இந்த வலையில் தேடவும்

Saturday, October 18, 2014

கலைடாஸ்கோப் -110

கலைடாஸ்கோப் -110 உங்களை வரவேற்கிறது


 உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிரண்டும் போவதென்றால்
கண்ணிரண்டும் நானிழப்பேன் அப்போதே- நான் அப்போதே
உந்தன் முகம்  பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே -இமை மூடாதே!#

-திரைப்படப் பாடல்




மிக நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும். எதிலுமே ஒரு இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது என்பார்கள் .அந்த இடைவெளி மிக நீண்டதாக இருந்து, நம்மை field இல் இருந்தே வெளியேற்றி விடாமல் இருந்தால் சரி. (எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு!) யாரோ ஒரு blogger நீண்ட நாள் எழுதாததால் பிரபஞ்சத்தில் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது?$ நாம் எழுதுவதால் ஏதோ ஒரு விதத்தில் பிரபஞ்சத்தின் entropy வேண்டுமானால் அதிகரிக்கிறது.பிரபஞ்சத்தின் heat death ஐ சில மைக்ரோ செகண்டுகள் முன்னமேயே நிகழ வைக்கிறோம்.

வாழ்க்கை அதன் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது.

In three words I can sum up everything I've learned about life: it goes on.
என்று Robert Frost சொல்வது போல!

ஜெயலலிதா ஜெயிலுக்குள் இருந்தாலும் மழை வருகிறது; விடுதலை ஆனாலும் மழை வருகிறது.

[[எதையும் இரண்டு வகையாகப் பிரிக்கும் பழக்கம் நம்மை விட்டுப் போகாது போலிருக்கிறது :)))]]

இயற்கை ஸ்பெஷல் ஆன ஆட்களைப் படைக்கிறது என்பது ஒரு கண்ணோட்டம். இயற்கையின் பார்வையில் யாருமே ஸ்பெஷல் இல்லை என்பது இன்னொரு கண்ணோட்டம். நமக்கு வேண்டுமானால் லியனார்டோ டாவின்சி ஸ்பெஷலாக இருக்கலாம்; நியூட்டன் ஸ்பெஷலாக இருக்கலாம்; காந்தி ஸ்பெஷலாக இருக்கலாம். ஆனால் இயற்கைக்கு X இருந்தால் என்ன Y இருந்தால் என்ன?

Of course , எடிசன் இல்லாத உலகம், ஷேக்ஸ்பியர் இல்லாத உலகம், காளிதாசன் இல்லாத உலகம்  ஏதோ ஒன்றை இழந்திருக்கும்; இயற்கையின் முன்பு, ஷேக்ஸ்பியரும் ஒன்று தான்; செல்லதுரையும் ஒன்று தான். மாண்டலின் ஸ்ரீநிவாஸ் போய் விட்டார். Liver failure என்கிறார்கள். சிகரெட், குடிப்பழக்கம் எதுவும் இல்லையாம். எப்படி லிவரை மாற்றும் அளவுக்கு முற்றியது என்று தெரியவில்லை. சரி, அந்த லிவருக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடலில் இருக்கிறோம் என்பது தெரியுமா?

பிரபலம் என்பது மனித மயமாக்கப்பட்ட ஒரு கருத்து. இயற்கை, தன் இனப்பெருக்க நோக்கத்தை நிறைவேற்ற வந்த ஒரு bio machine என்ற அளவில் தான் மனிதனை நடத்துகிறது. in fact , பிரபலமாக இருப்பது இயற்கைக்கு கொஞ்சம் பிடிக்காத விஷயம். ஏனென்றால்,  பெரும்பாலான பிரபலங்களுக்கு மணவாழ்க்கை@ சுமுகமாக இருப்பதில்லை. அது இயற்கையின் ஆதார நோக்கமான இனப்பெருக்கத்துக்கு அபாயம்! உண்மையில், ஒரு சாதாரணனை, மில் வேலைக்குப் போய் விட்டு சாயந்திரம் திரும்புகையில் அண்ணாச்சி கடையில் மிக்ஸர் நூறு கிராம், மாகி நூடுல்ஸ், கடலை பர்பி, ரின் சோப் வாங்கிச் செல்லும் குப்புசாமி , கந்தசாமிகளை இயற்கை விரும்புகிறது.


இன்னொரு விஷயம், நமக்கு,நம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு மாபெரும் கஷ்டம், வேதனை , அநீதி இழைக்கப்படும் போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அதற்கு respond செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். 'எங்கள் தானைத் தலைவியை , தமிழினச் சுடரைக்  கைது செய்து விட்டாயா? சுனாமி பொங்கட்டும் என்று போஸ்டர்கள் ஒட்டுகிறோம். பினாமி சொத்துக்கள் வாங்கியவர்களுக்கு ஆதரவாக  எல்லாம் சுனாமி வரும் என்றால் தமிழ்நாட்டில் தினம் தினம் வர வேண்டும்! நடிகர் விவேக் ஒரு சினிமாவில் சொல்வது போல 'கோவலனுக்கு அநீதி என்றால் அது கண்ணகியின் தனிப்பட்ட விஷயம். அதற்கு public property யான மதுரையை எரிப்பது என்ன நியாயம்? தமிழ் இலக்கியங்களிலேயே p .property துச்சமாக மதிக்கப்படும் போது , இன்றைய அரசியல் அடிப்பொடிகள் பஸ்ஸை கொளுத்துவது ஆச்சரியம் இல்லை.

பதிவிரதை ஒருத்தி பெய் என்று சொன்னால் மழை பெய்யும், வாளி கிணற்றில் பாதியில் நிற்கும், பச்சை மரம் பற்றி எரியும் .....மீண்டும் இது ஒரு personal matter , அவள் கணவன் மீது அவளுக்கு அளவற்ற அன்பு, மரியாதை, dedication என்றால் இருக்கட்டும். well and good.. அதற்காக இயற்கை ஏன் அதன் விதிகளை மாற்ற வேண்டும்? இயற்கை தன் ஈர்ப்பு விசையை ஏன் தற்காலிகமாக இழக்க வேண்டும்?gravity shield என்பதைப் பற்றி இன்னும் விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஈரமான மரம் எப்படி பற்றிக் கொள்ளும்? அடிப்படை அறிவியல் என்ன என்றால் தண்ணீரை எரிக்க முடியாது. ஈர விறகை எரிக்கும் போது தண்ணீர்ப் பசை கொதித்து ஆவியாகி அந்தப் புகை அங்கேயே சுற்றிச் சூழ்ந்து கொண்டு விறகு எரிவதை மேலும் கடினமாக்குகிறது. யாரோ ஒருத்தி தன் கணவனை நேசிக்கிறாள் என்பதற்காக பிரபஞ்சத்தின் ஆதார விதிகளை குவாண்டம் லெவலில் இயற்கை அல்லது இறைத்தன்மை மாற்றி விடுமா? Stupid

சரி, அவள் அப்படி அந்த லெவலில் நேசிக்கும் கணவன் உண்மையிலேயே worth தானா , அவளுக்கு உண்மையாக இருக்கிறானா என்றால் இல்லை. பதிவிரதைகளின் கணவன்கள் , (ராமன் தவிர) பெரும்பாலும் பொம்பளை விஷயத்தில் அயோக்கியன்கள். பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான தாரையின் கணவன் வாலி தம்பி பெண்டாட்டியை தீ/சீண்டியவன். மண்டோதரியின் கணவன் ராவணன் எப்படி என்று ஊருக்கே தெரியும். திரௌபதி புருஷன் அர்ஜுனன் கொஞ்சம் சபல புத்தி என்று தெரிகிறது. திக் விஜயம் போகிறேன் என்று அதை கிக்-விஜயம் ஆக்கி விடுவான்; ஏதோ ஒன்றை கரெட்க் பண்ணி கொண்டு வந்து விடுவான். so , கணவன் எப்படிப்பட்ட பொறுக்கியாக இருந்தாலும் மனைவி அவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.அவள் பார்த்தால் பச்சை மரம் எரிய வேண்டும்...உம் என்றால் உச்சி மீது வானிடிந்து விழ வேண்டும்.

***********





@இந்த மணமுறிவு அல்லது மனமுறிவு என்பதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கலாம். சில பேரை அவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும் நமக்குப் பிடிப்பதில்லை.  We just don't like their presence. அவருடைய இருப்பு நம்மை உறுத்துகிறது . சில பேருடன் நாம் எவ்வளவு முயன்றாலும் ஒத்துப் போக முடிவதில்லை. உதாரணம் ஆபீஸில் மேனேஜர்.
மேனேஜர் என்றால் வேறு மாற்றிக் கொண்டு விடலாம். பாரதி ' உன்னை நம்பியோ நான் தமிழ் ஓதினேன் ' என்று சொன்னது போல உன்னை நம்பியா நான் பி.இ , எம்.இ  படித்தேன், பரீட்சைக்கு முதல் நாள் ராத்திரி பத்து டீ குடித்து விட்டு படித்தேன் ? என்று உதறி விட்டு வந்து விடலாம். (இப்போது அப்படி வெடுக்கென்று உதறி விட்டு வர ஐ .டி .கம்பெனிகள் விடுவதில்லை. ப்ராஜெக்ட்டில் இருந்தால் அதிக பட்சம் மூன்று மாதம் இருக்க வேண்டும் என்று கழுத்தறுப்பார்கள். (சாவு கூட நமக்கு நோட்டீஸ் பீரிட் கொடுக்காமல் உடனே வந்து விடுகிறது!) Asset release, அந்த release  no due அந்த டியூ இந்த டியூ என்று வெளியே வருவதற்குள் படுத்தி விடுவார்கள். PF ஐ மாற்றும் தலைவலி வேறு!)

இரண்டு மனிதர்களுக்கிடையில் இந்த unbridgeable gap இருக்கவே செய்கிறது.
கவுன்சிலிங் அது இது என்று இந்த இடைவெளியை தற்காலிகமாக அடைக் க்கலாமே தவிர , அகற்ற முடியாது. அந்த இருவருக்குள் இந்த U இடைவெளி அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தால் விலகி விடுவதே சாலச் சிறந்தது.
அது நண்பர்களாக இருக்கட்டும், மேனேஜராக இருக்கட்டும், காதலியாக இருக்கட்டும்,, மனைவியாக இருக்கட்டும்.....You are not just my cup of tea!


*****************

When you start looking for something you tend to find it

இரண்டு   டி .வி. நிகழ்ச்சிகள் கவர்கின்றன.

ஒன்று விஜய் டி .வி யின் Connection !

உதாரணம் கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



இது ஒரு திரைப்படம். என்ன திரைப்படம் என்று சொல்லுங்கள்.

இப்படி இரண்டு விஷயங்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி குறிப்புகளைக் கண்டுபிடிக்கும் போட்டி.பொழுது போக்கு + மூளைக்கு வேலை. மான் மயில் நிகழ்ச்சியை விட பல மடங்கு பரவாயில்லை.

சரி.

 பிரபஞ்சத்தில் எல்லாமே தொடர்புடையவை என்று ஒரு தியரி இருக்கிறது.
 தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும் என்ற தியரி. இதை butterfly effect$ என்கிறார்கள். உதாரணமாக, நாம் blog எழுதினால் இருக்கும் பிரபஞ்சத்திற்கும் blog எழுதாவிட்டால் இருக்கும் பிரபஞ்சத்திற்கும் சில மைன்யூட் வேறுபாடுகள் இருக்கலாம். சில சமயத்தில் இந்த மிக மிகச் சிறிய வேறுபாடுகள் காலம் என்ற பயங்கர பூதத்தின் வாயால் ஊதப்பட்டு பெரிதாகி பிரம்மாண்டமாகி விளைவுகளை ஏற்படுத்தலாம்.இதைப் பற்றி இன்னொரு முறை பேசலாம். இப்போது இதற்கு நேர் மாறான ஒரு தியரி பற்றி சிந்திக்கலாம்.


Post hoc ergo propter hoc

லோக்கல் பாஷையில் சொல்வதென்றால் எல்லாமே
'காக்கை உட்கார பனம்பழம் விழுந்த' கேஸ் தான் என்கிறது.
சகுனம் என்று நாம் சொல்வது இந்த post hoc ergo தான். பூனை வந்தால் ஆகாது, ஒற்றை பிராமணன் வந்தால் ஆகாது, குடத்துடன் சுமங்கலிப் பெண் வந்தால் நல்லது இவை எல்லாம்.



மேலே உள்ள படத்தைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது? ஒரு மனித முகம் தோன்றுகிறது இல்லையா? ஆனால் அங்கே இருப்பதெல்லாம் மூன்று வட்டங்களும் ஒரு கோடும் மட்டுமே. வட்டங்களுக்கும், மனித முகத்துக்கும் தொடர்பை ஏற்படுத்தியது எது??

ரோட்டில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து  'டேய் மடையா' என்கிறார். உங்கள் ரத்தம் கொதிக்கிறது. உண்மையில் அவர் சொன்னது வெறும் ஒலிக்குறிப்புகள் மட்டுமே. அதற்கும் நீங்கள் மடையனாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?

ஸோ எல்லாமே தற்செயல் தான். எல்லாமே accident தான். எல்லாருமே தனித் தனித் தீவுகள் தான்! தொடர்பு என்பது மாயை!

பாரிடோலியா என்று ஒன்று சொல்கிறார்கள். (Pareidolia )....பழைய லாட்ஜ் ஒன்றில் ஒருநாள் தங்க நேர்கிறது. அங்கு ஆசுவாசமாக டாய்லெட்டில் உட்கார்ந்து கொண்டு unload செய்து கொண்டே அந்த லாட்ஜின் சுவர்களை நோட்டம் விடுகிறீர்கள். அதன் சுவர்களில் கறைகள் காரணமாக பல உருவங்கள் தென்படக்கூடும். உங்கள் imagination power மற்றும் நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்பதைப் பொறுத்து. இரண்டு பேர் சண்டை போடுவது போல, இரண்டு பேர் புணர்வது போல, ஆந்தை, அனுமார், ஐயப்பன்,   யானை, மாட்டு வண்டி இப்படிப் பல உருவங்கள். சுவர்களின் கரைகளுக்கும் , யானைக்கும் எப்படி சம்பந்தம் வருகிறது? நிலாவில் வடை சுடும் பாட்டியை பார்ப்பதும் இந்த விளைவு தான். face perception எனப்படும் இது, மனிதன் எல்லா இடங்களிலும் இயற்கையாகவே மனித முகத்தை பொருத்திப் பார்க்கும் இயல்புடன் இருக்கிறான் என்கிறது.இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் உங்களைச் சுற்றியுள்ள பொருள்களைக் கூர்ந்து பாருங்கள்.அவற்றில் குறைந்த பட்சம் பத்து பதினைந்து மனித முகங்களை உங்களால் அடையாளம் காண முடியும். சைக்காலஜிஸ்ட்கள் சில சமயம் inkblot test என்ற ஒன்றை நடத்துகிறார்கள். பேப்பர் ஒன்றில் மையைத் தெளித்து அதை இரண்டாய் நாளாய் மடித்து, அதில் என்ன உருவம் தெரிகிறது? என்று கேட்பது. நிலவுக்கும் பாட்டிக்கும் சம்பந்தம் இல்லை. மனிதன் வருவதற்கு பல மில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பே நிலவு வந்து விட்டது.




face recognition என்பது நமக்கு இயற்கையிலேயே வந்து விடுகிறது. முகத்தைப் பார்த்ததும் உடனே, ஒரு நானோ செகண்டில், இவன் கோபால், இது பாபு, இது புஷ்பா என்று தெரிந்து கொள்கிறோம். நம் மூளையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று. A I எனப்படும் செயற்கை அறிவுத் துறையில் இந்த feature ஐ கொண்டு வர திணறுகிறார்கள். ரோபோ ஒன்று முகத்தை வைத்து இவர் யார் என்று கண்டுபிடிக்க சில ஆயிரக்கணக்கான தகவல்களை அலச வேண்டி இருக்கிறது.இதை செயற்கை அறிவு என்று சொல்ல முடியாது தான்.  உதாரணமாக 3 பெரிதா 5 பெரிதா என்றால் நாம் உடனே 5 என்கிறோம். ஆனால் ஒரு கணினி இப்படி intuitive ஆக சொல்லாது. ஆயிரம் முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மூன்றையும் ஐந்தையும் பைனரியாக மாற்றி ஒவ்வொரு இலக்கமாக ஒப்பிட வேண்டும். இரண்டும் பூஜ்ஜியமாவோ, ஒன்றாகவோ வந்தால் அதை விட்டு விட்டு அடுத்த இலக்கத்துக்கு போக வேண்டும். எதில் binary 1 வருகிறதோ அது பெரிய எண் .

A I என்பது கணக்கு போடாமலேயே மூன்றை விட ஐந்து பெரியது என்று கணினியை சொல்ல வைப்பது.



சில சிந்தனையாளர்கள், ஏ .ஐ சாத்தியமானால் அது எல்லாவற்றையும் , குறிப்பாக உற்பத்தித் துறையை வெகுவாக பாதிக்கும் என்கிறார்கள். நமக்கெல்லாம் சோறு கிடைக்காது.

உதாரணமாக

while (true ) {
}
என்று எழுதி விட்டுவிட்டால் கணினி ஒன்று லூசு மாதிரி திரும்பத் திரும்ப அதை செய்து கொண்டே இருக்கும். script எழுதி விட்டு நாம் நிம்மதியாகத் தூங்கலாம். அதற்கு அறிவு வந்து விட்டால் கூடவே சலிப்பும் வந்து விடும்.
Boredom is a by-product of intelligence! கணினி, டேய், நான் ஏன்டா பண்ணதையே பண்ணனும், வேற வேலை இல்லை? என்று சொல்லி விட்டு தன்  பவரை தானே ஆப் செய்து விட்டு தூங்கப் போய் விடும்!

சரி.

face recognition இருக்கட்டும். # face obsession :)))




பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவச மிகவாகுதே- கண்ணா


வானமுகட்டில் சற்று   மனம் வந்து நோக்கினும் 
மோன முகம் வந்து தோணுதே 

கண்ணன் முக அழகை மறக்க முடியாமல் தவித்துப் பாடும் பெண் ஒருத்தியின் பதிவு இது.

சில முகங்கள் நமக்குப் பார்த்ததும் பிடித்துப் போகின்றன. சில முகங்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. சில முகங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன. சில முகங்கள் நம்மை தூங்க விடாமல் செய்கின்றன. சில முகங்கள் நம்மை பயமுறுத்துகின்றன. சில  மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.


திருவள்ளுவரில் இருந்து 

நின்மதி வதனமும் நீள்விழியும் கண்டு என்ற பாகவதரில் இருந்து 

உன் 
பளிங்கு புகத்தை பார்த்து நடந்தால் 
பசியோ வலியோ தெரியாது 

 வாலி வரை.


மண்டை ஓட்டைப் பார்த்தால் நமக்குள் லேசாக ஜெர்க் ஆகி ஒரு பயம் வரும் இல்லையா?

முகம் என்பது மண்டை ஓடு தான், என்ன லேசாக தோல் கொஞ்சம் சதை மூடி இருக்கிறது.


சங்கராச்சாரியார், மனிதனே ,அது வெறும் சதை தான், ரத்தம் தான், மாமிசம் தான். கொஞ்சம் மாறி position இல் இருக்க வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது; உன்னை தேவையில்லாமல் அலைக்கழிக்கிறது; என்கிறார். அதை முலை என்கிறாய்; கொஞ்சம் இடம் மாறி இருந்தால் அதன் பேர் கட்டி!

ஏதன் மாம்ஸ வ ஸாதி விகாரம் 
மனஸி விசிந்தய வாரம் வாரம் பஜ கோவிந்தம்.


இன்னொரு நிகழ்ச்சி, டிஸ்கவரியின் mind control freaks ...இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


ஓஷோ ஜோக் 

முல்லா தன்  பக்கத்து வீட்டுக்காரரை வெறுத்தார். பார்த்தாலே பிடிக்காது.

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் வந்து, " முல்லா இன்று ஒரு நாள் உங்கள் கழுதை கிடைக்குமா? அவசரமாக சந்தைக்குப் போக வேண்டும்" என்றார்.

அவருக்கு கழுதையை தர விரும்பாத முல்லா " மன்னிக்கவும். என்னிடம் கழுதை இல்லை. நேற்று என் அண்ணன் வந்து அதை ஓட்டிச் சென்று விட்டான்" என்றார். 

"நல்லது" என்ற பக்கத்து வீட்டுக்காரர் திரும்பிச் சென்ற போது முல்லா வீட்டில் இருந்து அவர் கழுதை பயங்கரமாகக் கத்தியது 

"அனால், முல்லா, நீங்கள் கழுதை இல்லை என்றீர்களே" என்றார் ப. வீ.

அதற்கு முல்லா கோபமாக " இதைப் பாருங்கள், நீங்கள் யாரை நம்பப் போகிறீர்கள், என்னையா , இல்லை  முட்டாள் கழுதையையா?" என்றார்.


சமுத்ரா