இந்த வலையில் தேடவும்

Monday, November 8, 2010

தீபாவளி நிதர்சனங்கள்

தீபாவளி முடிந்த அடுத்த நாள் எதற்கோ கடை வீதிக்கு சென்றிருந்தேன்...கடைகள் வெறிச்சோடிக் கிடந்தன...ஏதோ கலிங்கப் போர் நடந்து ஓய்ந்த மாதிரி இருந்தது....வீதிகளில் பட்டாசுகள் உடல்கள் சிதறி உயிர்த் தியாகம் செய்திருந்தன ....அந்த ஒரு நாளைக்கு தான் என்ன ஒரு ஆர்பாட்டம்? அதுவும் குறிப்பாக டெக்ஸ்டைல் நகரங்களான கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில்...பிரம்மாண்டமான பலமாடித் துணிக்கடைகளில் தொடங்கி தெருவோரம் கட்டில் போட்டு அதன் மேல் 'நூறு ரூபாய்க்கு இரண்டு சேலை' என்று விற்கும் கடைகள் (?) வரை கூட்டம் அலைமோதுகிறது...

.முன்பெல்லாம் இந்துக்களின் பண்டிகைகள் பெரும்பாலும் 'பிராமணர்கள்' வாழட்டும் என்பதற்காக ஏற்பட்டவை என்று சொல்வார்கள்... அதாவது பிராமணர்கள் தங்களுக்கென்று தொழில் செய்யவோ , வியாபாரம் செய்யவோ, பயிர் பச்சை விளைவிக்கவோ கூடாது....எனவே பண்டிகைகளை காரணம் சொல்லி அவர்கள் நாலைந்து வீடுகளுக்குச் சென்று ஹோமம், பூஜை என்று செய்து நாலு காசு பார்க்கட்டுமே என்று பண்டிகைகள் உருவாக்கப் பட்டிருக்கலாம்.... (நரகாசுரன் எல்லாம் உண்மையிலேயே இருந்தானா தெரியாது)

ஆனால் இன்றோ இந்துக்களின் பண்டிகைகள் ஆடி அமாவாசை தொடங்கி கார்த்திகை தீபம் வரை 'வைசியர்'களின் (வியாபாரிகள்) கல்லாப்பெட்டிகளை மட்டுமே நன்றாக கொழிக்க வைக்கின்றன...ஒரு முழம் பூ முப்பது ரூபாய் , நாற்பது ரூபாய் என்று வாய்கூசாமல் சொல்கிறார்கள்...சில துணிக்கடைகள் ஆடைகளுக்கு 500 ரூபாக்கு மேல் ஏதோ ஒரு ராண்டம் நம்பரை எழுதி ஒட்டி வைக்கிறார்கள்....இனிப்புப் பலகாரக் கடைகள் கேட்கவே வேண்டாம்....இது தான் எங்கள் விலை...வாங்கறதுன்னா வாங்கு, இல்லைன்னா நெக்ஸ்ட் யாருப்பா? என்கிறார்கள்....சில பட்டாசுக் கடைகளைப் பார்த்தால் என்ன , தவறாக டாஸ்-மாக்குக்கு வந்து விட்டோமா என்று சில நொடிகள் தடுமாறும் அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது...பட்டாசு பாக்கெட்டுகளின் மேலே 120 , 150 , 180 என்று இஷ்டத்திற்கு கருப்பு ஸ்கெட்சால் எழுதி வைத்திருக்கிறார்கள்...இன்று வரும் பட்டாசுகளில் பெரும்பாலானவை வெடிப்பதே இல்லை....அதற்காக திராட்சையை வாயில் போட்டு ருசி பார்த்து விட்டு வாங்குவது போல, கொஞ்சம் இருப்பா, ஒண்ணு சாம்பிளுக்கு வெடிச்சுப் பார்த்திட்டு வாங்கிக்கறேன், என்றா சொல்ல முடியும்? அந்த முழி பிதுங்கும் கூட்டத்தில் ஏதாவது ஒரு ஆம்னி(?)-பாக்ஸ் கொடுங்க என்று கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது....அந்த பாக்ஸ் ஐநூறு அறுநூறு என்கிறார்கள்...

உள்ளே பாம்பு மிட்டாயில் இருந்து ராக்கெட் வரை ஒவ்வொன்றையும் சாஸ்திரத்திற்காக வைத்துள்ளார்கள்....(இந்த முறை ஒரு மினி துப்பாக்கியும் ,ஒரு கேப் பாக்கெட்டும் கூட இருந்தது...உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?) பெரும்பாலான வெடிகள் ஹைட்ரஜன் குண்டு லெவலுக்கு பூச்சாண்டி காட்டி விட்டு, வீதியில் போவோரை ஒதுங்க வைத்து விட்டு, டூ வீலர் பார்டிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு, கடைசியில் அயோத்தி தீர்ப்பு மாதிரி 'புஸ்' என்று படுத்து விடுகின்றன... அப்புறம் சில பூவானங்கள், பென்சில்கள் தங்கள் கடமை மறந்து, ஆல் ரௌன்டர்கள் போல டம் என்று வெடித்துத் தொலைக்கின்றன...[ பக்கத்து வீட்டு தரைசக்கரம் மட்டும் நிறைய நேரம் சுற்றுவது போன்று தோன்றுவது எதனால் என்று எனக்குத் தெரியாது]

அடுத்து 'போனஸ்' சமாசாரம்...நல்ல வேளை இந்த IT கம்பனிகளில் இந்த தீபாவளி போனஸ் , பொங்கல் போனஸ், எல்லாம் இல்லை...ஆனால் நாம் நம்முடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் எல்லாருக்கும் போ. கொடுக்க வேண்டியிருக்கிறது....

"யாருப்பா"
"இந்த வீதி கூர்காங்க...தீபாவளி போனஸ்" (உண்மை என்ன என்றால் அவரை அன்று தான் முதல் முறையாக தரிசிக்கிறோம்)
"யாருப்பா"
"உப்புத் தண்ணி உடற கருப்புசாமிங்க....நோம்பி காசு குடுங்க"
இப்படி ஏகப்பட்ட சாமிகள் நம் வாசலை அலங்கரிக்கும்....

பத்திரிக்கைகள் சில பாதிப்பக்கங்களில் கலர் கலராக விளம்பரங்களைப் போட்டு விட்டு , தீபாவளி மலர் என்று பெயர் வைத்து (அமெச்சூர் எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் போட்டு மீதி இடத்தை நிரப்பி) கொள்ளை விலைக்கு விற்கின்றன...

இந்த லிஸ்டில் தீபாவளிக்கு வெளியிடப்படும் the so called திரைப்படங்களை நான் இப்போதைக்கு சேர்க்கவில்லை...இதைப்பற்றி எழுத இன்னொரு பதிவு வேண்டும்..

.ஓகே..எதற்காக இவ்வளவு அலப்பறைகள்? கார் பார்க்கிங் கிடைக்காமல் நேரும் தவிப்புகள்? யாரோ ஒரு மூன்றாவது மனிதனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் ஒன்றிரண்டு வசைமொழிகள் (.தா: என்ன வேணும்னு சொல்லுங்க, சும்மா கலைச்சுப் போடாதீங்க) ? கொடுக்கல் வாங்கல்கள்? ஒன்றிரண்டு செருப்பு மிதிகள்? சில ரூபாய் நோட்டு தவற விடுதல்கள்? தீபாவளி அன்றைக்கு என்ன தான் அப்படி இருக்கிறது? நாமெல்லாம் ரதம் பூட்டி மனையாளுடன் நால்வகைப் படைகள் சூழ நரகாசுரனை வதைக்கப் போகிறோமா என்ன? அன்று கூட 24 மணி நேரம் கொண்ட ஒரு சாதாரண தினம் தான்,,,,என்ன கொஞ்சம் சீக்கிரமாகவே ஆறு மணிக்கெல்லாம் (?) எழுந்து விடுவதால் கொஞ்சம் அதிக நேரம் கிடைப்பதாகத் தோன்றலாம்...அந்த நேரமும் நம் தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லித் தரும் "மூனை மூனால் பெருக்கினா எவ்வளவு?" போன்ற உபயோகமான தகவல்களால் கழிந்து விடுகிறது...இப்படி காலை முதல் மாலை வரை தொலைக்காட்சியில் ஐக்கியம் ஆகிக் கிடப்பதற்கும், தியேட்டருக்குச் சென்று விசில் அடித்து விட்டு வருவதற்குமா நாம் ஒரு மாதமாக பிளான் செய்து காசை கரியாக்குகிறோம்? I have no answer ...

கிருஷ்ணா பரமாத்மா ஒரு அபலைப் பெண்ணுக்கு ஆடை அளித்ததை (அட்சய திருதியை) எப்படி நகைக் கடைகள் தங்கள் பக்கம் சாமார்த்தியமாக திருப்பிக் கொண்டு விட்டனவோ (ஏன் அன்றைக்கு நகை தான் வளர வேண்டுமா? அனாதை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள், மருத்துவ மனைகள் , உங்கள் அப்பா அம்மா(அட இவங்களை மறந்தே போயிட்டமே) என்று நீங்கள் அன்று ஒரு நாள் அன்பு காட்டினால் அந்த அன்பு அட்சயமாக வளரக் கூடாதா ) அதே மாதிரி இந்த 'நரகாசுரன்' சமாசாரத்தை துணிக் கடை , பட்டாசுக் கடை பண முதலைகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு விட்டார்கள்...சில துணிக்கடை விளம்பரங்கள் "எங்க கடைல வாங்கலைன்னா மவனே கொலை பண்ணிருவோம் " என்று மிரட்டும் ரேஞ்சுக்கு இருக்கின்றன...

முன்பெல்லாம் தீபாவளி என்றால் சொந்த பந்தங்கள் வீடுகளுக்கு சிறுசுகள் சென்று பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி , அவர்களுக்கு இனிப்பு கொடுத்து , etc என்றெல்லாம் இருக்கும்... இப்போது எத்தனை வீடுகளில் இது இன்னும் கடைபிடிக்கப்படுகிறது என்று தெரியவில்லை? (இதற்கு நேர் மாறாக ஏய் கெழவி, அஞ்சரை மணிக்கே எழுந்திருச்சு எங்க உயிரை வாங்காட்டி என்ன? எப்பவும் போல பத்து மணி வரை படுத்திருக்க வேண்டியது தானே போன்ற அர்ச்சனைகள் கேட்கலாம்)


சில சேனல்கள் எல்லாரும் எழுந்திரிக்கும் முன் பக்திப் பாடல்களை அவசர அவசரமாகப் போட்டு முடித்து விட்டு பின் தங்கள் 'உலகத்' தொலைக்காட்சிகளில் முதல் முறையாகக்களை ஆரம்பித்து விடுகின்றன....நடிகைகள் புன் சிரிப்பு மாறாமல் தனக்கு என்ன என்ன பிடிக்கும், என்று பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்... பட்டி மன்றங்களில் பேசியவர்களே வந்து பேசி சில சமயம் கழுத்தறுக்கிறார்கள் (.தா: சன் டிவிக்கு பாப்பையாவையும் ராஜாவையும் விட்டால் யாரும் கிடைக்கவில்லா? மற்றவர்களுக்கு எப்போது தான் சான்ஸ் தருவது?) சரி ஒரு படமாவது உருப்படியாகப் பார்க்கலாம் என்று உட்கார்ந்தால் கொலைவெறியுடன் அணிவகுக்கும் விளம்பரங்கள்...சிவாஜி sponsered by என்று ஆரம்பித்து திரௌபதி சேலை போல் மூச்சு விடாமல் ஒப்பிக்கிறார்கள்...(இடைவேளையில் என்ன படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதே மறந்து விடுகிறது..'ஹமாரா பஜாஜ்' என்று ஒரு விளம்பரத்துடன் முடித்துக் கொண்ட தூர்தர்சன் காலங்களை நினைத்துப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது ) விளம்பரங்களில் மேக்-அப் கலையாமல் மங்கைகள் காரில் இருந்து இறங்கி வந்து பட்டுப் புடவை அணிந்து பங்களாவுக்கு வெளியே கம்பி மத்தாப்பு வெடிக்கிறார்கள்... குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து சிரிக்கிறார்கள்....உண்மையான சந்தோஷத்தை விளம்பர உலகத்தில் மட்டுமே காண முடியும் போல் உள்ளது....ஆனால் நிஜ வாழ்கையில் கறைகள் அவ்வளவு சுலபமாக ஒரு நிமிடத்தில் போய் விடுவதில்லை...

.சரி இதன் மூலம் என்ன சொல்ல வருகிறேன் என்றால் : பண்டிகையே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை... சந்தைக் கடைகளில் தீபாவளியை எதிர்பார்த்து லட்டு ,ஜிலேபி கடை விரித்திருக்கும் வள்ளியம்மாளுக்கும், கண்ணாடி, சீப்பு, ஜிமிக்கி கடை விரித்திருக்கும் பொன்னம்மாளுக்கும் இந்தப் பண்டிகைகள் சில சமயம் ஒரு வாரம் வீட்டில் அடுப்பெரிய பேருதவி செய்கின்றன....ஆனால் பண்டிகைகளின் பேரில் கண்டிப்பாக Monopoly தமிழ்நாட்டில் நடக்கிறது....(சில்க்ஸ்களில் இருந்து சானல்கள் வரை) இந்த மாயையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும்...பகட்டான கடைகளில் துணி வாங்கி விட்டு, பளபளப்பான ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு, முன் பதிவு செய்து சில நல்ல(?) திரைப்படங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பி, சானல்களின் கத்தல்களைக் கேட்டு விட்டு ஆயாசத்துடன் படுப்பது தான் பண்டிகை என்ற மனோபாவம் மாற வேண்டும் என்று தான் எதிர்பார்கிறேன்....

~சமுத்ரா

3 comments:

எல் கே said...

பண்டிகை என்பது உற்றாருடன் கூடி களிப்பதே. இன்று அவை அர்த்தம் மாற்றப் பட்டுவிட்டன

Swami said...

arumai nanba.vithyasamaana sindhanai.vazhthukkal.

ammuthalib said...

பக்கத்து வீட்டு தரைசக்கரம் மட்டும் நிறைய நேரம் சுற்றுவது போன்று தோன்றுவது எதனால் என்று எனக்குத் தெரியாது // This comes under Murphy's Law may be ;)