இந்த வலையில் தேடவும்

Friday, July 8, 2011

கலைடாஸ்கோப்-28

லைடாஸ்கோப்-28 உங்களை வரவேற்கிறது


ஒன்று
======


சோனி மேக்ஸ்-ஸில் It 's a boy girl Thing என்ற திரைப்படம் வந்து கொண்டிருந்தது. சப்-டைட்டில் இருந்ததால் பார்க்கலாம் என்று பார்த்தேன். ச.டை இல்லை என்றால் எனக்கு அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிவதில்லை. படத்தின் கதை (சற்று) வித்தியாசமாக இருந்தது. உட்டி (Woody, ஆண், ஹீரோ ) மற்றும் நெல் (Nell, பெண், ஹீரோயின் ) இருவரும் பக்கத்து
வீட்டுக்கார்கள். ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். இவர்களுக்குள் பெரிதாக நட்பு பழக்கம் Outing என்றெல்லாம் எதுவும் இல்லை. ஒரு நாள் காலேஜ் டூர் போயிருக்கும் போது ஒரு மியூசியத்தில் இருக்கும் ஒரு அமானுஷ்யமான சிலை இவர்களை கூடுவிட்டு கூடுபாயும் படி (?) செய்து விடுகிறது. அதாவது ஹீரோவின் உடலில் ஹீரோயின்.ஹீரோயினின் உடலில் ஹீரோ! இது ஒன்று போதாதா? இரண்டு மணி நேரம் கதையை நகர்த்த?

இதன் பிறகு படம் காமெடியாக நகருகிறது. பழக்கம் இல்லாத உடல்களில் புகுந்து கொண்டு இருவரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
நெல் (ஆண் உடலில்) நின்று கொண்டே யூரின் போக முடியாமல் தவிக்கிறாள் (ன்). Woody (பெண் உடலில்) பெண்களின் சில பிரத்யேக உள்ளாடைகளை அணியமுடியாமல் தடுமாறுகிறான் (ள்) .தன் கூந்தலை அவன் கண்டபடி சீவி கெடுத்துவிட்டதாக அவள் குற்றம் சாட்டுகிறாள்.தினமும் காலையில் உனக்கு அது வருகிறதே என்று ஆண் உடலில் இருக்கும் நெல் பெண் உடலில் இருக்கும் Woody யைக் கேட்கிறாள்.அவள் கேட்டது எது என்று எனக்கு இது வரை தெரியவில்லை! நெல் -லை (நெல்லின் உடலில் இருக்கும் ஹீரோவை) டேட் செய்ய ஒருவன் அழைக்கிறான். அவளால் (அவனால்) அதை சகிக்க முடியாமல் It looks so Gay என்று ஓடி வந்து விடுகிறாள் (ன்) .ஃபுட்பாலில் ஹீரோ ஒரு சாம்பியன். ஆனால் அவன் உடலில் இருக்கும் நெல் அதை ஆடமுடியாமல் தடுமாறுகிறாள். நெல் ஒரு இலக்கியப் பைத்தியம். ஆனால் அவள் உடலில் இருக்கும் ஹீரோவுக்கு கவிதை என்றாலே குமட்டிக் கொண்டு வரும்! ஆனாலும் எப்படியோ இருவரும் விட்டுக் கொடுத்து நெல் (Woody உடலில்) டோர்னமெண்டை வென்று விடுகிறாள் . அவனும்(நெல் உடலில்) ஒரு பிரபலமான கல்லூரியின் இலக்கியப்பிரிவு விரிவுரையாரளுக்கான இன்டர்வியூவில் பாஸ் செய்து விடுகிறான்.கடைசியில் அந்த சிலை இவர்கள் மேல் கருணை செய்து மீண்டும் அவர்களை அவரவர்கள் சொந்த உடலுக்கு மாற்றி விடுகிறது. அப்புறம் என்ன? இருவரும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ள ஹீரோ எல்லை தாண்டும் முன் திரை விழுகிறது.


இரண்டு
========

கூ.வி.கூ.பா என்பது சாத்தியமா என்றெல்லாம் நாம் அதிகமாக விவாதிக்க வேண்டாம். பழங்கால விக்ரமாதித்தன் படங்களில் செய்ததை இவர்கள் கொஞ்சம் மாடர்ன் ஆக செய்கிறார்கள். பாதாள பைரவியோ ஏதோ ஒரு படத்தில் ஒரு நல்ல ராஜாவை ஏமாற்றி வில்லன் அவனை சும்மா ஒரு த்ரில் -லுக்காக ஒரு செத்துப்போன கரடியின் உடம்பில் போக செய்வான்.
அவசரத்தில் ராஜா மீண்டும் வெளியே வரும் மந்திரத்தை கற்றுக் கொள்ளாமலேயே உள்ளே போய் விடுவான். இந்த மந்திரவாதி வில்லன் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு ராஜாவின் உடலில் புகுந்து கொண்டு ராஜ்ஜியத்தில் அக்கிரமங்கள் செய்வான். கரடியோ நான் தான் ராஜா என்று நிரூபிக்க அரண்மனைக்குள் நுழைந்தால் எல்லாரும் பயந்து போய் அதைத் துரத்தி விட்டுவிடுவார்கள்.


ஒரு குறிப்பிட்ட பாலினத்தவருக்கு எப்போதும் மற்ற பாலில் அதிக சௌகரியங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த கவிதையைப் படிக்கவும். சரி இந்த கவிதையை அப்படியே ஆணுக்கு சாதகமாகவும் எழுதலாம். It 's all relative ! ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடம்பில் புகுந்து பார்த்தால் தான் அவர்களுக்கே உரிய சில சங்கடங்களை உணர முடியும்.
அதே போல ஒரு பெண் ஒரு ஆணின் உடம்பில் புகுந்தால் தான் அதற்கே உரிய சில வலிகளை உணர முடியும். அவர்கள் உணரும் முதல் வலி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஷேவ் செய்வதாகத் தான் இருக்கும்!


கூ.வி.கூ.பா போன்ற ஏதாவது ஏடாகூடம் நடந்தால் தான் நம் உடம்பே பரவாயில்லை என்று நினைப்போம் போலிருக்கிறது . பழக்கம் இல்லாத தேவதையைக் காட்டிலும் பழகிய பேய் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும் . ஒருவன் துணிகளை Exchange செய்து கொள்ளும் ஒரு கடைக்கு தன் பழைய கோட்டை எடுத்துக் கொண்டு போனானாம். ஒரு மணி நேரம் போராடி கடைசியில் இந்த கோட்டை என்னதுக்கு பதிலாக எடுத்துக் கொள்கிறேன்..இது தான் கொஞ்சம் தேவலாம் போல இருக்கிறது என்றானாம்.அதற்கு கடைக்காரன் 'சார், அது தான் நீங்க எடுத்துட்டு வந்த கோட்டு' என்றானாம்.'அவனை மாதிரி இருக்கணும்' 'அவளை மாதிரி ஆகணும்' என்று நாம் சும்மா ஆசைப்படுகிறோமே தவிர அப்படி ஒரு சந்தர்ப்பம் உண்மையில் கிடைத்தால் நாம் தயங்குவோம். அடுத்தவர் சுமக்கும் மூட்டை சின்னதாகத் தான் இருக்கிறது. ஆனால் அதற்குள் தேளோ பாம்போ எது இருக்கும் யார் கண்டார்? நாம் சுமக்கும்( பெரிய ) பஞ்சு மூட்டையே போதும் என்று இருந்து விடுவோம்!


மூன்று
=======

தீவிரவாதிகள் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் வந்திருப்பதால் எல்லா விமான நிலையங்களிலும் செக்யூரிட்டி 'டைட்' செய்யப்பட்டிருக்கிறதாம். (செக்யூரிட்டி வேலை செய்பவர்கள் இன்னும் கொஞ்சம் டைட்டாக பெல்ட் ,டை இதையெல்லாம் அணிந்து வருவார்களோ???) ஆனால் உண்மை என்னவென்றால் செக்யூரிட்டி டைட் ஆக இருக்கும் போதோ சுதந்திர தினங்களில் நாம் படு உஷாராக இருக்கும் போதோ எதுவும் நடப்பதில்லை. பயணிகளுக்கு நேரம் தான் செலவாகிறது. இரட்டை கோபுர தாக்குதலோ, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலோ ஒரு சாதாரண நாளில் நாம் எல்லாரும் 'லூசாக' (புத்தியிலும்) இருந்த போது தான் நடந்தன. போலீஸ் வேலை செய்பவர்களுக்கு ஒரு பெரிய கடுப்பு என்ன என்றால் வதந்திகள் பெரும்பாலும் பொய் தான் என்று தெரிந்திருந்தாலும் துப்பாக்கிகளை 'லோட்' செய்து கொண்டு நாய்களைக் கூட்டிக் கொண்டு ஒரு திருவிழா போல ஜீப் ஏறி புறப்பட வேண்டி இருப்பது!


பெரும்பாலான விஷயங்கள் நாம் தயாராக இருக்கும் போது நடப்பதே இல்லை. விகடனில் ஒரு கவிதை வந்திருந்தது. அது தாத்தா சாகட்டும் என்று காத்திருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. வெட்டியானுக்கு சொல்லியாகி விட்டது. தாரை தப்பட்டை எல்லாவற்றுக்கும் அட்வான்ஸ் கொடுத்தாகி விட்டது. உறவினர்களுக்கு சொல்லி அனுப்பியாயிற்று இனி தாத்தா சாவது ஒன்று தான் பாக்கி என்று அந்த கவிதை போகிறது. (கடைசியில் தாத்தா வைகுண்டப் ப்ராப்தி அடைந்தாரா தெரியவில்லை!) ஆனால் பெரும்பாலான மரணங்கள் எதிர்பாராமல் தான் நடக்கின்றன. நேற்று வரை திடகாத்திரமாக இருந்தவர் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத வகையில் 'பொட்' என்று போய் விடுகிறார்! யாராவது இப்படி எதிர்பாராமல் இறந்து விட்டால் சிலர் 'நேத்து கூட பாத்தேனே, ஜாக்கிங் போறப்ப என்னோட சிரிச்சு சிரிச்சு பேசினாரே' என்று சொல்லும் போது அதைக்கேட்க வேடிக்கையாக இருக்கிறது. நாளை இறக்கப் போகிறவர் இன்று மரணத்தின் சாயலை சுமந்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை நண்பர்களே!


ஆம்.


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் உலகு !


நான்கு
=======

http://graphjam.memebase.com/ வாழ்வின் நிதர்சனங்களை வரைபடங்களாக நமக்குக் காட்டுகிறது. நேற்று முழுவதும் ஆபீசில் வேலை செய்யாமல் வரைபடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். (இன்னிக்கு மட்டும் என்னவோ வேலை செய்வது மாதிரி!) பெரும்பாலான வரைபடங்கள் மேல்நாட்டு பாணியில் இருந்தாலும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
எல்லாமே போகப் போக மோசமாகத்தான் போகும் (If something can go wrong, it will) என்ற மெர்பி(Murphy 's Law ) யின் விதிகள் தான் இந்த வரைபடங்களின் ஆதாரம். வீட்டில் நன்றாக டிரஸ் செய்து கொண்டு 'Presentable ' ஆக இருந்தால் யாருமே வர மாட்டார்கள். பிறந்த நாள் உடையில் நாம் குளிக்கும் போது யாராவது காலிங் பெல்லை அடிப்பதற்கான சாத்தியங்கள் 30 %. இதே நாம் அப்போது தான் தூங்கி எழுந்து தலை கலைந்து வாயில் ஜொள் ஒழுக பேய் மாதிரி காட்சி தரும் போது யாராவது காலிங் பெல்லை அடிப்பதற்கான சாத்தியங்கள் 80 % ஆக உயர்கின்றன. ஒரு பாட்டிலின் மூடி நீங்கள் தனியாக இருக்கும் போது சுலபமாகத் திறந்து கொள்கிறது. அதே குடும்ப உறுப்பினர்கள் முன் இருக்கும் போது கொஞ்சம் மக்கர் செய்கிறது. அதே மூடி நீங்கள் கவர விரும்பும் பெண் ஒருத்தியுடன் இருக்கும் போது இன்னும் டைட்டாக மூடிக் கொண்டு மானத்தை வாங்குகிறது. இப்படியெல்லாம்!



இதை கொஞ்சம் Modify செய்து வரைந்த ஒரு பதிவு இங்கே..

இனி மேல் கலைடாஸ்கோப்பில் இது மாதிரி ஒவ்வொரு வரைபடத்தை தரலாம் என்று இருக்கிறேன்.
Today's Graph:



ஐந்து
========

இப்போது சில ட்விட்டுகள்:


jillthanni :
மனசுக்கு பிடிச்ச பாடலை வாய்விட்டு பாடுவதை போன்றதொரு ரிலாக்சேஷன் வேறேதும் இல்லை #பக்கத்து வீட்டுக்காரன் உசுருக்கு உத்திரவாதம் நான் இல்ல

arattaigirl
நவீனத்துவம்கற வார்த்தையை கண்டுபிடிச்சானே அவன் அப்பவே அதுக்கு ஒரு அர்த்தத்தையும் எழுதி தொலைச்சிருந்தா என்னவாம்....? #வெறிநவீனத்துவம்

arattaigirl

தலைப்பாகையுடன் வந்த இந்தியருக்கு ஆஸி.,ஓட்டலில் அனுமதி மறுப்பு #பிரதமரே, அங்க போயும் வாய் திறக்காம முழிச்சிட்டே இருந்துட்டிங்களா?

samudra123:

சில பேர் ஏன் தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதுகிறார்கள்? It's so disgusting!


ஆறு
====

ஒரு ஓஷோ ஜோக்கு.

கப்பல் ஒன்றில் பயணம் செய்த ஒரு நடிகையின் டைரியில் இருந்து:

திங்கள் : இன்று விருந்தில் கேப்டன் என்னைப் பார்த்தார். புன்னகைத்தார். அருகில் வந்து அமரும் படி சைகை காட்டினார்.

செவ்வாய்: இன்று கேப்டன் என்னை அழைத்தார். நாங்கள் இருவரும் 'இங்கே பயணிகள் அனுமதி இல்லை' என்ற இடத்தில் நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்

புதன்: இன்று கேப்டன் என்னை காதலிப்பதாக கூறினார். நான் எதுவும் பேசவில்லை.

வியாழன் : இன்று கேப்டன் என்னை கல்யாணம் செய்ய விரும்புவதாகவும் நான் மறுத்தால் கப்பலை பயணிகளுடன் கடலில் மூழ்கடித்து விடப்போவதாகவும் மிரட்டினார். எனக்கு குழப்பமாக இருந்தது.

வெள்ளி : நான் இன்று 800 உயிர்களைக் காப்பாற்றி விட்டேன்.


முத்ரா

7 comments:

Uma said...

//இனி தாத்தா சாவது ஒன்று தான் பாக்கி என்று அந்த கவிதை போகிறது.//
எங்க தாத்தா இந்த கவிதைல வர மாதிரி இறந்தார்.. உறவுக்காரங்க எல்லாம் பாத்துட்டே இருக்கும்போது மூச்சு நின்னுது... Horrible experience...

As usual, variety விருந்து

அகல்விளக்கு said...

சூப்பர் கலவை...

Mohamed Faaique said...

பதிவு சூப்பர்... வழமை போல, பதிவை கடைசியில் வரும் ஓஷோ ஜோக் ஓவர் டேக் பண்ணிரும்...

இராஜராஜேஸ்வரி said...

பழக்கம் இல்லாத தேவதையைக் காட்டிலும் பழகிய பேய் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும் . /

வார்த்தையிலிருந்து மௌனத்திற்கு வந்துவிடோம்.
அருமையான் பகிர்வுகள்..

ஹேமா said...

எல்லாமே வாசிச்சேன்.மனசில நிக்கிறது ஓஷோவின் ஜோக் மட்டும்தான் !

சமுத்ரா said...

ஹேமா, அப்ப மத்தது எழுதறது எல்லாம் வேஸ்டா? :)

Abrams said...

எல்லாமே வாசிச்சேன்.மனசில நிக்கிறது ஓஷோவின் ஜோக் மட்டும்தான் !