இந்த வலையில் தேடவும்

Tuesday, June 10, 2014

கலைடாஸ்கோப் -109

லைடாஸ்கோப் -109 உங்களை வரவேற்கிறது.

மீண்டும் நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.

“Write. Rewrite. When not writing or rewriting, read. I know of no shortcuts.”
—Larry L. King
ஒரு புத்தகத்தை எழுத குறைந்த பட்சம் 100 புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பார்கள்.நிறைய நாட்களாகப் படிக்கவில்லை. அதனால் எழுதவும் இல்லை. சிம்பிள்!
A வரிசையில் சில விஷயங்கள் பேசுவோம்.

A for AshtaVakra:

அஷ்ட வக்கிரர் பற்றிய கதை புராணத்தில் வருகிறது. அவர் கருவில் இருந்த போது, தன் தந்தையின் வேத உச்சரிப்பில் பிழை உள்ளது என்று சுட்டிக்காட்ட 8 முறை ஊஹும் என்று ஆட்சேபணை செய்தாராம். தந்தைகள் சில பேருக்கு தங்கள் மகன்கள்  தங்களை விட  புத்திசாலியாக இருப்பது பிடிப்பதில்லை போலும்.எனவே அவர் தந்தை, நீ உடலில் எட்டு கோணல்களுடன் பிறப்பாயாக என்று சபித்து விடுகிறார். உடல் தான் கோணலே தவிர கோணல் புத்தி இல்லாதவர் அவர்.

மகாராஜா ஜனகருக்கும், அஷ்ட வக்ரருக்கும் அன்னியோன்யமான குரு சிஷ்யர் உறவு இருந்தது. ஜனகர், அரசராக இருந்த போதிலும் வாழ்வின் உண்மையான குறிக்கோளை அடைவதில் ஆர்வம் காட்டினார். தனக்கு ஞானம் தரத் தயாராக இருக்கும் குருவை  காலமாகத் தேடி வந்தார்.

ஒருநாள் ஜனகரின் அரசவையில் அஷ்ட வக்கிரர் நுழைகிறார். அவரது வினோதமான உருவத்தைப் பார்த்து சபையில் இருந்தவர்கள் உடனே வாய்விட்டு சிரித்து விடுகிறார்கள். அஷ்ட வக்கிரர் " என் உடலில் உள்ள கோணல்கள் மட்டுமே உங்களுக்குத் தெரிகிறது. ஆனால் என் சித்தம் நடுநிலை தவறாது நேராக நிற்கிறது; அதைக் காணத் தவறிய உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் ;என்று சொல்கிறார்.

ஜனகருக்கு தன்னால் ஞானத்தை அளிக்க முடியும் என்று அஷ்டவக்ரர் சவால் விடுகிறார். கடைசியில் ஜனகர் அவரிடம் இருந்து ஞானம் அடைகிறார்.

அஷ்ட வக்கிரர் ,ஜனகரின் அரண்மனையில் தங்கி அவருக்கு ஞான போதனைகள் செய்கிறார். இதை சகிக்காத அவரது சீடர்கள் ' ஜனகர் வெறுமனே பகட்டுக்காக ஞானி போல நாடகம் ஆடுகிறார். அரண்மனை சுகபோகங்கள் என்ன, ராணிகள் என்ன, நகை ,ஆபரணங்கள் என்ன? இவராவது ஞானியாவது? நம் குரு இவரது பகட்டுகளில் மயங்கி விட்டார்' என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒருநாள் அ .வ , ஜனகருக்கு தனி அறை ஒன்றில் உபதேசம்  செய்து கொண்டிருக்கிறார்.அப்போது , பணியாள் ஒருவன் ஓடி வந்து, அரசரே, அரண்மனையில் நெருப்பு பற்றிக் கொண்டது; ஆபரணங்கள், ஆடைகள் எல்லாம் நாசம்; உடனே வாருங்கள் என்கிறான். ஜனகர், "அப்படியே ஓடி விடு, நான் என் குருவுடன் இருக்கும்போது தொந்தரவு செய்யக் கூடாது என்று தெரியும் அல்லவா? என்ன தைரியம் உனக்கு? ஓடி விடு" என்று கோபிக்கிறார்.

இன்னொருநாள் அ .வ. தன் சீடர்களுக்குப் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது , பணியாள் ஒருவன் ஓடி வந்து , 'நீங்கள் காய வைத்திருந்த துணிகளை எல்லாம் குரங்குகள் கிழித்துக் கொண்டிருக்கின்றன, உடனே போய்ப் பாருங்கள்' என்கிறான். சீடர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிப் போய்  பார்க்கிறார்கள். அங்கே குரங்குகள் எதுவும் இல்லை.

அ .வ, அவர்களைப் பார்த்து, இப்போது ஜனகரின் தன்மையை, அவரது அர்ப்பணிப்பைப் புரிந்து கொண்டீர்களா? தன் அரண்மனை எரிந்தாலும் சத்சங்கத்தை தொந்தரவு செய்ய விரும்பாத அவர் எங்கே? வெறும் கெளபீனத் துணிகளுக்காக சத்சங்கத்தை மறந்து விட்டு ஓடிய நீங்கள் எங்கே என்கிறார்.


நம்மிடம் பெரும்பாலான விஷயங்களில் அந்த அர்பணிப்பு, Sincerity ஒருமுகத் தன்மை இருப்பதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சும்மா எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் மேய்ந்து கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றிலும் ஒரு compromise செய்து கொள்கிறோம்

பட்டினத்தார் சொல்வது போல

கை ஒன்று செய்யக் கண் ஒன்று நாட
கருத்தொன்று எண்ண - புலால் கமழும்
மெய் ஒன்று சேர

இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு திசையில் நம்மை இழுத்துச் செல்கிறது.

புலன்கள் என்றதும் ஒன்று ஞாபகம் வருகிறது.

விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் சொல்கிறார்.

- ஸ்பரிசத்தால் கெடுவது யானை  : ஆண் யானையைப் பிடிக்க குழி தோண்டி இலை தழைகளை மூடி, அந்தப் பக்கத்தில் பெண் யானையை நிறுத்தி வைப்பார்கள். ஆண் யானை பெண் யானையின் தீண்டுதலுக்கு ஆசைப்பட்டு ஓடி வந்து அந்தக் குழியில் மாட்டிக் கொள்ளும்.

-செவி இன்பத்தால் கெடுவது மான்: மானைப் பிடிக்க வேடன் கொம்பு ஊதுகிறான். அதன் இசையில் மயங்கி மான் மாட்டிக் கொள்கிறது.

- நாவின் சுவையால் கெடுவது மீன்; தூண்டிலில் மாட்டப்பட்ட இரையை சுவைக்க வந்து மாட்டிக் கொள்கிறது.

- கண்களின் இன்பத்தால் மாட்டிக் கொள்வது விட்டில் பூச்சி.

-வாசனையால் கெடுவது வண்டு.

ஆனால் மனிதனோ இந்த ஐந்து புலன்களின் மூலமும் கெட்டுப் போகிறான்.



கடவுள் தானே, ஞானம் தானே, அதெல்லாம் மெதுவாகப் பார்த்துக் கொள்ளலாம். திருப்பதிக்குப் போய் ஏசி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி விட்டு, நகை நட்டு அணிந்து கொண்டு,வி .ஐ.பி க்யூவில் போய் ஒரு அரை நிமிடம் தரிசனம் செய்து விட்டு, உண்டியலில் 1000 ரூபாய் போட்டு விட்டு லட்டு சாப்பிட்டு விட்டால் முடிந்தது. வைகுண்டத்தில் ஒரு சீட் புக் ஆகி விடும் என்று நினைக்கிறோம்.

ராம கிருஷ்ணரிடம் சிஷ்யர் ஒருவன் வந்து, கடவுளுக்கான தாகம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறான்.ரா.கி அவனை நேரடியாக கங்கைக்கு அழைத்துச் சென்று தலையைப் பிடித்து முக்குகிறார். உள்ளே அவன் மூச்சு விட முடியாமல் திணறுகிறான். ராம கிருஷ்ணர் அழுத்துவதை விட வில்லை.அவனுக்கு இப்போது வாழ்வா சாவா என்ற பிரச்சினை.உள்ளே ஜீவ மரணப் போராட்டம் நடக்கிறது. மிகவும் போராடி தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி முட்டி மோதி வெளியே வருகிறான்.

அப்போது ரா.கி. "உள்ளே உனக்கு வேறெதாவது ஞாபகம் வந்ததா? மனைவி, வீடு, ஆசிரமம், உணவு,மாடுகள், கடன்கள், ?? இல்லையே, உயிர் பிழைத்து வர வேண்டும் என்ற ஒரே ஒரு தீவிரக் குறிக்கோள் தானே இருந்தது, கடவுளுக்கான தாகம் எப்போது இந்த அளவு இருக்கிறதோ மறு நொடியே உனக்கு அவன் தரிசனம் கிட்டும்" என்கிறார்.


A  for Arjuna

அர்ஜுனன் மிகச் சிறந்த வீரன்தான். ஆனால் சில சமயங்களில் அவனுடைய maturity level குறைவாகவே இருந்துள்ளது. இரண்டு நிகழ்ச்சிகளை சொல்கிறேன்.

1.ஒருநாள் அர்ஜுனன் தன் நண்பனும், பகவானும் ஆன கிருஷ்ணனுக்கு பிரம்மாண்டமாக பூஜை செய்ய விழைகிறான். தேசத்தின் பல்வேறு தோட்டங்களில் இருந்து புத்தம் புதிய அன்றலர்ந்த மலர்களை நூற்றுக் கணக்கான வண்டிகளில் தருவிக்கிறான்.

கிருஷ்ணன்  பூஜைக்கு வந்து அமர்கிறான்.

அர்ஜுனன், அர்ச்சனை செய்யத் தொடங்கும் முன், கிருஷ்ணன், 'அர்ஜுனா, நிறுத்து' என்று சொல்லி விட்டு 'என்ன இது, ஏற்கனவே எனக்கு அர்ச்சனை செய்யப்பட்ட நிர்மால்ய மலர்களை மீண்டும் எனக்கு அர்ப்பிக்கிறாயே , இது தான் உன் சிறப்பான பூஜையா?' என்று கேட்கிறான்.

குழப்பமடைந்த அர்ஜுனன், 'என்ன இது கண்ணா, உனக்காக ஸ்பெஷலாக
பார்த்துப் பார்த்து தருவித்த மலர்களை நிர்மால்யம் என்கிறாயே!' என்ன விளையாடுகிறாயா? , என் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டாய் என்கிறான்.

கிருஷ்ணன் புன்னைகையுடன் , 'இல்லை அர்ஜுனா, நிஜம் தான், வண்டி வண்டியாக மலர்கள் வந்து கொண்டிருந்த அதே பாதையில் காலையில் பீமனும் வந்து கொண்டிருந்தான்; மலர் வண்டிகளைப் பார்த்த பீமன், உடனே என்னை மனதில் நினைத்துக் கொண்டு, 'கிருஷ்ணா அத்தனை மலர்களும் உன் பாதங்களுக்கு அர்ப்பணம்' என்று சொன்னான். உண்மையான பக்தி எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள் என்கிறான்.


2. குரு க்ஷேத்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வீற்றிருக்கிறான். அர்ஜுனன் கர்ணனுடன் மோதுகிறான். கர்ணன் , தன் அஸ்திரத்தைத் தொடுத்து , அர்ஜுனன் தேரை இருபது அடி பின்னால் நகர்த்துகிறான். கோபமடைந்த அர்ஜுனன், பதில் அஸ்திரம் தொடுத்து, கர்ணன் தேரை இருநூறு அடிகள் பின்னே நகர்த்துகிறான்,

கண்ணனை நோக்கி , ' கண்ணா, பார்த்தாயா என் பராக்கிரமம், கர்ணனை விட பத்து மடங்கு வலிமை' என்கிறான். கண்ணன் ஒரு புன்னகையை சிந்துகிறான்.

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு அன்றைய போர் முடிந்ததும் கிருஷ்ணன் அர்ஜுனனை தேரில் இருந்து இறங்கச் சொல்கிறான்.  இருவரும் இறங்கியதும், கிருஷ்ணன், மேலே தேர்க் கொடியில் வீற்றிருக்கும் அனுமனை அங்கிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறான். அப்போது தேர் உடனே சுக்கு நூறாக வெடித்துச் சிதறுகிறது.

கிருஷ்ணன் , 'அர்ஜுனா, பீஷ்மரின் சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் இந்த ரதம் முழுவதும் தைத்துள்ளன. என்னுடைய சக்தியை இதில் பிரயோகித்து இதை சிதறி விடாமல் நான் காத்து வந்தேன், மேலும், அனுமானின் ரட்ஷை இந்தத் தேருக்கு இருந்தது. இத்தனை சக்திகளால் கட்டுப்பட்ட இந்தத் தேரை, 20 அடிகள் பின்னால் நகர்த்திய கர்ணன் பெரியவனா? ஒன்றும் இல்லாத வெறும் வண்டியை 200 அடிகள் பின்னால் நகர்த்திய நீ பெரியவனா? என்று கேட்கிறான்.அர்ஜுனன் தலை குனிகிறான்.

-சில சமயம், சந்தர்ப்பம், சூழ்நிலை, காலம் இவைகளை கருத்தில் கொள்ளாமல் நாம் ஒப்பீடு செய்கிறோம். நான் இவ்வளவு செய்திருக்கிறேன்; அவன் என்னோமோ இத்துனூண்டு செய்து விட்டு அலட்டிக் கொள்கிறான் என்கிறோம். அந்த 'இத்துனூண்டு' அவன் சக்திக்கு மிகப் பெரியதாக இருக்கலாம்.


A for AIDS


மனிதனுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படுகின்றன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஒரு நுண்ணுயிரி ஏன் மனிதனுக்கு நோய் ஏற்படுத்துகிறது?? லாஜிகலாகப் பார்த்தால் மனிதனுக்கு நோய் ஏற்படுத்துவது நுண்ணுயிரிக்கு சாதகமானது இல்லை. ஆரோக்கியமான உடல் தான் அதற்கு நீண்ட நாள் இருக்க இடம் அளிக்க முடியும் . ஆனால் ஒரு மனிதனை நோய்வாய்ப் பட வைப்பதில் சில நன்மைகள் அவைகளுக்கு இருக்கின்றன. ஒன்று , ஒரு ஆள் சலித்து விட்டால் அவனது வாந்தி, தும்மல், இருமல்,சளி  மூலம் வெளியேறி வேறொரு ஆளை அடைந்து விடலாம்.மேலும், தன்னை வேறொரு host இடம் கொண்டு சேர்க்கும்  carrier ஐ கண்டுபிடிக்கலாம். பெரும்பாலான நுண்ணுயிரிகள் கொசுக்களை மிகவும் விரும்புகின்றன. ஏனென்றால் கொசுக்கள் அவைகளை நேரடியாக host இன் ரத்தத்தில் தற்காப்பு செல்கள் விழித்துக் கொள்ளும் முன்னேயே அலேக்காக சேர்த்து விட முடியும்.இதனால்தான் பெரும்பாலான தொற்று நோய்கள் சாதாரண கொசுக்கடியில் ஆரம்பிக்கின்றன. ஆனால் எய்ட்ஸ் இதற்கு விதி விலக்கு . கொசுவின் உடலில் ஒட்டிக் கொள்ளும் ஹெச்.ஐ.வி வைரஸ் (ஏனோ) கொசுவின் வளர்சிதை  மாற்றத்துக்கு ஜீரணமாகி விடுகிறது. ஆனால் வைரஸ்கள் தங்கள் தடைகளை அகற்ற mutation எனப்படும் மாற்றங்களுக்கு உட்படுபவை. அப்படி ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் ஆபத்து தான். ஒரு சாதாரண கொசுக்கடி, எய்ட்ஸ்!!!

நுண்ணுயிரிகளுக்கு மனிதனைப் பற்றிய கவலை இல்லை. அவை அவற்றின் வேலையை செய்கின்றன. பெரும்பாலான நோய்கள் ஏற்படுவது கிருமிகள் நமக்கு ஏதோ செய்கின்றன என்பதால் அல்ல. நம் உடல் அவைகளுக்கு எதிராக சில முயற்சிகள் எடுப்பதால். கிருமிகளுக்கு எதிரான போரில் நம் உடலின் பாதுகாப்பு சிஸ்டம் நல்ல ஆரோக்கியமான செல்கள் சிலவற்றையும் தவறுதலாக அழித்து விடுகிறது.

மனித உடலுக்கு லட்சம் வழிகளில் ஆபத்து வர முடியும். லட்சம் வெள்ளை அணுக்களை ரெடியாக வைத்திருப்பது இயலாத காரியம். எனவே நம் உடல் ஒரு சில வீரர்களை மட்டும் active duty யில் வைத்திருக்கும்.ஏதேனும் ஒரு அந்நிய வஸ்து உள்ளே நுழைந்தால் அந்த சில வெள்ளை அணுக்கள் அதை அடையாளம் கண்டு கொண்டு இன்னும் நிறைய வீரர்கள் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும். உடல் நிறைய வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். நோய் ஏற்படும் போது நாம் களைப்பாக உணர்வது இதனால் தான்.

பொதுவாக, உடலின்  வெள்ளை அணுக்கள் இரக்கம் அற்றவை. தன் வழியில் வரும் ஒவ்வொரு கடைசி அந்நியனையும் கொன்றழித்து கடைசியில் தான் சாகவும் தயங்காதவை . வெள்ளை அணுக்களின் இந்த இரக்கமற்ற தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வைரஸ்கள் இரண்டு யுத்திகளைக் கையாள்கின்றன.ஒன்று உடனடியாக தாக்கி விட்டு வெளியேறி விடுவது. இன்னொன்று வெள்ளை செல்கள் கண்டுபிடிக்காத படி மெளனமாக செல்களின் உட்கருவில் அமர்ந்திருப்பது. மாதக் கணக்கில், வருடக் கணக்கில். ஹெச். ஐ. வி வைரஸ் இந்த வகை. உள்ளே நுழைந்ததும் அவை அவசரக் குடுக்கை போல செயல்பட்டு வெள்ளை செல்களை உசுப்பி விடுவதில்லை. நிதானமாக, பொறுமையாக இந்த ஆளை அணு அணுவாக அனுபவித்து சாகடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டு 'காதல் என்பது தூங்கும் மிருகம்' என்று சினிமா பாட்டுகள் சொல்வது போல தூங்கும் மிருகங்களாக உள்ளே இருக்கின்றன.

வெயிட். இந்த வைரஸ்கள் மிருகமும் அல்ல. தாவரமும் அல்ல. உண்மையில் அவைகளுக்கு உயிரே இல்லை.பீட்டர் மெடாவர் என்ற உயிரியல் அறிஞர் வைரஸ்களை 'A piece of nucleic acid surrounded by bad news' என்கிறார். உயிரற்ற அவை ஒரு தகுதியான சூழ்நிலை கிடைத்ததும் அந்த உயிரியின் செல்களில் புகுந்து அதன் மரபணு தகவல்களைத் திருடி தனதாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுகின்றன. வைரஸ்கள் மிகவும் எளிமையானவை. அவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏழெட்டு ஜீன்களே போதும். (பாக்டீரியாக்களுக்கு ஒரு சில லட்சம்  செல்கள் தேவைப்படுகின்றன)இத்தனை 'எளிமையான' இந்த ஹெச். ஐ.வி. வைரஸ் ஒரு மனிதனின் வாழ்வை எத்தனை சிக்கலாக்கி விடுகிறது பாருங்கள்.


A for Absolute

Absolute மற்றும் Relative என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. absolute என்றால் எதையும் சாராத , தனித்துவமான, தனித்து இயங்கக் கூடிய ஒன்று என்கிறார்கள். ஆனால் absolute என்று அழைக்கப்படத் தகுதியான ஒன்று இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை . காலம்  வெளி, இவைகள் கூட சார்புடையவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

சரி கடவுளையாவது absolute என்று சொல்ல முடியுமா என்று யோசிப்போம். கடவுளை மொழிகள் சம்பூர்ணா(முழுமையான), அத்யந்தா(நிரம்பிய), அசீமா (எல்லை அற்ற) ,ஸ்வதந்த்ரா (சுதந்திரமான) ,அமீஷா (கலப்படமற்ற)  என்றெல்லாம் வர்ணிக்கின்றன. ஆனால் இந்த adjective கள் கடவுளுக்கு உண்மையிலேயே பொருந்துமா? எதனுடனும் சாராத ஒன்று பிரபஞ்சத்தை ஏன் படைக்க வேண்டும்? பகவான் ஏதோ ஒரு விதத்தில் தன் பக்தனை சார்ந்துள்ளான் . படைப்பவன் ஒரு விதத்தில் படைப்பை சார்ந்துள்ளான் .பக்தன் இல்லாத பரமன் ஏது ? பகவான் உலகைப் படைத்ததன் மூலம், அவதாரங்கள் எடுப்பதன் மூலம் தன் தனித்துவத் தன்மையில் இருந்து இறங்கி வருகிறானா??

கடவுள் உண்மையிலேயே absolute ஆக மாறிவிட்டால் எல்லாமே அழிந்து போய் விடுமா?

யோசிப்போம்.


ஓஷோ ஜோக்.


பார் ஒன்றில் நுழைந்த ஒரு முரட்டு தடியன் கண்டிப்பாக சண்டை போடும் முடிவில் இருந்தான். பாரின் நடுவில் நின்று கொண்டு தன் வலது கைப் பக்கம் இருப்பவர்களைப் பார்த்து 'இந்தப் பக்கம் இருப்பவர்கள் அறிவில்லாத வெட்டி புறம்போக்கு சோம்பேறி சனியன்கள் ',,இதை மறுப்பவர்கள் என்னுடன் சண்டைக்கு வாருங்கள் என்று ஆர்ம்ஸை முறுக்கினான். யாரும் எழுந்திரிக்கவில்லை. இப்போது அவன்  இடது பக்கம் திரும்பி 'இந்தப் பக்கம் இருப்பவர்கள் தொடை நடுங்கி பசங்கள் ; கோழை அலிகள்' என்று திட்டினான். திடீரெனெ அங்கே உட்கார்ந்திருந்த முல்லா எழுந்தார்.

'என்ன, என்னுடன் சண்டை போடுகிறாயா? 'என்றான் தடியன்.

'இல்லை அய்யா, நான் இங்கே தவறான பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கறேன் என்று தோன்றுகிறது. மாற்றிக் கொள்கிறேன்' என்றார்.


சமுத்ரா