இந்த வலையில் தேடவும்

Tuesday, June 14, 2011

அணு அண்டம் அறிவியல் -30

அணு அண்டம் அறிவியல் -30 உங்களை வரவேற்கிறது.

ஐன்ஸ்டீன்
நிருபர்: நீங்கள் சார்பியல் தத்துவத்தை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

ஐன்ஸ்டீன்: பெரிதாக ஒன்றும் இல்லை. இன்னும் ஓரிரண்டு வாரங்களில் யாராவது ஒருவர் இதைக் கண்டுபிடித்திருக்கக் கூடும்.

[ சந்தேகமே இல்லாமல் ஐன்ஸ்டீன் ஒரு ஜீனியஸ் தான்..ஆனால் சார்பியலின் அத்தனை பெருமையும் அவருக்கு தான் சேர வேண்டும் என்று நாம் கருதினால் அது தவறு. ஐன்ஸ்டீனே ஒரு பேட்டியில் சொன்னது போன்று அவருக்கு சம காலத்தில் ஏழெட்டு பேர் அவர் சிந்தித்தது மாதிரியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். Einstein was the First to report அவ்வளவு தான். இதே போல தொலைபேசியின் அனைத்து Credit களும் க்ரஹாம்பெல்-லுக்கு சேரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவரது நண்பர் ஒருவர் அவருக்கே தெரியாமல் பெல்லின் டெலிபோன் மாடலை பேட்டன்ட் ஆபீஸ் ஒன்றில் பதிவு செய்து வைத்திருந்ததால்
க்ரஹாம்பெல் முந்திக் கொண்டார்.ஒரு ஐந்தாறு பேர் கிட்டத்தட்ட டெலிபோனை செய்தே விட்டிருந்தார்களாம்! ]

'ஒளி' என்பது மனித வரலாற்றில் கிட்டத்தட்ட கடவுளாகவே வழிபட்டுவரப்பட்டிருக்கிறது. காரணம் சிம்பிள்..இருளில் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த ஆதி மனிதனுக்கு சூரியனின் முதல் ஒளிக்கீற்று அவன் பயத்தை விரட்டி புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது. அவனும் தனக்கு வழி தந்த ஒளியை தெய்வமாக வழிபடலானான்..கிரேக்கத்தின் ஒளிக்கடவுள் 'அப்போலோ' பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம்.
ஒளிக்கடவுள் 'அப்போலோ'

சூரியனை(ஒளியை) கடவுளாக வழிபடாத மதங்களே இந்தியாவில் இல்லை எனலாம். கத உபநிஷத் " அது பேரொளியாய் இருக்கிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் அதுவே தன் ஒளியைப் பகிர்ந்து அளிக்கிறது" என்கிறது. [ எது? என்று நீங்கள் கேட்டால் மாக்ஸ் முல்லரின் 'உபநிஷத் ' என்ற குண்டு புக்கை படிக்கவும்]ஒளியின் ஆனந்த நடனம்


குரானின் 24 ஆவது சுராஹ்-வில் (Q 24:35 ) வரும் "அல்லாவே வானத்தின் பூமியின் ஒளி' (Ayat an-Nur )என்பது புகழ்பெற்ற ஒரு வாசகம்
திருக் குர்-ஆன் வாசகம்

கடவுளுக்கும் ஒளிக்கும் உள்ள ஒற்றுமையாக நான் கருதுவது இரண்டும் காலத்தின் நகர்வை உணர்வதில்லை. சார்பியலின் படி ஒளி வேகத்தை எட்டிப் பிடிக்கும் ஒரு பொருளுக்கு காலத்தின் நகர்தல் நிரந்தரமாக நின்று விடுகிறது. (அதை எட்டிப் பிடிக்க முடியாது என்பது வேறு விஷயம்) கடவுளுக்கும் காலம் என்பது இல்லை..காலத்திற்கு அப்பாற்பட்டவர் கடவுள். [மாற்றம் தான் காலமாக உணரப்படுகிறது என்று சொன்னோம். கடவுளுக்கு மாற்றம் இல்லை என்பதால் அவருக்கு காலமும் இல்லை] த்யாகராஜரின் 'சாமஜ வர கமனா' (ஹிந்தோளம்) என்ற புகழ்பெற்ற கிருதியில் வரும் 'காலா தீத ' (காலத்தால் கட்டுப்படாதவன்) என்ற வார்த்தையையும் கவனிக்கவும்.

சரி ரொம்ப போர் அடிக்கவேண்டாம்.. ஒளியைப் பற்றிய 'அறிவியலுக்குப்' போகலாம்.

ஒளி என்பது ஒரு மின்காந்த அலை என்கிறது இயற்பியல். கடவுளிடம் இருந்து ஒளி பிறக்கிறது என்பதை இயற்பியல் ஒத்துக் கொள்வதில்லை.இயற்பியலின் படி ஒளியின் மூலங்கள் அணுக்கள் தான். அணுக்களின் (எலெக்ட்ரான்கள்) அதிர்வுகளால் தான் பெரும்பாலான மி.கா.அலைகள் பிறக்கின்றன. ஒரு எலக்ட்ரான் ஆற்றல் அதிகம் உள்ள மட்டத்தில் (LEVEL ) இருந்து ஆற்றல் குறைந்த மட்டத்திற்கு குதிக்கும் போது ஒளியை உமிழ்கிறது.

ஒளி ஓர் அலையா துகளா என்பது குவாண்டம் இயற்பியலின் ஒரு தலைவலி பிரச்சனை. அதை இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒளி ஓர் அலை தான் என்பதை துணி துவைக்கும் போது ஏற்படும் சோப்புக் குமிழ்களின் வண்ணங்கள் நமக்கு சொல்கின்றன. மேலும் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் வணக்கம் செய்வது போல வைத்துக் கொண்டு மிக அருகே கொண்டு வாருங்கள்..ஆனால் உள்ளங்கைகள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.ஒரு கண்ணை மூடிக் கொண்டு இன்னொரு கண்ணால் கைகளுக்கு(விரல்கள்) இடையே உள்ள இடைவெளியில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உள்ளங்கைகள் ,விரல்கள் ஒன்றை ஒன்று தொடும் முன்னரே சில கரிய கோடுகள் இரண்டுக்கும் இடையே எழுந்து அந்த இடைவெளியை நிரப்புவதை கவனியுங்கள்..இந்த கோடுகள் ஒளி அலையாக இருப்பதால் மட்டுமே ஏற்பட முடியும். ஒளியின் INTERFERENCE (ஒரு விரலின் வழியே வரும் அலையும் இன்னொரு விரலின் வழியே வரும் அலையும் கான்சல் ஆவது) என்ற பண்பை நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.

ஒளி
என்பது ஓர் அலை என்றும் அது அளக்கவே முடியாத பயங்கர வேகத்தில் பயணிக்கிறது என்றும் மக்கள் காலம் காலமாக நம்பி வந்தனர். சுவிட்ச் போட்ட அடுத்த கணம் தாமதமின்றி குண்டு பல்பு எரிகிறது அல்லவா? (ஒரு உதாரணத்திருக்கு சுவிட்ச் சூரியனிலும் குண்டு பல்பு பூமியிலும் இருந்தால் சுவிட்ச் போட்டு எட்டு நிமிடம் கழித்து பல்பு எரியும்..)ஒளியை செலுத்தியதும் அது எத்தனை தொலைவை வேண்டுமானாலும் அனாயாசமாக கடந்துசென்று விடும் என்று காலம் காலமாக மக்கள் நம்பினார்கள். ஆனால் இதில் ஒரு தர்கரீதியான தவறு இருந்தது. ஒளிக்கு தொலைவுகள் பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை என்றால் நம் இரவு வானம் இருட்டாக இருக்கவே இருக்காது. பகலை விட பயங்கர பிரகாசமாக இருக்க வேண்டும் இரவு. இரவு இருட்டாக இருப்பதற்கு காரணம் நம் பிரபஞ்சத்தின் நட்சத்திரங்களில் 90 % நட்சத்திரங்களின் ஒளி இன்னும் நம் பூமியை வந்தடையவே இல்லை என்பதால் தான். சில நட்சத்திரங்களின் ஒளி மனித இனமெல்லாம் அழிந்து போய் பூமியும் அழிந்த பின்னர் தான் சூரிய மண்டலத்தையே வந்து அடையுமாம். ஒளியானது ஒரு வினாடியில் எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணிக்கும் என்றால் பிரபஞ்சத்தின் அத்தனை ஒளியும் ஒரே நொடியில்
பூமியை வந்து அடைந்து அதை குளிப்பாட்டும். கண் கூசியே நாமெல்லாம் செத்துப்போய் விடுவோம்.
இரவு வானம்

இயற்பியலில் 'லாஜிக்' எல்லாம் ஒத்துவராது. ஆய்வுப் பூர்வமான ஒரு சோதனை தேவை..ஒளி கணக்கிட முடியாத் வேகத்தில் செல்வதில்லை. அது ஒரு நொடிக்கு ஒரு குறிப்பிட்டa தொலைவை மட்டுமே கடக்கும் என்று நிரூபித்த ஒரு சுவையான கதையை இப்போது பார்க்கலாம். (நன்றி E =mC2 David Bodanis )

பூமிக்கு ஒரு
நிலா தான் இருக்கிறது. வியாழனுக்கு அறுபத்து நான்கு நிலாக்கள்..(வியாழனின் கவிஞர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது !) இதில் பிரதானமான நான்கு நிலாக்களை கலிலியோ கண்டுபிடித்தார். மிக உட்புற நிலாக்களில் (innermost moon ) ஒன்றான அய்யோ (IO , நல்ல பெயர்!) என்ற
உபக்ரகத்தைப்
பற்றித்தான் நம் கதை. இத்தாலியில் பிறந்த டொமினிக் காசினி (Giovanni Domenico Cassini June 8, 1625 – September 14, 1712) 1670 ஆம் வருடம் பாரிஸ் கோளரங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். பாரிஸ் Observatory என்பது அந்த நாட்களில் உலகத்திலேயே பெரிய வானியல் ஆராய்ச்சி மையமாக விளங்கியது. காசினி வியாழனின் உப கிரககங்களை ஆராய்ச்சி செய்வதில் உலகப் புகழ் பெற்றிருந்தார். (கொஞ்சம் கர்வமும் இருந்தது) ஆனால் வியாழனின் உள் துணைக் கோளான அய்யோ அவருக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. நம் பூமி சூரியனை வலம் வந்து முடிக்க 365 1 /4 நாட்கள் ஆகின்றன. இதில் ஒரு இம்மி அளவும் மாற்றம் இருக்காது.லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் இது கூடவோ குறையவோ செய்யலாம். அதே மாதிரி அய்யோ தன் தாய் வியாழனை முழு சுற்று சுற்ற 42 1 /2 மணிநேரங்கள் ஆகின்றன. அய்யோ வியாழனை ஒரு கடிகாரத்தின் முள் போல சுற்றி வருவதை உன்னிப்பாக காசினி கவனித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த 42 .5 மணி நேரங்கள் என்ற கணக்கு எப்போதும் ஒரே மாதிரி இருக்கவில்லை..ஒவ்வொரு மாதமும் மாறியது. சில நேரங்களில் சீக்கிரமாகவே அய்யோ வியாழனின் விளிம்பில் இருந்து எட்டிப் பார்த்தது. சில நேரம் அய்யோ வர லேட் ஆனது. ஒரு கடிகாரத்தின் முள் சில சமயம் வேகமாகவும் சில சமயம் மெதுவாகவும் சுற்றினால் எப்படி இருக்கும்? கிரகங்கள் கடிகாரத்தை விட மிகத் துல்லியமானவை. இந்த நெருடலான விஷயம் காசினியை சங்கடப்படுத்தினாலும் தன் ஈகோ காரணமாக அவர் இதை யாரிடமும் சொல்லவில்லை. குறிப்பாக தன் உதவியாளர் பிக்கார்ட் என்பவர் டென்மார்க்கில் இருந்து அழைத்து வந்திருந்த 'ரோமர்' என்ற ஆளை அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அய்யோ
ஏன் வியாழனை சுற்றும் போது தள்ளாடுகிறது என்ற விஷயம் அவர் மண்டையை தினமும் குடைந்து கொண்டிருந்தது. பாரிஸ் அரசிடம் இருந்து நிறைய நிதியுதவி பெற்றுக் கொண்டு சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள், அனுபவம் மிக்க வேலையாட்கள் இவர்களைக் கொண்டு இன்னும் துல்லியமாக அய்யோவை கவனித்தார் காசினி. அய்யோவை தடுத்து அதை 'slow ' செய்ய ஏதாவது வாயு மேகங்கள் காரணமா இல்லை வியாழனின் ஈர்ப்பில் ஏதாவது அதிசயமா? என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொண்டார் காசினி.

21 வயதே நிரம்பிய ரோமர் ஒரு நாள் காசினியிடம் வந்து 'நீங்கள் அனுமதித்தால் இந்த புதிருக்கான விடையை நான் சொல்லலாமா? எனக்கு ஒன்று தோன்றுகிறது' என்றார்.

"Go ahead "

ரோமர்
என்ன சொன்னார்? சொன்னது மட்டும் அல்லாமல் அதை நிரூபித்தும் காட்டினார்..காத்திருங்கள்..

[நண்பர்களே, மனிதர்களைப் பொறுத்த வரை ஒளி என்பதை ஒளி + மூளை என்று சொன்னால் சரியாக இருக்கும். கண் தரும் தகவல்களை மூளை எப்படி அலசி பிம்பத்தை உருவாக்குகிறது என்பது தான் இங்கே முக்கியம். எது இல்லையோ அதைப் பார்ப்பதை OPTICAL ILLUSION என்கிறார்கள்.இந்த பிரபஞ்சமே Optical illusion ஆக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஹோலோக்ராம் தத்துவம் பற்றி கேட்டிருக்கிறீர்களா? இந்த படத்தைப் பாருங்கள்.இந்தப் படத்தில் எதுவுமே நகரவில்லை என்பது தான் உண்மை! கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை.. ]

ஒரு மாயத் தோற்றம்
சமுத்ரா

9 comments:

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா ..............
வார்த்தைகள் இல்ல என்னிடம்
அறிவியலை எளிதாய் அறியும் இயலாக்கிய உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும் , நிறைய புதிய தகவல்கள் அதுவும் நட்ச்சத்திரங்களின் ஒளி பற்றிய செய்தி அருமை , அய்யோ ஏன் இப்படி செய்கிறது என அறிய ஆர்வமாய் இருக்கிறேன் .

எதுவுமே நகரவில்லை என்பதுதான் உண்மை! கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை.

அப்படியா , இதைத்தான் அந்த கால ரிஷிகளும் சித்தர்களும் எல்லாமே மாயை என்றார்களா

நிறைய எழுதுங்கள் இதைப்போலே அபூர்வமான பதிவு
நன்றி

Sugumarje said...

சிறப்பாக இருக்கிறது :) தகவலுக்கு நன்றி

Aba said...

really nice sir..

அயோவின் மர்மத்திற்கு காத்திருக்கிறேன்..

Aba said...

எனக்கு இதுபோன்ற optical illusions வேலை செய்வதில்லை. கண்ணில் ஏதோ கோளாறு என நினைக்கிறேன்..

நெல்லி. மூர்த்தி said...

"ரோமர் என்ன சொன்னார்? சொன்னது மட்டும் அல்லாமல் அதை நிரூபித்தும் காட்டினார்..காத்திருங்கள்.."

ரோமர் அப்படி என்ன தான் சொன்னார்? இது மர்ம நாவலில் எழும் எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக எழுகின்றது. அப்படி என்னதான் சொன்னார்? ஹூம் காத்திருக்கின்றோம்! இயற்பியல் பிரியர்கள் அனைவரும் அடுத்த அ.அ.அ. விற்காக இப்போதே விரல் நகத்தினைக் கடிக்க ஆரம்பித்து விட்டனர்.

suvanappiriyan said...

வழக்கம் போல் தெளிவான அறிவியல் பதிவு. நீங்கள் அளித்திருக்கும் குர்ஆன் வசனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு

24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.

விளக்கோடு ஒளியை ஒப்பிடும்போது அதன் வெளிச்சத்தை நேர் வழிக்கு உதாரணமாக இறைவன் கூறுகிறான்.

பதிந்தமைக்கு நன்றி!

பத்மநாபன் said...

30 படிக்குமுன்னே 31 வந்து விட்டதே...

ஒளி அலை என்பதை புரிந்து கொண்டோம் ..பாடம் படித்தால் கேள்வி கேட்க வேண்டுமல்லவா...

ஒளி வேகம் பற்றி சொல்கிறார்களே.. அது எல்லா ஒளிக்கும் பொருந்துமா ?.. டார்ச் ஒளி, சூர்ய ஒளி

Mohamed Faaique said...

///ஒளிக்கு தொலைவுகள் பற்றிய கட்டுப்பாடுகள் இல்லை என்றால் நம் இரவு வானம் இருட்டாக இருக்கவே இருக்காது. பகலை விட பயங்கர பிரகாசமாக இருக்க வேண்டும்///

இது சரியா நன்பரே!!! பகலிலும் நட்சத்திரங்கள் பல்லிலித்துக் கொண்டிருக்கின்றன், ஆனால், சூரிய வெளிச்சத்தின் பிரகாசத்தில் தெரிவதில்லை... அப்படித்தானே!!!!
ஒளி அனுவை விட நல்ல பிகரா இருக்கு... கொஞ்சமாலும் புரியுது...

BASU said...


நாத பிரம்மா விஷ்வஸ்வரூபா
நாத ஹி ஸகல ஜீவ ரூபா
நாத ஹி கர்மா நாதஹி தர்மா நாத ஹி பந்தன
நாதஹி முக்தி
நாத ஹி ஷங்கர
நாதஹி ஷக்தி
நாதம் நாதம் ஸர்வம் நாதம்
நாதம் நாதம் நாதம் நாதம்
நாதமே பிரம்மம்.
------------------------------
நாதமே பிரபஞ்சத்தின் உருவாக்கம். நாதமே உலக உயிர்களாக உருவாகின்றது. நாதமே தளை. நாதமே முக்திக்கான வழி. நாதமே நம்மைப் பிணைக்கிறது. நாதமே விடுவிக்கிறது. நாதமே எல்லாவற்றையும் வழங்குகிறது. நாதமே அனைத்துக்கும் பின்பாக இருக்கிற சக்தி. நாதமே அனைத்தும்.
-----------------------------
என்கிறார்கள் எனில்!?
ஓளியை தோற்றுவிப்பது நாதம் தானே?
அல்லது, நாதத்தின் சில தன்மையினால்,
நாதமே ஒளியாக தோன்றுகிறதோ!?