இந்த வலையில் தேடவும்

Wednesday, September 29, 2010

பொம்மைக் கொலு fever -2

டுத்ததாக பட்சணங்கள்....நவ ராத்திரி தொடங்கியதும் எங்கிருந்தோ சிறுவர்கள் கும்மாளம் மூக்கில் வியர்த்த மாதிரி ஒன்பது நாளும் சாயங்காலம் படையெடுத்து 'பொம்மை கோல் பட்சணம்' என்று வீட்டுவாசலில் கத்த ஆரம்பிக்கும்.... கூட்டம் அதிகம் இருந்தால் "இன்னிக்கு முதல் நா தானே? நாளேலேர்ந்து வாங்கோ" என்றோ "இன்னைக்கு கடைசி நாள் பட்சணம் கிடையாது " என்றோ சொல்லி சமாளிக்க வேண்டும்...கூட்டத்தில் யாருக்கு கொடுத்தோம் யாருக்கு கொடுக்கவில்லை என்பதே தெரியாது "மாமி இவன் அப்பவே வந்து வாங்கிட்டுப் போனான்" ,"மாமி இது தான் முதல் தரம்" என்ற குரல்களெல்லாம் கேட்கும்....


அப்போது அக்ரஹாரத்தில் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் கொலு வைப்பார்கள்.....சாயங்காலம் 6 மணிக்கு பட்சனத்திற்க்குக் கிளம்பினால் எல்லார் வீட்டுக்கும்போய் திரும்பி வர 8 மணி ஆகும்...வீட்டுக்கு வந்ததும் கொண்டு சென்ற கவர் பல வித
பட்சணங்களால் நிரம்பி Encyclopedia போல் இருக்கும்...கலர் கலரான சுண்டல்கள், பொட்டுக் கடலை பொடி, ஆப்பம், பிஸ்கட், என்று

கீழ்க்கண்ட சம்பாஷணைகள் நடக்கும்:

இது யார் வீடு பொட்டலம் டா?
ரங்க விட்டல் மாமாது பாட்டி...
நெனச்சேன்....கஞ்சப் பிசினாறிகள்....பாரு பொட்டுக் கடலை பொடி விபூதி மாரி கொடுத்திருக்கா....

அடுத்து வீட்டுக்கு வரும் மாமிகள்....சிலர் 'பாட்டு' எங்கு தொலைதூரத்தில் எங்கோ கேட்டால் கூட போது
ம்....அது தான் சாக்கு என்று வாய் திறந்து சங்கீத அருவியைக் கொட்ட விட்டு விடுவார்கள்....அம்புஜம் மாமி என்று ஒருவர் வருவார்....எப்போது வந்தாலும் கீச்சுக் குரலில் ஹய் பிச்சில் "ப்ரோசேவா ரெவருரா" என்று ஆரம்பித்து விடுவார்.... (ஸ்வரம் வேறு நடுவில் பாடுவார்) பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நாங்கள் சிரிப்பு வெளியே வந்து விடாமலிருக்கதெரிந்த தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருப்போம்.....

வெவ்வேறு வீடுகளில் வெவ்வேறு விதமான கொலுவைப் பார்க்க முடியும்... கோடியில் உள்ள ஒரு மாமி வீட்டில் 14 படி வைப்பார்கள்...முழுதாகப் பார்த்து முடிக்க அரை மணி ஆகும்.... கல்யாண செட், ஆர்கெஸ்ட்ரா செட், கிருஷ்ணாவதார செட்,கைலாசம் செட், சீனா பொம்மைகள், தஞ்சாவூர் பொம்மைகள், தசாவதார செட், மைசூர் பொம்மைகள், என்று உலகில் உள்ள எல்லா பொம்மைகளையும் வாங்கி விட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும்....

இன்னொரு மாமி வீட்டில் ஒரு டேபிளைப் போட்டு மேலே ஒரு துண்டை விரித்து நாலு பொம்மை வைத்து விட்டு 'கொலு' என்பார்கள்....அதற்கு எல்லாப் பெண்களுக்கும் அழைப்பு வேறு....

இன்னொரு மாமி பட்சணம் கவரில் போடும் போது, "பசங்களா தொட்டு கிட்டு வைக்கப் போறேள்... அப்பறம் மறுபடி குளிக்கணும் என்று கூறி பட்சணத்தை ஸ்பின் பௌலர் ரேஞ்சுக்கு அங்கிருந்து வீசுவார்....

அடுத்த சங்கடம்....ஓரளவு (?) பாட வரும் என்பதால் எல்லார் வீட்டிலும் என்னையும் அக்காவையும் பாடுங்கோ என்று கூறு விடுவார்கள்....சரி பாட்டி மானத்தைக் காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக 'தேவியைப் பூஜை செய்வாய்' யோ 'எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய்' யோ ஒரு வழியாகப் பாடி முடிப்போம்....பாடி முடித்த அடுத்த நொடியில் 'இந்தாங்கோ பட்சணம்' என்று கொடுத்து விடுவார்கள்...(எங்கே இன்னொரு பாட்டு ஸ்டார்ட் செய்து விடுவார்களோ என்று பயந்தோ என்னவோ)




காலம் எல்லாவற்றையும் எப்படி மாற்றி விடுகிறது (நவராத்திரி உட்பட) என்று நினைத்துப் பார்க்கிறேன்...இன்று வீதியில் நிறைய பேர் காலி செய்து விட்டு சென்னைக்கோ பெங்களூருவிற்கோ சென்று விட்டனர்.... ஆபீசில் வேலை ஜாஸ்தி என்பதால் நவராத்திரிக்கு முதல் நாள் ஊருக்குப் போக முடியவில்லை....போன் செய்து "அம்மா கொலு வைத்து விட்டாயா என்று கேட்டால் இல்லைடா அதுக்கெல்லாம் எங்கே முடிகிறது கடைசி மூணு நாள் தான்" என்கிறாள்.....கடைசி மூன்று நாள் சென்று பார்த்தால் கொலு என்ற பெயரில் ஒன்று அலமாரியில் "சாஸ்திரத்துக்காக" வைக்கப்பட்டுள்ளது..... இரண்டே இரண்டு மர பொம்மைகள்.... சில எலக்ட்ரானிக் அயிட்டங்கள்....பையன்களும் ஏனோ இன்று பட்சணத்திற்குஅவ்வளவாக வருவதில்லை....

கொலுவில் இருந்து எங்களால் பிரித்துப் பார்க்கவே முடியாத பாட்டி இன்று கண் தெரியாமல் படுக்கையில் தன் கடைசி
த் தருணங்களில் இருக்கிறாள்......வண்ணம் இழந்த உடைகளில் அந்த இரண்டு மர பொம்மைகளும் அவள் மீண்டும் எழுந்து வந்து கல்யாணியில் கம்பீரமாக "எத்தைக் கண்டு நீ இச்சை கொண்டாய் மகளே" என்று பாட மாட்டாளா என்ற ஏக்கத்துடன் எங்கோவெறித்துப் பார்த்த வண்ணம் உள்ளன.....


2 comments:

துளசி கோபால் said...

அடடா...... பாட்டிக்கு உடல்நலமில்லையா:(

ப்ச்.......


உள்ளூர் கோவிலில் அம்மனுக்கு ஒன்பது அலங்காரங்கள் தினம் ஒன்னா இருக்குமே. அதையும் நாங்க விட்டுவைக்கமாட்டோம்.

Madhavan Srinivasagopalan said...

//கீழ்க்கண்ட சம்பாஷணைகள் நடக்கும்:

இது யார் வீடு பொட்டலம் டா?
ரங்க விட்டல் மாமாது பாட்டி...
நெனச்சேன்....கஞ்சப் பிசினாறிகள்....பாரு பொட்டுக் கடலை பொடி விபூதி மாரி கொடுத்திருக்கா....//

classic.. really enjoyed with similar words, those days..