இந்த வலையில் தேடவும்

Showing posts with label மஹிதர் நீ மறைந்து விடு. Show all posts
Showing posts with label மஹிதர் நீ மறைந்து விடு. Show all posts

Tuesday, November 2, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-9

கோவணத்தாண்டி சொல்வது:

விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்
கடப்படுமோ? அற்பர் வாயிலிற் சென்று கண்ணீர் ததும்பிப்
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.

மறுநாள் இரவில் ஒன்பது மணி சுமாருக்கு நான்,விக்ரம்,சிவா, தரங்கிணி, நிமிஷா எல்லாரும் கழுகு மலைக்கு கிளம்பினோம் ஒரு டயோட்டாவை வாடகைக்கு எடுத்திருந்தோம் ...ஒரு டிரைவரையும் ஏற்பாடு செய்திருந்தோம்...நான் வீட்டில் பிசினஸ் விஷயமாக வெளியே போவதாகவும் வருவதற்கு ரெண்டு நாள் ஆகும் என்றும் கூறி இருந்தேன்....கோவில்பட்டி சென்று அங்கிருந்து கழுகுமலைக்கு செல்வதாக பிளான் செய்திருந்தோம்....கிட்டத் தட்ட எட்டு மணி நேரப் பயணம்....கோவில்பட்டியில் ஏதாவது ஹோட்டலில் தங்கி விட்டு மறுநாள் மத்தியானம் கழுகுமலைக்கு செல்வதாகப் பிளான்...

நானும் நிமியும் இரண்டாவது சீட்டிலும் , விக்ரமும் தரங்கிணியும் கடைசி சீட்டிலும் உட்கார்ந்து கொண்டோம்....சிவா டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்....டிரைவர் தூங்கி விடாமல் இருக்க பேசிக் கொண்டிருப்பதற்காக என்று சொன்னார்....

கார் கிளம்பியதும் தரங்கிணி ஆரம்பித்தாள் ...."மஹிதர், உங்க குல தெய்வத்த நல்லா வேண்டிக்கங்க...." என்றாள்....

பிரயாணத்தில் சாப்பிடுவதற்காக ஒரு bag முழுவதும் லேஸ், சிப்ஸ் கோக் எல்லாம் கொண்டு வந்திருந்தாள்...

"தரங், நாம என்ன பிக்னிக்கா போறோம்?" என்று கேட்டார் விக்ரம்....

"பாஸ், உங்க கூட அச்சிஸ்டண்டா இவ்ளோ நாள் இருந்ததற்கு இப்ப தான் சென்னையை விட்டு வெளில கூட்டிப் போறீங்க, சோ இதுவும் பிக்னிக் மாதிரி தான்" என்ற அவள் "பாஸ், இந்த ரிஸ்க் கண்டிப்பா எடுக்கணுமா" என்றாள்

சிவா இப்போது பேசினார்..."ரிஸ்க் எடுக்காம வாழ்க்கையே இல்லை தரங்கிணி...யாரோ பொடிப்பசங்க நம்ம கிட்ட விளையாடறாங்க.....அவங்களுக்கு "we should show who we are !"

கார் சீரான வேகத்தில் சென்னையின் நகர அறிகுறிகளைக் கடந்து கொண்டிருந்தது.....

"சரி மிஸ்டர் சிவா... நல்ல வேளை ரிஸ்க் எடுக்கறதெல்லாம் ரஸ்கு சாப்பிடற மாரின்னு சொல்லி மொக்கை போடல நீங்க...எனக்கு ஒரு டவுட்டு...அவங்க மஹிதருக்கு மட்டும் தானே ஓலை அனுப்புனாங்க....நம்ம என்னவோ பொண்ணு பார்க்கப் போற கோஷ்டி மாதிரி இத்தனை பேர் போய் இறங்குனா அந்த ஆசாமி இல்லை சாமி டென்சன் ஆயிடாதா? " என்றாள் தரங்கிணி....ஒரு லேஸ் பாக்கெட்டை பாதி காலி பண்ணியிருந்தாள்....

"யா..யு ஆர் கரெக்ட்....இவ்ளோ நேரம் நம்ம இத்தனை பேர் இதில் இன்வால்வ் ஆகியிருப்பது கூட அவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்..ஆனா நம்ம ஸ்பாட்டுக்கு போனதும் மஹிதர் கூட சேர்ந்துட்டு நம்ம இவ்ளோ பேர் மூவ் பண்ணக்கூடாது...அதே சமயம் அவரை தனியாகவும் விடக் கூடாது...the enemy can be dangerous " என்றார்

நான் கழுத்தில் மாலை போடப்பட்டு இழுத்துச் செல்லப்படும் பலிகடாவாக உணர்ந்தேன்....தரங்கிணியைப் பார்க்க கொஞ்சம் எரிச்சலாக வந்தது....நானும் கொஞ்சம் எதிர் ஜோக் அடிக்கலாம் என்று "சார், என்ன வெச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே" என்றேன்..

தரங்கிணி பெரிதாகச் சிரித்து " வாவ், மஹிதர் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஜோக் அடித்து விட்டார்..கிளாப் கிளாப் " என்றாள்

இது வரை சும்மா இருந்த நிமிஷா கொஞ்சம் கவலை கலந்த குரலில் சொன்னாள் " ஹலோ தரங்கிணி,,,, என்ன எப்பவும் உங்களுக்கு விளையாட்டு தானா? இது எங்க வாழ்க்கைப் பிரச்சனை...எனக்கு என்னவோ நாம முரட்டு தைரியத்துல தப்பான முடிவு எடுக்கறமோன்னு தோணுது..... பெட்டெர் வி கோ டு போலீஸ் நவ்" என்றாள்...

"போலீஸ்ல கனவை எல்லாம் ஆதாரமாக காட்ட முடியாது நிமிஷா " என்றாள் தரங்கிணி....

"அந்த , என்ன அது, ஓலை,,,அதான் பாழாய்ப் போன ஓலை இருக்கே,,,அப்பறம் அந்த பேப்பர்..இரண்டையும் வச்சுட்டு மிரட்டல் கேசுல அவங்கள உள்ள தூக்கிப் போட்டிருக்கலாம்....சாரி மிஸ்டர் விக்ரம்...சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க....மஹிதரோட வாழ்கையை நீங்க உங்க ரிசர்ச்சுக்காக யூஸ் பண்ணாதீங்க ப்ளீஸ்" என்றாள் நிமிஷா அழுத்தமாக ...அந்த நிமிஷம் அவள் என் மீது இவ்வளவு அக்கறை வைத்திருக்கிறாளா என்று வியந்தேன்.....இவளுக்காகவாவது நான் இந்த பிரச்சனையில் இருந்து எப்படியாவது மீள வேண்டும்....

விக்ரம் நிதானமாக பதில் கூறினார்....

"நிமிஷா,,, உங்க கவலை புரியுது....ஆனா மஹிதர் தான் ஹெல்ப் கேட்டு எங்களை அப்ரோச் பண்ணினார்....முதல்ல அவர் கனவு முழுக்க முழுக்க சைகாலஜிகல் ப்ராப்ளம்னு நினைச்சோம்...அப்பறம் அதுல மூணாவது நபர் யாரோ இருக்காங்கன்னு தெரிஞ்சது.... அவங்க இன்டன்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்க தான் இப்போ போறோம்....அவங்களுக்கு நம்மை காண்டாக்ட் பண்ண பல வழிகள் இருக்கு....கோவில் குங்குமப் பொட்டலம் கூட அவங்களுக்கு ஒரு மீடியா....ஆனா நமக்கு? அவங்க வர சொன்ன இடத்துக்குப் போய் தானே ஆகணும் .....இப் வி ஃபீல் சம்திங் இஸ் கோயிங் ராங், கண்டிப்பா போலிசுக்கு போவோம்....இதற்கு மேலும் நீங்க எங்கள் தலையீட்டை விரும்பலைன்னா, இப்பவே நாங்க இறங்கிக்கறோம்" என்றார்...

அவர் அப்படி எங்காவது இறங்கி விடுவாரோ என்று பயமாக இருந்தது.... விக்ரம் மற்றும் சிவா இருவரும் படித்தவர்கள்....அனுபவம் உள்ளவர்கள்.... அவர்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இவ்வளவு தூரம் இயல்பாக இருக்கிறேன்...இல்லை என்றால்...

"நிமி சும்மா இரு....நமக்காக தானே அவங்க வேலையை கூட விட்டுட்டு இவ்ளோ தூரம் வராங்க" என்றேன்

"இட் இஸ் ஓகே மஹிதர் " என்ற விக்ரம் "அவங்க ஏதும் தப்பா சொல்லலையே...she is more concerned about you ...இந்த விஷயத்தை கொஞ்சம் உணர்ச்சி பூர்வமாக அணுகறாங்க அவ்வளவு தான்" என்றார்....

சிவா டிரைவரிடம் திரும்பி "டிரைவர்....ஏதாவது நல்ல ஹோட்டலா பாத்து டின்னருக்கு நிறுத்துங்க " என்று கூறி விட்டு "ஆமாம் நீங்க உங்க சொந்த ஊர் திருநெல்வேலின்னு சொன்னீங்களே, அந்த கழுகு மலையைப் பத்தி ஏதாவது விஷயம் தெரியுமா" என்று கேட்டார்...

"தெரியும் சார், ரெண்டு மூணு தடவை போயிருக்கேன்.... மகாபலிபுரம் மாதிரி பாறையைக் குடைஞ்சு செஞ்ச கோயில்கள் தான் எல்லாமே...பெரும்பாலும் ஜெயின்ஸ் கோவில்கள் சார்...
ஜெயின் மதத்தோட சாமியார்களை தத்ரூபமா சிலை வடிச்சிருப்பாங்க....அப்பறம் ஒரு பிரபலமான முருகன் கோவில் கூட இருக்கு...ஆமா சார் அங்கே எதுக்காக போறீங்க , ஏதாவது ஆராச்சிக்கா" என்றார் டிரைவர்

"கிட்டத்தட்ட அப்படிதாம்பா" என்றார் சிவா...

வழியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு தொடர்ந்தோம்.... நெடுஞ்சாலை ஹோட்டல் என்பதால் சாப்பாடு யானை விலை சொன்னார்கள்....

மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு சங்கரன் கோவில் சென்றோம்....
.எப்போது திரும்புவது என்பது உறுதியாகத் தெரியாததால் வண்டியை போகச் சொல்லி விட்டார் சிவா..... ஒரு லாட்ஜை எடுத்து பதினொரு மணி வரை தங்கினோம்...பயணக் களைப்பில் நன்றாக தூங்கி விட்டிருந்தோம்....

கழுகுமலைக்கு பஸ்ஸில் வந்து சேர்ந்த போது வெய்யில் அதிகம் இல்லாமல் இதமாக இருந்தது.... வயல் வெளிகளும் ,நீர் நிலைகளும் பாறைகளுமாக ஊர் அற்புதமாக இருந்தது .....பெயருக்கு ஏற்ப சில கழுகுகள் மேலே வட்டமிட்ட வண்ணம் இருந்தன...

"மஹிதர்....உங்க மூலமா ஒரு அருமையான ஸ்பாட்டுக்கு வர்ற வாய்ப்பு கிடைச்சது....தேங்க்ஸ்! எப்படியோ உங்க சொந்தக்காரங்க கிட்ட வந்து சேர்ந்துட்டீங்க " என்றாள் தரங்கிணி...

அங்கிருந்த பெரியவரிடம் கேட்டபோது கழுகு மலையில் "முருகன் கோவில், வெட்டுவான் கோவில், மற்றும் சமண பள்ளி " ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள் என்றார்...முதலில் கோவிலுக்கு செல்வதாக தீர்மானித்தோம்...

எதிரே கழுகாசல மூர்த்தி கோவில் கம்பீரமாகத் தெரிந்தது.....ஒரு பெரிய தெப்பக் குளம் நிறையத் தண்ணீருடன் இருந்தது...பெரிய ஒரு பாறையைக் குடைந்து அதன் அடிவாரத்தில் கோவில் இருந்தது....

"சிவா, இங்க எங்கேன்னு போய் தேடறது?" என்றார் விக்ரம்....

"மொதல்ல கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணலாம்" என்ற சிவா, "நீங்கள்லாம் முன்னாடி போங்க....நானும் மஹிதரும் பின்னாடி வரோம்.."என்றார்...

நானும் சிவாவும் கோவிலை நோக்கி நடந்தோம்...."மஹிதர் ரிலாக்ஸ்டா வாங்க...நாங்க எல்லாரும் உங்க கூட இருக்கோம் " என்றார் சிவா

எனக்கு வயிற்றுக்குள் ஏதோ இனம் புரியாத பயம் தோன்றியது....அங்கே எனக்காக ஏதோ ஒன்று காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது....கோவிலை நோக்கி நடந்த போது அந்த பெரிய பாறை கழுகு போல் சிறகை விரித்து என்னை வா வா என்று அழைப்பது போல் இருந்தது....



~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்

1 2 3 4 5 6 7
8



Saturday, October 23, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-8


கோவணத்தாண்டி சொல்வது:

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள

பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென்ன மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே.


உடனே விக்ரமிற்கு போன் செய்தேன் ...

"சார் ஒரு அர்ஜன்டான விஷயம்" என்று ஆரம்பித்து விஷயத்தை சொன்னேன்...என் குரல் படபடத்தது

"பதட்டப்படாதீங்க மஹிதர், என்ற விக்ரம் "அந்த பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு படிங்க" என்றார்...

நான் டேபிள் லாம்ப்பை இயக்கி அதில் என்ன எழுதியிருந்தது என்று பார்த்தேன்...

பென்சிலால் எழுதியிருந்தார்கள்....சுமாரான கையெழுத்து...

"கழுகொன்று தின்பதற்காய் நின் காயம் வீழவோ
கலுகீசன் பதம் நாடி களிப்பினில் வாழவோ
காலம் இனியில்லை கடிதினில் வந்திடுவாய்
காலன் பயம் இல்லை கடிதினில் வந்திடுவாய்!"


"சார் எனக்கு எதுவுமே புரியலை" என்றேன்....எனக்கு வியர்த்து விட்டிருந்தது....

"மஹிதர் அந்த கழுகு மலைக்கு இது இன்னொரு இன்விடேஷன்னு நினைக்கிறேன்" என்றார் விக்ரம்..

"இப்ப என்ன பண்றது சார்?" என்றேன்...எனக்கு பயத்தை விட குழப்பம் அதிகமாக இருந்தது....

"நாளைக்கு இங்க வாங்க..பேசலாம்...சிவாவையும் வரச் சொல்றேன் , எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க" என்றார்...


நான் அப்படியே படுக்கையில் சாய்ந்தேன்....யார் அவர்கள்? என் மூலம் அவர்களுக்கு என்ன ஆக வேண்டியிருக்கிறது? எதிரிகள் என்று எனக்கு யாரும் கிடையாது...சிறு வயதிலிருந்தே வம்பு தும்பு என்றால் ஒதுங்கக்கூடிய சாதுவான ஆள் நான்...அப்புறம் புக் ஸ்டால் வைக்கும் போது ஒரு அரசியல் ஆசாமி கொஞ்சம் தகராறு செய்தான்....அவ்வளவு தான்...காதல் விவகாரத்தில் யாராவது எதிரிகளா என்று பார்த்தால் அப்படியும் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை...நிமிஷாவின் அண்ணனுக்கும் இந்த விஷயம் தெரியும்..அவனும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை....பிறகு யார்? கழுகு மலை, அது இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லை....அங்கே நான் எதற்காகப் போக வேண்டும்?

குழப்பமான இந்த புதிர்களால் மிகவும் குழம்பிப் போனேன்...நிமிக்கு செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது ...

"ஹாய் மஹி! how are யூ டா? என்ன ரெண்டு நாளா கால் இல்லை, மெசேஜ் இல்லை?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள்..

"சாரிம்மா..பிசியா இருந்தேன்...அப்பறம் ஒரு முக்கியமான மேட்டர்" என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னேன்...

நிமிஷா கொஞ்சம் கவலையான குரலில் "மஹி, என் சஜஷன் என்னன்னா நீ சென்னையை விட்டு வேறே எங்காவது போய் ஒரு மாசம் தங்கிட்டு வா..." என்றாள்...

"எதுவுமே புரியலை நிமி....நாளைக்கு விக்ரம் வர சொல்லியிருக்கார்...வரையா?"என்றேன்

"கண்டிப்பா,,,இது உன் பிரச்சனை இல்லை மஹி, நம் பிரச்சனை " என்ற நிமி "சரி இதையெல்லாம் மறந்துட்டு கொஞ்சம் ரொமான்ஸ் பேசுவோமா?" என்றாள்


"இல்லை நிமி, மூடே சரியில்லை" என்றேன்.....

"அந்த கழுகு உன்னை ரொம்பவே மாத்திருச்சு மஹி" என்று அலுத்துக் கொண்டாள்..

அந்த இரவு எப்படியோ விடிந்தது,,, தூக்கத்துக்கு இடையில் கனவா இல்லை கனவுகளுக்கு இடையில் தூக்கமா என்று புரியாமல் ......

மறுநாள் விக்ரமின் சென்டருக்கு நிமிஷாவும் கூட வந்திருந்தாள்...

விக்ரம் கொஞ்சம் பிசியாக இருந்ததால் அரை மணி நேரம் வெளியே காக்க வேண்டியிருந்தது....

உள்ளே சென்றதும் "வாங்க மஹிதர்.....வெல்கம் நிமிஷா" என்று வரவேற்றார் விக்ரம்.....சிவா ஏற்கனவே வந்திருந்தார்....

"என்ன மஹிதர் மறுபடியும் ஏதோ செய்யுள் வந்துதாமே? கன்க்ராட்ஸ் " என்றாள் தரங்கிணி....

"மஹிதர் , உங்களை யாராவது ஃபாலோ செய்யற மாதிரி தெரியுதா" என்று கேட்ட சிவா "ஏன்னா நீங்க கோவிலுக்கு போனதை யாரோ ஃபாலோ பண்ணியிருக்கணும் " என்றார்

"ஐ டோன்ட் தினக் சோ " என்றேன்....

"அப்ப ஃபாலோ பண்ணலைன்னா நீங்க கோவிலுக்கு போறீங்கன்னு அந்த மிஸ்டர். எக்ஸுக்கு எப்படி தெரியும்? நீங்க ரெகுலரா போவீங்களா"என்றார்

"கோவிலுக்கா, மஹியா? என்ன சிவா சார், ஜோக் பண்ணாதீங்க, ஆனா அன்னைக்கு மட்டும் ஏன் திடீர்னு போனான்னு தெரியலை....." என்றாள்


விக்ரம் கேட்டார்..."சொல்லுங்க மஹிதர்,,, அன்னிக்கு மட்டும் ஏன் போனீங்க? ,வாட் மேட் யூ கோ தேர்? "

"என்னமோ தெரியலை , போகணும்னு தோணுச்சு" என்றேன் ....நான் ஏன் போனேன் என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை.....

விக்ரம் தொடர்ந்தார்...."அந்த குங்குமப் பொட்டலம் கோவில்ல தான் உங்க கிட்ட வந்துதுன்னு எப்படித் தெரியும்?" என்று கேட்டார்....

"அங்கே தான் வந்திருக்கணும் சார், தீபாராதனைக்கு சில்லறை போட்டப்ப கூட என் பாக்கெட்ல அது இல்லை" என்றேன்....

"அப்படீன்னா நீங்க சாமியை தூக்கினதா சொன்னீங்களே அப்ப தான் யாரோ இதை உங்க பாக்கெட்ல போட்டிருக்கணும் "
என்றார்

"பாஸ் ஒரு வேலை சாமியே போட்டிருக்குமோ ?" என்று கேட்டாள் தரங்கிணி...அவள் ஜோக் அடிப்பது அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம் odd -ஆக இருந்தது....


ஏதோ சிந்தனையில் இருந்த சிவா கேட்டார்...."விக்ரம் எனக்கு புரியலை....யாருமே மஹிதரை ஃபாலோ பண்ணலைன்னா மஹிதர் கோவிலுக்கு வரணும்னு யாரோ முன்னாடியே நிர்ணயிச்ச மாதிரி தெரியுது"என்றார்


"அன்னிக்கு புக் ஸ்டால்லயும் அப்படிதானே நடந்தது?" என்ற விக்ரம் "சிவா சில சமயம் சில விஷயங்கள் நம்மை இழுக்கும்.... சந்தர்ப்பம் சூழ்நிலை எல்லாம் சில சமயம் நம்மை ஒரு இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கும்....இதை ஆன்மிகம் விதின்னு சொல்லுது ...அறிவியல் ஜஸ்ட் co -incidence னு சொல்லுது ...ஒரு சின்ன கதை சொல்றேன்...ஒரு ராஜா இருந்தானாம்.... ஒரு நாள் ஒரு கருப்பு உருவம் அவன் முன்னால வந்து நாளைக்கு உனக்கு மரணம் ....தப்பிக்க முடிஞ்சா தப்பிச்சுக்க " என்று சொல்லி மறைந்ததாம் ....அன்னிக்கி ராத்திரியே அந்த ராஜா தன்னிடம் இருந்த குதிரைகளிலேயே வேகமா ஓடக் கூடிய ஒரு குதிரைல ஏறி விடாம பயணம்செஞ்சு ரொம்ப ரொம்ப தூரமா போயிட்டானாம் ....சரி இனிமேல் பயமில்லைன்னு குதிரையில் இருந்து இறங்கி ஒரு மரத்தடியில் ஓயவா உட்கார்ந்தானாம்... அப்ப அந்த கருப்பு உருவம் மீண்டும்தோன்றி நான் தான் உன் மரணம்..இன்னிக்கு நீ இந்த இடத்துல தான் சாகனும்னு விதி....எப்படி உன்னை இவ்வளவு தூரம் வரவழைக்கிறது என்று கவலைப்பட்டேன்...ஆனால் உன் குதிரை எனக்கு உதவி புரிந்ததுன்னு சொல்லிச்சாம்"

தரங்கிணி குறுக்கிட்டு "பாஸ்...கதையெல்லாம் ஓகே...ஆனா தம்மா துண்டு பொட்டலம் மஹிதரை கோவிலுக்கு இழுத்திருக்குமா"? என்றாள்

"தம்மாதுண்டு அணு தானே ரெண்டு பெரிய நகரங்களையே அழிச்சுது " என்றார் விக்ரம்...

"மஹிதர் அந்த பேப்பரை கொஞ்சம் காட்டுங்க " என்று கேட்டார் சிவா..காட்டினேன்...

"ப்ளைன் பேப்பர்....பென்சில்ல எழுதியிருக்காங்க"....விக்ரம் கையெழுத்தை வைத்து ஆளை கணிக்கும் வித்தை உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்....

"I can try" ...என்ற விக்ரம் அதை வாங்கி கொஞ்ச நேரம் ஆராய்ந்து "இதை ஒரு பெண் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது" என்றார்...

"பாஸ், என்னைப் பார்க்காதீங்க " என்று சிரித்தாள் தரங்கிணி....

எனிவே "வி ஆர் கோயிங் தேர்...நாளைக்கே " என்றார் விக்ரம் உறுதியுடன்....

காகிதத்தை திருப்பித் தந்து "அந்த ஒலையையும் இதையும் பத்திரமாக வெச்சுக்கங்க மஹிதர்....இவையெல்லாம் எவிடன்ஸ் ....தி கேம் இஸ் ஆன் " என்றார்...

நான் அதைப் பார்த்த போது அதில் எழுதியிருந்த ஒவ்வொரு எழுத்தும் ஒரு குட்டிக் கழுகாக மாறி அசைவது போல் தோன்றியது...

~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்

1 2 3 4 5 6 7





Wednesday, October 13, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-7


கோவணத்தாண்டி சொல்வது:

காடோ? செடியோ? கடற்புறமோ? கனமே மிகுந்த
நாடோ நகரோ நகர் நடுவோ நலமே மிகுந்த
வீடோ புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,
நீடோய் கழுக்குன்றிலீசா, உயிர்த்துணை நின்பதமே.

மஹிதர் சொல்வது:

ஓலை விஷயம் நடந்து சரியாக மூன்று நாட்களாகி விட்டிருந்தன....கனவு மறுபடியும் வரவில்லை....சரி இந்த விஷயம் இப்படியே சரியாகி விடும் என்று திடமாக நம்பினேன்.....அன்று கடையில் அதிகம் கூட்டம் இல்லை என்பதால் சீக்கிரமே பூட்டி விட்டு ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குவந்தேன்....அன்று நிமிஷாவை சந்திப்பதாகச் சொன்னதையும் தள்ளி வைத்து விட்டேன்,,,,,,

சென்னை தன் வெப்பப் போர்வையை தற்காலிகமாக கழற்றி விட்டிருந்தது...சூழ்நிலை மனதிற்கு இதமாக இருந்தது...

வீட்டுக்கு வந்ததும் மாலை பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா "என்னடா சீக்கிரமே வந்துட்ட? அதிசயம்" என்றார்...

"சும்மா தாம்பா" என்றேன்......

அம்மா சமையல் அறையில் பஜ்ஜி செய்து கொண்டிருந்தாள் போலிருந்தது .....சூடான பஜ்ஜியையும் காபியையும் கொண்டு வந்தாள்...

"இந்தா மஹி சாப்பிடு" ....

அம்மா ஒரு வெகுளியான ஆள்...தெய்வ பக்தி அதிகம் உள்ளவள்....கோவில் குளம் என்று போவதென்றால் உயிர்...அப்பாவும் ரிடையர் ஆகி விட்டதால் ரெண்டு பேருமாக அடுத்த மாதம் காசி டூரெல்லாம் போகிறார்கள்....அம்மாவுக்கு என் மீது கொஞ்சம் பாசம் அதிகம்...நான் நண்பர்கள் பார்ட்டி என்று ஊர் சுற்றுவது மட்டும் கொஞ்சம் பிடிக்காது....

"அம்மா இன்னிக்கு பெருமாள் கோவிலுக்கு போறியா? நானும் வரேனே? கார்லயே போலாம்" என்றேன் ...ஏனோ கோவிலுக்குப் போனால் கொஞ்சம் வேறுபட்ட மனநிலை கிடைக்கும் என்று தோன்றியது...
அம்மா "மஹி நீ தான் பேசறியா? பர்த் டே அன்னிக்கு கூட கோயிலுக்கு வராத நீ இன்னிக்கு என்னடான்னா நீயே கோயிலுக்கு போலாம்கற? கனவுல சாமி எதாச்சும் வந்து நல்ல வார்த்தை சொல்லுச்சா"

"கனவுல கழுகு தான் வருது" என்று சொல்ல வந்தவன் "அதல்லாம் ஒண்ணும் இல்லைம்மா ....சும்மா என்னவோ இன்னிக்கு போலாம்னு தோணுச்சு" என்றேன்,,,,,

"சரி ஒரு ஆறே முக்காலுக்கு கிளம்பலாம்.....மஹதியும் டான்ஸ் கிளாஸ் முடிச்சிட்டு வந்துருவா...அவளும் வரட்டும்"...என்றாள் அம்மா ...

மஹதி என் தங்கை...அழகான, அறிவான பெண்...B .E படித்து விட்டு ஒரு எம்.என்.சியில் வேலையில் சேருவதற்கு காத்திருக்கிறாள்....

பெருமாள் கோவிலுக்குப் போவதற்கு ஏழு மணி ஆனது....கோவிலில் கணிசமான கூட்டம் இருந்தது....அன்று ஏதோ ஏகாதசியாம்....பட்டை நாமம் அணிந்த ஒரு ஐயங்கார் மைக்கின் முன் அமர்ந்து ஏதோ பக்திக் கதைஒன்று சொல்லிக் கொண்டிருந்தார்.....

கடவுளுக்கு தீபாராதனை காட்டிய போது சில நொடிகள் மனம் ஒன்றினேன்....கனவு பற்றியெல்லாம் மறந்து போய் மனம் சுத்தமானது போன்ற ஓர் உணர்வு வந்தது....

கோவிலை வலம் வரும் போது மஹதி "என்னண்ணா யாராவது அய்யங்கார் வீட்டு அழகை லவ் பண்ணறியா? இன்னிக்கு உலக அதிசயமா கோயிலுக்கெல்லாம் வந்திருக்க ?" என்றாள்...

நான் ஒரு சென்டிமீட்டர் புன்னகை செய்தேன்...நிமிஷா விஷயத்தை இன்னும் வீட்டில் சொல்லவில்லை.....கூடிய சீக்கிரம் சொல்லி விட வேண்டும்...

அங்கே ஒரு ஓரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் வீதிவலம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தார்....சிலர் பெருமாள் வைக்கப் பட்டிருந்த பீடத்தை தூக்கினார்கள்.....

யாரோ ஒருவர் "ஒரு ஆள் குறையறது....யாராச்சும் வாங்களேன்" என்றார்...

நான் கேட்காதது போல நின்று கொண்டிருந்தேன்....

"மஹி போயேண்டா...அதிசயமா கோயிலுக்கு வந்திருக்க....புண்ணியம் கிடைக்கும் ...சீக்கிரம் கல்யாணம் ஆகும் போ" என்றாள்...

நான் போய் அதன் கழியைப் பிடித்து தோளில் ஏற்றினேன்..... இதெல்லாம் எனக்கு பழக்கமில்லாத விஷயங்கள்....எப்படியோ சமாளித்து பாலன்ஸ் செய்தேன்...அப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்த்ததில் பெருமாளை கம்பீரமாக சுமந்து கொண்டிருந்த கருடன் கொஞ்சம் பயமுறுத்தியது.....

கோவிலை சுற்றி ஒரு சிறிய வீதியில் வட்டம் அடித்துத் திரும்பினோம்....

அங்கிருந்து திரும்பி வரும் போது காரில் "இன்னைக்கு மஹி வந்தது அதிசயம்டி..அதுவும் அவன் அதிர்ஷ்டம் இன்னைக்கு சாமியையே சுமக்கற பாக்கியம் கிடைச்சிருக்கு " என்றாள் அம்மா மஹதியைப் பார்த்து....

"அம்மா சாமியை சுமக்குற கருடனையும் சேர்ந்து சுமக்கற பாக்கியம்னு சொல்லுங்க...."என்ற அவள் "ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா ஏதோ மேட்டர் இருக்கு" என்றாள்...

"அதல்லாம் ஒண்ணும் இல்லை...கோயிலுக்கு வராட்டியும் திட்டறீங்க...வந்தாலும் கலாய்கறீன்களே" என்றேன்....
வீட்டுக்கு வருவதற்கு எட்டரை மணி ஆகி விட்டிருந்தது...

"மஹா நீ எப்ப ஜாயின் பண்ணனும்" என்று கேட்டேன்....

வேலை கிடைத்து மூன்று மாதமாக சும்மா இருக்கிறாள்...

"இன்னும் டேட் கன்பார்ம் ஆகலைண்ணா..இன்னொரு தடவை மெயில் பண்ணி கேக்கறேன்" என்றாள்....

சாப்பிட்டு முடித்து என் அறைக்கு சென்றேன்...

டி.வியை ஆன் செய்தேன்...ஏதோ ஒரு திரைப்படத்தின் டிரைலர் எழுநூறாவது முறையாக ஸ்க்ரீனில் ஓடிக் கொண்டிருந்தது....

அணிந்திருந்த சட்டையைக் கழற்றும் போது சில நாணயங்கள் கீழே விழுந்தன....அதனுடன் ஏதோ ஒரு சிறிய பொட்டலமும் விழுந்தது.....பிரித்துப் பார்த்த போது அது ஒரு குங்குமப் பொட்டலம்....அது எப்படி என் பாக்கெட்டில் வந்தது என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தும் தெரியவில்லை....யாராவது போட்டார்களா? அந்தக் கோவிலில் குங்குமம் பொட்டலம் கட்டி எல்லாம் கொடுக்க மாட்டார்கள்....

மறுபடியும் மடித்து வைக்கும் போது தான் அதில் ஏதோ எழுதியிருப்பது போல தோன்றியது....எனக்கு மெல்ல வியர்க்கத் தொடங்கியது....

கோவிலில் பார்த்த கருட வாகனத்தின் முகம் ஒரு முறை மனத்தில் தோன்றி மறைந்தது....

~தொடரும்

முந்தைய அத்தியாயங்கள்:1 2 3 4 5 6

Tuesday, October 12, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-6


கோவணத்தாண்டி சொல்வது:

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே
...

நேற்று பேய்மழை கொட்டித் தீர்த்து விட்டிருந்தது....சென்னையின் ரோடுகளில் நீந்தி வருவதற்குள் லேட்டாகி விட்டது....

உள்ளே விக்ரம் ஒரு சிறுவனின் பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தார் " டாக்டர், இவன் விளையாடறதே இல்லை...எப்பவும் ஏதோ சிந்தனையிலேயே இருக்கான்" என்று சொல்லிக் கொண்டிருந்தனர்....

நான் உள்ளே நுழைந்ததும் "மார்னிங் தரங் " என்றார்...

நான் அந்த சிறுவனைப் பார்தேன்....அப்போதும் ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்தான்.....விக்ரம் அவர் அப்பாவிடம் திரும்பி "சார் எல்லா அப்பா அம்மாக்களும் தங்கள் பிள்ளை சச்சினாட்டம் வரணும், தோனியாட்டம் வரணும் னு எதிர்பார்த்தா எப்படிங்க? இப்ப நமக்கெல்லாம் ஒரு ரமண மகரிஷி, ஒரு விவேகானந்தர் போன்றவர்கள் கண்டிப்பா தேவைப்படுது...ஒவ்வொரு குழந்தையின் குணம் ஒவ்வொரு மாதிரி....நீங்க சொல்றதப் பார்த்தா அவன் நல்லா படிக்கறான்... பின்னாளில் ஜே .கே. மாதிரி ,தாகூர் மாதிரி பெருசா வரலாம்....கொஞ்சம் விட்டுப் புடிங்க....எதுக்கும் ஒரு வாரம் கவுன்சிலிங் வரட்டும்" என்றார்...

அவர்கள் சென்றதும் "மார்னிங் பாஸ், உள்ளே வந்தப்ப நீங்க சீரியசா முகத்தை வெச்சுகிட்டிருந்ததைப் பார்த்தப்போ அந்தப் பையனுக்கும் ஏதோ கனவில் ஆந்தை வந்திருச்சோன்னு நினைச்சேன்" என்றேன் ...

"தரங் கனமழை விட்டாலும் உன் கடிமழை விடலையே" என்றார் விக்ரம்...

"என்ன பண்றது பாஸ், இதெல்லாம் நம்ம ரத்தத்தில் ஊறிய பழக்கம் " என்ற நான் "ஆமாம் நேத்துலேருந்து ஒரு சந்தேகம்" என்றேன்...

"சொல்லு" என்றார் விக்ரம்..

"மஹிதரை அந்த கழுகு மலைக்கு வரவைப்பது தானே அந்த கண்ணுக்குத் தெரியாத எனிமீசோட திட்டம்?" என்றேன்

"அப்படிதான் தெரியுது"

"அப்படின்னா அந்த ஓலையை நாம பார்த்தது ஒரு தற்செயலான விஷயம் தானே? அவங்களுக்கு எப்படி நம்ம அந்த The Eagle
ங்கற புக்கைக் கண்டிப்பா பார்ப்போம்னு தெரியும்?மனுஷங்க நாம சாதாரணமா ஒரு லெட்டரை பாக்ஸ்ல போட்டுட்டு அது போயிருச்சான்னு உள்ள வரைக்கும் கை விட்டுப் பார்க்கறோம்...அதன் படி பார்த்தா, அவங்க அந்த ஓலையையோ இல்லை புக்கையோ மஹிதர் டேபிள் மேலயே கொண்டு வந்து வச்சிருக்கலாமே?did they believe in chance ? இதைப் பார்த்தா அவங்க அவங்களோட இன்டென்ஷன்ல ஒழுங்கா இல்லையோன்னு நினைக்கத் தோன்றது" என்றேன்.....

"நல்ல கேள்வி" என்ற விக்ரம் தொடர்ந்தார்...

"இதைப் பார்த்தா தான் எனக்கு அவங்க அவங்களோட
இன்டென்ஷன்ல ரொம்ப தீவிரமா இருக்கிறாங்கன்னு தோணுது"

"how ?" என்றேன்....


"நீ சொல்றது மாதிரி அவங்க அந்த ஓலையையோ புத்தகத்தையோ மஹிதர் டேபிள் மேல வச்சிருந்தா தான் நாம் அதைப் பார்க்கறதுக்கு வாய்ப்புகள் குறைவு....பக்கத்தில் இருக்கற எதையுமே நாம் சரியா கவனிக்க மாட்டோம்...மேலும் நம்ம மனசுல நினைக்கறதுக்கும் வெளியில் நடக்கும் events -
க்கும் ஒரு attraction இருக்கும்....சில சமயம் ஏதோ ஒரு பாட்டை நாமே அறியாம ஹம் பண்ணிக் கொண்டிருப்போம்.... டிவி யைப் போட்டா அந்த பாட்டு ஓடிக் கொண்டிருக்கும்.....எங்க தாத்தா ஒருத்தர் இருந்தார்...அவருக்கு மியூசிக் னா உயிரு....சாயங்காலங்களில் ஒரு ராகத்தை,for example , பந்துவராளி, சும்மா ஆலாபனை பண்ணி பண்ணி எங்களை கடுப்பேற்றிக் கொண்டிருப்பார்....பிறகு ரேடியோயைப் போட்டால் 98 % பந்துவராளி கேட்கும்...எப்படி தாத்தா என்று கேட்டால் என்னவோ தோணித்து " என்பார்...அதாவது வெளியில் நடக்கக் கூடிய விஷயங்கள் எப்படியோ அதற்கு முன்னரே நம் மனசுக்கு எட்டி விடும்...இது பொதுவாக எல்லா மனுசங்களுக்கும் இருக்கும்னாலும் ஒரு சிலரிடம் டாமினண்டா இருக்கும்....இன்னும் உனக்கு உதாரணம் வேணும்னால் ஐன்ஸ்டீன் ரிலேடிவிட்டி கண்டுபுடிச்சப்ப ஒரு ஏழெட்டு பேர் அதே ஆராச்சியில் ஈடுபட்டிருந்தாங்க...கிட்டத் தட்ட அதே முடிவுகளை கண்டுபிடிச்சிருந்தாங்க.....ஐன்ஸ்டீன் கொஞ்சம் முந்திக்கிட்டார்...அவ்ளோ தான் அதே மாரி மார்கோனி ரேடியோ கண்டுபுடிச்சப்ப கூட நாலஞ்சு பேர் அதே மாதிரி ஆராய்சிகளில் ஈடுபட்டு இருந்தாங்க...அவரோட நண்பர் ஒருத்தர் மார்கோனி ரேடியோ மாடலை அவருக்கே தெரியாமல் பேடன்ட் ஆபீசில் சென்று தக்க டைம்ல பதிவு செய்ததால் புகழ் அவருக்கு கிடைத்தது....
இதே மாதிரி தான் நம்ம எல்லார் மனசுலயும் இருந்த "கழுகு" நம்மை அந்த கழுகு புக்கை நோக்கி இழுத்துப் போனது....மஹிதரோட எதிரிகள் மனுஷ மனத்தைப் பத்தித் தெரிஞ்ச புத்திசாலிகள் போல் தெரிகிறது"...என்று கூறி முடித்தார்...

"பாஸ் கலக்கறீங்க" அடுத்த ஜென்மத்துல நம்ம ரோல்ஸ கொஞ்சம் மாத்திக்கலாமா? நான் எத்தனை நாள் தான் ஸ்டுபிட் தரங்கிணியாகவே இருக்கறது? என்றேன்...

"தரங்கிணி இன்னொன்னு தெரியுமா? மனுஷன் சாகறப்போ எதை நினைக்கிறானோ அடுத்த பிறவியில் அதுவாகத் தான் பிறப்பானாம்"

"அப்ப கண்டிப்பா மஹிதர் கழுகு தான்....இப்ப இருந்தே அவர் "எலி சாப்பிடுவது எப்படி"ன்னு ட்ரைனிங் எடுத்துக்கணும் என்றேன்...

"அதெல்லாம் சரி கூகுள்ல கழுகு மலை எங்க இருக்குன்னு தேடச் சொன்னனே, அது ஒண்ணையாச்சும் உருப்படியா பண்ணியா?" என்றார் விக்ரம்....

"என்ன பாஸ் என்னை என்ன ராத்திரி சீரியல் பாத்துட்டு தூங்குற பார்டின்னு நெனச்சீங்களா? பிரின்ட் அவுட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன்" என்றேன்....

"ஓகே எங்க இருக்கு சொல்லு " என்றார்

"அது திருநெல்வேலிக்கு பக்கத்துல சங்கரன் கோவிலுக்கும் கோவில்பட்டிக்கும் நடுவுல இருக்கு.....ச்சே சொன்னது தான் சொன்னான்...அமெரிக்கால கூட eagle - town னு ஒண்ணு இருக்காம்...அங்க வரச் சொல்லி இருக்கக் கூடாதா?உங்க தயவுல நான் U .S பார்த்திருக்கலாம்....பாஸ் லோக்கல் பார்டிங்க பாஸ்...."என்றேன்

"லோக்கல் பார்டியா பாரின் பார்டியான்னு போய் பார்த்தாதான் தெரியும்" என்றார்....

"சார் மஹிதர் கிட்டேருந்து அவங்க என்ன எதிர் பார்க்கறாங்க? பணமா?" என்றேன்

"their intentions are not yet clear " என்றார்

அப்போது அவர் செல்போன் ஒலித்தது ...."சிவா தான்" என்றார்

அவர் பேசியதும் "என்னவாம் பாஸ் ?" என்றேன்

"கழுகு மலைக்கெல்லாம் போக வேண்டாமாம்....இதை இப்படியே கொஞ்ச நாளைக்கு விட்டு விடுவோம்.....எதிரிகள் அடுத்த மூவ் எப்படி பண்றாங்கன்னு பார்க்கலாம்னான்" என்றார்...

ஓகே பாஸ் வேலையைப் பார்க்கலாம்....ஜுஜுபி ஓலைக்கு எல்லாம் பயந்துகிட்டு என்றேன்.....


திடீரென்று எங்கிருந்தோ ஒரு பலமான காற்று வீசியது.... நான் கொண்டு வந்திருந்த பேப்பர்கள் சில ஜன்னல் வழியே பறந்தன...மீதம் இருந்த பேப்பர்களைப் பொறுக்கி மேசை மீது வைத்தேன்,,,,அதில் இருந்த கழுகாசல மூர்த்தியின் படம் எங்களைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது....


~தொடரும்



முந்தைய அத்தியாயங்கள்

1
2
3
4
5








Monday, October 11, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)-5


கோவணத்தாண்டி சொல்வது:


உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை





புத்தகத்திலிருந்து எதோ ஒன்று கீழே விழுந்ததும் அதை சிவா கையில் எடுத்தார்....


"விக்ரம் இது பனை ஓலை , அந்தக் காலத்தில் எழுதுவார்களே" அது ....என்றார்...


"சிவா உள்ள ஏதாவது எழுதியிருக்கா பாருங்க" என்றார் விக்ரம்....


"படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு....வாங்க வெளில போலாம்"


"சார் ஒரு நிமிஷம்," என்ற மஹிதர் அந்த குழந்தையை நெருங்கி ,"பாப்பா இந்த புக்கை யார் கொடுத்தா சொல்றயா ? " என்றார்...


அந்த குழந்தை முகத்தை என்னவோ போல் செய்தது....


"வேண்டாம் விட்டுருங்க மஹிதர், அழுதுறப் போகுது" என்றேன்....அதற்குள் அந்தக் குழந்தை அங்கிருந்து 'மம்மி" என்று அழைத்துக் கொண்டு ஓடியே விட்டது....


வெளியே வந்து கூட்டம் இல்லாத ஒரு இடத்தில் நின்று கொண்டு வெளிச்சத்தில் ஓலையைப் பார்த்தோம்..."சிவா படிச்சுக் காண்பீங்க" என்றார் விக்ரம்..

சிவா படித்தார்...


"நிலையா தேகத்தில் நித்தியம் உணர

வைனதேயன் கிரிக்கு விரைந்தே வருக!

அலையும் வாழ்வில் நீ அலட்சியம் செய்தால்

மகிதரா நீயும் மறைந்தே போவாய்!"


"சார் நான் இந்த விளையாட்டுக்கு வரலை" என்று நான் மெதுவாக விலகினேன்....பக்கத்தில் நின்றிருந்த மஹிதரைப் பார்த்தேன்...உடம்பெல்லாம் வேர்த்து விட்டிருந்தது....முகம் பேயறைந்தது போல் இருந்தது....


"மஹிதர் , என்ன சப்ப மேட்டருக்கெல்லாம் டென்ஷன் ஆறீங்க" என்றேன்....


"உங்க கனவுல கழுகு நரியெல்லாம் வந்தா தான் தெரியும்" என்றார் மஹிதர்...


"தரங் உனக்கு எப்பவுமே விளையாட்டு தானா?" "சிவா, இது என்ன செய்யுள்?" என்றார் விக்ரம்...


"சிம்பிளா தானே இருக்கு புரியலையா?" என்றார் சிவா....


"சார் நாங்கல்லாம் டமில்ன்னாலே டென் கிலோ மீட்டர்ஸ் ஓடற பார்டிகள்... நீங்களே விளக்கம் சொல்லுங்க " என்றேன்....


நிலையில்லாத இந்த உடம்புக்குள்ள இருக்கற நிலையான ஒண்ணத் தெரிஞ்சுக்க நீ வைனதேயன் கிரிக்கு வா....அலட்சியம் செய்தா அழிஞ்சு போயிருவ"


"அது என்ன வைனதேயன் கிரி" என்றார் விக்ரம்...


"வைனதேயன்னா கருடன் ,சுருக்கமா கழுகு...." "கிரின்னா மலை"


"ஐயோ மறுபடியும் கழுகா" என்று கத்தினார் மஹிதர்....


அப்படின்னா "கழுகு மலைக்கு " வர சொல்றாங்களா?


"இருக்கலாம் " என்றார் சிவா..


"சார் நம்ம பேசாம போலிசுக்கு போயிரலாமா" என்றார் மஹிதர்...


சிவா "இப்ப வேண்டாம்....அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் அல்லது நண்பர்கள் யார் என்று முதலில் நாமே கண்டுபிடிப்போம்....நம்ம கிட்ட போதிய evidence வேற இல்லை....இந்த ஓலையைஎல்லாம் காட்ட முடியாது....I think உங்க கிட்ட இருந்து அவங்க எதையோ எதிர் பார்க்கலாம்...."என்றார் யோசித்துக் கொண்டே....


"வாட் டிட் யு சே, நண்பர்களா?" என்று விக்ரம் கேட்டார்.... "ஆமாம் அங்க வந்தா என்னவோ வாழ்கையின் தத்துவத்தை சொல்றாங்களாமே" என்றார் சிவா...


நான் மஹிதரைப் பார்த்து சொன்னேன் "மஹிதர், சுவாமி மஹிதரானந்தா, வாழ்த்துக்கள் .,,, நீங்க சாமியாரானதும் இந்தக் கடையை மாத்திரம் என் பேருக்கு எழுதி வெச்சுருங்க...நீங்கள் சாமியானதும் இது மாதிரி நூறு மால்களை வாங்கலாம் " என்றேன்... மஹிதர் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இரண்டுக்கும் பொதுவான ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தினார்...


விக்ரம் "ஓகே ஆக வேண்டியதைப் பார்க்கலாம்....மஹிதர் நீங்க ரிலேக்ஸ்டா இருங்க...நீங்க அந்த so called கழுகு மலைக்கு போற வரைக்கும் உங்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை" நாங்க போய் அந்த கழுகு மலை பற்றின தகவல்களை சேகரிச்சுட்டு வரோம்....முடிஞ்சா இந்த புதன் கிழமையே அங்கே போகலாம்...." என்றார் மஹிதரைப் பார்த்து....



"இந்த விசயத்தை உங்க அப்பா அம்மா கிட்ட சொன்னீங்களா?" என்று கேட்டார் சிவா...


"இல்லை சார்....எங்க அப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட்...நான் ஒரே பையன் வேற....இந்த விசயத்தை அவர்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை" என்றார் மஹிதர்....


"அதுவும் சரிதான்.....தரங்கிணி சொல்றது போல இது ஒரு சப்பை மேட்டராகக் கூட இருக்கலாம்....உங்க நண்பர்கள் யாராவது உங்க கூட விளையாடலாம்"


"ஓகே சிவா..இந்த ஓலை எப்படி அந்த புக்குல வந்திருக்கும்?" "அப்படின்னா அந்த எதிரி அல்லது நண்பன் இங்க வந்திருக்கணும்....இன்னைக்கு" என்ற விக்ரம் மஹிதரிடம் திரும்பி "மஹிதர் நீங்க அந்த பாப்பாவோட அம்மா கிட்ட விசாரிங்க அந்த புக்கை யார் கொடுத்தான்னு தெரியணும் , உடனே உள்ள போங்க, நாங்க கிளம்பறோம்" என்றார்...


நாங்கள் மூன்று பேரும் காரில் ஏறிக் கிளம்பினோம்.....வானம் இருண்டு பேய்மழை கொட்டும் போல தோன்றியது....நான்கைந்து மேகக் கூட்டங்கள் ஒன்று திரண்டு வானத்தில் ஒரு ராட்சஷ கழுகு உட்கார்ந்திருப்பது போல தோன்றியது....


~தொடரும்


முந்தைய அத்தியாயங்கள்:

1
2
3

4



Saturday, October 9, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!(திகில்)- 4


கோவணத்தாண்டி சொல்வது:


மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி-குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி.


தரங்கிணி சொல்வது



அடுத்த நாள் சண்டே என்பதால் சென்டரை மூடி விட்டு, சிவா வீட்டுக்கு செல்வது, அப்புறம் சிவாவுடன் அங்கிருந்து மஹிதர் புக் பாரடைசுக்கு செல்வது என்று விக்ரம் பிளான் செய்திருந்தார் ....காலையிலேயே போன் செய்து வரச் சொல்லி விட்டார்...

சரியாக ஒன்பது மணிக்கு புறப்பட்டோம்.....வழியில் ஒரு ஹோட்டலில் மசாலா தோசை,காபி உள்ளே தள்ளினோம் ...காரில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நான் கேட்டேன் ...."என்ன பாஸ் கொடுமை? சண்டே கூட எனக்கு ரெஸ்ட் இல்லையா? எதோ ஒரு டப்பா கேசுக்காக திருவான்மியூர் வரை போக வேண்டுமா? இது வரை உங்களுக்கு சிவான்னு ஒரு friend இருக்கறதா சொல்லவே இல்லையே? தெரியாமல் தான் கேட்கறேன்..அந்த மஹிதர் மேல உங்களுக்கு என்ன இவ்ளோ அக்கறை? " என்றேன்....

"தரங்! எந்த ஒரு திரில்லுமே இல்லாம போய்கிட்டிருந்த நம்ம profession -ல ஒரு திரில்லான கேஸ் இப்ப கிடைச்சிருக்கு ...இதை எப்படி மனவியல்ரீதியாக நம்ம டீல் பண்றோம்கறதுல தான் நம் திறமையே அடங்கியிருக்கு....It 's a challenge to our job" என்றார்
விக்ரம்...

"என்னவோ புலி வாலைப் புடிச்சிட்டீங்க ...இனி நான் என்ன பேச முடியும் ?" என்றேன்..

நிமிடங்கள் மெல்ல கரைந்தன...கார் மெயின் ரோடிலிருந்து விலகி ஒரு ஒற்றையடிப் பாதையில் சென்றது....சிவா வீடு வந்தது,....காரை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தோம்......

சிவாவின் வீடு ஒரு தனிமையான பிரதேசத்தில் இருந்தது...பெரிய வீடு...சுற்றிலும் ஆளுயர வளர்ந்த மரங்கள்...பூத் பங்களா ரேஞ்சுக்கு ஒரு பெரிய கேட்....கேட்டிலிருந்து கதவு வரை நீண்ட நடைபாதை.....அதன் இரண்டு பக்கத்திலும் பூச்செடிகள்...புல்வெளியில் முயல்கள் சில விளையாடின...

"ஏன் சார் உங்கள் ஃபிரண்டு இந்த இடத்தை எப்படிப் பிடிச்சார்? ஆள் அரவமே இல்லையே? உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் இதே கேசுகள் தானா?" என்றேன்...

உம்..."அவன் ஒரு தனிமை விரும்பி.....அறிவியல், ஆன்மிகம், மனோதத்துவம் ,மருத்துவம் எல்லாம் கலந்த ஒரு கலவை....Ph D எல்லாம் பண்ணியிருக்கான்...ஐந்து தலைமுறைக்கு பூர்வீக சொத்து திருச்சி பக்கம் இருக்கு....ஆனாலும் அனுபவிக்காம இப்ப சென்னைக்கு வந்து ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தறான்....இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை....ஏஜென்சிக்கு p .A வா யாரோ ஒரு பையன் இருக்கான்....."

சார் சும்மா kidding ......உங்க ஃபிரண்ட் சிவா என்ன அந்த மாதிரி கேசா? என்றேன்..

அவன் எந்த மாதிரி கேசாக இருந்தால் என்ன? அவன் உதவி தான் நமக்கு தேவை...என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவா உள்ளிருந்து கேட் அருகே வந்து "ஹாய் விக்ரம்..என்னடா இப்ப தான் இங்கே வர டைம் கிடச்சுதா? ரொம்ப பிசியாயிட்ட போல? சென்னைல மெண்டல்கள் ஜாஸ்தி ஆயிட்டாங்களா என்ன ? சரி இப்பவாச்சும் வந்தியே, ரெண்டு பெரும் உள்ள வாங்க" என்றார்...

"சிவா இது என் பி.எ. தரங்கிணி" என்று விக்ரம் அறிமுகம் செய்தார் ....சிவா கை குலுக்கி "nice to meet you " என்றார்...

சிவா நல்ல உயரமாக இருந்தார் ....பிரஞ் தாடியெல்லாம் வைத்திருந்தார்...சிவந்த நிறம்....மெல்லிய ஃபிரேமில் கண்ணாடி அணிந்திருந்தார்....ஒரு சைண்டிஸ்ட் மாதிரி இருந்தார்...ஏனோ பொருத்தமில்லாமல் தொள தொள என்று ஒரு மஞ்சள் கலர் டி- ஷர்டும் ஒரு பெர்முடாசும் அணிந்திருந்தார்...சைடிலிருந்து பார்த்த பொது கொஞ்சம் வயசானது போல் தோன்றியது.....

உள்ளே சென்றதும் "என்ன சாப்பிடறீங்க? காபி டீ?"என்றார்...

விக்ரம் பதில் சொல்வதற்குள் நான் முந்திக் கொண்டு "சார் எத்தனை நாள் தான் எல்லாரும் காபி டீயே கேப்பீங்க? இப்ப A ல இருந்து Z வரைக்கும் ட்ரிங்க்ஸ் எல்லாம் வந்தாச்சு" என்றேன்...

"தரங்கிணி, you are funny என்றார்"அவர்....

"அதல்லாம் வேண்டாம் வரும் வழியில் தான் ஹோட்டல்ல காபி போன்ற ஒரு திரவத்தை சாப்டோம்"
என்றார் விக்ரம்...

ஓகே ஒரு 15 minutes ...ரெடியாயிட்டு வரேன்....என்று சிவா உள்ளே சென்றார்....அவர் சென்றதும் அந்த அறையை கவனித்தேன்.....ஷெல்பில் எல்லா விதமான புத்தகங்களும் இருந்தன...a deep insight of human psychology , a briefer history of time , சீவக சிந்தாமணி பொருள் விளக்கம், புத்தரின் வைர சூத்திரம், human anatomy , என்றெல்லாம்....

"பாஸ், உங்க பிரண்ட் ஒரு நடமாடும் என்சயிக்லோபீடியா" போல தோணுது என்றேன்..

"நான் அப்பவே சொல்லலை?அதனால தான் சிவா கிட்ட discuss பண்ணினா மஹிதர் கேசுக்கு வேற ஏங்கிள்-லேர்ந்து ஏதாவது க்ளூ கெடைக்கும் னு நம்பறேன்"....என்றார்

அப்போது சிவா உள்ளிருந்து வந்தார்....இப்போது அழகாக ஜீன்ஸ் பாண்டும் full sleeve ஷர்டும் போட்டிருந்தார்....இரண்டு டம்ப்ளர்களில் பாண்டா நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்...."குடிங்க" என்றார்...

"தாங்க்ஸ்...ஒரு சில்லி கேள்வி...சிவா நீங்க ஏன் இன்னும் கல்யாணமே பண்ணிக்கலை" என்றேன்

சிவா விக்ரமை பார்த்தார்....

"இவ இப்படி தான் ரொம்ப ஓபன் டைப்...never mind it " என்ற விக்ரம் "அவனை மாதிரியே அறிவுள்ள ஒருத்தியை தேடறான் " என்றார்...

"அப்படின்னா காலம் பூராம் இவர் ஹனுமார் மாறி இருக்க வேண்டியது தான்..பொண்ணுங்க கிட்ட ஒரு அளவுக்கு மேல் எதிர்பார்க்க கூடாது மிஸ்டர்.சிவா" என்றேன்...

பாண்டா உள்ளே கடத்தப்பட்டதும் விக்ரம் "கெளம்பலாமா " என்றார்....Sure என்றார் சிவா...

காரில் சிவா ஆரம்பித்தார் "சொல்லுடா அந்த மஹிதர் கேஸ் பத்தி" என்றார்.. "தரங் நீ நல்லா டிரைவ் பண்ணுவே தானே? நீ டிரைவ் பண்ணு " நான் சொல்றேன் என்றார்...நான் டிரைவ் செய்தேன்...

விக்ரம் மஹிதர் பற்றி சிவாவிடம் விலாவாரியாகக் கூறி முடித்தார்...

"interesting ! ஆமாம் கனவில் கழுகு வந்தால் என்ன அர்த்தம்" என்றார் சிவா

நான் முந்திக் கொண்டு "அவர் பறக்க விரும்புகிறார் என்று அர்த்தம்" என்றேன்....

விக்ரம் "கொஞ்சம் சரி....கழுகு அவர் சுதந்திரமான மனிதராக இருக்க விரும்புகிறார் என்பதைக் குறிக்கலாம்" என்றார்.."ஆனால் கழுகு வந்து பயமுறுத்தினால்? "

"இதுக்குப் பின்ன யாரோ இருப்பார்கள் போலத் தெரிகிறது....அந்த மஹிதர் என்பவர் பெரிய ஆளா? எனிமீஸ் யாராவது? "என்று கேட்டார் சிவா...

"நோ..ஹி இஸ் ஏன் ஆர்டினரி மேன் ...யங் டூ "அப்படியே எனிமீஸ் இருந்தாலும் அவங்களால எப்படி மஹிதர் கனவில் கழுகைஎல்லாம் அனுப்ப முடியும்?

shopper 's paradise என்ற பெரிய மால் தென்பட்டது....

மாலுக்குள் சென்றதும் ஏதோ வெளிநாட்டுக்கு வந்து விட்ட ஒரு உணர்வு வந்தது....இரண்டு புறங்களிலும் துடைத்து விட்டாற்போல பள பள வென்று பலவிதமான ஷாப்புகள் ....

"IT காரங்க காசெல்லாம் இங்கே தான் வருது " என்றார் சிவா...

இரண்டாவது தளத்திற்கு நகரும் படிகளில் சென்ற பொது 'மஹிதர் புக் பாரடைஸ் " வந்தது....

கடை பிரம்மாண்டமாக இருந்தது....இன்டர்நெட் உலகிலும் புத்தகங்களுக்கு மவுசு குறையவில்லை என்று நினைக்கும் படி கூட்டம் அலைமோதியது....கம்ப்யூட்டர், சயின்ஸ், சயின்ஸ் பிக்சன், novels , தமிழ் இலக்கியம், travel guides , மருத்துவம், religion என்று ஏகப்பட்ட பிரிவுகளில்.....

மஹிதர் எதிரே வந்து வாங்க வாங்க , எனி ட்ரிங்க்ஸ்? என்றார்...

"
நோ தாங்க்ஸ் ...நிஜமாலுமே உங்க கடை பாரடைஸ் போல இருக்கு,,,...இவர் என் பிரண்ட் சிவா" என்று அறிமுகம் செய்தார் விக்ரம்...

சிவா மஹிதரிடம் அந்தக் கனவைப் பற்றி சிலபார்மலான கேள்விகளைக் கேட்டார்....சார் அந்தக் கனவு என் நிம்மதியையே கெடுத்துருச்சு" என்றார் மஹிதர்...ஆள் இன்றும் சோர்வாக இருந்தார்...

"dont worry Mr .mahidhar , lets investigate ...என்றார் சிவா...

கொஞ்ச நேரம் மஹிதரின் ஆபீஸ் அறையில் பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டோம்...கிளம்பும் போது வழியில் யாரோ
ஒரு பையன் தன் அப்பாவிடம் " டாடி டாம் அண்ட் ஜெர்ரி " என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான்...

விக்ரம் ஏதோ நினைத்தவராக திரும்பி உள்ளே சென்று "மஹிதர் உங்கள் கடையின் காமிக்ஸ் செக்சனை கொஞ்சம் காட்டுங்களேன்" என்றார்...

"why not வாங்க" என்று அழைத்துத் சென்றார் மஹிதர்...

மூன்று பேரும் காமிக்ஸ் செக்சன் சென்றோம்....அங்கே நாலைந்து குழந்தைகள் உலகையே மறந்து காமிக்ஸ்களில் ஒன்றி விட்டிருந்தார்கள்.....சில குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன...

சிவா திடீரென்று "விக்ரம் அங்க பாருங்க" "அந்த பாப்பா கைல"..என்றார்...

அந்த குழந்தை ஒரு காமிக்ஸ் புத்தகத்தை அப்போது தான் எடுத்திருந்தது "The Eagle " என்ற தலைப்பில்....அட்டையில் ஒரு பயமுறுத்தும் கழுகு தெரிந்தது.... "விக்ரம் என்னவோ நெருடுகிறது.....அந்த புக்கை வாங்க முடியுமான்னு பாருங்க....." என்றார் சிவா..

"பாப்பா இந்தா சாக்லேட்...அந்த புக்கை கொஞ்சம் தர்றயா" என்று விக்ரம் அதை கேட்டு வாங்கினார்...

அப்போது அந்தப் புத்தகத்தில் இருந்து ஏதோ ஒன்று கீழே விழுந்தது...


~தொடரும்..

முந்தைய அத்தியாயங்கள்:

1
2
3


Friday, October 8, 2010

மஹிதர் நீ மறைந்து விடு!-3 (திகில்)


கோவணத்தாண்டி சொல்வது:

ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே


மறு நாள் காலை பதினொரு மணிக்கு மஹி வருவதாக சொல்லியிருந்தான்.... பத்து மணிக்கு சுமாருக்கு ஒரு பெண் வந்து "சார் எனக்கு ஆம்பளைங்களைப் பார்த்தா அப்படியே கழுத்தை நெரித்து கொல்லனும்னு ஒரு உணர்வு வருகிறது...." என்றாள்....

தரங்கிணி என் பக்கம் குனிந்து "பாஸ் எதற்கும் போலிசுக்கு போன் பண்ணிடட்டா? நல்ல வேளை நான் ஆம்பளை இல்லை" என்று கிசுகிசுத்தாள்...

.அந்தப் பெண்ணிடம் சில ஃபார்மலான கேள்விகளைக் கேட்டு விட்டு இரண்டு வாரம் 'கவுன்சிலிங் ' வரும்படி கூறி அனுப்பினேன்...

தரங்கிணி " சார் இந்த வேலையை விட்டு நான் கூடிய சீக்ரம் எஸ் ஆகிடலாம்னு இருக்கேன்" என்றாள்...

அவள் ஒரு ஜாலி பேர்வழி என்று தெரிந்திருந்தும் நான் "ஏன் தரங்" என்றேன்...

"பின்ன என்ன சார்,,,, நட்டு போல்டு கழண்ட கேஸ் எல்லாம் வந்து கழுத்தருக்கறாங்க....என்னவோ ஆபீஸ் போனமா கம்ப்யூட்டர் முன்னாடி எட்டு மணி நேரம் உட்கார்ந்தமா மாசம் ஆனதும் ஐந்திலக்க சம்பளம் வாங்குனமான்னு இல்லாம இங்க உங்க கூட கழுகு, நரி, ஒட்டகம்னு கதை கேட்க யாரால ஆகும்?" நான் போறேன் என்றாள்

நான் புன்னைகைத்து விட்டு நிமிர்ந்ததும் மஹிதர் நின்றிருந்தான் , நிமிஷாவுடன்,,,,

,"குட் மார்னிங் , இது தான் நிமிஷா" என்றான்...

நிமிஷா ஐன்ஸ்டீன் சொன்னது போல் மணிகளை நிமிஷங்களாக்கும் வரம் பெற்றிருந்தாள்.....

"ஹாய் நிமிஷா,, ....ஐயம் விக்ரம் அப்புறம் சொல்லுங்க, உங்களைப் பற்றி" என்றேன்...

.தரங்கிணி குறுக்கிட்டு "சார் ப்ராப்ளம் மஹிதர்க்கு" என்றாள்...

அது வரை மஹியை மறந்து விட்டிருந்த நான் அவனிடம் திரும்பி ," அப்புறம் மஹி , என்ன நேற்று திரும்பவும் கழுகு வந்துச்சா" என்றேன்...

அவன் சோர்வாக "எஸ்" என்றான்....

நிமிஷா "அந்தக் கனவு வந்ததிலிருந்து மஹி இப்படி தான் சார், ஆளே மாறிட்டான்..... முதல்லே எல்லாம் ஜாலியா இருப்பான்..இப்ப அவன் கடைல 'human psychology ' செக்ஷன்லபோய் உட்காந்துட்டு குண்டு குண்டு புக்கெல்லாம் படிக்கறான்....ஒன்பது மணிக்கு மேல எங்கயும் வெளிய போறதே இல்லை....அன்னிக்கு இப்படி தான் சார், நாங்க ரெண்டு பெரும் சினிமாக்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தோம்....வெளியே புறப்படறப்ப மேல ஒரு கழுகைப் பாத்துட்டு நிமி இன்னிக்கி நம்ம ப்ரோக்ராம் கான்செல் அப்படின்னு சொல்லிட்டு உள்ள ஓடிட்டான் .....சார் மஹியை எப்படியாச்சும் cure பண்ணுங்க "

என்றாள்....மஹி அவளைப் பார்த்து "நிமி என்ன என்னவோ மெண்டல் கேஸ் மாதிரி சொல்றே" என்றான்

நான் நிமிஷாவிடம் திரும்பி " இது ஒரு சிக்கலான கேஸ் மிஸ் .நிமிஷா...அந்தக் கனவு எதனால் வருது என்று இன்றைக்கு அவரை ஹிப்னாடைஸ் பண்ணிப் பார்க்க வேண்டும்....உங்களுக்கு மஹிதரை எத்தனை நாளாகத் தெரியும்? என்றேன்...

"ரெண்டு வருசமா...இன்னும் ஒரு வருஷம் கழித்து மேரஜ் பண்ணிக்கலாம் னு இருந்தோம்".... இப்ப இந்த problem வேற...இவன் எங்க சாமியாராப் போயிருவானோன்னு பயமா இருக்கு என்றாள்...

கவலைப் படாதீங்க ,after all ஒரு கனவு தானே என்று சொல்லி தரங்கினியிடம் திரும்பி "தரங், ரூம் ரெடியா இருக்கா அந்த டேப்-ரெக்கார்டரை ரெடி பண்ணு" என்றேன்...

ஒரு மணி நேரம் மஹிதரை ஹிப்னோ செய்ததில் பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை....he seemed to be a typical youngster ...வாழ்க்கையின் கனவுகளுடன் வாழும் சாதாரண இளைஞன்...பணம் சம்பாதித்து கல்யாணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு என்று சாதாரணமான கொண்டுகள்...


திரும்பி வந்ததும் நிமிஷாஎன்ன ஆச்சு?” என்றாள்...

."no go நிமிஷா..." எனக்கு என்னவோ இது ஒரு சைக்காலஜி கேஸ் மாதிரி தெரியவில்லை.... there should be something beyond

...நிமிஷா "what do you mean Mr. .Vikram ?" என்றாள் பதட்டமாக...

பயப்படாதீங்கமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கெல்லாம் போகச் சொல்ல மாட்டேன் ….என்னுடைய close friend சிவான்னு ஒருத்தன் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி நடத்துகிறான்....ரொம்ப அறிவுப்பழம்....அவனைப் பார்த்து மஹிதர் விஷயமாகப் பேசலாம் என்று இருக்கிறேன்என்றேன்....


நாளை மறுநாள் திரும்பவும் வரவும் என்றேன்...மஹிதர் உள்ளிருந்து வந்து சார் நீங்களும் தரங்கினியும் நாளைக்கு கடைக்கு வரணும்....சண்டே தானே? என்றான்

"why not ? sure என்றேன்...தரங்கிணி "மஹி அந்த psychology செக்சன் மாத்திரம் நாளைக்கு மூடிடுங்க...ஆள் உள்ள போனா ஐக்கியம் ஆயிடுவார்"...என்றாள்

அவர்கள் போனதும் தற்செயலாக வெளியே பார்த்தேன் ..வானத்தில் ஒரு ஒற்றைக் கழுகு எதற்கோ வட்டமிட்டுக் கொண்டிருந்தது....

தொடரும்....

முந்தைய அத்தியாயங்கள்

1
2