இந்த வலையில் தேடவும்

Tuesday, September 14, 2010

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
புறநானூற்றில் வரும் பிரபலமான ஒரு பாடல்:

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்

எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர் கொள்ளார்

இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்

வென்று எறிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே... (திணை: பொதுவியல் துறை: கையறு நிலை)

[ அந்த நாள் அந்த வெண்ணிலா...
எங்கள் தந்தையும் இருந்தார் எங்கள் குன்றும் இருந்தது
இந்த நாள் இந்த வெண்ணிலா...
பகைவர் எங்கள் குன்றைக் கைப்பற்றினர்; எங்கள் தந்தையும் இல்லை....
பாரி மகளிர் தம் தந்தையை இழந்த போது பாடியது]

இந்தப் பாடலில் உள்ள எளிமையைப் பாருங்கள்.... "அய்யோ! அப்பா போய் விட்டாரே! இனி மேல் எவ்வாறு வாழ்வோம்? அய்யோ எப்படியெல்லாம் இருந்தோம் எப்படியெல்லாம் அவர் வாரி வழங்கினார்...எல்லாம் போச்சே! கடவுள் குருடாகி விட்டாரா? எங்கள் குன்றைப் பறித்தவர்கள் நாசமாப் போக! அவர்கள் தலையில் இடி விழ!
என்றெல்லாம் ஓவராக சீன் காட்டாமல் சுருக்கமாக "அன்றைக்கும் இதே பௌர்ணமி வெண்ணிலா தான் வந்தது...எல்லாரும் சந்தோசமாக இருந்தோம் இன்றைக்கும் இதே வெண்ணிலாதான் ...ஆனால் இன்றோ எம்முடன் எங்கள் நாடும் இல்லை ,அப்பாவும் இல்லை" இவ்வளவுதான் பாட்டே...

ஒரு கவிதை என்பது எல்லாவற்றையும் 'கோனார்' நோட்ஸ் ரேஞ்சுக்கு விவரிக்கக் கூடாது... நாம் சொல்ல நினைப்பதை சுருக்கமாக சொல்லி விட்டு அதே சமயம் கவிதையின் மையக் கருத்தை நேரடியாகக் கூறாமல் படிப்பவர்களின் கற்பனைக்கு இடம் கொடுத்து அதை அவர்கள் தங்கள் திறமையால் உணரும் படிச் செய்ய வேண்டும்...அதாவது ஒரு 'நல்ல' கவிதை எழுதுபவனை மட்டும் அல்ல படிப்பவனையும் சிந்திக்க வைக்க வேண்டும்...

பாரி மகளிர் தங்கள் (ஒப்பாரிக்) கவிதையை வெறும் ஐந்து வரிகளில் முடித்து விட்டாலும் அதன் பின்னால் அவர்கள் வாழ்ந்து வந்த மலையை விட அதிகமான சோகம் மறைந்திருக்கிறது... இந்த நாகரிகமான பாடலின் பின்னே "அய்யோ ! அப்பா போய் விட்டாரே, என்று ஆரம்பிக்கும் ஒரு நீண்ட ஒப்பாரியே மறைந்துள்ளதைக் கவனிக்கவும்...

நம்மில் எத்தனையோ பேர் அப்பாவுடனான நிலாவையும் அப்பா இல்லாத நிலாவையும் பார்த்திருக்கக் கூடும்...(எத்தனை பேர் அப்பா அம்மாவுடன் நிலவின் அடியில் அமர்ந்து பேசுகிறார்கள் என்பது வேறு விஷயம்... )ஜடப் பொருட்கள் எல்லாம் குத்துக் கல்(?) போல் அப்படியே இருக்க மனிதர்களை மாத்திரம் அல்ப ஆயுசில் இயற்கை விழுங்கி விடுவது கொடுமை...இதனால் தானோ என்னவோ ஒருவர் இறக்கும் போது அவர் பயன் படுத்திய முக்கியமான பொருட்கள் சிலவற்றை அவருடன் சேர்த்தே எரித்து விடுகிறார்கள்....அவர் உணவருந்திய தட்டு, விரும்பி உடுத்திய உடை, சில சமயம் நகை மோதிரம் உட்பட....இல்லையென்றால் அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் வந்து உறுத்தும்...(கொஞ்ச காலத்திற்காவது) அதற்காக பாரி நிலவில் தன் மக்களுடன் மகிழ்ந்திருந்தான் என்பதற்காக அவன் இறந்ததும் அவனுடன் நிலவையுமா சேர்த்து எரிக்க முடியும்???

தான் இறந்த பின்னும் இந்த உலகம் எந்த வித மாற்றங்களும் இன்றித் தொடர்கிறது என்ற விஷயம் மனிதனை நெருடுகிறது...அவன் இறந்து போன அடுத்த நாளும் சூரியன் வரும் ...அவன் இறந்து போன பின்னும் தொலைக் காட்சிச் சானல்கள் 'இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக' என்று கூவிக் கொண்டிருக்கும்...பஸ்கள், ரயில்கள் வழக்கமான உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும், விளம்பரங்களில் சோப்பைப் பயன்படுத்திய மறு வாரமே சுமாரான ஒரு பெண் உலக அழகியாவது தொடர்ந்து கொண்டிருக்கும் ,மொத்தத்தில் எதுவுமே மாறாது....நான் சில சமயம் நினைத்துப் பார்ப்பது உண்டு... இந்த சூரியன் (அல்லது நிலவு) தனக்குக் கீழே எவ்வளவு மனிதர்களைப் பார்த்திருக்கும்? ஆதி மனிதன் ,அலெக்சாண்டர், ஹிட்லர் என்று 'எனக்கு அழிவே இல்லை' என்று கூவிய எவ்வளவு முட்டாள்களைப் பார்த்திருக்கும்? எவ்வளவு போர்களை மேலே இருந்து வேடிக்கை பார்த்திருக்கும்? அதற்கு மட்டும் உயிர் இருந்தால் பூமியின் ரகசியங்களை எல்லாம் நாம் அதனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்...

எவ்வளவு தான் இது போல வேதாந்தம் பேசி மனதைத் தேற்றிக் கொண்டாலும் தந்தை இல்லாத 'இற்றைத் திங்கள் இந்நிலவு 'தந்தை இருந்த அற்றைத் திங்கள் அந்நிலவு' போல் இருப்பதில்லை தான்...நிலவு என்னவோ அதே தான்...காற்று இல்லாமல் உயிர்கள் இல்லாமல் லூசுத் தனமாக ஒரே மாதிரி பூமியைச் சுற்றும் அதே நிலவு தான்...ஆனால் அன்று பார்த்த அந்த ஓளி, அந்த அழகு, அந்த மகிழ்ச்சி ஆகியவை இன்று ஏனோ இல்லை....காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டவர்களைக் கேட்டால் தேனிலவில் தோன்றிய நிலவு வேறு, கல்யாணம் ஆகிப் பத்து வருடம் கழித்து இன்று கிரகணத்தை வேடிக்கை பார்க்கும் போது தெரியும் நிலவு வேறு என்று தான் கூறுவார்கள்....

நம் குழந்தைப் பருவத்தில் மிக மிக அதிசயமாக, பிரம்மாண்டமாகத் தோன்றிய விஷயங்கள் இப்போது சாதாரணமாக ஆகி விடுகின்றன,,,நான் சிறியவனாக இருந்த போது
(ஆறு ஏழு வயது இருக்கலாம்) திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்றது நினைவிருக்கிறது ...அதைப் போல மகிழ்ச்சியான டிரிப்பை இது வரை நான் போனது இல்லை...கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பே உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது,,, இத்தனைக்கும் அப்போது 'reservation ' எல்லாம் இல்லை...கூட்டத்தோடு கோவிந்தாவாக ரயிலில் ஏற வேண்டியது தான்...

உற்சாகத்துடன் உடைகளைப் பாக்(pack ) செய்தது...துள்ளிக் குதித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றது, ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தது, கியூவில் நிற்கும் போதும் குதூகலத்துடன் நகர்ந்தது ,,,, ஹோட்டலில் தங்கியிருந்த போது பெய்த மழையில் அம்மாவுக்குத் தெரியாமல் நானும் அக்காவும் நடந்தது, பிளாட்பாரத்தில் அமர்ந்து பூரி சாப்பிட்டது, பத்து ரூபாய்க்கு பைனாகுலர் வாங்கி விட்டு ஏதோ உலகில் விலையுயர்ந்த கேமரா ஒன்றை வாங்கி விட்டது போல குதித்தது, எல்லாம் அப்படியே நினைவிருக்கிறது....

இன்றும் கூடத் தான் எவ்வளவோ ரயில்களிலும், விமானங்களிலும் முன் பதிவுடன் செல்கிறேன் ...அந்த உற்சாகத்தைக் காணவில்லை.... இன்றும் கூட திருப்பதி செல்கிறேன்,,, மழையும் பெய்து கொண்டுதான் உள்ளது...அன்று பெய்த மழையை ஏனோ காணவில்லை...க்யூவில் நிற்கும் போது எரிச்சல் தான் வருகிறது.... இன்று எத்தனையோ ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டால் கூட அன்று பாட்டி தாத்தாவுடன் சாப்பிட்ட அந்த பூரியின் சுவை எந்த உணவிலும் கிடைப்பதில்லை....

அப்போதெல்லாம் வியாழக் கிழமைகளில் கோவிலுக்கு தாத்தா பாட்டியுடன் வீதியில் உள்ள பொடிசுகள் எல்லாம் 'பஜனை' க்குச் செல்வோம்...அதில் தான் எவ்வளவு சந்தோஷம்? பாட்டி கல்யாணியில் பாடினாலும், காம்போதியில் பாடினாலும், கமாசில் பாடினாலும் நாங்கள் பின் பாட்டு ஒரே மாதிரி ஜொய் என்று பாடுவோம்... பாட்டி சிரித்துக் கொண்டே அதைப் பார்த்து ரசிப்பாள்...இன்றும் வியாழக் கிழமைகள் வருகின்றன, இன்றும் அதே கோவில் அதே ராகவேந்திரர்...but something is missing !

கல்யாணங்களுக்கு சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்! கல்யாண மண்டபம் என்பது ஒரு தனி உலகம்...யாருடன் வந்தோம் என்பதே மறந்து விடும் அளவு ஓடுவது...பலூன் வாங்கி வாங்கி உடைப்பது, பட்சணம் தின்பது என்று தொடரும்....இன்று அதே கல்யாணங்கள், கல்யாண மண்டபங்கள் தான்...ஆனால் வயதும் வாலிபமும் வந்து விட்ட நமக்கு வேறு விதமான நினைவுகள் தான் வருகின்றன....

ஓகே...அந்த நாட்கள் திரும்பி வருமா என்று தெரியாது...but we do still have some hope ...எப்படி? நம் குழந்தைகள் வழியாக,,, இனிமேல் உங்கள் குழந்தைகள் தேவையில்லாமல் சத்தம் போடுவதாகக் கோபித்துக் கொள்ளாதீர்கள்...கல்யாண மண்டபங்களில் இங்கும் அங்கும் ஓடினால் 'வானரமே' என்று திட்டாதீர்கள்....வெளியே கூட்டிப் போகும் போது 'எல்லாம் வேண்டுமா சனியனே', என்று திட்டாதீர்கள்....அவர்களை இயந்திர வாழ்வில் திணிக்கும் முன்னர் 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்' என்று பாடுவதற்காகவாவது அவர்களுக்கு ஒரு சில உற்சாகமான கணங்களை விட்டு வையுங்கள் ....

1 comment:

Srivathsan said...

பிரமாதம்!