இந்த வலையில் தேடவும்

Thursday, September 16, 2010

அணு, அண்டம், அறிவியல்-1

மாயாமயமிதம் அகிலம் ஹித்வா!

அணு, அண்டம், அறிவியல் என்ற தொடருக்கு அன்புடன் வரவேற்கிறேன்....

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா -பஜ கோவிந்தம்


[உனக்கு இருக்கும் செல்வம், சுற்றம், இளமை இவைகளை நினைத்து கர்வம் கொள்ளாதே! காலன்(யமன்)நினைத்தால் இவைகளை உன்னிடத்திலிருந்து நிமிடத்தில் எடுத்துக் கொண்டு விட முடியும்...(எனவே)இந்த உலகமே மாயை என்பதை உணர்ந்து கொண்டு பிரம்மபதத்தில் புகுவாயாக]

என்னடா அணு அறிவியல் என்றெல்லாம் சொல்லி விட்டு வேதாந்தத் தொடர் எதாவது எழுதப் போகிறேனா என்றால் இல்லை....இது அறிவியல் தொடர் தான்...ஓஷோ கூறியது போல மேற்கின் அறிவியலும் கிழக்கின் ஆன்மீகமும் ஒன்று சேராத வரை ஒரு புதிய மனிதனின் பிறப்பு நிகழாது....அதாவது சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை அறிவியல் வல்லுனர்கள் நினைத்துக் கொண்டிருந்தது (ஏன் ,இன்றும் கூட சிலர் நினைத்துக் கொண்டிருப்பது) என்னவென்றால் அறிவியல் என்பது முழுக்க முழுக்க மனித அறிவு சம்பந்தப் பட்டது...மனிதனால் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து விடை கண்டு விட முடியும்...அறிவியலால் பிரபஞ்சத்தின் இரகசியத்தையே அறிந்து கொள்ள முடியும்...எனவே அறிவியலில் தேவையில்லாமல் ஆன்மிகம், கடவுள், மாயை போன்ற நெருடலான சமாச்சாரங்களை ஒரு போதும் நுழைத்து விடக் கூடாது" என்பது தான்...அறிவியலாளர்களின் இந்த நினைப்பு வெறும் 'வெட்டி பந்தா' என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள்....கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள்...

நாம் வாழும் இந்த உலகம் ஒரு மெகா சைஸ் ஆமை மேல் நின்று கொண்டிருக்கிறது (அல்லது இந்து மதம் சொல்வது போல உலகம் ஆதிசேஷன் தலை மேல் தாங்கப் படுகிறது) நம் உலகம் தான் இந்த மகா பிரபஞ்சத்தின் மையம் , கடவுளின் படைப்பான நம்மை தான் சூரியனும் நட்சத்திரங்களும் செக்கு மாடு மாதிரி சதா தேமே என்று சுற்றி வந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் தப்புத் தப்பாக (அபாரமான கற்பனை வளத்துடன்) மக்கள் புளுகிக் கொண்டு திரிந்த காலத்திலிருந்து ஆரம்பித்து இன்று பிரபஞ்சத்தில் உள்ள கோடிக் கணக்கான 'காலக்சி' (galaxy , விண்மீன் மந்தைகள் )களில் ஒன்றான ஒரு சுருள் வடிவ பால்வெளி காலக்ஸியின் (milky way galaxy )விளிம்பில் உள்ள ஒரு சாதாரண மஞ்சள் விண்மீனைச் (சூரியன்) சுற்றும் ஒரு தக்குனூண்டு கோள் தான் நம் பூமி என்று (கொஞ்சம் ஓவராப் போய்டாங்களோ?) கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கர்வப் படுவதில் தவறென்ன இருக்கிறது?

உதாரணமாக நியூட்டனின் (Newton ) இயக்கவியல் விதிகளை வைத்துக் கொண்டு நம்மால் சாணி எறிவதில் இருந்து சாட்டிலைட் விடுவது வரை அனைத்தையும் விவரிக்க முடியும்...இந்த தைரியத்தில் தான் லாப்லாஸ்(marquis de Laplace 1749 – 1827) என்ற அறிவியலாளர் Determinism என்ற கருத்தை நம்பினார்.அதாவது பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக மனிதனால் அறிந்து கொண்டு விட முடியும் என்பதில் திடமான நம்பிக்கையுடன் இருந்தார்... அவர் சொன்னதன் தமிழாக்கம் கீழே:

"பிரபஞ்சத்தின் இப்போதைய நிலை என்பது அதன் முந்தைய நிலைகளின் விளைவு மட்டும் அல்ல; அதன் வருங்கால நிகழ்வுகளின் காரணமும் ஆகும்...நுண்ணறிவு கொண்ட ஒருவர் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் எல்லா விசைகளையும் , பிரபஞ்சத்தை ஆக்கிய எல்லாத் துகள்களின் நிலைகளையும் இன்று இல்லா விட்டால் நாளை அறிந்து கொண்டு விட முடியும்...பிரபஞ்சத்தின் இந்தத் தரவுகளை (data ) கவனமாக அலசி ஆராய்ந்தால் நம்மால் பிரபஞ்சத்தின் சூத்திரத்தை அறிந்து கொண்டு விட முடியும்..இந்த சூத்திரமானது பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பொருட்களில் இருந்து மிகச் சிறிய அணுவின் அசைவு வரை அனைத்தையும் அனாயாசமாக விளக்கும்...இந்த அறிவின் துணையால் நமக்கு எதுவுமே நிச்சயமின்றி இருக்காது...நாம் நமது இறந்த காலத்தை தெளிவாகப் பார்க்க முடிவது போல் ,எதிர் காலத்தையும் பார்ப்போம்"...

லாப்லாசின் பேய் (Laplace demon ) என்ற ஒரு கொள்கை ஆய்வு ( thought experiment ) அறிவியலில் உண்டு.(ஓ அறிவியலில் கூட பேயெல்லாம் வருமா?) .. அந்த பேய் என்ன செய்யும் என்றால் மற்ற பேய்களைப் போலவே ராத்திரியில் வந்து பயம் காட்டும்....சாரி இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாத் துகள்களின் நிலைகளையும்,வேகங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அந்தத் தகவலை வைத்துக் கொண்டு பிரபஞ்சத்தின் எதிர் காலம் என்ன? பிரபஞ்சத்தின் ரகசியம் என்ன என்ற கேள்விகளுக்கு கால்குலேட்டரில் கணக்கு போட்டு விடை கண்டு பிடிக்கும்....(சோ சிம்பிள் நோ?)

நாமெல்லாம் மரத்தடி ஜோசியர் ஒருவர் நம் கையைப் பார்த்து "உங்களக்கு கூடிவ விரைவில் செல்வம் வந்து கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது" என்று கூறி விட்டால் போதும்...அது உடான்ஸ் என்று தெரிந்தாலும் அதை நம்ப ஆரம்பித்து விடுவோம் இல்லையா? லாப்லாஸ் போன்ற பழுத்த அறிவியல் மேதை சூடம் அணைக்காத குறையாக சொல்கிறார் என்றால்? அவர் கூற்று சரியாகத் தான் இருக்கும் என்று பிற அறிவியல் வல்லுனர்களும் மெதுவாக இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பகல் கனவு காண ஆரம்பித்தனர்...

'நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்கும்' என்பார்களே, இந்த நினைப்பு ரொம்ப காலத்திற்கு நிலைக்கவில்லை....லாப்லாசின் பேயையும் முழுங்கிச் சாப்பிடும் வல்லமை பெற்ற பிரம்ம ராட்சசன் ஒன்று மெல்ல மெல்ல உயிர் பெற்றுக் கொண்டிருந்தது மாக்ஸ் பிளாங்க் (Max Planck 1858 -1947 )என்பவரின் ஆய்வுக் கூடத்தில் ...அந்த பிரம்ம ராட்சசனின் பெயர் 'குவாண்டம்' .... வேடிக்கை என்னவென்றால் அறிவியலில் 'குவாண்டம்' என்றால் மிக மிக மிகச் சிறிய என்று அர்த்தம்.... :)

இந்த ராட்சசனின் பிறப்பு தான் பின்னர் பெரிய அறிவியல் மேதைகளைக் கூட "வாழ்வே மாயம்' என்று சில சமயம் தலையைப் பிய்த்துக் கொண்டு ரோட்டில் ஓடாத குறையாகப் புலம்ப வைத்தது....

தொடரும்....

8 comments:

V.Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல தொடர்.

Anonymous said...

I have started to read your anu, andam., It is good to read. Only few people are writing blog elaborately about science. Keep doing the good work.

Thanks
Gokul

Katz said...

ஆரம்பத்தில் இருந்து வருகிறேன்.

அப்பாதுரை said...

கிழக்கே அறிவியல் இல்லையென்பது போன்ற தொனி..
ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்று நினைக்கிறேன். விஞ்ஞானம் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் பேரறிவு. தமிழில் விஞ்ஞானம் science ஆகிவிட்டது. விஞ்ஞானம் தமிழ்ச்சொல் என்பதே முரண்?

satya said...

Sir,

please start the mathamatics about calculus. Still now i dont understand that mathametics.

regards,

sathiya seelan

ammuthalib said...

ஆதமுடைய மகன்
என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன்
காலத்தைத் திட்டுகின்றான். என்
கையிலே ஆட்சியுள்ளது.
இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்”
என்று அல்லாஹ் கூறுவதாக முஹம்மது நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 4826

இப்படி எதையும் புரட்டி போடும் காலத்தைத்தான் "காலன்" என்று தமிழ் அழைக்கிறதோ ?

Yuvaraj Poondiyan said...

ஆன்மிகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் அறிவியல் என்ற ஒன்றே இல்லையே...?!

Palayam Maharaj said...

நன்றி. இந்த சாதாரண வார்த்தையில் விவரிக்கமுடியாத பல நன்றிகள் உள்ளது. இத்தனை நாட்களாக எப்படி இந்த பிளாக்கை படிக்காமல் விட்டோம் என வருத்தப்படுகிறேன்.