இந்த வலையில் தேடவும்

Wednesday, September 28, 2011

நவராத்திரி பாடல் (குழந்தைகளுக்கு)

மழை பொய்த்து விட்ட
மாநிலத்திலும் -
குழந்தைகள் பாடுகிறார்கள்
'RAIN RAIN GO AWAY '

இது தான் எத்தனை உண்மை? ஆங்கில ரைம்ஸ்களில் பல, அந்த நாட்டு கலாச்சாரத்துக்கும் சூழ்நிலைக்கும் பருவநிலைக்கும் பொருந்துபவை, அவற்றை இங்கே நாம் நம் குழந்தைகளுக்கு பெருமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரி ஆங்கில அறிவு வளர அர்த்தம் எல்லாம் பார்க்க வேண்டாம் என்று வைத்துக் கொண்டாலும் நாம் குழந்தைகளுக்கு எளிய தமிழ்ப் பாடல்களையும் கற்றுத் தரலாமே? பின்னர் பேருந்துகளில் தமிழில் எழுதி இருக்கும் வழித் தடங்களைப் படிக்க முடியாத நிலைமையை நாம் நம் குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டிருக்காது. சரி குழந்தைகளுக்கு எளிமையான ஒரு நவராத்திரி பாடல். பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்:


அழகழகாய் பொம்மை பாரு
அணிவகுத்து நிற்குது
கலகலப்பாய் கண் சிமிட்டி
கவலை மறக்க வைக்குது 1

குண்டு வயிறு செட்டியாரு
கடுகு சீரகம் விற்குது
அண்ட வந்த ஈயும் விரட்ட
ஆளில்லாமல் சுத்துது 2

பூங்காவிலே பொம்மையெல்லாம்
புதிய பாட்டு பாடுது
தூங்காமலே இரவும் பகலும்
தூளியிலே ஆடுது 3

மரப்பாச்சி பொம்மை பாரு
மணி மணியாய் நிற்குது
கருப்பாச்சி பொண்ணு அங்கே
கணவனை முறைக்குது 4

ராமர் பொம்மை வில்லை ஏந்தி
ரம்மியமாய் நிற்குது
சாமி முன்னே அனுமாரும்
சாந்தமாய்கை குவிக்குது 5

சின்னக் கண்ணன் கையினிலே
வண்ணப் பானை இருக்குது
உண்ண உண்ண வாய்வழியே
வெண்ணையும் தான் ஒழுகுது 6

தஞ்சாவூரு பொம்மையும்தான்
தலையை தலையை ஆட்டுது
கொஞ்சம் அங்கே திரும்பிப் பாரு
கொரங்கு பொம்மை அசத்துது 7

பாவை விளக்கு பொம்மை ஒண்ணு
பத்திரமாய் நிற்குது
சாவி கொடுத்த ரயிலு ஒண்ணு
சக்கரம் போல் சுத்துது 8

முருகன் பொம்மை மயிலு மேலே
முத்து முத்தாய் ஒளிருது
அருகில் வந்து பாரு இங்கே
ஆனை ரெண்டு பிளிருது 9

மூணாவது படியில் பாரு
முதலை ஒண்ணு சிரிக்குது
ஆனா கிட்டப் போயிடாதே
அடிவயிறு கலக்குது 10

கல்லியாண ஊர்வலத்தில்
குதிரை ஒண்ணு நடக்குது
ஒல்லியான மணப்பொண்ணு
ஒயிலாத்தான் சிரிக்குது 11

கொக்கு பாரு ஆமை பாரு
கோழி பாரு கத்துது
பக்கத்திலே வந்து பாரு
பூமி உருண்டை சுத்துது 12


பாவக்காய் கத்திரிக்காய்
பிளாஸ்டிக்கிலே சிரிக்குது
கோவக்கார பூனை ஒன்னு
கண் முழித்துப் பார்க்குது 13

பார்த்தாயா நாயி பொம்மை
படுத்து கனவு காணுது
வாத்து பொம்மை தண்ணி இன்றி
வருத்தமாக தோணுது 14


புள்ளையாரு பொம்மை ஒண்ணு
புதுவிதமாய் இருக்குது
குள்ளமான பொம்மை ஒண்ணு
குடைபிடித்து நிற்குது 15


காவி உடை சாமியாரு
கண்ணை மூடி இருக்குது
தாவி வரும் மானு பாரு
தலை நிமிர்த்திப் பார்க்குது 16

ஒன்பதுநாள் கொலுவும் இங்கே
ஒயிலாத்தான் இருக்குது
தின்பதற்கு தினம் தினமும்
தீனி கூட கிடைக்குது 17

பெரிய துன்பம் வந்த போதும்
பொம்மை போல இருக்கணும்
உறுதியாக இருந்து விட்டால்
உள்ளம் இன்னும் பலப்படும் 18


சமுத்ரா
Monday, September 26, 2011

கலைடாஸ்கோப் -39

லைடாஸ்கோப் -39 உங்களை வரவேற்கிறது.

1
==

சில விஷயங்கள் அல்லது பொருட்கள் உண்மையில் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டனவோ அதை விட்டு வேறு சில உபயோகங்களுக்காகவும் பயன்படும். சேஃப்டி பின்னை அல்லது பென்சிலை சில சமயம் காது குடைய உபயோகிக்கிறோம். பத்திரிக்கைகள் சில சமயம் விசிறிகள் ஆகின்றன. விசிறிகள் (டேபிள் பேன்) சில சமயங்களில் 'ஹேர் ட்ரையர்' ஆகி விடுகிறது.கரண்டிகள் சில சமயம் கணவனை அடிக்கப் பயன்படுகின்றன. ஒரு வீட்டில் ஏலக்காய் பொடி செய்ய டி.வி ரிமோட் உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன். சீப்பு சில சமயம் முதுகு சொரியப் பயன்படுகிறது. நியூஸ் பேப்பர் பார்சலுக்கு பயன்படுகிறது.தேளை அடிக்க செருப்பு உபயோகப்படுகிறது.இப்படி நிறைய... இந்த லிஸ்டில் செல்போனும் அடக்கம் என்று தோன்றுகிறது. இப்போது செல்போன் பேசுவதற்கு தான் குறைந்த அளவில் பயன்படுகிறது. சாம்சங் காலக்சி, பாப், வேவ், சாம்ப் என்று என்னென்னவோ சொல்கிறார்கள். செல்போன் கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் ஆகி விட்டது.இந்த மாதிரி மொபைல் போன் இப்போதெல்லாம் வருகிறதா என்று தெரியவில்லை.(வந்தாலும் யாரும் வாங்க மாட்டார்கள்)செல்போன்கள் என்ன என்னவோ செய்கின்றன. படம் எடுக்கின்றன. வீடியோ எடுக்கின்றன.டெம்பரேசர் காட்டுகின்றன.பக்கத்தில் கொண்டு வந்தால் ஃபைல்களை TRANSFER செய்கின்றன. பெயர் சொன்னால் அந்த பெயர் உள்ளவர்களுக்கு கால் செய்கின்றன. மனதில் நினைத்தாலே கால் செய்யும் செல்போன்கள் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.

லேன்ட் லைன் என்று அழைக்கப்படும் வீட்டு போன்கள் செல்போன்களுடன் ஒப்பிடும் போது ஒரு கற்கால மனிதனைப் போலத் தோன்றுகின்றன.


சைடு பிட்: செல் போன் ரிங்-டோன்களைப் பார்க்கும் போது மனிதர்களின் கற்பனை வளம் வியக்க வைக்கிறது. ஒரு மெசேஜ் வந்தால் நாய் குரைப்பதுபோல, 'டேய் வெத்து வேட்டு உனக்கு ஒரு மெசேஜ்' என்று, அப்புறம் குழந்தை அழுவது போல , வடிவேலுவின்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதையெல்லாம் வைத்திருக்கிறார்கள்....FUNNY !

2
==

நம்முடைய
வாழ்க்கை
நேர்க்கோடாக,

LINEAR ஆக இருந்தால் நம்மால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியாது என்று சொல்கிறார்கள். லீனியர் என்றால் நம்முடைய இன்றுகள் நேற்றுகளின் நகலாக,நம்முடைய நாளைகள் இன்றுகளின் நகலாக இருப்பது. செய்ததையே செய்து கொண்டு இருப்பது. காலையில் எழுந்து பல்துலக்கி காபி குடித்து பாத்ரூம் சென்று பஸ் பிடித்து ஆபீஸ் வந்து பொய்யாக சிரித்து பொய்யாக குட் மார்னிங் சொல்லி,பேலன்ஸ் சீட் தயார் செய்து , கஸ்டமரை பொய்யாகப் புகழ்ந்து, ஏதோ சாப்பிட்டு, சாயங்காலம் கூட்ட நெரிசலில் வீடு வந்து சேர்ந்து, டி.வி ரிமோட்டை கையில் எடுப்பது.

இன்றைய தொழிலதிபர்கள் , சி... க்கள் எல்லாரும் இந்த லீனியர் மாயையை உடைத்துக் கொண்டு வந்தவர்கள் தான். கம்பெனி தரும் மாத சம்பளத்துக்கு மாடு மாதிரி உழைத்துக் கொண்டிருக்காமல் நல்ல சம்பளம் வரும் வேலையை உதறி விட்டு நிச்சயமில்லாத ஒரு பிசினஸை கையில் எடுத்தவர்கள் இருக்கிறார்கள். வனஸ்பதியையும் பேபி சோப்பையும் (வெற்றிகரமாக) மார்கெட் செய்து கொண்டிருந்த விப்ரோவை சாப்ட்வேரை நோக்கி நகர்த்திய போது அஜிம் பிரேம்ஜியை 'நீ முன்னேற மாட்டாய்' என்று திட்டியவர்கள் இருந்தார்கள்.

சாப்ட்வேர் என்றதும் ஞாபகம் வருகிறது. டிகிரி முடித்து விட்டு வரும் பட்டதாரிகளுக்கு இன்றைய சாப்ட்வேர் துறை பரீட்சித்து மாளிகை போல நுழைவதற்கு கஷ்டமாக இருக்கிறது. புதிதாக வருபவர்களிடத்தில் OUT OF BOX THINKING என்ற அணுகுமுறையை எதிர்பார்க்கிறார்கள். ஒரு பிரச்சினையை நேர்கோட்டில் அணுகாமல் புதிய பரிமாணங்களில் அதற்கான தீர்வை யோசிப்பது.
இன்டர்வியூக்களில் CASE STUDY எனப்படும் நடைமுறை பிரச்சானைகளையும் கொடுத்து அதற்குரிய தீர்வுகளை அலச சொல்கிறார்கள்.

கணித மேதைகள் மூன்று பேர+ஒரு சாதாரண ஆள் இவர்கள் நாலு பேரையும் ஒரு சிறையில் அடைத்து ஒரு சிக்கலான புதிரைக் கொடுத்து அதை விடுவிக்க சொன்னார்களாம். அந்த புதிரின் விடையின் படி அந்த சிறைக்கதவின் பூட்டை செட் செய்தால் அது திறந்து கொள்ளுமாம். கணித மேதைகள் மூன்று பேரும் மணிக்கணக்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு புதிரை விடுவிக்க மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த போது அந்த ஆள் கூலாக உட்கார்ந்திருந்தானாம். பின்னர் மெதுவாக நடந்து சென்று கதவைத் தள்ள அது திறந்து கொண்டதாம். அதாவது கதவு பூட்டப்படவே இல்லை.இதுதான் OUT OF BOX சிந்தனை. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு விஷயம் என்ன என்றால் Before working on the solutions, make sure the problem really exists!

இன்ஃபோசிஸ் போன்ற சில கம்பெனிகள் சகுந்தலாதேவி டைப் புதிர்களைக் கொடுத்து மாணவர்களை விடுவிக்க சொல்கின்றன. இப்போது லைடாஸ்கோப் வாசகர்களுக்காக இரண்டு புதிர்கள்:

1 . ஒரு மாதத்தில் ஒரு முறை வரும்; பன்னிரண்டு ஆண்டுகளுக்கு இருமுறை வரும்; ஒரு யுகத்தில் ஒருமுறை கூட வராது; அது என்ன?

2 . நான் ஒரு விலங்கு. என் தலையை வெட்டினால் நான் ஒளிருவேன். என் இடையை வெட்டினால் நான் ஒரு கோள். நான் யார்?

(விடைகளை இமெயிலில் சொன்னால் நல்லது)

3
==

உலகிலேயே மனிதனால் அமைக்கப்பட்ட மிக உயரமான சிலை எது? சுதந்திரதேவி சிலையா? தப்பு. SPRING TEMPLE BUDDHA எனப்படும் வசந்த கோயில் புத்தர் சிலை. சைனாவில் இருக்கும் இதன் உயரம் 420 அடி.நம் கன்யாகுமரி திருவள்ளுவரை விட மூன்று மடங்கு உயரம். புத்தரின் கால் கட்டை விரல் மட்டும் இரண்டு ஆள் உயரம் இருக்கிறது. படத்தைப் பாருங்கள்.
ஆனால் மனித மனதிற்கு இந்த உயரங்கள் எல்லாம் ஜுஜுபி. நினைத்தால்அபாரமான உயரங்களில் பயணிக்க வல்லது மனம்.அதே சமயம் அதல பாதாளத்துக்கு இறங்கவும் கூடியது.கழிவில் உட்காரும் , அதே சமயம் இறைவன் நைவேத்தியத்திலும் உட்காரும் போன்றது மனித மனம். காலையில் மிக உயர்ந்த உலக இலக்கியங்களைப் படைத்து விட்டு இரவில் வேசி வீடு தேடிய கவிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.இதில் தவறு ஏதும் இல்லை. EXTREMISM என்பது மனித மனத்தின் தவிர்க்க முடியாத ஒரு பண்பு. வயிறு முட்ட சாப்பிடுவது. மறுநாள் வயிற்று வலியில் துடிக்கும் போது சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி எடுப்பது. குடித்து விட்டு கண்கள் இருள HANG OVER இல் இனிமேல் வாழ்வில் அதைத் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வது.மறுநாள் மீண்டும் அதே BAR க்கு செல்வது. ஓஷோவின் இந்த கதையின் மேல் தியானம் செய்யுங்கள் :

பண்டிதன் ஒருவன் ஞானத்தைத் தேடி மிகவும் அலைந்தான். சத்தியம் எது , உண்மை எது என்ற தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மனைவி மக்களைத் துறந்து தேசம் தேசமாக சுற்றி வந்தான். ஆனாலும் அவனுக்கு ஞானத்தின் ஒரு கீற்று கூட சாத்தியப்படவில்லை. மிகவும் நொந்து போன நிலையில் ஒரு நாள் சாது ஒருவரை அவன் சந்தித்தான். அவர் கண்களில் தோன்றிய ஒளியைக் கண்டு, அவர்பால் ஈர்க்கப்பட்டு காலில் விழுந்து 'சுவாமி, எனக்கு உண்மை எது என்று அறிவுறுத்துங்கள்' என்றான். அவர் சிரித்து விட்டு 'முட்டாளே , உன் குரு உனக்கு பக்கத்து வீட்டிலேயே இருக்கிறார்;போய் அவர் காலில் விழு' என்று சொல்கிறார். பண்டிதனுக்கு ஒரே குழப்பம்; ஏனென்றால் அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு படிக்காத ,ஏழையான, தராசு தயாரிக்கும் தொழிலாளி ஒருவன் தான் வசிக்கிறான் .அவனுக்கு தராசு செய்வதைத் தவிர ஒன்றும் தெரியாது. அதனால் அவன் பெயரே 'துலாதர்' என்று மாறி விட்டிருந்தது. அவனிடம் என்ன உபதேசம் கிடைக்கக் கூடும் என்று பண்டிதன் தயங்கினான்.ஆனாலும்அந்த சாது சொல்லிவிட்டாரே என்பதற்காக தன் ஊருக்கு திரும்பி வந்து அவன் வீட்டுக்கு செல்கிறான். துலாதர் தராசு செய்வதைப் பார்த்து அவன் வியந்து போகிறான். அவன் முகத்தில் ஆயிரம் ஞானிகளின் தரிசனத்தைப் பார்க்கிறான் பண்டிதன். துலாதரின் காலின் விழுந்து தனக்கு உபதேசம் தரும்படி கேட்கிறான். துலாதர் 'எனக்கு இந்த தராசு செய்வதைத்தவிர ஒன்றும் தெரியாது; தராசு செய்து செய்து நானே ஒரு தராசு போல மாறிவிட்டேன்; தராசின் முள்ளை மையத்தில் நிறுத்தி நிறுத்தி என் மனமும் மையத்தில் நின்று விட்டது. என் மனமும் துருவங்களில் அலைபாய்வதை நிறுத்தி விட்டது' என்கிறான். அன்று முதல் பண்டிதன் துலாதரின் சிஷ்யன்ஆகிறான்.

இந்தக் கதையில் இருந்து நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன

ஒன்று: நாம் எதைத் தேடுகிறோமோ அது நமக்குப் பக்கத்து வீட்டிலேயே இருக்கலாம் (யாரது? இது ஃபிகருக்கும் பொருந்துமா என்று கேட்பது?. கொஞ்சம் சீரியஸ் ஆக இருங்கள்)

இரண்டு: துருவங்களுக்கு நகர்வது நமக்கு எளிது. மையத்தில் நிற்பது கஷ்டம்; ஒன்று ஏசுவாக இருக்க வேண்டும். இல்லை ஜூடாஸ்-ஆக இருக்க வேண்டும். இடையில் ஆட்டு மந்தைகளில் ஒரு ஆடாக இருக்க மனம் விரும்புவது இல்லை.ஒன்று தாடி மீசை வளர்ப்பது; இல்லை அடுத்த துருவத்துக்கு சென்று மொட்டை போட்டுக் கொள்வது.

4
==

தாடி மீசை என்றதும் ஒன்று தோன்றுகிறது. ஆண்களுக்கே உரிய அவஸ்தைகளில் ஒன்று இந்த கட்டிங் மற்றும் ஷேவிங். (அடுத்த ஜென்மத்தில் பஞ்சாபில் பிறக்க வேண்டும்!) பெண்களின் மாதாந்திர அவஸ்தை கூட குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் நின்று போகிறது. ஆனால்ஆண்களுக்கு இந்த மற்றும் ஷே சுடுகாடு வரை வருகிறது. சுயமாக சேவிங் செய்யக் கற்றுக் கொண்ட மனிதன் சுயமாக கட்டிங் செய்யக் கற்றுக் கொள்ளவில்லை.சின்ன வயதில் அப்பா கட்டிங் செய்து விட பார்பர் ஷாப் கூடப் போவார். ஒரு உயர்ந்த நாற்காலி, அதன் மேல் ஒரு பலகை, ஒரு பெஞ்ச், ஒரு நீண்ட கண்ணாடி, சீப்புகள், இவ்வளவு தான் இருக்கும். ஷேவிங் இரண்டு ரூபாய் கட்டிங் ஐந்து ரூபாய் ஆகும். கட்டிங் செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது ஏதோ பஞ்சமா பாதகங்களில் ஒன்றை செய்து விட்டது போல பம்மியபடியே பின்பக்க வழியாக வர வேண்டும். துணிகளை நனைத்து வைக்க வேண்டும்.

இப்போது எல்லாம் தலைகீழாக மாறி விட்டன. பெண்கள் அழகு நிலையங்களுக்கு சற்றும் குறையாமல் பார்பர் ஷாப்புகள் மாறி விட்டன. கட்டிங் செய்யப் போனால் கட்டிங் மட்டும் செய்து கொண்டு வர முடிந்தால் அது உங்கள் சாமார்த்தியம். சார், ஃபேஷியல் பண்ணிக்கங்க, ஹெர்பல் ஃபேஷியல், சைட் எபெக்ட் இருக்காது, தலைக்கு ஆயில் மசாஜ் பண்ணிக்கங்க ,ப்ளீச் பண்ணிக்கங்க ஏதாவது சொல்லி என்று பணம் கறந்து விடுவார்கள். (நமக்கும் அழகாகலாம் என்ற ஆசையில் வேண்டாம் என்று சொல்ல மனம் வராது) இப்போதெல்லாம் ஆண்களிடமும் அழகுணர்ச்சி அதிகமாகி வருகிறது. அப்பாயின்மென்ட் வாங்கிக் கொண்டு கட்டிங் செய்து கொள்கிறார்கள்! பத்து ரூபாயில் முடிந்து கொண்டிருந்த பார்பர் ஷாப் விஷயங்கள் இன்று ஆயிரம் ரூபாய் வரை பர்ஸைப் பதம் பார்க்கின்றன. சரி இத்தனை செய்து அழகாக இருக்கிறோம் என்ற திருப்தி ஏற்படுகிறதா? கண்ணாடியில் பார்க்கும் போது முதலில் இருந்த முகமே தேவலாம் என்று தோன்றும் கொடுமையை என்னவென்று சொல்ல?

5
==

கவித! கவித!

தூக்கம் கலைக்கப்பட்ட
கும்பகர்ணன் போல
சலித்துக் கொள்கின்றன பெட்டியைத் திறந்ததும் பொம்மைகள்!
சிவந்த கண்களுடன்
வேண்டா வெறுப்பாய் வெளிவருகின்றன..
அம்மாவுக்கு தெரியாமல்-படியில்
சுட்டிக் குழந்தைகள் தங்களை ஒன்பது நாட்கள்
தொட்டு நகர்த்தி விளையாடும் -என்று தெரிந்ததும்
உற்சாகப் புன்னகையை அணிந்து கொண்டு
ஒயிலாய் சோம்பல் முறிக்கின்றன!

6
==

ஒரு ஓஷோ ஜோக்.

ஒரு ஆள் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

'இன்ஸ்பெக்டர் , நேற்று இரவு எங்க வீட்ல நுழைந்த அந்த திருடனை நான் பார்க்கணும்' என்றான்.

அதெல்லாம் முடியாதுப்பா 'கோர்ட்டுல வேணா பார்த்துக்க' என்றார் இன்ஸ்பெக்டர்.

'இல்லை சார், அவனைப் பார்த்து ஒண்ணே ஒண்ணு கேட்கணும்.அது எப்படி என் பொண்டாட்டியை எழுப்பாமல் உள்ளே நுழைந்தாய் என்று, நானும் இதை நாலு வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்கேன், முடியலை ' என்றான்.


முத்ரா


Friday, September 23, 2011

அணு அண்டம் அறிவியல் -48

அணு அண்டம் அறிவியல் -48 உங்களை வரவேற்கிறது

புத்திசாலித்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் என்ன வேறுபாடு? - புத்திசாலித்தனத்துக்கு எல்லை உண்டு -ஐன்ஸ்டீன்

ரீனா, மீனா இருவரும் சகோதரிகள். ரீனா ஒரு 150 மாடி கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் (Ground Floor ) வசிக்கிறாள். மீனா 150 ஆவது தளத்தில் வசிக்கிறாள்.சகோதரிகள் நிறைய நாட்களாக சந்தித்துக் கொள்ளவே இல்லை. சில வருடங்கள் கழித்து மீனா தன் அக்கா ரீனாவை சந்திக்க கீழே இறங்கி வருகிறாள்.ரீனாவைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சி. அவள் இன்னும் இளமையாக இருக்கிறாள். மீனாவுக்கோ நிறைய வயது ஏறி பாட்டி ஆகி இருக்கிறாள்!

ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அதன் அடிப்பகுதியில்சில துளைகளைப் போடவும். பிறகு துளைகளை மூடிக் கொண்டு அதை நீரால் நிரப்பவும். பிறகு பாட்டிலைத் தண்ணீருடன் கீழே போடவும். பாட்டில் கீழே விழுந்து கொண்டிருக்கும் போது துளைகளில் இருந்து தண்ணீர் வெளியேறாது. ஏன்?

நீங்கள் பயணிக்கும் லிஃப்டின் கம்பி அறுந்து லிஃப்ட் கீழே விழுந்து கொண்டிருக்கும் போது உள்ளே நீங்கள் எடையை உணர மாட்டீர்கள் . ஏன்?முடுக்கம் வெளியை வளைக்கிறது எனவே Equivalence தத்துவப்படி ஈர்ப்பும் வளைக்க வேண்டும் என்று போன அத்தியாயத்தில் பார்த்தோம். இன்னும் சரியாக சொல்வதென்றால் முடுக்கம் (அல்லது ஈர்ப்பு) காலவெளியை வளைக்கிறது. நவீன இயற்பியலில் காலம் , வெளி என்று தனித்தனியாக சொல்வது தவறு. அவை ஒரே விஷயத்தின் இரண்டு பரிமாணங்கள். ஒரு பலூனை எடுத்துக் கொண்டு அதை செங்குத்தாக அமுக்கும் போது அது கிடைமட்ட அச்சில் விரிவடைகிறதுஅல்லவா? அது போல காலப் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்பரிமாணத்தையும் வெளியில் ஏற்படும் மாற்றங்கள் காலத்தையும் பாதிக்கும்.சரி இப்போது முடுக்கம் எப்படி காலத்தை பாதிக்கும் என்று ஒரு எளிய ஆய்வைப் பார்க்கலாம்.


சீராக முடுக்கப்பட்ட(constant acceleration ), ஈர்ப்பு விசைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விண்கலத்தில் A என்பவர் தரைக்கு சில மீட்டர்கள் மேலேயும் B என்பவர் தரையிலும் இருப்பதாக
க் கொள்வோம். இருவரிடத்திலும் முழுவதும் ஒத்திசைந்த (Synchronized) ப்ளாஷ் வாட்ச்கள் இருக்கின்றன. அதாவது ஒரு நொடிக்கு ஒரு தடவை அவை ஒளிக்கற்றையை வெளிவிடும். வாட்சுகள் கிடைமட்ட அச்சை (x ) நோக்கி இருப்பதாகக் கொள்வோம். விண்கலம் மேலே தொடர்ந்து எழும்பிக்கொண்டு இருப்பதால் B வெளியிடும் ஒளித்துடிப்புகள் (FLASHES ) A யை அடைய சற்று நேரம் பிடிக்கும்.(Light takes time to travel ) எனவே A மேலிருந்து கீழே பார்க்கும் போது B யின் துடிப்புகள் காலத்தால் நீண்டு மெதுவாக வருவது போலத் தோன்றும். மேலும் A வெளியிடும் துடிப்புகள் B யை அடைவதற்குள் B விண்கலத்தின் முடுக்கத்தால் மேலே வந்து விடுகிறார். எனவே ஒளித்துடிப்புகள் B யை அடைய குறைந்த நேரமே எடுத்துக் கொள்ளும். B யானவர் A யின் துடிப்புகளை அண்ணாந்து பார்க்கும் போது அவை காலத்தால் சுருங்கி சீக்கிரம் வருவது போலத் தோன்றும். சரி..ஒளியானது ஒரு சிறந்த கடிகாரம் என்று நாம் அறிவோம். [ இப்போது காலத்தை வரையறை செய்ய ஒளியையே பயன்படுத்துகிறார்கள்.] எனவே நாம் A யின் கடிகாரம் வேகமாகவும் B யின் கடிகாரம் மெதுவாகவும் ஓடுகின்றன என்று சொல்லலாம். ஆனால் இருவரும் எடுத்துச் சென்ற கடிகாரங்கள் துல்லியமான எப்போதும் தவறாத கடிகாரங்கள். எனவே நாம் கீழே இருக்கும் B இற்கு காலமே மெதுவாக நகருகிறது என்று அனுமானிக்கலாம்.

EQUIVALENCE தத்துவத்தின் படி கீழே இருக்கும் B தான் ஒரு முடுக்கப்பட்ட விண்கலத்தில் இருக்கிறோமா அல்லது ஈர்ப்பின் பிடியில் இருக்கிறோமா என்று சொல்ல இயலாது. எனவே நாம் அந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பில் நிலையாக இருக்கிறது என்று(
ம்) சொல்ல முடியும். முடுக்கமும் ஈர்ப்பும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதால் பூமியின் பரப்பிலும் B என்பவருக்கு (A யுடன் ஒப்பிடும் போது) காலம் மெதுவாக செல்லும். அதாவது ஒரு ஈர்ப்புப் புலத்தின்அருகே காலம் மெதுவாகச் செல்லும் என்ற முடிவுக்கு ஐன்ஸ்டீன் வந்தார். தரையில் இருக்கும் ஒருவர் பூமியின் ஈர்ப்பால் அதிகம் பாதிக்கப்படுகிறார். ஆனால் பூமியின் பரப்பில் ஒரு கணிசமான உயரத்தில் இருக்கும் ஒருவரை ஈர்ப்பு குறைந்த அளவு பாதிப்பதால் அவருக்கு காலம் சீக்கிரமாக நகர்கிறது.

இளமையாக இருக்க வேண்டும் என்றால் கட்டிடத்தின் மேல் தளங்களில் வசிக்கவும் (மாடி ஏறி இறங்கி உடல் வலுப்படும்) என்று சொல்வார்கள். ஆனால் இயற்பியலின் படி இது தவறு. இளமையாக இருக்க வேண்டும் என்றால் கிரௌண்ட் Floor இல் தான் இருக்க வேண்டும். பூமி காலத்தை வளைத்து நம் நொடிகளை நீட்டிக்கும்! சூரியன் போன்ற கனமான ஒரு விண்மீனின் மேற்பரப்பில் நாம் வசிக்க முடியும் என்றால் காலம் இன்னும் மட்டுப்படும்.

மேலே சொன்ன ரீனா-மீனா கேஸ் முற்றிலும் மிகைப்படுத்தப்பட்டஒன்று. மீனா ஐநூறாவது மாடியில் வசித்தாலும் குறிப்பிடும் படியாக எந்த வித்தியாசமும் இருக்காது.(பூமியின் ஈர்ப்பு மிகவும் குறைவு என்பதால்) ஆனால் கண்டிப்பாக ரீனா மீனாவை விட சில நானோ செகண்டுகள் இளமையாக இருப்பாள்.

ஐன்ஸ்டீனின் இந்த கண்டுபிடிப்பு காலப்பயணத்தை (குறிப்பாக எதிர்காலப்பயணம்) சாத்தியம் ஆக்கியது. எதிர்காலத்துக்கு பயணிக்க ஆசை இருந்தால் வெறுமனே ஒரு கனமான விண்மீனின் மேற்பரப்பில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டியது. இரண்டு நாள் இருந்துவிட்டுத் திரும்பி வந்தால் பூமியில் ஒரு இருபது வருடங்கள் ஓடி இருக்கலாம்.

ஐன்ஸ்டீனிடம் 'உங்கள் சார்பியலை புரியும் படி எளிமைப்படுத்தி சொல்லுங்கள்' என்று கேட்கும் போது அவர் ' நீங்கள் உங்கள் காதலியுடன் இருக்கும் போது காலம் சீக்கிரம் நகர்ந்து விடுகிறது ;ஒரு சூடான அடுப்பின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது காலம் மெதுவாக நகர்கிறது. அது மாதிரி' என்றார். ஆனால் காதல் என்பதே ஈர்ப்பு தானே? ஈர்ப்பு காலத்தை மெதுவாக நகர்த்தும் என்றால் காதலியுடன் இருக்கும் போது தான் உங்களுக்கு காலம் மெதுவாக நகர வேண்டும்? சரி! இது ஒரு உதாரணம் தான். இந்த உதாரணம் தவறு என்று ஐன்ஸ்டீனுக்கு தெரியும். ஆனால் Examples are still good ..இங்கே வருவது பிரபஞ்ச காலம் (universal time ) அல்ல.. மனோவியல் காலம் (Psychological time) காலத்திற்கு நீங்கள் காதலியுடன் இருக்கிறீர்களா இல்லை அடுப்பின் மீது உட்கார்ந்திருக்கிறீர்களா என்பதில் கவலை ஏதும் இல்லை.

பொது சார்பியல் கொள்கை 'கரும்துளை' (black hole ) களுக்கான தேடுதலுக்கு வித்திட்டது. ஈர்ப்பு வெளியையும் காலத்தையும் வளைக்கும் என்றால் மிக மிகஅதிக ஈர்ப்பு(அப்படி ஒன்று பிரபஞ்சத்தில் இருந்தால்) காலவெளியை பயங்கரமாக வளைக்கும் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட ஈர்ப்பின் ஆதிக்கத்தில் காலம் கிட்டத்தட்ட நின்று போய் விடும். கடவுள் கூட ஒரு வகையில் கருந்துளை தான்.(காண முடியாது; உள்ளே என்ன இருக்கும் என்று தெரியாது;அதிக ஆற்றல் இருக்கும்; எல்லாவற்றையும் தனக்குள்ளே கிரகித்துக்கொள்ளும் என்ற வரையறைகள் இரண்டுக்கும் பொருந்தும்) இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.'நிறை' மட்டும் கால வெளியை வளைப்பதில்லை. நிறையும் ஆற்றலும் ஒன்று தான்(MASS ENERGY Equivalence) என்பதால் ஆற்றல் கூட காலவெளியை வளைக்கும்.அதிகமான ஆற்றல் இருந்தாலும் காலம் கிட்டத்தட்ட நின்று போகலாம். கடவுளை அதீத ஆற்றல் உள்ளவர் என்கிறோம். எனவே அவரும் காலத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறார் போலும்.

இப்போது சில விளக்கங்களைப் பார்க்கலாம்:ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கைப்படி ஒருவர் காலத்தில் மெதுவாக நகர விரும்பினால் அவர் வெளியில் வேகமாக நகர வேண்டும். இதே வாக்கியத்தை கணித ரீதியில் சொன்னால் :- (பார்க்க படம்) அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர் நிறைய வெளியைக் கடக்க வேண்டும். சரி. இந்த வேலையை தான் ஈர்ப்பு செய்கிறது. மிக அதிக இடத்தைஅடைத்துக் கொள்ளும் ஒரு காகிதத்தை நன்றாக மடித்து வைத்தால் அது மிகக் குறைந்த இடத்தையே அடைத்துக் கொள்கிறது. அது போல ஈர்ப்பு மிக அதிக வெளியை வளைத்து தன்வசம் சுருக்குகிறது. ஈர்ப்பின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு அது மிக அதிக வெளி போல
தோற்றமளிக்கிறது. எனவே சிறப்பு சார்பியலின்படி காலத்தின் பரிமாணம் அவருக்குக் குறைகிறது.

இரண்டாவதாக நாம் சில அத்தியாயங்களுக்கு முன்னர் பார்த்த TWIN PARADOX . (இரட்டையர் புதிர்) ரீனாவும் மீனாவும் ஒரே வயதுடைய இரட்டையர்கள். ரீனா பூமியில் இருக்க மீனா பக்கத்தில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றுக்கு ஒளியின் வேகத்தில் 80 % வேகத்தில் சென்று திரும்புகிறாள். திரும்பி வரும்போது ரீனாவுக்கு வயது ஆகி இருக்க மீனா இளமையாக இருக்கிறாள். ஆனால் சார்பியலின் படி நாம் மீனா நிலையாக இருக்க ரீனா பயணம் செய்கிறாள் என்றும் சொல்ல முடியும்.(Lack of absolute space ) (பஸ்ஸில் மரங்கள் பின்னால் நகர்வது போல) அப்படிப் பார்த்தால் திரும்பி வரும் போது ரீனா மீனாவை விட இளமையாக இருக்க வேண்டும். எனவே இது புதிர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இது புதிர் அல்ல. Relativiy is Self-consistent! இந்த புதிருக்கான விடையை நாம் காலவெளி வரைபடங்களை(ST DIAGRAMS) வரைந்து விளக்கினோம். இதற்கான விடையை பொது சார்பியல் கொள்கைப்படியும் விளக்க முடியும். அதாவது:

ஒரு வாதத்தின் படி பூமியில் இருக்கும் ரீனாவுக்கு பூமியின் ஈர்ப்பால் காலம் மெதுவாக நகர வேண்டும். ஈர்ப்புக்கு அப்பாற்பட்டு பயணிக்கும் மீனாவுக்கு காலம் வேகமாக செல்ல வேண்டும். ஆனால் வெயிட். ஈர்ப்பும் முடுக்கமும் ஒரே விளைவை ஏற்படுத்தும் அல்லவா? மீனா விண்மீனை அடைந்ததும் தன் 0 .8 c என்ற அபார வேகத்தில் இருந்து விண்கலத்தை பூஜ்ஜிய வேகத்துக்கு கொண்டு வருகிறாள்.இந்த அபாரமான முடுக்கத்தின் போது (DECELERATION ) அவளுக்கு காலம் மிகமிக மெதுவாக செல்கிறது.அதே போல பூமிக்குத் திரும்பி வருவதற்கு விண்கலத்தை மீண்டும் 0 .8c என்ற வேகத்துக்கு அவள் முடுக்க வேண்டி உள்ளது.அப்போது அந்த முடுக்கம் ஒரு மிக அதிக ஈர்ப்பு போல செயல்பட்டு மீண்டும் காலத்தை மெதுவாக்குகிறது. எனவே முடுக்கத்தின் போது மீனாவுக்கு நொடிகள் மட்டுமே நகர்ந்திருக்க அங்கே ரீனாவுக்கு வாரங்கள் நகர்கின்றன. (பூமியின் ஈர்ப்பு அந்த முடுக்கத்துடன் ஒப்பிடும் போது ரொம்ப ஜுஜுபி) எனவே மீனா திரும்பி வரும்போது ரீனாவை விட இளமையாக இருக்கிறாள். எனவே இளமையாக இருக்க

(1 ) சதா பயணித்துக் கொண்டே இருங்கள் ; அல்லது
(2 ) Ground Floor -இல் வீடு வாங்குங்கள்


இனிவரும் அத்தியாயங்களில் கீழ்க்கண்ட கேள்விகளை அலசுவோம்:

1. ஆப்பிள் மரத்தில் இருந்து கழன்று கொண்டதும் பூமி தான் மேலே வந்து அதை பிடித்துக் கொள்கிறதா?

2 . FREEFALL (சுதந்திர வீழ்ச்சி) என்றால் என்ன?

3. SPACE STATION இல் இருப்பவர்கள் ஏன் தங்கள் எடையை உணர்வதில்லை?

சமுத்ரா

Wednesday, September 21, 2011

கலைடாஸ்கோப்- 38

லைடாஸ்கோப்- 38 உங்களை வரவேற்கிறது

1
==

http://samudrasukhi.blogspot.com , http://samudrasukhi.com ஆக மாறியுள்ளது. யூ.ஆர்.எல் தான் சுருங்கி இருக்கிறதே தவிர கருத்துக்கள் சுருங்காது என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒரு வருத்தம் http://samudrasukhi.com ஆபீசில் திறப்பதில்லை. Potentially Damaging content (?) என்று BLOCK ஆகி விடுகிறது. அப்படியிருந்தும் ஆபீசில் இருந்தே லைடாஸ்கோப் எழுதுகிறேன். (ஹி,ஹி இது சீக்ரெட்!) சமுத்ரசுகி என்பது ஏதோ தீவிரவாதி அல்லது போலி சாமியார் பெயர் போல இருக்கிறது போலிருக்கிறது . என்ன தான் சொன்னாலும் இந்தப் பெயரை மாற்றும் ஐடியா இல்லை.

உங்களிடம் ஒரு கிரெடிட் கார்டும், வருடம் பத்து டாலர் செலவு செய்யும் தாராள மனமும் இருந்தால் நீங்களும் .com டொமைனுக்கு மாறமுடியும். கல்யாணம் ஆகி இருந்தால் எதற்கும் மனைவியை ஒரு வார்த்தை கேட்டு விட்டு அப்புறம் மாறுங்கள். 'இவரு பெரிய எழுத்தாளரு, வெப் சைட்டுக்கு காசு போடறாரு, அந்த காசு இருந்தால் ஒரு மாசம் சிலிண்டர் செலவுக்கு ஆகி இருக்கும் ' என்ற புகழாரங்களை பின்னர் சூடிக்கொள்ள வேண்டி வரலாம்.

2
==

ஆங்கிலம் Un -phonetic பாஷை என்று அழைக்கப்படுகிறது. உலகில் பெரும்பாலான மொழிகள் எப்படி எழுதப்படுகின்றனவோ அப்படியே பேசப்படுகின்றன. ஆங்கிலம் இதற்கு விதி விலக்கு. உதாரணம் தமிழில் -ம்-மா அம்மா என்று வருகிறது. ஆங்கிலத்தில் மம்மியை MAMMI என்று எழுதாமல் MUMMY (மும்மை) என்று எழுதுகிறார்கள்.நீங்கள் இதைக் கவனித்திருக்கக் கூடும். Transliteration என்று எழுதினால் 'ற்றன்ச்ளிடேரடின் ' என்று வந்து பயமுறுத்தும். Invitation என்று எழுதினால் இன்விடடின் என்று வரும், நாம் INVITESHAN என்று எழுத வேண்டி இருக்கும். ஆங்கிலத்தின் இந்த unphonetic (எதிர்-சத்தம்) தன்மை அதை கற்பதற்கு சற்று கடினமான மொழியாக ஆக்குகிறது என்கிறார்கள். இதற்கு நேர் மாறாக முற்றிலும் PHONETIC (எழுதுவது மாதிரியே
அச்சு அசலாகப் படிப்பது) என்று நம் சமஸ்கிருதத்தை சொல்லலாம்.

சைனீஸ் பாஷை NOT EVEN UNPHONETIC ...BEYOND PHONETIC !.. 'எனக்குத் தாகமாக இருக்கிறது' என்பதை --க்-கு-த் தா--மா- என்று எழுதாமல் ஒரு மனிதனை வரைந்து பக்கத்தில் ஒரு காலி தண்ணீர் குடுவையை வரைவது! 'அவன் தண்ணீர் குடித்தான்' என்பதை --ன் -ண்-ணீ-ர் என்று எழுதாமல் அவனை வரைந்து தண்ணீர் குடுவையை விட்டு அவன் நகர்ந்து செல்வது போல
வரைவது. (நல்ல வேளை தமிழில் இப்படி இல்லை!) சண்டை என்பதைக் குறிக்க ஒரு மரத்தின் கீழ் இரண்டு பெண்களை வரைகிறார்கள். மரத்துக்கு பதில் தண்ணீர் பைப் போட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும். சைனீஸ் பாஷையை இப்போது அப்டேட் செய்தால் இப்படி வரைவார்களோ.

மௌனம்/ஊமை ( தலைப்பாகை கட்டிக் கொண்டு கண்ணாடி போட்ட தாடிக்காரர் )
அடிமை (ஒரு கம்
ப்யூட்டர் ;அதன் முன் ஒரு மனிதன் உட்கார்ந்திருத்தல்)
அதிசயம் (ஒரு குண்டு அம்மாவும் சொட்டைத்தலை ஆளும் கை குலுக்குதல்)


தமிழ் கூட முழுவதும் Phonetic இல்லை. Kavanam என்று எழுதி விட்டு gavanam என்று படிக்கிறோம். அஃது என்று எழுதி விட்டு அஹ்து என்று படிக்கிறோம். அவனுக்கு கொடு என்பதில் உள்ள 'கு' குழந்தை என்பதில் உள்ள 'கு' வைப் போல முழுவதுமாக ஒலிப்பதில்லை. இன்னும் எனக்கு தமிழில் ஏன் இரண்டு '' ('' '') இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் ஆங்கிலமோ, சைனீசோ, தமிழோ அது ஒருவருக்கு தாய்மொழி ஆகி விட்டால் அதைப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் எந்த சிரமமும் இருப்பதில்லை என்பதும் உண்மை தான்.

3
==

ஆங்கிலத்தில் உள்ள ஒரு பழமொழி PACKING IS THE FIRST SALESMAN FOR A PRODUCT . ஒரு சாதாரண குங்குமச் சிமிழைப் பரிசாகக் கொடுத்தாலும் அதை வண்ண வண்ண மின்னும் GIFT PACK செய்து மேலே பேர் எல்லாம் எழுதிக் கொடுக்கிறோமே அது தான். மனிதன் இரண்டு இடங்களில் ஏமாறுகிறான்அல்லது ஏமாற்றப்படுகிறான். ஒன்று விளம்பரத்தைப் பார்த்து. (இந்த க்ரீமைப் பூசிக் கொண்டால் நம் பின்னாலும் பெண்கள் ஓடி வருவார்களோ? )இன்னொன்று அதன் PACKING ஐப் பார்த்து.பல வண்ணங்களில் பல வடிவங்களில் பொருட்கள் நம்மை சுண்டி இழுக்கின்றன. கவர் சரியாக இல்லை என்றால் நாம் பல பொருட்களை வாங்குவதே இல்லை! 75 % சோப்புகளில்/கிரீம்களில் ஏதோ ஒரு முன்னாள்/இந்நாள் உலக அழகி சிரித்துக் கொண்டு இருக்கிறாள். காம்ப்ளான் ஹார்லிக்ஸ் போன்ற பேக்குகளில் சிறுவர்கள் உயரமாக எதையோ எட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.ஷாம்பூக்களில் எல்லாப் பெண்களுக்கும் முழங்கால் வரை கூந்தல் நீள்கிறது . அந்தக் காலத்தில் எல்லாம் சோப்போ, டூத்பேஸ்டோ,ஹார்லிக்சோ எதுவாக இருந்தாலும் கவரில் அதன் பெயர் மட்டுமே கொட்டை எழுத்தில் எழுதி இருக்கும் . இப்போது அமிர்தாஞ்சனின் PACKING கூட கலர்புல் ஆக மாறி விட்டது.இடமே இல்லாமல் குட்டிக் குட்டி எழுத்துகளில் என்ன என்னவோ எழுதி இருக்கிறது!நம் எல்லாருக்கும் பரிச்சயமான கொக்க -கோலா வின் PACKING காலத்துக்கு தகுந்தவாறு எப்படி மாறி வந்திருக்கிறது பாருங்கள்.
4
==

'ஒவ்வொரு நொடியும்
யாரோ ஒரு நர்ஸ்
யாரோ ஒரு நோயாளிக்கு
பல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறாள்'

உலகத்தில் எத்தனையோ 'தினங்கள்' இருக்கின்றன. அன்னையர் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம், உழைப்பாளிகள் தினம் என்றெல்லாம். ஆனால் 'நர்ஸ் டே' என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள் அது. முதலில் நர்ஸ் படிப்பை படிக்க முடிவெடுத்த பெண்களுக்கு ஒரு சலாம் போட வேண்டும். விரல் அழுக்குபடாத சாப்ட்வேர் துறைக்கு போகலாம்; பேங்கில் வேலை செய்து விட்டு ஆறு மணிக்கு டான் என்று வீடு வந்து சேரலாம்; டீச்சராகி வருடம் முழுவதும் விடுமுறைகளை அனுபவிக்கலாம் ; அமெரிக்க மாப்பிளையைப் பிடித்து கல்யாணம் ஆனதும் அங்கே போய் செட்டில் ஆகிவிடலாம் என்ற இத்தனை வாய்ப்புகளையும் உதறி விட்டு நோயாளிகளுக்கு படுக்கை மாற்றிப் போடும், உடம்பு துடைத்து விடும்
வேலையைத் தேர்ந்தெடுத்ததற்காக இன்னொரு சலாம். நம் வீட்டில் ஒரே ஒரு நோயாளி இருந்தாலே நாம் ஒவ்வொரு சமயத்தில் சலித்துக் கொள்கிறோம். ஆனால் நர்சுகள் நோயாளிகளுடனேயே வாழ்கிறார்கள்.

ஸ்டெதஸ்கோப் வைத்துப் பார்த்து விட்டு மருந்து எழுதித் தருவதோடு டாக்டர்களின் வேலை முடிந்து விடுகிறது. அதன் பிறகு நரம்பு கண்டுபிடித்து ஊசி போடுவது, பி.பி பார்ப்பது, பல்ஸ் பார்ப்பது ,வேளா வேளைக்கு மாத்திரை தருவது, 'என்ன சரஸ்வதி, இன்னும் ரெண்டு நாள்ல எழுந்து நடப்பீங்க பாருங்க' என்று இன்சொல் கூறி ஊக்குவிப்பது, தாத்தா உங்க அழகின் ரகசியம் என்ன? என்று ஜோக் அடிப்பது எல்லாமே நர்சுகள் தான். ஆண்கள் நர்சுகளாக வரமுடியாமல் போனதற்கும் நர்சுகளை 'சிஸ்டர்' என்றுஅழைப்பதற்கும் காரணம் தெளிவாகவே இருக்கிறது. எனக்கு என்னவோ 'மதர்' என்று கூட அழைக்கலாம் என்று தோன்றுகிறது.

மனிதனின் கர்வம் அழிந்து விடும் இடங்களில் ஆஸ்பத்திரியும் ஒன்று. 'என் பையனா, அவனுக்கு ஆஸ்பிடல்-னாலே அலர்ஜி' என்று நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளாதீர்கள். வாழ்வின் மிக அழகான தருணங்களை அவர்கள் ஆஸ்பத்திரி போகவில்லை என்றால் இழந்து விடுவார்கள். உலகத்தையே வெல்வேன் என்று கிளம்பியவர்கள் கால் முறிந்து கட்டிலில் படுத்திருப்பது, ஆபரேஷன் தியேட்டர் வாசலில் காத்திருக்கும் கலவர முகங்கள், உறக்கம் துறந்து கணவன் அருகில் விழித்திருக்கும் மனைவி, நோயாளிக்கு மவுத் வாஷ் செய்து பவுடர் போட்டு விடும் நர்சுகள், கூடையில் உணவு எடுத்துப் போகும் பெண்கள்,கடவுளின் இடத்தைத் தாங்கள் எடுத்துக்கொண்டு விட்ட கர்வத்துடன் வலம் வரும் டாக்டர்கள், மூச்சு மட்டுமே ஒட்டி இருக்கும் மூட்டை போல படுக்கையில் நகரும் நோயாளிகள் என்று நிறைய அனுபவங்களை ஆஸ்பத்திரிகள் உங்களுக்கு வழங்கும்.

இரண்டு விஷயங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும். நீங்கள் அட்மிட் ஆகி இருக்கும் ஒரு நோயாளியுடன் இருந்தால் உங்களை உற்சாகமாகக் காட்டிக் கொள்ள வேண்டும். 'இப்படி ஆயிருச்சே' 'எல்லாம் போச்சே' என்று புலம்பிக் கொண்டிருக்காமல் காலையில் குளித்து விட்டு , தலைசீவி, நல்ல உடைகள் அணிந்து கொண்டு இன்முகத்துடன் நோயாளிக்கு ஒரு POSITIVE ENVIRONMENT ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

சமூக சேவையில் உங்களுக்கு நாட்டம் இருந்தால் லீவு நாட்களில் நண்பர்கள் நான்கைந்து பேர் பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள். உங்களால் முடிந்த அன்பளிப்பை அங்கு அட்மிட் ஆகி இருக்கும் நோயாளிகளுக்கு கொடுத்து விட்டு 'சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்' என்று இன்முகத்துடன் சொல்லி வாருங்கள் . இதை விட சிறந்த ஒரு சமூக சேவை இல்லை! இறைவன் அன்பு செலுத்த நமக்குக் கொடுத்த தருணங்களை மங்காத்தா பார்த்துக் கொண்டும் இன்னும் எப்படி நிறைய சம்பாதிப்பது என்று யோசித்துக் கொண்டும் வீணடிக்காதீர்கள்.

அந்த
ஆஸ்பத்திரியில்
எல்லாவற்றுக்கும் சக்கரங்கள் இருந்தன-
படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், ஸ்ரெட்சர் ,நாற்காலிகள்
ஸ்க்ரீன்கள் என்று எல்லாவற்றுக்கும்!
சற்றே உற்றுப் பார்த்ததில்
நர்சுகளின் கால்களிலும் சூட்சுமமாக
சக்கரங்கள் தெரிந்தன!

5
==
ரவி உதயனின் ஒரு கவிதை

இன்றைய நாளிதழ் செய்தியில்
நேற்று இறந்து இருந்தான்

இன்று அதிகாலை வரை
உயிரோடு இருந்தவன்
வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து
சிறிது சிறிதாக
இறக்க தொடங்கியிருந்தான்

அன்றைய நாளிதழ் செய்திகளை
அன்றைக்கே வாசிக்க
இயலாதவர்களுக்காக
இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

பின்னொரு நாளில்
அவர்கள் அச்செய்தியை
வாசிக்க நேரும் தருணம்
மீண்டும் அவன்
இறக்க வேண்டியிருந்ததது.

6
==
ஓஷோ ஜோக்.

மனைவி : என்னங்க ,இன்னிக்கு எங்க அம்மா நடந்து வந்துட்டு இருந்தப்ப மேலே இருந்து நம்ம வீட்டு கடிகாரம் விழுந்து விட்டது. நல்ல வேளை அம்மா கொஞ்சம் முன்னாடி போயிட்டாங்க. கடிகாரம் கொஞ்சம் முன்னாடி விழுந்திருந்தா அவங்க உயிரே போயிருக்கும்.

கணவன்: எனக்குத் தெரியும். அந்த பாழாப்போன கடிகாரம் எப்பவும் லேட்டு!

ஒருவன்: எனக்கு சமையல் செய்து செய்து, துணி துவைத்து துவைத்து, பாத்திரம் கழுவி கழுவி ஒரே சலிப்பாயிருச்சுப்பா. அதனாலே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

இன்னொருவன்: அப்படியா, நீ சொன்ன அதே காரணங்களுக்காக நான் போன மாசம் டைவர்ஸ் வாங்கிக்கிட்டேன்.முத்ரா