இந்த வலையில் தேடவும்

Thursday, December 30, 2010

உதட்டளவு வாழ்த்துக்கள்!

நம் வீட்டை எப்போதாவது சுத்தம் செய்யும் போது சில வஸ்துக்கள் அகப்படும். அவற்றை இருக்கட்டும் என்று வைத்துக் கொள்ளவும் முடியாது , வேண்டாம் என்று வீசி விடவும் முடியாது. (உதாரணமாக ஏதோ ஒரு அரதப் பழசான டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன்,மொபைல் வாங்கிய பழைய அட்டைப் பெட்டி, கல்யாணப் பத்திரிக்கை etc ., ) சில வீடுகள் இப்படி தேவை இல்லாத அதே சமயம் தேவையும் உள்ள பொருட்களாலேயே பாதி அடைக்கப்பட்டிருக்கும்.

ஓகே.இந்த பதிவு அதற்காக அல்ல. இன்றைக்கு நம் உறவுகளில் பெரும்பாலானவை இந்த நிலைமையில் தான் உள்ளன. உன் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கவும் முடியாது, அதே சமயம் நீ தான் எல்லாம் என்று போய் அப்பிக் கொள்ளவும் முடியாது. இன்றைக்கு ஒரு கல்யாணம் என்றாலோ காது குத்து என்றாலோ உண்மையான மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று மணமக்களையும் குழந்தைகளையும் வாழ்த்தும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. 'ஐயோ கூப்பிட்டு விட்டார்களே, நாளை நமக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் அவனது உதவி தேவைப் படுமே' என்று சுயநலம் கருதி தான் நிறைய பேர் கல்யாணங்களுக்குப் போகிறார்கள்.

கல்யாணத்தை நடத்துபவர்களும் இதற்கு ஒன்றும் குறைவில்லை. கூப்பிட்டவர்களில் ஒருவர் வராவிட்டாலும் "அந்த அம்புஜத்திற்கு என்ன திமிரு? புது வீடு கட்டிட்டாள்னு யாரையும் மதிக்கறதே இல்லை.. படி ஏறிச் சென்று கூப்பிட்டதற்கு (படி ஏறிச்செல்லாமல் எப்படி கூப்பிடுவது?!?!) வராமல் நல்லா அவமானப்படுத்திட்டா" என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்...அந்த நாளில் அவர்களுக்கு வேறு என்ன எமர்ஜென்சி வந்ததோ , யாருக்கு உடம்பு சரியில்லாமல் போச்சோ, வேறு என்ன அவசர வேலை இருந்ததோ என்றெல்லாம் யோசிப்பதே இல்லை.

இன்று கல்யாணம் கச்சேரிகளுக்கு செல்வதை (குறிப்பாக இளம் தலைமுறையினர்) பெரும் பேஜாராகக் கருதுகிறார்கள். அதற்கு ஏற்றபடி ஒரே முகூர்த்த நாளில் நாலைந்து அழைப்புகள் வருகின்றன. மேலும் கடுப்பு ஏற்றும் படி முகூர்த்தத்தை ஐந்து மணி ஆறு மணி என்று ரொம்ப சீக்கிரமாக (?) வைக்கிறார்கள். பெரியவர்கள் போக முடியவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து 'சும்மா போய் தலையைக் காமிச்சிட்டு வந்துடு' என்கிறார்களே தவிர 'அவர் ரொம்ப நல்லவர்; அவங்க வீட்டு கல்யாணத்துக்குப் போய் மணமக்களை மனதார வாழ்த்தி விட்டு அவர்கள் நூறு வருடம் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்" என்றெல்லாம் சொல்வதில்லை.

கல்யாணங்களுக்கு நிறைய பேரை அழைப்பதே எல்லாருடைய ஆசிகளும் மணமக்களுக்குக் கிடைக்கட்டும் என்பதற்காகத் தான். ஆனால் கல்யாணங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் 'கெட்டி மேளம்' என்று சொன்னதும் இயந்திரத் தனமாக அட்சதையை இறைக்கிறார்களே தவிர உண்மையாக வாழ்த்துகிறார்களா என்று தெரியாது. (தாலி கட்டும் போது யாராவது ஏடாகூடமாக அமங்கல வார்த்தைகளைக் கூறி விட்டால் அது கேட்காமல் இருப்பதற்கு தான் கெட்டி மேளம் ஜோராக வாசிக்கிறார்களாம் )இதைத் தெரிந்து கொண்டு தான் நம் பெரியோர்கள் 'வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும்' என்று கூறினார்கள். அதாவது கல்யாணத்திற்கு வந்தவர்கள் கஞ்சத்தனத்தால் மணமக்களை வாயார வாழ்த்தா விட்டாலும் அங்கே அவர்கள் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வயிறு தானாக வாழ்த்துமாம்.(இதனால் தான் அன்னதானத்தை தானங்களில் சிறந்தது என்றும் கூறுகிறார்கள் )ஆனால் இன்று சில கல்யாணங்களில் போடும் சாப்பாட்டைப் பார்த்தால் பாவம் அந்த மணமக்களுக்கு வயிறுகளின் வாழ்த்துக்களும் கிடைக்குமா என்பதே சந்தேகமாகி விட்டது.

கல்யாணம் என்றில்லை இன்று வாழ்த்துக்களும் பெயரளவில் நின்று விடுகின்றன..."Happy New year ' என்கிறோம்..'What do we mean?" இப்போதெல்லாம் சந்தோஷம் என்பது உள்ளே இருந்து வரும் ஒன்றாக இல்லாமல் வெளியே இருந்து தொற்றிக் கொள்ளும் காய்ச்சல் போலவே இருக்கிறது. சில மணி நேரக் காய்ச்சல்...வெளியே எல்லாரும் சந்தோசமாக ஆடுகிறார்கள் பாடுகிறார்கள்..அதனால் ஒரு பொய்யான மகிழ்ச்சி மேகம் நம்மைச் சுற்றி தற்காலிகமாக உருவாக்கப்படுகிறது. நியூ இயர் பார்ட்டி முடிந்து 'hang over ' எல்லாம் வெளியேறி அடுத்த நாள் காலையில் மீண்டும் நம்முடைய உண்மையான முகத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எங்கேயோ படித்த ஒரு வாக்கியம் ஞாபகம் வருகிறது "மகிழ்ச்சி என்பது அனுபவிக்கும் போதே முடிந்து விடுவது; துயரம் என்பது முடிந்த பின்னும் அனுபவிக்கப்படுவது" ..


சரி ஒருவரை உண்மையிலேயே வாழ்த்துவது என்பது என்ன? " ஹாப்பி நியூ இயர்' 'happy b 'day ' போன்ற உதட்டளவிலான வாழ்த்துக்களை விட்டு விட்டுப் பார்த்தால் 'வாழ்த்து' என்பது என்ன? ஒருவரை உண்மையாகவே நேசித்தால் வாழ்த்துக்கள் கூட அனாவசியம் தான் என்று தோன்றுகிறது..ஆமாம் 'LOVE IS THE PROOF UNTO ITSELF .. . "

சமுத்ரா

Tuesday, December 28, 2010

பிரஜா வாணி-6 (கனாக் கண்டேன் தோழி! )

ஆயிரம் காலத்துப் பயிருக்கு
ஏன்
இத்தனை வேலிகள்?
தங்கத்தைக் காட்டினால் மட்டுமே
கழுத்தில்
தங்குகின்றன தாலிகள்!

இன்னார்க்கு
இன்னார் என்று
எழுதி வைத்த இறைவன்
ஏனோ
சில பெயர்களை
மறந்து விட்டான்

மனிதர்களே!
என்
திருமணத்தை
சொர்கத்தில் நிச்சயிக்கக் கேட்கவில்லை..
என் வீட்டு முற்றம்
காலியாகத் தான் இருக்கிறது!
நாங்கள்
எத்தனை நாள் தான்
காகுத்தன் வருவான் என்று
கன்னி மாடத்தில் காத்திருப்பது ?

ஆண்களே !
சீதை போன்ற அழகிகள்
மனைவிகளாக வேண்டும் என்ற ஆசை
நியாயம் தான்
ஆனால் நீங்கள்
எத்தனை முனிவர்களின் யாகங்களைக் காத்தீர்கள்?
அந்த-
ருக்மிணியைக்
கடத்திப் போக ஒரு
கண்ணன் வருவான்
எங்களை
நடத்திப் போகவேனும் ஒரு
நாயகன் என்று வருவான்?

எனக்கு
அழகு குறைவாக இருக்கலாம்
ஆனால்
அன்பு குறைவாக இல்லை!
முகம் கறுப்பாக இருக்கலாம்
ஆனால்
அகம் கறுப்பாக இல்லை!
மணமாலைகள்
சீதைகளுக்கே போனால்
சூர்பணகைகள்
அறுந்த மூக்குகளையா
அணிந்து கொள்வது?

கூரைப் புடவையை
என்று தான் நாங்கள் உடுத்துவது?
என்று தான்
ஓமப் புகை
எங்கள் கண்களில் புகுந்து
சுகமாக உறுத்துவது?

இங்கே
சூடிக் கொடுத்த சுடர்க் கொடிகள்
பாவை படிக் கொண்டிருக்க
அங்கே கண்ணனோ
ருக்மிணியைக் கடத்த
ரதத்தைத் தயார் செய்கிறான்!

நான் அக்கினியை
வலம் வருவதற்குள்
என்னை துன்பத்தின் தீ
சூழ்ந்து கொண்டு விட்டது
நான் அருந்ததியைப்
பார்க்கும் முன்
கிரகங்கள் போட்டி போட்டுக் கொண்டு
என்னைப் பார்த்து விட்டன!

எனது
கல்யாணக் கனவுகள்
காற்றில் கரைகின்றன
என்
குழந்தைக்கு நான் எழுதிய
தாலாட்டு வரிகள்-என்
கண்ணீரில் அழிகின்றன!
முதல் இரவுக்கு
மயங்கி
என் இரவுகள்
முடியாத இரவுகளாகின்றன!
வாழைத் தோரணத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் வீட்டு
வாசல்களும் சோர்ந்து விட்டன...

மத்தளம் கொட்டுகிறது
வரி சங்கம் நின்றூதுகிறது
ஏனோ
முத்துடைத் தாம நிறைப் பந்தலின் கீழ்
மதுசூதனன் வரும் முன்னர்
என் வீட்டுக் கோழிகள் கூவி
என்னை
எழுப்பி விட்டு விடுகின்றன

எத்தனை நாள்
தான்
பெற்றவர்களுக்கு பெரும்
பாரமாய் இருப்பது?
நான் மிதிக்க வேண்டிய
அம்மி
என்னைப் பெற்றவர்கள்
தலை மீது போய் அமர்ந்து கொண்டது!

மஞ்சள் இடிக்க
என் வீட்டுக் கொல்லையில் வைத்த
உரல் -இன்று
என் மனத்தை இடிக்கிறது ...
கன்னிக் கால் ஊன்றாத
என் வீட்டு
ஈசானியம் என்னை
ஏளனம் செய்கிறது!

ஏழு அடிகள் எடுத்து வைத்து
என்று தான் நான்
இல்வாழ்வைத் தொடங்குவது?
என்று தான்
என் தலை வகிடு
குங்குமத்தால் சிவப்பது?
என்று தான்
மெட்டியின் ஒலி
என் காதுகளில்
மௌன ராகம் இசைப்பது?

மழலைகளுக்கு
மணம் செய்து வைக்கும் சமூகம்
ஏனோ
இந்த
முதிர்கன்னிகளை
மறந்து விடுகிறது..
கோவில்களில்
கல்யாண உற்சவங்கள் நடந்து கொண்டிருக்க
எங்கள்
வாழ்க்கையோ
வறண்டு கிடக்கிறது

அம்மா
கோவிலில் நேர்ந்து கொண்டு
மாலை ஒன்று வாங்கி வந்தாள்..
மாலை
முழுவதும் வாடுவதற்குள்
மணாளன் ஒருவன் வருவானாம்!
மாலை வாடுவதைப்
பார்ப்பவர்கள்
என்
மனம் வாடுவதைப் பார்ப்பதில்லை!

தரகர்களிடம்
நடந்தே
என்
தந்தையின் காலணிகள் தேய்கின்றன!
காதலிக்கவாவது செய்திருக்கலாமே
என்று
கேட்கிறாள் தங்கை!
என் செல்களை
பூரிக்கச் செய்ய வேண்டிய
கல்யாணக் கனவுகள்
இன்று-
எரிமலையாய் மாறி என்
இதயத்தை எரிக்கின்றன!
ஆம்
இந்த
கல்யாணச் சந்தையில்
விலை போகாத காய்கறிகள்
வீதியில் வீசப்படும்!

நகை இல்லாததால்
என் வாழ்க்கை
நகைப்பாய்ப் போனது
பட்டு இல்லாத காரணத்தால்
வாழ்க்கை
பட்டுப் போனது!
இரு
மனங்களை ஓட்ட
பணம் என்ற
கோந்தையா பயன்படுத்துவது?
சவரனை வைத்தா
மனங்களின்
சந்தோஷங்களை நிர்ணயிப்பது?

உடலின் சேர்க்கைக்கா நான்
உள்ளம் குமுறுகிறேன்?
ஒரு பெண்ணுக்கு
முத்தங்களை விட
மழலையின்
சத்தங்கள் தானே சங்கீதம்
தழுவல்களை விட
இல்லறத்தின்'
அலுவல்கள் தானே ஆனந்தம்
சரசங்களை விட
சமையல்கள் தானே சந்தோஷம் ?
ஏனோ
வாசுகிகள் தயாராக இருந்தாலும்
வள்ளுவன் தான்
கிடைப்பதில்லை இங்கே!

என்
உள்ளத்தின் குரல்களை யாரிடம்
உரைப்பது?
கிளியையும் குயிலையும்
தூது விடுவது
புராணங்களுக்கு மட்டுமே
பாந்தமாக இருக்கும்!
இருந்தாலும்
இதயம் தாங்காமல் கூறுகிறேன்
மதவாதிகள்
மன்னித்துக் கொள்ளுங்கள்!
ஜோடியுடன்
கூடிக் குலாவிக் களிக்கும் என்
வீட்டுக் கூண்டுக் கிளியே
உன் கதவைத் திறக்கிறேன்
பறந்து செல்!
கோதை காத்திருக்கிறாள்
என்று
கண்ணனிடம் சொல்!
அவன்
கீதாசாரத்தில்
மும்முரமாக இருந்தால்
அவன்
தோழர்கள் யாராவது
தயாராக இருக்கிறார்களா கேள்!


சமுத்ரா

Monday, December 27, 2010

அணு அண்டம் அறிவியல்-10

அறிவியல் ஆர்வலர்களுக்கு வணக்கம். அல்லாரும் நல்ல இருக்கீங்களா? இந்தத் தொடருக்கு நீங்கள் அளித்து வரும் பேராதரவிற்கு(?) நன்றிகள்.. அப்புறம் ஒரு விஷயம். தமிழ் மணம் முதல் கட்ட விருதுகளில் நமக்கு யாராவது வோட்டுப் போட்டிருக்கிறார்களா என்று நப்பாசையில் எட்டிப் பார்த்த போது நம்ம பதிவு (அறிவியல் பிரிவு) போர்டுக்கு கூட வரவில்லை..சரி காமெடி பிரிவிலாவது இருக்குமா என்று தேடினால் அங்கும் இல்லை...anyway ..முடிந்த வரை எழுதலாம்... :(

ரூதர்போர்டின் கண்டுபிடிப்பு இயற்பியலின் வரலாற்றில் முக்கியமான ஒன்று என்று போன பதிவில் சொன்னோம்...ஏன் என்றால் அது அதுவரை நிலவி வந்த அணுவைப் பற்றிய தவறான மாடல்களை பின் தள்ளி விட்டு அணு என்பது பெரும்பாலும் வெற்றிடம் தான், அணுவின் மொத்த நிறையையும் அதன் மையத்தில் உள்ள மிக மிகச் சிறிய அணுக்கரு (nucleus) தான் கொண்டுள்ளது,அணுக்கருவை சுற்றி மிக மிக அதிக தூரங்களில் எலக்ட்ரான்கள் இருக்கின்றன என்று புரட்சிகரமாக அறிவித்தது . அணு ரொம்ப ரொம்ப சிறியது என்று நமக்குத் தெரியும்..ஆனால் அதன் உள்ளே உள்ள அணுக்கருவுடன் ஒப்பிட்டால் அது ரொம்ப ரொம்பப் பெரியது...உதாரணமாக அணுவை ஒரு கிரிக்கெட் மைதானத்தின் அளவுக்குப் பெரிதாக்கினால் அணுக்கரு ஒரு கிரிக்கெட் பந்து சைசுக்குப் பெரிதானாலே அது பெரிய விஷயம்.

இன்றும் கூட இயற்பியல் ஆசாமிகளை வியப்பில் ஆழ்த்தும் விஷயங்கள் இரண்டு உள்ளன.. முதலாவது அணுவின் உள்ளே வியாபித்துள்ள வெற்றிடம். கிட்டத்தட்ட 99 சதவிகிதம்..இந்த வெற்றிடத்தால் உருவாக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் திடத்தன்மையோடு இருப்பது தான் பெரிய ஆச்சரியம். நாமெல்லாம் 99 சதவிகிதத்திற்கும் மேலே வெற்றிடம் தான் என்றால் நம்மால் ஏன் ஒரு பூட்டிய கதவை ஊடுருவிக் கொண்டு உள்ளே செல்ல முடிவதில்லை? ஒன்றும் இல்லாத வெற்றிடம் எப்படி நமக்கு நிலையான ஓர் உருவத்தைத் தருகிறது?

"வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்?"

"வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்?"

என்று பத்திரகிரியார் புலம்பியது இந்த வெளியைத் தானா? புத்தரைப் பார்த்து "உமக்குள்ளே எதை நீங்கள் கண்டீர்கள் ?"என்று கேட்கும் போது அவர் 'ஒன்றுமற்ற வெறும் சூனியம்" என்கிறார் ..அந்த சூனியமும் அணுவின் உள்ளே ரூதர்போர்ட் கண்டுபிடித்த சூனியமும் ஒன்றா?நாம் கண்ணால் காணும் திடப்பொருள்கள் அனைத்தும் சூனியத்தால் ஆக்கப்பட்ட மாயைகளா?..நம் ஹீரோ பாரதி கூறுவதைப் பாருங்கள்..


"வானகமே இளவெயிலே மரச்செறிவே,
நீங்களெல்லாம் கானலின் நீரோ ?வெறும் காட்சிப் பிழை தானோ?"

'காட்சிப் பிழை'! என்ன ஒரு பிரயோகம் பாருங்கள்..

சரி ரொம்ப இலக்கியத்தின் பக்கம் போக வேண்டாம்..

நம் பிரபஞ்சத்தில் பெரும்பாலும் பொருட்களை(matter ) விட ஒன்றுமற்ற வெளியே அதிகமாக உள்ளது என்கிறார்கள்.ஒரு காலக்சிக்கும்(galaxy ) இன்னொன்றுக்கும் இடையே நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு பரவிப் பெருகியிருக்கிறது அந்த வெளி (space ). திடப் பொருட்கள் வெறும் ஒரு சதவிகிதம் இருக்கலாம்..வேடிக்கை என்ன என்றால் அந்தப் பொருட்களுக்குள்ளும் 99 % வெற்றிடம் தான் ..அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் இருக்கிறது என்று நம் சித்தர்கள் சொன்னால் நாம் சிரிக்கிறோம் ஆனால் இதைத் தான் இயற்பியலில் Ph .D செய்பவர்கள் கூட படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது..

ஒரு உதாரணத்திற்கு நம் பூமியில் உள்ள ஒவ்வொரு அணுவின் வெற்றிடத்தையும் எடுத்து விட்டு அதை 'சுருக்குவதாக' கற்பனை செய்வோம். அதாவது அணுவில் வெற்றிடமே இல்லாமல் எலக்ட்ரான்களை 'ஏம்ப்பா, கூச்சப் படாதீங்க, கொஞ்சம் பக்கத்துல வாங்க' என்று அழைத்து அணுக்கருவின் விளிம்புகளில் கொண்டு வருவது. (இது சாத்தியம் இல்லை என்றாலும் சும்மா கற்பனை செய்து கொள்ளவும்..ஏன் சாத்தியம் இல்லை என்றால் 'exclusion principle ' 'uncertainty principle ' என்றெல்லாம் போக வேண்டி வரும்..நம் லெவலுக்கு (சாரி என் லெவலுக்கு) அதெல்லாம் வேண்டாம் இப்போதைக்கு)

அப்படி சுருக்கினால் நம் பூமி ஒரு ஆரஞ்சுப் பழ சைசுக்கு சுருங்கி விடும் என்கிறார்கள்.அந்த ஆரஞ்சுப் பழத்தின் நிறை மட்டும் பழைய பூமியின் நிறையாக இருக்கும்.(பூமி எவ்ளோ பெரியது? பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் போகவே எட்டு மணி நேரம் லொங்கு லொங்கு என்று பஸ்ஸில் உட்கார வேண்டியிருக்கிறது!) இத்தனை பெரிய பூமியே ஆரஞ்சுப் பழ லெவலுக்கு சுருங்கி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

இயற்பியலின் வேகத்திற்குக் கடிவாளம் போடும்
'uncertainty principle ' லுக்கு பெப்பே காட்டி விட்டு ஒருவேளை இந்த டெக்னிக் நமக்குப் பிடிபட்டு விட்டால் ஒரே ஜாலி தான். காருக்கு பார்க்கிங் கிடைக்கவில்லை என்று கவலைப் படத் தேவை இல்லை..SRT (அதாங்க Space Reduction Technique ) யை பயன்படுத்தி நம் காரை ஒரு சிகரெட் பாக்கெட் அளவுக்கு சுருக்கி விட்டு பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போதீசுக்குப் போய் விடலாம் பாருங்கள்..நமக்கெல்லாம் இது அசாத்தியமானதாகத் தெரிந்தாலும் இயற்கை இதை அனாயாசமாகச் செய்கிறது. 'நியூட்ரான் ஸ்டார்' தெரியுமா? ஹ்ம்ம்..தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டாரைத் தெரிந்த அளவு 'நியூட்ரான் ஸ்டார்' தெரியாதது கவலை தான். அதில் இந்த மாதிரி தான் நடக்கிறது.
இந்த நியூட்ரான் நட்சத்திரத்தைப் பற்றி நாம் விரிவாக 'பெரியவற்றிற்கான அறிவியலில்' பார்க்கலாம். இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது 'சிறியவற்றிற்கான அறிவியல்'!

இப்போது: ஒரு நட்சத்திரம் தன் பூதாகாரமான நிறையைத் தானே தாங்க முடியாமல் சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த 'self gravity ' எந்த அளவு இருக்கும் என்றால் அணுவின் துகள்கள் கூட அந்த நட்சத்திரம் சுருங்கும் போது பக்கத்தில் வர ஆரம்பிக்கும். அணுவில் சாதாரணமாக ரொம்ப தூரத்தில் சுற்றும் எலக்ட்ரான்கள் கூட அணுக்கருவினுள் வன்முறையாக அமுக்கப்படும். இப்போது அணு என்ற ஒன்றே இருக்காது. எலக்ட்ரான்கள் அணுக்கருவில் உள்ள ப்ரோடான்களுடன் சேர்ந்து எல்லாம் ஒரே நியூட்ரான் மயமாக மாறி விடும். ஓகே இங்கே 'தாவோ' (Tao ) தத்துவத்தை கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது.(சுத்தமான அறிவியல் நாத்திகர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும் அல்லது அடுத்த பாராவுக்குச் செல்லவும்)
நியூட்ரான் என்பது பாசிடிவ் எனர்ஜியும் அல்ல நெகடிவ் எனர்ஜியும் அல்ல..நடு நிலையானது. அதிலிருந்து ஒரு பாசிடிவ் ப்ரோடான் மற்றும் ஒரு நெகடிவ் எலக்ட்ரான் வர முடியும். இவை இரண்டும் சேரும்போது மீண்டும் நியூட்ரானாக மாறி விடலாம். தாவோ என்ன சொல்கிறது என்றால் ஆணும் பெண்ணும் ஆண்பெண் நிலை கடந்த ஒரு சக்தியின் இரண்டு அம்சங்கள். இவை ஒன்றுடன் ஒன்று கவரப்படுவது எதனால் என்றால் கூடலின் சங்கமத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் கலந்து கிடைக்கும் நடுநிலையை அடைவதற்கு என்கிறார்கள்..யிங் யாங் (ying yang) படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? பார்க்காதவர்கள் கீழே பார்க்கவும். மிகவும் தெய்வீகமான படம் இது..எல்லாரும் க்யூவில் நின்று மெதுவாக வந்து தரிசனம் செய்து கொள்ளுங்கள் பார்க்கலாம்..


இந்த நியூட்ரான் நட்சத்திரம் மிக மிக மிக அடர்த்தி கொண்ட ஒன்றாக இருக்கும்..அதாவது இந்த நட்சத்திரத்தின் ஒரு ஸ்பூன் அளவுள்ள பொருள் எவ்வளவு நிறை தெரியுமா? 55 துக்கு
அப்புறம் பதினொரு சைபர்கள் போட்டுக் கொள்ளுங்கள்.அவ்வளவு கிலோகிராம் தான்..

சரி முடிப்பதற்கு முன் இயற்பியலின் இன்னொரு வியப்பையும் பார்த்து விடலாம் ...அது என்ன என்றால் 'elasticity of atomic collisions ' என்று அழைக்கப்படும் அணுக்களின் 'மீள் தன்மை'..
ஒரு பொருளின் உள்ளே உள்ள அணுக்கள் சும்மா இருக்காமல் பார்க்கில் விளையாடும் குழந்தைகள் போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொண்டும் இருக்கின்றன (இதை தான் நாம் அந்தப் பொருளின் வெப்ப நிலை என்கிறோம்) இப்படி லட்சம் தடவைகள் மோதினாலும் மோதல் நிகழ்ந்த அடுத்த கணப் பொழுதிலேயே தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகின்றன. ('இங்க எதுவுமே நடக்கலை' என்ற பாவனையில்) இது ஓர் ஆச்சரியம் தான். உங்கள் கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்ப்படும் எல்லாவற்றின் மீதும் மோதுவதாகக் கொள்வோம்..கடைசியில் உங்கள் கார் முதலில் இருந்த மாதிரியா இருக்கும்? கார் இருக்குமா என்பதே சந்தேகம் தான்..சிக்கிச் சின்னா பின்னமாகி இருக்கும் அல்லவா? ஆனால் அணுக்கள் எத்தனை முறை மோதினாலும் சமர்த்தாக அதிலிருந்து மீண்டு விடுகின்றன..

இன்று t .v .யில் செந்தமிழில் ஒரு பெண் ஹீரோவை 'வாடா' என்று அழைத்துப் பாடும் ஒரு குத்துப்பாட்டை ரசிப்பதற்கு உட்காரும் முன்னர் இந்த இரண்டு இயற்பியல் அதிசயங்களையும் ஒரு முறையேனும் நினைத்துக் கொண்டு வியக்கவும்..

சமுத்ரா

[as usual : உங்கள் கருத்துக்களை தயவு செய்து கமெண்டுகளாக சொல்லுங்கள்..ஏனென்றால் ஒவ்வொரு பாசிடிவ்வான கமெண்டும் நூறு விருதுகளுக்குச் சமம்]

ஹலோ, நீரா ராடியா ஸ்பீகிங்...
எல்லாம் கற்பனையே...

நீரா : ஹலோ ,யார் பேசறது?
எக்ஸ் : அதை சொல்றதுக்கே பயமா இருக்குதுங்க மேடம், இப்பல்லாம் நம்ம பேசறதை ஒட்டுக் கேட்டு குறுந்தகடா வெளியிட்டுர்றாங்க...பேஜாரு மேடம்...
நீரா: கவலைப் படாதீங்க.. இது 'சைனா' இம்போர்டட் போன்..யாராவது ஒட்டுக் கேட்க நினைத்தால் அதுல 'ப்ளா ப்ளா ப்ளாக் ஷீப்" அப்படின்னு ரைம்ஸ் வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கோம்..
எக்ஸ்: அப்பாடா....சரி மேடம் நான் தான் விஜய்..
நீரா: விஜய் மல்லையாவா? சொல்லுங்க புது பீர் ஏதாவது அப்ரூவ் பண்ணித் தரணுமா?
எக்ஸ்: மேடம், நான் விஜய், தமிழ் நடிகர் மேடம்..
நீரா: அப்படியா.. சாரி டமில் படம்லாம் பார்கறதுக்கு எங்க டைம்? சரி சொல்லுங்க..இது வரைக்கும் எவ்ளோ காமெடி படம் பண்ணியிருக்கீங்க?
எக்ஸ்: மேடம், நான் ஹீரோ..
நீரா: ஓ, சாரி..உங்க டமில் நாட்ல அல்லாரும் ஒரே கலர்ல இருக்கறதால தெரிய மாட்டேங்குது...சரி என்ன விஷயம்? அடுத்த கால்கு அத்வானி வெயிட் பண்றார் சீக்கிரம்..
எக்ஸ்: மேடம், நான் நடிச்ச காவலன் படத்துக்கு எப்படியாவது நீங்க இந்திய அளவுல நூறு தியேட்டர்கள் ஏற்பாடு பண்ணித் தரணும் ..டீலிங் எல்லாம் அப்பறம் பேசலாம்..
நீரா: (கடுப்பாகி) ஏய்! நான் ஏதோ டீலிங் பண்ணி அஞ்சு பத்து சம்பாதிக்கறது பிடிக்கலையா? நூறு பேரை கொலை செய்த குற்றத்திற்காக ஜெயிலுக்குப் போகனுமா? போன வைங்க ,,,
எக்ஸ்: (கண் கலங்கி) மேடம் என்னதா இருந்தாலும் ஒரு தியேட்டருக்கு ஒருத்தரு வருவாருன்னு கணக்கு போட்டீங்களே.. அது தான் மேடம் எனக்கு சந்தோஷம்..அந்த ஒரு ரசிகனுக்காக இந்த விஜய் உயிருள்ள வரை நடிப்பான் மேடம் நடிப்பான்.. இன்னிசை பாடி வரும் உங்கள் குரலுக்கு ஈடு இல்லை..நீரா இல்லையென்றால் ஒரு டீலிங் நடப்பதில்லை.. மேடம்...மேடம்,,
லைன்: கொய்ங்கக்க்க்கக்க்க்........

லைன்: டிரிங், டிரிங்...
நீரா: (மனதில்)ஐயோ இது எந்த சாவு கிராக்கியோ? ஹலோ! நீரா ஸ்பீகிங்...
எக்ஸ் : ஏய் நீரா, தலைக்கு யூஸ் பண்ணு மீரா. கூந்தல் வளரும் ஜோரா..
நீரா: ஹலோ, கவிதை கேட்கறதுக்கு எல்லாம் டைம் இல்லை.. டீலிங்க ஆரம்பிங்க.. ஒபாமா வைட்டிங்...உங்க பேர் என்ன?
எக்ஸ்: ஏய், யாரைக் கேட்கிற பேரு? நான் தான் உலகம் அறிந்த டீ.ஆரு...
நீரா: டீ. ஆர் னா? ஹலோ..உங்க அடை மொழியக் கேட்கவா நான் இருக்கேன்? அஞ்சு நிமிஷம் வேஸ்ட் ஆயிருச்சே!
எக்ஸ்: சிம்பு தெரியுமா? சிம்பு..
நீரா: யார் சிம்பு? என்னடா இது வம்பு? (ஐயோ இந்த ஆள் கூட பேசி நமக்கும் அடை மொழி வந்துருச்சே) சார், மேட்டருக்கு வரலன்னா போனு கட்டு..பேசுங்க துட்டு...
எக்ஸ்: நான் ஒரு சானல் ஆரம்பிக்கிறேன் பாப்பா..அதுக்கு உன் சிபாரிசு வேணும் டீப்பா..
நீரா: என்ன சானல்? இந்த கரடி எல்லாம் காட்டுவாங்களே, டிஸ்கவரி மாதிரி எதாவதா?
எக்ஸ்: (மனதில்) இவ கரடின்னின்னு சொன்னது இயல்பா தானே? ஏய் இல்லை..இது புதிய உலகின் டீ.வி.. மாற்றத்திற்கான ஒரு சாவி.. எனக்கு மட்டும் இதை முடிச்சுக் கொடுத்தா
உலகையே மாற்றிக் காட்டறேன்..
நீரா: (மனதில்) மக்கள் சானலை மாத்தாம இருந்தா சரி..சரி அட்ரஸ் கொடுங்க.கொட்டேஷன் அனுப்பறேன்
எக்ஸ்: சரி..(மனதில்) அடிப்பாவி லஞ்சத்துக்கும் கொட்டேஷனா? சரி நம்ம டிவிக்கு என்ன பேர் வைக்கலாம்?


லைன்: டிரிங், டிரிங்...
நீரா: ஹலோ..
எக்ஸ்:ஆங், உனக்கு தினமும் வர்ற கால்ஸ் முன்னூறு , அதுல சக்சஸ் ஆறது நூத்தி ரெண்டு..அதுல உனக்கு வர்ற அமௌன்ட் அம்பது லட்சத்து நானூத்தி இருபத்தி மூணு..
நீரா: (தாழ்ந்த குரலில்) சார் நீங்க பீ.ஜே.பி யா?
இத ரகசியமா வச்சுக்கங்க.. கவர் எந்த அட்ரசுக்கு வேண்டும்னு மட்டும் சொல்லுங்க..
எக்ஸ்: ஆங், தே.தி.மு.கா தெரியுமா?
நீரா: என்னது தேங்கா மூக்குல போயிருச்சா? ராங் நம்பர்..
எக்ஸ்: ஏய்ய் நில்லு, துளசி வாசம் மார்னாலும் இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்..
நீரா: உஸ் அப்பா.. ஒரு மார்கமாத்தான் அலையறாங்கப்பா.
எக்ஸ்: அது என்னோட கட்சி
நீரா: எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு..அது ஏன் தமிழ்நாட்டுல எல்லா கட்சியும் 'கா' வுல முடியுது? மக்களை காக்கா புடிக்கராங்களே அதனாலயா?
எக்ஸ்:ஏய் கேளு, எனக்கு உடனடியா அம்பது பம்பரம் வேணும்...(அய்யய்யோ இன்னும் பம்பரத்துலையே இருக்கமே) நான் தமிழ் நாட்டுல அம்பது தொகுதிகள்ல ஜெயிக்கணும்..இல்லன்னா உன்னைக் கடத்தி விருத்தகிரி படத்த நைட்டு பூரா பார்க்க விட்டுடுவேன்..
நீரா: அம்பது தொகுதியா? ரொம்ப செலவாகுமே?
எக்ஸ்: ஏய், இந்தியாவுல மொத்த கருப்புப் பணம்...
நீரா: ஐயோ, மறுபடியுமா..உங்களுக்கு இலவசமாவே முடிச்சுத் தந்திடறேன் ..மொதல்ல போனை வைங்க..
எக்ஸ்: தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை இலவசம்..ஹலோ...ஹலோ...ஹெல்ல்லோ...
லைன்: கோயங்க்க்

நீரா: இந்த போனை எவன் தான் கண்டுபிடிச்சானோ?
பி. ஏ: க்ரகாம்பல் மேடம்
நீரா: ஹலோ, நான் இங்க என்ன குவிஸ்சா நடத்தறேன்?போங்க வெளியில நின்னு யாராவது சி.பீ.ஐ காரங்க வராங்களா பாருங்க...
போன்: டிரிங், டிரிங்
நீரா: ஹலோ
எக்ஸ்: கதவைத் திற...காற்று வரட்டும்
நீரா: (இப்பவே கண்ணைக் கட்டுதே,,) கதவைத் திறந்தா
காத்து வருதோ இல்லையோ ..சி.பீ.ஐ காரங்க வந்துருவாங்க..சீக்கிரம் சொல்லுங்க..என்ன முடிக்கணும்?
எக்ஸ்: (பேட்டை ரவுடி லெவலுக்கு பேசறாளே) சாந்தம், ஆனந்தம் மகளே நிம்மதி பெருகட்டும்..
நீரா: யார் நீங்க?
எக்ஸ்: அதைத் தேடித்தானே இந்த ஆன்மீகப் பயணம்! வா உள்ளே வா! உச்சம் காணலாம்..
நீரா: (என்னது உச்சா வருதா?ஐயோ இன்னிக்கு பூராம் மெண்டல் கேசாவே மாட்டுதே..ராசா எவ்வளவோ தேவலாம் சாமி) என்ன வேணும் உங்களுக்கு?
எக்ஸ்: ரஞ்சிதா.. (அய்யய்யோ ஒளறிட்டமோ?) மகளே புல்லர்கள் என் மீது போட்டுள்ள பொய் வழக்குகளை விடுவிக்க நீ உதவி செய்ய வேண்டும்..
நீரா: டீலிங் என்ன?
எக்ஸ்: டீலிங்னா உணர்ச்சி தானே?
நீரா: கருமம் ,கருமம் எவ்ளோ தருவீங்க?
எக்ஸ்: மனம் நிறைய மகிழ்ச்சி, ஆன்மா நிறைய ஆனந்தம் தருவேன் பெண்ணே, வா ஆயிரம் இதழ்த் தாமரையை விரிக்கலாம்
நீரா: சார், தாமரை எல்லாம் இருக்கட்டும், உங்க செக் புக்கை முதல்ல விரிங்க..
எக்ஸ்: மகளே, நான் குபேர யாகம் செய்விப்பேன்..உனக்கு பொருள் இன்னும் கொட்டும்..ஓம் க்ரீம் ஹைம்..
நீரா பி.எ. : மேடம், இந்தாங்க பஞ்சு, காதுல பாருங்க ரத்தம்...


நீரா: இன்னிக்கு இது தான் கடைசி கால்..போதும் டா சாமி,, கடவுளே நல்ல பார்டியா மாட்டனும்
போன்: டிரிங்,டிரிங்
நீரா: ஹலோ, யாரது?
எக்ஸ்: மேடம் நான் தான் சமுத்ரா
நீரா: அப்படின்னா?
எக்ஸ்: பதிவர்..
நீரா: பத்திரம் எழுதரவரா? (ஆஹா நல்ல பார்டிதான்)
எக்ஸ்: இல்லங்க..ப்ளாக் எழுதறவர்...
நீரா: ப்ளாக்-னா?
எக்ஸ்: (மனதில்) அட ஞான சூன்யமே! நம்ம மனசுல இருக்கறதெல்லாம் கொட்டற இடம் மேடம்..
நீரா: குப்பைத் தொட்டி மாதிரியா?
எக்ஸ்: (மவளே இரு உன்னை சுப்பிரமணியம் சாமியிடம் கோலி மூட்டி விடுறேன்) இல்லை...இது வேற விஷயம் உங்களுக்குப் புரியாது...
நீரா: என்ன எழவோ, சரி ஸ்டார்ட் டீலிங்...
எக்ஸ்: என் ப்ளாக்-ல ஆயிரம் follower இருக்கற மாதிரி ஏற்பாடு பண்ணித் தரனும் ...
நீரா: சரி..ஒரு follower க்கு ஆயிரம் கொடுத்துருங்க...பாவம் குரலைப் பாத்தா பாவப்பட்டவர் போலத் தெரியுது..இல்லன்னா என் ஸ்டார்டிங் டீலே ஒரு கோடி தான்
எக்ஸ்: கொஞ்சம் குறைச்சுக்குங்க மேடம்...
நீரா: வாட் நான் சென்ஸ், வெங்காய
ம் என்ன விலை தெரியுமா இன்னிக்கு? போன் பில் கட்டவே எனக்கு காசு போத மாட்டேங்குது..
எக்ஸ்: இல்லைன்னா என் ப்ளாக்-ல உங்களைப் பத்தி எழுதிருவேன்...
நீரா: ஹா ஹா ஹா... எழுது ரூமர் எல்லாம் எனக்கு பூமர் சாப்பிடற மாதிரி...
போன் கட் ஆகி விடுகிறது...
சாமி, வேண்டாம் டா இந்தப் பொழப்பு...பீ.
. அந்த --ஆனந்தா ஆஸ்ரமத்துக்கு போன் போடுங்க...சிஷ்யையா போய் சேர்ந்துடறேன்...
பீ,ஏ. வேண்டாம் மேடம்..வாணலிக்கு பயந்து அடுப்புல போய் விழுந்துராதீங்க...


சமுத்ரா...


வெங்காயம்...


பழைய version
============

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார்
சுமந்திருப்பார் இச்சரக்கை- மங்காத
சீரகத்தைத்
தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
எரகத்துச் செட்டியாரே...


புதிய
version
===========

வெங்காயம் விலையுயர்ந்தால் வேதனைப்பட்டாவதென்ன
இங்கார்
பொறுத்திருப்பார் இவ்வரசை- தாங்காது
பீ.ஜே.பி. வந்தாலும் பெரிதாகப் பயனில்லை
பேஜாரு போ வாத்தியாரே!


சமுத்ரா

Sunday, December 26, 2010

இரண்டு கவிதைகள்..


நன்றி

என்னிடம் ஒரு செருப்பு இருந்தது...
அது என்னுடன்
எங்கெல்லாமோ வந்தது..
விமானப் பயணங்களில்,
ரயில் பயணங்களில்,
தூரத்து நகரங்களுக்கு,
கடைத் தெருவுக்கு,
வாக்கிங் செல்கையில்,
கல்யாணங்களுக்கு,
சாவு வீடுகளுக்கு,
அலுவலகத்திற்கு,
பகலின் வெய்யிலில்
இரவின் குளிரில்
காடுகளில் மலைகளில் என்று எங்கெல்லாமோ..
ஒரு நாள் ஓர் ஆள் அரவமற்ற தெருவில்
நடந்து கொண்டிருந்த போது அது அறுந்து விட்டது
அப்படியே ஒரு ஓரமாக அதை
வீசி விட்டு
திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்!

மறுபிறப்பு

எங்கள் வீட்டில் ஒரு
குழந்தை பிறந்தது..
அதற்குப் பெயர் வைத்த கையோடு
எங்கள் பெயர்களும் மாற்றப்பட்டன,,,
ஊசித் தாத்தா
நானிப் பாட்டி
குட்டி அண்ணா
கண்ணாடி மாமா
பஞ்சு அத்தை
சைக்கிள் பெரியப்பா என்று..
ஒருவேளை
குழந்தை ஒன்று
பிறந்ததும்
நாங்களும் மறுபடியும் பிறந்திருப்போம் போலும்..


சமுத்ரா


Wednesday, December 22, 2010

டாக்டர். விஜய் SSLC...

இது எனக்கு இ-மெயிலில் வந்தது...பின் விளைவுகளுக்கு இந்த ப்ளாக் பொறுப்பாகாது...:)

டாக்டர். விஜய் SSLC ஒரு பேக்கரிக்கு செல்கிறார்...
விஜய் SSLC : டேய், யார ஏமாத்தப் பாக்கற, எங்க இந்த மினரல் வாட்டருக்கு free அயிட்டம்?
கடைக்காரர்: மினரல் வாட்டருக்கெல்லாம் free கிடையாதுங்க...
விஜய்: இதுல போட்டுருக்கே...
கடை: எங்க காட்டுங்க..
(விஜய் SSLC பாட்டிலின் மீது "100 % பாக்டீரியா ப்ரீ " என்று எழுதியிருப்பதைக் காட்டுகிறார்.


ஆபீசர்: நீங்க எங்க பொறந்தீங்க?
விஜய்: தமிழ் நாட்டுல
ஆபீசர்: எந்த பார்ட்?
விஜய்: என்ன முட்டாள் தனமான கேள்வி சார்? என் முழு பாடியும் தமிழ் நாட்டுல தான் பொறந்துது...

அஜித்: செஸ் விளையாடலாமா?
விஜய்: கொஞ்சம் இருங்க. ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு வர்றேன் .கிரௌண்டுல வெயிட் பண்ணுங்க...

பேட்டி எடுப்பவர்: உங்க 'காவலன்' படம் எப்ப ரிலீஸ்?
விஜய்: அத மட்டும் சொல்ல மாட்டேன்
பேட்டி :ஏன்?
விஜய்: சாகற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமா போய்டும்


இன்டர்வியூ செய்பவர்: உங்களுக்கு MS OFFICE தெரியுமா?
விஜய்: இல்லை சார், அட்ரஸ் குடுங்க...போய் அந்த ஆபீஸ் எங்கே இருந்தாலும் பாத்துட்டு வந்துர்றேன்...

இன்டர்வியூ செய்பவர்: உங்களுக்குத் தெரிந்த மைக்ரோசாப்ட் products ஒண்ணு சொல்லுங்க பாப்போம்..
சூர்யா: MS Word
விக்ரம்: MS excel
அஜித்: MS பவர் பாயிண்ட்
விஜய்: MS தோனி

நியூஸ் பேப்பர்: இந்திய வீராங்கனை நீளம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கத்தை கைவிட்டார்..
விஜய்: லூசு, லூசு , தாண்டரப்ப அதைக் கழட்டி வைச்சுருந்தா தொலஞ்சு இருக்காதுல்ல?


விஜய்: என்ன டிராபிக் ரோட்ல?
ஒருவர்: பிரைம் மினிஸ்டர் வர்ராருங்க
விஜய்: கொய்யாலே, அதுக்கு நாம ஏன் வெயிட் பண்ணனும், அவர் என்ன பெரிய கலெக்டரா?

விஜய் சென்னை சுப்பர் கிங்க்ஸ் உடன்:

விஜய்: நான் தமிழ் நாட்ல பெரிய ஆக்டர்
ரெய்னா: ஜோக், அடுச்சது போதும் போய் டீ சொல்லு..
விஜய்: நிஜமாலுமே நான் பெரிய ஹீரோ தான்
மார்கல்: எனக்கு சுகர் கம்மியா
விஜய்: டேய், மெய்யாலுமே நான் ஹீரோ தான் டா...
தோனி: தம்பி, டீ இன்னும் வரல....

அப்பா: டாக்டர், என் பையன் பிழைப்பானா?
டாக்டர்: பாய்சன் சாப்பிட்டு இருந்தாலும் கூட காப்பாத்தி இருக்கலாம். பையன் விஜய் படத்த பாத்து தொலச்சுட்டானே ..உயிர் போயிருச்சு
அப்பா: இன்டர்வல்ல கொண்டு வந்திருந்தா பொழச்சு இருப்பானா?
டாக்டர்: சான்சே இல்லை, டைட்டில் சாங்க்லையே உயிர் போயிருச்சு!


விஜய் SSLC ஒரு காலேஜ் ஆரம்பித்தார். அதற்கு என்ன பெயர் வைத்தார் ?
Dr. VIJAY MEDICAL COLLEGE OF ENGINEERING....சமுத்ரா

உங்களுக்கு ஒரு Memory டெஸ்ட்!

மனித மூளை என்பது பெரிய ஆச்சரியம் தான். ஒரு செய்யுளை பத்து முறை திரும்பத் திரும்ப சொன்னால் அப்படியே அது மனதில் பதிந்து விடுகிறது இல்லையா ?. உலகில் மிக அபாரமான ஞாபக சக்தி வாய்ந்த மனிதர்களெல்லாம் இருக்கிறார்கள். இதெல்லாம் நாம் எப்படி மூளையைப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. துரதிர்ஷ்ட வசமாக நாம் மூளையை "இவன் தானே நம்மைப் பார்த்து அன்னிக்கு நீ எல்லாம் ஆம்பளையா? ன்னு கேட்டவன்" என்று ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.சரியாகப் பயன்படுத்தினால் உலகில் உள்ள புத்தகங்களை எல்லாம் மூளையில் சேமித்து வைக்க முடியுமாம். இதோ இந்தக் கதையைப் படியுங்கள்.

அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் படையெடுக்கும் முன் தன் குரு அரிஸ்டாடிலைப் பார்த்து "உங்களுக்கு இந்தியாவில் இருந்து என்ன வேண்டும்?" என்று கேட்டானாம் ...அதற்கு அவர் "இந்தியாவில் இருந்து இந்துக்களின் நான்கு வேதங்களையும் கொண்டு வா..ரொம்ப நாளாக அவற்றைப் படித்துப் பார்க்க ஆசை" என்றாராம் . ஆனால் இந்தியாவில் வேதங்களின் "hard copy " யைப் பார்ப்பது அலெக்சாண்டருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பிராமணரிடம் அவை இருப்பதாக் கேள்விப்பட்டு அங்கே சென்று "பார், எனக்கு உனது நாலு வேதங்களின் ஓலைச் சுவடிகளும் வேண்டும்,இல்லை என்றால் ஒரே வீச்சில் உங்கள் எல்லாரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டுகிறான் . அதற்கு அவர் "நான் தருகிறேன்..ஆனால் இப்போது சூரிய அஸ்தமன நேரம்.இப்போது தருவதற்கு இல்லை. காலையில் வாருங்கள்" என்கிறார் .அவன் சென்றதும் தனது நான்கு மகன்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு வேதத்தைக் கொடுத்து "விடிவதற்குள் அப்படியே மனப்பாடம் செய்து விடுங்கள்" என்றாராம். அந்த நான்கு மகன்களும் ஆளுக்கு ஒன்றாக வேதங்களை மனப்பாடம் செய்து விட்டார்களாம். காலையில்
அலெக்சாண்டர் வருவதற்குள் அந்த முனிவர் அவற்றை நெருப்பில் போட்டு எரித்து விட்டாராம்.

அந்தக் காலத்தில் எல்லாம் மனிதர்களின் ஞாபக சக்தி மிகவும் அபாரமாக இருந்திருக்கிறது. நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் முழுவதையும் அப்படியே ஒப்புவிப்பவர்கள் இருக்கிறார்கள். த்யாகராஜரின் ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடமாக வைத்திருந்த பாடகர்கள் இருந்திருக்கிறார்கள். டைரி எதுவும் எழுதாமல் பால்காரனுக்கு இவ்வளவு பாக்கி, வண்ணானுக்கு இவ்வளவு பாக்கி, காய்கறிக்காரனுக்கு இவ்வளவு என்று சொன்ன 'மாமிகள்' இருந்தார்கள். ஆனால் இன்றைய நவீன உலகில் மனிதர்களின் ஞாபக சக்தி மிகவும் மழுங்கி விட்டது போலத் தோன்றுகிறது . (கம்ப்யூடர் எல்லாம் வந்த பிற்பாடு) பள்ளிகளில் ஒரு நாலு வரி மனப்பாடச் செய்யுள் வைத்தாலே குழந்தைகள் முகம் சுளிக்கிறார்கள். ஒரு நாலு அயிட்டங்களை சொல்லி கடைக்குப் போய் வாங்கி வா என்றால் கண்டிப்பாக ஒன்றை (அதுவும் முக்கியமானதை) மறந்து விடுகிறார்கள். இன்று எத்தனை பேருக்கு தங்கள் மொபைல் நம்பரை விட்டு ஒரு மூணு நாலு மொபைல் நம்பராவது மனப்பாடம் இருக்கிறது? மொபைல் தொலைந்து விட்டால் inform செய்ய குறைந்த பட்சம் மனைவியின் நம்பரையாவது மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும். நாலு நம்பர் கொண்ட ஏ .டி.எம் பின்னைக் கூட மொபைலில் 'பதிவு' பண்ணி வைக்கிறார்கள்.

எனவே கூடுமானவரை உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள். சில suggestions :

* பிரபலமாகாத திரைப்படப் பாடல்களைத் (.தா: எந்திரன் பாடல்கள் ) திரும்பத் திரும்பக் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்யவும் .கேட்கும் போது இயர் போன் மாட்டிக் கொள்ளவும். வார்த்தைகள் புரியவில்லை என்றால் பழைய பாடல்களுக்கு மாறவும்.

*உங்கள் மனைவி/ கணவன் தூரத்து சொந்தங்களின் பெயர்களை எல்லாம் கேட்டு அப்படியே மனப்பாடம் செய்து கொண்டு, சந்தர்ப்பம் வரும் போது "இது உன்னோட ஒன்னு விட்ட சித்தப்பாவோட wife -ஓட அண்ணன் சம்சாரத்தோட அக்கா பையன் தானே? என்று கேட்டு கைத்தட்டல் வாங்கிக் கொள்ளவும்

* உங்கள் பிள்ளைகளின் தமிழ் புக்கை வாங்கி அதில் உள்ள திருக்குறள் கம்ப ராமாயணம் எல்லாவற்றையும் சிவகுமார் லெவலுக்கு மக்-அப் செய்யவும்

*பேருந்தில் பயணிக்கும் போது வெளியே தெரியும் "இசக்கி மளிகை" "மாசாணியம்மன் கவரிங்" "திருமலை ட்ரேடர்ஸ்" போன்ற போர்டுகளை மனதில் வாங்கிக் கொண்டு திரும்பச் சொல்வதற்கு முயற்சிக்கவும்

*இல்லத்தரசிகள் காலை 'மகள்' தொடங்கி இரவு 'இதயம்' வரை உள்ள சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒரு பெரிய பேப்பரில் ஒன்று விடாமல் எழுதிப்பார்க்கவும். மேலும் திருமதி.செல்வத்தில் வாசுவின் மாமனார் பெயர் என்ன? என்பது போன்ற self -test செய்து கொள்ளவும்.

*ஆபீசில் பொழுது போகாமல் உட்கார்ந்திருந்தால் உங்களுக்கு வரும் மெயில்களை ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து எழுதிப் பார்க்கவும்


சரி இப்போது உங்கள் மெமரிக்கு நிஜமாகவே ஒரு டெஸ்ட். நாம் காலையிலிருந்து இரவு வரை தொலைக்காட்சி விளம்பரங்களால் சூழப்பட்டுள்ளோம். விளம்பரம் வந்தாலே சானலை மாற்றி விடுகிறோம். ஆனால் விளம்பரங்களிலும் நம் மெமரிக்கான ஒரு FORMULA ஒளிந்து கொண்டிருக்கிறது. எங்கே கீழே உள்ள கேள்விகளுக்கு answer சொல்லுங்கள் பார்க்கலாம்.
பதினைந்து கேள்விகள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஸ்கோர் ஒன்று.

உங்கள் மொத்த ஸ்கோர்:

0 -5 : மெமரியில் நீங்க ரொம்ப வீக். வெண்டைக்காய் நிறைய சாப்பிடுங்கள். மேலும் நான் சொன்ன suggestions எல்லாம் கடைபிடியுங்கள்

5 -10 : நீங்கள் மெமரியில் ஆவரேஜ். கொஞ்சம் improve பண்ணிக்கங்க.

10 -15 : excellent . நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். (
வெண்டைக்காய் உட்பட. முடிந்தால் ஒரே இரவில் பகவத் கீதையை மனப்பாடம் செய்ய முயற்சிக்கவும்)

டெஸ்ட் இது தான். கீழே உள்ள டையலாக்குகள் எந்த விளம்பரங்களில் வருகின்றன என்று சொன்னால் போதும்: ஸ்டார்ட் 1 2 3 ...

1 . ஒரு கொசு இருந்தாலும் ஆபத்து தான்...

2 . CC மட்டும் போதுமா? PTW ...power to weight ratio ...

3 . முடி மாசத்துக்கு ஒரு முறை இயற்கையாகவே வளரும்

4 . ஜீரோ % Purchase பிளான்... பூம்பா

5 அர்ஜுன்......ஒரு நிமிஷம்...

6 . எனக்கு மேங்கோ வேணும்... எனக்கும் எனக்கும்...

7 . அவர் இப்ப சமோசா ஆர்டர் பண்ணுவார்...எனக்கு தான் உங்க இதயத்தைப் பத்தி நல்லாத் தெரியும். ...

8 .ஒரு குழந்தைக்கு இரவுன்னா இன்னொன்னுக்கு பகல்..

9 . உங்கள் உலகில் நீங்கள் உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களிடம் இருந்து ஒரு போதும் பிரிவதில்லை...

10 .ஆயிஷா, அப்படின்னா அவங்க கண்டிப்பா...ச்சே

11 . இது என்னோட family ...ஐயோ மழை... பூர்வி.........

12 . இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு யார் கூட பேசிட்டு இருந்தீங்க?

13 . உங்கள் fairness கிரீம் பாதி வேலையைத் தான் செய்கிறதா?

14 . சூரியனைச் சுற்றி சுத்தி வரும் பூமி...

15 . மூன மூனால பெருக்கினா எவ்வளவு?

உங்கள் ஸ்கோரை மட்டும் பின்னூட்டத்தில் சொல்லவும். விடைகளை சொன்னால் திரில் போய் விடும்..தயவு செய்து உங்க கமெண்ட சொல்லிட்டுப் போங்க ப்ளீஸ்////////


சமுத்ரா

Tuesday, December 21, 2010

அணு அண்டம் அறிவியல்-9

போன பதிவில் நான் ஒரு பெயரைத் தவறாகக் குறிப்பிட்டு இருந்தேன். (யாருமே சுட்டிக் காட்டாதது கொஞ்சம் வருத்தம் தான்.படித்தால் தானே சுட்டிக் காட்ட ?:( ). அணுவை எட்டிப் பார்க்க ஆல்பா துகள்களை அனுப்பியது ஜே.ஜே.தாம்சன் இல்லை..அவர் பெயர் ஹென்றி ரூதர்போர்ட். SFI . :)

எல்லாப் பொருட்களும் அணு என்ற செங்கற்களால் கட்டப்பட்டது என்று தெரிந்திருந்தாலும் அணுவைப் பற்றி எந்த முன்னேற்றமும் பதினேழாம் நூற்றாண்டு வரை இயற்பியல் உலகில் ஏற்படவில்லை. 1789ஆம் ஆண்டில் லாவாய்சியர் என்பவர் பிரபஞ்சத்தில் 23 தனிமங்கள் இருப்பதாக ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்தார். 'தனிமம்' (element) என்றால் அந்தப் பொருளின் உள்ளே ஒரே விதமான அணுக்கள் மட்டுமே இருக்கும். மேலும் அவை இயற்கையிலேயே கிடைக்கும். உதாரணமாக ஹைட்ரஜன் என்பது அந்த லிஸ்டில் முதலில் வரும் ஒரு லேசான 'தனிமம்' ..அதற்குள் ஒரே மாதிரியான ஹைட்ரஜன் அணுக்கள் மட்டுமே இருக்கும். ஆக்சிஜன் என்பது ஹைட்ரஜனை விட கொஞ்சம் 'கனமான' ஒரு தனிமம். அதிலும் ஒரே மாதிரியான ஆக்சிஜன் அணுக்கள் மட்டுமே இருக்கும். இன்றைக்கு நமக்குத் தெரிந்து 92 தனிமங்கள் இயற்கையில் கிடைக்கின்றன. இரண்டு தனிமங்களை நம்மால் 'மிக்ஸ்' செய்ய முடியும். உதாரணமாக ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் ஒரு குறிப்பிட்ட முறைப்படி ஒன்று சேர்ந்தால் நீர் கிடைக்கும். இதை 'Compound ' என்பார்கள். (இரண்டு வாயுக்கள் கலந்தால் தண்ணீர் வருகிறது பாருங்கள் ) இப்படி வெவ்வேறு தனிமங்களை இணைத்து நிறைய நிறைய வேதியியல் பொருட்களைப் பெற முடியும். ஆனால் ஒரு தனிமத்தில் இருந்து இன்னொரு தனிமத்தைப் பெறுவது கஷ்டம் உதாரணமாக பாதரசமும் தங்கமும் அருகருகே இருக்கும் இரண்டு 'தனிமங்கள்' .. இவை யுரேனியம் போல இயற்கையாக சிதையாத நிலையான தனிமங்கள். எனவே என்னதான் தலைகீழாக நின்றாலும் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியாது. ரசவாதம் ரசவாதம் என்று கேள்விப் பட்டு இருப்பீர்களே? அது ஏதோ சமையல் சமாச்சாரம் அல்ல. பாதரசத்தை தங்கமாக மாற்றுவது.

இவை இரண்டுக்கும் ஒரே ஒரு ப்ரோடான் தான் வித்தியாசம் என்பதை எப்படியோ தெரிந்து கொண்ட நம் சித்தர்கள் "எப்படி அந்த பாதரசத்தில் உள்ள அந்த தேவை இல்லாத ப்ரோடானை வெளியே தள்ளி அந்த தனிமத்தைத் தங்கமாக மாற்றுவது?" என்று மெனக்கெட்டார்கள். அறிவியல் தெரிந்த ஒருவரைக் கேட்டால் இது அசாத்தியமான ஒன்று. அணுகுண்டு வெடிக்கச் செய்வதைக் காட்டிலும் கஷ்டமான வேலை. ஏனென்றால் பாதரசம் இயற்கையில் சிதையும் தனிமம் அல்ல. அப்படி இயற்கையில் சிதைந்தால் அதன் அணுக்கரு ஒரு ப்ரோடானை வெளியே தள்ளி கொஞ்சம் கனம் குறைந்த பக்கத்தில் உள்ள தனிமமான தங்கமாக மாறலாம். ஆனால் பாதரசம் நிலைத் தன்மையுள்ள அணு. அதன் துகள்கள் அணுக்கருவின் உள்ளே ஈர்ப்பு விசையை விட லட்சம் மடங்கு வலிமையுள்ள ஒரு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. (nuclear strong force )பார்க்க பிரபஞ்சத்தின் ஆதார விசைகள். சும்மா பாதரசத்தை ஒரு குப்பியில் போட்டு அடியில் நெருப்பு பற்ற வைத்து சில மூலிகைகளை சேர்த்து சில மந்திரங்களை முணுமுணுத்தால் அந்த விசை ஒரு ப்ரோடானை விட்டுக் கொடுக்குமா என்ன? மேலும் ஒரு நூறு கிராம் பாதரசத்தில் கோடி கோடி கோடி அணுக்கள் இருக்கும்.அவை ஒவ்வொன்றையும் தங்கத்தின் அணுக்களாக மாற்றுவது கொஞ்சம் டூ மச்.

ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களும் வேறுவேறானவை. ஒன்றை விட ஒன்று கனமானவை என்று தெரிந்தது. (சில தனிமங்கள் வாயுவாகவும் சில நீராகவும் சில திடப் பொருள்களாகவும் இருப்பதால்) அணு மேலும் பிளக்கப்படக் கூடியதாக இல்லாமல் இருந்தால் இது சாத்தியம் இல்லை.எனவே அணுவிற்குள் உள்ள ஏதோ ஒன்று தான் ஓர் அணுவை இன்னொன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் ஒன்று இயற்பியல் ஆசாமிகள் ஊகித்தார்கள். அணுவிற்குள் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்தது 1896 இல் ஹென்றி பேக்கரால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட 'கதிரியக்கம்' ..யுரேனியம் போன்ற தனிமங்கள் ஏனோ 'Be yourself ' என்பதை மறந்து விட்டு சில லேசான தனிமங்களாக மாறின. வேறு விதமாகச் சொன்னால் ஏதோ ஒன்றை அவை இழந்தன. அந்தத் தனிமங்களில் இருந்து வெளிப்பட்ட கதிரியக்கம் அபாயகரமாக இருந்தது. ஆனால் அணுவிற்குள் என்ன தான் நடக்கிறது, என்ன தான் இருக்கிறது என்று அறிய எந்த 'க்ளூ' யும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அது ரொம்ப ரொம்ப சிறியது. (மைக்ராஸ்கோப்பில் பார்க்கலாம் என்று சின்னப் புள்ளைத் தனமாக யாராவது இதுவரை நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளவும்)

ஹென்றி ரூதேர்போர்ட்டிற்கு ஒரு நல்ல 'ஐடியா' தோன்றியது. அணு வெளித்தள்ளும் அந்தத் துகளையே திருப்பி அதற்குள் அனுப்பினால் என்ன? என்பது தான் அது.

அணுவைத் துளைத்து உள்ளே என்ன தான் இருக்கிறது என்று அறிவதற்கு ரூதர்போர்ட் அது வெளியிடும் 'ஆல்பா' துகள்களையே அனுப்பினார் . 1909 இல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு இயற்பியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ரூதேர்போர்ட்டின் வழிகாட்டுதலின் கீழ் Hans Geiger மற்றும் Ernest Marsden என்பவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
சும்மா ஒரு துகளையெல்லாம் அனுப்பினால் பத்தாது. அது ஒரு பள்ளத்தாக்கில் போடப்பட்ட கடுகு போல அது காணாமால் போய் விட்டால்? லட்சக்கணக்கான ஒற்றர்களை உள்ளே அனுப்ப வேண்டும். சரி இந்த ஆல்பா ஒற்றர்களின் வேகம் என்ன தெரியுமா? கொஞ்ச நஞ்சம் அல்ல. வினாடிக்கு 25 ,000 கிலோமீட்டர். இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்து வைத்திருக்கும் ஜெட் விமானகளை விட லட்சம் மடங்கு வேகம். எனவே இவற்றை உள்ளே அனுப்பினால் ஏதாவது நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று ரூதர்போர்ட் நம்பினார். அவரது ப்ளான் என்ன என்றால் நிறைய ஆல்பா துகள்களை நேர்கோட்டில் அணுவின் மீது அனுப்ப வேண்டியது. அணுவிற்குள் ஏதாவது இருந்தால் கண்டிப்பாக அவை இந்த துகள்களைத் தடுக்கவோ இல்லை , விலக்கி விடவோ செய்யும்.

இதற்கு முன்னரே ஜே.ஜே.தாம்சன் என்பவர் எலக்ட்ரான்களை கண்டுபிடித்திருந்தார். (எப்படி கண்டுபிடித்தார் என்பதை பிறகு பார்க்கலாம்) அவை தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அணுவினும்-சிறிய-துகள்கள். (subatomic particles ) அவை அணுவை விட 2000 மடங்கு சிறியவை என்றும் மின்சாரம் பாய்வதற்கு இவை தான் காரணம் என்றும் ஒருவாறு அவர் ஊகித்திருந்தார். எலக்ட்ரான்கள் எதிர் மின் தன்மை (negagive charge ) உள்ளவை. 'எதிர் மின் தன்மை' என்றால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. இது அடிப்படைத் துகள்களுக்கு உள்ள ஒரு பண்பு, அவ்வளவு தான். இவை அணுவோடு மின் காந்த விசைகளால் சாதாரணமாக பிணைக்கப்பட்டிருக்கும் என்றும் போதுமான ஆற்றல் தந்தால் அணுவின் கட்டுப்பாட்டை விட்டு மின்சாரமாக ஓடும் என்றும் தாம்சன் ஊகித்திருந்தார். ஆனால் இந்த எலக்ட்ரான்கள் அணுவோடு எப்படிப் பிணைக்கப்பட்டிருந்தன என்று தெரியவில்லை. ஒரு குத்து மதிப்பாக பூசணிக்காய்க்குள் விதைகள் வைக்கப்பட்டிருக்குமே அது மாதிரி அணுவிற்குள் எலக்ட்ரான்கள் பொதிந்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறினார். இது "plum pudding model " என்று அழைக்கப்பட்டது. பார்க்க படம்.


நம் ஹீரோ ரூதர்போர்ட் சிறிய அளவு யுரேனியத்தை எடுத்துக் கொண்டார். அதிலிருந்து தான் ஆல்பா துகள்கள் சதா வெளிவந்து கொண்டிருக்குமே? அவற்றை ஒரு கந்தகத் திரையில் ஒரு சிறிய துளை போடுவதன் மூலம் வடிகட்டி நேர்க்கோட்டில் விட்டார். அந்தப் பாதையில் தங்கத்தின் மிக மிக மெல்லிய தகடை (foil ) வைத்தார். அதைச் சுற்றி ஜின்க் சல்பைட் சீட்டை வைத்து அது ஆல்பா துகள்களால் தாக்கப்படும் போது ஒளிரும் படி செய்தார். ஆய்வு முடிவில் அவர்கள் என்ன பார்த்தார்கள் என்றால் அனுப்பிய ஆயிரக்கணக்கான ஆல்பா துகள்களில் 99 % க்கும் அதிகமான துகள்கள் சமர்த்தாக பயணித்து தங்கத் தகட்டை துளைத்துக் கொண்டு சென்று ஜின்க் சல்பைட் சீட்டை ஒளிரச் செய்தன. அனுப்பிய எட்டாயிரம் ஒற்றர்களுக்கு ஒரே ஒரு ஒற்றன் மட்டும் (ஆச்சரியமாக) எஜமான விசுவாசத்துடன் ரூதர்போர்டை நோக்கித் திரும்பி வந்தான். அதாவது அனுப்பிய துகள்களில் 99 % க்கும் அதிகமான துகள்கள் எந்த தடையையும் சந்திக்காமல் மன்மதன் அம்பு சாரி ராமன் அம்பு மாதிரி பயணித்து அணுவினுள்ளே பயணிக்கின்றன என்றால் கண்டிப்பாக அணுவில் 99 .9999 % வெற்றிடமாக இருக்கவேண்டும் என்றும் ஒரே ஒரு துகள் மட்டும் விலக்கப்பட்டு திரும்புவதால் அணுவின் உள்ளே ஒரு குட்டியூண்டு இடத்தில் மட்டும் ஏதோ சமாச்சாரம் இருக்க வேண்டும் என்றும் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். எஸ், இயற்பியலின் பாதையில் இன்னொமொரு மைல் கல்...அணுக்கரு கண்டுபிடக்கப்பட்டது. (ஏன் துகள்கள் U turn அடிக்கின்றன என்றால் ஆல்பா துகள்கள் நேர் மின் தன்மை கொண்டவை, உள்ளே அணுக்கருவிலும் நேர்மின் தன்மை இருப்பதால் இரண்டும் பயங்கர வேகத்தில் விலக்கப்பட்டு அதன் திசையையே 180 டிகிரிக்கு மாற்றிவிடும் அளவு விளைவு உண்டாகிறது)

இந்த கண்டுபிடிப்பு தாம்சனின் பூசணிக்காய் மாடலை தெருவில் போட்டு உடைத்தது. அதாவது எலக்ட்ரான்கள் உள்ளே பொதிந்திருந்தால் அனுப்பிய ஆல்பா துகள்களில் பெரும்பாலானவை தம் பாதையில் இருந்து விலகிப் போயிருக்கும்.பார்க்க படம்


இந்த ஆராய்ச்சி முடிவுகளை முதலில் ரூதர்போர்டே நம்பவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவ்வளவு வேகத்தில் எறியப்படும் துகள்கள் எப்படி திரும்பி வரும்? "ஒரு கோலிக்குண்டை என் டிஸ்யூ பேப்பரின் மேல் எறிந்து அது திரும்பி வந்து என்னைத் தாக்குவது போல இருந்தது" என்று ஸ்டேட்மென்ட் விட்டார் அவர். ஒரு ரயில் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது போன வேகத்திலேயே U turn அடித்துத் திரும்புகிறது என்றால் அது ரயிலை விட பல மடங்கு கனமான ஏதோ ஒன்றின் மீது மோதியிருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி தான் இங்கேயும்.அத்தனை வேகத்தில் சென்று ஆல்பா துகள்கள் திரும்புகின்றன என்றால் உள்ளே கனமான ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.

ரூதர்போர்ட் அணுக்கருவை கண்டுபிடித்தார். மேலும் அணு என்பது பெரும்பாலும் வெற்றிடம் தான் என்றும் உள்ளே மிக மிகச் சிறிய மையத்தில் அணுவின் அத்தனை நிறையும் தாங்கி அணுக்கரு வீற்றிருக்கிறது என்றும் கண்டுபிடித்தார்.
சமுத்ரா

[As usual , படிப்பவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி தயவு செய்து உங்கள் பின்னூட்டங்களை அளிக்கவும். தவறு இருந்தாலும் சொல்லவும். ஏனென்றால் அறிவியல் விஷயங்களை எழுதுவது ரொம்ப கஷ்டம். கவிதை எழுதுவது போல் சுலபமானது அல்ல. ]

Monday, December 20, 2010

பிரஜா வாணி- 5 (பாண்டவர்கள் சாகும் குருட்சேத்திரம்)
பரணி
ஆயிரம் ஆனைகளைக் கொன்றானாம்
அந்தப் போர்களில்
செத்துப் போனவர்களைப் பற்றி
செய்தி ஒன்றும் இல்லை!

ஆம்
உங்கள் அரியணைகள்
பிணங்களால் தாங்கப்படுகின்றன!
எங்கள்
உடல்களை உளிகளாக்கி
வெற்றிச் சிலை வடிக்கிறீர்கள்
எங்கள்
வலிகளை
வரிகளாக்கி
வெற்றிச் சரித்திரம் எழுதுகிறீர்கள்!

ஜனங்களை
நடுவீதியில் நிறுத்தி சுடுவது தான்
ஜனநாயகமா?
மக்களை
மண்ணோடு மண்ணாக மூடுவது தான்
மக்களாட்சியா?
ஆகாயத்தில் இருந்து
அணுகுண்டை வீசி
அப்பாவிகளைக் கொல்வதன் பெயர்
ஆண்மையா?

நரகாசுரனை அழிக்க
வெடிகளை வெடிப்பது தான் வழக்கம்
இங்கோ
நரகாசுரன்களே
வெடிகுண்டு வீசுகிறார்கள்!

ஏனோ
போர் என்று வந்து விட்டால்
கடவுள்கள் கூட கருணை இழந்து விடுகிறார்கள்
ஆம்!
போர்களத்தில்
கர்ம யோகத்தின் பெயரால்
கொலைகளைச் செய்யலாம்!

இடிச் சத்தம் கேட்டால்
அர்ஜுனனைக் கூப்பிடலாம்-தினமும்
வெடிச் சத்தம் கேட்டால்?
அடை மழை பொழிந்தால்
அருகினில் ஒதுங்கலாம்..
ஆயுத மழை பொழிந்தால்?

புத்தன் ஏதோ
புலம்பிவிட்டுப் போகட்டும்
நாம்
பீரங்கிகளைக் கவனிப்போம்
காந்தி ஏதோ
கத்திக் கொண்டிருக்கட்டும்
நாம்
குண்டுகளை சேகரிப்போம்
இயேசு என்னவோ
இரைந்து கொண்டிருக்கட்டும்
நாம்
ஏ.கே, 47 களைக் கவனிப்போம்!
ஆம்
புத்த வாசனை
வீசிய மண்ணில் இன்று
ரத்த வாசனை
வீசுகிறது
காவிகள் ஆண்ட மண்ணை
பாவிகள் ஆளும் படி ஆனது!

எங்கள் குழந்தைகள்
பிணி தாக்கி இறந்திருந்தாலும்
பொறுத்துக் கொண்டிருப்போம்
பீரங்கி தாக்கி இறக்க
பாவம் என்ன செய்தோம்?

நீங்கள்
குண்டுகளால் விளையாட
எங்கள்
வாழ்க்கை தான் கிடைத்ததா?
நீங்கள்
தோட்டாக்களை
விதைக்க
எங்கள் வீட்டு
தோட்டங்கள் தான் கிடைத்ததா?

அன்று
அனுமன் எரித்த நெருப்பு
சில
அரக்கர்களை
எரிக்காமல் விட்டதா?இல்லை
ராமன் அம்புக்கு
இரண்டொரு
ராட்சசர்கள் தப்பி விட்டார்களா?

நீங்கள்
எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க
கடிதம் எழுதிக் கொண்டிருங்கள்!
எங்கள்
உயிர் எழுத்துகளோ
ஒவ்வொன்றாக அழிந்து கொண்டிருக்கின்றன...
எங்களைப் பற்றி
மேடைகளில்
உரக்கப் பேசிக் கொண்டேயிருங்கள்!
எங்கள் குரல் நாண்கள்
கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன..
எங்களைப் பற்றிய
அறிக்கையை நீங்கள்
சமர்ப்பிக்கும் முன்னரே
சித்திர குப்தன்
எங்களுக்கான
பக்கங்களைத் திறந்து விடுகிறான்...
எங்களுக்காய் நீங்கள்
கவிதை எழுதிக் கொண்டிருங்கள்!
எமனும்
போட்டியாக எங்களுக்கு
ஒப்பாரி ஒன்றை எழுதட்டும்

உங்கள்
உடன் பிறப்புகள்
உடல்கள் சிதறி இறக்கும் போது
நீங்கள்
குத்துப் பாடல்களில்
குதூகலிக்கிறீர்கள்!
உங்கள்
சகோதரர்கள்
ரத்தத்தில் குளித்தாலும்
உங்கள் தலைவர்களுக்கு
பாலாபிஷேம் செய்வீர்கள்!
இசைப் பிரியாக்கள்
இறந்து கொண்டிருக்க நீங்கள் - டிசம்பரின்
இசை விழாக்களில்
இன்புறுவீர்கள்!

இறைவா
நெருப்புக்கு மத்தியில்
எங்களை
ஏன் நடமாட வைத்தாய்?
கண்ணி வெடிகளுக்கு நடுவில்
எங்கள்
கன்னிகளைக்
கற்பிழக்க
வைத்தாய்!

அமைதிக்கான
நோபல் பரிசு வாங்கியவர்கள்
மறந்து கூட
எங்கள் பக்கம் திரும்புவதில்லை!
பயிர்கள் அழிந்ததைக்
கணக்கு பார்ப்பவர்கள்
உயிர்கள் அழிந்ததை
உணர்வதே இல்லை!

பகையைக் காணாமல்
எங்கள்
பொழுதுகள் சாய்வதே இல்லை
புகையைக் காணாமல்
எங்கள் இரவுகள்
விடிவதே இல்லை..

இங்கே பிறப்பதற்கு
எங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தன?
விடுமுறை நாட்களில்
எங்கள் குழந்தைகளை
வெளியே அழைத்துச் சென்று
பீரங்கிகளையா
வேடிக்கை காட்டுவது?
வண்டுகளைப் பார்த்து
வியந்திடும் வயதில்
குண்டுகளைப் பார்பதை எந்தக்
கொடுமையில் சேர்ப்பது?
செடிகளுக்கு மத்தியில்
சிரித்து விளையாடும் வயதில்
வெடிகளுக்கு மத்தியிலா
வெந்து சாவது?
பொறுப்பு இழந்த
புல்லர்கள் பலரால்
உறுப்பு இழந்தா அவர்கள்
உடல்கள் நோவது?

பூக்களின்
சமாதியிலா
உங்கள் சிம்மாசனங்களை சமைப்பது ?
பட்டாம் பூச்சிகளின் ரத்தத்திலா
உங்கள்
பட்டாபிஷேகங்கள் நிகழ்வது?
எங்கள்
செந்நீரைக் கொண்டா
உங்கள்
செங்கோலைக் கழுவுவது?
சிட்டுக் குருவிகளின் இறகுகளைப்
பிய்த்தா உங்களுக்கு
சாமரங்கள் செய்வது?
மைனாக்களைக் கொன்றா
உங்கள்
மஞ்சங்களை அமைப்பது?

நீர் சூழ்ந்தால்
உதவிக்கரம் நீட்ட
ஓடி வரும் நேசங்களே
போர் சூழ்ந்தால் எங்களைப்
புறக்கணிப்பது ஏன்?
நிலம் நடுங்கினால்
நேசக் கரம்
நீட்டுபவர்கள் எங்கள்
உளம் நடுங்கினால்
உதவாதது ஏன்?

எங்களுக்கு ஏன்
அன்னை தெரசாக்கள்
அந்நியமாய்ப் போனார்கள்?
கல்கி அவதாரம்
குதிரையில் ஏறும் முன்பே
ஏவு கணைகள்
முந்திக் கொண்டு எங்கள்
உயிரைக் குடிக்கின்றன!


இறுதியாக ஒன்று
இந்த பூமி
குருட்சேத்திரம் அல்ல!
குருதிச் சேத்திரம்!
இங்கே
பாண்டவர்கள்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்!

சமுத்ரா!

Sunday, December 19, 2010

அணு அண்டம் அறிவியல்-8


ஒரு கேள்வி..ஒரு அணுவினுள் என்ன இருக்கிறது ? "கடவுள்" என்றெல்லாம் பக்தி முத்திப் போய் பதில் சொல்லக் கூடாது ஆமாம்..ஒரு வகையில் பார்த்தால் இந்த பதிலும் சரியானது தான்...ஆனால் இன்னும் நாம் கடவுளை குவாண்டம் தியரியில் நுழைக்க வில்லை..

கீழே உள்ள வாசகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அதாவது ஒரு ஆன்மீகவாதி தன் பயணத்தை அறிவியல் பூர்வமாக தொடங்க வேண்டும்...எந்த விதமான ஊகங்களும் முன் நம்பிக்கைகளும் இன்றி...ஒரு விஞ்ஞானி தன் பயணத்தை ஆன்மீகப் பூர்வமாக முடிக்க வேண்டும்..அதாவது நிறைய நிறைய ஆராய்சிகள் செய்து கடைசியில் என்னால் எப்படி என்று மட்டுமே விளக்க முடியுமே தவிர 'ஏன்' என்பதற்கான பதிலைக் கூற முடியாது என்று ஒத்துக் கொள்ளும் நிலை..முதல் பகுதிக்கு உதாரணமாக ரமண மகரிஷியை சொல்லலாம்...அவர் முதலில் எந்த கடவுளையுமே நம்பவில்லை... மாலை போட்டுக் கொண்டு எந்த மலையையும் ஏறவில்லை..."நான் யார்' என்று அறிவியல் பூர்வமான ஒரு "self inquiry " யுடன் தன் பயணத்தை ஆரம்பித்த ஆன்மீகவாதி அவர்... இரண்டாவதற்கு உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்...அவர் தன் வாழ்நாளின் கடைசியில் தனக்குள்ளே பயணிக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டியதாக சொல்கிறார்கள்...இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் விஞ்ஞானியாக மட்டும் பிறக்க மாட்டேன் என்று அவர் கூறினாராம்...இதற்குக் காரணம்: என்னதான் உயிரைக் கொடுத்து ஒரு அபாரமான கொள்கையை நாம் அறிவியலில் கண்டுபிடித்தாலும் அது ஒரு "தற்காலிகமான" மற்றும் "தோராயமான" ஒன்றாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது...இது தான் சர்வ நிச்சயம் என்று சொல்லாமல் இந்த கொள்கை இந்த விளைவை ஓரளவு பொருத்தத்துடன் விளக்குகிறது என்று தான் கூற முடியும்..

இது மாதிரி விஷயங்களால் வெறுப்படைந்த ஒரு இயற்பியல் ஆசாமி ஜான் வீலர் என்பவர் கடுப்பாகி "ஏன்டா எல்லாரும் அடுச்சுக்கறீங்க, பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு எலக்ட்ரான் தான் இருக்கிறது..அது ஒன்று தான் ஒபாமாகவும் ஒசாமாவாகவும் மன்மோகனாகவும் காட்சி தருகிறது" (one electron universe theory * ) என்று கொஞ்சம் ஓவராகப் போய் ஒரு அறிக்கை விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...அந்த ஆசாமி எதனால் அப்படி சொன்னார் என்றால் முந்தாநாள் இரவு நாலு பெக் உள்ளே தள்ளியதாலோ அல்லது சங்கராச்சாரியாரின் அத்வைத வேதாந்த மஞ்சரியை விடிய விடிய புரட்டியதாலோ அல்ல...நிறைய ஆராய்ச்சி செய்து தான் சொன்னார்...இயற்பியலில் விஞ்ஞானிகள் கண்டு வியக்கும் ஒரு விஷயம் "indistinguishability of elementary particles " என்பது,,,அதாவது ஒரு கார் தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு நிறைய கார்கள் தயாரிக்கப்படுகின்றன என்று வைத்துக் கொள்வோம்.. என்ன தான் அவை வெளியே வரும் போது எந்திரன் ரோபோ மாதிரி பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றின் இடையே சின்னச் சின்ன வித்தியாசங்கள் ஆயிரம் இருக்கும்...(உ.தா) பெயிண்டின் அடர்த்தி, காரின் மொத்த எடை, என்று மைன்யூட் ஆக நிறைய வேறுபாடுகள் இருக்கும்... ஆனால் இயற்கை தயாரித்த இரண்டு "எலக்ட்ரான்" (அல்லது ப்ரோடான், ந்யூட்ரான் ) களுக்கு இடையில் பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு நாள் பூராவும் நோக்கினாலும் ஒரு இம்மி அளவு வித்தியாசம் கூட பார்க்க முடியாது... exactly identical ...மனிதர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க "GOD DOES NOT MAKE CARBON COPIES " (நீ உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடத் தேவை இல்லை) என்று ஒரு வாக்கியத்தை அடிக்கடி சொல்வார்கள்... ஆனால் மிகச் சிறிய உலகங்களில் எலக்ட்ரான் போன்ற துகள்களைப் படைக்கும் போது கடவுள் கொஞ்சம் பொறுமை இழந்து தன் assistant இடம் "பாருப்பா,ஒரு எலக்ட்ரான் ...ஒரு லட்சம் காப்பி டபுள் சைடு ஜெராக்ஸ் போட்டுடு" என்று கூறி விட்டது போலத் தான் தெரிகிறது...

சரி முதலில் கேட்ட கேள்விக்கு வருவோம்... இயற்பியல் முன்னோர்கள் என்னவெல்லாமோ செய்து பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்ற ஒரு குத்து மதிப்பான முடிவுக்கு வந்திருந்தார்கள்... ஆனால் ஒரு அணுவினுள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை...அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.. அணுவுக்குள் what yaa ? இன்டர்நெட்டில் பார்த்து விட்டு "ந்யூட்ரான்" "எலக்ட்ரான்" என்றெல்லாம் சீன் காட்ட வேண்டாம்... கம்ப்யூட்டர் எல்லாம் வருவதற்கு முன்னரே இந்த கேள்வி வந்து விட்டது... பிரச்சனை என்னவென்றால் அணுவிற்குள் என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டும் என்றால் அதை விட சிறிய ஏதேனும் ஒன்றை அணுவினுள் அனுப்ப வேண்டும்...ராணுவங்களில் மனித ஒற்றர்கள் புக முடியாத சந்து பொந்துகளில் நண்டு போன்ற வடிவம் உள்ள குட்டி ரோபோட்டுகளில் கேமரா வைத்து உள்ளே அனுப்புவார்களே, அது மாதிரி!

அதிர்ஷ்ட வசமாக அப்படி இயற்கையிலேயே ஒரு ஒற்றன் ரோபோட் உண்டு...காளிதாசனிடம் "எறும்பின் வாயை விட சிறியது எது?" என்று கேட்டதற்கு "அது உண்ணும் உணவு" என்று பதில் சொன்னானாம்... அது மாதிரி அணுவை விட சிறியது எது? சிம்பிள்...அது வெளியிடும் ஒரு துகள்...அதன் பெயர் "ஆல்பா துகள்" (ALPHA PARTICLE ) ..இதை எப்படி உருவாக்கினார்கள் என்றால் உருவாக்கவெல்லாம் வேண்டாம்... யுரேனியம் போன்ற தனிமங்கள் தம் அணுக்கருவின் கனம் தாங்காமல் கருவின் உள்ளே உள்ள சில துகள்களை "நீ ஒண்ணும் வேண்டாம் போ" என்று ஆக்ரோஷமாக மிக அதிக வேகத்துடன் இயற்கையாகவே வெளித் தள்ளுகின்றன... வல்லவனுக்கு புல்லும் ஆய்தம் என்பார்களே அது மாதிரி "ஜே.ஜே. தாம்சனுக்கு" (J .J .Thomson ) ஆல்பா துகள்களும் ஆயுதம்...இயற்கை தந்த இந்த ஒற்றனுக்கு அவர் நிறைய வேவு பார்க்கும் உத்திகளை சொல்லிக் கொடுத்து "சென்று வா மகனே வென்று வா" என்று வெற்றித் திலகம் இட்டு அது வரை இயற்பியல் உலகில் தகர்க்கப் படாமல் இருந்த அணுவின் ரகசியக் கோட்டைக்குள் அனுப்பி வைக்கிறார்...அந்த ஒற்றன் என்ன கண்டு பிடித்தான்? வெற்றியுடன் திரும்பினானா? கொஞ்சம் பொறுத்திருங்கள்...

(as usual : பிடித்திருந்தால் உங்கள் கமெண்டுகளை தவறாமல் இடுங்கள்..இது அடுத்த பாகம் எழுதுவதற்கு உற்சாகமாக இருக்கும்)

சமுத்ரா

Friday, December 17, 2010

அணு அண்டம் அறிவியல்-7

(நிறைய பேர் கேட்டுக் கொண்டதால் இந்த தொடரை மீண்டும் எழுதுகிறேன்..(ரெண்டு பேர் கூட நிறையப் பேர் தான் :D)
விக்கிபீடியா-வில் இருந்து 'yahoo answers ' வரைக்கும் 'refer ' செய்து இதை எழுதுகிறேன்...நீங்கள் ஒரு ரெண்டு வரி கமெண்ட் போட்டால் அது மிகுந்த உற்சாகமாக இருக்கும் ப்ளீஸ் ....)

ஒளி என்பது குட்டிக் குட்டித் துகள்களால் (போடான்கள்) ஆனது என்று ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தார் என்று பார்த்தோம்...ஆனால் யங் என்பவற்றின் 'இரட்டைப் பிளவு' (double slit experiment )
சோதனை ஒளி என்பது ஓர் அலை என்று காட்டியது...அது எப்படி ஒளி ஒரே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் 'துகள்' ஆகவும் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும் அலையாகவும் இருக்க முடியும்?

யங் ஒளி புகாத ஒரு திரையை எடுத்துக் கொண்டு அதில் மிக நெருக்கமாக இரண்டு துளைகளைப் போட்டார்...அவற்றின் மீது ஒரு ஒருமித்த ஒளியைப் (coherant) பாய்ச்சினார்... திரையின் அடுத்த பக்கத்தில் இன்னொரு வெள்ளைத் திரையை வைத்தார்...அந்த வெள்ளைத் திரையில் ஒளி கருப்பு வெள்ளைக் கோடுகளாக விழுந்தது...(பொருட்களின் விலையைப் படிக்க அவற்றின் மீது கோடுகள் போடப்பட்டிருக்குமே அது போல,இரண்டு அலைகளின் முகடுகள் ஒன்றோடு ஒன்று சேரும் இடங்களில் பிரகாசம்; இரண்டு ஒளி அலைகளில் ஒன்றின் முகடும் இன்னொன்றின் பள்ளமும் சேரும் இடங்களில் அவை கேன்சல் ஆகி இருட்டு ) ஒளியானது துகள்களாக இருந்தால் அந்தத் திரையில் இரண்டு கோடுகள் மட்டுமே விழுந்திருக்கும்...ஆனால் யங் திரையின் மீது நிறைய கருப்பு வெள்ளைக் கோடுகளைப் பார்த்தார்.. (பார்க்க படம்)

அதாவது ஒளி 'அலை' துளைகளின் விளிம்புகளில் 'விரிவடைந்து' இன்னும் பெரிதாகப் பரவுகிறது ஒளி துகள்களாக இருந்திருந்தால் துகள்கள் (நியூட்டன் விதிப்படி) நேர்கோட்டில் மட்டுமே போகும்..எனவே வெள்ளைத் திரையில் இரண்டே இரண்டு கோடுகள் மட்டுமே விழும்...

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த சோதனையில் ஒளிக்கு பதிலாக 'எலக்ட்ரான்' களைப் பயன்படுத்தினாலும் இதே முடிவுகள் தான் கிடைக்கின்றன..இன்னும் ஆச்சரியமாக ஒரே ஒரு எலெக்ட்ரானை பயன்படுத்தினாலும் வெள்ளைத் திரையில் பல கருப்பு வெள்ளைக் கோடுகள் கிடைக்கின்றன..அதாவது ஒரே எலெக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு துளைகளின் ஊடாகவும் பயணிக்கிறது...(!) இது எப்படி சாத்தியம்? ஒரு 'துகளின்' வரையறை என்னவென்றால் ஒரே துகள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது மற்றும் இரண்டு துகள்கள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பதுதான்...ஆனால் ஒரே எலெக்ட்ரான் எப்படி ஒரே சமயத்தில் இரண்டு துளைகள் வழியாகவும் பயணிக்க முடியும்? (கிருஷ்ணா பரமாத்மாவால் தான் ஒரே சமயத்தில் ருக்மிணியின் வீட்டிலும் சத்ய-பாமாவின் வீட்டிலும் இருக்க முடியும்..ஒரு வேலை எலக்ட்ரானும் பரமாத்மாவோ? )எலக்ட்ரான் ஓர் அலையாக இருந்தால் இது சாத்தியம்..அலை என்பதன் வரையறையே ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் பரவியிருப்பது என்பது தான்..எனவே எலக்ட்ரான் ஒரு அலையாக இருந்தால் மட்டுமே அது இரண்டு துளைகளின் வழியாகவும் பயணித்து மீண்டும் ஒரு துகளாக மாறி திரை மீது சென்று விழ முடியும்...

நாமெல்லாம் வீட்டில் குண்டு பல்பு எரிவதைப் பார்த்திருக்கிறோம்..எப்படி எரிகிறது என்று எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா? இல்லை...அதன் உள்ளே உள்ள
பிளமென்ட் மிக அதிக உருகுநிலை கொண்டது...அதாவது வெப்பத்தால் சாதாரணாமாக உருகி விடாது... பிளமென்ட் சூடாவதால் அந்த தனிமத்தில் (டங்க்ஸ்டன்) உள்ள எலக்ட்ரான்கள் அதிர்கின்றன...எலெக்ட்ரான்களின் அதிர்வு மின் காந்த அலைகளாக வெளியே வரும் என்று நாம் முன்பே பார்த்தோம்..அந்த மின் காந்த அலைகளின் அதிர்வெண் நாம் கண்ணால் காணக் கூடிய எல்லையில் இருப்பதால் ஒளியாக நம் கண்களுக்குத் தெரிகிறது...

சரி அவ்வளவு பெரிய அலைகள் அவ்வளவு சிறிய எலக்ட்ரான்களிடம் இருந்து எவ்வாறு வெளிப்பட முடியும்? (இதனால் தான் ஐன்ஸ்டீன் ஒளி குட்டி குட்டி போடான்களாக தான் வெளியே வரும் என்று சொன்னார்) சில சமயம் எலக்ட்ரான்கள் ஒளியை கிரகித்துக் கொண்டு கொஞ்ச நேரம் 'excited ' ஸ்டேட் இல் இருந்து கொண்டு 'ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா' என்று பாட்டெல்லாம் பாடுகின்றன..அப்படியானால் தக்கனூண்டு எலக்ட்ரான்களுக்குள் அவ்வளவு பெரிய அலை எவ்வாறு ஒளிந்து கொள்ள முடியும்?எனவே ஒளி கண்டிப்பாக குட்டிக் குட்டி துகள்களாகவே இருக்க வேண்டும்..

கொஞ்சம் முன்னாடி தான் ஒளி ஒரு 'அலை' என்று சொன்னீர்களே என்றால் அது அப்படி தான்...அதுவும் தான் இதுவும் தான்..அதுவாக சில சமயம் இதுவாக சில சமயம்..அதுவாகவும் இதுவாகவும் சில சமயம்...அதுவுமின்றி இதுவுமின்றி சில சமயம் (இப்பவே கண்ணக் கட்டுதே!)

இயற்பியலாளர்கள் ஒளி இரண்டுமாகவும் இருக்கிறது என்கிறார்கள்..வேடிக்கையாக திங்கள், புதன், மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நாங்கள் துகள் கொள்கையையும் செவ்வாய், வியாழன், மற்றும் சனிக்கிழமைகளில் அலைக் கொள்கையையும் மாணவர்களுக்கு சொல்லித் தருகிறோம் என்கிறார்கள்..ஆனால் 'common sense ' படி ஒரே வஸ்து எப்படி ஒரே சமயத்தில் 'கட்டுப்பட்ட' துகளாகவும் 'வியாபித்த' அலையாகவும் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? சரி தான்...சாதாரண உலகத்தில் அது சாத்தியமில்லை..கந்த சாமி கந்த சாமி தான் குப்பு சாமி குப்பு சாமி தான்...ஆனால் இந்த மாதிரியான குழப்பங்கள் குவாண்டம் உலகில் சாத்தியம்..உண்மையில் சொல்லப் போனால் ஒளி, எலெக்ட்ரான், போன்ற சமாச்சாரங்கள் அலையும் அல்ல துகளும் அல்ல..அவை நம்மால் வார்த்தைகளில் அடக்க முடியாத சில 'மர்ம' விஷயங்கள்..

சரி வாருங்கள் 'ஆலிஸ்' 'wonderland ' இல் பயணிப்பது போல நாமும் இந்த அற்புத குவாண்டம் உலகத்தில் கொஞ்சம் பயணிக்கலாம்.......

சமுத்ரா

Thursday, December 16, 2010

பிரஜா வாணி -4 (மரம் சுமக்கும் மலர்கள்)

நாங்கள்
புத்தகங்களைப்
புரட்டுவதற்கு முன்பே
வாழ்க்கை எங்களைப்
புரட்டிப் போட்டு விட்டது!

எங்கள்
தலையில் -
எழுத்து ஏற விடாமல்
தடங்கல் செய்வது
எங்கள் தலை எழுத்தா?
இல்லை வறுமை என்ற
அந்த மூன்றெழுத்தா?அகரம் அறிமுகமாகி
அதிக நாள் ஆகுமுன்பே
தகரம் அறிமுகமானது -எங்கள்
தலை விதியா?
வாய்ப்பாடு சொல்லி
வெகு நாள் ஆகவில்லை
வயிற்றுப் பாடு எங்களை
வதைப்பது முறையா?நாங்கள்
சேமித்து வைத்த
கனவுப் பூக்களை
யார் கசக்கி எறிந்தது?
அகரங்களை யார்
எங்களுக்கு
எட்ட முடியாத
சிகரங்களில்
வைத்தது?
எங்கள் உடல்களில் இருந்த
சீருடையைக் கிழித்து எறிந்து விட்டு
யார் எங்கள் கண்களுக்கு
நீருடையை அணிவித்தது?


வீட்டுச் செல்வம்
வறண்டு விட்டதால்
ஏட்டுச் செல்வமும்
எங்களுக்கு
எட்டாமல் போனது
பேனாவைப் பிடிக்கும்
கைகளால் உங்கள்
ஸ்பேனர்களைப்
பிடிக்கும்படி ஆனது


உங்கள் மேசைகளைத்
துடைக்கும் போதெல்லாம்
எங்கள் வாழ்க்கை அசுத்தமானது
நாங்கள் விற்கும்
சுண்டல் சூடாக இருந்தாலும்
வாழ்வின் வெப்பம்
ஆறிப் போய் விட்டது

கடவுள்
கருணையின் வடிவம் என்று
யார் கூறியது
எங்களுக்கு மட்டும் ஏன்
கலைமகள்
கைவீணை
கோடரியாய் மாறியது?

அறிவியல் எங்களுக்கு
அந்நியமாய் ஆனது
தமிழ் எங்களுக்கு
தொலைதூரம் போனது
கணிதம் எங்களுக்கு
கனவென்று ஆனது

எங்களுக்கு-
விண்ணை அளக்க
ஆசை இருந்தும் -கடைகளில்
எண்ணெய் அளக்கவே
அதிர்ஷ்டம் உள்ளது
வெற்றிக்
கனிகளை அடுக்க
ஆசை இருந்தும்
கடைகளில்
துணிகளை அடுக்கவே
அதிர்ஷ்டம் உள்ளது


இறைவா
எங்கள்
பிஞ்சுக் கரங்களுக்கு ஏன்
பாரங்கள் கொடுத்தாய்?
குழந்தைப் பருவத்தின்
குதூகலங்களை
எங்களுக்கு ஏன்
கொடுக்காது விடுத்தாய்?
பாடங்களை சுமக்கும் மூளைக்கு
பாரங்களை சுமக்கப் பணித்தாய்!

நாங்கள்
பெரிதாக ஏதேனும் கேட்டோமா?
நண்பர்களுடன்
சேர்ந்து உண்ணும் மதிய உணவு
இடை வேளைகளில்
இணைந்து சாப்பிடும் இனிப்பு மிட்டாய்
பள்ளியின் இறுதி மணி
அடித்ததும்
கால்களில் தானாக வரும் வேகம்!
இவை கூட எங்களுக்கு
எட்டாக் கனி தானா?
மலர்களின் தலையில்
மலைகளை வைப்பது தான்
மனித தர்மமா?

உங்களுக்கத் தெரியுமா?
வருங்கால பாரதத்தின் தூண்கள்
இன்று
கட்டிடங்களுக்காய் செங்கல் சுமக்கின்றன...
நாடு என்ற
தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகள்
இன்று
நகரத் தெருக்களில் முல்லை மல்லி என்று கூவுகின்றன!
நாளைய பாரதத்தை
செதுக்கப் போகும் கரங்கள்
இன்று கல் உடைக்கின்றன...
என்ன செய்வது
படிப்பு இன்று பணமாகி விட்டது
எங்களைப் பெற்றவர்கள்
ஏட்டுச் சுரைக்காயை
எத்தனை நாள் சமைக்க முடியும்?

மோட்டாரின் பாகங்களைப் படித்தால்
மட்டும்
வயிற்று மோட்டார் ஓடுமா?
கை வண்டி இழுத்தால் தான்
வாழ்கை வண்டி ஓடுகிறது
தீக்குச்சிகளை
பெட்டிக்குள் அடுக்கினால்தான்
எங்கள் அடுப்புகளில்
தீ வந்து அமர்கிறது!

அய்யா மனிதர்களே
எங்கள் கண்களைப் பாருங்கள்
உங்கள் எந்திரங்கள்
கக்கும் தீப்பொறிகள் அவைகளுக்குப்
பழக்கப்படவில்லை..
எங்கள் பிஞ்சுக் கைகள்
பாறைகளை
சுமக்கப்
படைக்கப்படவில்லை...

குழந்தைகளின்
கனவுகளை எரித்து அதில்
குளிர் காய்வது நியாயமா?
உங்கள் வீட்டு நாயையும்
குளு குளு அறையில் வைத்தீர்களே
எங்கள் கால்களின்
வெப்ப வெடிப்புகளைக் கவனித்தீர்களா?

மரங்களை
வேர்கள் தாங்கலாம்
நேற்றுதான் பூத்த
மலர்கள் தாங்க முடியுமா?
நாங்கள் கண்ணன் போல
தெய்வக் குழந்தை அல்ல
உயர்ந்த மலையை
ஒற்றை விரலில் தாங்க!

தளிர்களின் உழைப்பில் தான்
உங்கள் தரங்கள் உயர வேண்டுமா?
பிஞ்சுகளின் வியர்வையில் தான்
நீங்கள்
பசியாற வேண்டுமா?

இந்த சமூகம்
எங்களைப் பெற்றவர்களுக்கு
இரண்டு வேளை
நெல்லைக் கொடுத்திருந்தால்
இன்று நாங்கள்
கல்லை உடைப்போமா?

பாரதம் வளர்கிறது என்று
மார் தட்டும் மனிதர்களே
நீங்கள் என்ன தான்
முன்னேறினாலும்
இந்தியாவில்
குழந்தைகள் உழைக்கும் வரை
உங்கள் முன்னேற்றம்
உள்ளே
அசிங்கத்தைத் தின்று விட்டு
வெளியே
அத்தரைப் பூசிக் கொள்வது போல் தான்

இனி மேலாவது
விழித்துக் கொள்ளுங்கள்
வேர்கள்
மரத்தைத் தாங்கட்டும்
மலர்களை
மகிழ்ச்சியோடு
மழையில் நனைய விடுங்கள்!

சமுத்ரா