இந்த வலையில் தேடவும்

Friday, November 12, 2010

அடையாளம் இழந்த நகர வாழ்க்கை......


ஆபீசில் இருந்து ஒரு பத்து நிமிடம் நடந்தால் நம்ம வீடு...ஆபீசுக்கு பக்கத்தில் 'சிகாரிபால்யா' என்ற திருநாமம் கொண்ட, முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு ஏரியா...ரொம்ப மோசம் எல்லாம் இல்லை...என்ன மழை வந்தால் ஒரு ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னே சென்று விட்ட ஒரு ஃபீலிங் வரும்...செம்மண் ரோட்டில் தண்ணீர் தேங்கி பாண்டவர்களின் மாயா மாளிகையில் நடந்து செல்லும் துரியோதனன் போல நடக்க வேண்டியிருக்கும்...அப்புறம் சில கோழிக் கடைகள், ஆங்காங்கே அலைந்து திரியும் நாய்கள்..அவ்வளவு தான்...

ஆபீசில் கூட வேலை செய்பவர்கள் , "உனக்கு தங்கறதுக்கு வேற இடமே கிடைக்கலையா?" என்று கேட்கிறார்கள்... ஏன் அங்கே இருக்கிறேன் என்றால் இந்த சிட்டி பஸ்சுகள், ட்ராபிக் ,புழுதி, கூட்டம் இவற்றையெல்லாம் விட தற்காலிகமான சகதி ரோடு ஆயிரம் மடங்கு பரவாயில்லை என்று தோன்றுகிறது....

கம்பெனி பஸ்ஸில் போகலாம் என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோலைக் காரணம் காட்டி நூறு , இருநூறு என்று கட்டணம் ஏற்றி விடுகிறார்கள் ( அதே பெட்ரோலைக் காரணம் காட்டி நம் சம்பளத்தை ஏனோ ஏற்றுவதில்லை) பெங்களூரில் 'வோல்வோ' என்று அழைக்கப்படும் ஏ.சி. சொகுசு பஸ்களில் கூட காலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது ...சாதாரண பி.எம்.டி.சி. பஸ்களில் கேட்கவே வேண்டாம்...அப்புறம் இந்த 'சில்லறை ' மேட்டர்..பாக் நிறைய சில்லறை குலுங்கினாலும் இந்த கண்டக்டர்கள் "ஒந்து ரூபாய் கொடி" "எரடு ரூபாய் கொடி" என்று உயிர் எடுப்பார்கள்....அதை எடுக்க பாக்கெட்டுக்குள் கை விட்டால், விசிடிங் கார்டு, போன வாரம் பயணித்த டிக்கெட், ஏ .டி.எம் கார்டு,ஒரு சேப்டி பின் எல்லாம் வருமே தவிர அந்த பாழாய்ப் போன ஒரு ரூபாய் வராது...தப்பித் தவறி வந்தாலும் அது தவறாமல் கீழே விழுந்து தொலைக்கும்...சில கண்டக்டர்கள் சின்சியராக டிக்கெட்டுக்கு பின்னால் 1 ,2 ,3 என்று எழுதிக் கொடுக்கிறார்கள்....இறங்கும் போது, கூட்டத்தில் பிதுங்கி சாமி எப்படா இறங்கலாம் என்று இருக்கும் மன நிலையில் அந்த இரண்டு ரூபாயை ஞாபகம் வைத்துக் கொண்டு திருப்பிக் கேட்கவும் முடியாது..."ரெண்டு ரூபாய் வாபஸ் வரணும்" என்றால் கண்டக்டர் நம்மை மேலும் கீழும் பார்பார்...(அல்பம் சாப்ட்வேர்ல வேலை பார்த்தாலும் ரெண்டு ரூபாய் கேட்குதுங்க என்பது போல)

பெரு நகரம் ஒன்றின் பரந்த வீதிகளில் தனியாக நடந்து சென்றிருக்கிறீர்களா? சுய முகவரி தொலைத்த, அடையாளம் இழந்த சூனியமாய் உணர்வீர்கள்....ஒரு சிற்றெறும்பு போல....சாரை சாரையாய் ஊர்ந்து போகும் ஆயிரம் ஆயிரம் சிற்றெரும்புகளுக்கு மத்தியில் நீங்களும் ஒரு எறும்பு...அநேகமாக நீங்கள் மயங்கி விழுந்தாலும் யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்....ஒவ்வொருவரும் அவர்கள் சொந்த உலகங்களில் ஆழமாக ஆழ்ந்து விட்டிருக்கிறார்கள்...கார்களின் கண்ணாடிகளை அடைத்துக் கொண்டு விர் விர் என்று பறக்கிறார்கள்...ட்ராபிக்கில் பச்சை விழுந்து முன்னால் உள்ள வாகனம் சில மில்லி செகண்டுகள் தாமதித்தாலும் பொறுமை இழந்து பாங் பாங் என்று ஹாரன் அடிக்கிறார்கள்...(எனக்கு புரியவே இல்லை, எதற்கு இவ்வளவு அவசரம்?( முதுகுக்குப் பின்னால் இமய மலை ஒன்று இடிந்து விழுந்து கொண்டிருப்பதைப் போல) )

இதே உங்கள் சொந்த கிராமம் அல்லது சிற்றூரின் சொந்த வீதியில் நடந்து போகும் போது உங்கள் அடையாளம் திரும்ப வந்து உங்களிடம் ஒட்டிக் கொண்டது போலிருக்கும்...காரணம் கீழ்க்கண்ட விசாரிப்புகள்
"என்னப்பா இப்ப தான் வர்றா"
"என்ன குமாரு தீபாவளிக்கு வந்திருக்கயா ?"
"பெங்களூரு எல்லாம் எப்படி இருக்கு , மழையா" etc etc

சாப்ட்வேர் ஆசாமிகள் பஸ்களில் ஏறி உட்கார்ந்ததும் காதில் இயர் ஃபோனை மாட்டிக் கொண்டு தனக்கும் இந்த உலகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் பயணிக்கிறார்கள்... (நேற்று அப்படிதான் ஒரு நவ நாகரிக மங்கை பஸ்ஸில் வந்து அமர்ந்தார்...காதில் இயர் போனுடனும் கண்களில் கறுப்புக் கண்ணாடியுடனும்..பஸ்ஸிலிருந்து இறங்கும் வரை ஒரு மில்லி மீட்டர் அசைவையும் காட்டாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தார்...ஒரு சமயத்தில் ஏதாவது எந்திரன் படம் போல ரோபாவாக இருக்குமோ என்று கூட சந்தேகம் வந்தது) மேலும் எறும்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட குண்டு குண்டு ஆங்கில நாவல்களைப் படித்துக் கொண்டு வருகிறார்கள்...ஜன்னலோரம் அமர்ந்து வெளியே தெரியும் பச்சை மரங்களையும், மேகங்களையும், பறவைகளையும் பார்த்து " சௌக்கியமா' என்று கேட்டுக் கொண்டே பயணிக்கும் பயணங்கள் அரிதாகி வருகின்றன....

பெற்றோர்கள் தயவு செய்து இனிமேல் தங்கள் பிள்ளைகளுக்கு ஐ.டி. வேலை கிடைத்து விட்டது என்று அட்டத்துக்கும் விட்டத்துக்கும் குதிப்பதை குறைத்துக் கொள்ளவும்...Information Technology என்று இதை அழைக்கிறார்கள்...என்ன information ? information ஐ வைத்துக் கொண்டு என்ன செய்வது? உதாரணமாக நான் வேலை செய்யும் சாப்ட்வேர் டெஸ்டிங்....இதில் ஒரு அப்ளிகேஷனில் உள்ள எல்லா பட்டன்களும் வேலை செய்கின்றனவா என்று அழுத்தி அழுத்தி பார்ப்பது , ஒரே செய்முறையை ஐம்பது தடவை repeat செய்வது போன்ற வேலைகள் அடங்கும்...இதற்காகவா இருபத்தி ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்தோம் ? (கிண்டர் கார்டனுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து பாத் ரூமில் ஒளிந்து கொண்டதில் இருந்து கடைசி செமஸ்டருக்கு இரவு ரெண்டு மணி வரை கண் முழித்துப் படித்தது வரை)

பணம் நிறையைக் கிடைக்கிறது என்பது வேறு விஷயம்...அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சம்பளம் வந்த உடனேயே தாய்ப் பூனை கொண்டு வரும் எலியை சண்டை போட்டு பிடுங்கிக் கொள்ளும் பூனைக் குட்டிகள் போல E .M .I என்ற பெயரில் வீட்டுக்கடன், கார் கடன் என்று பேங்குகள் பேராசையுடன் பிடுங்கிக் கொள்கின்றன...இருபது வருடங்களுக்கு இதே கதை தான்...என்னையும் வீட்டில் வீடு வாங்கச் சொன்னார்கள்...இருபது வருட வாடகையை ஒரே சமயத்தில் கொடுக்கும் அந்த பிழைப்பு மாத்திரம் வேண்டாம்...ஓட்டு வீடோ ,ஒடிசல் வீடோ இருப்பதே போதும் என்று கூறி விட்டேன்...

இன்னும் சிலர் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறுகிறார்கள்...ஒரு கர்சீபுக்கு ஆனை விலை குதிரை விலை சொல்லும் அழகு மால்களுக்கு சென்று பணத்தை அழுது விட்டு வருகிறார்கள்...(பெங்களூருவின் PVR இல் ஒரு சாதாரண ஒரு லிட்டர் பிஸ்லரி வாட்டர் பாட்டில் முப்பைத்தைந்து ரூபாயாம்...என் அப்படி என்று யாரும் கேட்க மாட்டார்கள்...ஸ்டேடஸ் ப்ராப்ளம் இல்லையா?....

கூடிய சீக்கிரம் இந்த அலர்ஜியான விஷயங்களை எல்லாம் விட்டு விட்டு சொந்த ஊருக்குப் பக்கத்தில் ஏதாவது வாத்தியார் வேலை கிடைத்தாலும் பொய் சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்...யாராவது உதவி பண்ணுங்கள்....

சமுத்ரா


6 comments:

ஜெகதீஸ்வரன்.இரா said...

வாழ்க்கையின் நிதர்சனங்கள் புரிய ஆரம்பித்துவிட்டது.. புறப்படுங்கள் புதிய விடியல் தேடி... !!
வாழ்த்துக்கள். உங்கள் பதிவு காலத்தின் கட்டாயம்..!!

Anonymous said...

Good One

கக்கு - மாணிக்கம் said...

சமீபத்தில் படித்த மிக நல்ல ஒரு பதிவு.
வாழ்கையில் நடிக்க முடியாதவர்களின் மனமும் குணமும் இபடித்தான் இருக்கும்.
ஆனால் உண்மைகள் புரிந்து கொள்ளாமல் இருக்கும் சில "கிறுக்கல் " செய்வது அறியாது இறுதியில் தற்கொலை செய்து கொள்ளுகின்றன. உங்களிடம் இருக்கும் தெளிவும், திட மனமும், மனிதாபிமானமும் உங்களுக்கு துணையாக,
வேறு வேலை கிடைத்திட வாழ்த்துக்கள்.

ammuthalib said...

அந்த வாத்யார் வேலைக்கு நானும் ரெடி (seriously). நானும் உங்களுடையதை போன்ற 'ஒரு' ;) IT கம்பெனி தான்... நீங்க பட்டன கிளிக் செய்றிங்க... நான் லிங்க்க கிளிக் செஞ்சு டெஸ்ட் பண்றேன்.
இப்ப இருக்குற IT life -ம் அந்த காலத்துல (பிரமிட் பில்டிங் period) இருந்த அடிமை வாழ்க்கையும் ஒன்னு தான்.

Dr.Dolittle said...

எனது அப்பா நிறைய படித்த ஆனால் வெளந்தியான மனிதர் , (சென்னையில் இப்போது தான் வசிக்க ஆரம்பித்துள்ளார் ) ரோட்டில் சென்ற பெண்ணிடம் வழி கேட்டதற்கு , காதில் இருக்கும் ear phone ஐ கழட்டாமல் , திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விட்டாள் என்று வருத்ததோடு சொன்னார் . :-(

muthu said...

இதைப் படிக்கும் போது புலிகேசி படத்தில் வருவது போல, 'என் இனமடா நீ' என்று சொல்லத் தோன்றுகிறது.
இப்படிக்கு
நகர வாழ்க்கையில் நைந்து ஐ.டி. துறையில் தைந்து போன ஒருவன்.