இந்த வலையில் தேடவும்

Thursday, May 31, 2012

அணு அண்டம் அறிவியல் -67

அணு அண்டம் அறிவியல் -67 உங்களை வரவேற்கிறது.

"நாம் எதற்காக புதிய கிரகங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்? ஏன் அறிவுள்ள உயிர்களைத் தேட வேண்டும்?. அங்கே போய் மனிதன் அதையும் நாசம் செய்து விடுவான் என்று எதிர்மறையாக யோசிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மருத்துவத்தில் ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கிறார்கள்.இந்த மருந்து ஒரு கிரிமினலைக் காப்பாற்றி விடும் என்று பயந்து எந்த விஞ்ஞானியும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. பின்விளைவுகளை யோசிக்காமல் பணியாற்றும் அறிவியலின் இந்த 'கடமை உணர்ச்சி' கொஞ்சம் நெருடலாகத் தோன்றினாலும் அதீதமாக பயந்து கொண்டு அறிவியல் ஆய்வுகளை நாம் நிறுத்தக் கூடாது என்றே தோன்றுகிறது. புதிய கிரகத்திற்குக் குடி பெயர்ந்தாலும் மனிதன் தன் அபத்தங்களைத் தொடருவான். எல்லை பிரிப்பான்; பாலிடிக்ஸ் செய்வான்,சக மனிதர்களைக் கொல்வான்..என்ன செய்வது? இதற்காக நொந்து கொண்டு விஞ்ஞானிகள் எல்லாம் 'புத்தம் சரணம் கச்சாமி' என்று காவி தரித்துக் கொண்டு போய் விட முடியுமா? ஆஸ்பிடலில் சீரியஸ் என்று அட்மிட் ஆகும் ஒரு நோயாளியைப் பார்த்து டாக்டர் ஒருவர் 'நீங்க வாழ்ந்து என்ன பண்ணப் போறீங்க? வேலை இல்லாம தான் இருக்கீங்க, பிழைச்சாலும் அதே வெட்டி வம்பு பேசிட்டு இருப்பீங்க' என்று சொன்னால் எப்படி இருக்கும்? உடனே ஐ.சி.யூ விற்கு கொண்டு செல்கிறார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு unbiased கடமை உணர்ச்சி தான்  இதுவும். 'கொட்டுவது தேளின் கடமை; அதைக் காப்பாற்றுவது என் கடமை' என்று சொன்னார் ஒரு ஜென் சந்நியாசி.எனவே வேற்று கிரக உயிர்களுக்கான தேடல்கள் தொடர வேண்டும். மனிதன் தன்னால் முடிந்த அளவு தன் சிறகுகளை விரித்து சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் குடியேற வேண்டும் என்று நம் குறிக்கோள்களை பாசிடிவ் ஆக வைத்துக் கொள்வோமே?


எப்போதுமே இது நடக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்து வந்துள்ளது :-

முதன் முதலில் ஸ்கூலில் (எல்.கே.ஜி) சேர்ந்த போது சாயந்திரம் திரும்பி வந்து
'அம்மா, கிளாஸ்ல வேற வேற தெரு பையங்க எல்லாம் படிக்கறாங்க" என்றேன்.
கொஞ்சம் வளர்ந்து ஹை ஸ்கூல் போனதும்
"
கிளாஸ்ல வேற வேற ஊர் பையங்க எல்லாம் படிக்கறாங்க"
காலேஜில்
"கிளாஸ்ல வேற வேற ஸ்டேட் பசங்க எல்லாம் படிக்கறாங்க"
ஆபீசில் சேர்ந்ததும்
"ஆபீஸ்ல வேறே வேற நாட்டு மனுஷங்க கூட எல்லாம் வொர்க் பண்றேன்" என்று சொல்லிக் கொள்வேன்.

"அம்மா, வேற வேற கிரகத்து மனுஷங்க கூட டீல் பண்றேன்" என்று சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே என் ஆசை.

பூமிக்கப்பால் வாழ்க்கை  என்பது அறிவியல் அல்ல. வெறும் FICTION  என்று சில பேர் சொன்னாலும் இதன் அறிவியல் கூறுகளை நாம் தொடர்ந்து ஆராய்வோம் :

வேற்று கிரக உயிர்களுக்கான அறிவியல் தேடல் 1959 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. கொக்கொனி மற்றும் மோரிசன் என்ற இரு
விஞ்ஞானிகள் நம் ரேடியோ ரிசீவர்களை வானத்தை நோக்கித் திருப்புவோம் என்று சொல்லி, அதுவரை பூமியிலேயே முடங்கிக் கிடந்த மனிதனின் தேடலை முதன் முதலாக பூமிக்கப்பால் விஸ்தாரம் செய்யும் செயலுக்கு வித்திட்டனர். அதன் பிறகுவானத்தில் இருந்து வரும் சிக்னல்களை Official  ஆகத் தேட ஆரம்பித்தனர். கண்ட குப்பைகளை எல்லாம் சேகரிக்காமல் முதலில் சிக்னல்-களுக்கு ஒரு அதிர்வெண் வரம்பு (FREQUENCY RANGE ) நிர்ணயிக்கப்பட்டது.[கம்ப்யூட்டரில் SEARCH IN A SPECIFIC FOLDER என்பது மாதிரி]மைக்ரோவேவ் Region -இல் 1GHz இல் இருந்து 10GHz வரை உள்ள சிக்னல்களை மட்டுமே அப்போதிலிருந்து இப்போது வரை தேடி வருகிறார்கள். இந்த அதிர்வெண் வரம்பு செல்லமாக WATER -HOLE , தண்ணீர்த் துளை என்று அழைக்கப்படுகிறது.ஆங்கிலத்தில் மனிதர்கள் கூடும் இடத்திற்கு வாட்டர் ஹோல் என்று பெயர். அதுபோல இந்த அதிர்வெண் வரம்பில்தான் நம்மால் ஏலியன்-களை சந்திக்க முடியும் என்பதால் இந்தப்பெயர்.

முதலில் நமக்குக் கிடைக்கும் அலைகள் (சிக்னல்கள்) இயற்கையாக நட்சத்திரங்களில் இருந்தோ  வெளியில் பரவிக் கிடக்கும் மூலகங்களில் இருந்தோ வரவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்.They are called noise! நம்மை சுற்றி ஏராளமான சத்தங்கள் விரவிக் கிடக்கின்றன. முதலில் மூன்று கெல்வின் வெப்பநிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் பெருவெடிப்பின் மெல்லிய 'ஹிஸ்'  சத்தம்.(CMBR ) அதை நம்மால் கேட்க முடிந்தால் பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குப் போனாலும் காதில் 'ஹிஸ்ஸ்' தான்..பிறகு நம் காலக்சிகள் சத்தம் போடுகின்றன. சூப்பர் நோவாக்கள், நட்சத்திர பிறப்புகள்,அழிவுகள், மோதல்கள் என்று இருபத்தேழு குழந்தைகள் இருக்கும் வீடு போல சதா களேபரம்.மேலும் சூரியனில் இருந்து கோடிக்கணக்கான charged particles நொடிக்கு நொடி வெளிவந்து கொண்டிருக்கின்றன. மிக அதிக அதிர்வெண்களில் எலக்ட்ரான்-களின் குவாண்டம் பண்புகள் காரணமாக 'குவாண்டம் NOISE ' வேறு இருக்கிறது.இப்படி நிறைய திரைகள் வானத்தை மறைக்கின்றன. இவ்வளவு திரைகள் இருந்தாலும் நம்மால் வானத்தை பார்க்க முடிவது VISIBLE SPECTRUM என்னும் narrow   band (குறுகிய அலைக்கற்றை) ஒன்று இருப்பதால்.இது போல அதிர்ஷ்டவசமாக வானத்தை உற்றுநோக்க நமக்கு
வசதியான ஒரு ஜன்னல் நுண்ணலை (MICROWAVE ) அதிர்வெண்களில் இருக்கிறது. உடுப்பியில் எப்படி ஸ்ரீ கிருஷ்ணனை கனகதாசர் ஜன்னல் வழியாகப் பார்க்கிறோமோ அது போல ஏலியன்களுடன்  நாம் இந்த ஜன்னல் (WATER hole )வழியே மட்டும் தொடர்பு கொள்ள முடியும்.
கனகதாசர் ஜன்னல்


 நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட வெட்ட வெளியான INTERSTELLAR SPACE
பெரும்பாலும் ஹைட்ரஜன் அணுக்களால்  நிரம்பி உள்ளது. (ஆனால் அடர்த்தி மிகக் கம்மி. ஒரு கன சென்டிமீட்டருக்கு ஒரு ஹைட்ரஜன் அணு மட்டுமே உள்ளது) இந்த அணுக்களில் உள்ள எலக்ட்ரான் மற்றும் ப்ரோட்டான்கள் தங்கள் சுழற்சியை (spin ) மாற்றிக் கொள்ளும் போது ஹைட்ரஜன் அணு உயர் ஆற்றல் நிலையில் இருந்து தாழ் ஆற்றல் நிலைக்கு இயல்பாக மாறுகிறது.இந்த ஆற்றல் மாற்றம் வெளியிடும் EM radiation ,1420.40575177 MHz, அதிர்வெண்ணும் 21 சென்டி மீட்டர் அலைநீளமும் உடையது. இந்த 21cm அலைநீள சத்தத்தை புவியில் உள்ள ரேடியோ ரிசீவர்களால் உணர முடியும். [இந்த அலைகள் தடைகளை ஊடுருவி எளிதில்  பயணிக்கின்றன] இந்த 21cm அலைநீளக் கற்றை  வேற்றுக் கிரக அறிவு ஜீவிகளுக்கும் தெரிந்திருக்கும். (ஹைட்ரஜன் முதல் மற்றும் எளிய தனிமம் என்பதால்) . ஹைட்ரஜனின் இயற்கையான radiation frequency 1420 மெகா  ஹெர்ட்ஸ்-களாக இருப்பதால் அதை இயல்பான CARRIER ஆக உபயோகிக்க முடியும்.இந்த carrier frequency பிரபஞ்சம் முழுவதும் எளிதாகவும் இயற்கையாகவும் கிடைப்பதால் வேற்றுக் கிரக அறிவு ஜீவிகள் தொடர்பு கொள்ள   கண்டிப்பாக இந்த அலைநீளத்தையே உபயோகிக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம்.மற்ற கதிரியக்கங்களில் (நட்சத்திரங்களில் இருந்து வருவது) அலைநீளம் மிகவும் பரவலாக உள்ளது. குறுகிய இடத்தில் குறைந்த ஆற்றலில் நிறைய செய்திகளை PACK செய்யவேண்டும் என்றால் குறைந்த அலைநீளம் வேண்டும்.[நாலு கார்களை அனுப்ப ஒரு கண்டெயினர் லாரி போதும். ஒரு ரயிலில் ஏற்றி அனுப்பினால் அது வீண் தானே?] அது போல வே.கி.௮.ஜீவிகள் இந்த இருபத்தியொரு சென்டி மீட்டர் பட்டை அகலத்தைத்  தேர்ந்தெடுத்து செய்திகளை அனுப்பலாம் என்ற அனுமானத்தில் SETI ரிசீவர்கள் இந்த அலைநீளத்துக்கே டியூன் செய்யப்பட்டுள்ளன.ஒரு குறிப்பிட்ட ஸ்டேஷனைக் கேட்க ரேடியோவை டியூன் செய்வது மாதிரி.
புத்தரின் மெய்க்காப்பாளர்கள்..அதிர்வெண் spectrum -தில் H மட்டும் OH கோடுகள் (H -OH லைன்)மெய்க்காப்பாளர்கள் போல செயல்பட்டு மற்ற சிக்னல்-களை வடிகட்டி ஒரு வாட்டர் ஹோலை உருவாக்குகின்றன.  இந்த H -OH பட்டையில் ஏலியன் களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.

அதிர்வெண் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சில் இயல்பு அதிர்வெண்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதால் இது H +OH =வாட்டர் ஹோல் எனப்படுகிறது


சரி.

வானம் முழுவதும் சல்லடை போட்டுத் துளாவினாலும் ET intelligence குக்கான தேடல் ஏமாற்றத்தையே அளித்து வந்துள்ளது. மேற்கு வெர்ஜீனியாவில் 1960 ஆம் ஆண்டில் ட்ராக் (ட்ராக் சமன்பாட்டை அறிமுகப்படுத்தியவர்) என்பவரால் புறவுலக உயிர்த் தேடலுக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. [PROJECT OZMA ]26 மீட்டர் விட்டமுள்ள ஒரு தொலைநோக்கி மூலம் நூற்றுக்கணக்கான பரிச்சயமான நட்சத்திரங்கள் ஸ்கான் செய்யபப்ட்டன.இதுவரை உருப்படியாக எந்த செய்தியும் கிட்டவில்லை.1971 ஆம் ஆண்டில் project cyclops தொடங்கப்பட்டது. பத்து பில்லியன் டாலர் செலவில் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகள் ஒன்றாக நிறுவப்பட்டு ஆயிரம் ஒளி ஆண்டுகள் வரை வானம் கவனமாக  ஸ்கான் செய்யப்பட்டது.No fruits !


1974   இல் Arecibo message என்ற
செய்தி அனுப்பப்பட்டது.25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள Cluster M13 என்ற நட்சத்திரத்திரளுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டது. இந்த செய்தி மூன்று நிமிடங்கள் நீடித்து வானில் அனுப்பப்பட்டது. 210 பைட் (1679 பிட்)அளவுள்ள (குறுஞ்) செய்தி ஒன்று 2380 MHz அதிர்வெண்ணில் பரிமாறப்ட்டது. 1679 என்பதை  73 x 23 என்ற array அமைப்பில் எழுத முடியும் என்பதால் ஏலியன்கள் இந்த செய்தியை படத்தில் வரைந்து பார்க்கும் போது மேலே உள்ள உருவம் கிடைக்கும்:


இதில் உள்ள செய்திகள் ட்ரேக் மற்றும் Carl Sagan என்பவர்களால் எழுதப்பட்டன.

இந்த படத்தில் கீழ்வரும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

* எண்கள் 1 முதல் 10 (பைனரியில்)
* DNA மூலக்கூறை உருவாக்கும் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் இவற்றின் அணு எண்கள்
* குளுகோசின் வேதியியல் வாய்ப்பாடு
* DNA வின் ஏணி போன்ற சுருள் வடிவம்
* மனிதனின் உருவம் (ஆண்)
* சூரிய மண்டலத்தின் உருவம்
* Arecibo சிக்னலை அனுப்பிய தொலைநோக்கியின் படம்


இந்த செய்தி விடையை
எதிர்நோக்கி அனுப்பப்படவில்லை என்றாலும் பிரபஞ்சத்தில் நம் இருப்பை அறிவிக்கும் ஒரு சிறு முயற்சி. அப்படியே அதற்கு பதில் வந்தாலும் அது நம்மை அடைய குறைந்தபட்சம் 25000 ஆண்டுகள் ஆகும்.

இத்தனை களேபரம் செய்த போதிலும் வானம் மௌனமாகவே இருந்தது.
ஒருநாள் அதிசயமாக திருவாய் மலர்ந்தது.
WOW சமிக்ஞை


1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் எதிர்பாராமல் வாட்டர் ஹோலில் ஒரு சிக்னல் கிடைத்தது.WOW சிக்னல் என்று அழைக்கப்படும் அது 72 வினாடிகள் நீடித்தது. ஆனால் அது திரும்பவும் உணரப்படவில்லை.சில பேர் இது நாம் அனுப்பிய ஏதோ ஒரு தொலைத்தொடர்பு சிக்னல் தான் எங்கோ பட்டு பிரதிபலித்து வந்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள்.

ஒரு கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு ஏதாவது சிக்னல் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேலை எத்தனை பேஜாரானது என்று நினைத்துப் பாருங்கள்!!1995 ஆம் வருடம் SETI (Search for Extra Terrestrial Intelligence )என்ற non profit Institute தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அண்மைய நட்சத்திரங்களை சமிக்ஞைகளுக்காக SETI இதுவரை 1200 -3000 MHz வரம்பில் தேடித் துழாவி உள்ளது.(இதற்கு ஆகும் செலவு ஒரு வருடத்திற்கு 5 மில்லியன் டாலர்கள் ) SETI @home என்ற ப்ராஜக்ட் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பயனர்களின் வீடுகளில் வேலை நேரம் போக சும்மா இருக்கும் கம்ப்யூட்டர்களில் இருந்தே ET சிக்னல்களைத் தேடும் முயற்சி தான் அது. ஒரு SETI சாப்ட்வேர் ஐ கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்தால் போதுமானது. சிக்னல்களைத் தேடும் பணியை அதுவே செய்யும். ஏதாவது சிக்னல் வந்தால் பீப் பீப் என்று சிவப்பு விளக்கு எரியும்.


இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் WOW
சமிக்ஞைக்குப் பிறகு வானம் மௌனமாகவே உள்ளது. எத்தனை பிரார்த்தித்தாலும் விடை தராத கடவுள் போல, காதலனின் தொடர் கடிதங்களுக்குப் பிறகும் மனமிரங்காத காதலி போல மௌனம் சாதிக்கிறது.

தியாகராஜர் போன்ற தீவிர பக்தர்கள் கூட சில சமயங்களில் இறைவா நீ உண்மையில் இருக்கிறாயா என்று சந்தேகிக்கின்றனர் ( எவரி மாட வினாவோ ராவோ இந்து லேவோ: யார் பேச்சைக் கேட்டாயோ, வரமா
ட்டாயோ இல்லை நீ இல்லையோ ) அது போல இரவு பகல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும் வானில் ஒரு செய்தி கூட வராதது SETI விஞ்ஞானிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகிறது. பிரபஞ்சத்தில் யாருமே இல்லையோ அல்லது நம் தேடலே தவறானதோ என்று சில சமயம் யோசிக்க வைக்கிறது.
சிலர் இந்த மாதிரி விஷயங்கள் time capsule (message to future )அல்லது  message in a bottle என்கிறார்கள். (முடியைக் கட்டி மலையை இழு; வந்தால் மலை..போனால் முடி.) கப்பலிலோ அல்லது படகிலோ செல்லும் போது ஏதாவது ஆபத்து என்றால் ஒரு SOS ! செய்தியை ப்ளாஸ்டிக் பாட்டிலில் எழுதி அதைக் கடலில் வீசுவார்கள். அது யாராவது கைக்குப் போய் சேர்ந்து அதைப் படித்து நம்மைக் காப்பாற்ற வரமாட்டார்களா என்ற நப்பாசையில்.(டைட்டானிக் மூழ்கும் போதும் நிறைய MIB அனுப்பப்பட்டன.) பாட்டில் யாராவது கைக்குப் போய் சேரும் என்பது சந்தேகம் தான். அதற்கான நிகழ்தகவு ரொம்பக் கம்மி. கைக்குப் போய் சேர்ந்தாலும் அவர் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் செய்தியைப் படித்தாலும் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு காப்பாற்ற வர வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று அனுப்பும் ஒரு மெசேஜ். அது போல தான் இந்த COSMIC CALLS ..செய்தி எப்போது எங்கே யாரை சென்றடையும் என்று தெரியாது.பிரபஞ்சம் என்னும் சமுத்திரத்தில் நாம் எறியும் மிகச் சிறிய பாட்டில்கள் இவை.யாராவது ஒருநாள் எடுத்துப் படிக்க மாட்டார்களா என்ற நம்பிக்கை தான்.


But the search continues...

சமுத்ரா


Monday, May 28, 2012

அணு அண்டம் அறிவியல் -66

அணு அண்டம் அறிவியல் -66 உங்களை வரவேற்கிறது.

சில அத்தியாயங்களுக்கு வேறு ஒரு டாபிக் பார்த்து விட்டு நட்சத்திரங்கள் பற்றிய Discussion ஐத் தொடருவோம்.

ஒன்று நாம் இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோம், இல்லை தனியாக இல்லை.- இரண்டு எண்ணங்களும் பயத்தை அளிக்கின்றன - ஆர்தூர் க்ளேக்.


செவ்வாயின் நிலப்பரப்புEXTRA TERRESTRIAL LIFE அதாவது பூமியை விட்டு வேறு எங்காவது உயிர்கள் வாழ்கின்றனவா என்னும் தேடல். Are we alone in the universe ? என்னும் கேள்வி வி
ஞ்ஞானிகளை வெகுகாலமாகக் குடைந்து வந்துள்ளது.ஒரு வீட்டுக்குப் புதியதாகக் குடிபோனால் பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் (ஏதாவது ஃபிகர் கிகர் இருக்கிறதா)என்று எட்டிப் பார்க்கும் ஆர்வம் மனிதனுக்கு இயல்பாகவே உண்டு. ஆனால் பூமியின் 'பக்கத்து' வீடுகள் கற்பனை செய்யமுடியாத தூரங்களில் இருப்பதால் இந்த பக்கத்து வீட்டு ஆர்வம் இன்னும் ஓர் எல்லையிலேயே இருந்து வருகிறது. நமக்கெல்லாம் தெரிந்த மிகவும் பரிச்சயமான பக்கத்து வீடுகள் நிலா, வெள்ளி, புதன், செவ்வாய் போன்ற நம் அக்கா தங்கை வீடுகள். இவற்றில் உயிர்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது ஆபத்து என்றால் இங்கே நாம் குடியேற முடியாதா என்று ஆசைப்படுகிறார்கள்.இதில் முதல் மூன்றும் மிகவும் முசுடு. உள்ளே யாரும் காலடி எடுத்து வைக்க முடியாத படி கலீஜாக இருக்கின்றன.விருந்தினர்களை வாசலிலேயே விரட்டி அடித்து விடும் வன்னெஞ்சம் அவர்களுக்கு! BEST CHOICE செவ்வாய் என்கிறார்கள்.செவ்வாய் தன்னிடம் வருபவர்களை திரும்பி 'செல்வாய்' என்று சொல்லாமல் அதற்கு ஓரளவு விருந்தோம்பல் குணம் வாய்த்திருக்கிறது. எதிர்காலத்தில் INTER PLANETARY STATION கள் வரலாம். செவ்வாய்க்கு ஹனிமூன் பேக்கேஜுகள் வரலாம். செவ்வாய் விசா வாங்க வேண்டி இருக்கும்.இப்போதே பக்கத்தில் உள்ள கிரகங்களில் ப்ளாட்டுகள் விஜய் டிவியில் சீரியல் நடிகர்களை வைத்து விளம்பரம் போடாத குறையாக விற்பனை ஆகி வருகின்றனவாம்.காசு நிறைய இருந்தால் ஒன்றிரண்டு சைட்டுகளை இப்போதே வளைத்துப் போடவும்.பிற்காலத்தில் உங்கள் தலைமுறைகள் ச்சே கொள்ளுத்தாத்தா மார்ஸ்ல அப்பவே ஒரு சைட்டு வாங்கிப் போட்டிருக்கலாம் என்று நொந்து கொள்ளும் நிலைமையை உருவாக்க வேண்டாம்.சரி. ஜோக்ஸ் அபார்ட்.
ப்ருனோ .


'பூமிக்கப்பால் வாழ்க்கை' என்ற விவகாரத்தை 1600 களில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் தத்துவ ஞானி ஜியோர்டனோ ப்ருனோ . எல்லா ஆதிக்கமும் சர்ச்சின் கைகளில் இருந்த காலம் அது. அப்போது அவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் (ரோம் நகரில்) 'சூரியன் என்பது ஒரு நட்சத்திரம்;பூமி சூரியனை சுற்றி வருகிறது. பிரபஞ்சத்தில் இது போல தாய் நட்சத்திரத்தை சுற்றும் ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கலாம்; அதில் வெவ்வேறு உயிரினங்கள் இருக்கலாம்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்.இது பாதிரியார்களை மிகவும் உறுத்தியது. WE ARE EXCLUSIVE என்ற கர்வம் மனிதனுக்கு எப்போதுமே இருந்துள்ளது.பத்தோடு பதினொன்றாக இருக்க மனித மனம் விரும்புவதில்லை. இன்னொரு கிரகம் என்றால் அங்கு வாழ்க்கை சாத்தியம் என்றால் அங்கே உள்ள சர்சுகளில் இருந்து எங்கே பாதிரிமார்கள்,பிஷப்புகள், போப்புகள் தங்களுக்குப் போட்டியாக (?) வந்து விடுவார்களோ என்ற பயத்தில் ப்ருனோ கைது செய்யப்பட்டார். நடுரோட்டில் அவர் நிர்வாணமாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கடைசியில் உயிரோடு எரிக்கப்பட்டார். சூரியன் தான் பூமியை சுற்றுகிறது. பிரபஞ்சம் எங்கும் பூமியில் தான் உயிர்கள் இருக்கின்றன. பூமி போன்ற கிரகங்கள் இல்லை;பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே போப்பு தான். யாராவது மறுத்தால் அவர்களுக்கும் இதே கதி தான் என்று தண்டோரா போடப்பட்டது.


பூமி- பிரபஞ்சத்தின் மையம்


ஆனால் சமீபத்தில் ப்ருனோவின் ஆவி தன் பழி வாங்குதலைத் தொடங்கி உள்ளது.ஒரு மாதத்துக்கு குறைந்த பட்சம் இரண்டு பூமியொத்த கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. Bruno was right; There can be number of Popes in the universe! ஆனால் கிரகங்கள் இருப்பதால் மட்டும் அதில் உயிரினங்கள் இருக்கின்றன என்று சொல்லி விட முடியாது.கிரகங்களை (சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளின் உதவியுடன்) கண்டுபிடிப்பது சுலபம். தாய் விண்மீனின் வெளிச்சத்தில் ஒரு கரும்புள்ளி நகருவதை பார்த்தால் அது ஒரு கிரகம் என்று ஊகிக்கலாம். அந்த கிரகங்களில் டைனோசர்கள் இருந்தாலும் கூட அது தொலைநோக்கியில் தெரியாது. ஏனெனில் உயிர் என்பது ஒரு சிக்கலான விஷயம். வெப்பம், தண்ணீர், ஆக்சிஜன், கார்பன் இவை இருந்தாலும் கூட உயிர் வந்து விடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சர்க்கரை, பால், காபித்தூள் இவைகளைக் கலந்தால் இன்ஸ்டன்ட் ஆக காபி வருவதைப் போல அல்ல உயிர்.

FIRST,பூமிக்கப்பால் உள்ள உயிரினங்களைத் தேடும் போது நாம் அதீத கற்பனைகளை விட்டு விட வேண்டும். உயிர் என்றால் அது 'கிட்டத்தட்ட' பூமியில் இருப்பது போலவே இருக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இன்றி உயிர்கள் இருக்கும்; இரும்பால் ஆன உயிர்கள் (மெஷின்கள்) நடந்து வரும் , ஹைட்ரஜன் பூதங்கள் இருக்கும் என்ற கற்பனைகளை விட்டுவிட வேண்டும். இரும்பால் ஆன உயிர்கள் இருந்தால் அவை இறந்ததும் செல்லரித்துப் போவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும்.இது உயிர் சுழற்சியை ஏற்படுத்தாது.

'தண்ணீர்' ஒரு பிரபஞ்ச கரைப்பான் (UNIVERSAL SOLVENT ) என்று நமக்குத் தெரியும்.உடம்புக்குத் தேவையான சத்துக்களை மிக எளிதாக தண்ணீரில் கரைத்து செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.தண்ணீரை செல்லமாக கடவுளின் MIXING BOWL என்று அழைக்கிறார்கள். மேலும் தண்ணீர் மூலக்கூறுகள் ஒன்று ஒன்று ஒட்டிக் கொள்ளும் தன்மை உடையவை. தண்ணீரின் இந்த பசைத் தன்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.[தண்ணீரில் கப்பல் மிதப்பதற்கும் கற்களின் மேல் கப்பல் ஊர்ந்து செல்வதற்கும் ஒப்பிட்டுப் பாருங்கள்]எனவே எத்தனை உயரமாக இருந்தாலும் மரங்கள் தண்ணீரை கீழிருந்து உறிஞ்ச முடிகிறது; மேலும் தண்ணீர் ஒரு heat sink போல செயல்பட்டு ஒரு கிரகத்தின் வெப்பநிலையை MAINTAIN செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.நீரின்றி அமையாது உலகு! எனவே உயிர்கள் இருக்கிறதா என்று தேடும்
விஞ்ஞானிகள் முதலில் அங்கு தண்ணீர் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.[ அதானே , 'தண்ணி' இல்லாம எப்பூடி 'குடி' ஏறறது?]

அடுத்து கார்பன்!

கார்பனின் வெளிக்கூட்டில் அமைந்திருக்கும் நான்கு எலக்ட்ரான்கள் அதை ஸ்பெஷல் ஆக்குகின்றன. தன் கூட்டை நிறைவு செய்யும் வெறியில் அவை தாய்லாந்தில் வீதிகளில் நின்று கஸ்டமர்களை அழைக்கும் விலைமாதர்களை (நெருடலான உதாரணத்திற்கு மன்னிக்கவும்) போல மற்ற தனிமங்களை விரகதாபத்தில் தன்னிடம் ஈர்க்கின்றன. ஆக்சிஜன், ஹைட்ரஜன் , நைட்ரஜன் போன்ற சபல தனிமங்கள் கார்பனுடன் 'உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்று எளிதாக இணைந்து விடுகின்றன. ப்ரோடீன், கார்போ ஹைட்ரேட், அமினோ அமிலங்கள் போன்ற உயிருக்குத் தேவையான விஷயங்கள் கார்பன் பிணைப்புகள் மூலம் எளிதில் கிடைக்கின்றன.கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மிக நீளமான கார்பன் சங்கிலிகள் (அறுந்து விடாமல்) கிடைக்கின்றன. டி.என்.ஏ போன்ற உயிர் விதைகளுக்கு இந்த நீண்ட சங்கிலிகள் மிக அவசியம்.சுருக்கமாக சொன்னால் NO CARBON NO CHEMISTRY ! (நோ கெமிஸ்ட்ரி நோ மானாட மயிலாட :) )மிகவும் ரொமாண்டிக் ஆனது இந்தக் கார்பன். எல்லாருடனும் 'அட்ஜஸ்ட்' செய்து போகக் கூடியது.இன்னும் விளங்கும் படி சொன்னால் பிரபஞ்சத்தின் முதல் விலைமகள் கார்பன் தான்.

கார்பனுக்குப் போட்டியாக பிசினஸ் செய்யும் வல்லமை (சக்களத்தி?) சிலிகானுக்கு உண்டு.சிலிகான் கார்பனுடன் ஒத்த வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது.நான்கு பிணைப்புகள் மற்றும் தனிம அட்டவணையில் கார்பனுக்குக் கீழேயே இருக்கிறது. எனவே SILICON BASED LIFE என்பதை நீங்கள் அறிவியல் புனைவுக் கதைகளில் (A Martian Odyssey ) படித்திருக்கக் கூடும்.ஆனால் சிலிகான் பிரபஞ்சத்தில் குறைவாகவே கிடைக்கிறது. கார்பனைப் போல அவ்வளவாக வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை. கார்பனைப் போல மிக நீண்ட சங்கிலிகளை அமைக்காமல் ஆறு மூலக்கூறுகளுக்கு மேலே போனால் முணுக்கென்று கோபித்துக் கொண்டு உடைந்து விடுகிறது.

கார்பன் அதன் எலக்ட்ரான்களுடன் -பார்பதற்கு எம்பெருமான் சுதர்சன சக்கரம் போல இருக்கிறது என்று வியக்கலாம்.


சுவாசிக்கும் போது கார்பன் ஆக்சிஜனுடன் இணைந்து கார்பன்டை ஆக்சைடாக (வாயுவாக) எளிதில் மூக்குவழியே வெளியேறி விடுகிறது. ஆனால் சிலிகான் ஆக்சிஜனுடன் இணையும் போது சிலிகான் டை ஆக்சைடு (சிலிகா) (மணல்)என்னும் திடப்பொருள் கிடைக்கிறது. எனவே நாம் SILICON based life ஆக இருந்தால் மூக்கு வழியாகவும் No.2 போக வேண்டும். ஐந்து வினாடிகளுக்கு ஒரு முறை பாத் ரூம் போகும் அவலம்! GOD IS GREAT! மூக்கு வழியே நொடிக்கு நொடி நாம் வெளியிடும் கழிவு யாருக்கும் தெரிவதில்லை; துர் நாற்றமும் வீசுவதில்லை. 'உன் மூச்சுக் காற்றில் (நம்பர் டூ) நான் வாழ்வேன்' என்று சினிமாப் பாட்டெல்லாம் வேறு எழுதுகிறோம்.

மில்லர்-யூரே ஆய்வு (1953 ) புகழ் பெற்ற ஓர் உயிரியல் (அல்லது வேதிஇயல்)ஆய்வாகும். தண்ணீர், மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன் போன்ற விஷயங்களை ஒரு பிளாஸ்கில் எடுத்துக் கொண்டு [இந்த விஷயங்கள் தான் பூமியில் உயிர்கள் தோன்றிய போது இருந்தன] அதற்கு மிக மைல்டாக எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தார்கள். ஒரு வாரம் கழித்துப் பார்த்த போது பிளாஸ்கில் அமிமோ அமிலங்கள் உருவாகி இருந்தன.[அமினோ அமிலங்கள் ப்ரோடீனை உருவாக்குகின்றன] பிளாஸ்கில் கொடுக்கப்பட்ட மின்சாரம் அமோனியா மற்றும் மீத்தேனின் கார்பன் பிணைப்புகளை சைலண்டாக உடைத்து அவற்றை REARRANGE செய்து அமினோ அமில சங்கிலிகளை உருவாக்கியது.அதாவது கார்பன் ஒரு வாரத்தில் தன் பாய் ஃபிரண்டை மாற்றிக் கொண்டு விட்டிருந்தது. [நலத்தின் கண் நாரின்மை தோன்றின்.. ஆம் கார்பனின் குலம் சரியில்லை..அவள் என்ன பண்ண முடியும்?]

அடுத்து தன்னைத் தானே படியெடுத்துக் கொள்ளும் தன்மை உடைய
டி.என். மூலக்கூறுகள்! (இவையும் கார்பன் சங்கிலிகள் தான்) உலகில் முதன் முதல் டி.என்.ஏ ஏணி உருவாவதற்கு பூமித்தாய் பல மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆழ்கடலில் மில்லர்-யூரே ஆய்வை செய்து விட்டு மில்லியன் ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தால் ஒரு DNA மூலக்கூறை நாம் தரிசிக்க முடியும் என்கிறார்கள்.(It's not god; it is time that created life!) தொடர்ச்சியான மின்னல்கள் மூலமும் (நம்ம கார்பன் வந்திருக்காக ,மீத்தேன் வந்திருக்காக , அமோனியா கூட வந்திருக்காக வாம்மா மின்னலு!) கடலுள் வெடித்த எரிமலைகள் காரணமாகவும் இந்த சூப்பிற்கு ஆற்றல் கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.PRIMORDIAL சூப் என்னும் இந்த சூப் தான் நம் ஆதி உயிர் குழம்பு.

சில சிக்கலான கார்பன் சங்கிலிகள்


எனவே லாஜிகலாக ஓர் உயிர் உருவாக தண்ணீர், கார்பன் மற்றும் தன்னைத் தானே படிஎடுக்கும் DNA மூலக்கூறுகள் தேவை என்று வைத்துக் கொள்ளலாம்.இதை வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தில் INTELLIGENT LIFE இருக்கிறதா என்று தேட முடியும். அதாவது தண்ணீர் இல்லாத கிரகங்களை தாட்சிண்யம் இன்றி ஒதுக்கி விடலாம்.தண்ணீர் இருந்து கார்பன் இல்லாவிட்டால் அதையும் ஒதுக்கி விடலாம். பிரபஞ்சத்தில்(காலக்ஸியில்) உயிரினங்களைத் தேடுவதற்கு ட்ராக் சமன்பாடு (DRAKE 'S EQUATION ) உதவுகிறது.


இங்கே,

N = பால்வீதி மண்டலத்தில் இருக்கும் நாகரீகங்களின் எண்ணிக்கை. (நம்மால் தொடர்பு கொள்ள முடிந்த)
R = ஒரு வருடத்தில் நம் காலக்ஸியில் புது நட்சத்திரங்கள் தோன்றும் வீதம்

Fp = அந்த நட்சத்திரங்களில் கிரகம் உள்ள நட்சத்திரங்கள்

Ne = அந்த கிரகங்களில் வாழ்க்கையை support செய்யக்கூடிய கிரகங்கள்

Fl = அந்த கிரகங்களில் வாழ்க்கை தோன்றக்கூடிய கிரகங்கள்

Fi = அந்த கிரகங்களில் 'அறிவுள்ள' உயிர்கள் தோன்றும் கிரகங்கள்

Fc = அந்த உயிரினங்களில் தங்கள் இருப்பை வெளிப்படுத்தும் திறன் கொண்ட நாகரீகங்களின் எண்ணிக்கை

L = அந்த நாகரீகங்கள் தங்கள் இருப்பை வெளியில் வெளிப்படுத்தும் காலகட்டம்


(R ) புதிதாகப் பிறந்த நட்சத்திரங்கள் மிக சீக்கிரம் சூரியனைப் போன்ற MAIN SEQUENCE ஸ்டார் ஆகின்றன. ஒரு நட்சத்திரம் வெள்ளைக் குள்ளனாக (white dwarf )வோ சிவப்பு ராட்சசனாகவோ (Red giant ) இருந்தால் அதன் கிரகத்தில் உயிர்கள் தோன்ற முடியாது.எனவே உயிர்கள் தோன்றுவதற்கு புதிய நட்சத்திரங்கள் அவசியம்.நம் காலக்ஸியில் ஒரு வருடத்துக்கு சராசரியாக ஏழு விண்மீன் குழந்தைகள் பிறக்கின்றனவாம்.

நட்சத்திரம் ஜம்மென்று இருந்தாலும் அதில் வாழ்க்கையை தாங்கக்கூடிய கிரகங்கள் இருக்க வேண்டும். அதாவது அதன் Habitable zone னுக்குள். கோள் ரொம்பவே உள்ளே இருந்தால் அதன் தண்ணீர் எல்லாம் ஆவியாகி விடும். ரொம்பவும் தள்ளி இருந்தால் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து விடும்.நம் பூமி இருப்பது போல ஒரு Safer distance இல் இருக்க வேண்டும். Gliese 581 c என்ற பூமி நிகர் (earth like ) கிரகத்தைத் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். (பூமியைப் போல ஐந்து மடங்கு கணம்; வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ்)சமீபத்தில் இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதன் விசேஷம் என்ன என்றால் அதில் முழுவதும் கார்பன் தன் படிக நிலையில் இருக்கிறதாம். கார்பனின் படிக நிலை என்றால் அது வைரம். அதாவது நம் பூமியில் எப்படி மண் (சிலிகா)இருக்கிறதோ அது போல அங்கே வைரம். தூரத்தில் இருந்து பார்த்தால் கிரகம் எப்படி ஜொலிக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

ஆனாலும் சில
விஞ்ஞானிகள் ட்ராக் சமன்பாடு முற்றிலும் தவறு என்கின்றனர். ஒரு ஆறேழு காரணிகளை வைத்துக் கொண்டு உயிர்கள் இருப்பதை கணிக்க முடியாதது என்கின்றனர்.Life is a product of infinite number of possibilities. IOW, Drake's equation should have infinite number of variables. ட்ராக் சமன்பாடு நிறைய காரணிகளின் பெருக்கல் பலனாக இருப்பதால் ஒன்று பூச்சியம் ஆனாலும் உயிர்கள் தோன்றக் கூடிய சாத்தியக் கூறு பூஜ்ஜியம் ஆகி விடுகிறது. பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு நிறைய விஷயங்கள் சாதகமாக அமைந்துள்ளன. சூரியனிடம் இருந்து அதன் தூரம், பூமியின் சாய்வு, நிறை, காந்தப்புலம் ,வளிமண்டலம், ஓசோன் படலம், கடல்கள்,துணைக்கோள் நிலா, பூமிக்கு அடுத்து பூதாகரமான வாயுக்கோள் வியாழன் (ஆஸ்டிராய்டுகளை உள்ளே விடாமல் விலக்க) , ஆக்சிஜன், கார்பன், வளிமண்டல அழுத்தம், etc .,(RARE EARTH HYPOTHESIS )[பூமிக்கு நிலவு இல்லை என்றால் கடல்கள் துருவப்பகுதிக்கு ஓடிப் போய் விடும்.பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு இல்லாததால் பல மடங்கு அதிகரித்து குறுகிய இரவு பகல் சுழற்சி ஏற்படும்.இது தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவாது!]

அதாவது பூமியில் உயிர்கள் தோன்றியது மிக மிக மிக அரியதொரு நிகழ்வு என்கிறார்கள். மாயாஜாலப் படம் ஒன்றில் ராஜாவின் நோய் தீர்க்கும் மருந்து என்ன என்பதற்கு வைத்தியன் , "நடு அமாவாசை இரவில் மழை பொழியும் போது அந்த மழைநீர் ஒரு மண்டை ஓட்டின் உள்ளே நேரடியாக விழ வேண்டும்.அதில் நல்ல பாம்பின் விஷம் ஒரு சிறிதே கலக்க வேண்டும்.அதுதான் மருந்து" என்பான். அது போல பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு நிறைய நிறைய ஆயிரக்கணக்கான காரணிகள் ஆச்சரியகரமாக ஒன்று சேர வேண்டும்.(improbable combination of astrophysical and geological events and circumstances.) அரிய பூமி அனுமானம் என்ற இந்தக் கொள்கை கோபர்னிகன் தத்துவத்துக்கு எதிரானது.கோபர்
னிகன் கொள்கை பூமி இந்த பிரபஞ்சத்தில் எந்த விதத்திலும் ஸ்பெஷல் அல்ல என்கிறது.நாம் பத்தோடு பதினொன்று தான். உயிர்கள் எங்கே வேண்டுமானாலும் தோன்ற முடியும் என்கிறது .ஆனால் FERMI PARADOX என்ற இன்னொரு தத்துவம் அறிவுள்ள) உயிர்கள் வேறு கிரகங்களில் இருந்தால் அவர்களின் சிக்னல்களை நாம் ஏன் அறிய முடிவதில்லை என்று கேட்கிறது. நாம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த நூறு ஆண்டுகளிலேயே ரேடியோ அலைக் குப்பைகளை ஏராளமாக வெளியில்(space ) வீசி உள்ளோம். நம் காலக்ஸியில் எங்காவது வளர்ச்சியடைந்த நாகரீகங்கள் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக தொலைத்தொடர்புக்கு மின்காந்த அலைகளை உபயோகப்படுத்த வேண்டும். அவற்றின் மிச்சங்களை நாம் ஏன் detect செய்ய முடிவதில்லை?

milky way galaxy


நம் பால்வீதி காலக்சி கூட ஸ்பெஷல் என்கிறார்கள்.ஏனென்றால் மற்ற காலக்சிகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் சாது. நட்சத்திர மோதல்கள்,சூப்பர் நோவாக்கள் போன்றவை இங்கே அடிக்கடி நிகழ்வதில்லை.மேலும் நம் சூரியன் காலக்ஸியின் மையத்தில் இல்லாமல் ஓரளவு விளிம்பில் உள்ளது.மையத்துக்கு அருகில் இருந்தால் காமா கதிர் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும்.மேலும் நம் சூரியன் நடுத்தர வயதில் இருக்கிறது.இதையெல்லாம் பார்க்கும் போது நாம் ஒரு விதத்தில் ஸ்பெஷல் தானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் நம் பக்கத்து வீட்டுக்காரர்களை தேடும் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் தான் இருக்கிறது.

........


சமுத்ராFriday, May 25, 2012

கலைடாஸ்கோப் -65

லைடாஸ்கோப் -65 உங்களை வரவேற்கிறது.

001
===

இந்தக் 'கொட்டாவி' யைப் பற்றி நிறைய பேர் ஆராய்ச்சி செய்து Ph .D எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் கொட்டாவி உண்மையில் ஏன் வருகிறது என்று இதுவரை தெரியவில்லையாம்.(?!) கொட்டாவியைத் தொடர்ந்து உடம்பை நீட்டி முறிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதாக சொல்கிறார்கள். ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க, மூளையை குளிர்ச்சி செய்ய , தூக்கத்தின் அறிகுறியாக, உடம்பு தண்ணீர் வேண்டும் என்று கேட்பதால் என்று கொட்டாவிக்கு நிறைய காரணம் சொல்கிறார்கள். ஒரு விஷயம், ரொம்பவே போர் அடித்தால் அதை நாம் விடும் கொட்டாவி காட்டிக் கொடுத்து விடும். தொடர்ந்து பேசி கழுத்தறுக்கும் ஆசாமிகளிடம் இருந்து விடுபட கொட்டாவி ஒரு சிறந்த சாதனம்.

கொட்டாவி ஒரு தொற்றிக் கொள்ளும் வியாதி. சின்ன வயதில் இந்தக் கதையை பாட்டி சொல்லிக் கேட்டதுண்டு.

ஒரு வயதான கிழவி ரொம்பவுமே கருமியாக இருந்தாள். எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டாள். தன்னிடம் உள்ள பணத்தையும் நகைகளையும் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு குடுவையில் குழிதோண்டிப் புதைத்து வைத்துக் கொண்டு வெளியே ஏழை போல நடமாடினாள். வாரா வாரம் ஒருநாள் நடுராத்திரியில் எழுந்து கொண்டு தோட்டத்துக்கு சென்று பணம் சரியாக இருக்கிறதா என்று அவள் சரிபார்ப்பது வழக்கம்.அப்படி ஒரு நாள் அவள் செய்து கொண்டிருக்கும் போது அவளுக்கு ஏனோ கொட்டாவி வந்தது. உடனே கிழவி அலர்ட் ஆகி 'கொட்டாவி இல்லாமல் கொட்டாவி வராது; குடுவையே வா வீட்டுக்குள் போகலாம்' என்று சொல்லி குடுவையை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விட்டாளாம். கிழவி போனதும் புதையலை திருடி விடலாம் என்ற எண்ணத்துடன் அங்கே திருடன் ஒருவன் மரத்தின் பின் ஒளிந்து கொண்டிருந்தான்.நிறைய நேரம் காத்திருந்ததால் பாவம் அவனுக்கு கொட்டாவி வந்து விட்டது!

நம் மனதுக்குப் பிடித்த செயல்களை செய்யும் போதோ(உதாரணம்: குழிதோண்டி காசு புதைத்து வைத்தல்), நம் மனதுக்குப் பிடித்தவர்களுடன் இருக்கும் போதோ கொட்டாவி கண்டிப்பாக வராது என்று தோன்றுகிறது. நாளை ஒருநாள் முழுவதும் எத்தனை தரம் நீங்கள் கொட்டாவி விடுகிறீர்கள் என்று எண்ணி வையுங்கள்.

0- நீங்கள் வேற்று கிரக வாசி
0-5 படு ஆக்டிவ்வான மனிதர் நீங்கள்.
5-10 நீங்கள் நார்மல்
10-20 நீங்களும் நார்மல்.
20-50 நீங்கள் மிகவும் சலிப்பான மனிதர். உங்களைப் பற்றி ஏதாவது மேலும் எழுதலாம் என்றால் எனக்கே கொ. வருகி..
50 க்கு அதிகம் - இப்போது உள்ள வேலையை விட்டு விட்டு ஆசிரமம் ஆரம்பிக்கவும். சர்ச்சை, பேச்சு, பேட்டி, வீடியோ என்று
வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யம் ஆகி விடும்.


010
=======

ஒவ்வொரு
திருப்பத்திலும் -
ஒரு
சிறிய
தயக்கம்.

இது ஒரு ஹைக்கூ. எழுதியது யார் என்பது தெரியாது. ஆனால் இதன் அர்த்தம் சிந்திக்க வைக்கிறது. சாலையில் ஒரு திருப்பம் வருகிறது. நாம் நடந்து கொண்டிருந்தாலும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தாலும் திருப்பம் வரும் போது ஒரு தயக்கமும் கூடவே வருகிறது. சாலைகளில் மட்டும் அல்ல. வாழ்க்கையிலும் நமக்குத் திருப்பங்கள் நேர்கின்றன. அப்போதும் தயக்கம் நம்மிடம் தொற்றிக் கொள்கிறது. என்னடா? இதுவரை நல்ல ஜம்மென்ற சாலையில் பயணம் செய்தோமே? திருப்பத்துக்கு
அந்தப் புறம் என்ன இருக்குமோ? பெரிய மிருகம் ஒன்று படுத்திருக்குமோ? கொலைகாரர்கள் இருப்பார்களோ ? வாகனம் ஏதாவது படுவேகத்தில் வந்து கொண்டிருக்குமோ என்று ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிராகவே இருக்கிறது.ஆனால் வாழ்க்கை என்பது தேசிய நெடுஞ்சாலை அல்லவே? திருப்பங்கள் நிறைந்த ஒரு திகில் கொண்டை ஊசி வளைவுப் பயணம். அடுத்த நொடி என்ன ஆகுமோ என்று தெரியாமல் தான் இன்று நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். But it has its own thrill too..
அடுத்த முறை ஊட்டி, சத்தியமங்கலம் போன்ற கொண்டை ஊசி வளைவுகள் வழியே பயணம் செய்ய நேரும் போது 'நம் வாழ்க்கையும் இப்படித்தான்' என்று ஒருமுறை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

011
=====

இன்று காலையில் பஸ்ஸில் பார்த்த ஃபிகரின் முகம் நினைவில் இருக்கிறதா? (இருக்கும்) .இதே உங்கள் அக்காவின் முகமோ, அம்மாவின் முகமோ, தங்கையின் முகமோ திடீரென்று ஞாபகத்தில் கொண்டுவருவது கஷ்டம். இது ஏன் என்றால் 'தினமும் பார்க்கும் மூஞ்சி தானே' என்று மூளை அதை அலட்சியப் படுத்தி விடுகிறது. ஓஷோவின் தியானம் ஒன்று உள்ளது. சிவா தன் துணைவிக்கு சொன்ன 108 தியான முறைகளில் இதுவும் ஒன்று.அதாவது நாம் தினமும் பார்க்கும் அரதப் பழசான விஷயங்களையும் கூட அன்று தான் முதன் முதலில் புதிதாகப் பார்ப்பது போல பார்ப்பது. உண்மையில் நாம் நிறைய விஷயங்களைப் பார்ப்பதே இல்லை. அதே மனைவி தானே, அதே ஆபீஸ் தானே, அதே டீம்-மேட்ஸ் தானே? அதே பஸ் தானே என்று கண்ணில் தோன்றும் நூறு விஷயங்களை நம் கண்ணே ஃபில்டர் செய்து விடுகிறது.

இனிமேல் அப்படிப் பார்க்காமல் ஒருநாள் மட்டும் இந்த தியானத்தை செயல்படுத்திப் பாருங்கள்.காலையில் கண் விழித்ததும் உங்கள் படுக்கை அறையை ஏதோ ஒரு புதிய அறையை பார்ப்பது போல அல்லது முதன்முதலில் பார்ப்பது போல பாருங்கள். காபி கொண்டு வரும் மனைவியை அன்று தான் முதன் முதலில் பெண் பார்க்க செல்வது போல பாருங்கள் (மனைவியின் பாசிடிவ்/நெகடிவ் ரியாக்சனுக்கு நான் பொறுப்பல்ல) குழந்தைகளையும் அப்படியே பாருங்கள். (வேலைக்காரியை எப்படிப் பார்க்க வேண்டும் என்று தியானத்தில் சொல்லவில்லை ) காரில் ஏறி அமர்ந்ததும் அன்று தான் அந்தக் காரைப் புதிதாக வாங்கியது போல கண்ணை சில மி.மீ முழித்துப் பாருங்கள். வழக்கமாக ஆபீஸ் செல்லும் சாலை, ஆபீஸ், ஆபீஸ் பியூன், மேனேஜர் என்று சகலத்தையும் புதிய விழிகளுடன் பார்க்கவும்..நீங்கள் ஜி.எம்.ஆகவே இருந்தாலும் முதல் முதலில் வேலை கிடைத்து பிரம்மாண்டமான ஆபீசுக்குள் நுழையும் போது எப்படி பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போலப் பார்த்தீர்களோ அப்படிப் பார்க்கவும். அன்று முழுவதும் நீங்கள் மிக உற்சாகமாக இருப்பது போல உணர்வீர்கள். புதிய விஷயங்களுடன் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி இருக்கிறது எனவே இந்த தியானம் உங்கள் விழிப்புணர்வை விருத்தி செய்யும் என்கிறார் ஓஷோ.

உண்மையில் எல்லாமும் புதியது தான். பழையது என்பது மாயை. நீங்கள் உங்கள் மனைவியை/கணவனை இன்று பார்க்கும் போது அவர் நேற்று இருந்ததைப் போல இல்லை.எவ்வளவோ மாற்றங்கள் அவருக்குள் நிகழ்ந்து விட்டிருக்கின்றன.எனவே எல்லாமும் புதிது தான். நம் மனம் தான் எல்லாவற்றுக்கும் 'பழைய' சாயம் பூசி விடுகிறது.

100
=====
விகடனின் முத்திரைக் கவிதைகள் இரண்டு:

துல்லிய நீர்ப்பரப்பில்
துறவி போல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்;
பார்பதற்குப் பரவசம் தான்
மீனுக்குத் தானே தெரியும்
கொக்கின் குரூரம்

-'தோற்ற மயக்கம்' -எஸ்.ஆர். ராஜாராம்

விழுங்கிய மீன்
தொண்டையில்
குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்

-'வலி' ஜி.ஆர்.விஜய்

101
=====

மேலும் சில கவிதைகள் :-


மோதல்
========
எத்தனையோ இடம் இருந்தும்
சில சமயங்களில்
எதிரெதிரே
முட்டிக் கொள்ளும் படி
வந்து விட நேர்கிறது.

சா ரி கா பா
===========
அங்க கொஞ்சம் இறக்கிப் பாடு
சா ரி கா பா தா ஸ நீ தா ரா ரா வேணு கோபாலா
சரணம் எடுக்கறப்ப சுருதி குறையுது பாரு
அந்த இடத்தில் ரொம்ப ஆட்டாதே
யதுகுல காம்போதி வந்துரும்
தலைல குட்டவா? தோடி பாடறியா தன்யாசியா?
-பாட்டி சங்கீதம் சொல்லித் தந்த சுவாரஸ்யம்
இன்று
'காகலி நிஷாதம்'
'If you compare these scales ' 'பிட்ச்' 'ஆக்டேவ்'
'You have to sing with little gamakam '
என்று சொல்லித் தரும் ஆன்லைன் பாடங்களில் இல்லை!

மழை
======
காலையில் வரும் மழை
ஏன் சூடாக இல்லை என்று
என் நான்கு வயது மகள் கேட்டாள்
இன்னும் விடையைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.

-சமுத்ரா

110
===
சமீபத்திய ட்விட் ஒன்று இப்படி சொல்கிறது:

பொது கட்டண கழிப்பிடத்தில் ஒரு ரூபாய் அதிகம் வசூலித்தார்கள். ஏன் என்று கேட்டால் 'பெட்ரோல் விலை ஏறி விட்டது' என்கிறார்கள்.
பெட்ரோல் விலை உயர்வு நமக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் ஏதாவது
ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ அரசு மற்றும் பொதுமக்கள் செயல்படுத்தியே ஆக வேண்டும்.
(assuming decrease in demand will bring the price down)

* ஒரு வீட்டுக்கு டூ வீலர் அல்லது ஃபோர் வீலர் ஒன்றை மட்டுமே அனுமதித்தல்.
* புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பே டுர்-டுர் என்று உறுமும் ஆம்னி பஸ்களுக்கு ஃபைன் போடுதல்
* கார் -pooling ஐ கட்டாயமாக்குதல். கப்பல் போன்ற காரில் ஒருவர் மட்டுமே இருந்தால் அவருக்கு பைன் போடுதல். *கிராக்கியை இறக்கி விட்டு திரும்பும் கால் டாக்சிகளை உபயோகப்படுத்துதல்
* பெட்ரோலை அதிகம் குடிக்கும் பழைய , பழுதான வாகனங்களை பயன்படுத்தாது இருத்தல்; தடை செய்தல்
*முடிந்த வரை சாலைகளில் பிரேக்குகள், தேவையில்லாத திருப்பங்கள், தேவையில்லாத மேடுகள், டோல் கேட்டுகளைத் தவிர்த்தல்
*Fuel efficient வாகனங்களை வாங்குதல்.வாகனத்தை நல்லபடி MAINTAIN செய்தல்
* பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு தீப்பெட்டி வாங்க டூ வீலரில் செல்லாமல் நடராஜா சர்வீஸ் உபயோகித்தல்
* அரசு பஸ்களை நேரத்துக்கு இயக்குதல். எல்லா இடங்களுக்கும் இயக்குதல்.பஸ்களை user friendly ஆக்குதல்.
* மாற்றுத் திறனாளிகளுக்கான பஸ்களை அதிகம் இயக்குதல்.
* ஆட்டோக்களுக்கு அளிக்கப்படும் லைசன்சுகளைக் குறைத்தல் (பெங்களூருவில் சாலையில் 50 % ஆட்டோக்கள் தான் போகின்றன.) தனிநபர் அட்டோவைத் தடை செய்தாலும் நலம்.
* பாரின் நாடுகள் போல சாலைகளில் சைக்கிள் மட்டுமே செல்ல தடங்களை அமைத்தல். இதனால் நிறைய பேர் சைக்கிள் உபயோகிக்கலாம். இப்போது சாலையில் சைக்கிளில் சென்றால் வேற்றுகிரக வாசி போல பார்க்கிறார்கள்.
*தேவையில்லாத சிக்னல்களை எடுத்து விடுதல்.
*மெதுவான வேகத்தில் போனால் போதும் ; ஃபிகரை impress செய்ய வேண்டாம் என்று நினைக்கும் தாத்தாக்களுக்கு பேட்டரி
டூ வீலர்கள் பேட்டரி கார்கள் அளித்தல். லோன் உதவி செய்தல்.
*weekdays களில் இன்று நிறைய பஸ் சர்வீஸ்கள் ஒரு பயணி, இரண்டு பயணிகளுடன் செல்கின்றன. இதை கண்டிப்பாக
investigate செய்து குறைந்த பட்சம் பத்து பேர் இருந்தால் மட்டுமே பஸ் எடுக்க முடியும் என்று சட்டம் இயற்றுதல்.முன்பே சொன்னது போல Return ட்ரிப் களை சிறப்பாக உபயோகித்தல். லாரிகளை முடிந்த வரை முழுவதுமாக லோட் செய்தல்.

111
=====
ஓஷோ ஜோக்.

ஒரு நாள் முல்லா மாடிப் படிகளில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். டொம் என்று பெரிய சத்தம் கேட்டது. சட்டையில் ஒட்டி இருந்த மண்ணைத் துடைத்துக் கொண்டு எதுவுமே நடக்கவில்லை என்பது போல வீட்டுக்குள் வந்தார்.மனைவி ' என்ன சத்தம்' என்று கேட்டாள். முல்லா 'ஒன்றும் இல்லை. மாடியில் இருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது' என்றார்.'சட்டை கீழே விழுந்ததற்கா அத்தனை சத்தம்?' என்றார் முல்லாவின் மனைவி

'அது ஒன்றும் இல்லை. அந்த சட்டைக்குள் நானும் இருந்தேன்' என்றார் முல்லா.

இன்னொரு ஜோக். வாழ்வே ஒரு கொண்டாட்டம். சிரியுங்கள். நடனமாடுங்கள் -ஓஷோ.

ஃபாதர் ஓ ஃப்லானகன் சர்ச்சில் கூடி இருந்தவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் 'அன்பர்களே, நீங்கள் எந்த சூழ்நிலையிலும்
கோபம் கொள்ளக் கூடாது. பொறுமையாக இருப்பவர்களையே கடவுளுக்குப் பிடிக்கும்.எதிரிகளிடமும் இனிய வார்த்தை பேச வேண்டும். கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.உதாரணமாக , பாருங்கள் என் மூக்கின் மீது ஒரு ஈ உட்கார்ந்து இருக்கிறது. நான் பதட்டப்படவே இல்லை. அதை நான் விரும்புகிறேன். அதைப் பார்த்து அன்புடன் 'ஓ ஈயே , நீ இங்கிருந்து போய் விடு என்று இதமாக சொல்லப் போகிறேன்.

"ஓ! ஜீசஸ், இது ஈ இல்லை. தேனீ, சீ, பாழாப் போன தேனீ, கடிச்சு கிடிச்சு வெச்சா என்ன பண்ணறது, கருமம் பிடிச்ச சனியனே, போ இங்கிருந்து , யாரு மூக்கு மேலே உட்கார்ந்திருக்க தரித்திரம் பிடிச்ச சனியனே "என்று துள்ளிக் குதித்தார் ..

சமுத்ரா

Thursday, May 17, 2012

கலைடாஸ்கோப் -64

லைடாஸ்கோப் -64 உங்களை வரவேற்கிறது.


int main()
{
int i=0;
i++;

ஒலி பரவ காற்று (அல்லது ஊடகம்) தேவை என்பது நமக்குத் தெரியும். அப்படி இல்லாமல் 'நான் என் சொந்தக் கால்களிலேயே' நடந்து வருவேன் என்று ஒளி போல ஒலி நினைத்தால் எப்படி இருக்கும்?நம்மை சுற்றி உள்ள பிரபஞ்சத்தின் 'சத்தத்தை' நம்மால் கேட்க முடியும்.'பிரபஞ்சத்தின் மௌனம் என்னை திகிலில் ஆழ்த்துகிறது' என்பது தத்துவஞானி ஒருவரின் வாசகம். நம் வளிமண்டலத்தைத் தாண்டிப் போய் விட்டால் எல்லையில்லாத மௌனம் தான்.[காதுக்கருகில் போய் காதலர்கள் பேசுவது போல பேசினால் எலும்புகள் மூலம் ஒலி ஓரளவு நேரடியாகக் கடத்தப்படும்]சரி. வெற்றிடத்தில் ஒலி நகர்ந்து வருமே ஆனால் சூரியனின் ஒலியை(?) நம்மால் கேட்க முடியும். சூரியன் என்ற மெகாசைஸ் அணு உலை அவ்வளவு சைலன்ட் அல்ல என்கிறார்கள். வளிமண்டலத்துக்கு வெளியே சதா மோதிக் கொண்டு இருக்கும் asteroid (விண்கற்கள்) களின் ஒலியைக் கேட்க முடியும். சூரியன், செவ்வாய், வியாழனில் நிகழும் புயல்கள் கூட சன்னமாகக் கேட்கும். சூப்பர் நோவாக்களின் சத்தம் கூடக் கேட்கும். மொத்தத்தில் எப்போதும் ஈரான் போன்ற ஒரு யுத்த பூமியில் இருப்பது போல இருக்கும். THANK GOD , FOR SOUND NEEDS A MEDIUM ...

i ++;

நண்பர் ஒருவர் புதிர் ஒன்று கேட்டிருந்தார்.

புதிர்களுக்கு விடை சொல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: 'இதையெல்லாம் நாங்க ஸ்கூல்லயே படிச்சிட்டோம்.யாரு கிட்ட' என்ற தொனியில் பதில் சொல்ல வேண்டாம். இந்த ப்ளாக்கை எல்லா வயதினரும் படிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் இப்போதுதான் ஸ்கூலுக்கு செல்லும் ஒரு மாணவருக்கு இந்தப் புதிர் புதிதாகவே இருக்கும்.

பிறவியிலேயே பார்வை இல்லாத ஒருவரின் கையில் சில பொருட்களைக் கொடுத்து தடவிப் பார்க்க சொல்கிறோம். உதாரணம் குடை,பென்சில், பந்து, டி.வி. ரிமோட் போன்றவை. அவர் குடையைத் தடவிக் கொண்டு இருக்கும் போது 'இது தான் குடை' என்று அவரிடம் நாம் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.இப்போது அவருக்கு தமிழ் சினிமாப் படங்கள் போல திடீரென்று பார்வை வந்து விடுவதாக வைத்துக் கொள்வோம்.அப்போது அவர் முன்னால் (அவருக்கு ஏற்கனவே தொடுதல் ரீதியாகப் பரிச்சயமான) குடை இத்தியாதிகளை வைத்து விட்டு, இதில் எது குடை எது பந்து என்று தொடாமல் சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் அவர் சரியாக சொல்லுவார் என்று ஒரு கோஷ்டியும் சரியாக சொல்ல மாட்டார் என்று இன்னொரு கோஷ்டியும் சொல்கிறார்கள். தொட்டு ஒரு பொருளை உணரும் போது அவர் மனதில் அந்தப் பொருளின் பிம்பத்தை create செய்கிறார் என்று ஒரு சிலரும் பிறவியிலேயே பார்வை இல்லாததால் அவரால் இமேஜ் create செய்யமுடியாது தொடுதல் மூலமாகவே (பார்வை வந்த பின்னும்) ஒரு பொருளை அடையாளம் காண முடியும் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.

சரி இப்போது புதிர்.

உங்கள் முன் ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் எப்போதும் உண்மையே பேசுபவர். மற்ற நான்கு பேரும் உண்மை பொய் என்று மாற்றி மாற்றி பேசுபவர்கள். அதாவது முதல் கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் அடுத்த கேள்விக்கு தவறாக பதில் சொல்வார்கள் அதற்கு அடுத்த கேள்விக்கு சரியாக and so on .உங்களுக்கு யார் உண்மை பேசுபவர் யார் உல்டாவாகப் பேசுபவர் என்று தெரியாது.இப்போது உங்களிடம் இரண்டே இரண்டு கேள்விகள் இருக்கின்றன. இரண்டு கேள்விகளை யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம்.(இரண்டு கேள்விகளை ஒருத்தரிடமே கூடக் கேட்கலாம்). இந்த இரண்டு கேள்விகளை வைத்துக் கொண்டு உண்மை பேசுபவர் யார் என்று சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.அந்தக் கேள்விகள் என்னென்ன?

i ++;

இப்போதெல்லாம் தமிழ் சினிமா ,டைட்டில்களுக்கு மெனக் கெடுவதே இல்லை. முன்பே வந்த பாடல்களின் வரிகளை டைட்டில்கலாக வரித்துக் கொள்கிறது. உதாரணம்: ஒரு கல் ஒரு கண்ணாடி

கீழ்க்கண்ட தலைப்புகளில் NEAR FUTURE அல்லது FAR FUTURE இல் படங்கள் வரலாம்:

* நாக்கமுக்க
* கொலவெறி
* இதுதானா இதுதானா
* ரா ரா
* கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
*
ர்க்கரை நிலவே
* கண்கள் இரண்டால்
* மின்சாரக் கண்ணா
* நெஞ்சோடு கலந்திடு


i ++;

'சென்னையில் ஒருநாள்' வாழ்வின் நிதர்சனங்களை நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விடுகிறது. ஐ.டி. யில் இருந்தால் அவன் எப்போடா வெளியே போகச் சொல்வான் எப்போ எங்கே போகச் சொல்வான் என்ற திகிலுடனே இருக்க வேண்டி இருக்கிறது. அவன் சென்னை போகச் சொன்னால் போக வேண்டும். பெங்களூர் வாசிகளுக்கு சென்னை செல்வது ஒரு DOWNGRADED PROCESS .சென்னை யில் இருக்கும் ஆபீஸ் நண்பர் ஒருவர் 'தயவு செய்து இங்கே வந்து விடாதீர்கள்' பெஞ்சில் இருந்தாலும் பெங்களூரிலேயே இருங்கள் எப்பாடு பட்டாவது இண்டர்வியூவை சொதப்பி விடுங்கள் என்றார். சென்னையின் சோளிங்கநல்லூர் ஏரியா அந்த அறிவுரையின் தீவிரத்தை உணர்த்தியது. அதுவும் பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிடியைப் பார்த்தவர்களுக்கு சோ.நல்லூர் ஏதோ தண்ணி இல்லாத காடு போல இருக்கிறது.அதுவும் பெங்களூருவில் கடந்த ஒரு வாரங்களாக மழை + ரொமாண்டிக் வானிலையைப் பார்த்து விட்டு சென்னை சென்றால் அது மிகவும் UNROMANTIC ஆக தோன்றுகிறது. உலகில் எத்தனையோ நகரங்கள் கடல் மட்டத்தில் இருக்கின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால் நாம் சென்னையை ரியல் எஸ்டேட் களின் பெயரால் எப்படி கெடுத்து வைத்திருக்கிறோம் என்பது ஏனோ நமக்கு உறைப்பதே இல்லை. பஸ்ஸில் வாங்கி குடித்து விட்டு வெளியே எறியும் வாட்டர் பேக்கெட் கூட சென்னையை ஏதோ ஒரு விதத்தில் இன்னும் மோசமாக்கும் என்ற கேயாஸ் தியரி ஏனோ நமக்கு உரைப்பதே இல்லை. கமலஹாசன் படம் எடுத்தாலும் அதெல்லாம் நமக்குப் புரிவதில்லை. நகரம் எக்கேடு கெட்டால் என்ன? நாம் வீட்டில் ஏ.சி. போட்டுக்கொண்டு பக்கோடாவைக் கொறித்துக் கொண்டே ஐ.பி.எல் பார்க்கலாம் என்ற மனநிலை வேறு நம்மில் பலருக்கு இருக்கிறது. ஓர் அழகிய கடற்கரை நகரத்தை இத்தனை மோசமாக மாற்றி வைத்திருக்கிறோம். பெங்களூர் ஐ.டி. ஊழியர்கள் சென்னை என்ற வார்த்தையைக் கேட்டாலே அஜாமேளன் நாராயண நாமத்தைக் கேட்ட மாதிரி பதறுகிறார்கள்.

சிங்காரச் சென்னை எப்போதோ சீர்கெட்ட சென்னை ஆகி விட்டது. வெறுமனே சுவருக்கு சுவர் 'அண்ணன் வாழ்க' 'தமிழ்க்குலத் தலைவர் வாழ்க' 'விடிவெள்ளி வாழ்க' 'வேழம் நிகர் வேந்தன் வாழ்க' என்று போஸ்டர் அடித்து ஒட்டாமல் போர்க்கால அடிப்படையில் அரசியல் வாதிகள் சென்னைக்காக ஏதேனும் செய்தே ஆக வேண்டும். சென்னையில் ஒரு மரம் வெட்டப்பட்டாலும் ம-
ர் போச்சு என்று இருக்காமல் உயிர் போகிற அளவு துடிக்க வேண்டும். சாலையெங்கும்
ஆக்கிரமித்திருக்கும் ப்ளாஸ்டிக் பைகளுக்கு , கண்ட இடங்களில் கடைவிரித்து வியாபாரம் செய்து அழுக்காக்குபவர்களுக்கு, ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு, சரியான வடிகால் இன்றி ஓடும் சாக்கடைகளுக்கு,வரைமுறை இன்றி வெப்பத்தைக் கக்கும் Process -களுக்கு, வீணாகும் தண்ணீருக்கு,வாகனங்களுக்கு ஒரு போர்க்காலத் தீர்வு வேண்டும்.
எப்போது சென்னைக்கு ட்ரான்ஸ்பர் தருகிறீர்கள் என்று பெங்களூர் வாசிகள் தங்கள் மேனேஜர்களை நச்சரிக்கும் காலம் வர வேண்டும். அதுதான்
நமக்குப் பெருமை. CHENNAI BADLY NEEDS ATTENTION ...


i ++;

ரசித்த சில விளம்பரங்கள்:i ++;

சினிமா பாடல்களுக்கும் கர்நாடக இசைப் பாடல்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நண்பர் கேட்டார். கேள்வி கொஞ்சம் சுலபமாகத் தோன்றினாலும் பதில் கொஞ்சம் கடினம்.

க. பாடலில் ஒரு குறிப்பிட்ட ராகம் வரவில்லைஎன்றால் அதை சாஹித்யம் என்று கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். WELL DEFINED UNDOUBTFUL ராகம் ஒன்று அதில் இருக்க வேண்டும். கொஞ்சநேரம் கொஞ்சநேரம் என்று பாடினால் அது ஆபோகியா ஸ்ரீரஞ்சனியா வலசியா என்று கடைசி வரை சந்தேகத்திலேயே இருக்கக் கூடாது.சினிமாப் பாடல்களில் சில
(பல) ஒரே மாதிரி இருக்கும். இருபது கோடி நிலவுகள் கூடி, வானம் பாடியின் வாழ்விலே, அழகான சின்ன தேவதை இந்த மூன்று பாடல்களையும் அடுத்தடுத்துக் கேட்டுப் பாருங்கள் புரியும். ஆனால் இன்ன ராகம் என்ற கேடகிரியில் இணைக்க முடியாது. ராகம் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் இளையராஜா தர்மவர்தினியை use செய்திருக்கிறார், ரஹ்மான் நாட்டக்குறிஞ்சியில் பாட்டுப் போட்டிருக்கிறார் என்பதால் மட்டும் அதை கச்சேரிகளில் பாட முடியாது. மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச என்ற வரிகளை நிரவலுக்கு எடுத்துக் கொள்வது TECHNICALLY கரெக்ட். ஆனால் அது எப்படி ஏடா கூடமாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.

பாபநாசம் சிவனின் கிருஷ்ணா முகுந்த முராரே தேவியைப் பூஜை செய்வாய் போன்ற சினிமாப் பாடல்களை மேடைகளில்
பாட அனுமதி இல்லை.அவரின் NON சினிமாப் பாடல்களையே நிறைய நாள் மேடைகளில் அனுமதிக்க வில்லை. சினிமாவுக்கு பாட்டெழுதும் ஒருவரின் பாடல்களை எப்படி தியாகய்யரின் 'கத்தனுவாரிகி' யுடன் பாடுவது என்ற தயக்கம். ஆனால் இப்போது பா. சிவனின் பாடல்கள் (சினிமாவில் வராத கர்நாடக இசைப் பாடல்கள்) வெகுவாகப் பாடப்படுகின்றன. மா ரமணன், கார்த்திகேய காங்கேய, ஸ்ரீ மாதவா, ஸ்ரீ வாதாபி கணபதியே, etc .,

இன்னொரு வித்தியாசம் SONG PETTERN ... பல்லவி அனுபல்லவி சரணம் என்று இருப்பது.(கீர்த்தனைகளுக்கு) சினிமாப் பாடல்களில் அந்த அமைப்பு அவசியம் இல்லை. பல்லவிக்கும் ௮.பல்லவிக்கும் எதுகை வரவேண்டும் என்ற அவசியமும் இல்லை. பாடலின் நடுவில் ஒரு கட்டைக் குரல் பாடகி தாளம் மாறி கத்துவதற்கு சினிமாப் பாடல்களில் அனுமதி உண்டு.ஆ, ஊ, கும்தலக்கா , உவ்வாஹு நீயா என்று துணைப்பாடகர்கள் இடையிடையே கத்தலாம். பாடகர் திடீரென்று சுருதியை உயர்த்தி வலிப்பு வந்தது போல பாடலாம்.இவையெல்லாம் க. சங்கீதத்தில் அனுமதிக்கப் படுவதில்லை. மேலும் தாளம் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறது க.சங்கீதத்தில். கைத்தட்டு ஒன்று விலகினாலும் அதற்கான விலையை பாடகர் கொடுக்க வேண்டி இருக்கும்.

இந்த freedom தான் சினிமா இசை பெரும்பாலான மக்களால் விரும்பப்படுவதற்குக் காரணம். க. இசை என்பது கடிவாளம் இட்ட டொக்கு டொக்கு குதிரை வண்டிப் பயணம். சி.இசை என்பது ரோலர் கோஸ்டர் ...i ++
ஓஷோ ஜோக்.

[நீங்கள் கடவுளை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் பிரார்த்தனை செய்வதை விட அவரிடம் ஒரு ஜோக் சொல்லுங்கள். அவர் அதை மிகவும் விரும்புவார்- ஓஷோ]

பீட்டர் ஒரு சியாமீஸ் பூனை வைத்திருந்தான். அவன் அதை மிகவும் நேசித்தான். ஆனால் அதை விட்டுப் பிரிந்து அவன் வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. எனவே அவன் சகோதரனிடம் 'என் பூனையை நான் திரும்பி வரும் வரை பத்திரமாகப் பாத்துக் கொள்' என்று பலமுறை சொல்லி விட்டு கனத்த மனதுடன் வெளிநாடு சென்றான். மறுநாளே தன் சகோதரனுக்கு ஃபோன் செய்து பூனை எப்படி இருக்கிறது என்று கேட்டான். சகோதரனுக்கு பூனை என்றாலே அலர்ஜி. போனில் அந்தப் பூனை இறந்து விட்டது என்று சொல்லி விட்டு உடனே வைத்து விட்டான்.

பீட்டரால் இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் சில நாள் கழித்து போன் செய்து, 'நான் அந்தப் பூனையை எந்த அளவு நேசித்தேன் என்று உனக்குத் தெரியும். அது எப்படி இறந்தது? அப்படியே அது இறந்திருந்தாலும் அதை என்னிடம் நீ மெதுவாக சொல்லி இருக்க வேண்டும். முதல் நாள் அது கூரை மேல் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அடுத்த நாள் விளையாடும் போது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டு விட்டது. அடுத்த நாள் பூனைக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது என்றெல்லாம். கடைசியில் நான் அங்கே வந்த போது இறந்து விட்டது என்று சொல்லி இருக்கலாம்., நீ நேரடியாக சொன்னதால் நான் மிகவும் அப்-செட்டாக இருக்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து பீட்டர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்ததும் மீண்டும் சகோதரனுக்கு ஃபோன் செய்து 'அம்மா எப்படி இருக்கிறாள் '? என்றான்.

சகோதரன் 'அம்மாவா, அவள் கூரையின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறாள்'' என்றான்.

முத்ரா

return (0);
}Monday, May 7, 2012

கலைடாஸ்கோப்-63

லைடாஸ்கோப்-63 உங்களை வரவேற்கிறது.

[

நரசிம்மராவாகவே இருந்தாலும் பல் டாக்டரிடம் பல்லைக் காட்டித் தான் ஆக வேண்டும் என்பார்கள்.ஈறுகளில் பயங்கர வலி என்று பல் டாக்டரிடம் போனதற்கு 'உங்கள் பல் வரிசை' சரியாக இல்லை.ஒரு வருடம் 'கிளிப்' போட்டுக் கொள்ளுங்கள்.வரிசை சரியில்லை என்றால் ஈறுகளில் FOOD PARTICLES சிக்கிக் கொண்டு அடிக்கடி இந்தப் பிரச்சினை வரும் ' என்றார். சரி என்று ஒப்புக் கொண்டதற்கு இந்தியன் கிளிப் என்றால் 8000 ரூபாய் ஃபாரின் கிளிப் (?) என்றால் 12000 ரூபாய் எது வேண்டும் என்றார்.நமக்கு தான் ஃபாரின் என்றவுடன் ஓர் இனம் புரியாத மோகம் வருமே , ஃபாரினே போடுங்க டாக்டர் என்று சொன்னதற்கு 'வெயிட், முதலில் உங்களுக்கு சில பற்களைப் பிடுங்க வேண்டும்;அப்ப தான் மற்ற பற்கள் நகர்ந்து செட் ஆவதற்கு வழி கிடைக்கும்' என்றார்.(இதுக்குப் பேர் தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதா?) சரி என்ன செய்வது? வாழ்க்கையில் சில விஷயங்களை அடைய வேண்டும் என்றால் சில விஷயங்களை இழந்து தான் ஆக வேண்டும் (இப்படியெல்லாம் சொல்லி நமக்கு நாமே சில சமயம்  சமாதானம் சொல்லிக் கொள்ளவேண்டியது தான் :( ) என்று பிறந்ததில் இருந்து என்னுடனேயே வந்த என் பற்கள் சிலவற்றை இழக்கத் துணிந்தேன்.
 
'பல்லைப் பிடுங்கிய அடுத்த இரண்டு மூன்று நாள்கள் நரகம்' என்று கேட்டிருக்கிறேன். அதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். பிடுங்கும் போது லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து விடுவதால் ஒன்றும் தெரிவதில்லை.அதன் பிறகு இரண்டு நாள் தயிர்சாதம் கூட சாப்பிட முடியாமல் அவதிப்பட வேண்டும். பல் எடுத்த பகுதி பயங்கரமாக வீங்கி விடும். BITING PATTERN மாறுவதால் உணவை மெல்ல முடியாமல் வாய் தவிக்கும்.பேச முடியாது. [அது என்னவே பல் பிடுங்கிய நாளில் தான் பழைய நண்பர்கள் எல்லாம் 'என்ன மச்சி, ஃப்ரீயா இருக்கயா என்று ஃபோன் பண்ணி கடுப்பேற்றுவார்கள்].ஆபீசில் I CANT TALK என்று போர்டை எழுதி வைத்து விட்டேன்.[தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது பாருங்கள்] எப்படியோ பல் பிடுங்கும் படலம் முடிந்து வெற்றிகரமாக கிளிப்  போடப்பட்டது. 
 
கிளிப் போட்ட அடுத்த சில வாரங்களும் நரகம் என்று சொல்லவும் வேண்டுமோ? பல்லில் ஏதோ பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல இருக்கும்.பிரஷ் செய்வது பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும். [ஸ்பெஷல் பிரஷ் தருவார்கள்].தூங்க முடியாது. வாய், ஏதோ பலகாரம் தான் வைத்திருக்கிறார்கள் என்று எச்சிலை அதிகம் சுரக்குமாம். எனவே படுத்தால் சின்னப் பாப்பா மாதிரி எச்சில் வழிய ஆரம்பிக்கும்.கம்பி வாயின் உட்புறத்தில் உரசி புண்கள் வரும். சரி. இதெல்லாம் முதல் சில
வாரங்களுக்கு தான். எப்படியோ எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. இப்போது கிளிப் இருப்பதை உடலும் மனமும் மறந்து விட்டன. It's become another body part! இன்னும் கீழ் வரிசை செட் ஆகவில்லை; எலாஸ்டிக் போட்டு இழுக்க வேண்டும்.
ப்ளூ ரிங் போட வேண்டும் என்று இப்போது வாயின் உள்ளே ஒரு காயலான் கடையே உள்ளது.சரி இன்னும் நாலு மாதம் தானேஇந்தக் கருமாந்தரத்தை எல்லாம் பொறுத்துக் கொள்ளலாம் என்றால் The story is not over yet. கிளிப்பை எடுத்ததும் பல் மீண்டும்
பழைய வரிசைக்கு நகராமல் இருக்க RETAINER என்று ஒரு சமாசாரத்தை போட்டுக் கொள்ள வேண்டுமாம். நல்ல புன்னகைக்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை.What's the cost of smile? அப்படிப்பட்ட புன்னகையை இயற்கையாகவே உங்களுக்கு கடவுள் கொடுத்திருந்தால் எங்களை எல்லாம் நினைத்துக் கொண்டு அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!

[[

பெண்கள் , குறிப்பாக காதலிகள் மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு லவ் பண்ணும் போது அவர்கள் ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டார்கள் என்பது. பர்ஸ் மறந்து விட்டேன், நாய்க்குட்டிக்கு வைத்திய செலவு, ஏ.டி.எம்.வேலை செய்யவில்லை என்று ஏதோ சாக்கு சொல்லி பே பண்ணும் நேரத்தில் எஸ்கேப் ஆகி விடுவார்கள்  என்பது. இது உண்மையா என்று ஆபீசில் சக பெண் ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது 'உண்மையில்லை' என்று சொன்னார். இப்போது காலம் மாறி விட்டதாகவும் பையன்கள் உஷாராகி விட்டதாகவும்
சொன்னார்.[நமக்கு தான் இந்தக் காதல் கத்திரிக்காய் இவற்றில் அனுபவமே இல்லையே.. மேலும் Men do not make pauses at women who wear glasses என்பது போல Girls do not have slips for the guy who wears clips என்பதால் காதல் கீதல் எல்லாம் இன்னும் அலர்ஜி ஆகி விட்டது]. இப்போதெல்லாம் பையன்கள் ஒரு நாள் நான் செலவழித்தால் மறுநாள் நீ செலவழி..ஒரு நாள் நான் பானிபூரி வாங்கிக் கொடுத்தால் மறுநாள் நீ பேல்பூரி வாங்கிக் கொடு ; ஒருநாள் நான் பெட்ரோல் போட்டால் மறுநாள் நீ போடு என்று CUT N RIGHT ஆக சொல்லி விடுகிறார்களாம். (கையில் ஒரு டேலி சீட் இல்லாதது தான் பாக்கி )எனவே காதலிப்பது என்பது இரு பாலருக்கும் செலவு தான். திரைப்படங்களில் காட்டுவது எல்லாம் டூ மச். இப்போதெல்லாம் ஒரு பெண் பர்சில் நயா பைசா (அல்லது கிரெடிட் கார்டு த்யாதிகள்)இல்லாமல் டேட்டிங் எல்லாம் போக முடியாது.


[[[
சுத்தானந்த பாரதியின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு படிக்கக் கிடைத்தது.

சில உதாரணங்கள்:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று

Leaving ripe fruits the raw he eats
Who speaks harsh words when sweet word suits.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோருக்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

They lead a high-souled manly life
The pure who eye not another's wife.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூ
ம்
உண்பதூ
ம் இன்றிக் கெடும்.

Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

They gather fame who freely give
The greatest gain for all that live.

இன்பத்துப் பாலில் இருந்து ஒன்று:


நீங்கின் தெறூம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

Away it burns and cools anear
Wherefrom did she get this fire?

[[[[

இந்த 'பரிட்சையில் பிட்டு அடிப்பது' என்பது எமக்கு (நித்யானந்தா ஸ்டைல்) எப்போதும் அலர்ஜியாகவே இருந்து வந்துள்ளது. அந்தக் கருமத்தை கண்ட இடங்களில் ஒளித்து வைத்துக் கொண்டு பார்த்து விடுவார்களோ என்று பயந்து கொண்டு எறும்பு எழுத்தைப் படித்துக் கொண்டு,எங்கெங்கே எந்த பிட்டு இருக்கிறது என்பதற்கு ஒரு இன்டெக்ஸ் பிட்டு வைத்துக் கொண்டு இப்படி கஷ்டப்படுவதற்கு பேசாமல் பாடத்தைப் படித்துக் கொண்டு போய் விடலாம் என்பது என் பாலிசி. 
 
ஆனால் பிட்டே எடுத்துக் கொண்டு போகாமல் சமர்த்தாக நேர் நேர் தேமா என்று மனப்பாடம் செய்து கொண்டு போவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. பரீட்சை ஹாலில் நாம் தேமா  என்று சாரி தேமே என்று நாம் உண்டு நம் பேப்பர் உண்டு என்று உட்கார்ந்திருந்தாலும் பின்னால் இருந்து எவனாவது
முதுகை சொரிவான்.அது ஓர் உலகமகா தர்ம சங்கடம்.அவனைத் திரும்பிப் பார்க்காமலும் இருக்க முடியாது.ஏன் என்றால் அவன் எல்.கே.ஜி யில் நமக்கு ஸ்லேட் பென்சில் கொடுத்து உதவிய உயிர் நண்பன். அதே சமயம் உதவி செய்யவும் முடியாது. அன்று வந்திருக்கும் investigator முகம் வேறு  சிம்ம சொப்பனமாக இருக்கும்.அவர் பார்க்காத போது அவசரமாகத் திரும்பி எ, பி, சி என்று பரதநாட்டிய முத்திரைகளை காட்ட வேண்டி இருக்கும். ஒரு முறை ஒரு துணிகரமான பையன் என் ANSWER பேப்பரையே உருவி எடுத்துக் கொண்டு விட்டான்.அது திரும்பி வரும் வரையில் திருவிழாவில் குழந்தையைத் தொலைத்த தந்தையின் மனநிலையில் இருந்தேன். என்ன தான் சொல்லுங்கள் பிட்டு அடிப்பது
என்பது ஒரு சுவாரஸ்யம் தான் ...அந்த சுவாரஸ்யத்தை,திரில்லை மிஸ் செய்து விட்டோமோ , ஒரு முறை (
ஜட்டியில் ஒளித்து)பிட்டு எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.பிட்டு என்ற எண்ணமே வராமல் மாணவர்களை புரிந்து கொண்டு தேர்வு எழுதச் செய்யும் கல்வி முறை இன்னும் நம்மிடம் வராததும் வேதனையாக இருக்கிறது.

[[[[[
தற்போது EDUCATION என்பதும் INDUSTRY என்பதும் இருவேறு track -களாக உள்ளன. என்ன சொல்கிறேன் என்றால் ஒரு மாணவன்/மாணவி காலேஜ் படிப்பு முடிக்கும் வரை தான் எந்த வேலையில் எந்த INDUSTRY யில் சேருவோம் என்பது தெரிவதில்லை.ஒரு மாணவன் படிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து தான் E யும் I யும்
ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. INDUSTRY LINKED EDUCATION (ILE) என்று ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதாவது ஒரு இண்டஸ்ட்ரி ஒரு குழந்தையை , ஒரு சிறுவனை(சிறுமியை) இவன்தான் நாளை என் கம்பெனிக்கு இஞ்சினியர் என்ற அசாத்தியப் பொறுமையுடனும் தொலைநோக்குடனும் டெக்னிகலாக தத்து எடுத்துக் கொள்வது. அவன் படிப்பு செலவை பெற்றோர்கள் மீது திணிக்காமல் தாங்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.அவனுக்கு இண்டஸ்ட்ரியின் அத்தனை நெளிவு சுளிவுகளையும் சிறுபிராயத்தில் இருந்தே சொல்லித் தருவது. இப்படி செய்தால் அவர்களும் இன்டஸ்ட்ரிக்கு LOYAL ஆக இருப்பார்கள் ; வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதமே கம்பெனி மாற மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.( செஞ்சோற்றுக் கடன்!) இதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் நன்மை தான். சமூக சேவை செய்த மாதிரியும் இருக்கும். தனக்குத் தேவையான திறமை வாய்ந்த தொழிலாளியைத் தேர்ந்தெடுத்த திருப்தியும் இருக்கும்.இப்போது இருக்கும் HIRING process Arranged marriage மாதிரி.நேற்று வரை யாரென்று தெரியாதவர்கள் இன்று முதல் கூடி வாழும் அபத்தம் .ILE என்பது LOVE marriage . ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின்னர் ஒன்று கூடி இயங்குவது. பார்க்கலாம். நம் கல்வியாளர்கள் எதிர்காலத்தில் ILE யை செயல்படுத்துவார்களா என்று.

[[[[[[

இஞ்சி தின்ற குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டது போதும். இப்போது கொஞ்சம் சிரியுங்கள்.

ஓஷோ ஜோக் (ஸ்)


*ஒரு பெண் முல்லா நசுருதீனிடம் , " நீ என்னைக் காதலிக்கிறாயா'? எனக் காதில் கிசுகிசுத்தாள்.
முல்லா "கண்டிப்பாக , நான் உன்னைக் காதலிக்கிறேன், அதில் என்ன சந்தேகம்' எனப் பதில் கூறினார்.
"அப்படியானால் என்னைத் திருமணம் செய்து கொள்வாயா" என்று அந்தப் பெண் கேட்டாள்.
முல்லா 'இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை விட்டு விட்டு ஏன் வேறு விஷயத்துக்கு மாறுகிறாய்' என்றார்.

*இரண்டு பாகிஸ்தானிகள் சொர்கத்தின் தங்கக் கதவருகே வந்தார்கள்

செயின்ட் பீட்டர் ' அய்யோ, நீங்கள் எல்லாம் இங்கே வரக்கூடாது, அப்படியே திரும்பிப் போய் விடுங்கள் ' என்று கத்தினார்.

பாகிஸ்தானிகள் 'அப்படித் தான் வருவோம். தடுத்தால் குண்டு வைத்து விடுவோம்' என்று முன்னேறினார்கள்.

பீட்டர் உள்ளே ஓடிப்போய் இயேசுவிடம் விஷயத்தை சொன்னார்.
இயேசு ' பீட்டர், எதிரிகளையும் நேசிக்க வேண்டும் என்று நான் உனக்கு சொல்லவில்லையா' 'போய் அவர்களை உள்ளே விடு' என்று பதிலளித்தார்.

பீட்டர் வாசல் வரை சென்று விட்டு ஓடி வந்து 'ஜீசஸ், ஜீசஸ், காணவில்லை' என்றார்.

இயேசு 'சரி , விடு, அவர்கள் போனால் போகட்டும்' என்றார்.

பீட்டர் ' அது இல்லை ஜீசஸ், வாசலில் இருந்த தங்கக் கதவுகளைக் காணவில்லை' என்றார்.


சமுத்ரா