இந்த வலையில் தேடவும்

Tuesday, September 28, 2010

பொம்மை கொலு Fever -1

அப்போதெல்லாம் நவராத்திரி வருவதற்கு முன் ஒரு வாரத்திற்கு முன்னரேயே 'கொலு fever ' பிடித்துக் கொண்டு விடும்....முதலில் 'கொலு பொம்மைப்' பெட்டியை மேலிருந்து கீழே இறக்க வேண்டும்...அந்தப் பெட்டியானது கிட்டத் தட்ட ஒரு மினி zoo போல கரப்பான் பூச்சி, எலி போன்ற சகல உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும்.... பொம்மையின்டிரஸ்ஸை எல்லாம் எலி ஸ்வாகா செய்து விட்டிருக்கும்....



பெட்டியை வெய்யிலில் வைத்து விட்டுப் பின் மர பொம்மைகளின் காகித உடைகளைக் களைந்து அவற்றை பப்பி ஷேம் ஆக்க வேண்டும்.... (மர பொம்மைகள் இல்லாமல் கொலு வைக்கக் கூடாதென்று சாஸ்திரமாம்) பின்னர் அவற்றைக் குளிப்பாட்டும் படலம் தொடங்கும்.....தண்ணீர் காய வைத்து பொம்மைகளுக்கு தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும்... தண்ணீர் காய்ந்ததும் நன்றாக சீயக்காய் போட்டு பொம்மைகளைத் தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும்...(அப்போதே எங்கள் வீதியில் ஒரு மாமி மாடர்ன் ஆக கிளினிக் பிளஸ் எல்லாம் போடுவார்..இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று கூற வேண்டாம்...பொம்மைகள் கடவுள்கள் என்பதால் தான் அவைகளுக்கு இவ்வளவு மரியாதை)

பொம்மைகள் குளித்து விட்டு வந்ததும் அவைகளுக்கு உடை உடுத்தும் படலம் தொடங்கும் ....முன்னமேயே கடையில் இருந்து கலர் கலரான காகிதப் பேப்பர்கள் ,ஜிகினா பேபர்கள், வாங்கி வந்து வைத்து விடுவோம்... மைதா மாவை காய்ச்சி பசையும் ரெடியாகி விடும்....பாட்டி வேலைகளை முடித்து விட்டு மதியம் மூன்று மணி சுமாருக்கு வந்து டிரெஸ்ஸிங் செய்ய உட்கார்ந்து விடுவாள்....நாங்களும் ஸ்கூலுக்கு வயிற்று வலி என்று லீவ் சொல்லி விடுவோம்... எங்கள் வீட்டில் தான் அந்த வீதியிலேயே மர பொம்மைகள் அதிகம்....திருப்பதியில் இருந்து இறக்குமதியான கருப்பு பொம்மைகள் சுமார் இருபது இருக்கும்...ஓர் அடி நீள ஜோடியில் இருந்து விரல் அளவே உள்ள ஜோடிகள் வரை....ஆண் பொம்மைகளை விட பெண் பொம்மைக்கு டிரஸ் செய்ய தான் ரொம்ப நேரம் பிடிக்கும்....(பொம்மையிலும் அதே கேஸ் தானா??) சிறியவர்கள் எல்லாம் ஆண்களுக்கு சர்ட், பேண்ட் வெட்டிக் கொண்டிருக்க பாட்டி பெண்களுக்கு பட்டுப் புடவைகளை ரெடி செய்வாள்....நாங்கள் மர பொம்மைகளை ஒரு குடும்பமாகத் தான் கருதுவோம்....பாட்டி இந்த தரம் கிழவிப் பாட்டிக்கு ரோஸ் கலரில் திக் பச்சை பார்டர் பட்டுப் புடவை போட்டு விடு....அவள் மூத்த மருமகளுக்கு ஆரஞ்சுப் பட்டு வயலெட் பார்டர்...இளைய மருமகளுக்கு நீலக் கலர் பட்டுப் புடவை கோல்டன் பார்டர், மகளுக்கு மஞ்சள் பட்டு நீல பார்டர்,,,,, என்றெல்லாம்" போத்தீஸ் "ரேஞ்சுக்கு பேசிக் கொள்வோம் .... ஒரு தரம் ஒரு பெண் பொம்மையின் ஜோடியைக் காணவில்லை... விதவையை வைக்கக் கூடாது என்பதால் அதை அவசர அவசரமாக இரண்டாம் தாரமாகக் கட்டி கொடுத்து (?) கொலுவில் வைக்க வேண்டி இருந்தது....இன்னொரு முறை எப்படியோ இரண்டு பெண் பொம்மைகள் மிஞ்சி இருந்தன...பின்னர் வேறு வழி இல்லாமல் ஒரு பெண்ணுக்கு ஆண் வேஷம் போட்டு மேடை ஏற்ற வேண்டி இருந்தது....அந்தக் காலத்திலேயே இந்த மாதிரி சீர்திருத்தத் திருமணங்களை பாட்டி செய்து விட்டாள் பாருங்கள்...



கலர் பேப்பரை அளவாக வெட்டி அதன் நுனியில் பார்டர் பேப்பரை ஒட்டி விட வேண்டியது.....பிறகு அதில் புள்ளிகளை சின்ன சின்னதாக வெட்டி ஒட்டி விட்டு விசிறி போல் மடித்து பொம்மையி
ன் இடுப்பில் நாடா போட்டு கட்டி விட வேண்டியது.... இன்னொரு பேப்பரை இதே போல் செய்து மார்புக்குக் குறுக்காக வைத்து ஒட்டி மாராப்பு செய்ய வேண்டியது ...பிறகு பார்டர் வைத்த ரவிக்கை....ஆண் பொம்மைகளுக்கு என்று வரும் போது டைலர் வேலை செய்து செய்து களைத்துப் போயிருக்கும்....எனவே ஏனோ தானோ என்று எல்லாருக்கும் ஒரே மாதிரி பைஜாமா ஜிப்பா போட்டு விட்டு விட வேண்டியது... இது அநியாயம்,ஆண் துரோகம் என்று பெரியப்பா சத்தம் போடுவார்....

ஆடை இருந்து அலங்காரம் இல்லை என்றால் எப்படி? வீட்டில் உள்ள பெண்களின் பழைய கவரிங் நகைகளை துண்டுகளாக வெட்டி கழுத்திலும் கைகளிலும் ஒட்டியாணமாகவும் போட வேண்டியது....காதுகளுக்கு மாட்டல்,நெத்திச் சுட்டி என்று ஒரு வழியாக டிரெஸ்ஸிங் படலம் முடிவடையும்..... இவ்வளவு செய்தும் பொம்மைகளின் பின் பாகம் இன்னும் பப்பி ஷேமாகத்தான் இருக்கும்...(கொலுவில் வைக்கும் போது பின் பாகம் தெரியாது என்பதால்)

அடுத்து தொடங்குவது 'படி' ரெடி பண்ணும் படலம்....வீட்டில் உள்ள எல்லா வகையான பொருட்களும் படி உருவாக்குவதில் பங்கு கொள்ளும்....டிவி டேபிள், ஹாலோ பிளாக் கற்கள், செங்கல், துணி போட்டு வைக்கும் பெட்டிகள், பழைய தகர டின்கள், பலகைகள் என்றெல்லாம் சிவில் எஞ்சினியர் லெவலுக்கு 'பிளான்' செய்து படிகளை அமைப்போம்.....படிகள் ரெடி ஆனதும் மடியாக துவைத்து உலர்த்திய வெள்ளை வேட்டியை அப்படியே அதன் மேல் போர்த்தி கொஞ்சம் கிளிப்பெல்லாம் போட்டு அட்ஜஸ்ட் செய்து விட்டால் படி ரெடி.....இங்கே ஒரு முக்கியமான விஷயம்....எங்கள் வீடு ஓட்டு வீடு என்பதால் வீட்டில் மழை வந்தால் ஒழுகாத இடமாகப் பார்த்து படி போட வேண்டும்...முதல் படியில் 'கடவுள்கள்' அதாங்க நம்ப மர பொம்மைகளை வைக்க வேண்டியது....அடுத்தடுத்த படிகளில் ராமர் செட், அஷ்ட லச்சுமி செட், தசாவதாரம் செட் போன்றவை....மண் பொம்மைகள்...பின் அடுத்த படிகளில் பிளாஸ்டிக் பொம்மைகள்.....அடுத்து குட்டி குட்டியான மர சாமான்கள் டின்னெர் செட்டுகள் , குட்டி குட்டி சமையல் பாத்திரங்கள், கவடைகள், சங்குகள் போன்றவை....கடைசி படியில் ஒரு குண்டு செட்டியார் பொம்மை வைத்து விட்டு சின்ன சின்ன எவர் சில்வர் கப்புகளில் அரிசி, பருப்பு, வெல்லம், வெந்தயம், மிளகு, போன்ற பலசரக்கு வைத்து செட்டியார் கடை ரெடி பண்ண வேண்டியது.....இந்த பண்டங்களை எல்லாம் ராத்திரி எலி சாப்பிட வந்து உருட்டி விடுவதும் உண்டு.....


நடுப் படியில் ஒரு வெள்ளி சொம்பில் மஞ்சள் நீர் ஊற்றி வெற்றிலைகளை விளிம்பில் வைத்து அதன் மேல் ஒரு மாதுளம் பிஞ்சு வைத்து கீழே மங்கள அரிசி பரப்பி கலசம் வைக்க வேண்டும்....நவ ராத்திரி கொலுவுக்கு இது தான் ரொம்ப முக்கியம்....ஒன்பது நாளும் இந்தக் கலசம் அசைந்து மாதுளம் பிஞ்சு விழுந்து விடாமல் இருக்க வேண்டும்....



எல்லாம் முடிந்ததும் கலர் பேப்பரை மீண்டும் வெட்டி கொலுவைச் சுற்றிலும் தொங்க விட்டு டெகரேட் செய்ய வேண்டியது....நடுவில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு போட்டால் பொம்மைக் கொலு ரெடி....சில சமயம் கொலுவின் பக்கத்தில் அக்கா 'பார்க்' போடுவாள்....ஈர மண்ணில் விதை விதைத்து கீழே பரப்பி , குட்டி குட்டி சேர், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், குட்டி மனித பொம்மைகள் ,நடை பாதை,வேலி என்று அமைத்து சீரியல் பல்பெல்லாம் போட்டு... பிறகு கொலுவை சுற்றியும் மெழுகி விட்டு கோலம் போட்டு செம்மண் பார்டர் கொடுக்க வேண்டும்....


இதை எல்லாம் முதல் நாள் செய்து விட்டுப் படுத்துக் கொள்ள ராத்திரி ஒரு மணி கூட ஆகி விடும்....


அடுத்த ஒன்பது நாளும் ஒரே களேபரமாக இருக்கும்....பூஜை, பாட்டு,பட்சணம், பெண்கள் விஜயம்...இவைகளை இரண்டாம் பாகத்தில் விவரிக்கிறேன்.... :)





~சமுத்ரா


4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொண்டாட்டமாத்தான் இருக்கும் எங்க வீட்டுலும்.... :)

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!! சூப்பரா இருக்கு இந்தப் பதிவு!!!

ஜமாய்ங்கோ:-)

இப்பெல்லாம் துணிமணி நகைநட்டெல்லாம் ரெடிமேடாக் கிடைக்குது. வாங்கி உடுத்திவிடலாம். ஆனாலும் பாட்டி காலத்து ட்ரெஸ் டிஸைனிங் ஸீன் தூள்:-))))

Madhavan Srinivasagopalan said...

nice informations.. ..

madhavan73.blogspot.com

Smith said...

nice informations.. .. madhavan73.blogspot.com