ராக ரஞ்சனி என்ற தொடருக்கு வரவேற்கிறேன்... காகலி நிஷாதம், சதுஸ்ருதிதைவதம் என்றெல்லாம் ஓவராக சீன காட்டாமல் கர்நாடக ராகங்களுக்கு என்னால் இயன்ற ஒரு எளிய அறிமுகம்....
வனஜ நயன மோமுனு ஜூசுட
ஜீவன(ம)னி நெனருன மனஸு மர்மமு தெலிஸி
நனு பாலிம்ப நட3சி வச்சிதிவோ நா ப்ராண நாத
-உன் தாமரை போன்ற முகத்தைக் கண்டு களிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள என் மனதின் மர்மத்தை அறிந்து என்னைக் காக்க நடந்து வந்தாயா?ராமா?
இந்தப் பாடலை த்யாகராஜர் தனக்கு பக்தர் ஒருவர் 'ராமரின் அழகிய படம்' ஒன்றைப் பரிசளித்த போது பாடி பரவசமடைந்தார் என்று கூறுவார்கள்....சந்தோஷம் அதிகமாக இருக்கும் போது மோஹனம் போன்ற சுப ராகங்களைப் பாடுவது தானே தகும்? (முழு பாட்டையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)
மோஹனம் ஹரிகாம்போஜி என்று கூறப்படும் ஒரு தாய் ராகத்தின் குழந்தை(தாய் ராகம் என்றால் ஏழு ஸ்வரங்களும் ஒரே வரிசையில் வரும்)....மோகனம் 'நி' (நிஷாதம் ) 'ம' (மத்யமம்) என்ற இரு ஸ்வரங்களும் அற்று ஐந்தே ஸ்வரங்களுடன் வந்தாலும் அருமையான அழகியதொரு ராகம்.....இதன் ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசைகள் கீழே:
ஆரோகணம்: | ஸ ரி2 க3 ப த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ப க3 ரி2 ஸ |
பாபநாசம் சிவன் பார்வதி நாதன் சிவனை அழகாக வர்ணிக்கும் ஒரு பாடல் 'கபாலி' மோகனத்தில் கீழே கேட்கவும் விஜய் சிவா அவர்களின் குரலில் ...
|
அருணாச்சலக் கவி ராயர் ராமாயணம் முழுவதையும் பாடல்களாக எழுதியிருக்கிறார்.... அவர் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்க நாதரைப் பார்த்துக் கேட்கிறார்... ரங்க நாதா? ஏன் களைத்துப் போய் படுத்து விட்டாயா? ராமனாக நீ பிறந்த நாளிலிருந்தே உனக்கு கஷ்டம் தான்....வாழ வேண்டிய வயதில் வனம் சென்றாய்....மனைவியை மீட்பதற்கு இலங்கை என்னும் மாநகரையே அழித்தாய்....அந்தக் களைப்பெலாம் போகட்டும் என்று கால் நீட்டிப் படுத்து விட்டாயா என்று கேட்கும் பாடல்! மோகனத்தில்...பாடல் வரிகள் கீழே!
(இறைவனே படுத்துக் கொண்டு விட்டால் நாமெல்லாம் என்ன செய்வது என்று கேட்காமல் கேட்கிறார்)
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
கௌசிகன் சொல் குறித்ததற்கோ- அரக்கி குலையில் அம்பு தெறித்ததற்கோ
ஈசன் வில்லை முறித்ததற்கோ? பரசு ராமன் உரம் பறித்ததற்கோ?
மாசில்லாத மிதிலேஷன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குகன் ஓடத்திலே கங்கை துரை கடந்த இளைப்போ?
ஓடிக் களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?
கடலை கட்டி வளைத்தோ?
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?
ராவணாதிகளை மடித்த வருத்தமோ?
[பாட்டின் பொருள் கொடுத்து தமிழைக் கேவலப்படுத்த விரும்பவில்லை...:D )
பாடலை சுதா ரகுநாதன் பாட இங்கே கேட்கவும்...
மோகனம் எளிமையான அதே சமயம் பழமையான ஒரு ராகம்....தமிழிசையில் முல்லைப் பண் என்று அழைக்கப்பட்டதாம்....ஐந்தே ஸ்வரங்கள் இருந்தாலும் நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்கிற ஒரு ராகம்....இரவு வேளையில் பாட உகந்தது...
மோகனத்தில் வரும் பிரபலமான ஒரு வர்ணம் 'நின்னுக்கோரி' (வர்ணம் என்றால் அந்த ராகத்தை அப்படியே வர்ணிப்பது...)மற்ற பிரபலமான கர்நாடக இசைப் பாடல்கள் சில....
ரா ரா ராஜீவ லோச்சனா ராம -மைசூர் வாசுதேவாசாரியார்
ராம நின்னு நம்மினா - தியாகராஜர்
மெல்ல மெல்லனே பந்தனு - புரந்தரதாசர்
ஓடி பாரய்யா - புரந்தரதாசர்
சினிமா பாடல் சொல்ல வேண்டும் என்றால் 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' -காதல் கோட்டை........
அடுத்து 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் 'ஒ மணப் பெண்ணே' பாடலின் நடுவில் வருமே? ஆஹா என்ன இதமான மோகனம்?
அதையும் தான் கேட்டு விடுங்களேன்....
(மோகனத்தை மட்டும் கேட்கவும்)
|
அடுத்ததாக மோகன ராகத்தில் நாம் எல்லோரும் பெரும்பாலும் கேட்டிருக்கக்கூடிய 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து...அதன் பொருள் தெரிந்துதான் ஸ்கூலில் எல்லாம் பாடினோமா என்று தெரியாது ...இப்போது அதன் பொருள் கீழே:
கடலையே உடையாக உடுத்த நில மகளுக்கு இந்த பாரத தேசம் தான் முகம்
அதில் தக்காண பீடபூமியானது அந்த முகத்தின் அழகிய நெற்றி
நம் தமிழ் நாடு அந்த நெற்றியில் இட்ட வாசனைத் திலகம்
அந்த திலகம் வாசனை வீசுவது போல, தமிழே, உன் புகழ் எல்லா திசைகளிலும் பரவுவதாக !
இதனைக் கொஞ்சம் கற்பனை செய்து வரைந்து பார்க்கலாம் என்று முயற்சி செய்ததில் சரியாகத் தான் வந்தது...ஆனால் என்ன நம் பூமியை மட்டும் கொஞ்சம் தலைகீழாகத் திருப்ப வேண்டி இருந்தது....:D
மீண்டும் மற்றொரு ராகத்துடன் சந்திக்கலாம்....
~சமுத்ரா
2 comments:
"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" மோகன ராகமா? நல்ல பாட்டு. யார் பாடியது என்று தெரியவில்லை. பின்னணிப் பாடகர்கள் இப்பல்லாம் ரொம்ப பிஸியானதால் வேறு ஒருவர் பாடி ட்ராக் ரிகார்ட் செய்திருப்பார்களாம். பாடகர் அதைக்கேட்டு பின் பாடி ரெகார்ட் ஆகுமாம். அதைக் கேட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், நன்றாக இருக்கிறதே, அவரே பாடட்டும் என்று சொன்னாராம்.
சகாதேவன்
mohanam is said to be very first tune or raaga formed :) mohanam.. attraction nu meaning.. apdiyae namma heart soul nu ellathayum attract panra ragam :) harikambojiyil janyam.. :)
Post a Comment