ப்ளாக் எழுதும் போது கிடைக்கிற ஒரு முக்கியமான advantage ...நாம் ஒரு பெரிய எழுத்தாளர் (?) ஆகி விட்டோம் என்று நினைக்கக் கூட அளவில் கிடைக்கிற ஒரு virtual satisfaction ...இது எனக்கே கூட நிறைய தடவை ஏற்பட்டிருக்கிறது...ஒரு நல்ல (?) பதிவு எழுதி விட்டு அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் (சில சமயம் ஒரு கமெண்டும் வராததைப் பார்த்தால் கூட )ஓ நமக்குள்ளும் ஒரு பிரபலமான எழுத்தாளன் கும்பகர்ணன் லெவலுக்கு தூங்கிக் கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் வருகிறது..
.
.
சில சமயங்களில் டி. வி சீரியல்களில் நடிப்பவர்கள் பத்து ரூபாய் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு நடிப்பார்கள்.. சரி சினிமாவில் தான் சான்ஸ் கிடைக்கவில்லை...இதிலாவது புகுந்து விளையாடலாம் என்று நினைத்தோ என்னவோ? (பலர் பெரிய திரையில் இருந்து downgrade ஆகி சின்னத்திரைக்கு வந்தாலும் சில பேர் இன்னும் t .v . உலகில் இருந்து திரைப்பட உலகிற்கும் சென்று கொண்டு தான் உள்ளார்கள் ) [இந்த நாட்கள் மிக அதிக தொலைவில் இல்லை: உங்கள் சன் டிவியில் தமன்னா நடிக்கும் 'கோமதி'...மெகாத் தொடர் ..காணத் தவறாதீர்கள்]சில பேர் விளம்பரங்களிலும் கொடுத்த காசுக்கு அதிகமாகவே நடித்து விடுகின்றனர்....(முதலில் விளம்பரங்களில் நடித்து இம்ப்ரெஸ் செய்து சில பேர் நேரடியாக சினிமாவில் கூட நுழைந்து இருக்கிறார்களாம்)
இது மாதிரி ப்ளாக் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் சக்திக்கு மீறி எழுதுகிறார்கள்...ஒரு நாள் யாராவது ஒரு டைரக்டரோ ,பிரபல சினிமா கவிஞரோ நம் ப்ளாக்கைப் பார்த்து "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' என்று பாட்டுப் பாடாத குறையாக வெள்ளித் திரைக்கு வா என்று சிவப்புக் கம்பளம் விரிக்க மாட்டார்களா என்ற நப்பாசையாகக் கூட இருக்கலாம்...ஆனால் நிஜங்கள் வேறு விதமாக உள்ளன...உண்மையிலேயே திறமை உள்ள நிறைய பேர் ப்ளாக்- பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை...(நிஜமான கவிகள் கவிதை எழுதி விட்டு ச்சே! நல்லா இல்லை! என்று கிழித்துப் போட்டு விடுகிறார்கள்...) அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக திறமையானவர்கள் சிலர் எழுதினாலும் பிரபலமாவதில்லை...எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கு, கவிஞர்களை அடையாளம் கண்டு மேலே கொண்டு வருவதற்கு அதிகாரமும்,பதவியும் உள்ள சிலர் தமிழ்மணம்.காம் என்று டைப் செய்து பதிவுகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்..
இன்றைய பதிவுலகில் பெரும்பாலான பதிவுகள் (30 %)கவிதைகளைத் தாங்கி வருகின்றன...சந்தோஷம்...தமிழ்நாட்டில் நிறைய கவிஞர்கள் உருவாகி விட்டார்கள் போலிருக்கிறது... ஆனால் கவிதை என்றாலே 'காதல்' தான் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை...ஒரு வகையில் இரண்டுமே ஒரு விதமான அதிகப்படுத்துதல் (exaggeration ) என்பதால் கூட இவை இரண்டும் இணைக்கப்பட்டு இருக்கலாம்..ஒரு வேளை blogspot என்பது இலவசமாக இல்லாமல் ஒவ்வொரு பதிவுக்கும் நூறு ரூபாய் என்று ஏதாவது இருந்திருந்தால் இப்படி கவிதைகளை அள்ளி விடுவார்களா தெரியவில்லை...கவிதை என்பது அதைப் படித்து முடிந்த பின் இதயத்தை என்னவோ செய்ய வேண்டும்...அந்த மாதிரி கவிதைகள் மிக மிக குறைவு..கிட்டத் தட்ட பூஜ்ஜியம்...(யாரோ சொன்னார்களாம் Prose is written by the brain , for the brain ,of the brain .... poem is written by the heart , for the heart , of the heart ..) கவிதை எழுது முன் அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்று தயவு செய்து பாருங்கள்...இல்லை என்றால் ப்ளீஸ், blogspot சர்வரின் இடத்தை மிச்சம் செய்யுங்கள்...
அடுத்த பத்து சதவீத பதிவுகள் so called 'திரைப்பட விமர்சனங்களாக' உள்ளன..எனக்குத் தெரிந்து 'எந்திரனுக்கு'மட்டும் ஒரு ஐநூறு பேர் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் எழுதி தங்கள் திரையுல ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்...ஆனால் எவ்வளவு இடங்களில் தான் விமர்சனங்களை படிப்பது? சன் டிவி, ராஜ் டிவி தொடங்கி, விகடன், குமுதம், கல்கி குங்குமம் என்று அந்த படத்தை எல்லாரும் ஸ்டில் ஸ்டில்லாக அலசி படாத பாடு படுத்தி விடுகிறார்கள்...(மதிப்பெண் வேறு போடுகிறார்கள்...) என்னைக் கேட்டால் ஒரு படத்தை விமர்சனம் செய்யும் உரிமை ஒரு திரைப்பட தொழில்நுட்பக் கலைஞருக்கோ ,இயக்குனருக்கோ அல்லது திரைப்படக் கல்லூரியில் படித்தவருக்கோ மட்டுமே உள்ளது... யார் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று இருப்பது போல யார் வேண்டுமாளாலும், ரகுமான் பாட்டு சரி இல்லை, லாஜிக் சரி இல்லை, என்றெல்லாம் அள்ளி விடுகிறார்கள்...நாமெல்லாம் ஒரு ரெண்டு நிமிடம் ஓடும் விளம்பரம் ஒன்றை செய்து பார்த்தால் தான் அதன் கஷ்டம் தெரியும்..
தமிழர்கள் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள் என்பது பதிவுலகில் வலம்வரும் 25 % நகைச்சுவை (also called மொக்கை) பதிவுகளைப் பார்த்தால் தெரிகிறது...ஆனால் எத்தனை நேரம் தான் சிரித்துக் கொண்டே இருப்பது? (உதாரணம்: உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும், ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.)இந்த மாதிரி பதிவுகளில் பதிவை எழுதியவர்களும் அதன் follower -களும் மாறி மாறி கமெண்டுகளில் பேசிக்கொள்கிறார்கள்...இந்த மாதிரி காமெடிகள் நன்றாகவே இருக்கின்றன...ஆனால் உங்கள் creativity - ஐ வேறு விஷயங்கள் மீதும் திருப்பினால் நன்றாக இருக்கும்...
ஓகே இனி சில suggestions :
*பதிவுலகத்தின் (உண்மையான) திறமைகளையும் வெளி உலக வாய்ப்புகளையும் இணைக்க சில விஷயங்கள் வேண்டும்... தமிழ்மணம் போன்ற தளங்கள் வெறும் திரட்டிகளாக இல்லாமல் பதிவர்களை பத்திரிக்கை உலகிற்கோ, சினிமா உலகிற்க்கோ அறிமுகம் செய்யும் வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும் ..
*திரட்டிகள் போட்டிகளை அடிக்கடி நடத்தி வலைப் பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும்
*பதிவர்கள் சந்திப்புகள் அடிக்கடி நடக்க வேண்டும்..(location வாரியாக சங்கம் கூட அமைக்கலாம்
*கைக்கு வந்த எதையோ கிறுக்காமல் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் பதிவர்கள் 'healthy discussion ' நடத்தலாம்...."அவனை அடி, இவனை அடித்துத் துரத்து, நீ பெரிய யோக்கியனா?" என்றெல்லாம் சண்டை போடாமல்
*ஒவ்வொரு தலைப்பின் கீழும் (ஆன்மிகம், அரசியல், அறிவியல், சினிமா) சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து அறிவிக்கலாம்
*முடிந்தால் பதிவுகள் Subject matter expert களால் 'சென்சார் ' செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படலாம்
சமுத்ரா
19 comments:
well said.
you said good ideas.
i am not think so, anyone implement this)))
interesting analysis. i fully agree with you.
சரியான மதிப்பீடு. இருப்பினும் அனைவரும் அவரவ்ர்க்கு முடிந்ததைத்தான், விருப்பமானதைத்தான் எழுத முடியும். ஒரு சிறந்த எழுத்தாளர்க்கு, கவிஞர்க்கு இணைய, கணினி வசதியில்லாமல் போகலாம். சராசரியான ஆட்களுக்கு கிடைக்கும்போது அவர்கள் இயல்பின்படிதான் வெளிப்படுத்த இயலும். கவிதை எழுதாவிடில் சர்வரின் எவ்வளவு இடத்தை மிச்சப்படுத்த முடியும். என்னைப்பொறுத்தவரையில் தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களைவிடவும் பதிவுலகம் நன்றாகவே இருக்கிறது. பதிவுலகிலேயே நீங்கள் வெறுப்படைந்தால் ட்விட்டரில் காண்பவற்றையெல்லாம் என்ன செய்வது?
யாரும் யாரையும் இப்படிதான் எழுத வேண்டும் என்று சொல்ல முடியாது. அதுதான் வலைப்பூக்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். நேற்று மந்திரப் புன்னகை படத்திற்கு பதிவர்களுக்கு என்று சிறப்பு கட்சி ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அதேபோல், இங்கு இருக்கும் பதிவர்கள் பலர், சில பத்திரிகைகளிலும் எழுதி வருகின்றனர். சத்தமே இல்லாமல், ஒரே சமயத்தில் பல பத்திரிகைகளில் அவர்கள் கட்டுரை/கவிதை/கதை வந்திருக்கும். அவரவருக்கு என்ன விருப்பமோ அதை செய்யலாம். ஆனால், நல்ல தலைப்புகளில் எழுதுபவரை ஊக்குவிக்க வேண்டும்
உண்மையிலேயே திறமை உள்ள நிறைய பேர் ப்ளாக்- பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை....///
ungalukku theriyuma..?
வலைபூ மன எண்ணங்களின் சிறந்த வடிகால்.
பிரபல தினசரி பத்திரிக்கைகளில் உயர்மட்டத்தில் பணியாற்றும் என்னை போன்ற பல நிருபர்கள் சில சமயம் நொந்துகொள்வோம்.
எங்கள் படைப்புகள் வெட்டி சுருக்கப்படும் போது எங்களுக்கு வரும் மன வலிக்கு மருந்தே இல்லை.
அதைவிட கொடுமை எங்களுடைய படைப்புகள் அரசியல், வியாபாரம், அரசு, சட்ட கட்டுப்பாடுகள் உட்பட சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியிடப்பட மாட்டாது.
கருவான குழந்தையை போற்றி பொதிந்து 10 மாதம் வயிற்றுக்குள் வளர்த்த பின்னர். இந்த குழந்தை பிறக்கவேண்டாம். வயிற்றிலேயே கொன்றுவிடுவோம் என்றால் அந்த தாயுக்கு வரும் மன வலி எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்.
என்னை விட்டுவிடுங்கள் எங்காவது ஒரு கண்கானாத தேசத்திற்கு சென்று பிள்ளை பெற்றுக்கொள்கிறேன் என்று தான் தாய் கதறுவாள். அதே நிலை தான் எங்களை போன்ற அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கே ஏற்படுகிறது.
எங்கள் எண்ணங்களை தங்குதடையின்றி வெளியிட மிகமிக மிகச்சிறந்த வடிகால் வலைபூ.இங்கு எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நாங்களே அனைத்திற்கும் அதிபதி.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கே வலைப்பூ வரபிரசாதமாக இருக்கிறது. அப்படியிருக்க, எழுத துடிக்கும், எண்ணங்களை வெளிப்படுத்த துடிக்கும் எழுத்துறை அல்லாதவர்களுக்கு எவ்வளவு தூரம் வலைப்பூ உதவியிருக்கிறது என்பதை மிகமிக வியப்பாக பார்க்கிறேன்.
எண்ணங்களை வடிக்க எந்த கட்டுப்பாடும் வேண்டாம். சபை நாகரீகம் மட்டும் போதும்.
எல்லா படைப்புகளும் சிறந்ததே. எண்ணம்போல பலவண்ணங்களில் தமிழ்பதிவுலகம் பூத்துக்குலுங்கட்டும். அதற்கு நிறங்களோ தகுதி பிரிவுகளோ வேண்டாம்.
இது இயற்கை வனமாகவே இருக்கட்டும், மனிதனின் செயற்கை பூங்காவாக வேண்டாம் என்பதுவே எனது கருத்து.
நன்றி.
நண்பரே, உங்கள் பதிவை படித்ததும், உங்கள் கருத்துக்கள் என் எண்ணங்களோடு ஒத்துபோனதால் தமிழ் மொழி மாற்றியை கூட தேடாமல் பின்னூட்டம் இட்டேன். இப்போது உங்களுக்கு வாக்கும் அளித்து விட்டேன்.
`` எங்கள் எண்ணங்களை தங்குதடையின்றி வெளியிட மிகமிக மிகச்சிறந்த வடிகால் வலைபூ.இங்கு எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நாங்களே அனைத்திற்கும் அதிபதி.``
தமிழ்மலர் அவர்களே, உங்களுடைய வாதமும் ஏற்றுகொள்ள கூடியதே. உங்கள் பின்னூட்டம் உங்கள் எழுத்தில் இருக்கும் தரத்தை காட்டுகிறது. ஆனால் பல பதிவுகள் பிரபலமாக இருந்தாலும் அதில் தரமில்லை. எனவே தரமானவற்றை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நல்ல தளத்தை தர ஒரு சென்சார் இருப்பது நல்லதுதான்
உங்க பதிவு அருமை
- ஆனா பல இடங்களில் நீங்க ஒரு வலயதுக்குள்ள மக்களை அடைச்சி நான் கொடுக்குற சுதந்திரம் எபபடி இருக்கு என்று கேட்பது போல் உள்ளது.
இங்க எழத வர எத்தனையோ பேர் துட்டு கிடைக்கும்னோ, புகழ் கிடைக்கும்னோ எழுதல.
மற்றும் என்னைப்பொறுத்தவரை
இந்த பதிஉலகம் ஒரு உளவியல் ரீதியான மருந்து. நீங்க ஒரு ஆள கைல குச்சி வச்சிக்கிட்டு இப்படித்தான் எழுதணும் சொன்னா......................
நல்ல விடயம், பகிர்வுக்கு நன்றி
பின்னூட்டம் எழுதிய எல்லாருக்கும் மிக்க நன்றிகள்..நீங்கள் சொன்னது போல, பதிவுலகம் நம்மில் பெரும்பாலான வர்களுக்கு ஒரு வடிகாலாக இருக்கிறது...இந்த ஒரே காரணத்திற்காக இதன் தரத்தை குறைத்து விட வேண்டாம் என்பது தான் என் தாழ்மையான கருத்து ..இது வெறும் உணர்சிகளின் வடிகாலாக இல்லாமல் உண்மையான திறமைகளின் களஞ்சியமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
நீங்க ஓஷோ வாசகரா நானும் வரின் வாசகர்தான்....தொடர்வோம் ஓஷோவின் பயணத்தை ...உங்கள் பதிவு அருமை
//(location வாரியாக சங்கம் கூட அமைக்கலாம்
ரைட்டு.. வாங்க நானும் உங்க லொகேசன்தான்.. நம்ம சங்கத்தை கூட்டிடுவோம்...
மிகுந்த முயற்சி எடுத்து வலையுலகத்தை அலசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
வலையுலகத்தை விட்டு விட்டு நிஜ உலகத்தில் நடக்கும் மாற்றங்களை சிந்தித்துப்பாருங்கள். எந்த மாற்றமாவது தனி மனிதனால் கொண்டுவரப்பட்டதா? யாரால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று இனம் காணமுடியாதபடிதான் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சில மாற்றங்கள் நன்மை பயக்கின்றன. சில தீமை பயக்கின்றன. நாம் ஏதாவது செந்ந முடியுமா?
எதிர்மறையாக சிந்திக்கிறேன் என்று என்னைக் குற்றம் சாட்டலாம். ஆனால் நடைமுறை யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
"முடிந்தால் பதிவுகள் Subject matter expert களால் 'சென்சார்' செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படலாம்"
தற்போது நடக்கும் இந்த பதிவு யுத்தத்திற்கு சரியான தீர்வு சொல்லி உள்ளீர்கள்.
நண்பரே நான் 25 வருடங்களாக என்னுடைய 15 வது வயதிலிருந்து கவிதை எழுதி வருகிறேன்.(அதற்கு முன்னர் எழுதியதை என் அப்பா சொல்லிக் கிண்டல் பண்ணுவார்கள்). எங்கள் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள், நண்பர்களைத்தவிர என் கவிதைகள் பலருக்கு தெரியாது. அதன் வலி உங்களுக்கு தெரியாது. ஏதோ இணையம் இப்போது எங்களுக்கு ஒரு வடிகாலாக உள்ளது. எவ்வளவோ வெட்டியாகவும் ஆபாசமாகவும் பலர் எழுதும் பொது கவிதையை மட்டும் ஏன் வெறுப்போடு பர்ர்க்கிறீர்கள்? என் வலைப்பக்கம் வந்து சென்று பிறகு சொல்லுங்களேன்.
இன்று தான் உங்கள் வலைப்பூ வருகிறேன்.(அதுவும் உங்களின் இந்தப் பதிவு மூலம்).
நீங்கள் பதிவுலகை வெளியிலிருந்து பார்ப்பதுபோல் உள்ளது இப்பதிவு.நாம் இப்படியும் எழுதலாமே என்று சொல்லலாமேத் தவிர இதை எழுதக்கூடாது என்று சொல்ல உரிமை இல்லை.( உதாரணம் காதல் கவிதைகள்)
நீங்களே உங்களுடன் நிறைய இடங்களில் முரண்படுகிறீர்கள்.
//ஒரு வேளை blogspot என்பது இலவசமாக இல்லாமல் ஒவ்வொரு பதிவுக்கும் நூறு ரூபாய் என்று ஏதாவது இருந்திருந்தால் இப்படி கவிதைகளை அள்ளி விடுவார்களா தெரியவில்லை//
ஈசன் கணக்கையும் இன்னும் சில ஹைக்குக்களையும் மீண்டும் படியுங்களேன்.
Your suggestions are good.
நான் இந்த ப்ளாக்கில் எவ்வளோவோ(?) எழுதியிருக்கிறேன்...(அறிவியல், ஆன்மிகம்...)
அதற்கெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ரெண்டு கமெண்டுகள் வந்திருக்கின்றன...(போனால் போகட்டுமே என்று )அதற்கெல்லாம் கமெண்டு போடாதவர்கள் இந்த ஜுஜுபி பதிவுக்கு வரிந்து கட்டிக் கொண்டு போடுவதைப் பார்த்தால் நம்மிடையே "intolerance" அதிகரித்து விட்டதோ என்று தோன்றுகிறது...(இந்த மாதிரி ஏதாவது முரண்பாடாக எழுதினால் தான் நிறைய கமெண்டு வரும் என்றும் தெரிகிறது) "நீ என்ன சொல்லுவது, எங்களை கவிதை எழுத வேண்டாம் என்று" என்ற தொனியிலேயே நிறைய கமெண்டுகள் வந்துள்ளன..உங்களை எழுத வேண்டாம் என்று சொல்வதற்கு நான் யார்? எனக்கென்று இந்த உலகில் எந்த அடையாளமும் இல்லை...மேலும் நான் சொல்லி விட்டேன் என்பதற்காக யாரும் இன்றிலிருந்து எழுதுவதை நிறுத்தி விடப்போவதும் இல்லை..கவிதையே எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை..பதிவை இன்னொரு முறை தயவு செய்து படிக்கவும்...உண்மையில் நான் கவிதைகளின் காதலன்..பாரதியும், தாசனும், சுரதாவும் , கவிமணியும் பாடிய கவிதைத் தமிழ் இன்று வலைப் பூவில் என்ன பாடு பாடுபடுகிறது என்று உங்களில் பலருக்குத் தெரியும்..please dont get emotional ...மேலும் "எங்களுக்குத் தோன்றியதை எழுத சுதந்திரம் இல்லையா?" என்று கமெண்டுகளில் கேட்கிறார்கள்...100 % you have ..அதே மாதிரி என் மனதில் பட்டதை எழுத எனக்கு சுதந்திரம் இல்லையா? எனக்கு பெரும்பாலான கவிதைகளை படிக்கும் பொது எந்த ஃபீலிங்கும் (?) வருவதில்லை என்று நான் நினைத்ததை சொல்ல உரிமை இல்லையா? கடைசியில் ஒரு வேண்டுகோள்...இந்த மாதிரி பதிவுகளுக்கு ஆதரித்தோ, எதிர்த்தோ கமெண்டு போடுவது போல, சில நல்ல (?) பதிவுகள் யார் எழுதினாலும் சென்று போடுங்கள்...
சமுத்ரா
points! :-)
Post a Comment