இந்த வலையில் தேடவும்

Thursday, June 30, 2011

Happy birthdayஇன்றுடன் இந்த ப்ளாக்-கிற்கு சரியாக ஒரு வருடம் நிறைவு பெறுகிறது!
என்ன, 200 பதிவுகள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன் முடியவில்லை! :(
ஆனாலும் 200 FOLLOWERS கிடைத்திருப்பது மகிழ்ச்சி..பின் தொடர்பவர்களுக்கும்
ஏதோ என் எழுத்துக்கும் மதிப்பளித்து வாசிக்கும் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்!!!!!!!!!!!!!!!!

சமுத்ரா
Wednesday, June 29, 2011

கலைடாஸ்கோப்-26 a

இந்த ப்ளாக்கின் முதல் பிறந்த நாளின் போது 200 பதிவுகளை எழுதி முடித்திருக்க வேண்டும்
என்று ஆசைப்படுவதால் மூன்று மினி கலைடாஸ்கோப்-கள் வெளியாகும்

மினி லைடாஸ்கோப்-26a உங்களை வரவேற்கிறது.

1
==
நறுமுகையே நறுமுகையே என்ற பாடலை சமீபத்தில் கேட்க நேர்ந்தது.ரஹ்மான் மற்றும் வைரமுத்து இருவரும் இந்த விஷயத்தில் நன்றாக திருடியிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்..வெயிட்..அடிக்க வந்து விடாதீர்கள். ரஹ்மான் நளினகாந்தியையும் வைரமுத்து புறநானூறையும் திருடி நம் காதுகளுக்கு விருந்து அளித்திருக்கிறார்கள்.சினிமா பாடல்களை இந்த விஷயத்தில் மிகவும் பாராட்ட வேண்டும். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும், மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், அற்றைத் திங்கள் அந்நிலவில், போன்ற இலக்கிய வரிகள் சினிமா இல்லையென்றால் நம் நாக்கில் நுழைந்திருக்குமா தெரியாது.

நாக்க முக்க போன்ற இக்கால இலக்கியங்களை ரசிப்பவர்கள் இப்போதெல்லாம் 'நாராய் நாராய் ,பவளக்கூர்வாய் செங்கால் நாராய்' என்றோ சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!என்றோ பாட்டு வந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.


அற்றைத்திங்கள் அந்நிலவில் என்றவுடன் நான் எப்பவோ எழுதிய இது நினைவில் வருகிறது.

2
==
சமீபத்தில் ஒரு இன்டர்வியூ விற்காக பெங்களூருவின் SAINT JOHNS பாய்ஸ் ஹைஸ்கூல் சென்றிருந்தேன். என்ன அழகான ஸ்கூல்? பழமையான கட்டிடங்கள், பெரிய விளையாட்டு மைதானம், லேபுகள், பையன்கள் பெஞ்சுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் (?) என்று இவையெல்லாம் என் பள்ளி வாழ்க்கையை பற்றிய நினைவுகளை மீண்டும் கிளறி விட்டுவிட்டன. கழுதை வயசு ஆன பின்பும் (ஆமாம் கழுதை வயசு என்றால் எவ்வளவு? முப்பதா?) இன்னும் ஸ்கூல் பெஞ்சில் உட்காரவும் வாத்தியார்களைக் கிண்டல் செய்யவும், நேர் நேர் நேர்
கோமாங்காய் சாரி தேமாங்காய் நிரை நேர் நேர் புளிமாங்காய் என்று படிக்கும் தமிழ் வகுப்புக்கும்,மனசு ஏங்குகிறது. I don't mind aging but I will miss schooling என்று உலக அறிர் ஒருவர் சொன்னது நினைவில் வருகிறது.யார் அந்த உலக அறிர் என்று அதிகப்பிரசங்கித் தனமாகக் கேட்கக்கூடாது ஆமாம்.

ஒரு ஓஷோ ஜோக்
==================

பாதிரியார் ஒருவர் ஒரு ஆளைப் பார்த்து 'உங்க அப்பா எப்படி இருக்கார்' என்று கேட்டார்.

"அதை ஏன் கேட்கறீங்க ரொம்பவே மோசமாத்தான் இருக்கார்" ...'கஷ்டமா இருக்கு' என்றான்

பாதிரியார் "நோய் என்பது மனத்தில் தான் ,,,நான் உனக்கு கிறித்துவ அறிவியலின் படி ஒரு யோசனை சொல்கிறேன்..தனக்கு நோய் இருப்பதாக அவர் நம்புகிறார் அவ்வளவு தான்..அவரிடம் போய் 'எனக்கு எதுவும் இல்லை..நான் நன்றாக ,ஆரோக்யமாக இருக்கிறேன்" என்று திடமாக நம்பும் படி சொல். நம்புதல் தான் இங்கே முக்கியம் என்று சொன்னார்..

ஒரு வாரம் கழித்து பாதிரியார் அந்த ஆளை மீண்டும் சந்தித்தார்..என்னப்பா என் யோசனை வேலை செய்கிறதா? என்றார்

அதற்கு அவன் "நன்றாகவே செய்கிறது..இப்போது அவர் தான் இறந்துவிட்டதாக நம்புகிறார்" என்றான்

முத்ரா

Tuesday, June 28, 2011

கலைடாஸ்கோப்-25

லைடாஸ்கோப்-25 உங்களை வரவேற்கிறது

பெங்களூரு -1
===============

பெங்களூர் என்பதை ஆங்கிலம் என்றும் பெங்களூரு என்பதை கன்னடம் என்றும் மிக அருமையாக (!) கண்டுபிடித்து இங்கே சமீபத்தில் பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திருப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கன்னடம் பெங்களூருவில் புறக்கணிக்கப் படுவதாக கன்னடர்கள் நினைப்பதால் இப்படி ஏதாவது புரட்சிகரமாகச்(?) செய்து கன்னடத்தை வாழ்விக்க நினைக்கிறார்கள் . இங்கே ஆட்டோ காரர்கள் கன்னடத்தை கடைசி OPTION ஆகத்தான் வைத்திருக்கிறார்கள். ஆட்டோவை நெருங்கி வருபவர் கொஞ்சம் கலராக இருந்தால் ஹிந்தியிலும் கலர் இல்லை என்றால் தெலுங்கிலோ தமிழிலோ பேச எத்தனிக்கிறார்கள். சிவப்பாக இருப்பதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் எல்லாரும் இவனுக்கு ஹிந்தி தெரியும் என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் நமக்கெல்லாம் ஹிந்தியில் என்றால் என்று சொல்ல வராது. எப்படியோ கன்னடம் கற்றுக் கொண்டு விட்டதால் அவ்வளவாகப் பிரச்சினை இல்லை.இங்கே யாராவது தமிழில் கேள்வி கேட்டால் கூட கன்னடத்தில் தான் பதில் சொல்கிறேன். அந்தந்த மாநில பாஷையை மதிக்க வேண்டும் என்பது என் கொள்கை. ஆனால் பிரதேஷ பாஷை தெரியாமலேயே எந்த சிரமமும் இல்லாமல் காலம் தள்ளிவிட முடிகிற ஒரே நகரமாக இந்த பெங்களூர் சாரி பெங்களூரு இருக்கிறது.


சைடு பிட்: அழகான தமிழ் வார்த்தைகள் பல இன்று தமிழில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அவையே வேறு மொழிகளில் சரளமாகப் புழங்குகின்றன. மூன்று உதாரணங்கள்:

சோருதல் என்றால் தமிழில் ஒழுகுதல் என்று பொருள். இதை நாம் பயன்படுத்துகிறோமா தெரியவில்லை. கன்னடத்தில் இதே பொருளில் பயன்படுத்துகிறார்கள்.(பிந்திகே சோருத்தா இதே நோடு- குடம் ஒழுகுகிறது பார்)

நச்சுதல் என்றால் தமிழில் 'விரும்புதல்' என்று அர்த்தம்.நாம் இதை ஏனோ விரும்பாமல் விட்டு விட்டோம். ஆனால் தெலுங்கில்இதே பொருளில் பயன்படுத்துகிறார்கள்.
(நாக்கு நச்ச லேது - எனக்குப் பிடிக்கவில்லை). செப்புதல் என்பதும் இன்று தெலுங்கில் இருக்கிறது.

விளித்தல் என்றால் தமிழில் அழைத்தல் என்று பொருள். நாம் ஒருவரை கூப்பிடுகிறோமே தவிர விளிப்பதில்லை. ஆனால் மலையாளிகள் விளிக்கிறார்கள். (அம்மே விளிச்சு - அம்மா கூப்பிட்டாள்)

தண்ணீரை மட்டும் அல்ல. சொற்களையும் தமிழன் விட்டுக் கொடுத்து விடுகிறான்.

பெங்களூரு -2
==============

பெங்களூருவில் வசிப்பவர்கள் (தமிழர்களாக இருந்தாலும் ) இதை விட்டு வெளியே போக விரும்பாதது உண்மை தான். இதற்கு தட்பவெட்ப நிலை தான் காரணமே தவிர அவர்கள் தமிழ்நாட்டை வெறுக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டை விட்டு வெளியே வசிப்பவர்களுக்கு தான் தமிழ்ப்பற்று அதிகம் இருக்கும். இப்போதே மிதமான குளிர் இங்கே தோலை ஊடுருவ ஆரம்பித்து விட்டது. NICE!

தமிழ்நாட்டை நான் மிஸ் செய்வது புத்தகங்களின் விஷயத்தில் தான்.இங்கே ஒரு விகடன் வாங்க வேண்டும் என்றால் கூட
லொங்கு லொங்கு என்று ஜெயாநகர் வரை போக வேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டிலும் ஒரு புக் ஸ்டால் கண்டிப்பாக இருந்தே தீரும். இங்கே பஸ் ஸ்டாண்டுகள் தோறும் நந்தினி ஸ்வீட் ஸ்டால் தான் மலிந்திருக்கிறது .கன்னடத்தில் நியூஸ் பேப்பர்கள் இருக்கின்றனவா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.நம்மூரில் இருக்கும் அளவு இங்கே
லைப்ரரிகளும் இல்லை. முன்பு BTM லே.அவுட்டில் ஒன்று இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று எழுத்துக் கூட்டி கன்னட புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தேன். அதையும் இப்போது இழுத்து மூடி விட்டார்கள் (இழுக்காமல் எப்படி மூட முடியும்???!!) கேட்டால் யாருமே வருவதில்லை என்றும் லைப்ரரியைக் கூட்டி சுத்தம் செய்யும் பாட்டி தான் நேரம்
தவறாமல் வருகிறது என்றும் சொன்னார்கள். தமிழர்களுக்கு மட்டுமே எழுத்தின் மீதும் புத்தகங்களின் மீதும் காதல் அதிகம் என்று தோன்றுகிறது. அங்கே தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை பத்திரிக்கைகள்? இன்டர்நெட்டில் ராக்கெட் விடுவது எப்படி என்பதில் இருந்து ராகி சேவை செய்வது எப்படி என்பது வரை தமிழில் கிடைக்கிறது.

சைடு பிட்: சமீபத்தில் படித்த ஒரு தகவல் : தெலுங்கு மொழி பாட்டுக்கும் கன்னடம் நாடகத்திற்கும் தமிழ் உரைநடைக்கும் ஏற்ற மொழியாம்.இதனால் தானோ என்னவோ தமிழ் எழுத்தின் மீது நமக்கு ஒரு இனம் புரியாத ஈர்ப்பு போலிருக்கிறது. கன்னடம் நாடகத்திற்கு உரியது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு வேடத்தில் பேசும் வீர வசனங்கள் எவரையும் கன்னடத்தின்பால் ஈர்த்து விடும்.தெலுங்கு இசைக்கு உரியது என்று சொல்லவும் வேண்டுமா? தியாகராஜர்,சியாமா சாஸ்திரிகள் போன்றோர் தமிழ்நாட்டில் வசித்தாலும் தம் படைப்புகளை தெலுங்கில் தான் எழுதினார்கள்.(இது கொஞ்சம் ஓவர் தான்..) எனக்கு இன்றும் தமிழில் கர்நாடக இசைப் பாடல்களைக் கேட்டால் ஏதோ MISSING என்று தான் தோன்றுகிறது!

மறுபடியும் Google Translator
===========================

GoogleTranslator ஐ குறை சொல்லாதீர்கள், கிண்டல் செய்யாதீர்கள் என்று நிறைய பேர் மறுமொழி பேசியிருந்தார்கள். நான் அப்படி தான் கிண்டல் செய்வேன். ஏனென்றால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை.அது டெக்னாலஜி அல்ல. கவிதை எழுதுவதற்கும், ஓவியம் வரைவதற்கும், காதல் செய்வதற்கும் டெக்னாலஜி வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? ஒவ்வொரு மொழிக்கும் அதற்கே உரித்தான ஒரு அழகு, ஒரு நளினம் இருக்கிறது. அதை நம்மால் பெயர்க்க முடியாது.அம்மா பேசுவதை டெக்னாலஜி நமக்கு கேட்கும் படி வசதி செய்து தரலாம்.ஆனால் அம்மாவின் வாசம் வேண்டும் என்றால் அவள் பக்கத்தில் நாம் போகத்தான் வேண்டும். வாசமும், உயிர்ப்பும் இல்லாத ஒரு அம்மா பொம்மையை செய்து நம் பக்கத்தில் வைத்துக் கொள்வது போல தான் இந்த டெக்னாலஜி செய்யும் மொழிபெயர்ப்புகள். ஒரு உதாரணம் பாருங்கள்:

இது பட்டினத்தாரின் ஒரு பாடல்

காலன் வருமுன்னே கண்பஞ்சு அடையுமுன்னே
பால் உன் கடைவாய்ப் படுமுன்னே -மேல்விழுந்து
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு

இதை Google translation இல் போட்ட போது இப்படி வந்தது.

Kanpancu gallon reached varumunne
Paul your kataivay patumunne - melviluntu
Cutumunne best alumunne urar
Tell
kurralattanaiye

சரி சிரித்தது போதும்.Artificial Intelligence என்ற துறை வளராத வரை மொழிபெயர்ப்புகள் இப்படி தான் இருக்கும். குற்றாலத்தான் என்றால் கடவுள் என்று அறிந்து கொள்ளும் அளவு நம் டெக்னாலஜிக்கு செயற்கை அறிவு (இன்னும்) இல்லை. சரி இதை GT இப்படி மொழிபெயர்த்திருந்தால் அதை ப்ரோக்ராம் செய்தவன் கைகளுக்கு நான் தங்கக்காப்பே செய்து போட்டிருப்பேன். !!

Before Death knocks at your door
Before your eyes can see no more
Before your mouth is milked with its last ever drop
Before your kins cry on you non-stop
Before your city men offer you to flame
Oh! fool! utter God's holy name!!!


ஒரு கடுப்பு
===========

க்ளோஸ்-அப் பின் சமீபத்திய விளம்பரம் ஒன்று 'நீங்கள் திடீரென்று நடிகர் சூர்யாவைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? வாயடைத்துப் போவீர்களா? சந்தோஷத்தில் குதிப்பீர்களா? ஆட்டோக்ராப் கேட்பீர்களா? போட்டோ எடுத்துக் கொள்வீர்களா?' என்றெல்லாம் கேட்டிருந்தது. என் கேள்வி என்ன என்றால் நான் சூர்யாவைப் பார்த்தால் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்?
(நிஜமாகவே விளங்கவில்லை) பொது இடத்தில் நீங்கள் ஒரு டிரைவரையோ, எலக்ட்ரீஷியனையோ, ப்ளம்பரையோ பார்த்தால் இப்படியெல்லாம் செய்வீர்களா? செய்தால் உங்களை பைத்தியம் என்று சொல்ல மாட்டார்களா? சூர்யா என்பவர் அவர்களைப் போலவே தன் வயிற்றுப் பிழைப்புக்காக நடிப்பு என்ற ஒரு தொழில் செய்பவர்.அவரைப் பார்த்து நாம் ஏன் வாயடைத்துப் போக வேண்டும்? சூர்யாவை விடுங்கள். இங்கே குமரிமுத்து வந்தாலும் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடுகிறது. நடிகர் அல்லது நடிகை என்பவர்தான் ஒரு திரைப்படத்தில் மிகக் குறைவாக வேலைபார்ப்பவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதே போல ரஜினியை எல்லாரும் இன்னும் நடியுங்கள் என்று கெஞ்சுவது எரிச்சலாக இருக்கிறது. ராணா ஓகே தான்..அதன் பிறகாவது அந்த தாத்தாவை ஃபுல் ரெஸ்ட் எடுக்க விடுங்கள் பாவம்.


இப்போது சில ட்விட்டுகள் உங்களுக்காக
=============================

NVaanathi: மூலை மடிக்கப்பட்ட பேப்பர்களும், ஓரங்களில் கிறுக்கப்படும் பெயர்களும் இல்லாத ebook readers இருந்தென்ன பயன்?

கனியன்: செல்போன், டூவீலர், டிவி, மனைவி ஆகியவற்றில் ஒருவன் திருப்தி அடையமாட்டான், பக்கத்து வீட்டுக்காரரிடம் இதைவிட நல்ல மாடல் இருக்குமென்பதால்!


கனியன்:
புயல் மழையில் ஒருத்தன் புரோட்டா வாங்க கடைக்கு போகிறானென்றால் நிச்சயம் அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று அர்த்தம்!


arasu1691:
எதையோ தேடிக்கொண்டிருந்தேன், பள்ளி காலத்து அழி ரப்பர் ஒன்று சிக்கியது, யாராலும் முடியும் வரை அழி ரப்பர்கள் பயன்படுத்தப்படுவதே இல்லை

kolaaru:

”இறையருள் பெற்ற கடை, ராசியான கடை “ அப்புறம் எதுக்குப்பா விளம்பரம் போடுறீங்க..? !!!

shaaakthi:
குடிபோதயில் வாகனம் ஓட்டக் கூடாது எனக் கூறும் அரசாங்கம் ஒயின்ஷாப் பாரில் பார்க்கிங் வைத்தது ஏன்?

samudra123:
நிரம்பிய ஒரு லிஃப்டின் உள்ளே எப்போதும் ஒரு இறுக்கம் நிலவுகிறது

ஓஷோ ஜோக்
==========

நிறைய ஓஷோ ஜோக் கைவசம் இருக்கிறதா என்று ஒருவர் பின்னூட்டம் சொல்லியிருந்தார். ஆகா! ஓஷோ ஜோக்குக்கா
பஞ்சம். அள்ள அள்ளக் குறையாத நதி அது ! நிறைய இருக்கிறது! வாசகர்கள் விரும்பினால் 'A' ஜோக் கூட சொல்கிறேன்.


ஒரு ஆள் ஹோட்டலில் போய் உட்கார்ந்து கொண்டு சர்வரை அழைத்து 'ஏம்பா, செட் தோசை மேல வேகாம கீழ
தீஞ்சு போய், அப்புறம் நாலுநாள் ஆன மாவுல பண்ண இட்லி, எண்ணையே போடாம வறண்ட ஒரு வடை , சக்கரை ரொம்ப
ஜாஸ்தியா தண்ணியா ஈ மிதக்கும் காபி ஒண்ணு இதெல்லாம் கொண்டு வா" என்றான்

சர்வர் "சார், என்ன மாதிரியான ஆர்டர் இது? இதையெல்லாம் பண்றது ரொம்ப கஷ்டம்" என்றான்

அந்த ஆள் "என்னப்பா
இப்படி சொல்ற, நேத்து இதையெல்லாம் தானே எனக்கு சீக்கிரமா கொண்டு வந்து கொடுத்தாய் ?"
என்றான்

உங்களுக்காக இன்னொன்று.

ஒரு ஆள் போலீஸுக்கு போன் செய்தான். வார்த்தை குழறியது. "சார் ,யாரோ என்னோட காரில் புகுந்து பயங்கரமாத்
திருடிட்டாங்க, என் DASH BOARD இல் இருந்த விலைமதிப்பற்ற பொம்மையைக் காணவில்லை.ஸ்டியரிங் கூட காணலை..
பாவிப்பசங்க பிரேக்கைக் கூட கழட்டிட்டு போயிட்டாங்க" என்றான்.கார் நம்பர் சொன்னான்.

இந்த கம்ப்ளயண்டை எப்படி டீல் செய்வது என்று போலீஸ்காரர்கள் குழம்பினார்கள்

சிறிது நேரம் கழித்து மறுபடியும் அதே ஆளிடம் இருந்து போன் வந்தது "சார், அந்த
கம்ப்ளயண்டை மறந்திருங்க..நான் தான்
தெரியாம பின்னாடி சீட்டில் ஏறிவிட்டேன்"


முத்ரா


Monday, June 27, 2011

அணு அண்டம் அறிவியல்- 35

அணு அண்டம் அறிவியல்- 35 உங்களை வரவேற்கிறது.

இந்தத் தொடரில் நிறைய பேர் நிறைய கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். Please give me some time..எல்லாவற்றிற்கும் மறுமொழி மூலமாகவோ இல்லை தொடரின் மூலமாகவோ பதில் சொல்ல முயற்சிக்கிறேன்..எனக்கு எல்லாம் விரல் நுனியில் இருப்பதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள். ஒரு அத்தியாயம் எழுதுவதற்கு சுமார் பத்து மூலங்களை REFER செய்து அவை சொல்வது சரிதானா என்று சரிபார்க்கவும் வேண்டியிருக்கிறது.

இயக்கத்தில் உள்ள பொருளுக்கு எவ்வாறு காலம் மெதுவாகச் செல்லும் என்று ஒரு உதாரணம் மூலம் பார்த்தோம். இப்போது வெளி எவ்வாறு சுருங்கும் என்று ஒரு உதாரணம் பார்க்கலாம். மறுபடியும் ஒரு ரயில்!ஒரு பாலத்தின் இரு முனைகளில் A மற்றும் B என்று இரண்டு விளக்குகள் உள்ளன. இந்த பாலத்தின் வழியே ஒரு ரயில் செல்வதாக வைத்துக் கொள்வோம். ரயிலின் முன்பக்க முனை கம்பம் B யை அடைந்தவுடன் மின்சார சுற்று பூர்த்தியாகி B விளக்கு ஒளிரும். அதே மாதிரி ரயிலின் பின்பக்க முனை கம்பம் A யை அடைந்த உடனே மின்சுற்று பூர்த்தியாகி A விளக்கு ஒளிரும். இந்த நிகழ்வை பிளாட்பாரத்தில் பாலத்தின் மையத்தில் நின்று கொண்டு இருக்கும் ஒருவர் கவனிப்பதாகக் கொள்வோம்.

(1 ) ரயிலின் நீளமும் பாலத்தின் நீளமும் சமமாக இருந்தால் கவனிப்பவருக்கு இரண்டு விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிரும்.

(2 ) ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட குறைவாக இருந்தால் ரயிலின் பின்பக்க முனை பட்டு விளக்கு A முதலில் எரிந்து விடும்.

(3 ) ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகமாக இருந்தால் ரயிலின் முன்பக்க முனை பட்டு விளக்கு B முதலில் எரியும்.

புரிந்ததா? NO DOUBT ? ஓகே.....

இப்போது ரயிலின் நீளமும் பாலத்தின் நீளமும் சமமாக இருப்பதாகவும் விளக்குகள் எரிவதை ரயிலின் உள்ளே உள்ள ஒரு ஆள் கவனிப்பதாகவும் கருதுவோம். ரயிலின் முன்பக்க முனை கம்பத்தில் பட்டு B விளக்கு எரிந்து அந்த ஒளி அவரை நோக்கி வருகிறது.ஆனால் ரயில் அந்த ஒளிக்கு எதிர்திசையில் நகர்ந்து கொண்டிருப்பதால் அந்த ஆள் கொஞ்சம் நகர்ந்து சீக்கிரமாகவே அந்த ஒளியைப் பார்த்து விடுவார்.ரயிலின் பின் பக்க முனை பட்டு எரிந்த விளக்கு A யின் ஒளியானது கவனிப்பவரை அடைவதற்குள் அவர் ரயிலின் வேகத்தால் அவர் முன்னே நகர்ந்து விடுகிறார். எனவே ரயிலின் உள்ளே இருப்பவருக்கு விளக்கு B யின் ஒளி முதலிலும் விளக்கு A வின் ஒளி சற்றே தாமதமாகவும் வந்து சேரும். சரி இப்போது ரயிலின் உள்ளே இருப்பவருக்கு இயற்பியல் விதிகள் அவர் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்வதற்கு அனுமதிக்காது. வெளியே உள்ள எந்த ஒரு பொருளின் துணையும் இல்லாவிட்டால் அவர் தான் நிலையாக இருப்பதாகவே எண்ணுவார். இப்போது அவருக்கு விளக்கு B யின் ஒளி முதலில் வந்து விடுவதால் கேஸ் (2 ) இன் படி அவர் ரயிலின் நீளம் பாலத்தின் நீளத்தை விட அதிகம் என்று எண்ணுவார்!!அதாவது இயக்கத்தில் இருப்பவர் ரயிலின் நீளத்தை அதிகமாக அளவிடுவார். ஆனால் வெளியே இருப்பவர் அதே ரயிலின் நீளத்தை குறைத்து அளவிடுவார்.

அதாவது நிலையாக இருக்கும் ஒருவருக்கு அவரைப் பொறுத்து இயக்கத்தில் உள்ள ஒரு பொருளின் நீளம் குறைந்திருப்பதாகத் தோன்றும்.

ஐன்ஸ்டீனின் இந்தக் கொள்கை SPECIAL THEORY OF RELATIVITY என்று அழைக்கப்படுகிறது. RELATIVITY என்று ஏன் சொல்கிறார்கள் என்றால் இந்த கொள்கைக்கு ஒருவரைப் பொறுத்து ஒருவர் நகர்ந்து கொண்டிருக்கும் இரண்டு கவனிப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். (ஏன் ஸ்பெஷல் என்று பிறகு பார்க்கலாம்) ஒருவருடன் ஒப்பிடும் போது இன்னொருவருக்கு எப்படி வெளியும் காலமும் வேறுபடுகின்றன என்று கணக்கிடுவது. நகரும் ஒருவருக்கு வெளி சுருங்கும் என்றால் அவர் சாண்ட்விட்ச் மாறி நசுக்கப்படுவாரா என்று கேட்பது மகா அபத்தம். நகரும் ஒருவரை நாம் யாருடனும் 'ஒப்பிட'வில்லை என்றால் அவர் அவரது FRAME OF REFERENCE இல் அவருக்கே உரிய வெளி மற்றும் காலத்தில் சந்தோசமாக இருப்பார். அவரது கடிகாரங்கள் ஒரு நொடிக்கு ஒரு நொடி என்ற ரேட்டில் நகரும். அவர் எடுத்துச் செல்லும் ஸ்கேல் சரியாக வேலை செய்யும். அங்கேயும் சன் டிவி. திருமதி செல்வம் அரைமணி நேரம் தான் ஓடும்.அங்கேயும் அவர் இதயம் நிமிடத்திற்கு 72 முறை தான் துடிக்கும். அவர் எந்த வித்தியாசத்தையும் உணர மாட்டார். இப்போது நகர்பவரை நிலையாக இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும் போது தான் பிரச்சனை. அப்போது இருவரின் கடிகாரங்களும் ஒத்துப் போகாது. இருவரின் ஸ்கேல்களும் ஒத்துப் போகாது.


வெளியே இருக்கும் ஒருவரும் (சீரான வேகத்தில்) பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரும் தங்கள் கடிகார நேரங்களுடனும் தங்கள் வெளி அளவீடுகளுடனும் ஒருபோதும் ஒத்துப் போகமாட்டார்கள். ஆனால் இருவரும் ஒளியின் வேகத்தோடு மட்டும் ஒத்துப் போவார்கள்.

திடீரென்று நம்மை சுற்றி உள்ள எல்லாம் (நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரிதாகி விட்டால் அது நமக்குத் தெரிய வருமா? அதை நம்மால் உணர முடியாது. இரண்டு மடங்கு சூரியன், இரண்டு மடங்கு பெரிய பூமி, நாற்காலி, மரம், நாய், பூனை எல்லாமே இரண்டு மடங்கு!நம்மால் அறிய முடியாது. யாராவது ஒரு ஆள் மட்டும் விதிவிலக்காக அப்படியே நின்று விட்டால் அப்போது தான் அவருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிய வரும். அதே மாதிரி காலமும் வெளியும் ஏதோ தில்லுமுல்லு செய்திருக்கின்றன என்பது நாம் நம்மை வேறு ஒரு F.O.R இல் உள்ள இன்னொரு ஆளுடன் ஒப்பிடும் போது தான் தெரிய வரும்.

சரி ரிலேடிவிடிக்கும் த்வைத சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்வதாக சொல்லியிருந்தேன்..அதை பார்த்து விட்டு
மேலே போகலாம்.


த்வைதம் ஹரி, அதாவது நாராயணனை ULTIMATE பரமாத்மா ,சர்வோத்தமன் என்கிறது. HIERARCHY எனப்படும் படிநிலைகள் அதில் உள்ளன. இந்த படிநிலைகளில் மனிதர்கள், தேவர்கள், பிரம்மா, லக்ஷ்மி என்று எல்லாரும் அடக்கம். இந்த படிநிலையில் கடைசியாக இறைவன் நாராயணன் வருகிறார். என்ன தான் படாத பாடு பட்டாலும் ஹரியின் இடத்தை யாராலும் அடைய முடியாது என்கிறது த்வைதம்.அதாவது ஜீவாத்மா ஒன்று பக்தியால் தன்னை உயர்த்திக் கொண்டு மேம்பட்ட படிநிலைகளை அடையலாமே தவிர ஒருபோதும் ஜீவன் பரமாத்மாவாக ஆக முடியாது. ரிலேடிவிட்டி ஒளிவேகத்தை ULTIMATE ஆக நிர்ணயிக்கிறது. என்னதான் கிட்டக் கிட்ட வரலாமே தவிர ஒளியின் வேகத்தை ஒரு பொருள் எட்டவே முடியாது என்கிறது. நாராயணன் மட்டுமே பரமாத்மா ஸ்தானத்தை வகிக்க முடியும். அதே மாதிரி ஒளி மட்டுமே ஒளிவேகத்தில் செல்ல முடியும்!

ஹரியைத் தவிர எல்லாரும் (லக்ஷ்மி உட்பட) காலத்தால் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஹரி ஒருவன் மட்டுமே காலாதீதன்,காலத்தின் பிடியில் சிக்காதவன். சரி,நிலையாக இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து முன்னேறும் ஒரு பொருளை பக்தியில் முன்னேறும் ஒரு சாதகனுக்கு உவமையாகக் கருதலாம். பக்தியில் நெகிழ்ந்து ஹரி அவனுக்கு குபேர பதவியைத் தரலாம்.குபேரனுக்கு அடுத்தபடியாக கணபதியின் இடம் வருகிறது. அடுத்த படிநிலையை பஞ்சபூதங்கள் எடுத்துக் கொள்கின்றன. அடுத்த படிநிலை சூரிய சந்திரர்களுக்கு.அதற்கு அடுத்த இடம் இந்திரனுக்கானது.அடுத்து கருடன்,ஆதிசேஷன், சிவன் ஆகியோர் வருகிறார்கள்.அடுத்த நிலையில் சரஸ்வதி தேவி. அவளுக்கு அடுத்து பிரம்மா. பின்னர் பிரம்மாவை விட உயர்ந்த இடத்தில் வாயுதேவர் எனப்படும் ஹனுமார். கடைசியில் சர்வோத்துமன் ஹரி. பொருள் வேகத்தை எட்ட எட்ட அதன் கால அளவு நிலையாக இருக்கும் ஒருவருடன் ஒப்பிடுகையில் மட்டுப்பட ஆரம்பிக்கிறது. அதே மாதிரி குபேரனின் உலகில் நம் பூமியை விட காலம் கொஞ்சம் மெதுவாக நகரலாம். எனவே அவன் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழலாம்.அடுத்து தேவர்களுக்கு காலம் இன்னும் மெதுவாக நகரலாம். மனிதனின் ஒரு வருடம் அவர்களுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அடுத்து சூரிய சந்திரர்களுக்கு இன்னும் காலம் மெதுவாக நகரலாம். பிரம்மாவுக்கு நாம் முன்பே சொன்னபடி காலம் ஆமை வேகத்தில் படு மெதுவாக நகருகிறது. நமக்கு ஒரு யுகம் கழியும் போது பிரம்ம லோகத்தில் ஒரு நிமிடம் கழிந்திருக்கும். என்னதான் காலம் மெதுவாக சென்றாலும் பிரம்மா கூட இறந்தே ஆக வேண்டும் என்கிறது த்வைதம். கடைசியில் ஒளிவேகத்தை எட்டுவது போன்றது ஹரியை அடைவது. அது அசாத்தியம். யாராலும் தொட முடியாத இலக்கு அது.பொருளுக்கு காலம் வேகத்துக்கு ஏற்ப மட்டுப்பட்டு ஒளிவேகத்தில் பொருளுக்கு காலம் தன் நகர்வை நிறுத்துகிறது.ஹரியும் காலம் இல்லாததால் அழிவேதும் இல்லாத பரம்பொருளாக திகழ்கிறான்.

சரி...ஒளியின் வேகத்தில் புறப்படும் ஒருவர் தனக்குப் பின்னே உள்ள ஒரு மணிக்கூண்டு கடிகாரத்தை திரும்பிப் பார்க்கிறார்.
அவருக்கு என்ன தெரியும்? இதற்கு பதிலாக வரும் TWIN PARADOX எனப்படும் இரட்டையர்கள் புதிரை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

சமுத்ரா

Friday, June 24, 2011

கலைடாஸ்கோப்-24

லைடாஸ்கோப்-24 உங்களை வரவேற்கிறது


1
==

கேள்வி கேட்பது கஷ்டமா பதில் சொல்வதா? பதில் சொல்வது தான் கஷ்டம் என்று நீங்கள் சொன்னால் உங்களுக்கு முட்டை மார்க்.கேள்வி கேட்பது தான் உண்மையில் கஷ்டமானது. திருவிளையாடல் படத்தில் சிவாஜி 'கேள்விகளை நீ கேட்கிறாயா
இல்லை நான் கேட்கட்டுமா' என்று கேட்க நாகேஷ், நானே கேட்கிறேன் என்று முந்திக் கொண்டு சொல்வார். அதற்கு
சிவாஜி நமட்டு சிரிப்பு சிரிப்பார்..'அட முட்டாளே ,கேள்வி கேட்பது தான் கஷ்டம்' என்று நினைத்திருப்பார் போலும்.

It is difficult to ask a question; more difficult to ask a right question; most difficult to ask a right question rightly.தமிழ்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம் என்ற அளவு நீங்கள் ஆங்கிலத்தை வெறுத்தால் இதோ உங்களுக்காக தமிழில் : கேள்வி கேட்பது கஷ்டம்; சரியான கேள்வியைக் கேட்பது அதை விட கஷ்டம்; சரியான கேள்வியை சரியான விதத்தில் கேட்பது அதைவிட கஷ்டம்.சரியான கேள்வியைக் கேட்கத் தெரியாத நாம் பதில் மட்டும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றே தோன்றுகிறது. பகவத் கீதை உட்பட உலக இலக்கியங்கள் பல
கேள்வியில் தான் தொடங்குகின்றன. நம்முடைய பேச்சு வார்த்தைகள் 90 % கேள்விகளாகத்தான் உள்ளன.நம் வாழ்க்கை
என்பது ஒரு விதத்தில் பதில் இல்லாத ஒரு கேள்வி..இன்னொரு விதத்தில் அது கேள்வி இல்லாத ஒரு பதில்.

'ஒரு மனிதனை அவன் சொல்லும் பதில்களால் அளவிடுவதை விட அவன் கேட்கும் கேள்விகளால் அளவிடுங்கள்' என்கிறார் ஒருவர் (யார் அது? அட விடுங்கப்பா பேரா முக்கியம்? யாரோ எக்ஸோ ஒய்யோ ) இன்னொருவர் கேள்விகளும் பதில்களும் எப்போதும் 100 % பொருந்துவதில்லை என்கிறார். சில நேரங்களில் பதில்கள் ஒரு சதவிகிதம் கூட பொருந்துவதில்லை. 'எங்கே போகிறாய்' என்ற கேள்விக்கு 'அவசியம் தெரிஞ்சுக்கணுமா ?' என்று எகத்தாளமாக பதில்(?) சொல்வது இதற்கு உதாரணம்.

ஸ்கூலில் படித்த வினா வகைகள் ஞாபகம் வருகிறது. மொத்தம் ஆறு வகையான வினாக்கள் இருப்பதாக இலக்கணம்
சொல்கிறது. அவை இங்கே (காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றப்பட்டு):

அறியா வினா (பதில் தெரியாமல் கேட்பது) மனைவி: நேத்து ராத்திரி எங்கே இருந்தீங்க?

அறி வினா (பதில் தெரிந்தே கேட்பது)
மனைவி: நேத்து ராத்திரி எங்கே இருந்தீங்க?

ஐய வினா: (சந்தேகம் தெளியக் கேட்பது)
மனைவி:என்னங்க உங்க பாக்கெட்ல இருந்தது ஐநூறு ரூபாய் நோட்டா? ஆயிரம் ரூபாய் நோட்டா?

கொளல் வினா (எதையாவது வாங்கக் கேட்பது) மனைவி : உங்க கிரெடிட் கார்டை கொஞ்சம் தரீங்களா?

ஒப்புமை வினா (மற்றவரின் ஒப்புதலுக்காக கேட்பது) மனைவி: ஏங்க இன்னிக்கு ரம்யாவோட ஷாப்பிங் போய் வரட்டா ?

கடைசியில் அதிர்ச்சி வினா

மனைவி : என்னது? உங்களுக்கு வேலை போயிருச்சா?

2
==

டெக்னாலஜியை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று சிலர் செய்யும் அலும்புகள் தாங்கமுடிவதில்லை. GOOGLE TRANSLATION ஒரு உதாரணம்.

YOU MUST NOT EAT என்று உள்ளிட்டால் 'நீ சாப்பிட வேண்டும்' என்று வருகிறது. Google இவ்வளவு மக்கா ? மனிதர்களை இன்னும் இன்னும் சோம்பேறிகளாக்க கணினி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முயற்சி செய்கின்றன என்று தோன்றுகிறது. 'you tempt me' என்று உள்ளிட்டால் அதில் 'நீங்கள் என்னை tempt ' என்று விடை வருகிறது.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்று உள்ளிட்ட போது அதையும் கூகிள் சின்சியராக மொழிபெயர்த்தது (?) ஆனால் அதன் மொழிபெயர்ப்பைப்
பார்த்து எனக்கு கெக்கே பிக்கே என்று சிரிப்பு வந்து விட்டது .இதோ:

"First eluttellam Adi Alphabetically
Bhagwant mutarre World "


Not bad என்கிறீர்களா? சரி I LOVE YOU என்பதற்குத் தமிழில் என்ன என்று கேட்டதற்கு "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று வந்து விழுந்தது.சரி சரி..இதை தான் முதலில் ப்ரோக்ராம் செய்திருப்பார்கள் போலும்..திருந்துங்கப்பா!

3
==

சமீபத்தில் தான் ட்விட்டரில் இணைந்தேன். (அடப்பாவி ஆபீசில் வேலையே செய்யமாட்டாயா ? ) இடைவிடாமல் அங்கே எல்லாரும் ட்விட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.பாதிக்கும் மேல் எல்லாம் அர்த்தமற்ற குப்பைகளாக உள்ளன..'நான் இப்போ உச்சா போகிறேன்' 'மம் மம் சாப்பிடுகிறேன்' 'அவன் இவன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்றெல்லாம் எப்படியாவது உலகத்தின் கவனத்தை நம் பக்கம் இழுத்து விடலாம் என்ற வீண் முயற்சிகள். ஆனால் சில ட்விட்டுகள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஷேக்ஸ்பியருக்கும் காளிதாசனுக்கும் தோன்றாத கற்பனைகள் பல இவர்களுக்குத் தோன்றுகின்றன.வைரமுத்துவுக்கும் வாலிக்கும் வராத சிந்தனைகள் இவர்களுக்கு வருகின்றன.

பக்கம் பக்கமாக எழுது என்றால் உற்சாகமாக எழுதி விடலாம்..ஆனால் சொல்லவந்ததை 140 எழுத்துகளுக்குள் அடக்கி சொல்லு என்றால் கஷ்டம் தான். இது எல்லாருக்கும் கைவரும் கலை அல்ல.

ட்விட் என்பதை தமிழில் 'கீச்சுதல்' என்கிறார்கள். Google translation இதற்கு அர்த்தம் தெரியாமல் வழக்கம் போல
முழித்தது. இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்திய பெருமை ஆண்டாளையே சேரும். (கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேரரவம்- திருப்பாவை)அதாவது பறவை ஒன்று 'ட்விட்' என்று கணநேரத்தில் கீச்சி முடிப்பதைப் போல மனதில் பட்டதை 'நச் ' என்று சொல்லவேண்டுமாம்.கீச்சுதல் என்று சொல்வதை விட நச்சுதல் என்று சொன்னால் நன்றாக இருக்கும்! நச்சுதல் என்பதற்கு விரும்புதல் என்ற நல்ல அர்த்தம் கூட தமிழில் இருக்கிறது என்பதால் சொன்னேன்.. இன்டர்நெட் எல்லாம் வருவதற்கு யுகங்கள் முன்பாகவே ட்விட்டிய ஒருவர் இருக்கிறார்.. 'சொல்லின் செல்வன்' எனப்படும் அனுமார் தான் அது. 'கண்டேன் சீதையை' என்று அவர் ட்விட்டியது தான் உலகத்தின் முதல் ட்விட்..நாமெல்லாம் TOO LATE ...

இப்போது சில கீச்சுகள் உங்களுக்காக :-

krpthiru: என்னை மின்சார நாற்காலியில் இருக்க வைக்க முயற்சி: ராஜபக்சே // நீங்க செஞ்சதுக்கு உங்கள அமெரிக்க அதிபர் நாற்க்காலியிலா உட்கார வைப்பாங்க ?!


vaanmugail: எதையோ மறந்ததை மட்டும் தெளிவாக ஞாபகம் வைத்து இருக்கும் மூளையை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.


Samudra123: பிறரை நமக்கு அறிமுகப்படுத்துகிறாள் நம் தாய். நம்மை நமக்கே அறிமுகப்படுத்துகிறாள் நம் மனைவி .பிறருக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறாள் நம் மகள்

minimeens: ஆண்கள் தண்ணியடிச்சா தேவையில்லாம உளறுவானுக, கொழைவானுக, சண்டபோடுவானுக. பொண்ணுக தண்ணியடிக்காமயே இதயெல்லாம் செய்வாங்க

selvu: ஒரு நொடிப்பொழுதே வாழ்கிறது ஒவ்வொரு நொடியும்.

arattaigirl மனைவி கையால சாப்டுட்டு ஆயிரம் குறை சொல்ற சம்சாரிகளை விட தெரிஞ்சதை தாங்களே சமைச்சு சாப்பிட்டுக்கற பேச்சிலர் பசங்களே குட் பாய்ஸ்

arattaigirl எனக்கான மகிழ்ச்சிகள் உன்னிடமே சேமிக்கப்பட்டுள்ளன.... நொடிக்கொருமுறை இருமடங்கு வட்டி தரும் அதிசய வங்கி நீ!


Samudra123 கம்ப்யூட்டரில் பக்கம் பக்கமாக எழுதுபவன் புத்திசாலி அல்ல..அவ்வப்போது மறக்காமல் 'SAVE ' செய்பவனே புத்திசாலி

Samudra123 என்பது நான் தான்

4
==
சாலையில் மாட்டு வண்டி செல்வதை இயல்பாக எடுத்துக் கொள்ளும் நமக்கு ஏனோ இந்த ஆம்புலன்ஸ் மட்டும் அந்நியமாகவே இருக்கிறது. அதன் அலறும் சைரன் , அபார வேகம் இதெல்லாம் எப்படா அது நம்மை விட்டு ஒழியும் என்ற அசௌகரியத்தை
நம்முள் ஏற்படுத்தும். ஒரு முறையாவது அதன் உள்ளே அமர்ந்திருப்பவர்களின் மனநிலையை உணர்ந்து பார்த்திருப்போமா?
பயணங்களிலேயே மிகக் கொடுமையானது இந்த ஆம்புலன்ஸ் பயணம். ஆம்புலன்சில் பயணித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு இது வரை இல்லை..ஒரு முறை வாய்ப்பு வந்த போதும் 'நான் பாட்டியைப் பார்த்துக்கிட்டு வீட்டிலேயே இருந்திர்றேன்" என்று AVOID செய்து விட்டேன்.இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு காலம் மெதுவாக நகரும் என்கிறது இயற்பியல்.ஆம்புலன்சுக்கு அது மிகவும் பொருந்தும் போலிருக்கிறது.

5
==

முன்பின் தெரியாத ஒரு நபரை எப்படி அழைப்பது? 'சார்' என்றால் அது தேவையில்லாத பிசினஸ் தன்மையை ஏற்படுத்தும்.
ஹலோ என்றால் டெலிபோன் சாயல் வெளிப்படும். UNCLE என்று அழைத்தால் எழுபது வயது தாத்தா கூட நம்மை முறைத்துப் பார்ப்பார். 'என்னங்க' என்றெல்லாம் கோயமுத்தூர் கிராமத்துப் பெண் மாதிரி அழைக்க முடியாது . இதற்கு இன்றைய இளை
ஞர்கள் கண்டுபிடித்து வைத்துருக்கும் வார்த்தை 'பாஸ்' ! (BOSS) பாஸ் கொஞ்சம் நகருங்க, பாஸ் இது உங்க பேனாவா,
என்ன பாஸ் இவ்ளோ சொல்றீங்க, என்று அப்துல் கலாமில் இருந்து ஆட்டோ டிரைவர் வரை பாஸ் என்று விளிக்கலாம் போல இருக்கிறது.இங்கிலீஷ் டிக்ஸனரியில் இதற்கு
a term commonly used to address a person who is unfamiliar என்று விளக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

6
==
ஒரு ஓஷோ ஜோக்


லிட்டில் ஹெர்னி ஸ்கூலில் இருக்கும் போது அவன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. 'எர்னி , மனதைத் தேற்றிக் கொள்
பேடி (PADDY) மீது லாரி ஏறி விட்டது' என்றாள் அவன் அம்மா. ஹெர்னி 'அப்படியா?' என்று ஒரே வார்த்தை சொன்னானே தவிர அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சாயங்காலம் வீடு வந்து டிபன் சாப்பிடும் போது அவன் நாய் பேடியைத் தேடினான்..அம்மா எங்கே பேடி? என்றான்

"அதான் போன் பண்ணி சொன்னேனே, அதன் மீது லாரி ஏறி மத்தியானம் செத்துப் போய் விட்டது" என்றாள் அம்மா

ஹெர்னி பயங்கரமாக ஆர்பாட்டம் செய்து அழுதான்..

"ஹெர்னி, என்ன ஆச்சு
?போனில் இதை இயல்பாக எடுத்துக் கொண்டாயே?" என்றாள் அம்மா..

"அம்மா நீ போன் பண்ண போது எனக்கு அது 'டாடி' (DADDY)ன்னு கேட்டுது' என்றான் ஹெர்னி..முத்ரா

Wednesday, June 22, 2011

அணு அண்டம் அறிவியல் -34 b

அணு அண்டம் அறிவியல் -34 b உங்களை வரவேற்கிறது

'அறிவு என்பது முக்கியம் அல்ல. கற்பனைத் திறம் தான் முக்கியம்' என்று ஐன்ஸ்டீன் சொல்வார். ஐன்ஸ்டீன் பெரிய பெரிய
பல்கலைக் கழகங்களில் அறிவியல் படிக்கவில்லை. சிக்கலான கணிதங்கள் அவருக்கு அத்துபடியாக இருக்கவில்லை.
பள்ளியிலும் அவர் சாதாரண நிலைக்கும் கீழான ஒரு மாணவனாகவே இருந்தார். அவர் தான் பின்னால் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஒரு தியரியை தனி ஆளாக நின்று வடிவமைத்தார்.இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்
சாதிப்பதற்கு பட்டங்களோ பெரிய பெரிய படிப்புகளோ தேவையே இல்லை என்பது. உண்மையில் சொல்லப்போனால் எந்த அளவு
படித்திருக்கிறோமோ அந்த அளவுக்கு நம் முட்டாள் தனமும் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் நானூறுக்கும் மேற்பட்ட இஞ்சினியரிங் கல்லூரிகளில் இருந்து இஞ்சினியர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளி வருகிறார்கள். அப்படியிருந்தும் நீலகிரி மலை ரயில் கோளாறு என்று அடிக்கடி நடுவழியில் நின்று விடுகிறது என்று ஒரு பத்திரிகை வருத்தம் தெரிவித்திருந்தது. உண்மை தான்! அபாரமான கற்பனைத்திறம் உள்ளவர்கள் பலர் இன்று அமெரிக்கக் கம்பெனிகளுக்கு கூஜா தூக்கும் வேலை பார்க்கிறார்கள் (நானும் தான்)

ஐன்ஸ்டீன் இரண்டே இரண்டு தரவுகளை (postulate ) வைத்துக் கொண்டு தன் தியரியை யோசிக்கத் தொடங்கினார்.POSTULATE என்றால் முதன்மை நிபந்தனைகள் (INITIAL CONDITIONS ) . நீங்கள் கணிதப் பாடத்தில் பார்த்திருக்கலாம் ஒரு தேற்றத்தை நிரூபிக்க முதலில் சில தரவுகளை அனுமானம் செய்து கொள்வார்கள். LEMMA எனப்படும் இவை அஸ்திவாரக் கற்கள் போல செயல்படுகின்றன. நீங்கள் கேட்கலாம் நம் அனுமானமே தவறு என்றால் (முதல் கோணல் முற்றிலும் கோணல்!) முழு தியரியும் தவறாகப் போய்விடுமே என்று.ஆனால் ஐன்ஸ்டீன் எடுத்துக் கொண்ட கருதுகோள்கள் நியூட்டன் காலம் தொட்டே அலசப்பட்டு துல்லியமாக நிரூபிக்கப்பட்டவை.

ஐன்ஸ்டீனின் கருதுகோள்கள்

(1 ) ஒளியின் வேகம் பிரபஞ்சத்தில் எல்லாருக்கும் (எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும்) ஒரே மாதிரி இருக்கும்
(2 ) இயற்பியலின் விதிகள் நிலையான பொருளுக்கும் சீரான வேகத்தில் செல்லும் பொருளுக்கும் மாறாது.

நம்பர் (1 ) ஐ ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். ஒளியின் வேகம் மாறாது என்பதை மைக்கெல்சன் மூர்லே ஆய்வில் இருந்து தொடங்கி நிறைய ஆய்வுகள் நிரூபித்தன.

நம்பர் (2 ) ஒரு வீட்டுக்குள் செய்யும் எல்லா செயல்களையும் நம்மால் சீரான வேகத்தில் ஓடும் ஒரு ரயிலின் உள்ளே இருந்து கொண்டு செய்ய முடியும்.ஓட முடியும்.குதிக்க முடியும். படங்களில் காட்டுவது போல சண்டை போட முடியும்.கிரிக்கெட் விளையாட முடியும். அதாவது இயற்பியல் நிலையான பொருளுக்கும் சீரான வேகத்தில் நேர்கோட்டில் பயணிக்கும் ஒரு பொருளுக்கும் எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை. சீரான வேகத்தில் பாயும் ஒரு சீல் செய்யப்பட விண்கலத்தின் உள்ளே இருக்கும் ஒருவரால் அது நிலையாக உள்ளதா அல்லது நகர்கிறதா என்று சொல்ல முடியாது.

ஒளியானது சீரான வேகத்தில் நகரும் ஒருவருக்கு வேறு வேகத்தில் சென்றால் அதை வைத்துக் கொண்டு அவர் நான்
நிலையாக இல்லை என்று ஊகிக்க முடியும். (it will mean absolute space!)இப்படி செய்வதை இயற்பியல் அனுமதிப்பதில்லை. அதாவது ஒரு மூடிய விண்கலத்தில் உள்ள ஒருவர் தான் இயக்கத்தில் இருக்கிறோமா அல்லது நிலையாக இருக்கிறோமா என்று அறிய எந்த க்ளூவையும் விட்டுவைப்பதில்லை.

மாக்ஸ்வெல்லின் சம்பாடுகளில் 'C ' என்ற மாறிலி (constant ) வருகிறது. இந்த மாறிலியானது ஒளிவேகம் கவனிப்பவரின் வேகத்தைப் பொறுத்து மாறாது என்று காட்டுகிறது. ஐன்ஸ்டீன் சிந்தித்துப் பார்த்தார்: நாம் ஒரு ஒளிக்கதிரின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு பக்கத்தில் வரும் இன்னோர் ஒளிக்கதிரைப் பார்த்தால் அது எப்படித் தெரியும்? என்று. லாஜிக்கின் படி அந்த ஒளிக்கதிர் அவருக்கு நிலையாக இருக்கவேண்டும். அதாவது ஒரு உறைந்து விட்ட அலை!முகடுகளும் பள்ளங்களும் அப்படியே உறைந்து போய்விட்ட ஓர் அலை.ஆனால் இப்படிப்பட்ட ஓர் அலையை மாக்ஸ்வெல்லின் இயற்பியல் அனுமதிக்கவில்லை. மின் காந்த அலைகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று மாக்ஸ்வெல் சமன்பாடுகள் தெளிவாகக் காட்டின.அதாவது ஒருவர் ஒளிவேகத்தில் சென்றாலும் கூட அவருக்கு இன்னொரு ஒளி தன்னை விட்டு C வேகத்தில் நகர்வதாகத் தான் தோன்றும்.

நிலையாக இருக்கும் ஒருவரும் குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒருவரும் எப்படி ஒளிவேகத்தை ஒரே மாதிரி அளவிட முடியும் என்று ஐன்ஸ்டீன் யோசித்தார். குறிப்பிட்ட வேகத்தில் செல்லும் ஒருவருக்கு லாஜிக்கின் படி (அவரது திசையில் இணையாகச்செல்லும்) ஒளிவேகம் சற்று குறைய வேண்டும்.
(நம் ரயிலிக்கு இணையாக ஒரு ரயில் வந்தால் அதன் வேகம் நமக்குக் குறைந்து தெரியுமே அது மாதிரி) ஆனால் அப்படி இல்லாமல் இயக்கத்தில் உள்ளவருக்கும் ஒளிவேகம் மாறாமல் அதே வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்களாக இருப்பதால் ஒளி வேகத்தை மாறிலியாக maintain செய்ய நகரும் பொருளுக்கு வெளி சுருங்குகிறது. காலம் மெதுவாகச் செல்கிறது என்ற புரட்சிகரமான கருத்தை ஐன்ஸ்டீன் வெளியிட்டார். இது இயற்பியலின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றையே மாற்றியது. தன் முதல் விதிக்கு ஒத்து வரவில்லை என்ற போதும் நியூட்டன் வெளி காலம் ஆகியவை என்றுமே மாறாத அளவீடுகள் என்று தான் கருதினார். ஆனால் ஐன்ஸ்டீன் இவை இரண்டும் RELATIVE , சார்புடையன என்று அனுமானித்தார்.அதாவது இரண்டும் பார்ப்பவரையும் அவரது FRAME OF REFERENCE ஐயும் பொறுத்தது என்றார்.

உதாரணமாக தரையில் இருக்கும் ஒருவர் ஒளி பத்து செகண்டுகளில் நூறு மீட்டர் செல்வதாக அளவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். (அதாவது 10 m /s ) இன்னொருவர் நொடிக்கு ஒரு மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அதே ஒளியின் வேகம் என்னவாக இருக்கும்? அவருக்கு ஒளி ஒரு செகண்டுக்கு ஒன்பது மீட்டர் செல்வதாக தோன்ற வேண்டும்.ஆனால் இதுவரை நாம் பார்த்தபடி அவருக்கும் ஒளி ஒரு வினாடிக்கு பத்து மீட்டர் செல்வதாகத் தோன்றும். எப்படி? எங்கோ இடிக்கிறதே? சிம்பிள்.நகர்ந்து கொண்டிருப்பவருக்குஇரண்டு விளைவுகள் (நிலையாக இருப்பவரைப் பொறுத்து) ஏற்படும் .ஒன்று அவருக்கு வெளி சுருங்கும். வெளியே நிலையாக இருப்பவருக்கு நூறு மீட்டராக இருக்கும் வெளி
இவருக்கு ஐம்பது மீட்டராக சுருங்கும். இரண்டாவது காலம் மட்டுப்படும். வெளியே இருப்பவருக்கு பத்து செகண்டுகளாக ஓடும் காலம் இவருக்கு ஐந்து செகண்டுகளாக ஓடும்.அதாவது நிலையாக இருப்பவருக்கு இரண்டு வினாடிகள் நகர்ந்து விட்டிருக்கும் போது இவருக்கு ஒரு வினாடி தான் போயிருக்கும். இப்போது இயக்கத்தில் இருப்பவர் ஒளிவேகத்தை
எவ்வாறு அளவிடுவார் என்று பார்க்கலாம் 50 /5 = 10 மீட்டர்/ செகண்டு (அட! SAME !)

பிரபஞ்ச மாறிலியான ஒளிவேகத்தை நிலையாக இருக்க வைக்க வெளி சுருங்கியும் காலம் மெதுவாகியும் மெனக்கெடுகின்றன. காலம் எவ்வாறு மட்டுப்படுகிறது என்றும் வெளி எவ்வாறு சுருங்குகிறது என்றும் இரண்டு உதாரணங்கள் மூலம் பார்க்கலாம். முதலில் காலம்:

தரையில் இருக்கும் ஒருவர் காலத்தை இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே (M1 M2 ) ஒளி பயணிப்பதை வைத்துக் கொண்டு அளவிடுகிறார். (ஒளிவேகம் மாறாது என்பதால் ஒளியை வைத்துக் கொண்டு நாம் கடிகாரம் செய்யலாம்) ஒரு நொடி என்பது அவருக்கு ஒளி கீழே உள்ள கண்ணாடியில் இருந்து புறப்பட்டு மேலே உள்ள கண்ணாடியை முட்டி பிரதிபளிக்கப்பட்டு மீண்டும் கீழே உள்ள கண்ணாடியில் முட்டுவது .சரி இப்போது இந்த அமைப்பு ஒரு சீரான வேகத்தில் ஓடும் ரயிலின் உள்ளே இருப்பதாகக் கொள்வோம். இப்போது ரயிலின் உள்ளே இருக்கும் ஒருவர் அவரது காலத்தையும் ஒளியின் பிரதிபளிப்பை வைத்து அளவிடுகிறார் என்று கொள்வோம். ஒளி M2 வில் இருந்து புறப்பட்டு M1 ஐ அடைவதற்குள் M1 சற்று ரயிலின் திசையில் நகர்ந்து விடுகிறது. (ரயிலின் இயக்கத்தால்) இப்போது M2 கண்ணாடியில் இருந்து M1 கண்ணாடிக்குப் போய் முட்டும் ஒளியின் பாதை நேர்கோடாக இல்லாமல் சில கோணங்கள் வலப்புறம் சாய்ந்து இருக்கும். அதாவது M1 மற்றும் M2 விற்கு இடையே இப்போது ஒளி சிறிது நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.M1 ல் பட்டு திரும்பும் ஒளி மீண்டும் கீழே உள்ள M2 ஐ அடியும் போது M2 நகர்ந்து ஒளி மீண்டும் ZIG ZAG ஆக பயணித்து M2 ஐ அடையும். எனவே ஒளியின் ஒரு 'டிக்' கிற்கும் இன்னொரு 'டிக்' கிற்கும் இடையே சிறிது நேரம் எக்ஸ்ட்ரா வாக ஆகும். ரயிலில் இருப்பவர் தன் காலத்தை ஒளியின் கண்ணாடிகளுக்கு இடையேயான மோதல்களை வைத்து அளவிடுவதால் அவருக்கு ஒரு நொடி என்பது நிலையாக இருக்கும் ஒருவருக்கு நகரும் ஒரு நொடியைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

சரி இப்போது ரயில் ஒளியின் வேகத்தில் போவதாக வைத்துக் கொள்வோம். M2 வில் இருந்து புறப்பட்டு செல்லும் ஒளி திரும்ப M2 வை வந்து அடையவே அடியாது. (ஒளிவேகத்தில் விரையும் M1 இற்கும் ஒளிக்கும் இடையே தொடர்ந்து இடைவிடாமல் முடிவின்றி மும்முரமாக ரன்னிங் ரேஸ் நடக்கும். )ஏன் என்று கற்பனை செய்ய முடிகிறதா? முயற்சி செய்யுங்கள்..எனவே ஒளிவேகத்தில் செல்லும் ரயிலின் உள்ளே இருப்பவர்க்கு ஒரு நொடி நகரவே நகராது. அப்படியே உறைந்து விடும்.வெளியே அனந்த கோடி ஆண்டுகள் கழிந்தாலும் உள்ளே ஒரு நொடி கூட இன்னும் கழிந்திருக்காது. (ஒளி திரும்பி வந்து M2 வை அடித்தால் தானே ஒரு நொடி நகர்ந்ததாகக் கணக்கு?)

இதை கணிதவியல் ரீதியாகப் பார்க்க:இந்த சம்பன்பாட்டில் V =C என்று போடுங்கள்..சமன்பாட்டில் கீழே உள்ள பகுதி பூஜ்ஜியம் ஆகும். ஒரு எண்ணை பூஜ்யத்தால் வகுத்தால் முடிவிலி வரும்.எனவே காலமும் முடிவிலி..

ஒரு பேச்சுக்கு இப்போது ரயில் ஒளி வேகத்துக்கு மிஞ்சி பயணிப்பதாக வைத்துக் கொள்வோம். (V >C ) ஆம்:-) இப்போது அந்த ரயில் ஒரு கால இயந்திரம் போல செயல்பட ஆரம்பிக்கும்.ரயிலில் உள்ளே இருப்பவர் கடந்த காலத்துக்குள் நுழைய ஆரம்பிப்பார். இப்போது M2 வில் இருந்து புறப்படும் ஒளி அதை விட அதிக வேகத்தில் விலகும் M1 ஐ ஒருபோதும் அடைய முடியாது.ரன்னிங் ரேசில் ஒளி நிரந்தரமாகத் தோற்றுப்போய் விடும். ஆனால் M2 வில் இருந்து புறப்படும் ஒளி ஏதோ ஒரு இடத்தில் சென்று முட்டித் தானே ஆக வேண்டும்? எங்கே சென்று முட்டும்? M1 இல்! என்ன? குழப்பமாக இருக்கிறதா? இப்போதைய M1 அல்ல. M1 இன் கடந்த கால இமேஜில் போய் முட்டும். எனவே ரயிலின் உள்ளே காலம் உல்டாவாக மைனசில் நகர ஆரம்பிக்கும். அதாவது ஒளி புறப்படுவதற்கு முன்னரேயே போய் சேர்ந்து விடும்!!

ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி மனிதனை காலம் காலமாக படுத்தி வந்த இந்த 'காலத்தை' வெல்ல வழி செய்தது.காலத்தை நிறுத்தி வைப்பது மட்டும் அல்ல..கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் சர்வ சாதாரணமாக பயணிக்கும் சாத்தியக்
கூறுகளையும் திறந்து வைத்தது.

சமுத்ரா


அணு அண்டம் அறிவியல்-34a
பழங்காலம் தொட்டே மின் ஆற்றலும் காந்த ஆற்றலும் வேறுவேறு என்று மனிதர்கள் நினைத்து வந்தார்கள். மைக்கேல் ஃபேரடே
உலகின் முதல் மின் மோட்டாரை உருவாக்கி இவை இரண்டும் ஒரே ஆற்றலின் இருமுகங்கள் என்று கண்டுபிடித்தார்.

மின் காந்த அலைகள் எப்படிப் பரவுகின்றன என்ற விளக்கத்தை ஜேம்ஸ் க்ளெர்க் மாக்ஸ்வெல் அளித்தார். மின் காந்த அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியும் என்றும் அவை பரவ எந்த ஊடகமும் தேவையில்லை என்றும் அவர் விளக்கினார். மின் காந்த அலைகள் எப்படி செல்கின்றன என்று படத்தில் பாருங்கள். மின் புலமும் காந்தப் புலமும் ஒன்றை ஒன்று அணைத்துக் கொண்டு மின் காந்த அலைகள் ஒளிவேகத்தில் பயணிக்கின்றன.மின் புலம் உச்சம் பெறும் போது காந்தப்புலம் பூச்சியமாகவும் காந்தப்புலம் உச்சம் பெறும் போது மின்புலம் பூச்சியமாகவும் இருக்கிறது. மாக்ஸ்வெல் இந்த மின் காந்த அலைகளின் வேகத்தைக் கணக்கிட்ட போது அவை ஒளிவேகத்தில் பயணிப்பது தெரிந்தது. இதில் இருந்து ஒளியும் ஒரு வித மின் காந்த அலை தான் என்று மாக்ஸ்வெல் கண்டுபிடித்துச் சொன்னார்.

ரேடியோ அலைகள் போல, மைக்ரோவேவ் அலைகள் போல, ஒளியும் ஒருவித மின்காந்த அலை!

Tuesday, June 21, 2011

கலைடாஸ்கோப்-23

லைடாஸ்கோப்-23 உங்களை வரவேற்கிறது

1
==

சமீபத்தில் பார்த்த ஒரு கார்ட்டூன் எரிச்சலடைய வைத்தது . நித்யானந்தா, சங்கராச்சாரியார், பிரேமானந்தா, புட்டபர்த்தி பாபா எல்லாரும் ஒரு புறம் நின்று சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் "ஏய், ஜக்கி, நீ எப்போ எங்க லிஸ்டுல சேரப் போற? உன்னோட வீடியோ சீக்கிரம் ரிலீஸ் பண்ணு" என்கிறார். ஆன்மீகத்தில் ஒருவர் நல்லவராக இருந்தால் இவர்களே விடமாட்டார்கள் போலிருக்கிறது. வீடியோவை எதிர்பார்க்கும் சிஷ்யர்களுக்கு வீடியோவை ரிலீஸ் செய்யும் குரு தானே கிடைப்பார்?..SUPPLY FOLLOWS DEMAND !

ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரில் ஒரு போலிச் சாமியார் இருந்தார். (ஒரு ஊருக்கு ஒரே ஒரு போலிசாமியார் தானா ? என்றெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்)அவரிடம் ஒரு சிஷ்யன் புதிதாக சேருகிறான். அவனுக்கு அந்த குருவின் மேல் அளவு கடந்த பக்தி,திட நம்பிக்கை எல்லாம் இருந்தது.ஒரு நாள் கூட குருவின் சேவையை தவற விடமாட்டான்.

ஒருநாள் அந்த ஊரில் பேய்மழை..யாரும் வெளியே தலைகாட்டவில்லை.சாமியாரின் மற்ற சிஷ்யர்கள் அவர் பக்கம் எட்டிகூடப்
பார்க்கவில்லை..பக்கத்து கிராமத்தில் இருக்கும் இந்த சீடன் மட்டும் நேரம் தவறாமல் குருவின் பணிவிடைக்கு வந்து நின்றான்.
அவருக்கு ஆச்சரியம்: "ஊரில் பேய்மழை பெய்கிறது. நீ இருக்கும் கிராமத்திற்கும் இந்த ஆசிரமத்திற்கும் இடையே ஓடும் காட்டாற்றில் பயங்கர வெள்ளம் பாயுமே? எப்படி வந்து சேர்ந்தாய் ? என்று கேட்கிறார்.

அதற்கு அவன் "ரொம்ப சுலபம் குருவே, உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே தண்ணீரின் மேல் நடந்து வந்தேன்" என்கிறான்.

இதைக் கேட்ட குருவுக்கு கர்வம் தாங்கவில்லை.."நம் பெயரை சொல்லிக் கொண்டே ஒருவன் தண்ணீர் மேல் நடக்கிறான் என்றால் நம்மால் பறக்கவே முடியும்" என்று நினைத்துக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு அந்த நதிக்கு வருகிறார். பெருமிதத்துடன் நதியில் கால் எடுத்து வைத்ததுமே உள்ளே முழுகி விடுகிறார்.."ஐயோ ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்" என்று அலறுகிறார்.

இந்தக் கதையில் இருந்து என்ன தெரிகிறது? குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் அல்ல. சிஷ்யனின் நம்பிக்கை தான் முக்கியம் என்று. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படக்கூடிய ஒரு மோசமான ஆள் ஒரு உண்மையான குருவிடம் இருந்தாலும் எதுவும் நடக்காது. ஆனால் உண்மையான சிஷ்யன் ஒருவன் போலி குரு ஒருவரிடம் இருந்தாலும் அவன் வாழ்வில் அதிசயங்கள் நடக்கலாம். நித்தியானந்தாவின் சீடர்களுக்கும் நல்ல விஷயங்கள் பல நடப்பது இப்படி தான்..இதற்காக போலி குருவிடம் போய் சேருங்கள் என்று சொல்லவில்லை.இருக்கிறவர்களையும் போலி குருவாக மாற்றி விடாதீர்கள்.."அவர் மேல ஒரு F .I .R கூட இல்லை..அவர் எல்லாம் என்ன ஆன்மீக குரு?" என்ற நிலைமையை கொண்டு வந்து விடாதீர்கள்.

ஜக்கி வாசுதேவ் எத்தனை மரங்களை நட்டிருக்கிறார் என்பது தெரியுமா? சாயிபாபா மோசடி செய்திருந்தாலும் கூட
சென்னைக்கு தண்ணீர் உதவி செய்யவேண்டும் என்ற அவசியம் என்ன? என்னைப் பொறுத்த வரையில் திருட்டுப் பணத்தில் இன்னொருவருக்கு உதவுவது என்பது நாமே சம்பாதித்த பணத்தை பேங்கில் போட்டு நாமே தின்று தீர்ப்பதை விட மேல்!

வெறுமனே எல்லாரையும் குறைசொல்லிக் கொண்டு இருக்கிறோமே தவிர நாம் சமுதாயத்திற்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டோமா என்று யோசிக்க வேண்டும். எல்லாரையும் சகட்டு மேனிக்கு குறை சொல்லும் ஒரு பிரபலமான (?) வெப்சைட் இருக்கிறது ( பெயர் வேண்டாம் ) .ஒருவரை கண்டபடி திட்டி எழுதினால் அது சீக்கிரம் பிரபலமாகி விடுகிறது. நான் இயற்பியல்,இலக்கியம் அது இது என்று மெனக்கெட வேண்டாம் போலத் தோன்றுகிறது. சும்மா நாலுபேரைத் திட்டி "டேய் நீயெல்லாம் யோக்கியாமா?" என்று தலைப்பு வைத்து நாலைந்து பதிவு போட்டால் போதும்.ஐநூறு FOLLOWERS கிடைத்து விடுவார்கள்!

2
==

Negotiation process, பாக ஆலோசிஞ்சி,டொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங், அங்ஙன யாருட முன்பிலும், Sorry are you ok? now? , டன்-டன்-டன், நிம்பூ கா ரஸ், நியூ பாண்ட்ஸ் பியூர் ஒயிட், யஹா பி ஹோகா வஹா பி ஹோகா, டஷ் டஷ் டஷ் ஆ ஊ ஊய், சென்னாகித்தியா? மைக்ரோ ஒயிட்னர்ஸ் பார்முலா, டுர்ர்ர்ர்ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர் ர்ர், ப்ரேமகா மாறிந்தி, டொய் டொய் டொடொய், ரத்தம் இல்லா காதல் என்று ஒத்திப்போகச் சொல்வாயா?,ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

என்ன பைத்தியம் பிடித்து விட்டதா என்று நினைக்க வேண்டாம்..இன்னும் இல்லை! டி.வி யில் சானல்களை மாற்றும் போது இப்படி தான் கேட்கிறது. MUTE செய்து விட்டு மாற்றவில்லை என்றால் உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட வாய்ப்பு இருக்கிறது.

3
==

விஜய் டி.வி யில் 'அது இது எது' பார்ப்பீர்களா? இருப்பதிலேயே விஜய் கொஞ்சம் டீசன்டான டி.வி போல தோன்றுகிறது. காலையில் வீடு தேடி வருவான் விட்டலன், பக்தித் திருவிழா என்று அருமையாகத் தொடங்குகிறது..சன் டி.வி யில் பார்த்தால் '
ரெண்டுல தான் ஒண்ணைத் தொட வரியா' போன்ற வேறுவிதமான பக்திமணமிக்க பாடல்கள் ஒளிபரப்பாகும்..அது இது எது வில் ஒரு போட்டி..கேட்கும் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை சொல்ல வேண்டும்.சம்பந்தம் வந்து விட்டால் அவுட்..டி.வி. சானல் மாற்றும் போது வருவது போல கண்டபடி உளற வேண்டும்.

உதாரணம்:

கேள்வி: உங்க பேர் என்ன?
பதில் : வெய்யில் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு
கேள்வி: இல்லையே, நேத்து கூட மழை வந்ததே?
பதில்: எனக்கு பாடத் தெரியாது
கேள்வி: பாத்ரூமில் கூட பாட மாட்டீங்களா?
பதில் : நேத்து நான் ஷாப்பிங் போனேன்.
கேள்வி: என்ன வாங்குனீங்க?
பதில்: ரசத்துக்கு உப்பு கம்மி..

இது மிகவும் கஷ்டம்.. நிறைய பேர் இரண்டு மூன்று கேள்வியிலேயே அவுட் ஆகிவிடுவார்கள்.. சம்பந்தமே இல்லாமல் தொடர்ச்சியாக ஐந்து வார்த்தைகளை நம்மால் சொல்ல முடியாது என்பார் எழுத்தாளர் சுஜாதா. EVERYTHING IS CONNECTED ..பஸ்ஸில் நீங்கள் பார்க்கும் யாரோ ஒரு அந்நியருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்
இருக்கக் கூடும்? ஏதாவது இருக்கும்..நீங்களும் அவரும் ஒரே பெற்றோரிடம் இருந்து தான் (ஆதாம் ஏவாள்) வந்தீர்கள் என்பது கொஞ்சம் டூ மச்சாகத் தோன்றினாலும் வேறு ஏதாவது சம்பந்தம் இருக்கலாம். நீங்களும் அவரும் ஒரே பிராண்ட் பனியன் போட்டிருக்கலாம். நீங்கள் மதியம் சாப்பிட்ட ஹோட்டல் ஓனரின் தம்பி பையனாக அவர் இருக்கலாம்! ஏன் நீங்கள் இருவரும் ஒரே பஸ்ஸில் பயணிக்கிறீர்கள் என்ற ஒன்றே போதாதா? THERE ARE MANY WAYS TO CONNECT ..

சம்பந்தேமே இல்லாத ஐந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ளலாம்..பிறகு அவற்றை வைத்து ஒரு பொருளுள்ள வாக்கியம் ஒன்றை உருவாக்க வேண்டும்.ரெடி?

வார்த்தைகள் : அம்பேத்கார், வானம், பானிபூரி, பனியன், முள்ளம்பன்றி.. கஷ்டம் போலத் தோன்றினாலும் சுலபம் தான் .இதோ வாக்கியம்:

"அம்பேத்கார் ரோட்டில் வானம் தூற ஆரம்பிக்க அங்கே பனியன் போட்டுக் கொண்டு பானிபூரி விற்றவன் தலை முள்ளம்பன்றி மாதிரி இருந்தது"

சரி..கலைடாஸ்கோப் வாசகர்களுக்கு ஒரு போட்டி : கீழே உள்ள வார்த்தைகளை வைத்துக் கொண்டு (அர்த்தம் உள்ள) ஒரு வாக்கியம் அமையுங்கள் பார்க்கலாம்

யானை, ஜோதிகா, இன்ஸ்பெக்டர், கொசுவர்த்தி, கப்பல் (எப்படி அமைக்கிறீர்கள் என்று பார்த்து விடுகிறேன் :-) )

4
==

நான் படித்த அறிவியலோ, இலக்கியமோ, இசையோ, தமிழோ இது வரை எனக்கு சோறு போட்டது இல்லை. நான் படித்த தொழில்நுட்பம் தான் இது வரை எனக்கும் என்னை சேர்ந்தவர்களுக்கும் படியளந்தது. அளக்கிறது. படித்த தொழில் நுட்பம் எனக்கு நிறைய வசதிகளைத் தந்திருக்கிறது.ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளது. வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது. ஆனால் நான் எழுதிய கவிதைக்கு ஒரு நூறு ரூபாய் கிடைக்குமானால் அதுதான் எனக்கு உண்மையான சம்பளம் என்று நான் அடிக்கடி வீட்டில் சொல்வதுண்டு. 'தமிழும்' சோறு போடும் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்தது.

இந்த ப்ளாக்கைப் படித்து விட்டு பெங்களூரில் வசிக்கும் திரு.G .M .B என்னை சந்திக்க விரும்புவதாக சொன்னார். தாசரஹள்ளியில் இருக்கும் அவர் வீட்டுக்கு சென்ற போது இன்முகத்துடன் வரவேற்றார்.. தாடிவைத்த வயசான ஒரு ப்ரொபசரை எதிர்பார்த்தேன் இவ்வளவு இளமையாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை என்றார். அழகான அடக்கமான வீடு..அன்பான மனைவி (LOVE MARRIAGE !) வீட்டின் பின் புறத்தில் சிறிய தோட்டம்..
G .M .B அவர் வரைந்த paintings சிலவற்றைக் காட்டினார்..ஒன்று எனக்கும் பரிசளித்தார். அவர் மனைவி மிக அழகாகப் பாடுகிறார். சுவையான சமையலைப் பரிமாறினார். அவர்கள் மரத்தில் பழுத்த மாம்பழங்கள், ஸ்வீட், ப்ரூ காபி என்று வரிசையாக அளித்து ராஜ உபசாரம் செய்தார்கள்! எட்டு மாதங்களுக்கு முன்னர் தான் பேரனின் உதவியுடன் தமிழில் ப்ளாக் எழுத ஆரம்பித்தாராம். இந்த கலைடாஸ்கோப் , நைவேத்தியம் சிறுகதை இரண்டும் மிகவும் பிடிக்கும் என்றார்.. . முன் பின் தெரியாத மனிதர்களையும் இணைத்து பந்தப்படுத்தும் வலிமை எழுத்துக்கு உண்டு என்று அறிந்து கொண்டேன்!

*************நன்றி ஜி.எம்.பி. சார்!**************


5
==

பார்த்தால் இப்போது தான் காலேஜ் முடித்த பையன் போல இருக்கிறாய் என்று சிலர் சொல்கிறார்கள். இளமையாக இருப்பது

என்பதன் ரகசியத்தை சிந்தித்துப் பார்க்கிறேன்.. இளமையாகத் தோற்றமளிப்பது என்றால் நிறைய வழிகள் உள்ளன.
"PONDS AGE MIRACLE '' ஒரு டப்பா வாங்கி பூசிக் கொள்ளலாம். சின்னப்பையன்கள் போடும் டி-ஷர்டுகளைப் போடலாம்.
சலூனுக்கு சென்று 'பேஷியல்' செய்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே இளமையாக இருக்க வேண்டும் என்றால்
அதற்கு தேவை என்று நான் கருதுபவை:

1 . கடவுள், இறைவன், அல்லது ஒரு பிரபஞ்ச சக்தி WHATEVER IT IS அதனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை.

2 . நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்ளும் தன்மை

3 . நடந்தவைகளை அசைபோட்டுப் பார்த்து உள்ளுக்குள் புழுங்காமல் இருத்தல்.

4 . நிகழ்காலத்தில் வாழ்தல். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்தல் ,நடப்பவைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்

5 . பிரபஞ்சத்தைப் பார்த்து வியக்கும் விழிகள்

6 . வாரம் ஒருமுறையாவது குழந்தைகளுடன் விளையாடுதல்

7 . தனிமையில் பைத்தியமாகத் தெரிந்திருத்தல்..

8 இன்னொருவரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து பொருமாமல் இருத்தல்

9 . சங்கீதம்

LAST BUT NOT THE LEAST

10 . கொஞ்சம் தியானம்


6
==

சரி கொஞ்சம் சிரிக்கலாம்.வேறு என்ன? ஓஷோ ஜோக் தான்!

இரண்டு இட்டாலியன் ஜோக்குகள்

ஒரு இட்டாலியன் கையில் ஒரு பன்றியை வைத்துக்கொண்டு ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தான் .

வழியில் வந்த ஒருவன் அவனைப் பார்த்து " எத்தனை ரூபாய் கொடுத்து வாங்கினாய்?" என்று கேட்டான்

"அம்பது சென்ட்ஸ்" என்று பதிலளித்தது பன்றி ..


ஒரு இட்டாலியனின் மனைவி இறந்து விட்டாள்.. புதைப்பதற்காக சவப்பெட்டியை ஒரு வேனில் எடுத்துச் சென்றார்கள்..
வழியில் சவப்பெட்டி ஒரு பெரிய கம்பத்தில் பயங்கரமாக இடித்து விட்டது. உடனே உள்ளே இருந்து ஒரு அலறல் கேட்டது.
அவசர அவசரமாக பெட்டியை கழற்றி திறந்து பார்த்ததில் அவன் மனைவி உள்ளே உயிருடன் இருப்பது தெரிந்தது.
பின்னர் அந்தப் பெண் மூன்று வருடங்கள் உயிருடன் வாழ்ந்தாள்..ஒரு நாள் மீண்டும் செத்துப் போனாள்.
இந்த முறையும் சவப்பெட்டி..அதே பாதை..அதே வேன்..

இட்டாலியன் வண்டி ஓட்டும் டிரைவரைப் பார்த்து "அந்த கம்பத்து கிட்ட மாத்திரம் கொஞ்சம் ஜாக்கிரதையாப்
பார்த்து ஓட்டுப்பா" என்றான்.

முத்ராMonday, June 20, 2011

ராமன் ஆண்டாலும்!


ராமன் ஆண்டாலும்
===================

பொற்கால ஆட்சி மலர்ந்தது என்கிறார்கள்
சத்தியம் ஜெயித்து விட்டதாம்
அரக்கர்கள் வீழ்ந்ததாக சொல்கிறார்கள்
ராமராஜ்ஜியம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாம்
தேனாறும் பாலாறும் இனிமேல் ஓடுமாம்
எங்களுக்கு வித்தியாசம்
பெரிதாய் ஏதுமில்லை..
அதே காலை நேர வியர்வை பேருந்துப் பயணங்கள்
ஓனரிடம் வீட்டு வாடகை சமாளிப்புகள்
பட்ஜெட் இடிப்புகள்
மாதக் கடைசியின் விசனங்கள்.
சீட்டுக்கு பணம் கட்டும் கவலைகள்
நகை அடகு வைத்து மீட்கும் அவலங்கள்
எங்களுக்கு பெரிதாய்
வித்தியாசம் ஏதுமில்லை..

ஆயத்த வார்த்தைகள்
=======================


என் கவிதையைப் படித்து விட்டு
'நன்று' என ஒற்றை வார்த்தையில் சொல்ல நீ யார்?
என் கவிதையைப் பிரசவிக்க
நான் பட்ட பேறு வலிகளை நீ அறிவாயா?
என் கவிதை வடிவம் பெறுவதற்கு முன்
என் உயிரை அது ஆயிரம் முட்களால்
உறுத்தியது உனக்குத் தெரியுமா?
வார்த்தைகளை யாசித்து நான்
நடைப்பிணம் போல நடந்ததைப் பற்றி
உனக்கு அறிவேதும் இருக்கிறதா?
கவி வரம் வேண்டி
புவி மீது நான் புரிந்த
தவங்கள் பற்றி உனக்குத் தெரியுமா?
உன் அவசர வாழ்க்கையில் -
ஏதோ மரபுக்காய்
ஆயத்த வார்த்தைகளை உதிர்க்காதே!
அந்த இடத்தில் வார்த்தை சரியில்லை
என்று சொல்லியிருந்தால் கூட
எனக்கு ஆறுதலாய் இருந்திருக்கும்!


ALL IS WELL
===========


அந்த பொம்மை தான் வேண்டும் என்று
அப்பாவை இரண்டு நாள் நச்சரிக்காது இருந்திருக்கலாம்
பத்தாம் வகுப்பு பெயில் என்று
தேவையில்லாமல் மாத்திரையை முழுங்கி இருக்க வேண்டாம்..
அந்தப் பெண் மறுத்து
விட்டாள் என்பதற்காய்
இரவுகளைக் கண்ணீரால் நனைத்திருக்க வேண்டாம்..
வேலையில் இருந்து நீக்கிய கம்பெனியை
வேளா வேளை மறக்காமல் திட்டியிருக்க வேண்டாம்..
பஸ் ஸ்டாண்டில் அன்று அவனை
ஒரு சிறு புன்னைகையால் மன்னித்திருக்கலாம்..
தூக்கம் தொலைத்த இரவுகளை தவிர்பதற்கேனும்
நான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டிருக்கலாம்
அமர்ந்து பேசலாமா
என்று பங்காளிகளை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்..

வாழ்க்கையின் முடிவில்
செய்ததைத் திரும்பிப் பார்க்கும் போது
குழந்தைத் தனமாக இருக்கிறது.

அழகு
=====

நகரத்தின் சாலையோர சுவர்களில்
இப்போதெல்லாம்
யானை, மான் ,புலி, மயில், கடல்
அறுவடை செய்யும் பெண்கள்,
பானை செய்யும் குயவன்
வாள் சண்டை போடும் வீரர்கள்
உருண்ட கண்களுடன் முறைக்கும் நரசிம்மர் சாமி,
குழந்தையைக் கொஞ்சும் தாய்
என்று விதம் விதமான ஓவியங்கள்..
ஊழல் செய்யும் தலைவர்களை
அர்த்தமில்லாமல் புகழ்ந்து எழுதிய
வாசகங்களை விட
அழகாகவே உள்ளன,,

மன்மத லீலையை
===================

கோயில்களில்
பஸ் நிலையங்களில்
ரயில் நிலையங்களில்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
வாக்-இன்-இன்டர்வியூக்களில்
மளிகைக் கடைகளில்
வங்கிகளில்
கடற்கரைகளில்
இப்படி எல்லா இடங்களிலும்
கழுத்தை நெரிக்கும் அளவு மனிதக் கூட்டம்!
குரங்கில் இருந்து மனிதனாய் மாறிய
நாளில் தொடங்கி
மனிதன்
ஒரு விஷயத்தை மட்டும்
கண்ணும் கருத்துமாய் செய்து
வந்திருக்கிறான் என்று தெரிகிறது..


சமுத்ரா

அணு அண்டம் அறிவியல் -33

அணு அண்டம் அறிவியல் -33 உங்களை வரவேற்கிறது

கடவுளை நிராகரித்தது போலவே இயற்பியல் உலகம் 'ஈதரை'யும் நிராகரித்து விட்டது. காரணம் என்ன என்றால் 'If it cannot be detected,it simply does not exist' அதாவது ஒன்றை உணர முடியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்ற அதன் கொள்கை! அறிவியல் சில சமயங்களில்மிகவும் கறாராக நடந்து கொள்ளும். Yes, it is an obedient Student, at the same time a strict teacher!

கடவுளுக்கான நிரூபணத்தைக் காட்டுங்கள் நாங்கள் தாராளமாக அவரை ஏற்றுக் கொள்கிறோம் என்று தான்
விஞ்ஞானிகள்
சொல்கிறார்கள்..ஆனால் நம் ஆன்மீகவாதிகள் கொண்டுவரும் நிரூபணங்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை..ஆத்தா கனவில் வந்தாள், விநாயகர் என் கண் முன்னாலேயே பால் குடித்தார், சாமிப்படத்தில் இருந்து விபூதி சொரிந்தது என்றெல்லாம் நிரூபணங்களை (?)கொடுத்தால் சாரி, Better luck next time!

சரி...DOUBLE STAR எனப்படும் ஒன்றை ஒன்று சுற்றக்கூடிய இரட்டை நட்சத்திரங்கள் வானத்தில் உண்டு. வில்லியம் டி சிட்டர் என்ற ஆசாமி இந்த மாதிரி இரட்டை நட்சத்திரங்களைக் கவனித்து (அவை ஒன்றின் மீது இன்னொன்று ஏற்படுத்தும் கிரகணங்களை கவனித்து) ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை வெளியிட்டார்..அதாவது ஒளியின் வேகம் அதை உமிழும் மூலத்தின் (light source ) வேகத்தால் பாதிக்கப்படுவதில்லை என்று.

உதாரணமாக 'V1 ' திசை வேகத்தில் செல்லும் ஒரு ரயிலின் மேல் இருந்து 'V2' திசை வேகத்தில் ஒரு கல்
எறியப்பட்டால் அதன் (கல்லின்)நிகர திசைவேகம் V1+V2 ஆக இருக்கும். இப்போது ஒளியின் வேகம் 'C ' என்றால் 'V ' வேகத்தில் செல்லும் ரயிலில் இருந்து வெளிப்படும் ஒளியின் வேகம் V + C ஆக இருக்க வேண்டும் என்று நம் 'காமன் சென்ஸ்' கூறும்..ஆனால் ஒளி அப்போதும் தன் வேகத்தை மாற்றாமல் C என்ற வேகத்தில் மட்டுமே செல்லும்.

90
கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு காரை நீங்கள் நெருங்க முயற்சிப்பதாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்கும் போது காரின் 'சார்பு வேகம்' (Relative velocity ) குறைய ஆரம்பிக்கும். நீங்கள் 10 கி.மீ. வேகத்தில் இருந்தால் காரின் வேகம் உங்களுக்கு 80 கி,மீ ஆக இருக்கும். நீங்கள் 50
கி,மீ வேகத்தில் இருந்தால் உங்களுக்கு முன்னே செல்லும் காரின் வேகம் உங்களைப் பொறுத்து 40 கி,மீ ஆக இருக்கும். நீங்கள் 90 கி,மீ வேகத்தை எட்டிப்பிடித்து விட்டால் அந்தக் கார் உங்களுக்கு நிலையாக இருக்கும். சினிமா ஹீரோக்கள் செய்வது போல அப்போது நீங்கள் உங்கள் வண்டியில் இருந்து அதற்கு சுலபமாக குரங்கு போல் தாவவும் முடியும் . இதே நீங்கள் காருக்குப் பதிலாக
உங்கள் முன் ஓடும் ஒரு ஒளிக்கதிரை Chase செய்வதாகக் கொள்வோம். இதில் வினோதம் என்னவென்றால் உங்கள் வேகம் அதிகரிக்க அதிகரிக்க முன்னே சென்று கொண்டிருக்கும் ஒளியின் (உங்களைச் சார்ந்த) வேகம் குறையாது. நீங்கள் என்ன தான் அபார வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அது உங்களுக்கு தன் மாறாத வேகமான C யில் தான் சென்று கொண்டிருக்கும். கொஞ்சம் வேடிக்கையாக சொல்வதென்றால்

(1 ) மனிதனுக்கும் ஒளிக்கும் ரன்னிங் ரேஸ் வைத்தால் ஒளி தான் எப்போதும் ஜெயிக்கும். (உங்களுக்கு முன்னே விரையும் ஒளியை ஒரு போதும் நீங்கள் அடைய முடியாது)

(2 ) ஒளியின் போட்டான்களை வைத்துக் கொண்டு நம்மால் டென்னிஸ் விளயாட முடியாது (இது ஏன்? டென்னிஸ் விளையாட்டில் சில சமயம் பந்தை மெதுவாகவும் சில சமயம் வேகமாகவும் அடிக்க வேண்டி இருக்கும்.. ஒளித்துகள்கள் நாம் எந்த வேகத்தில் அடித்தாலும் , ஒரே வேகத்தில் தான் செல்லும்.
எனவே டென்னிஸ் அசாத்தியம். (படம் 1 )

ஒளியின் வேகத்தை மிகத் துல்லியமாக அன்றைய வி
ஞ்ஞானிகள் அளந்து விட்டிருந்தார்கள். ஆனால் திசைவேகம் என்றால் 'எதைப் பொறுத்து' என்று சொல்ல வேண்டும் என்பதால் இந்த ஒளிவேகம் எதைப் பொறுத்து என்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு புள்ளியையும் எந்த ஒரு இடத்தையும்
அது நிலையாக உள்ளதா அல்லது ஏற்கனவே (சீரான) இயக்கத்தில் உள்ளதா என்று சொல்வது அசாத்தியம் . நியூட்டனின் முதல் இயக்க விதி இதை தான் சொல்கிறது.

இதை LACK OF ABSOLUTE SPACE என்பார்கள். எனவே பிரபஞ்சத்தில் எந்த ஒரு இடத்தையும் நாம் இது மட்டும் தான் எப்போதும் நிலையான நகராத ABSOLUTE SPACE என்று சொல்ல முடியாது. பிரபஞ்சத்தின் மையத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றால் (ஒரு நகரும் சக்கரத்தின் மையம் நகராது என்று நமக்கு அனுபவத்தில் தெரியும்)
பிரபஞ்சத்திற்கு மையம் என்பதே கிடையாது ! அல்லது பிரபஞ்சத்தில் எல்லா இடங்களுமே மையம் தான். (உங்கள் வீட்டின் சமையல் அறை கூட பிரபஞ்சத்தின் மையம் தான்)
LACK OF ABSOLUTE SPACE என்றால் என்ன என்று கேட்டால் ஒருவருக்கு இரே இடத்தில் நடந்தாகத் தோன்றும் இரண்டு செயல்கள் இன்னொருவருக்கு வெவ்வேறு இடங்களில்
நடந்ததாகத் தோன்றலாம். இந்த உதாரணம் பாருங்கள்: (படம் 2 )


ஓடும் ரயில் இருந்து கொண்டு ஒருவர் ரப்பர் பந்து ஒன்றை தட்டி விளையாடுகிறார். அவருக்கு ஒவ்வொரு முறையும் பந்து ஒரே இடத்தில் (வெளி) பட்டு மேலே எம்பி வருவதாகத் தோன்றும் . ஆனால் இதே நிகழ்ச்சியை ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு அந்த பந்து ஒரு முறை ரயிலின் தளத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் (வெளியில்) தாக்கி மேல் எழுந்து மீண்டும் ஒரு சில நூறு மீட்டர்கள் தள்ளி இன்னொரு இடத்தில் தளத்தைத் தாகும். ( பந்து மீண்டும் வருவதற்குள் ரயில் நூறு மீட்டர்கள் நகர்ந்து விடுவதால்) ரயிலின் இருப்பவருக்கு பந்தின் உந்தல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நகர்ந்ததாகத் தோன்றும். ஆனால் பிளாட்பாரத்தில் (அவரைச் சார்ந்து நிலையாக) இருக்கும் ஒருவருக்கு பந்தில் உந்தல்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் (வெளிகளில்) நடந்தாகத் தோன்றும்.மேலும் ஓடும் ரயிலில் நீங்கள் ஒரு பத்து மீட்டர் உள்ளே நடந்தால் அது வெளியே இருந்து பார்ப்பவருக்கு நீங்கள் ஒரு ஐநூறு மீட்டர் நடந்ததாகத் தோன்றும் (ரயில் அவருக்கு இயக்கத்தில் இருப்பதால்)

உண்மையில் அவை ஒரே இடத்தில் நடந்ததா அல்லது வெவ்வேறு இடங்களிலா என்றால் இரண்டுமே சரிதான்.

இது பார்ப்பவரின் FRAME OF REFERENCE (FOR ) ஐப் பொருத்தது.
FRAME OF REFERENCE ஐத் தமிழ்ப்படுத்தும் அளவு என்னிடம் பொறுமையும் இல்லை ஞானமும் இல்லை.(அளவீட்டு சட்டம் என்றெல்லாம் யாராவது தமிழ்ப்படுத்தினால் அப்புறம் நடப்பதே வேறு!) யாரவது சரியான மொழிபெயர்ப்பு தெரிந்தால் சொல்லவும். FOR என்றால் என்ன என்றால் இயற்பியலில் சில விஷயங்கள் (வெளி,காலம், நிறை) பார்ப்பவர் அல்லது கவனிப்பவர் அல்லது அளவிடுபவர் எங்கே , எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தது. பிரபஞ்சத்தில் ஒருவர் இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் தான் நடந்தது என்று சொன்னால் இன்னொருவர் அதே நிகழ்ச்சியை இல்லை அது ஒரு நிமிடம் தான் நடந்தது என்று சூடம் அணைத்து சத்தியம் செய்ய முடியும். நம் சூரியன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒளிவீசி வருகிறது. (இது நமக்கு!) பிரபஞ்சத்தில் இன்னொரு யாரோ வேற்றுக்ரக வாசிக்கு சூரியன் என்ற நட்சத்திரம் JUST ஒரு மாதம் முன்னால் தோன்றி ஒரு மாதம் முடிந்ததும் மறைந்து விட்டதாகத் தோன்றலாம் . (இடம் , பொருள் , ஏவல் !) ஒருவரின் அம்மா தவறி விட்டால் அவரிடம் சென்று அவர் உனக்கு மட்டும் தானா? எங்களுக்கும் அம்மா தான் என்று சொல்ல முடியும். அதே மனைவி தவறி விட்டால்? ஒரே வார்த்தை இடத்தைப் பொறுத்து வெவ்வேறு பொருளையும் தர முடியும்.காலம் சார்புடையது என்பதை இந்துக்களின் புராணங்கள் அப்போதே அறிந்து வைத்திருந்தன போலும். நமக்கு ஆறுமாதங்கள் தேவர்களுக்கு ஒரு பகல் வேளை..இன்னொரு ஆறுமாதங்கள் அவர்களுக்கு ஒரு இரவு வேளை என்கிறார்கள்.. நமக்கு மார்கழி மாதம் வரும் போது தேவர்களுக்கு இரவு முடிந்து மெல்ல மேல அடிவானம் வெளுக்கிறது. ஒரு நாளிலேயே மிகவும் இனிமையான பொழுது அதிகாலை வேளை அல்லவா? அது தான் கிருஷ்ணர் 'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார். (நமது ஆறு மாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அவர்கள் ஒரு பகல் என்று பெயர் வைத்தார்கள் என்று நினைக்க வேண்டாம்..உண்மையில் இங்கு ஆறுமாதங்கள் கழிந்து விட்டிருக்க அங்கே 12 மணி நேரம் தான் ஓடியிருக்கும்) தேவர்களாவது பரவாயில்லை ! நம் தலை பிரம்மா இருக்கிறாரே? அவரது ஒரு பகல் பொழுது நம் நான்கு யுக காலத்தை ஆயிரத்தால் பெருக்கினால் வரும் காலம். (கிட்டத்தட்ட நானூறு கோடி பூமிவருடங்கள்!) இது மாதிரி நூறு ஆண்டுகள் அவர் வாழ்வாராம். தன் பகல் பொழுதில் பிரபஞ்சத்தை படைத்து விட்டு ராத்திரி சரஸ்வதி போட்டுத் தந்த பாதாம் பாலைக் குடித்து விட்டு படுக்கப் போகும் முன் தான் படைத்த பிரபஞ்சத்தை திரும்பிப் பார்த்து 'அய்யே, இது நல்லாவே இல்லை' என்று கூறி விட்டு
அழிலப்பர் எடுத்து அழித்து விடுவாராம்..

இப்படி ஒரு கதை :-

பிரம்மா சொம்பை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாராம்:

"அங்கே என்ன சத்தம் ?" என்று கேட்டாராம்

"ராவணன் பிறந்திருக்கிறான்" என்றார்களாம்

அவர் காலைக்கடனை முடித்து விட்டு கால் கழுவிக் கொண்டு வெளியே வந்தாராம்

"அங்கே என்ன சத்தம் ?" என்று கேட்டாராம்

"ராவணன் யுத்தத்தில் மடிந்து விட்டான் " என்றார்களாம்.. ராவணன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்வார்கள்.


இந்த மாதிரியான காலக் குழப்பங்கள் ரிலேடிவிடியிலும் சாத்தியம் தான்..நம் பூமியும் பிரம்ம லோகமும் ஒன்றுக்கொன்று நிலையாக இருந்தால் இது சாத்தியம் இல்லை. பிரம்ம லோகம் நம்மை விட்டு கிட்டத்தட்ட ஒளிவேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தால் இது ஒருவேளை சாத்தியம்.(ஒரு வேளை நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்னவோ? யாருக்குத் தெரியும்?)

காலம் எவ்வாறு சார்புடையது என்பதை இந்த உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.


படத்தில் ஒரு ரயிலின் மிகச்சரியான மையப் புள்ளியி
ல் ஒரு ஒளி மூலம் (S )உள்ளது. அது ரயிலின் இரண்டு பக்கங்களிலும் (எதிர் எதிர் திசைகளில்) இரண்டு ஒளிக்கற்றைகளை அனுப்புகிறது. ரயிலின் இரு முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகள் (M1 ,M2 )அந்த ஒளியைப் பிரதிபளித்து மீண்டும் மூலத்திற்கு அனுப்பும். ரயில் சீரான ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கொள்வோம். ரயிலில் உள்ள ஒரு ஆள் இதைப் பார்க்கும் போது அவருக்கு ரயில் நிலையாக இருப்பது போலத் தோன்றும். ஒளிமூலம் ரயிலுக்கு சரியான நடுப்புள்ளியில் இருப்பதால் இரண்டு பக்கங்களிலும் அனுப்பப்பட்ட ஒளிக்கற்றைகள் (R1 ,R2 ) கண்ணாடிகளால் பிரதிபளிக்கப்பாட்டு சரியாக ஒரே சமயத்தில் திரும்பி வந்து சேரும். (நோ டவுட்??) ஓகே..

இப்போது இதே நிகழ்வை பிளாட்பாரத்தில் இருந்து ஒருவர் கவனிப்பதாகக் கொள்வோம். அவருக்கு ஒளிக்கற்றை R1 விரைவாக கண்ணாடியை போய் முட்டிவிடுவதாக் தோன்றும். ரயில் நகர்ந்து கொண்டிருப்பதால் கண்ணாடியும் R1 வை நோக்கி கொஞ்சம் முன்னே வருகிறது. எனவே அது விரைவாகத் திரும்பி வந்து விடும். ஆனால் ஒளிக்கற்றை R2 விடுபட்டதும் கண்ணாடியை போய் சேர சிறிது 'எக்ஸ்ட்ரா' நேரம் ஆகிறது. ரயில் நகர்ந்து கொண்டிருப்பதால் கண்ணாடிR2 ஐ விட்டு சிறிது விலகிச் செல்கிறது. எனவே அது வந்து சேர கொஞ்ச நேரம் ஆகும். R1 முதலில் வந்து விடும்.

அதாவது ஒருவருக்கு ஒரே நேரத்தில் நடந்தாக சொல்லப்படும் இரண்டு நிகழ்வுகள் இன்னொருவருக்கு வெவ்வேறு நேரங்களில்
நடந்ததாகத் தோன்றலாம்.. ஒளி திரும்பி வரும் நேரத்தை வைத்துக் கொண்டு ரயிலில் இருப்பவரும் பிளாட்பாரத்தில் இருப்பவரும் தங்கள் தங்கள் கடிகாரத்தை வடிவமைப்பதாக வைத்துக் கொண்டால்
இரண்டும் வெவ்வேறுநேரம் காட்டும் தானே? சுருக்கமாக சொல்வதென்றால் பிரபஞ்ச கடிகாரம்என்று எதுவும் இல்லை..THERE IS NO UNIVERSAL CLOCK...இந்திரனும்பிரம்மாவும் அவரவர் உலகத்துக்கு தகுந்த கடிகாரத்தை அவரவர்உலகங்களில் மாட்டி வைத்திருப்பார்கள். அவைகள் ஒத்துப் போக வேண்டும்என்று அந்த அவசியமும் இல்லை..


சரி உங்களுக்கு மத்வாசாரியாரைத் தெரியுமா? என்னடா இது ஐன்ஸ்டீனை அறிமுகம் செய்வதாக சொல்லி விட்டு சாமியாரை எல்லாம் அறிமுகம் செய்கிறாரே என்று குழம்ப வேண்டாம்.(வெயிட்..அவர் ஜெர்மனியில் இருந்து வர வேண்டாமா? கொஞ்ச நேரம் ஆகும்.)சம்பந்தம் இருப்பதால் தான் சொல்கிறேன்..மத்வரின் அருமையான,ஆழமான ஒரு சித்தாந்தம் 'த்வைதம்'. (சங்கராச்சாரியாரின் அத்வைதத்திற்கு அப்படியே opposite ) த்வைத சித்தாந்தத்திற்கும் ரிலேடிவிடிக்கும் என்ன சம்பந்தம்? காத்திருங்கள்...

சமுத்ரா