இந்த வலையில் தேடவும்

Friday, November 26, 2010

பிரஜா வாணி

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ பத்திரிக்கை ஆரம்பித்து விட்டேனென்று நினைக்க வேண்டாம்..இது ஒரு கவிதைத் தொடர் (supposed to be) பிரஜா வாணி என்றால் 'மக்கள் குரல்' என்று அர்த்தம்...ஏன் தலைப்பை தமிழில் வைக்க வில்லை என்றால் சும்மா தான்...(வலைப் பூக்களுக்கு வரி, வரிவிலக்கு எல்லாம் இல்லை தானே)




அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் பிரஜா வாணியை ,அதாவது, மக்கள் குரலை நாம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்..(யாரோ ஒரு அறிர் சொன்னாராம்: "My ears are so sharp that sometimes it cannot hear " ...)அவற்றில் நமக்கு ஏதாவது ஆதாயம் இருந்தால் ஒழிய 99 % அந்த குரல்கள் அப்படியே நம்மால் நிராகரிக்கப் பட்டு விடுகின்றன...சாலையின் இரு முனைகளை இணைக்கும் பாலங்களில் அமர்ந்து கொண்டு வாழ்க்கையின் மறுமுனை அறியாமல் கையேந்துபவர்களின் குரல்கள்...வாகனங்களுக்கு எரியும் சிவப்பு விளக்கை தன் வாழ்க்கைக்கான பச்சை விளக்காக பாவித்து இறுகிப் போய் விட்ட கண்ணாடிகளையும் , கண்களையும் பார்த்து சில்லறை கேட்பவர்களின் குரல்கள்...கையேந்துவது மானப் பிரச்சைனையா இல்லை கை ஏந்தக் கூட திராணி இல்லையா என்று அறிய முடியாமல் பஸ் நிலையங்களில் சுருண்டு படுத்திருக்கும் பாட்டிகளின் முனகல் குரல்கள் என்று பலப்பல ..

சரி இந்த குரல்கள் ஒரு புறம் இருக்கட்டும்...நம் அன்றாட வாழ்க்கையில் நாம் இன்னும் மிகப் பல குரல்களால் சூழப் பட்டிருக்கிறோம்..மிக மிக மெல்லிய குரல்கள்..மனிதனின் காதுகள் இருபது ஹெர்ட்சுகளுக்கும் கீழே கேட்கக் கூடிய திறன் பெற்றால் மட்டுமே கேட்கக் கூடிய மெல்லிய குரல்கள்...சில சமயங்களில் நமக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களின் நெஞ்சக் குரல்கள் கூட நமக்குக் கேட்பதில்லை...அறிவியல் வளர்ந்ததும் மனிதனின் கேட்கும் திறமை மிக மிகக் குறைந்து விட்டது என்று சொல்வார்கள்...அது சரி தான் போலிருக்கிறது..உதாரணமாக அன்பில்லாத கணவனுக்கு வாழ்க்கைப் பட்ட அபலைப் பெண் ஒருத்தியின் குரல், வேர்கள் விழுந்தாலும் விழுதுகள் தாங்கும் என்று நம்பி, கடைசியில் விழுதுகளாலும் வீசி எறியப்பட்ட பெற்றோர்களின் குரல், வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் வீட்டில் அடைக்கப் பட்டு அன்புக்கு ஏங்கும் மழலைகளில் குரல், உடல் ஆண் என்று அடம் பிடிக்க உள்ளம் பெண் என்று அடம் பிடிக்கும் அரவாணிகளின் குரல், தாலி ஒன்று தன் கழுத்தைத் தழுவ தவம் கிடக்கும் முதிர் கன்னிகளின் குரல்கள், என்று இவை மிக மிக நுட்பமான குரல்கள்..."ஐயா, அம்மா" என்று ஐந்து கட்டையில் அலறும் குரல்களே நமக்குக் கேட்பதில்லை...அடுத்தவருக்குத் தெரிந்து விடுமே என்று சிந்தியவொரு கண்ணீர்த் துளியை எந்திரனில் ரஜினி தன் வியர்வையை துடைப்பது போல கணத்தில் துடைத்து விட்டு , இயல்பாய் இருக்க முயலும் இந்த பாவப் பட்ட மனிதர்களின் மனதாழக் குரல்கள் நமக்கு எப்படி கேட்கும்? இந்தக் குரல்களை என்னால் இயன்ற வரை பதிவுகள் மூலம் பதிவு செய்யும் ஒரு சிறு முயற்சி தான் 'பிரஜா வாணி'....



சரி சும்மா எழுதி விட்டால் போதுமா? சமூகத்திற்காக என்ன செய்ய (கிழிக்கப்) போகிறாய்? என்று கேட்கலாம் ... நியாயமான கேள்வி ...எழுத்தாளர் சுஜாதா இந்த மாதிரி ஒரு கேள்விக்கு சொன்ன பதில்: "எழுத்துக்கள் நேரடியாக ஒரு சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரும் வரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவை ஆயுதங்கள் தான்...மறைத்து வைக்கப் பட்ட கன்னி வெடிகள் போல..சமயம் வரும் போது கண்டிப்பாக வெடிக்கும்...அதிகாரமும் நல்ல மனதும் (இது இரண்டும் ஒன்றாக இருக்க சாத்தியமா??) உள்ள ஒருவர் எழுத்துகளைப் படிக்க நேரிடும் போது அவை அந்த மனிதருக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே இந்த சமுதாய மாற்றத்திற்கும் காரணமாக அமையும்..."

இன்னொரு முக்கியமான விஷயம் பிரஜாவாணியில் ஒரு காதல் கவிதை கூட இருக்காது.... :) :)

சரி பொன்னியின் செல்வன் லெவலுக்கு முன்னுரையிலேயே பெரிதாக பில்ட்-அப் கொடுக்காமல் இனி பிரஜா வாணி...
...

சமுத்ரா

2 comments:

KANA VARO said...

புதுசா இருக்கு! பகிர்வுக்கு நன்றி

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்குங்க உங்க பிரஜா வாணி...