இந்த வலையில் தேடவும்

Friday, June 24, 2011

கலைடாஸ்கோப்-24

லைடாஸ்கோப்-24 உங்களை வரவேற்கிறது


1
==

கேள்வி கேட்பது கஷ்டமா பதில் சொல்வதா? பதில் சொல்வது தான் கஷ்டம் என்று நீங்கள் சொன்னால் உங்களுக்கு முட்டை மார்க்.கேள்வி கேட்பது தான் உண்மையில் கஷ்டமானது. திருவிளையாடல் படத்தில் சிவாஜி 'கேள்விகளை நீ கேட்கிறாயா
இல்லை நான் கேட்கட்டுமா' என்று கேட்க நாகேஷ், நானே கேட்கிறேன் என்று முந்திக் கொண்டு சொல்வார். அதற்கு
சிவாஜி நமட்டு சிரிப்பு சிரிப்பார்..'அட முட்டாளே ,கேள்வி கேட்பது தான் கஷ்டம்' என்று நினைத்திருப்பார் போலும்.

It is difficult to ask a question; more difficult to ask a right question; most difficult to ask a right question rightly.தமிழ்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம் என்ற அளவு நீங்கள் ஆங்கிலத்தை வெறுத்தால் இதோ உங்களுக்காக தமிழில் : கேள்வி கேட்பது கஷ்டம்; சரியான கேள்வியைக் கேட்பது அதை விட கஷ்டம்; சரியான கேள்வியை சரியான விதத்தில் கேட்பது அதைவிட கஷ்டம்.சரியான கேள்வியைக் கேட்கத் தெரியாத நாம் பதில் மட்டும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றே தோன்றுகிறது. பகவத் கீதை உட்பட உலக இலக்கியங்கள் பல
கேள்வியில் தான் தொடங்குகின்றன. நம்முடைய பேச்சு வார்த்தைகள் 90 % கேள்விகளாகத்தான் உள்ளன.நம் வாழ்க்கை
என்பது ஒரு விதத்தில் பதில் இல்லாத ஒரு கேள்வி..இன்னொரு விதத்தில் அது கேள்வி இல்லாத ஒரு பதில்.

'ஒரு மனிதனை அவன் சொல்லும் பதில்களால் அளவிடுவதை விட அவன் கேட்கும் கேள்விகளால் அளவிடுங்கள்' என்கிறார் ஒருவர் (யார் அது? அட விடுங்கப்பா பேரா முக்கியம்? யாரோ எக்ஸோ ஒய்யோ ) இன்னொருவர் கேள்விகளும் பதில்களும் எப்போதும் 100 % பொருந்துவதில்லை என்கிறார். சில நேரங்களில் பதில்கள் ஒரு சதவிகிதம் கூட பொருந்துவதில்லை. 'எங்கே போகிறாய்' என்ற கேள்விக்கு 'அவசியம் தெரிஞ்சுக்கணுமா ?' என்று எகத்தாளமாக பதில்(?) சொல்வது இதற்கு உதாரணம்.

ஸ்கூலில் படித்த வினா வகைகள் ஞாபகம் வருகிறது. மொத்தம் ஆறு வகையான வினாக்கள் இருப்பதாக இலக்கணம்
சொல்கிறது. அவை இங்கே (காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றப்பட்டு):

அறியா வினா (பதில் தெரியாமல் கேட்பது) மனைவி: நேத்து ராத்திரி எங்கே இருந்தீங்க?

அறி வினா (பதில் தெரிந்தே கேட்பது)
மனைவி: நேத்து ராத்திரி எங்கே இருந்தீங்க?

ஐய வினா: (சந்தேகம் தெளியக் கேட்பது)
மனைவி:என்னங்க உங்க பாக்கெட்ல இருந்தது ஐநூறு ரூபாய் நோட்டா? ஆயிரம் ரூபாய் நோட்டா?

கொளல் வினா (எதையாவது வாங்கக் கேட்பது) மனைவி : உங்க கிரெடிட் கார்டை கொஞ்சம் தரீங்களா?

ஒப்புமை வினா (மற்றவரின் ஒப்புதலுக்காக கேட்பது) மனைவி: ஏங்க இன்னிக்கு ரம்யாவோட ஷாப்பிங் போய் வரட்டா ?

கடைசியில் அதிர்ச்சி வினா

மனைவி : என்னது? உங்களுக்கு வேலை போயிருச்சா?

2
==

டெக்னாலஜியை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று சிலர் செய்யும் அலும்புகள் தாங்கமுடிவதில்லை. GOOGLE TRANSLATION ஒரு உதாரணம்.

YOU MUST NOT EAT என்று உள்ளிட்டால் 'நீ சாப்பிட வேண்டும்' என்று வருகிறது. Google இவ்வளவு மக்கா ? மனிதர்களை இன்னும் இன்னும் சோம்பேறிகளாக்க கணினி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முயற்சி செய்கின்றன என்று தோன்றுகிறது. 'you tempt me' என்று உள்ளிட்டால் அதில் 'நீங்கள் என்னை tempt ' என்று விடை வருகிறது.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்று உள்ளிட்ட போது அதையும் கூகிள் சின்சியராக மொழிபெயர்த்தது (?) ஆனால் அதன் மொழிபெயர்ப்பைப்
பார்த்து எனக்கு கெக்கே பிக்கே என்று சிரிப்பு வந்து விட்டது .இதோ:

"First eluttellam Adi Alphabetically
Bhagwant mutarre World "


Not bad என்கிறீர்களா? சரி I LOVE YOU என்பதற்குத் தமிழில் என்ன என்று கேட்டதற்கு "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று வந்து விழுந்தது.சரி சரி..இதை தான் முதலில் ப்ரோக்ராம் செய்திருப்பார்கள் போலும்..திருந்துங்கப்பா!

3
==

சமீபத்தில் தான் ட்விட்டரில் இணைந்தேன். (அடப்பாவி ஆபீசில் வேலையே செய்யமாட்டாயா ? ) இடைவிடாமல் அங்கே எல்லாரும் ட்விட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.பாதிக்கும் மேல் எல்லாம் அர்த்தமற்ற குப்பைகளாக உள்ளன..'நான் இப்போ உச்சா போகிறேன்' 'மம் மம் சாப்பிடுகிறேன்' 'அவன் இவன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்றெல்லாம் எப்படியாவது உலகத்தின் கவனத்தை நம் பக்கம் இழுத்து விடலாம் என்ற வீண் முயற்சிகள். ஆனால் சில ட்விட்டுகள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஷேக்ஸ்பியருக்கும் காளிதாசனுக்கும் தோன்றாத கற்பனைகள் பல இவர்களுக்குத் தோன்றுகின்றன.வைரமுத்துவுக்கும் வாலிக்கும் வராத சிந்தனைகள் இவர்களுக்கு வருகின்றன.

பக்கம் பக்கமாக எழுது என்றால் உற்சாகமாக எழுதி விடலாம்..ஆனால் சொல்லவந்ததை 140 எழுத்துகளுக்குள் அடக்கி சொல்லு என்றால் கஷ்டம் தான். இது எல்லாருக்கும் கைவரும் கலை அல்ல.

ட்விட் என்பதை தமிழில் 'கீச்சுதல்' என்கிறார்கள். Google translation இதற்கு அர்த்தம் தெரியாமல் வழக்கம் போல
முழித்தது. இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்திய பெருமை ஆண்டாளையே சேரும். (கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேரரவம்- திருப்பாவை)அதாவது பறவை ஒன்று 'ட்விட்' என்று கணநேரத்தில் கீச்சி முடிப்பதைப் போல மனதில் பட்டதை 'நச் ' என்று சொல்லவேண்டுமாம்.கீச்சுதல் என்று சொல்வதை விட நச்சுதல் என்று சொன்னால் நன்றாக இருக்கும்! நச்சுதல் என்பதற்கு விரும்புதல் என்ற நல்ல அர்த்தம் கூட தமிழில் இருக்கிறது என்பதால் சொன்னேன்.. இன்டர்நெட் எல்லாம் வருவதற்கு யுகங்கள் முன்பாகவே ட்விட்டிய ஒருவர் இருக்கிறார்.. 'சொல்லின் செல்வன்' எனப்படும் அனுமார் தான் அது. 'கண்டேன் சீதையை' என்று அவர் ட்விட்டியது தான் உலகத்தின் முதல் ட்விட்..நாமெல்லாம் TOO LATE ...

இப்போது சில கீச்சுகள் உங்களுக்காக :-

krpthiru: என்னை மின்சார நாற்காலியில் இருக்க வைக்க முயற்சி: ராஜபக்சே // நீங்க செஞ்சதுக்கு உங்கள அமெரிக்க அதிபர் நாற்க்காலியிலா உட்கார வைப்பாங்க ?!


vaanmugail: எதையோ மறந்ததை மட்டும் தெளிவாக ஞாபகம் வைத்து இருக்கும் மூளையை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.


Samudra123: பிறரை நமக்கு அறிமுகப்படுத்துகிறாள் நம் தாய். நம்மை நமக்கே அறிமுகப்படுத்துகிறாள் நம் மனைவி .பிறருக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறாள் நம் மகள்

minimeens: ஆண்கள் தண்ணியடிச்சா தேவையில்லாம உளறுவானுக, கொழைவானுக, சண்டபோடுவானுக. பொண்ணுக தண்ணியடிக்காமயே இதயெல்லாம் செய்வாங்க

selvu: ஒரு நொடிப்பொழுதே வாழ்கிறது ஒவ்வொரு நொடியும்.

arattaigirl மனைவி கையால சாப்டுட்டு ஆயிரம் குறை சொல்ற சம்சாரிகளை விட தெரிஞ்சதை தாங்களே சமைச்சு சாப்பிட்டுக்கற பேச்சிலர் பசங்களே குட் பாய்ஸ்

arattaigirl எனக்கான மகிழ்ச்சிகள் உன்னிடமே சேமிக்கப்பட்டுள்ளன.... நொடிக்கொருமுறை இருமடங்கு வட்டி தரும் அதிசய வங்கி நீ!


Samudra123 கம்ப்யூட்டரில் பக்கம் பக்கமாக எழுதுபவன் புத்திசாலி அல்ல..அவ்வப்போது மறக்காமல் 'SAVE ' செய்பவனே புத்திசாலி

Samudra123 என்பது நான் தான்

4
==
சாலையில் மாட்டு வண்டி செல்வதை இயல்பாக எடுத்துக் கொள்ளும் நமக்கு ஏனோ இந்த ஆம்புலன்ஸ் மட்டும் அந்நியமாகவே இருக்கிறது. அதன் அலறும் சைரன் , அபார வேகம் இதெல்லாம் எப்படா அது நம்மை விட்டு ஒழியும் என்ற அசௌகரியத்தை
நம்முள் ஏற்படுத்தும். ஒரு முறையாவது அதன் உள்ளே அமர்ந்திருப்பவர்களின் மனநிலையை உணர்ந்து பார்த்திருப்போமா?
பயணங்களிலேயே மிகக் கொடுமையானது இந்த ஆம்புலன்ஸ் பயணம். ஆம்புலன்சில் பயணித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எனக்கு இது வரை இல்லை..ஒரு முறை வாய்ப்பு வந்த போதும் 'நான் பாட்டியைப் பார்த்துக்கிட்டு வீட்டிலேயே இருந்திர்றேன்" என்று AVOID செய்து விட்டேன்.இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளுக்கு காலம் மெதுவாக நகரும் என்கிறது இயற்பியல்.ஆம்புலன்சுக்கு அது மிகவும் பொருந்தும் போலிருக்கிறது.

5
==

முன்பின் தெரியாத ஒரு நபரை எப்படி அழைப்பது? 'சார்' என்றால் அது தேவையில்லாத பிசினஸ் தன்மையை ஏற்படுத்தும்.
ஹலோ என்றால் டெலிபோன் சாயல் வெளிப்படும். UNCLE என்று அழைத்தால் எழுபது வயது தாத்தா கூட நம்மை முறைத்துப் பார்ப்பார். 'என்னங்க' என்றெல்லாம் கோயமுத்தூர் கிராமத்துப் பெண் மாதிரி அழைக்க முடியாது . இதற்கு இன்றைய இளை
ஞர்கள் கண்டுபிடித்து வைத்துருக்கும் வார்த்தை 'பாஸ்' ! (BOSS) பாஸ் கொஞ்சம் நகருங்க, பாஸ் இது உங்க பேனாவா,
என்ன பாஸ் இவ்ளோ சொல்றீங்க, என்று அப்துல் கலாமில் இருந்து ஆட்டோ டிரைவர் வரை பாஸ் என்று விளிக்கலாம் போல இருக்கிறது.இங்கிலீஷ் டிக்ஸனரியில் இதற்கு
a term commonly used to address a person who is unfamiliar என்று விளக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .

6
==
ஒரு ஓஷோ ஜோக்


லிட்டில் ஹெர்னி ஸ்கூலில் இருக்கும் போது அவன் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. 'எர்னி , மனதைத் தேற்றிக் கொள்
பேடி (PADDY) மீது லாரி ஏறி விட்டது' என்றாள் அவன் அம்மா. ஹெர்னி 'அப்படியா?' என்று ஒரே வார்த்தை சொன்னானே தவிர அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சாயங்காலம் வீடு வந்து டிபன் சாப்பிடும் போது அவன் நாய் பேடியைத் தேடினான்..அம்மா எங்கே பேடி? என்றான்

"அதான் போன் பண்ணி சொன்னேனே, அதன் மீது லாரி ஏறி மத்தியானம் செத்துப் போய் விட்டது" என்றாள் அம்மா

ஹெர்னி பயங்கரமாக ஆர்பாட்டம் செய்து அழுதான்..

"ஹெர்னி, என்ன ஆச்சு
?போனில் இதை இயல்பாக எடுத்துக் கொண்டாயே?" என்றாள் அம்மா..

"அம்மா நீ போன் பண்ண போது எனக்கு அது 'டாடி' (DADDY)ன்னு கேட்டுது' என்றான் ஹெர்னி..முத்ரா

12 comments:

G.M Balasubramaniam said...

வினாக்களில் இன்னொரு வகை, - பதில் மற்றவனுக்குத் தெரிகிறதா என்று சோதிக்க கேட்கப் படுவது. உறவுகள் குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதலாமே. பார்க்க : என் பதிவு.

vasu said...

நீங்கள் facebook இலும் இயங்கலாமே?

இராஜராஜேஸ்வரி said...

கலைடாஸ்கோப் ஒவ்வொரு முறையும் வேற்ய் அர்த்தங்களைக் காட்டும் உன்னதப் பகிர்வு. பாராட்டுக்கள்.

Abarajithan said...

//டெக்னாலஜியை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று சிலர் செய்யும் அலும்புகள் தாங்கமுடிவதில்லை. GOOGLE TRANSLATION ஒரு உதாரணம்.//

இதை (மட்டும்) நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். "கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றார் பாரதியார். நாமும் எவ்வளவுதான் இணையத்தில் டைப்படித்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பு எனும் ஒரு வசதியை இதுவரை எந்தவொரு நிறுவனமும் இலவசமாக (இயந்திரமயமாகவும்) தரவில்லை.

ஆனால் கூகிள் மொழிபெயர்ப்பு மட்டும் பல ஆராய்ச்சிகளுக்கு பின்பு அல்பா பதிப்பாக இச்சேவையை வெளியிட்டுள்ளது மிகவும் பாராட்டத் தக்கது. பிரச்சனை கண்டிப்பாக வரும், அதை நாம் கட்டாயம் களைவோம் என்றும் அவர்கள் அறிக்கை விட்டுள்ளார்கள்.

எனவே, ஒரு பயனுள்ள சேவையை கிண்டலடிப்பதை விடுத்து, கூகுளுக்கு உதவ முடிந்தால் http://translate.google.com/toolkit இந்தத் தளத்துக்குச் சென்று சில கடினமான இணையத்தளங்களை மொழிபெயர்த்துக் காட்டுவது மூலமும், glossary களை வழங்குவது மூலமும் எம்மாலான உதவிகளை தமிழுக்கு செய்யலாம்..

நன்றி...

Abarajithan said...

"First eluttellam Adi Alphabetically
Bhagwant mutarre World "

:) LOL..

//vaanmugail: எதையோ மறந்ததை மட்டும் தெளிவாக ஞாபகம் வைத்து இருக்கும் மூளையை நினைத்தால் வியப்பாய் இருக்கிறது.

Samudra123 கம்ப்யூட்டரில் பக்கம் பக்கமாக எழுதுபவன் புத்திசாலி அல்ல..அவ்வப்போது மறக்காமல் 'SAVE ' செய்பவனே புத்திசாலி//

சூப்பர்...

bandhu said...

அபராஜிதன் கூகிள் டிரான்ஸ்லேட் குறித்து எழுதியதை ஆதரிக்கிறேன். அப்புறம், ஜோக் அபாரம்! (எதற்கும், Daddy உடன் ரைம் ஆகிற பெட் எதுவும் என் குழந்தைகளுக்கு வாங்கித்தர கூடாது)

பத்மநாபன் said...

வினா வகைகள் அருமை...
எல்லாத்திலும் இதிகாசத்தையும் புராணங்களையும் இழுப்பது உங்களுக்கு நன்றாக வருகிறது...

ஒஷோ நிறைய ஸ்டாக் வச்சிருக்கிங்க போல....

HVL said...

//இங்கிலீஷ் டிக்ஸனரியில் இதற்கு a term commonly used to address a person who is unfamiliar என்று விளக்கம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை//
:)
Google translation நல்லாயிருக்கு.

Nagasubramanian said...

superb samudhra.
esp ur philosophy abt life-question and ambulance-physics.

நெல்லி. மூர்த்தி said...

நீங்கள் தெரிவிக்கும் குறைகள் கூகிள் தமிழ் மொழியாக்கத்தில் மட்டுமல்ல அரபியிலும் அப்படியே. இருப்பினும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மெருகேற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது. நம் தமிழகத்தில் தமிழுக்காகவே வாழும் தானைத்தலைவர்களும், தமிழன்னைகளும் அதிகாரத்தில் இருந்த போதும், இருக்கும் போதும் செய்ய விழையாததை இலவசமாக இக் கூகுள் நிறுவனம் தர முன்வரும் போது அதை நாம் வளர்த்தெடுக்க முனைவதே சரியான முறை! ஆதலால் இது போன்ற சேவைகளை விமர்சிக்கும் போது நகைச்சுவை இருக்கலாம் ஆனால் நக்கல் வேண்டாமே!

ஸ்ரீராம். said...

கடைசி ஜோக் டாப். வலைச்சரத்தில் RVS அறிமுகம் பார்த்து வந்தேன். அடிக்கடி வரத் தோன்றுகிறது. Interesting.

Golding said...

வினாக்களில் இன்னொரு வகை, - பதில் மற்றவனுக்குத் தெரிகிறதா என்று சோதிக்க கேட்கப் படுவது. உறவுகள் குறித்து நீங்கள் ஒரு பதிவு எழுதலாமே. பார்க்க : என் பதிவு.