இந்த வலையில் தேடவும்

Monday, June 20, 2011

ராமன் ஆண்டாலும்!


ராமன் ஆண்டாலும்
===================

பொற்கால ஆட்சி மலர்ந்தது என்கிறார்கள்
சத்தியம் ஜெயித்து விட்டதாம்
அரக்கர்கள் வீழ்ந்ததாக சொல்கிறார்கள்
ராமராஜ்ஜியம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதாம்
தேனாறும் பாலாறும் இனிமேல் ஓடுமாம்
எங்களுக்கு வித்தியாசம்
பெரிதாய் ஏதுமில்லை..
அதே காலை நேர வியர்வை பேருந்துப் பயணங்கள்
ஓனரிடம் வீட்டு வாடகை சமாளிப்புகள்
பட்ஜெட் இடிப்புகள்
மாதக் கடைசியின் விசனங்கள்.
சீட்டுக்கு பணம் கட்டும் கவலைகள்
நகை அடகு வைத்து மீட்கும் அவலங்கள்
எங்களுக்கு பெரிதாய்
வித்தியாசம் ஏதுமில்லை..

ஆயத்த வார்த்தைகள்
=======================


என் கவிதையைப் படித்து விட்டு
'நன்று' என ஒற்றை வார்த்தையில் சொல்ல நீ யார்?
என் கவிதையைப் பிரசவிக்க
நான் பட்ட பேறு வலிகளை நீ அறிவாயா?
என் கவிதை வடிவம் பெறுவதற்கு முன்
என் உயிரை அது ஆயிரம் முட்களால்
உறுத்தியது உனக்குத் தெரியுமா?
வார்த்தைகளை யாசித்து நான்
நடைப்பிணம் போல நடந்ததைப் பற்றி
உனக்கு அறிவேதும் இருக்கிறதா?
கவி வரம் வேண்டி
புவி மீது நான் புரிந்த
தவங்கள் பற்றி உனக்குத் தெரியுமா?
உன் அவசர வாழ்க்கையில் -
ஏதோ மரபுக்காய்
ஆயத்த வார்த்தைகளை உதிர்க்காதே!
அந்த இடத்தில் வார்த்தை சரியில்லை
என்று சொல்லியிருந்தால் கூட
எனக்கு ஆறுதலாய் இருந்திருக்கும்!


ALL IS WELL
===========


அந்த பொம்மை தான் வேண்டும் என்று
அப்பாவை இரண்டு நாள் நச்சரிக்காது இருந்திருக்கலாம்
பத்தாம் வகுப்பு பெயில் என்று
தேவையில்லாமல் மாத்திரையை முழுங்கி இருக்க வேண்டாம்..
அந்தப் பெண் மறுத்து
விட்டாள் என்பதற்காய்
இரவுகளைக் கண்ணீரால் நனைத்திருக்க வேண்டாம்..
வேலையில் இருந்து நீக்கிய கம்பெனியை
வேளா வேளை மறக்காமல் திட்டியிருக்க வேண்டாம்..
பஸ் ஸ்டாண்டில் அன்று அவனை
ஒரு சிறு புன்னைகையால் மன்னித்திருக்கலாம்..
தூக்கம் தொலைத்த இரவுகளை தவிர்பதற்கேனும்
நான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டிருக்கலாம்
அமர்ந்து பேசலாமா
என்று பங்காளிகளை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்..

வாழ்க்கையின் முடிவில்
செய்ததைத் திரும்பிப் பார்க்கும் போது
குழந்தைத் தனமாக இருக்கிறது.

அழகு
=====

நகரத்தின் சாலையோர சுவர்களில்
இப்போதெல்லாம்
யானை, மான் ,புலி, மயில், கடல்
அறுவடை செய்யும் பெண்கள்,
பானை செய்யும் குயவன்
வாள் சண்டை போடும் வீரர்கள்
உருண்ட கண்களுடன் முறைக்கும் நரசிம்மர் சாமி,
குழந்தையைக் கொஞ்சும் தாய்
என்று விதம் விதமான ஓவியங்கள்..
ஊழல் செய்யும் தலைவர்களை
அர்த்தமில்லாமல் புகழ்ந்து எழுதிய
வாசகங்களை விட
அழகாகவே உள்ளன,,

மன்மத லீலையை
===================

கோயில்களில்
பஸ் நிலையங்களில்
ரயில் நிலையங்களில்
வேலைவாய்ப்பு அலுவலகங்களில்
வாக்-இன்-இன்டர்வியூக்களில்
மளிகைக் கடைகளில்
வங்கிகளில்
கடற்கரைகளில்
இப்படி எல்லா இடங்களிலும்
கழுத்தை நெரிக்கும் அளவு மனிதக் கூட்டம்!
குரங்கில் இருந்து மனிதனாய் மாறிய
நாளில் தொடங்கி
மனிதன்
ஒரு விஷயத்தை மட்டும்
கண்ணும் கருத்துமாய் செய்து
வந்திருக்கிறான் என்று தெரிகிறது..


சமுத்ரா

14 comments:

தமிழ் உதயம் said...

நான்காவது கவிதை நிதர்சனம். இரண்டாவது கவிதையை வாசித்ததால், முதல் கவிதையை பாராட்ட பயமாக உள்ளது.

bandhu said...

கவிதைகள் நன்றாக உள்ளன... என்று எழுத வந்தால் இரண்டாவது கவிதை போல திட்டுவீர்களோ என்று தயக்கமாக உள்ளது.. மீ தி எஸ்கேப்!

ஷர்புதீன் said...

அட சமுத்ரா இயற்பியலில் இருந்து (முழுவதுமாக) எப்ப கவிதைக்கு தாவினார்

Mohamed Faaique said...

கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு பாஸ்.. முக்கியமாக அந்த 2ம் கவிதை..

மீண்டும் சொல்கிறேன், ஒவ்வொன்றையும் நீங்கள் பார்க்கும் பார்வை புடிச்சிருக்கு..

பத்மநாபன் said...

உண்மைதான் , கவிதை படைப்பது என்பது கடினம் தான்.. போறபோக்கில் படித்து கருத்து சொல்வது சரியில்லை தான். அனுபவித்து தான் படிக்கவேண்டும் ..

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதவை....

விட்ட தொட்ட குறைகள்.....

அழகோவியங்கள்......

காலகாலமாக தொடரும் சங்கிலி உற்பத்தி ...

என எல்லாம் அருமை...

நெல்லி. மூர்த்தி said...

"வாழ்க்கையின் முடிவில்
செய்ததைத் திரும்பிப் பார்க்கும் போது
குழந்தைத் தனமாக இருக்கிறது." -

திரும்ப மறுக்கும் / மறக்கும் மனங்கள் தான் இயந்திர உலகில் வசிக்கும் இதயங்களின் இன்றைய நிலையாக உள்ளன. இக் கவிதை உங்களின் பண்பட்ட மனதினைக் காண்பிக்கின்றது. வாழ்த்துக்கள்! வளரட்டும் அறிவியலுடன் இக் கவிச்சேவை!!

தக்குடு said...

அடேயப்பா, இயற்பியல் ஆய்வுக் கூடத்திலும் இயல்பாய் கவிதை மலரும் அழகை இன்று தான் காண்கிறேன்!! ஐந்து கவிதையிலும் சமுதாயத்தின் மன உளைச்சல் வார்த்தைகளாய் வார்க்கப்பட்டுள்ளது! வாழ்த்துக்கள்!!

G.M Balasubramaniam said...

ஆட்சி மாற்றத்தால் எதுவும் மாறுவதில்லை என்பது போல் தோன்றினாலும், மாற்றங்கள் ஆங்காங்கே சிலரது வாழ்வை எங்கோ கொண்டு செகிறது. சாமானியனுக்குத்தான் வித்தியாசமில்லை. ஆயத்த வார்த்தைகள் உதிர்ப்பவர் படித்தாவது இருக்கிறார் என்றாவதுணர்த்துகிறாரே சமாதானப் பட்டுக்கொள்ளலாம்.வாழ்க்கையின் முடிவில் சிந்திக்கும்போது கை நழுவிய வாய்ப்புகள் மனசை அரிக்கும்.What can not be cured must
be endured. ஜனப் பெருக்கத்தின் ஆணி வேரை தொட்டு விட்டீர்கள்

adhvaithan said...

என் கவிதையைப் படித்து விட்டு
'நன்று' என ஒற்றை வார்த்தையில் சொல்ல நீ யார்?
============
ini ungaloda blog ku yaaru comment poduva ipudi keteenganna.. munnadi comment varathaanu patheenga ipo comment anupinaa thitureenga :P :P

btw kavithai nalla illai :) :) madhu, you are capable of more.. try writing venbas, kalippa.. not this puthu kavithai :( :(

சமுத்ரா said...

ஹரேஸ்வர், நான் இப்படி சொன்ன பின்னும் கமெண்ட் போடுபவர்கள் தான்
உண்மையான நண்பர்கள் :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ரெண்டாவது கவிதை சமுத்ராவுக்கும் பொருந்துமில்லையா சமுத்ரா?

எல்லாக் கவிதைகளுமே உங்களின் பார்வை போலவே கோணங்களை மாற்றிப்பார்க்கின்றன.

அற்புதம்.

சமுத்ரா said...

Absolutely சுந்தர்ஜி !

adhvaithan said...

madhu.. oho.. enaku intha logic teriyama pochae :(

நம்பிக்கைபாண்டியன் said...

<<<<>>>> இந்த வார்த்தைகள் அவ்வளவு பொருத்தமாக இல்லை, மாற்றியிருக்கலாம்! (இப்போ ஆறுதலா இருக்காங்க! ஹி..ஹி..