கொள்வோம்..அவர் ஆபீசில் இருந்தால் அதே சமயம் சினிமா தியேட்டரில் அவரால் இருக்க முடியாது.ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் குப்புசாமி மற்றும் கந்தசாமி ரெண்டு பேர் நிற்க முடியாது.ஆனால் இரண்டு எலக்ட்ரான்கள் எந்த சிரமமும் இன்றிஒரே இடத்தில்* இருக்க முடியும் என்கிறார்கள். (as long as their quantum states are not equal) ஒரே எலக்ட்ரான் இரண்டு இடங்களில் இருக்க முடியும் என்கிறார்கள்.
'சாமிப்' படங்களில் வருவது போல ''டுஷ்' என்று இங்கே மறைந்து மறுபடியும் 'அங்கே' டுஷ் என்று தோன்ற முடியும் அதனால்.

சாதாரண வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் 'classical physics ' இன் விதிகளை குவாண்டம் உலகில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று ஒரு கோஷ்டி சொல்கிறது .ஏனென்றால் பெரிய அளவில் (macroscopic scale ) பிரபஞ்சம் COSMOS (ஒழுங்குபடுத்தப்பட்ட) ஆகவும் சிறிய அளவுகளில் (microscopic ) அதுவே CHAOS (குழப்பம்) ஆகவும்
இருக்கிறது..COSMOS மற்றும் CHAOS (கேயாஸ்) என்பவை ஒரே குச்சியின் இரு முனைகள்..
பெரிய அளவில் இவ்வளவு சீராக இருக்கும் இந்த பிரபஞ்சம் சிறிய அளவுகளில் ஏன் தன்னை மிகவும் குழப்பம் நிறைந்ததாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்..(அல்லது மனிதனின் அறிவு மிகவும் limited !) மனிதனின் கட்புலனாகும் எல்லையைக் கடந்த பின் அது ஒரு மாய உலகம்...IT 'S A DIFFERENT DIMENSION ! ALICE IN WONDERLAND !

ஓஷோவின் 'DIMENSIONS BEYOND THE KNOWN ' என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? அதில் 'ஒருவர் இறந்த பின் அவரது ஆத்மா நகர்ந்து கொண்டிருக்குமா?' என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது அவர் சொல்கிறார்: அது நகர்ந்து கொண்டிருக்கும் அதே சமயம் நகராமலும் இருக்கும் (வரும் ஆனா வராது!) ஒரு சிறிய இடத்தில் ஆயிரக்கணக்கான
ஆத்மாக்கள் சிரமமின்றி இருக்க முடியும். ஏனென்றால் அவற்றுக்கான பரிமாணம் வேறு. உதாரணமாக ஒரு அறையை நாம் ஒளியால் நிரப்ப முடியும்..அதே சமயத்தில் ஒரு மெல்லிய இசையை அங்கே ஒலிக்கச் செய்ய முடியும்..ஒரு ஊதுபத்தியை ஏற்றி மணம் பரப்ப முடியும் .ஒன்றுக்கான இடத்தில் இன்னொன்று தலையிடுவதில்லை..

படத்தைப் பாருங்கள்...


ஒரு பரிமாண வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பேர் நிற்க முடியும் என்பது அசாத்தியமாகத் தோன்றுகிறது. ஆனால் இரண்டு பரிமாணத்தில் இது சாத்தியம்..

மிகச்சிறிய உலகங்களில் மூன்று பரிமாணத்திற்கு
ம் அதிகமான பரிமாணங்கள் சுருங்கி இருப்பதாகக் (wrapped ) கூறுகிறார்கள்..பத்து அல்லது பதினொன்று பரிமாணங்கள் இருக்கலாம் என்கிறார்கள்..

பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் ஒரு நாள் தீர்க்கமாக அளந்து விடமுடியும் என்று கனவு கண்டுகொண்டிருந்த விஞ்ஞானிகளின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட பெருமை வெர்னெர் ஹைசன்பெர்க் (Werner Heisenberg (5 December 1901 – 1 February 1976) என்பவருக்குப் போகிறது. பிரபஞ்சம் என்பது கடவுளின் கால்குலேட்டர் அல்ல..அது கடவுளின் 'பகடை' என்று அவர் அறிவித்தார் ...(GOD DOES PLAY DICE WITH THE UNIVERSE ) ஆமாம்...இது முன்னரே நிர்ணயிக்கப்பட்ட calculator அல்ல..கடவுளின் பகடை..சில சமயம் தாயம் விழலாம்..சில சமயம் மூன்று விழலாம்..ஆமாம் தன் 'மூடைப்' பொறுத்து ஒளி தன்னை அலையாகவோ அல்லது துகளாகவோ காட்டிக் கொள்ளலாம்..



ஒளி ஏன் இப்படி நமக்கு இப்படி இரண்டு முகம் காட்டுகிறது? அதன் உண்மையான முகம் தான் என்ன? முன்னரே இதைப் பற்றி பார்த்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்..

கண்ணே
உன் கண்களின் ஒளி தாக்கி
என்
இதயத்தில் மின்சாரம் ஒன்று
உற்பத்தியானது ...

என்று கவிர்கள் எழுதுவது அபத்தமாகத் தோன்றினாலும் கவிதைக்கு எப்போதும் பொய் அழகு அல்ல ..உண்மையும் அழகு..இது உண்மை தான் ....ஒளி மின்சாரத்தை உருவாக்கும்..இந்தக் கவிதையை உண்மையாக்கும் விதத்தில் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த "ஒளி மின் விளைவு" அது..ஒளியை ஒரு உலோகத்தின் மீது பாய்ச்சும் போது அது உள்ளே ஊடுருவிச் சென்று அணுவுடன் பந்தப்பட்டுக் கிடக்கும் அதன் வெளிக்கூட்டு எலக்ட்ரான்களை விடுவித்து விமோசனம் தருகிறது. இந்த விடுபட்ட எலக்ட்ரான்களின் ஓட்டம் மின்சாரமாக உணரப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும் போது ஒளி ஒரு 'பந்து' மாதிரி துகளாக இருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது.For example , தண்ணீரில் ஒரு வாத்து பொம்மை மிதந்து கொண்டிருப்பதாகக் கொள்வோம்..அதை ஒரு சிறிய கல்லை எடுத்து நேராக அடித்தால் அது உடனே நகர்ந்து விலகும்..அதே கல்லை தண்ணீரில் வீசினால் அந்த அதிர்வின் அலைகள் வட்ட வட்டமாக உருவாகி மெல்ல நகர்ந்து வாத்தை அடைந்து அதை கொஞ்சம் நகர்த்தும்..வாத்து கொஞ்சம் மெதுவாக மட்டுமே நகரும்..இங்கே வாத்து தான் எலக்ட்ரான்கள்...கல் தான் ஒளி..


ஒளியைப் பாய்ச்சிய அடுத்த மைக்ரோ செகண்டில் உலோகத்தில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளிவர ஆரம்பித்தன. (வலுக்குறைந்த ஒளியை பாய்ச்சினாலும்) ஒளி நாமெல்லாம் நினைப்பது போல அலையாக இருந்தால் அது மெதுவாக நகர்ந்து நகர்ந்து வாத்தை அடைந்து அதை நகர்த்த கொஞ்ச நேரம் பிடிக்க வேண்டும்..எனவே ஒளியை அடித்து கொஞ்ச நேரம் கழித்து தான் உலோகத்தில் மின்சாரம் தூண்டப்பட வேண்டும்..ஆனால் அப்படி நடக்கவில்லை..மேலும் அலை ஓய்வதற்கு கொஞ்ச நேரம் பிடிக்கும் என்பதால் வாத்து நிறைய நேரம் கழித்தும் கூட கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருக்கும்..ஆனால் அப்படி நடக்கவில்லை...ஒரு கல்லை எடுத்து வீசியது போல எலக்ட்ரான்கள் திடுமென வெளிப்பட்டு பின் நின்று போயின..சரி இது ஒளியின் ஒரு முகம்..'துகள் முகம்' INTERFERENCE என்ற விளைவின் படி ஒளி தன் 'அலை' முகத்தைக் காட்டியது.. (இதைப் பற்றி அடுத்த பதிவில்!)

உபநிஷத் ஞான நிலையை பற்றி சொல்லும் போது அதை 'துரியா' (சதுர்தா ) என்கிறது..அந்த நிலைக்கு 'நான்கு' (??) என்று பெயர்...அது நாம் அறிந்த மூன்றைத் தாண்டி நாலாவது..அவ்வளவு தான் சொல்ல முடியும்..அதைப் பற்றி மேலும் கேட்காதீர்கள் என்கிறது..இதே போல சில
விஞ்ஞானிகள் ஒளியை 'மூன்றாவது' (திரியா) என்கிறார்கள்...போங்கடா முட்டாள்களா அது அலையும் அல்ல துகளும் அல்ல..அது மூன்றாவது! அதை விவரிக்க மனிதனின் ஏழை மொழியில் வார்த்தைகள் இல்லை என்கிறார்கள்..

சமுத்ரா


Friday, March 25, 2011

அணு அண்டம் அறிவியல்-17

அணு அண்டம் அறிவியல்-17 உங்களை வரவேற்கிறது..

எலக்ட்ரான்கள் அணுக்கருவை சுற்றுகின்றன என்று ஒரு குத்துமதிப்பான இமேஜை வி
ஞ்ஞானிகள் ஒருவாறாக அடைந்திருந்தார்கள்.. ஆனால் மாக்ஸ்வெல்லின் மின் காந்த விதிகளின் படி ஒரு மின் துகள் நகர்ந்தால் அது ஆற்றலை மின் காந்த அலைகளாக வெளியிட வேண்டும். அந்த ஆற்றல் வெளியில் இருந்தெல்லாம் வராது
எலெக்ட்ரான் தன் சொந்த ஆற்றலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்..அந்த ஆற்றல் தீர்ந்து போனால் அது சுற்றிக் களைத்து அணுக்கருவுக்குள் போய் நீயே சரணாகதி என்று
விழுந்து அழிந்து விட்டிருக்கும்.. இது நடப்பதற்கு 'ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு' காலம் போதுமானது என்கிறார்கள்..ஆகையால் பிரபஞ்சம்
தோன்றி ஒரு மில்லி செகன்டிலேயே அது அழிந்து விட்டிருக்கும்..
'அபி துரக சமீபத் உத்பதாந்தம் மயூரம்' (தசரதன் தேர் முன் ஓடிய மயில் தன் அழகிய இறகுகளை உதிர்த்தது..
அது அவனுக்கு தன் மனைவியுடன் ஏகாந்தமாக இருக்கும் போது கலைந்து உதிரும் அவளது கூந்தலை நினைவுபடுத்தியது---ரகுவம்சம் 9 :67 ) என்றெல்லாம் உலகத்தரம் வாய்ந்த இலக்கியங்களைப் படைப்பதற்கு மனிதனும் வந்திருக்கமாட்டன்..

ஆனால் நாமெல்லாம் இருக்கிறோம்..அணுக்கள் இருக்கின்றன!!!..

இந்த புதிரை விடுவிக்க 1913 இல் நீல்ஸ் போர் தன் அணுக்களுக்கான தன் 'போர் மாடலை' (போரான மாடல் எல்லாம் இல்லை...இது ரொம்பவே சுவாரஸ்யம்) முன் வைத்தார்..எலக்ட்ரான் அணுக்கருவை கண்டபடி எப்படி வேண்டுமானாலும்
(கோவில் பிரகாரங்களில் பக்தர்கள் சுற்றுவது போல ) சுற்றாது..அதற்கென்று ஒதுக்கப்பட்ட ஆற்றல் மட்டங்களில் மட்டுமே அது சுற்ற முடியும் என்றார்.

communication இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு கண்டிப்பாக Quantization என்ற ஒன்றைப் பற்றி தெரிந்திருக்கும்...Quantum Mechanics கூட கிட்டத்தட்ட அது போல தான்..

சரி அது என்ன
Quantization ???

நாம் பேசுகிற பேச்சு (Voice ) என்பது தொடர்ச்சியான ஒன்று..(analog ) அதை அப்படியே தொலைபேசியில் ஒயர் வழியாக அனுப்ப முடியாது.
Quantization என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி
நாம் பேசுகிற தொடர்ச்சியான குரலை சிறு சிறு Quantized லெவல்களுக்கு தோராயமாக குறிக்கிறார்கள்.சில சமயம் நம் வீட்டுத் தொலைபேசி 'செல்லம் இன்னும் ஒன்னே ஒன்னு' என்பது மாதிரியான மெதுவான ஹஸ்கி வாய்ஸ்களை அனுப்ப வேண்டியிருக்கிறது. சில சமயம் அதிக அதிர்வெண்ணில் அதிரும் கோப வார்த்தைகளை , சண்டைகளை அனுப்ப வேண்டியுள்ளது. இதற்கு தான்
Quantization ...படத்தைப் பாருங்கள்..



பின்னால் grey கலரில் தெரிவது தான் நம் voice signal ..அது எங்கும் தொய்வின்றி தொடர்ச்சியாக இருக்கிறது. அதை டிஜிட்டல் பல்ஸ்-களாக மாற்றி நெடுந்தூரத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் படத்தில் சிவப்புக் கலரில் இருப்பது போன்ற அதனுடன் கிட்டத்தட்ட ஒத்துவரும் ஒரு
Quantized சிக்னலை நாம் உருவாக்க வேண்டும்.இந்த Quantized சிக்னல் தொடர்ச்சியாக இல்லாமல் சமமாகப் பிரிக்கப்பட்ட மதிப்புகளில் ஏதோ ஒன்றைக் கொண்டிருக்கும்.இது ஒரு விதமான Round -off ! கடையில் 49 .79 ரூபாய் என்று பில் வந்தால் ஐம்பது ரூபாயைக் கொடுத்து பெருமிதம்(?) அடைகிறோமே அது மாதிரி..

போர், 'எலக்ட்ரான்கள் தங்கள் இஷ்டத்திற்கு கண்டபடி சுற்ற முடியாது'. ஒரு quantized level களில் தான் சுற்ற முடியும் என்றார். (அப்படி சுற்றும் போது அவை ஆற்றலை இழக்க வேண்டியது இல்லை)உங்களுக்கு ஆகாய விமானம் பிடிக்குமா? முதன் முதலில் ஆகாயப் பயணம் செய்யும் போது அது மேலே கிளம்பும் போது , X -அச்சு Y -அச்சு வாழ்க்கையில் இருந்து விடுபட்ட ஒரு தற்காலிக சுதந்திரத்தை நாம் கண்டிப்பாக உணர்ந்திருக்க முடியும்,

சாலைகளில் தான் ரோடுகள்..சிக்னல்கள்..வியர்வைகள்..பக்கத்து வண்டியில் உட்கார்ந்திருக்கும் Figure -ஐப் பார்த்துப் பெருமூச்சுகள்..BTM இல் இருந்து ஆபீசுக்கு வரவேண்டும் என்றால் சில்க் போர்டு சிக்னல், பொம்மனஹள்ளி சிக்னல், ஹொசா ரோடு சிக்னல், phase -1 சிக்னல் என்று உயிர் போய் விடும்..விமானத்தில் அப்படி இல்லை ..எப்படி வேண்டுமானாலும் இஷ்டத்திற்குப் பறக்கலாம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு...ரயிலுக்கு விதிக்கப்பட்ட பாதைகளை விட கறாரான பாதைகள் (கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்) வானத்தில் விமானிகளுக்கு உள்ளன. அதை விட்டு ஒரு இம்மி பிசகினாலும் அடுத்தநாள் investigation வைத்து 'என்னப்பா வீட்டுக்குப் போகணுமா?" என்பார்கள்..எரிபொருளைக் கூடுமான அளவு மிச்சப்படுத்துவது தான் இதன் நோக்கம்..

பள்ளியில் படித்த Geometry -யை இப்போது கொஞ்சம் வம்புக்கு இழுப்போம்..இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த தூரம் ஒரு நேர்கோடாக(மட்டுமே) இருக்கும் என்று நமது வடிவியல் சொல்லித் தந்திருக்கிறது. ஆனால் நாம் படித்ததெல்லாம் 'இரண்டு பரிமாண
ங்களுக்கான வடிவியல்' ...ஆனால் மூன்று பரிமாண வெளியில்?

ஐன்ஸ்டீன் -இன் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு நாம் 'GEOMETRY OF CURVED SPACE ' என்ற சிக்கலான ஒன்றை உருவாக்க வேண்டி வந்தது.அதாவது மூன்று பரிமாண வெளியில் ஒரு முக்கோணத்தை வரைந்தால் அதன் மூன்று கோணங்களின் கூடுதல் 180 டிகிரியாக இருக்காது (கம்மியாக இருக்கும்!) அதே மாதிரி முப்பரிமாண வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்தபட்ச தூரம் ஒரு நேர்கோடாக இருக்காது. அது ஒரு வளைவாக (curve ) இருக்கும்! இதைப் பற்றி ரிலேடிவிடி வரும் போது விரிவாக சொல்கிறேன்

அதே மாதிரி புராதான வடிவியல் இணைகோடுகள் எப்போதும் ஒன்றையொன்று சந்திக்காது என்கிறது. இது நமக்கு ஹிட்லர் தனமாக unromantic ஆக தோன்றுகிறது.
ஆனால் நவீன இயற்பியல் ரொமாண்டிக்- ஆக இணைகோடுகள் கண்டிப்பாக எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கும் என்கிறது.(space time curvature )


வெளியில் இரண்டு புள்ளிகளுக்கு உள்ள குறைந்த பட்ச தூரத்தை , அந்த வளைந்த பாதையை இயற்பியல் 'Geodesic ' என்று சொல்லி பயமுறுத்தும். அந்த
Geodesic வழியாகத்தான் பைலட் விமானத்தை செலுத்த வேண்டும்..அப்போது தான் எரிபொருள் மிச்சமாகும்..அப்போது தான் சீக்கிரமாக போய்ச் சேர முடியும்..

கீழே உள்ள படங்கள் மூலம் இதை விளக்க முயற்சிக்கிறேன்..




இதே மாதிரி எலக்ட்ரான்கள் அணுக்கருவை சுற்றி ஒரு ஜியோடெசிக்கில் வலம் வருகின்றன . கிரகங்கள் அவற்றின் சொந்த வீட்டில் இருந்தால் அதிகம் கேடு செய்யாது என்பார்களே? அதே போல எலக்ட்ரான்கள் அவற்றின் சொந்த ஆற்றல் கூடுகளில் இருக்கும் போது ஆற்றலை இழப்பதில்லை. ஒரு மட்டத்தில் இருந்து இன்னொன்றுக்குத் தாவும் போது மட்டுமே ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.ஒவ்வொரு மட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் உண்டு...அணுக்கருவுக்குப் பக்கத்தில் உள்ள மட்டம் குறைந்த ஆற்றலையும் தூரத்தில் உள்ளது அதிக ஆற்றலையும் கொண்டிருக்கும்..

எலக்ட்ரான் ஒன்று சும்மா இருக்காமல் அதிக ஆற்றல்(E2 ) கொண்ட மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல்(E1 ) கொண்ட மட்டத்திற்குத் தாவுவதாகக் கொள்வோம்..அப்போது அது ஒரு ஃபோட்டானை (ஒளியை) உமிழ்கிறது...அந்த ஒளித்துகளின் ஆற்றல் E =E2 -E1 ஆக இருக்கும் ..பிளான்க் விதியின் படி ஆற்றல் என்பதுவும் Quantized ..(ஆத்துல போட்டாலும் அளந்து போடு என்பார்களே, அது மாதிரி இயற்கை ஆற்றலை அளந்து தான் கொடுக்கிறது..அளப்பதற்கு அது 'hv ' என்ற container ஐப் பயன்படுத்துகிறது..இங்கே h என்பது பிளான்க் மாறிலி(இதன் முக்கியத்துவத்தை நாம் போன பதிவில் பார்த்தோம்.. v என்பது எலக்ட்ரான் உமிழும் ஒளியின் அதிர்வெண்..இதனால் தான் ஹைட்ரஜனின் அலைக்கற்றை ஒரு குறிப்பிட்ட நிறங்களை (அதிர்வெண்களை) மட்டும் கொண்டிருந்தது.



மேலும் எலக்ட்ரான் என்பது ஒரு மட்டத்தில் இருந்து இன்னொன்றுக்கு தொடர்ச்சியாக நகராமல் (மலைப்பாதையில் SPIRAL ஆக வண்டிகள் கீழே இறங்குமே!)அப்படியே குதிக்கிறது (jump ) அப்படி குதிக்கும் போது ஒளியை உமிழ்கிறது.நம் வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத ,திடீர் திருப்பங்களை QUANTUM LEAP என்று அழைப்பார்கள்..அந்த வார்த்தை இப்படி தான் வந்தது.

இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்..எலக்ட்ரான் ஒரு மட்டத்தில் இருந்து இன்னொரு மட்டத்திற்குத் தாவும் போது இடைப்பட்ட எந்த இடத்திலும் அது இருப்பதில்லை..இங்கிருந்து மறைந்து அங்கே தோன்றுகிறது..நீங்கள் கோயமுத்தூரில் இருந்து பெங்களூர் வருவதாக வைத்துக் கொள்வோம்.இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு
குறிப்பிட்ட பாதையின் எல்லாப் புள்ளிகளிலும் நீங்கள் இருப்பீர்கள்..(எவ்வளவு வேகமாக வந்தாலும்) ஆனால் எலக்ட்ரான்களின் இந்த quantum leap (quantum குதித்தல்) ஒரு teleportation போல இருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட குவாண்டம் எல்லைக்கு மேல் transportation என்பது இல்லாமல் teleportation (இங்கே மறைந்து அங்கே தோன்றுவது) நடைபெறுகிறது. ஆன்மிகம் ஒரு பொருள் நகர்கிறது என்பதை மாயை என்கிறது. ஐன்ஸ்டீனுக்குப் பிறகு அறிவியலும் அதை மாயை என்கிறது! இதைப் பற்றி விரிவாக ரிலேடிவிடி வரும்போது பார்க்கலாம்.. கிறிஸ்டோப் ஸ்கில்லர் என்பவற்றின் கருத்துப்படி "பிளான்க் மாறிலி h* இற்கும் குறைவான இயக்கத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியாது". இயற்கையில் எந்த எல்லையில் இயக்கம் நின்று போகிறதோ (அல்லது இயக்கத்தை உணரும் சக்தியை மனிதன் இழக்கிறானோ) அதை குவாண்டம் எல்லை என்கிறார்கள்..வேதங்கள் பிரபஞ்சத்தை சராசரம் என்கின்றன. த்யாகராஜரும் ராமனை "சராசர ரூபா பராத்பரா" (மருகேலரா) என்கிறார்..சராசரம் என்றால் அசைவது மற்றும் அசையாமல் இருப்பது..மிகப்பெரிய அளவீடுகளில் பிரபஞ்சம் சதா அசைந்து கொண்டிருக்கிறது(சரா) ..ஆனால் உள்ளே செல்லச் செல்ல ஓர் எல்லைக்கு மேல் இயக்கம் நிற்கிறது(அசரா). இந்த எல்லையை இயற்பியல் h என்கிறது. இந்த h என்பதை ரிலேடிவிடி கூட பாதிக்காது என்கிறார்கள்.உண்மையில் மிகச் சிறிய தூரங்களில் தான் தோற்பதை ரிலேடிவிட்டி தானே PREDICT செய்தது..அதே மாதிரி மிகப் பெரிய தூரங்களில் பிரபஞ்சம் விரிவடைய வேண்டும் என்று PREDICT செய்தது..Einstein , You are a Genius !


எலக்ட்ரான் சுற்றக்கூடிய மிகக் குறைந்த ஆரத்தை 0.0529 nm என்று கணக்கிட்டுள்ளார்கள்.உயர்ந்த ஆற்றல் மட்டங்களின் ஆரங்கள் இதன் முழு எண் மடங்காகவே (integer multiples ) இருக்கும். (1 ,2 ,3....) (ஒரு கட்டிடத்தில் மேலே செல்வதற்கு நாம் படிகளில் ஏறிச் செல்லலாம்..அது தொடர்ச்சியானது..லிப்ட் இல் போகலாம்..அனால் அது ஒன்று, இரண்டு, மூன்று என்று குறிப்பிட்ட தளங்களில் மட்டுமே நிற்கிறது அல்லவா? அது மாதிரி தான் எலக்ட்ரான்களின் ஆற்றல் மட்டங்களும் )


மேலும் இந்த குறைந்த பட்ச ஆரம் அதாவது 0.0529 நானோ மீட்டரை தாண்டி எலக்ட்ரான் அணுக்கருவை நெருங்குவதை ஹைசர்பெர்க்கின் விதிகள் தடுக்கின்றன.ஹைசர்பெர்க்கின் நிச்சயமில்லாத் தத்துவத்தைப் பற்றி பிறகு பாப்போம்..

எலக்ட்ரான் என்பது ஒரு மிகச்சிறிய துகள்..அது எப்படி பெரிய ஓர் ஒளி அலையைத் தன்னுள் observe செய்து கொள்ள முடியும்?? எப்படி அதை உமிழ முடியும்?

முடியும்!..காத்திருங்கள்..


(பி.குறிப்பு: இப்போது அணுவுக்கு லேட்டஸ்ட்- ஆக 'cloud model ' பயன்படுகிறது..)

முத்ரா

* ħ = 1.06 ⋅ 10−34 Js



Thursday, March 24, 2011

அணு அண்டம் அறிவியல்-16

அணு அண்டம் அறிவியல்-16 உங்களை வரவேற்கிறது

ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அறிவியல் என்பது மக்களின் அடிப்படைத் தேவைகளை எப்படி நிறைவேற்றுவது, தினசரி வாழ்க்கையை எப்படி இன்னும் எளிமையாக ஆக்குவது என்பதில் மட்டும் குறியாக இருந்தது.அதாவது மின்சாரத்தைப் பயன்படுத்தி சாதனங்களை எப்படி இயக்குவது, இயந்திரங்களை எப்படி தானே இயங்க வைப்பது போன்றவைகள்...
நாம் இன்று சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் சாதனங்களின் பின்னே விஞ்ஞானிகளின் வாழ்நாள் உழைப்பு மறைந்துள்ளது..ஒரு சுவிட்சைப் போட்டால் பல்பு தானாக எரிகிறது. டி.வியை ஆன் செய்தால் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்று அது வர்ணம் காட்டி அலறுகிறது. போர்வையின் அடியில் மறைந்து கொண்டு நம்மால் செல்போனில் 'சொல்லு டா/டி செல்லம்' என்று ஆரம்பித்து மணிக்கணக்கில் பேச முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் நமக்கு சாத்தியமாக்குவதற்கு
விஞ்ஞானிகள் பலர் தங்கள் சுகங்களைத் துறந்து,ஊன் உறக்கம் மறந்து வாழ்நாள் முழுவதும் சோதனைச் சாலைகளில் ஒரு துறவி போல உழைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அலெக்சாண்டர் கிரகாம்பெல், எடிசன், மைக்கேல் பாரடே இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து இருக்கிறீர்களா?படித்து முடித்ததும் உங்கள் கண்களில் ஒரு துளி கண்ணீராவது பனித்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்..


மைக்கேல் ஃபாரடே

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அறிவியலின் (இயற்பியல்) பார்வை கொஞ்சம் நெருடலான கேள்விகளின் பதில்களுக்கான பாதையை நோக்கித் திரும்ப ஆரம்பித்தது..எத்தனை நாள் தான் இயற்பியலை ரொட்டி சுடுவதற்கும், அணுகுண்டு வீசி 'போட்டுத்' தள்ளுவதற்கும் பயன்படுத்திக் கொண்டிருப்பது என்று விஞ்ஞானிகள் யோசிக்க ஆரம்பித்தார்கள்..அவர்கள் சில 'existential questions' களைக் கேட்க ஆரம்பித்தார்கள்..அதாவது இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ,ஆள் அரவமற்ற வெளியில் நாம் மட்டும் தனியாக ஒரு நீலக் கோளில் வாழ்ந்து கொண்டு 'மக்களே , இந்த அராஜக ஆட்சியை இந்த முறை அரியணையில் இருந்து இறக்குவோம்' என்றெல்லாம் அபத்தமாக ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்? கடவுள் என்று ஒரு 'old man in the sky ' இருக்கிறாரா? அவர் தான் இந்த பிரபஞ்சத்தை ஆறு நாளில் படைத்து விட்டு பின்னர் கை கழுவிக் கொண்டு தூங்கப் போய் விட்டாரா? நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்? மனித குலத்தின் எதிர்காலம் என்ன? குண்டு வீசி முட்டாள் தனமாக நம்மையே நாம் அழித்துக் கொள்வோமா ? 'காலம்' என்றால் என்ன? பிரபஞ்சத்தில் மாறாத ஒன்று ஏதாவது இருக்கிறதா? என்றெல்லாம் 'மாண்டூக்ய'உபநிஷதம் லெவலுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.மைக்ராஸ்கோப், டெலஸ்கோப், பயமுறுத்தும் கருவிகள் இவற்றை விட்டு விட்டு ஒரு பேப்பர், பேனா வைத்துக் கொண்டு தனிமையில் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த ஒரு மாற்றம் இயற்பியலில் THEORETICAL PHYSICS என்ற ஒரு புதிய பிரிவைத் தொடங்கி வைத்தது

'conclusion based on pure reasoning !' ..இதைத் துவக்கி வைத்த பெருமை ஐன்ஸ்டீனையே சாரும்..அவரிடம் ஒரு பொம்மை டெலஸ்கோப் கூட இருந்ததில்லை ..அப்படி இருந்தாலும் அவர் இந்த மில்லினியத்தின் மிக அறிவார்ந்த கொள்கையான ரிலேடிவிடி- யைக் கண்டுபிடித்தார். அவர் சொன்ன கருத்துக்களைக் கேட்டு அப்போது சிலர் சிரிக்கக் கூட செய்தார்கள். மேலும் அவற்றை நிரூபிப்பதற்கு அப்போது உடனடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை..உதாரணமாக சூரியன் ஒளியை வளைக்கிறது என்ற அவரின் முடிவுக்கு 1919 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் முழு சூரிய கிரகணம் ஒன்று வரும்
வரை காத்திருக்க வேண்டியிருந்தது!
மேலும் நோபல் பரிசுக் கமிட்டி அவரிடம் 'நீங்கள் கண்டுபிடித்ததெல்லாம் சரி..அதிவேகத்தில் காலம் மெதுவாக நகரும் என்கிறீர்கள் , ஈர்ப்பு-முடுக்க சமன்மை (gravity acceleration equivalence principle ) என்கிறீர்கள்! இதையெல்லாம் வைத்துக் கொண்டு 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது' என்பது போல ஏழை ஒருவரின் ஒருவேளை வயிற்றுப் பசியைத் தீர்க்க முடியுமா?நோபல் பரிசைத் தொடங்கி வைத்த 'ஆல்பர்ட் நோபல்' இந்தப் பரிசு மக்களின் நன்மைக்காகப் பாடுபடும் விஞ்ஞானிகளுக்கு வருடா வருடம் கொடுக்கப் பட வேண்டும் என்று தானே உயில் எழுதி வைத்தார்?' என்று கூறி அவரின் அபாரமான கண்டுபிப்புகளுக்கும் அவை 'non -utility ' என்பதால் நோபல் பரிசு கொடுக்கத் தயக்கம் காட்டியது.

பின்னர் ஒளி மின் விளைவை ஒரு சாக்காக வைத்து அவருக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவித்தது. இந்த விளைவு ஒரு சாதாரண ஒன்று.இயற்பியலில் B .Sc படித்தவர் கூட இதைக் கண்டுபிடித்திருக்க முடியும்.இது என்னடா என்றால் நாம் லிப்ட் கதவு மூடும் போது அவசர அவசரமாக ஓடி வந்து ஒரு ராக்கெட் அனுப்பும் லெவலுக்கு அவசரப்பட்டு கையை அதன் கதவுகளுக்கு இடையே வைத்து ஆட்டினால் அது சமர்த்தாக திறந்து கொள்கிறதே, இது தான் ஒளி மின் விளைவு (photo -electric effect பற்றி நாம் ஏற்கனவே
அ- அ- அ வில் பார்த்திருக்கிறோம்)


நாம் முன்பு சொன்ன படி இயற்பியலின் இந்த அதிகப் பிரசங்கித் தனமான கேள்விகளுக்கு
விடையளிப்பதற்கு ,கடவுளின் பூட்டப் பட்ட அறைக்குள் சாவி துவாரத்தின் வழியே எட்டிப் பார்க்கும் தைரியத்திற்கு, 'quantum mechanics ' கொஞ்சம் உதவி செய்கிறது . இதை எப்படியாவது மற்ற கொள்கைகளுடன் இணைத்து 'theory of everything ' என்ற ஒன்றைக் கண்டு பிடித்து விடமுடியுமா?கடவுளின் பிரபஞ்ச செங்கோலை தன் கையில் எடுத்துக் கொண்டு அவரை நாடு கடத்தி விட முடியுமா என்று இன்றைக்கு விஞ்ஞானிகள் நிறைய பேர் மிதப்பில் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

சரி இந்தப் பதிவுடன் 'குவாண்டம் மெகானிக்ஸ்'
அ- அ- அ வில் ஆரம்பமாகிறது..கூடவே இணைந்திருங்கள்.

முதலில் அதன் பெயர்க் காரணத்தைப் பார்ப்போம்..

குவாண்டம் என்பது குவான்டிடி (quantity ) என்பதில் இருந்து வந்தது..'எவ்வளவு' 'எத்தனை' என்றெல்லாம் மளிகைக் கடைக்காரர் ரேஞ்சுக்கு கறாராகக் கேட்பது.'Whereas science concerns quantity , religion concerns quality ' என்பார்கள் .அதாவது அம்பாள் ராஜ ராஜேஸ்வரி தான் பக்தர்களுக்கு கருணையைக் கணக்குப் பார்க்காமல் இடையறாது பொழிவாள்.இயற்பியலில் இது நடக்காது..எல்லாம் எத்தனை மில்லி கிராம் , எத்தனை மில்லி செகண்ட், எத்தனை ஜூல் என்று தசமஸ்தான சுத்தமாக சொல்ல வேண்டும்.

குவாண்டம்
மெகானிக்ஸ்சை பிள்ளையார் சுழி போட்டு (தான் அறியாமலேயே) தொடங்கி வைத்த பெருமை 'மாக்ஸ் பிளான்க்' ஐ சேரும் என்று முதலிலேயே சொல்லியிருக்கிறோம்.
பார்க்க (அணு அண்டம் அறிவியல்-3) அந்த காலத்தில் இருந்து வந்த 'புற ஊதா பூகம்பம்' எனப்படும் 'ultraviolet catastrophe ' என்ற பிரச்சனைக்குத் தீர்வாக அவர் ஆற்றல் என்பது தொடர்ச்சியானது இல்லை..சின்னச் சின்ன பொட்டலங்களால் ஆனது என்று சொன்னார்.இது தான் குவாண்டம்
மெகானிக்ஸ்- இன் அடிப்படை.ஆற்றல் மட்டும் இல்லை..எல்லாமே சின்னச் சின்ன அலகுகளால் ஆனவை..உதாரணம் ஒளி (light )நமக்குத் தொடர்ச்சியாகத் தெரிகிறது.டார்ச் லைட்டில் இருந்து அடிக்கும் போது ஒரு தொடர்ச்சியான கற்றையாக கண்ணுக்குத் தெரிகிறது ..ஆனால் அதுவும் உண்மையில் 'போட்டான்கள்' என்ற சின்னச் சின்ன துகள்களால் ஆனது.இப்போது கொஞ்சம் advanced ஆக வெளி (space ) மற்றும் காலம் (time )ஆகிவை கூடத் தொடர்ச்சியானவை அல்ல.அவை கூட கோடிக் கணக்கான அடிப்படை அலகுகளின் சாமார்த்தியமான பிணைப்பு தான் என்கிறார்கள்.(STRING THEORY ) இதை இப்போது விளக்க ஆரம்பித்தால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.. இதை அ- அ- அ வின் கடைசி அத்தியாயங்களில் பார்க்கலாம்.

இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால் ஒரு சந்தைக் கடையை தூரத்தில் இருந்து கேட்கும் போது எதுவும் தெளிவின்றி 'ஹோ' என்று ஒரே தொடர்ச்சியான இரைச்சலாகக் கேட்கிறது
ஆனால் பக்கத்தில் போய்க் கேட்டால் தான் நிறைய துண்டு துண்டான ஒலிகளைக் கேட்கிறோம் :"பாருப்பா அந்த தக்காளி அழுகி இருக்கு' 'கேரட் எப்படிம்மா' 'என்ன சரோஜா இப்படி இளச்சுப் போயிட்டா' என்றெல்லாம். இசை கூட நமக்குத் தொடர்ச்சியாகக் கேட்கிறது. ஆனால் அதுவும் ஸ்வரங்கள் என்ற அடிப்படை அலகுகளால் ஆக்கப்பட்டிருக்கிறது.உதாரணமாக 'கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்' என்பதை '--ரி-- -ரி --ரி--' அன்று அடிப்படை அலகுகளாகப் பிரித்து விட முடியும்.ஒரு ஸ்வரத்தில் இருந்து இன்னொன்றுக்கு நகரும் போது 'கமகங்கள்' என்ற frequency adjustments களைப் பாடகர் செய்வதால் அது நமக்குத் தொடர்ச்சியாகக் கேட்கிறது.

இந்த சிறிய அடிப்படை அலகு இயற்பியலில் பிளான்க் மாறிலி (planck constant , h ) என்று அழைக்கப்படுகிறது. நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்கக் கூடிய மிகக் குறைந்த தூரத்தை 'பிளான்க் தூரம்' என்றும் மிகக் குறைந்த கால அளவை 'பிளான்க் காலம்' என்றும் சொல்கிறார்கள்.முருகன் அவ்வையாருக்குப் பதில் மாக்ஸ் ப்ளான்க்கிடம் 'சிறியது என்ன' என்று கேட்டால் அவர் 'சிறியது கேட்கின் நெறி வடிவேலோய், சிறிது சிறிது அணு சிறிது, அதனினும் சிறிது அணுவினுள் அணுக்கரு' என்று ஆரம்பித்து அதனினும் சிறிது பிளான்க் கான்ஸ்டன்ட் என்று முடித்திருப்பார் என்று தான் தோன்றுகிறது

சரி இந்தப் பிரபஞ்சமோ மிக மிகப் பெரியதாய் இருக்கிறது. குவாண்டம் மெக்கானிக்ஸ் இந்த மாதிரி கற்பனை செய்து பார்க்க முடியாத தக்குனூன்டு அலகுகளுடன் deal பண்ணுகிறது. இப்படி இருக்கும் போது பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயிக்க குவாண்டம் இயற்பியல் எப்படிப் பயன்படும் என்று நீங்கள் கேட்டால்: 'பிக் பாங் (big bang ) கொள்கைப்படி நம் பிரபஞ்சம் ஒரு காலத்தில் பிளான்க் நீளத்திற்கு ஒடுங்கி சுருங்கி இருந்ததாகச் சொல்கிறார்கள்.அணு எவ்வளவு சிறியது என்று நமக்குத் தெரியும். ஒரு குண்டூசி நுனியில் ஆயிரம் கோடி அணுக்களை வைத்து விட முடியும். ஆனால் இந்த பிளான்க் தூரம் என்பது அணுவை விட, அணுக்கருவை விட, அதன் உள் இருக்கும் ப்ரோடான்களை விட, குவார்க்குகளை விட மிக மிகச் சிறிய ஒரு நீளம்.
இதன் மதிப்பு
1.616252(81)×10 ^-35 மீட்டர் என்று கன கச்சிதமாகக் கணக்கிட்டு உள்ளார்கள்.இந்த நீளத்திற்கும் குறைவாக ,
(மேலும் பிளான்க் கால அளவுக்கும் குறைவாக) செல்லும் போது இயற்பியலின்
அத்தனை விதிகளும் உடைந்து விடுவதாகக் கூறுகிறார்கள்.அங்கே நம் விதிகள், சமன்பாடுகள் எல்லாம் செல்லுபடி
ஆகாது. அது ஓர் அதிசயம்.பிரபஞ்சம் திடீரென்று தோன்றி வெடித்துச் சிதறிய
கணத்திற்குப் பிறகு ஒரு நானோ செகண்டில் இருந்து என்னவெல்லாம் நடந்தது, எப்படி எல்லாம் அது விரிவடைந்து
பூதாகாரமாக வளர்ந்து நின்றது என்று புட்டுப் புட்டு வைக்கும் இயற்பியல்
விஞ்ஞானிகள், அந்த வெடிப்புக்கு முன்னர் என்ன இருந்தது?ஏன் அந்த வெடிப்பு நிகழ்ந்தது? எது அதை நிகழ்த்தியது? என்று குழம்புகிறார்கள்.ஏனென்றால் பெரு வெடிப்புக்கு முன்னர் காலமும் இல்லை, வெளியும் இல்லை..இந்த நிலையை அவர்கள் 'singularity ' என்ற வார்த்தையைக் கூறி விட்டு கை விரித்து விடுகிறார்கள்.'singularity ' என்பது அழகான ஒரு வார்த்தை..
மொழி பெயர்த்தால் கிட்டத்தட்ட 'அத்வைதம்' என்ற பொருள் வருகிறது.அதாவது எல்லாமே ஒன்று..எல்லாமே ஒரு விவரிக்க முடியாத பரவசத்தில் இருமை மறந்து ஒன்றி இருந்த கணம்...



முண்டக உபநிஷத் இவ்வாறு சொல்கிறது

இருமை நிலை அற்ற ,அறிவு அறியாமை என்பதற்கு அப்பாற்ப்பட்ட பிரம்மம் தொடக்கத்தில் தானே எல்லாவற்றையும் உள்ளடக்கிய 'ஹிரண்ய கர்பமாக' இருந்தது .அது தன்னையே பிறப்பித்துக் கொண்டது.

'பிங் பாங்குக்கு' முன்னர் என்ன நடந்தது என்பதை அறிய முண்டக உபநிஷத் தான் படிக்க வேண்டும் போலிருக்கிறது :)

சரி குவாண்டம் அறிவியல் என்றால் இது மாதிரி தலை சுற்ற வைக்கும் சமன்பாடுகள் எல்லாம் இருக்குமா என்றால் இல்லை :) (எனக்கு அந்த அளவு நாலேஜ் இல்லை :))


ஒரு முறை ஐன்ஸ்டீன் 'இப்போதெல்லாம் நான் கண்டுபிடித்த சார்பியல் கொள்கை எனக்கே புரிவதில்லை..ஏனென்றால் அதை கணிதவியலாளர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள் " என்று சொன்னாராம். எனவே முடிந்த வரை எளிமையாக, அதன் உண்மைப் பொருள் மாறாமல் சொல்ல முயற்சிக்கிறேன்

சமுத்ரா

குறிப்பு: சார்பியல் தத்துவத்தின் படி நீளம் மற்றும் காலம் ஆகியவை சார்புடையவை.
அதாவது ஒரு பொருளின் நீளத்தையோ ஒரு நிகழ்ச்சி நடந்த காலத்தையோ இரண்டு
பேர் அவரவர் Frame of Reference ஐப் பொறுத்து இரண்டு விதமாக அளவிடலாம். அவை சமமாக இருக்கவேண்டிய
அவசியம் இல்லை.. ஆனால் what about Planck Length and time ?
பிரபஞ்சத்தில் absolute time , absolute length எதுவும் இல்லை என்று ஐன்ஸ்டீன் கண்டு பிடித்து சொல்லியிருந்தாலும்
இந்த பிளான்க் நீளம் மற்றும் பிளான்க் காலம் இரண்டு வெவ்வேறு observer -களுக்கும் ஒரே மாதிரி தான்
இருக்கும் என்கிறார்கள். (ஒரு வேளை அவற்றை நம்மால் அளக்க முடிந்தால்) (ஏனென்றால் இவை இயற்கையின் மாறிலிகள்)
அப்படி இரண்டு பேருக்கு இந்த மாறிலிகள் ஒன்றாக இருந்தால் அப்போது நாம் கண்டிப்பாக ஒளியின் வேகம் மாறிலி அல்ல
என்று நிரூபிக்க வேண்டி வரும்...:)


Wednesday, March 23, 2011

கலைடாஸ்கோப்-11

லைடாஸ்கோப்-11 உங்களை வரவேற்கிறது

Body language
===============

போன வாரம் 'நாதஸ்வரம்' சீரியல் ஒரு எபிஸோடை வசனமே இல்லாமல் ஒளிபரப்பினார்கள்..வசனம் இருந்தாலே அதில் எல்லாரும் முக்கால்வாசி மூக்கால் அழுது கொண்டிருப்பார்கள்.
வசனம் வேறு இல்லையென்றால் கேட்க வேண்டுமா ? எல்லாரும் ஒரு பத்து மில்லி லிட்டர் அதிகமாகவே கண்ணீர் விட்டு எதுவும் பேசாமல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார்கள்..சரி இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் சீரியல் இயக்குனர்கள் இப்படியெல்லாம் புதுமையாக (?!) யோசிப்பதற்குக் காரணம் BODY LANGUAGE என்ற ஒன்று இருப்பதால்தான்..நம் communication இல் ஒரு எழுபது சதவிகிதம் இந்த body LANGUAGE மூலம் நடக்கிறது என்கிறார்கள்.(பேசுவது ஒரு முப்பது சதவிகிதம் தானாம்!)இதனால் தான் ஒருவரிடம் பேசும் போது நியூஸ் வாசிப்பவர் போல ஆடாமல் அசையாமல் நம்மால் பேச முடிவதில்லை...டி.வியில் ஒரு மணி நேரம் கால்கடுக்க நின்று கொண்டு மக்களுக்கு பாட்டுகளை ஒளிபரப்பும் மகத்தான பணியை செய்யும் 'வீடியோ ஜாக்கி' களை (esp . கைகளை! )கவனித்திருக்கிறீர்களா?
அந்தக் காலங்களில் ரேடியோவில் நாடகங்களை ஒலிபரப்புவார்களே? நாடகங்கள் என்ன தான் அருமையாக இருந்தாலும் அதனுடன் நம்மால் ஒன்ற முடியாது. yes..BL was missing!
டி.வி சீரியல்களில் அது ஒரு பெரிய advantage ..ஒரு அழகான வில்லி (?) கண்களை உருட்டி, தலையை ஒரு புறமாக சாய்த்து,கொஞ்சம் ஏளனமாகப் புன்னகை செய்து ஓர் அப்பாவி குடும்பப் பெண்ணை 'லுக்கு' விடுவதை வைத்தே ஒரு பத்து நிமிடத்தை ஓட்டி விடலாம் பாருங்கள்..

கர்நாடக இசைப் பாடகர்களுக்கு body Language ரொம்பவும் முக்கியமாக இருக்கிறது..சில பேர் கையால் முறுக்கு பிழிவார்கள்; சில பேர் பூக் கட்டுவார்கள்..வாலி பால் விளையாடுவார்கள்.டயர் ஓட்டுவார்கள்.பக்க வாத்தியக்காரர் ஒரு Safely distance க்கு உள்ளே தப்பித் தவறி உட்கார்ந்து விட்டிருந்தால் அவரைக் கண்ணைக் குத்தி விடுவார்கள்.
முகத்தை அஷ்ட கோணலாக்கி நவரசமும் காட்டுவார்கள்.. (இப்போதெல்லாம் பின்னே பெரிய திரையில் தெற்றுப்பல் தெரியும் அளவு close -up வேறு! சென்னையில் திருவையாறுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்..அந்த close -up வேண்டாமே ப்ளீஸ்! ) இதையெல்லாம் நிறைய பேர் 'குரங்கு சேஷ்டை' என்று சொன்னாலும் THEY ARE NEEDED ...அவர்கள் குரலுக்கும் உடம்புக்கும் ஒரு Synchronization இல்லை என்றால் அவர்களால் பாட முடியாது.நிரவலில் அவர்கள் குரல் நடுங்கும் போது கைகளும் நடுங்க வேண்டும்.மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்கும் போது கைகளும் மேலே போக வேண்டும்.இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு ஜானகி ..'சிங்கார வேலனே தேவா' போன்ற கமகங்கள் அதிகம் உள்ள பாடல்களைக் கூட அவரால் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், எந்த அசைவுகளும் இன்றி சிலை போல நின்று கொண்டு பாட முடிகிறது..என்னைக் கேட்டால் I 'd say Janaki has invisible Hands and Face!
அவர் பாடும் போது அந்த கண்ணுக்குத் தெரியாத மாய முகமும் கைகளும் களி நடனம் ஆடிக் கொண்டிருக்குமோ என்னமோ?

மேலும் இதில் INTIMATE ZONE என்று ஒன்று சொல்கிறார்கள். அதாவது நம் உடலைச் சுற்றி உள்ள ஒரு 18 இன்ச் . பரப்பு.அதற்குள் நாம் நமக்கு மிக நெருக்கமானவர்களை மட்டுமே
அனுமதிக்கிறோம் என்கிறார்கள்..உங்களை ஒருவருக்குப் பிடிக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள சினிமாவில் காட்டுவதைப் போல் என்னென்னவோ செய்து மெனக்கெட வேண்டாம்..அவரின்
INTIMATE ZONE -க்குள் மெதுவாக நுழைந்து பாருங்கள்..அவர் ஆட்டோமேடிக்காக அசௌகர்யமாக உணர்ந்து நகர்ந்து பின் வாங்கினால் bad luck ! He /She Does not like you !




Tongue Twisters
====================

வீரத்தமிழர்கள் (அப்படி யாராவது இன்னும் இருந்தால்) கோபித்துக் கொள்ள வேண்டாம்..தமிழில் சமஸ்கிருதம் போல ஓர் எழுத்துக்கு நான்கு சப்தங்கள் இல்லாத காரணத்தால்
தமிழைப் பேசும் போது அது ரொம்பவே FLAT ஆகக் கேட்கிறது. சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகத்தை சப்தம் பிசகாமல் சத்தமாக சொல்லி முடித்த பின்பு நமக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டிருக்கும்.ஆனால் இந்த ஒரு Oral Exercise தமிழில் கிடைப்பதில்லை. ச, ஷ, ஸ, எல்லாமே நமக்குக் குழப்பம் தான்..ஆங்கிலத்தில் இதைப் பாருங்கள் ..

She sells sea-shells on the sea-shore.
The shells she sells are sea-shells, I'm sure.
For if she sells sea-shells on the sea-shore
Then I'm sure she sells sea-shore shells.

இதை சொல்லி முடித்தவுடன் உங்கள் நாக்கு ஒரு அரை நாளுக்கான லீவ் லெட்டரை உங்களிடம் நீட்டினால் ஆச்சரியம் இல்லை..'தமிழில் நாக்கு திருப்பிகள் (?) இல்லை என்று எந்த மடையன் சொன்னது?' என்று யாராவது குற்றம் கண்டுபிடிக்கும் முன்னர் same side goal போட்டு விடுகிறேன்...காளமேகப்புலவரின் இந்த பாடலைப் படித்துப் பாருங்கள்.சிவபெருமான் யானையின் தோலை உரித்து அணிந்து கொண்டதை எப்படி சொல்கிறார் என்று:

இவரோவீ ரட்டர் எனும் நாமம் உள்ளோர்?
இவரோ வழுவூரில் ஈசர்?- இவரோ
கடத்தடக்க தக்கரிப்பி டித்திழுத் தழுத்தி மெத்த
அடித்தறுத் துரித்துடுத்த வர் ?

(நான் இந்த விளையாட்டுக்கு வரலை!:))

இன்று வரைந்த விமே!
========================

நீங்கள் ஓவியரா என்று சில பேர் கேட்கிறார்கள்..Yes ..I think so ..:) மேலும் என்னை ஓர் ஓவியன் என்று சொல்லிக் கொள்வதில் தான் நான் பெருமை அடைகிறேன்.
கவிதை எழுதுவதை விடவும்,கதை எழுதுவதை விடவும், பாட்டுப் பாடுவதை விடவும், கொஞ்சம் உயர்ந்த தளத்தில் இயங்கும் விஷயம் அது.
நீங்கள் வேறு வேலை செய்து கொண்டே ஒரு கவிதையை யோசிக்க முடியும்..வேறு வேலை செய்து கொண்ட ஒரு பாடலைப் பாட முடியும். ஆனால் ஓவியத்தில் இது நடக்காது.
அது ஒரு தவம் மாதிரி. உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் அதில் ஈடுபடவேண்டும்..It demands whole of your energy ! ஓவியத்தை வரைந்து முடித்த பின்னர் ஒவ்வொரு ஓவியனுக்கும்
தோன்றக் கூடிய கவிதை இது:

நான் வரைந்த ஓவியம்
இதுவரை-
இங்கு தான் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது.
காற்றிலோ,
தூரிகையிலோ
காகிதத்திலோ
பிரபஞ்சப் பெருவெளியிலோ
நான் இதை வரையவில்லை,
நான் செய்ததெல்லாம்
என் கைகளில் மூலம்
அதை
சூனியத்தில் இருந்து
துழாவி
வெளிக் கொணர்ந்ததைத்தான்..


ஒரு கவிதை
===========

கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...
அலுவலகங்களில்,
கல்லூரிகளில்,
மார்கெட்டுகளில்,
கோவில்களில்,
எல்லா இடங்களிலும்...
வயிற்றை விடவும்
நாக்கை விடவும்
நுரையீரலை விடவும்
அதிகமான பேராசையுடன்
அகோரப்பசியுடன்..
கண்கள் எப்போதும்
தின்று கொண்டே இருக்கின்றன...

சமுத்ரா'ஸ் ட்விட்ஸ்
===================

# அது எப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லா சோப்புகளும் 99 .9 % கிருமிகளை அழிக்கின்றன?

# யானை ஊருக்குள் வந்துருச்சு என்று தினமும் செய்திகளில் சொல்கிறீர்களே, மனுஷன் காட்டுக்குள் போய்விட்டான் என்று ஒரு நாளாவது சொல்கிறீர்களா?


ஓஷோ ஜோக்
============

ஒரு கிராமத்திற்கு பெரிய பணக்காரன் ஒருவன் வந்தான். அவனுக்கும் அங்கிருக்கும் ஏழை விவசாயி ஒருவன் மகளுக்கும் எப்படியோ தொடர்பு ஏற்பட்டு விட்டது.
ஒரு நாள் அந்தப் பெண் அழுது கொண்டே அவள் அப்பாவிடம் வந்து " அப்பா நான் அந்த ஆளு கிட்ட மோசம் போயிட்டேன்" என்றாள்...
அந்த விவசாயி கோபத்தில் கொதித்தெழுந்து நியாயம் கேட்க அந்த பணக்காரனிடம் சென்றான்..
பணக்காரன் அவனை சமாதானப்படுத்தி "தப்பு தாங்க,,ஏதோ அவசரத்துல நடந்துருச்சு .மன்னிச்சுக்கங்க..என் சமூக அந்தஸ்து காரணமாக உங்க மகளை நான் எல்லார் முன்னிலையிலும் மனைவி ஆக்கிக்க முடியாது. ஒரு வேளை அவள் கர்ப்பம் தரித்தால் அதற்கான எல்லாப் பொறுப்புகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்..நீங்கள் கேட்பதெல்லாம் தருகிறேன்..
அந்த குழந்தையின் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்..உங்களுக்கு ஒரு புது வீடு கட்டித் தருகிறேன்" என்றான்

"அய்யா, என் மகள் அந்த சிறுக்கி ஒருவேளை கர்ப்பமாகலைன்னா இன்னொரு வாய்ப்பு தருவீங்களா எசமான்?"



முத்ரா


Wednesday, March 16, 2011

பீட்டா(சயின்ஸ் ஃபிக்சன் சிறுகதை)


நான் உள்ளே நுழையும் போது பாஸ் படு பிசியாக இருந்தார்.நான் உள்ளே நுழைந்தது கூட அவருக்குத் தெரியவில்லை..

ஒரு சாணிப் பேப்பரில் பூச்சி பூச்சியாகக் கணக்கெல்லாம் போட்டுக் கொண்டிருந்தார். திடீரென என்னைக் கவனித்து அவசர அவசரமாக நோட்டை மூடினார்..

நான் "குட் மார்னிங் பாஸ்" என்று கூறி விட்டு "கவலைப் படாதீங்க பாஸ், இந்த சைன் தீட்டா, காஸ் தீட்டா எல்லாம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது" என்றேன்..

பாஸ் என்னை முறைத்தார்.இப்போதெல்லாம் மிகவும் டென்ஷனாக இருக்கிறார்..நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை போலிருக்கிறது. அவரை பார்ப்பதற்கே பயமாக இருந்தது.மூன்று நாளாக தூக்கம் இல்லை போலிருக்கிறது. அவரிடம் நான் "பாஸ், நீங்க யாரு , modified M theory ப்ரபோஸ் பண்ற அளவு ஒரு இன்டர்நேஷனல் பிசிஸ்ட் ...நீங்க போயி ஒரு பொண்ணுக்காக டைம் டிராவல் அது இதுன்னுட்டு"

"சுந்தர், அவளை வெறுமனே பொண்ணுன்னு சொல்லாதே, அவள் வேதியியல் மின்சாரம் ஒடிய என் நரம்புகளில் வாழ்வியல் மின்சாரம் ஓடச் செய்தவள்..என் இதயத்து நரம்புகளை தந்திகளாக்கி இன்ப வீணை வாசித்தவள்" -பாஸ் வைரமுத்து லெவலுக்கு உளறிக் கொண்டிருக்க நான் குறுக்கிட்டேன்...

"போதும் பாஸ், பொதுவா விஞ்ஞானிகள் காதல்ல வீக்கு அப்படின்னு சொல்வாங்க..நீங்க என்னடான்னா கவிதையெல்லாம் எழுதறது கொஞ்சம் ஓவர்"

பாஸ் என்னைக் கூர்ந்து பார்த்து விட்டுத் தொடர்ந்தார் " விஞ்ஞானமும் காதலும் எதிரிகள் இல்லை சுந்தர்..In fact they nourish each other. ஐசக் நியூட்டன் ஒரு இளைஞனை உயிருக்கு உயிராகக் காதலித்தார் தெரியுமா?" என்றார்.

நான் புரியாமல் "என்ன பாஸ், இளைஞன்னா சொன்னீங்க ?" என்றேன்

"ஆமாம்...so what ? The subject is love..object does not matter" என்றார்

நான் கொஞ்சம் பயந்து போய் "இந்த விஞ்ஞானிகள் எல்லாம் கொஞ்சம் டேஞ்சரான ஆசாமிகள் தான் பாஸ்" என்றேன்

"அது வெளிப்பார்வைக்கு..ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தை போன்றவர்கள்"

"ஓகே பாஸ் என்னிக்கு உங்கள் காலப்பயணம் நடக்கப் போகிறது?" என்று கேட்டு சப்ஜெக்டை மாற்றினேன்..எங்கே இன்னொரு கவிதையை ஆரம்பித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது..

"மோஸ்ட் ப்ராபப்லி இந்த சண்டே" என்றார்..

ஓகே இங்கே என் பாஸைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.. ஐன்ஸ்டீனுக்கு அப்புறம் இவர் தான் ஜீனியஸ் என்று தயங்காமல் சொல்லலாம்..வருடத்தில் முன்னூறு நாட்கள் இயற்பியல் கருத்தரங்குகளுக்கு, ஆய்வு அறிக்கைகளுக்கு என்று தேசம் தேசமாகப் பறந்து கொண்டிருப்பவர்..நான் இவரிடம் assistant ஆக சேர்ந்தது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்..ஆனால் இப்போதெல்லாம் வெளி உலகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு ஒரு stupid டைம் மிஷினை மெனக்கெட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.அது சாத்தியம் என்று நான் இன்று வரை நம்பவே இல்லை..ஆனால் என் பாஸுக்கு இருக்கும் அறிவுக்கு அவர் கண்டிப்பாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கக் கூடும்..இவரை இப்படி பைத்தியமாக்கிய பெருமை 'பீட்டா' என்ற பெண்ணையே சாரும்..(ரீட்டா இல்லை..பீட்டா!) அவளை எங்கே எப்படி சந்தித்தாரோ தெரியவில்லை.அவள் ஒரு பிரபஞ்ச அழகியாம்.அழகி மட்டும் இல்லை..அறிவில் அவரையே மிஞ்சுவாளாம்..இயற்பியலில் பயங்கர ஈடுபாடு! 'இனம் இனத்தை சேரும்' என்பது போல எப்படியோ சந்தித்து இருவரும் காதலில் விழுந்து விட்டனர். ஆனால் துரதிஷ்ட வசமாக பீட்டா என் பாஸை அனாதையாக விட்டு விட்டு இறந்து போய் விட்டாள்..அவளை மீண்டும் காலத்தில் பயணித்து மீட்டு வருவதற்கு தான் இந்த கால இயந்திரமும் வருடக்கணக்கில் கடின உழைப்பும்..

சரி, பாஸிடம் கவிதை கேட்டது போதும் ..கொஞ்சம் டெக்னிகலாகக் கேட்டு தன்யனாகலாம் என்று முடிவெடுத்து "பாஸ், உங்க டைம் மெஷினை அப்படி எங்க தான் வச்சிருக்கீங்க ..காட்டக் கூடாதா ? அது என்ன பிரம்ம ரகசியம் ? " என்று கேட்டேன்

"யு ஆர் ரைட்.. பிரம்ம ரகசியம் தான்..இதை அந்த பிரம்மனுக்கே தெரியாமல் தான் செய்கிறேன்..இயற்கைக்கு அதன் விதிகளை மீறுபவர்களைக் கண்டால் பிடிக்காது" என்றார்.

"அப்புறம் ஏன் மீறனும்?"

"பீட்டா, பீட்டா , என் உயிர்-மலர்...என் சுவாசக்.."

"போதும் பாஸ், I need something technical"

"Ask me "

"ஏன் உங்க மஷினை ரகசியமா வச்சிருக்கீங்க"

"In order to keep the effect of environmental entropy minimum"

"புரியலை"

"புரியாத வரைக்கும் நல்லது"

"சரி..காலப் பயணம் சாத்தியமா..இல்லை சும்மா உடான்ஸா?"

"உனக்கு அதைப் பத்தி என்ன தெரியும்"?

"எனக்குத் தெரிந்த வரையில் கடந்த காலத்துக்கு போவது சாத்தியமே இல்லை..எதிர் காலத்துக்கு போவது வேண்டுமானால் ஓரளவு சாத்தியம்..மிக அதிக ஈர்ப்பு உள்ள ஒரு பொருள், say, கருந்துளை, அதன் விளிம்பில் அதாவது event horizon இல் இருக்கும் ஒருவருக்கு காலம் மெதுவாக நகரும்..அதாவது ஈர்ப்பு காலத்தை மெதுவாக நகர்த்தும்..அப்போது மற்ற இடங்களில் காலம் வேகமாக நகர்வதை வீடியோவில் FAST FORWARD மோடில் பார்ப்பது போல அவரால் அங்கிருந்து பார்க்க முடியும்.அவர் ஒரு வேளை அங்கிருந்து எஸ்கேப் ஆகித் திரும்ப வந்தால் அவர் எதிர்காலத்துக்குத் திரும்பி வருவார்.."

"ஹ்ம்ம் நீ சொல்வது சரி தான்"

"அப்படியானால் உங்கள் மெஷின் எந்தத் தத்துவத்தை வைத்து செயல்படுகிறது?"

"Guess "

"இயற்பியல், 'காலத்திற்கு' மூன்று அம்புகள் இருப்பதாகவும் , அந்த அம்புகளின் திசையை யாராலும் திருப்ப முடியாது ,அவை uni -directional arrows என்றும் சொல்கிறதே?"

"சொன்னவன் ஒரு முட்டாள்..அது சாதாரண அம்பு..ராமபாணம் என்றால் அது எதிரிகளை அழித்து விட்டுத் திரும்ப அவரிடம் எதிர்-திசையில் பயணித்து வந்து சேரும்"

"அப்படியானால் காலம் என்பது ராமனின், அதாவது கடவுளின் அம்பு " என்கிறீர்கள்..

"kind of ..சரி அந்த அம்புகள் என்ன என்ன என்று சொல் பார்க்கலாம்"

எனக்கு ரெண்டு தான் ஞாபகம் வந்தது..சரி சொல்வோம் என்று சொன்னேன்..

முதலாவது வெப்பவியல் அம்பு: அதாவது நம் பிரபஞ்சத்தில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதாகச் சொல்கிறார்கள்..அந்த வெப்பம் அதிகரிக்கும் திசையில் காலம் உணரப்படுகிறது

இரண்டாவது பிரபஞ்ச அம்பு: நம் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகிறது..அது விரிவடையும் திசையில் காலமும் நகர்கிறது

"மூன்றாவது " என்று கூறி கொஞ்சம் மழுப்பினேன்..

"சிம்பிள்" என்றார் பாஸ்...மனோவியல் ,சைக்கலாஜிகல் அம்பு..the arrow of cause and effect !"

"பாஸ், உங்களால நிஜமாவே இறந்த காலத்துக்குப் போக முடியுமா? அது எப்படிசாத்தியம்?" என்று மறுபடியும் கேட்டேன்..காசினி என்ன சொல்றார்னா, எதிர் காலத்துக்குப் போவது என்பது ஒரு ரயில் பயணம் மாதிரியாம் ..நீங்க சென்னையில் இருந்து டிரைனில் டெல்லிக்குப் போறீங்கன்னு வச்சுக்கங்க..நீங்க டிரைனுக்குள்ள வேகமா ஓடினா டெல்லி சீக்கிரமா வந்திடுமா ? இல்லை தானே ..it depends on the train..அது மாதிரி நாமெல்லாம் பிரபஞ்சம் என்ற விரிவடையும் டிரைனின் கைதிகள்..அதன் கால வேகம் என்னவோ அது தான் நம் வேகமும்...அதாவது one second per second...


"சொன்னவன் ஒரு இடியட்"

இந்த கர்வம் தான் அவரிடம் எனக்கு சில சமயங்களில் பிடிக்காதது..சில சமயங்களில் பிடித்ததும் கூட...பாஸ் தொடர்ந்தார்...

"சாத்தியம் தான்..கனவுல நாமெல்லாம் சர்வ சாதாரணமா இறந்த காலத்துக்குப் போறது இல்லையா?" என்றார்

"பாஸ், அது கனவுல!" என்றேன்

"ஒ, எது கனவு, எது நிஜம்னு பிரித்துப் பார்க்கக் கூடிய நிலையை நீ அடைஞ்சுட்டியா?" "ஈஷா உபநிஷத் இந்த பிரபஞ்சமே கடவுள் காணும் கனவு என்கிறது"..

"ஓகே ஓகே..உங்க கூட பேசி ஜெயிக்க முடியுமா, அப்படின்னா காலப்பயணம் என்பது கனவு மாதிரியா?" என்றேன்

"Not exactly ! சில விஷயங்களை நாம இயற்கைக்குத் தெரிந்து அதனுடன் அக்ரீமென்ட் போட்டுக் கொண்டு பண்ண வேண்டியிருக்கு ..சில விஷயங்களை அதற்குத் தெரியாமல் இயற்கையில் உள்ள loop -holes ஐப் பயன்படுத்திப் பண்ண வேண்டியிருக்கு..நான் பண்ணப் போவது அந்த மாதிரி ஒன்று தான் " என்றார்.

"சரி பாஸ், பீட்டாவை மீண்டும் கூட்டி வந்து என்ன செய்யப் போறீங்க"? என்று கேட்டேன்

"என்னது , மீண்டும் கூட்டிட்டு வர்றதாவது , நான் அவளைக் காப்பாற்றியதும் நாங்க மீண்டும் இந்த future -கு திரும்பி வர முடியாது..நாங்க இருவரும் வேறு PARALLEL UNIVERSE ல ஜாலியா இருப்போம்"

"குழப்பறீங்க பாஸ்"

"பெயின்மனின்(Feynman) தத்துவப்படி இந்த பிரபஞ்சத்துக்கு நிறைய இணையான வரலாறுகள் இருக்கலாம் ..அதில் எதில் வேண்டுமானாலும் வாழ்வதற்கு நமக்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இப்போது நாம்வாழும் இந்தப் பிரபஞ்சம் ..பீட்டாவைப் பறி கொடுத்து விட்டு நான் தனியாக இருப்பது ஒன்று ..இன்னொன்றில் நானும் அவளும் சேர்ந்து வாழலாம்..குழந்தை குட்டி பெற்றுக் கொள்ளலாம்..நான் இறந்த காலத்துக்குச் சென்று அவளைக் காப்பாற்றுகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம்..அப்படி செய்வதால் நான் பிரபஞ்சத்தின் entropy எனப்படும் உள்ளக வெப்பத்தை கண்டபடி alter செய்து விடுகிறேன்..அதனால் வெப்பவியக்கவியலின் விதிகள் நான் திரும்பி வருவதற்கு அனுமதிக்காது..நான் மாற்றிய entropy யை initial condition ஆகக் கொண்ட மற்றொரு உலகில் நாங்கள் வாழ வேண்டியிருக்கும்"

எனக்குத் தலை சுற்றியது.."அப்படின்னா பாஸ் உங்களை நான் இனிமே பார்க்க முடியாதா" என்றேன்

"எஸ்"

"பாஸ்..உங்க பீட்டா மேல உங்களுக்கு இவ்வளவு காதலா?"என்று வியந்தேன்..

"அவள் தான் என் வாழ்க்கை..உயிர்..அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்"

"சரி பாஸ், அவங்க எப்படி இறந்து போனாங்க?" என்று கேட்டேன்..அதை இது வரைக்கும் அவர் என்னிடம் சொன்னதில்லை..

"வெல்..பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நாங்கள் ரெண்டு பேரும் ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு ஜாலி டூர் போயிருந்தோம்..அப்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது..திரில் வேண்டும் என்று நாங்கள் ரெண்டு பேரும் மலை உச்சிக்கு நடந்து போனோம்...நன்றாக என்ஜாய் செய்தோம்..ஒரு உயரமான திண்டில் ஏறி நின்று கொண்டு என்னை டவுன் ஆங்கிளில் போட்டோ எடுக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்...நான் மறுத்தேன்..எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என் பிடியை விடுவித்துக் கொண்டு ஓடிப் போய் மேலே ஏறினாள்..போட்டோ எடுத்து விட்டுக் கீழே இறங்கும் சமயத்தில் எங்கிருந்தோ பூதாகாரமாக காற்று வீச ஆரம்பித்தது..அது அவளை அப்படியே கீழே தள்ளி என் உயிர் பீட்டா அதல பாதாளத்தில் உருண்டாள் " ..அவர் கண்கள் குளமாகி இருந்தன ...

"சரி விடுங்க பாஸ்,, அது தான் திரும்பவும் அவரை மீட் பண்ணப் போறீங்களே" என்றேன்

"அப்புறம் ஒரு request பாஸ், நானும் உங்க கூட வருகிறேனே.. எல்லாவற்றையும் சாட்சியாக இருந்து பார்கிறேன்..ஒரு passive observer ஆக..எதிலும் கலந்து கொள்ளாமல்..அப்படியானால் என்னால் மீண்டும் எதிர்காலத்திற்கு திரும்ப முடியும் தானே?" என்றேன்..என்னவோ அந்த பயணத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசை என்னுள் முளை விட்டிருந்தது..

நீண்ட நேர யோசனைக்குப் பின் பாஸ் அதற்கு சம்மதித்தார் ..நிறைய கண்டிஷன்களுடன்

"நீ கண்டிப்பாக ஒரு
passive observer ஆகத் தான் இருக்க வேண்டும்..எதையும் தொடக் கூட செய்யாதே...அது ஒரு கனவு என்பது போல தள்ளி நின்று பார்..பேசக் கூட செய்யாதே ..நீ ஒன் பாத்ரூம் போனால் கூட entropy யை மாற்றி விடுவாய் ஜாக்கிரதை" என்றெல்லாம்..

கடைசியாக அந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது..

"பாஸ் எந்த நேரத்துல போயி லேன்ட் ஆகப் போறோம்?" என்றேன்,..

"நானும் பீட்டாவும் மலை ஏறினோம் இல்லையா? ,,அந்த நேரத்தில்.."

"பாஸ், கொஞ்சம் முன்னதாகவே போய் உங்க டூர் ப்ரோக்ராமையே கான்சல் பண்ணி இருக்கலாமே" என்றேன் கொஞ்சம் பெருமிதத்துடன்..

"உளறாதே...நான் சொன்ன மாதிரி நாம் இயற்கையை ஏமாற்றி விட்டு தான் பயணம் செய்கிறோம்..முன்னரேயே போய் நாம் லேன்ட் ஆனால் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கும்..அப்போது இயற்கை entropy change ஐ வைத்துக் கொண்டு நாம் ஏதோ தில்லு முள்ளு செய்கிறோம் என்று அறிந்து கொண்டு விடும்..அப்புறம் ஒரு விஷயம் பீட்டாவின் கண்களில் நீ பட வேண்டாம்.."

"ஓகே பாஸ்"

எப்படி நான் எதிர்காலத்திற்கு திரும்பி வருவது என்ற வழிமுறையை பாஸ் எனக்கு ஒரு மணி நேரம் விளக்கினார்... "இந்த மெஷினை மீண்டும் பயன்படுத்த முடியாத படி பண்ணி இருக்கிறேன்..just one time use ..நானே நினைத்தாலும் அதை இன்னொரு முறை பயன்படுத்த முடியாது" என்றார்...பாவி பாஸ்!

ஒரு இருட்டான அறைக்குள் கூட்டிச் சென்று "இது தான் டைம் மெஷின் " என்றார்...படங்களில் வருவது போல பளபளப்பாக, கலர் கலர் ஒயர்களுடன், லீவர்களுடன், பட்டன்களுடன் , ஒரு எல்.இ.டி டைம் டிஸ்ப்ளே இதையெல்லாம் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாக இருந்தது..

கொஞ்ச நேரத்தில் (?) நான் பாஸையும் பீட்டாவையும் ஐம்பது அடி விட்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்..பீட்டா பின்னாலேயே அவ்வளவு அழகாக இருந்தாள்...

"டார்லிங்..அங்கே போகணும்.." என்றாள் பீட்டா

"Are you mad or what ? Just stay here "

"இல்லை அங்கிருந்து down view பார்க்கணும்..உங்களை down view ல ஒரு போட்டோ எடுக்கணும்"

இப்போது நான் பீட்டாவின் அழகை முழுவதும் பார்த்தேன்...என் பாஸ் வருடக்கணக்கில் ஏன் மெனக்கெட்டு டைம் மெஷினைக் கண்டு பிடித்தார் என்பது இப்போது புரிந்தது..

எங்கள் ப்ளானின்
படி பீட்டா மேலே போவதற்கு ரொம்ப அடம் பிடித்தால் பாஸ் அவளை ஒரு அறை அறைந்து கையைப் பிடித்து இழுத்து கீழே அழைத்துப் போவதாக ஏற்பாடு..அதற்குப் பின்னர் அவர்கள் பாடு..அவர்கள் வேறு ஒரு parallel universe இல் சந்தோஷமாக இருப்பார்கள்..நான் திரும்பி வர வேண்டும்.ச்சே..எனக்கும் பத்து வருடம் முன்பு ஒரு ஆல்பாவோ , காமாவோ யாரோ ஒரு காதலி இருந்திருக்கக் கூடாதா?

பீட்டா அடம் பிடித்தாள்..let me go ...i can manage ..Just few seconds ..!

பாஸை ஒரு அறை விடுமாறு தூரத்தில் இருந்து நான் செய்கை காட்டினேன்..அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை..
பீட்டாவின் கையைப் பிடித்து இழுத்து 'வேண்டாம்' என்றார்.

அவள் திமிறினாள்...

ஏனோ அவள் கையை தானாகவே விடுவித்து 'ok be careful ' என்றார் பாஸ்...

'பாஸ், என்ன பண்ணறீங்க போய்க் காப்பாத்துங்க ?' என்று பதட்டமாக செய்கை செய்தேன் ஒரு மரத்தின் பின்னே மறைந்து கொண்டு..

ஒரு கல்லை எடுத்து அவர் மீது வீசலாம் என்று பார்த்தேன்...பின்னர் entropy வந்து பயமுறுத்தியதால் செய்யவில்லை..

பாஸ் ஒரு சுவர் மாதிரி அசையாமல் நின்று கொண்டிருந்தார்..அவர் முகம் இறுகியிருந்தது..

ஒரு பலமான காற்று வீசி
பீட்டா அந்தத் திண்டில் இருந்து அதல பாதாளத்தில் உருண்டாள்..

--

--

--

--

--

--

--

--

நானும் பாஸும் ஆபீசில் உட்கார்ந்திருந்தோம்..தேதி 01 -03 -2011

திரும்ப வந்து விட்டோம் என்று தெரிந்து கொண்டு பாஸிடம் நிதானமாகக் கேட்டேன்.."ஏன் உங்கள்
பீட்டாவைக் காப்பாற்றவில்லை?"

அவரிடமிருந்து ஒரு மௌனம் பதிலாக வந்தது..

"சொல்லுங்க பாஸ்...you are cruel !" என்றேன்..

"shut up ...I 'm Just practical ..நடந்தது நடந்த மாதிரியே இருக்கட்டும்..நீ என்னைக் கோழை என்று கூட சொல்லலாம்..it 's ok ..எனக்கு அந்த புதிரான Parallel universe இல் வாழ பயமாக இருந்தது..அங்கே என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அந்த இணை உலகத்தில் பீட்டா என்னைப் பிடிக்கவில்லை என்று யாருடனாவது ஓடிப் போய் விடலாம்...என்னை ஏமாற்றி விடலாம்..ஏன் நான் கூட சீக்கிரமாக ஒரு லாரியில் அடிபட்டு செத்துப் போகலாம்..இப்போது நான் உலகம் அறிந்த ஒரு விஞ்ஞானி ...ஆனால் இந்த இடத்தை நான் அந்த இணை உலகத்தில் அடைந்திருக்க முடியுமா? இந்த புகழ், இந்த சொகுசான வாழ்க்கை....யாருக்குத் தெரியும்? நான் அவளால் ஏமாற்றப் பட்டு ரோட்டில் பிச்சக் காரனாகக் கூட அலையலாம்..பழக்கம் இல்லாத தேவதையைக் காட்டிலும் பழகின பேய் எவ்வளவோ மேலானது என்று சொல்வார்களே?...எனக்கு உண்மையான பீட்டாவை விட அவளது நினைவுகளுடன் இயல்பான இந்த உலகத்தில் வாழ்வது தான் உண்மையில் அழகானது என்று அந்த சமயத்தில் தோன்றியது "

உணர்ச்சி வசமாகப் பேசி முடித்தார்...

"சுந்தர், Will you let me alone ?" என்றார்

இனம் புரியாத ஒரு வித உணர்வுடன் நான் வெளியே வந்தேன்...


~முத்ரா