இந்த வலையில் தேடவும்

Tuesday, November 16, 2010

இருபத்து ஒன்று, பன்னிரண்டு -1

கொஞ்சம் பழைய டாபிக் தான் ...ஆனாலும் எழுதவதற்கு எதுவுமே கிடைக்காததால் இதை எடுத்து விடுகிறேன்...

2012 படம் உங்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கக் கூடும்...படத்தில் நிறைய அறிவியல் விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது...படத்தில் as usual ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டம் மட்டுமே இருக்கிறது...கட்டிடங்கள் பின்னால் இடிந்து விழுந்து கொண்டிருக்க ஹீரோயின் கார் மட்டும் சாகா வரம் வாங்கியது போல சிறிய கீறல் கூட இல்லாமல் தப்பித்து முன்னேறுகிறது...எரிமலை வெடிக்கும் பொது ஹீரோவுக்கோ அவர் குடும்பத்திற்கோ நகம் கூட வெந்து போவதில்லை..ஓகே தமிழ் படங்களுக்கு நாம் வழக்கமாக செய்வது போல் 'லாஜிக்கை' மறந்து விட்டால் அந்த பிரம்மாண்டத்திற்காக வேண்டுமானால் படத்தை கண்கொட்டாமல் பார்க்கலாம்...


இப்போது என்னவோ யாரும் அவ்வளவாக 2012 உலக அழிவு பற்றி பேசுவதில்லை...எனக்கு தெரிந்து பெரும்பாலானோர் (நான் உட்பட) அப்பாடா அப்படியாவது செத்துத் தொலையலாம் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள்..இயந்திர வாழ்கையில் எல்லாம் உப்பு சப்பு இல்லாமல் போய் விட்டது...ஒரு சுனாமியோ பூகம்பமோ வந்தால் ஒரு மாதத்திற்கு பரபரப்பிற்கு குறையிருக்காது...லோக்கல் நியூஸ் சானல்களுக்கு நல்ல தீனி கிடைத்து விடுகிறது...பிளாஷ் நியூஸ் எல்லாம் திரும்பத் திரும்பப் போட்டு பேனை பெருமாளாக்கி விடுகின்றன..நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை சாக இருக்கும்கிழவி வரை எல்லாரையும் பேட்டி எடுப்பார்கள்...எங்கிருந்தோ முளைத்த சில சமூக ஆர்வலர்கள் துணிகளையும் பொட்டலங்களையும் அனுப்பி வைப்பார்கள்...(ஒரு கேள்வி: சுனாமி வந்த பிறகு தான் அவர்கள் உங்கள் கண்களுக்குத்தெரிகிறார்களா? அது வருவதற்கு முன்பும் கிட்டத் தட்ட அவர்கள் அதே நிலைமையில் தான் இருக்கிறார்கள்) முதல்வர்கள் ஹெலிகாப்டர்களில் பறந்து பார்வை இடுவார்கள்...பிறகு வழக்கம் போல எல்லாம் அடங்கி விடுகிறது...நியூஸ் பேபர்கள் பழையபடி பார்லிமெண்டில் அமளி, பிரபல நடிகையின் காதல் ,பெண்கள் சாலை மறியல், சாராயம் விற்றவர் கைது, போன்ற அதி முக்கியமான விஷயங்களை வெளியிட்டு இடத்தை நிரப்பிக் கொள்கின்றன ...(இந்த மட்டரகமான செய்திகளைவெளியிட மரங்களை வெட்டுவது நியாயம் தானா என்று தெரியவில்லை)

சரி இன்னும் ரெண்டு வருடங்களில் உலகம் அழிந்து விடுமா? அற்பப் பதர்களான நமக்கு என்ன தெரியும்?நான் இதை எழுதி முடித்து விட்டு ஒரு மசாலா தோசை சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போய் திருமதி.செல்வம் பார்த்து விட்டு பாயில் படுத்த உடனே ஹார்ட் அட்டாக் வந்து அப்படியே ஆவியுலகம் போய் சேர்ந்து விடலாம்...நம் விதியையே கணிக்க முடியாத நாம் உலகத்தின் விதி பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிறோம்!

இன்னும் இரண்டு வருடங்களில் உலகம் அழிந்து விடும் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்கிறது ஒரு வெப்சைட்

கொஞ்சம் ஓவராகப் போய் உலகம் அழிய இன்னும் 765 நாட்கள் 16 மணிநேரம் 46 நிமிடங்கள் 15 செகண்டுகள் மட்டுமே இருக்கின்றது என்று கவுன்ட்-டவுன் எல்லாம் காட்டுகிறது..இதை வைத்துக் கொண்டு பிசினஸ் எல்லாம் நடக்கிறது...(நாம் பணம் கட்டினால் நம் குடும்பத்தை அந்த ஆபத்தில் இருந்து எப்படியேனும் காப்பாற்றி விடுவார்களாம்...வேறு கிரகத்திற்கு அழைத்துச் செல்வார்களோ என்னவோ..)
இது பைபிளிலேயே சொல்லியிருக்கிறது என்றும் கல்கி பகவான் சீக்கிரம் குதிரையேறி வரப்போகிறார் என்றும் சில கோஷ்டிகள் தங்கள் கற்பனைக் குதிரையை டாப் கியரில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன...

நம் பூமி இன்று இருக்கும் இந்த நிலையை அடைய அசாத்தியமான பொறுமையுடன் கோடிக்கணக்கான வருடங்கள் காத்திருந்தது...இன்று தன் தாயான பூமியையே அழிக்கும் அளவு ஆயுதங்களை செய்து வைத்திருக்கும் இந்த அரை வேக்காடு மனித இனத்தின் வாழ்வுக்குத் தேவையான வெப்பம், காலநிலை, நீர், காற்று , கார்பன் போன்ற பொருட்கள் சரியான அளவில் வரும் வரை கோடிக்கணக்கான ஆண்டுகள் பொறுத்திருந்து,இனி எதனாலும் பாதிப்பில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னரே உலகின் முதல் மனிதக் குரங்கை ஈன்றாள் பூமித்தாய்...

இப்படி யாரோ பார்த்துப் பார்த்து செய்தது போல உருவான இந்த அழகிய பூமி திடீரென்று,எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஒரு நன்னாளில் (அதாவது 21 , டிசம்பர் 2012 )அழிந்து போய் விடுமா? விடாது என்று தான் தோன்றுகிறது...நம் சூரியன் இன்னும் ஐந்து பில்லியன் (ஐந்தாயிரம் கோடி) ஆண்டுகள் சமர்த்தாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்...அந்த அளவெல்லாம் நம் பூமி தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது...(பூமி என்றொரு கோள் தன்னை சிவனே என்று சுற்றிக் கொண்டிருப்பது கூட சூரியனுக்குத் தெரியாது..) மனிதன் ஏதாவது கிறுக்குத் தனமாக செய்யாமல் இருந்தால் நம் பூமி இன்னும் நூறு கோடி வருடங்களாவது தன் நீலத் துகிலுடன் வானில் உலா வரும்...

இன்னொன்று , இங்கே உலகம் அழிவது என்பது மனித குலத்தின் அழிவையும் குறிக்கலாம்..இவர்கள் கூறுவது போல் ஏதாவது ஒரு சிறிய கோள் வந்து பூமி மீது மோதினால் அந்த அதிர்ச்சியில் பூமியின் உயிரினங்கள் அழிந்து போய் விடலாம்...ஆனால் ஒரு பெரிய பள்ளத்துடன் பூமி தன் பயணத்தை தொடரும் ..

சரி இவ்வளவு பேர் திரும்பத் திரும்ப சொல்வதால் இதை முற்றிலும் அறிவியலுக்கு புறம்பான மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விடவும் முடியவில்லை...எதை, எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு பூமி அழியும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்? அடுத்த அத்தியாயத்தில்...

சமுத்ரா

3 comments:

கக்கு - மாணிக்கம் said...

அந்த படம் வியாபாரம் ஆக வேண்டி கட்டிய புருடாக்கள் இவைகள். 2012 படம் வெளிவரும் முன்னர் முதல் மாதத்திலேயே அவர்கள் இந்த கட்டுக்கதைகளை இன்டர் நெட்டில் விட்டு விட்டார்கள். பெரிய பெரிய அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் பேட்டி என்று நிறைய அவிழ்த்து விட்டார்கள். இது வெறும் வியாபார தந்திரமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

philosophy prabhakaran said...

கக்கு மாணிக்கம் உங்களுக்கு மிகச்சரியாக பதிலளித்துள்ளார்... நிச்சயம் 2012ல் உலகம் ஆழியாது... பொய் உங்க புள்ளகுட்டிங்களை படிக்க வையுங்க...

Samudra said...

நான் உலகம் அழியும்னு சொல்லவே இல்லையே?