இந்த வலையில் தேடவும்

Wednesday, September 8, 2010

என்னை நான் சந்தித்தேன்...

நேற்று எனக்கு ஒரு கனவு வந்தது... கனவையெல்லாம் blog -இல் போட்டு கழுத்தறுக்க வேண்டுமா? என்று கேட்காதீர்கள்...அந்தக் கனவில் ஏதோ ஒரு செய்தி இருந்ததாக நான் நம்புவதாலும், நாட்கள் நகர்ந்து விட்டால் கனவு மறந்து போய் விடும் என்பதாலும் எழுதுகிறேன்..

கனவு என் வீட்டிலிருந்து தொடங்குகிறது...அடுத்த ஷாட்டில் திடீரென்று நான் ஏதோ ஒரு புதிரான , மிகவும் புதியதான நகரத்தில் இருக்கிறேன்...அப்போது வீட்டிலிருந்து 'உடனே வருமாறு' எனக்கு போன் வருகிறது...ஒரு பேருந்தும் ரெடியாக வந்து நிற்கிறது...அப்போது தான் தெரிகிறது நான் என் bag - ஐ வீட்டிலேயே (?) விட்டு வந்து விட்டேன் என்று...வண்டி புறப்பட இன்னும் சிறிது நேரம் ஆகும் என்பதால் பையை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி விட்டு வேக வேகமாக நடக்கிறேன்....திரும்பி வரும் போது ஒரு நான்காகப் பிரியும் சந்திப்பு வருகிறது.... எனக்கு எப்படிப் போவது என்ற வழி மறந்து விடுகிறது....அந்த இடம் ஒரே கூட்டமாகவும், கோவில்கள் சந்தைகள் கொண்டதாகவும் இருக்கிறது....நான் எல்லாரிடமும் கேட்கிறேன்..."எனக்காக பேருந்து காத்திருக்கிறது , மெயின் ரோடுக்கு எப்படிப் போக வேண்டும்?" என்று...பலர் தெரியாது என்கின்றனர்... பலர் தவறான பாதையைக் காட்டுகிறார்கள்...அதில் நடந்து நடந்து மெயின் ரோடு வராததால் மறுபடியும் அந்த சந்திப்புக்கு வருகிறேன்,,,, அப்போது தான் நான் ஒரு கடையில் என்னையே பார்கிறேன்.... ஆமாம் நான் ஒரு கடையில் உட்கார்ந்திருப்பதை நானே பார்க்கிறேன்.... கடையில் இருக்கும் நான் வழி கேட்கும் என்னைப் பார்த்து 'இந்த வழியில் போ, இது தான் சரியான வழி, என்கிறது...(அல்லது என்கிறேன்) அந்த வழியில் செல்லும் போது அழகாக இருக்கிறது... கோவில்களும் சாமியார்களும் வருகின்றனர் ...எந்த லக்கேஜுக்காக நான் வந்தேனோ அது அப்போது என் கையில் இருப்பதில்லை... கடைசியில் ரோடு வருகிறது,,, பஸ்சும் சரியாக அந்த இடத்துக்கு வந்து என்னை ஏற்றிச் செல்கிறது....நான் பின்னால் திரும்பி அந்த நகரத்தைப் பார்க்கிறேன்.. மெல்ல மெல்ல எனக்குப் பின் அந்த நகரம் புள்ளியாகி மறைகிறது...

இது என்ன கேனத்தனமான கனவு? என்று நீங்கள் கேட்கலாம்... நானும் அப்படித் தான் நினைத்தேன்... ஆனால் காலையில் எழுந்ததும் இந்தக் கனவு எதையோ எனக்குச் சொல்ல வருவதாகத் தோன்றியது.... அந்தக் கனவில் வரும் காட்சிகளுக்கு நான் நினைக்கும் அர்த்தம் இது தான்... கனவு இந்த அர்த்தத்தில் தான் வந்ததா என்பது தெரியாவிட்டாலும் கனவுக்கு இந்த கற்பிதம் நன்றாகப் பொருந்தி வருகிறது...

அந்தப் புதிரான நகரம் தான் இந்தப் பூமி...வீட்டிலிருந்து வரும் போன், இறைத்தன்மை (godliness ) நம்மை மீண்டும் ஒன்று கலக்க அழைக்கும் அழைப்பு.... (கனவின் முதலில் நான் வீட்டில் இருந்தது 'இறைத்தன்மையில்' இருந்து தான் நான் பூமிக்கு வந்தேன் என்று சொல்வதாக இருக்கலாம் ) பஸ் மரணத்தைக் குறிக்கிறது... [சிக்மண்ட் பிராய்டின் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர் கனவில் வரும் பேருந்து,ரயில் ஆகியவை மரணத்தின் குறியீடுகள் என்றும், நாம் மரணம் அடைந்தே தீர வேண்டும் என்று கனவு நமக்கு நினைவு படுத்துகிறது என்றும், ரயிலைத் தவற விடுவதாக வருவது நமது வாழும் ஆசையைக் குறிக்கலாம் என்றும் கண்டுபித்தார்..] அப்போதே பஸ்ஸில் ஏறாமல் நான் லக்கேஜை மறந்து விட்டேன் என்று கூறுவது நமது மரணத்தை விரும்பாத மனோநிலையைக் குறிக்கலாம்... அந்த லக்கேஜ், நமது நிறைவேறாத உதவாக்கரை ஆசைகள்... அவைகளினால் ஈர்க்கப்பட்டு மரணத்தை (ஞானத்தை) (பஸ்) நாம் தள்ளிப் போட்டு விட்டு மீண்டும் அந்த மாயா நகரத்தில் (வாழ்க்கை) லக்கேஜைத் தேடி நுழைகிறோம்... அந்தத் தேடலில் நாம் நமக்கான வழியை மறந்து விடுகிறோம்...நாம் எங்கே , எப்படிப் போக வேண்டும் என்பதை... யார் யாரோ நமக்கு வழி சொன்னாலும் எதுவும் சரியான பாதையாக இருப்பதில்லை... அப்போது தான் நாம் நம்மையே பார்க்கிறோம்...(உன்னை நீயே பார் என்று ஞானிகள் சொல்வது இது தானோ) கடையில் நான் என்னையே பார்ப்பது தியானத்தின் மூலம் 'நான் யார்'? என்பதை நாம் அறிந்து கொள்வதைக் குறிக்கலாம்..அந்த 'உண்மையான' நான் தான் நமக்கு எந்த வழி சரியானது என்று காட்ட முடியும்...
வரும் வழியில் நான் காணும் கோவில்களும் சாமியார்களும் நமக்கு ஏற்படும் ஆன்மீக அனுபவத்தைக் குறிக்கலாம்...கடைசியில் சரியாக வந்து நிற்கும் பேருந்து தான் நம் உண்மையான புறப்பாடு...திரும்பி வரும் போது நான் வெறும் கையுடன் நடந்து வருவது ஞானம் அடைந்த பின் ஆசைகள் நம்மை விட்டு விலகி விடுவதைக் குறிக்கலாம்...பேருந்தில் ஏறித் திரும்பிப் பார்க்கும் போது, பின்னால் அந்த நகரமே மெல்ல மெல்ல மாறிகிறது...இந்த காட்சியானது நாம் ஞானமடைந்தவர்களாக மரணிக்கும் போது மீண்டும் இந்த உலகத்துக்கு திரும்பி வர வேண்டியது இல்லை என்ற தத்துவத்தை குறிக்கிறது....

இந்தக் கனவில் வரும் ஒரு காட்சி கூட நான் பின்னால் கற்பனை செய்து எழுதியது இல்லை....எல்லாமே நிஜமாகக் (?) கனவில் வந்தவை தான்...

ஓஷோ கனவுகளில் நாலைந்து வகைகள் இருப்பதாகக் கூறுகிறார்...


1 அர்த்தமற்ற வெறும் குப்பைக் கனவுகள்
2 அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் கனவுகள்
3 எதிர்காலத்தைக் குறிப்பால் உணர்த்தும் கனவுகள்
4 நமக்கு மேலே உள்ள பிரபஞ்ச சக்தி நமக்கு ஏதேனும் அறிவிக்கும் கனவுகள்

சரி இதில் எனக்கு வந்த கனவு வெறும் முதலாம் வகையாக இருக்கலாம்... அல்லது நான்காவதாகவும் இருக்கலாம்...

~சமுத்ரா


No comments: