இந்த வலையில் தேடவும்

Friday, June 3, 2011

கலைடாஸ்கோப் -20

லைடாஸ்கோப் -20 உங்களை வரவேற்கிறது

திருவல்லிக்கேணி கண்டேனே
=============================

சென்னை திருவல்லிக்கேணி செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. பார்த்த சாரதி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்த்தால் ஒரு அரை நூற்றாண்டு காலத்தில் முன்னே பயணிப்பது போல ஒரு உணர்வு வருகிறது. பழமையான ஓட்டு வீடுகள், தெருவில் அலையும் பசுக்கள், கன்றுகள், 'இவ்விடம் ஹிந்தி கற்றுத் தரப்படும்' 'இவ்விடம் எல்லா பூஜை சாமான்களும் கிடைக்கும்' போன்ற போர்டுகள். அங்கே பெரும்பாலான கடைகள், மெடிக்கல் ஷாப்புகள், ஆஸ்பத்திரிகள் எல்லாவற்றின் பெயர்களும் 'பார்த்தசாரதி' என்றுதான் ஆரம்பிக்கின்றன . தெருக்களில் பட்டை நாமம் போட்ட அந்தணர்கள் மூன்று குணங்களில் அடங்காத கடவுளை மூன்று கோடுகளில் அடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

கிருஷ்ணன் போர்க்களத்தில் மொட்டை வெய்யிலில் நின்று கொண்டு அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்த போது மேலே ஏ.சி. இருந்ததோ இல்லையோ தெரியாது ஆனால் இப்போது பார்த்த சாரதி கோயிலில் குளு குளு என்று 20 டிகிரிக்கு
ஏ.சி. செய்திருக்கிறார்கள். எனக்கு நிறைய நாளாகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது:
அர்ஜுனன் ஒரு க்ஷத்திரியன். கிருஷ்ணன் ஓர் இடையன். இரண்டு பேருமே பிராமணர்கள் கிடையாது. ஏன் விஷ்ணுவின் அவதாரங்களில் வாமனர் மற்றும் பரசுராமரைத் தவிர யாரும் பிராமணர்கள் கிடையாது.அப்படி இருக்கும் போது கிருஷ்ணரும் ராமரும் எப்படி பிராமணர்களின் Copyright ஆனார்கள் என்று தெரியவில்லை.இப்போதெல்லாம்
பிராமணர்கள் என்று ஒரு இனம் இருப்பதாகவே தெரிவதில்லை..எல்லாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ 'வைசியர்களாக' (வியாபாரிகளாக) இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. வேதம் படிக்கும் வர்ணத்தில் பிறந்திருந்தாலும் தன் மகன் வெளிநாடு சென்று டாலர் டாலராக சம்பாதிப்பதில் தான் இன்றைய மாமாக்களும் மாமிகளும் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கிறார்கள்.

பா.சா கோயிலில் கர்ப்ப கிருகத்தின் வெளியே நின்று கொண்டு அந்தணர்கள் கையில் அர்ச்சனைத் தட்டுகளுடன் ஸ்டாக் மார்க்கெட் பற்றியும், யாரோ தற்கொலை செய்து கொண்டது பற்றியும் லௌகீகம் பேசிக் கொண்டிருகிறார்கள். இத்தனைக்கு நடுவில் ஒரு ஆறுதல். வயதான பெண்மணி ஒருவர் கோயில் பிரகாரம் முழுவதும் (மற்றவர்களைப் பற்றி சட்டை செய்யாமல்)உருக்கமாக பாடிக் கொண்டு வந்தார்.'பார்த்த சாரதி உன்னை விட்டா எனக்கு யாருடா இருக்கா?' என்று சத்தமாகவே வழிபட்டார் (?) . அவர் தோற்றத்தைப் பார்த்ததில் உறவுகளால் கைவிடப்பட்டவர் போலத் தோன்றியது. காலில் இருந்த கட்டையும் பொருட்படுத்தாமல் பிரகாரத்தை சுற்றி வந்தார். பாடும் போது குரல் அபாரமாக இருந்தது. இந்த ஒரு பெண்மணிக்காகவாவது பார்த்த சாரதி திருவல்லிக்கேணியில் நிலைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

'நான் சொல்ல வருவதை
விட்டு
மற்ற-
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாய்'

என்பது கவிஞர் கனிமொழியின் கவிதை. அதே மாதிரி நாம் பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னதை விட்டு விட்டு வேறு எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம்.நேரம் இருந்தால் ஓஷோவின் 'பகவத் கீதை ஒரு தரிசனம்' (கர்ம யோகம்) படித்துப் பாருங்கள். உங்கள் கண்களில் தானாகவே கண்ணீர் பனிக்கும்.

துணுக்கு: பா.சா கோயிலின் நேர் எதிரே உள்ள ஒரு வீட்டின் கேட்டில் 'கடவுள் ஜாக்கிரதை' ' beware of God ' என்று ஒரு போர்டு தொங்குகிறது. Funny !


டிரஸ்-கோட்
============

ஆபீசுக்கு செல்லும் போது DRESS -CODE என்னவாக இருக்க வேண்டும்? முண்டா பனியன் மற்றும் ஷார்ட்ஸ் ஆகக் கூட இருக்கலாம். (என்னது?) ஆனால் இது இங்கே இல்லை. வேலை விஷயமாக கனடா போயிருந்த போது அங்கே சில பேர் இப்படி தான் ஆபீஸ் வந்தார்கள். வின்டரில் எவ்வளவு குளிரோ (-30 டிகிரி வரை போகிறது) அந்த அளவு புழுக்கம் சம்மரில் அங்கே இருக்கிறது
எனவே ஹாயாக அரை டிராயர் போட்டுக் கொண்டு தான் அங்கே ஆபீசுக்கு வருகிறார்கள்.(காலையில் வந்த உடனேயே TIM HORTENS எனப்படும் காபிக் கடையில் EXTRA LARGE கப்புகளில் காபி வாங்கிக் கொண்டு வந்து ஒரு மணிநேரம் சர் சர் என்று உறிஞ்சுவார்கள்.)

ஆனால் இங்கே இன்போசிஸ் போன்ற சில கம்பெனிகளில் வெளியே அக்னி நட்சத்திரம் கொளுத்தினாலும்
ஷூ, டை, பெல்ட், மற்றும் முழுக்கை சட்டையில் தான் வேலைக்கு வர வேண்டும் என்கிறார்கள்.சென்னை போன்ற நகரங்களில் இந்தக் கோலத்தில் பேருந்துகளிலும் , டூ-வீலர்களிலும் பயணிக்கும் இளை
ர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. பெண்கள் காற்றோட்டமாக சுடிதாரும் சேலையும் அணிந்து வருவதை அனுமதிக்கும் கம்பெனிகள் ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிமுறைகளை வைத்திருக்கின்றன? ஷூ, டை முதலியவை குளிர் நிறைந்த பனி பொழிகின்ற நாடுகளுக்காக ஏற்பட்டவை. வெளிநாட்டுக்கார்கள் இங்கே வந்தால் எவ்வளவு குறைவாக உடை அணிய முடியுமோ அவ்வளவு குறைவாக அணிந்து கொண்டுதான் நம் ரோடுகளில் திரிகிறார்கள்.. நாம் என்னடா என்றால் முழுக்கை சட்டையின் மேலே டை கட்டிக் கொண்டு அது போதாதென்று மேலே கனமான கோட் வேறு அணிந்து கொண்டு முட்டாள்தனமாக நடமாடுகிறோம்.

Brand name
============

போன வாரம் ஒரு கடையில் ஒரு மாங்கோ ட்ரின்க் வாங்கினேன்.. ஏன் இது வாங்கி வந்தாய்? 'Slice ' ஸோ 'Maaza ' வோ இல்லையா? என்று டென்ஷன் ஆகி கேட்டாள் அக்கா. ஸ்லைஸ்-சையும் மாஜாவையும் விட்டு வேறு வாங்குவது பெரும் குற்றம் போலிருக்கிறது. ஏதோ ஒரு பெயரில் இருந்த அந்த பானம் நன்றாகவே இருந்தது. Not bad ! இந்த BRAND NAME களால் அதே துறையில் இருக்கும் மற்ற கம்பெனிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன (அல்லது ஒடுக்கப்ப
டுகின்றன) என்பதை நாம் ஏனோ உணர்வதில்லை..இதே மாதிரி டி.வி என்றாலே அது சன் டி.வி தான் என்ற மனோபாவம் நமக்கு உருவாகி விட்டது. நீங்கள் ஒரு வீட்டுக்கு செல்கிறீர்கள்; அங்கே எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து 'மக்கள்' தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதீத விளம்பரங்களின் காரணமாகவோ இல்லை மக்களின் INERTIA எனப்படும் மாறுதலுக்கு தயங்கும் மனோபாவத்தாலோ நமக்கு இந்த Brand NAME மேனியா வந்து விட்டிருக்கிறது. ஒரு பிராண்டை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தும் போது அது இடம் தெரியாமல் காணாமல் போவதற்கு தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன . இந்த Brand NAME மோனோபோலிகளால் அவை கடுமையான போட்டியை சந்திக்க வேண்டி இருக்கிறது.

'பபூல்' என்று ஒரு டூத் பேஸ்ட் வந்தது. 'கேமே' என்று ஒரு சோப்பு வந்தது நினைவில் இருக்கலாம்.அமிர்தாஞ்சனுக்கு முன்னே டைகர் பாம் நிற்க முடியவில்லை. சேவல் படம் போட்ட ஏதோ ஒரு கொசுவர்த்தி சுருள் உங்களுக்கு கனவு போல நினைவில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் நூறு வீடுகளுக்கு சென்றால் அதில் அறுபது வீடுகளில் 'கோல்கேட்' தான் வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியும். இங்கே கர்நாடகாவில் MTR தவிர வேறு சமையல் மசாலாக்களை யாரும் வாங்குவதில்லை.இதற்கு சில விதி விலக்குகள் இருக்கவே செய்கின்றன.உதாரணம் Mozilla Firefox எனப்படும் மொசில்லா நெருப்புநரி பிரவுசர். தனக்கு முன்னே ஏகபோகச் சக்ரவர்த்தியாக கோலோச்சிய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பின்னுக்குத் தள்ளி இப்போது பெரும்பாலானவர்களால் விரும்பப்படும் உலாவியாக இருக்கிறது. (நெருப்புநரியில் நிறைய tab -களை நாம் திறந்து வைத்திருக்கும் போது எதிர்பாராமல் கம்ப்யூட்டர் Restart ஆகி விட்டால் மறு முறை திறக்கும் போது இந்த tab -களை மீண்டும் திறக்கிறது இந்த புத்திசாலி நரி! ) எனக்கு இப்போது கம்ப்யூட்டரில் 'e' என்று பாவமாக ஒரு ஐகான் இருப்பதே மறந்து விட்டது!

அடுத்த முறை ஒரு மாறுதலுக்காக 'surf-excel ' ஐ விட்டு விட்டு உங்கள் வீட்டுக்கு 'பொன்வண்டு' சோப்பு வாங்கி வாருங்கள் ( எச்சரிக்கை: பின் விளைவுகளுக்கு இந்த ப்ளாக் பொறுப்பல்ல)


முகுந்த் நாகராஜன்
====================

னின் கவிதைகளை நண்பர் ராஜகோபால் இ-மெயில் செய்திருந்தார் . அவற்றில் எனக்குப் பிடித்திருந்த சில கவிதைகள் கீழே:


* கை, கால், முகத்தை எல்லாம்
ஈரம் போக துடைத்துக் கொண்டேன்.
இந்த நாக்கை என்ன செய்வது.


* ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை.

* தோசை மாவை அரைத்து முடித்தாயிற்று.
மோட்டார் போட்டு தண்ணீரை
மேலே ஏற்றியாகி விட்டது.
எட்டு மணிக்குள் பாதுகாப்பான இடம் தேடி
உட்கார்ந்தாகி விட்டது.
8 ஆயிற்று.
மின்வெட்டு ஆகவில்லை.
8.01 ஆயிற்று.
8.02 ஆயிற்று.
பதட்டம் நீடிக்கிறது.


* இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்...
இதெல்லாம் ஒரு காரணமா?


இனி சமுத்ராவின் ஒரு கவிதை
================================

* நான் முகமற்றவன்
தனிமையில் ஒரு பாடலை முணுமுணுக்கும் போதும்
தூங்கச் செல்லும் போதும்
தூங்கும் போதும்
காலையில் விழித்தெழும் போதும்
பல் துலக்கும் போதும்
வீட்டை சுத்தம் செய்யும் போதும்
ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு புன்னகை செய்யும் போதும்
நான் முகமற்றவன்
செருப்பு மாட்டிக் கொண்டு
வெளியே கிளம்பும் போதுதான்
ஏதோ ஒரு முகத்தை
எங்கிருந்தோ எடுத்து
அவசரமாக மாட்டிக் கொள்கிறேன்!

இனி ஒரு ஓஷோ ஜோக்
========================


அன்ட்ரே மற்றும் மர்லின் இரண்டு பெண்கள் ஆப்பிரிக்கன் சபாரிக்கு சென்றிருந்தார்கள். பாரியை ரசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு கொரில்லா குரங்கு மர்லினை சாடாரென்று இழுத்துக் கொண்டு காட்டுக்குள் மாயமாக மறைந்து விட்டது. ஒரு வாரம் அவளை தன் குகையில் சந்தோஷமாக
வைத்திருந்தது. அன்ட்ரே ஊருக்குள் சென்று நாலு பேரை அழைத்துக் கொண்டு வந்து மிகவும் முயற்சி செய்து காடெல்லாம் தேடி ஒரு வழியாக மர்லினை கொரில்லாவிடம் இருந்து மீட்டு விட்டாள்.

மர்லின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள்.

பத்துநாள் கழித்து அவளை சந்தித்த அன்ட்ரே, "மர்லின், எப்படி இருக்கிறாய்? வாழ்வின் மிக மோசமான ஒரு அனுபவத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறாய்.இப்போது எப்படி உணர்கிறாய்?" என்றாள்

"என்ன சொல்வது? பத்து நாள் ஆயிற்று ..ஒரு லெட்டர் இல்லை..போன் இல்லை..ஒரு எஸ்.எம்.எஸ். கூட இல்லை" என்றாள் மர்லின்...முத்ரா

15 comments:

kousalya raj said...

பல சுவாரசியமான தகவல்களின் அழகான தொகுப்பு...நன்றாக இருக்கிறது.

உங்கள் கவிதை நிதர்சனம்.

ஜோக் ரசிக்க வைத்தது !!

G.M Balasubramaniam said...

கலிடாஸ்கோப் என்றபெயருக்கேற்ப பதிவுகளில் பல்சுவை தெரிகிறது.உங்க்ள்கருத்துக்களில் பல என் அலைவரிசையில் இருப்பதை உணருகிறேன். திருவல்லிக்கேணி கோவிலில், விவேகானந்தர் குறித்த கல்வெட்டினைப் பார்த்தீர்களா.?பிவேர் ஆஃப் காட், நான் பார்க்கவில்லை. உங்களுக்கு இ- மெய்லில் வந்த கவிதைகள் அருமை, உங்கள் கவிதை
நிஜத்தின் வெளிப்பாடு. உட்லில் எண்ணை ஒட்டாத இடம் நாக்கு மட்டும்தானா.?எங்கோ படித்த நினைவு.

ஷர்புதீன் said...

நடிகர் விஜய் வசீகரா படத்தில் நிறைய பேசுவார், நிஜத்தில் நமக்கு எல்லோருக்கும் அவரது இயல்பு குணம் தெரியும். நம்ம மது -வும் ( சமுத்ரா) அப்படிதான்., அவரது சந்தோசம் அவருக்கு பிடித்த மாதிரி இருப்பதுதான், அதுதான் உண்மையும் கூட.,!

ஆனால் விஜய்., சினிமாவில் அவரது இயல்புக்கு ஏற்ற மாதிரிதான் நடிப்பேன் என்று நடித்திருந்தால் ?? ( புரிகிறதா?!)

சமுத்ரா said...

புரியவில்லை ஷர்புதீன்

ஷர்புதீன் said...

உங்களுக்கும் புரிந்தாலும் அதனை என்னிடமே கேட்பதில் ஒரு மனோவியல் இருக்கிறது, சரி விடுங்கள் அது கிடக்கட்டும்.,
நம்முடைய இயல்பு குணங்களில் இருந்து மாறுபட்டு இருப்பது ( மாதம் ஐம்பது ஆயிரம் சம்பளம் தந்து அமைதியா இருக்கும் வேலை தந்தால் அந்த பணம் இப்போதைக்கு எனக்கு பெரியது என்பதற்காக செய்வேன், ஆனால் ஆர்வம் இருக்காது.) மிக கடினமான செயல்,

இப்ப மேட்டர்.,
உங்களின் இயல்பான மிக அமைதியான குணம் பற்றி ஓரளவு அறிவேன், அதே நேரம் பதிவுலகில் உங்களின் கருத்துக்கள் பலரிடம் கொண்டு சேர்கிறதா என்பது போன்ற புற காரணிகளை பற்றி நீங்கள் அவ்வளவாக கவலைபடுவதில்லை. மணிரத்தனம் தனது படத்தினை பற்றி அது வெளியாகும் நேரம் மட்டும் விகடனில் பேட்டி கொடுப்பார். யாரிடமும் அதிகம் பேசாத மணி , அதனை மட்டும் ஏன் செய்கிறார்?

புரிகிறதா?

Sugumarje said...

//இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்...
இதெல்லாம் ஒரு காரணமா?//
அருமையான மனவியல் :)

அந்த கொரில்லா சூப்பர் கொரில்லாவாக இருந்திருக்கும் போல :)

ஓஷோ is really Funny Guru... We Miss Him :(
ஆனால் அவர் இனி புதிதாக சொல்லுவதற்கு ஏதுமில்லை...

Try to Visit :Sugumarje

Nagasubramanian said...

good as always.
I like your poem very much.

சமுத்ரா said...

ஷர்புதீன்,பிரபலமாக வேண்டும் என்றோ பெரிய எழுத்தாளர் (?) ஆக வேண்டும் என்றோ ஆசையெல்லாம் இல்லை.
எழுதி தான் பணம் பார்க்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை. எழுத்து என்பது எனக்கு ஒரு
பிரசவம் மாதிரி..குழந்தை வெளிவரவில்லை என்றால் தாய்க்கு தான் ஆபத்து.

ஷர்புதீன் said...

//எழுத்து என்பது எனக்கு ஒரு
பிரசவம் மாதிரி..குழந்தை வெளிவரவில்லை என்றால் தாய்க்கு தான் ஆபத்து.//

i think you like charu nivedita!

:)

VELU.G said...

உங்கள் எழுத்துநடை சுஜாதாவின் தாக்கம் அதே சரளமான கிண்டல் தொனி இருக்கிறது

சுதா SJ said...

உங்கள் வலைப்பூவுக்கு முதல் முதல் வருகுறேன்,

அசத்தலான பதிவுகள்,

உங்கள் எழுத்தில் சிஜதாவின் சாயல் தெரிகிறது பாஸ்

வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் said...

அர்ஜுனன் ஒரு க்ஷத்திரியன். கிருஷ்ணன் ஓர் இடையன். இரண்டு பேருமே பிராமணர்கள் கிடையாது. ஏன் விஷ்ணுவின் அவதாரங்களில் வாமனர் மற்றும் பரசுராமரைத் தவிர யாரும் பிராமணர்கள் கிடையாது.அப்படி இருக்கும் போது கிருஷ்ணரும் ராமரும் எப்படி பிராமணர்களின் Copyright ஆனார்கள் என்று தெரியவில்லை.


???

முனைவர் இரா.குணசீலன் said...

வெளியே கிளம்பும் போதுதான்
ஏதோ ஒரு முகத்தை
எங்கிருந்தோ எடுத்து
அவசரமாக மாட்டிக் கொள்கிறேன்!

ஒவ்வொருவருக்கும் ஒரே முகமூடி இருந்தால் பரவாயில்லை சமுத்ரா

ஓராயிரம் முகமூடிகளைக் கொண்டிருக்கிறார்களே!!!

siddhadreams said...

உங்க ப்ளாக் ரொம்ப நல்லா இருக்குங்க! எதோ ரொம்பநாள் பழகின நண்பனை திடீர்னு வெளியூர்ல/வெளிநாட்ல பார்த்த மாதிரி!!

சொல்லனும்னு தோணிச்சு!

இராஜராஜேஸ்வரி said...

சுவாரஷ்யமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கல்.