இந்த வலையில் தேடவும்

Friday, July 15, 2011

கலைடாஸ்கோப் -29

லைடாஸ்கோப் -29 உங்களை வரவேற்கிறது

1
==

'பூ வாசம் புறப்படும் பெண்ணே, பூ நான் வரைந்தால்' ...இந்த பாட்டை சமீபத்தில் கேட்டதும் வாசனைகளைப் பற்றி பேச வேண்டும் போலத் தோன்றியது.

மற்ற எல்லா புலன்களுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை நம் மூக்குக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. ஒளியையும் ஒலியையும் மின்சார துடிப்புகளாக மாற்றத் தெரிந்த மனிதனுக்கு இன்னும் வாசனையின் மர்மம் பிடிபடவில்லை. நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? பழையதை நினைவுபடுத்துவதில் காட்சிகளைக் காட்டிலும் , சப்தங்களைக் காட்டிலும் வாசனையே முதலிடம் வகிக்கிறது. இதனால் தான் நாம் இது பூர்வ ஜன்ம வாசனை என்று சொல்கிறோம்.
வாசனை ஜென்மங்களைக் கடந்தும் நம்மிடம் ஒட்டிக் கொண்டு வரும் என்று தெரிகிறது. நீங்கள் சின்ன வயதில் ஏதோ ஒரு வாசனையை முகர்ந்திருப்பீர்கள். ஒரு சோப்பின் வாசனையோ வீட்டில் செய்த ஒரு இனிப்பின் வாசனையோ, அம்மாவின் உடலில் வந்த வாசனையோ,நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்க வாசனையோ,விடுமுறைக்கு வந்த அண்ணன் போட்டுக் கொண்டு வந்த செண்டின் வாசனையோ.. ஏதோ ஒன்று...அதே வாசனையை நீங்கள் ஐம்பது ஆண்டுகள் கழித்து நுகர்ந்தாலும் அந்த ஞாபகங்கள் உடனே நினைவில் தூண்டப்படும். ஆனால் ஐம்பது வருடம் முன்பு பார்த்த ஒரு இடத்தையோ கேட்ட ஒரு இசையையோ மீண்டும் அனுபவித்தால் அந்த ஞாபகங்கள் வர நாம் கொஞ்சம் போராட வேண்டி இருக்கும். ஞாபக சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வாசனையுடன் சம்பந்தப்படுத்தி பாடங்களைக் கற்பிக்க இயலுமா என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்.

மிருகங்கள் தாம் உண்ணும் உணவு நல்லது தானா இல்லையா என்பதை முகர்ந்து பார்த்தே அறிந்து கொள்கின்றன. நாமோ உணவு பார்க்க மட்டுமே நன்றாக இருந்தால் உடனே உள்ளே அமுக்கி விடுகிறோம். மனிதனின் வாசனை உணர்வுகள் மழுங்கி வருகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். புதிய சோப்பு ஒன்று வாங்கினால் அதன் வாசம் ஒரு இரண்டு நாளுக்கு நமக்கு உரைக்கிறது. அதற்குப் பிறகு ஏதோ கல்லைத் தேய்த்துக் கொள்வது போலவே தான் இருக்கிறது.வெளிச்சத்தில் தூங்கப் பழகிக் கொள்வது போலவும், ரயில் சத்தத்தில் வசிக்கப் பழகிக் கொள்வது போலவும் நாம் வாசனைகளுக்கு இடைய வாழவும்
பழகிக்கொள்கிறோம். ஆம்..சாக்கடையில் இறங்கி வேலை பார்பவர்களுக்கு அதன் வாசம் தெரிவதில்லை.

ஓஷோ வாசனையைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொல்கிறார் கேளுங்கள். அதாவது: இந்து மதம் காதுக்கு முக்கியத்துவம் தந்து ஒலியினால் இறைவனை ஆராதிக்கிறது. 'நாதோபாசனம்'! நாதத்தால் கடவுளை உபாசிப்பது. கிறித்துவம் தொடுபுலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இயேசு கைகளால் தொட்டே நோயாளிகளை குணப்படுத்தினார் என்று சொல்வார்கள்.வாசனையின் மர்மத்தைத் தெரிந்து கொண்ட இஸ்லாம் ஒன்று மட்டுமே வாசனையால் இறைவனை ஆராதிக்கிறது. அவர்கள் ரம்ஜான் அன்று ஊர்வலம் சென்றால் வீசும் வாசனையை வைத்தே இதை சொல்லி விடலாம். குளிக்காமல் தொழுகை செய்தாலும் செய்வார்களே தவிர சென்ட் இல்லாமல் தொழ மாட்டார்கள். அதாவது இசையின் வெவ்வேறு ராகங்களால் இறைவனை ஆராதிப்பது போல வெவ்வேறு வாசனைகளால் இறைவனை வழிபடலாம். இந்து மதம் வாசனையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை..ஊதுபத்தி எல்லாம் பின்னால் வந்த சமாச்சாரங்கள்.
பிரம்மச்சாரி ஒருவன் எந்த விதமான வாசனை திரவியங்களையும் உடலில் போட்டுக் கொள்ளக்கூடாது என்கிறது மனுசாஸ்திரம்.வாசனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இஸ்லாம் இசைக்கு பெரிதாக இடம் அளிப்பதில்லை. எனக்குத் தெரிந்து அவர்கள் நமாஸ் செய்யும் போது ஒரே ராகம் மட்டுமே கேட்கிறது. (சக்ரவாகம்) ஒரே ராகத்தால் இறைவனுக்கு சலிப்பு வந்தால் அவன் ஹிந்துக்களிடம் வரலாம். ஒரே வாசனையால் அவனுக்கு சலிப்பு தட்டினால் இஸ்லாம் பக்கம் போகலாம். தொட்டு உணர்தலின் த்ரில் வேண்டும் என்றால் கிறித்துவர்களிடம் போகலாம். அவனுக்கு தான் எத்தனை
OPTIONs ?

'மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று ஆண்டாள் பாடியது நினைவில் வருகிறது.

2
==

விஷ்ணுவை அலங்காரப் பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் வர்ணிப்பார்கள். சிவனுக்கு (சிவ லிங்கத்திற்கு) எப்போதும் 'தைல தாரை' என்று தலையில் நீர் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். சிவன் பெரிய அலங்காரங்களை எல்லாம் கேட்பதில்லை. ஆனால் திருமால் சரியாக குளிக்கிறாரோ இல்லையோ நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அவருக்கு. திருப்பதி கோவிலைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்களுக்கு? சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் இதை உறுதி செய்கின்றன.ஸ்ரீ ரங்கத்திலும் இது போல இருக்கும் என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக இருக்கும்.உங்கள் ஊரில் ஏதாவது பெருமாள் கோயில் இருந்தால் அங்கே ரகசிய அறை பாதாள அறை ஏதாவது இருக்கிறதா என்று ரகசியமாக விசாரித்து வைக்கவும்.

சைடு பிட்: அம்மா டிரெஸ்ஸிங் ரூமில் டிரஸ் செய்து கொண்டு இருக்கிறாள். குழந்தை எதற்கோ வீறிட்டு அழுகிறது.அப்போது அவள் FAIR -N -LOVELY யை முழுவதுமாக பூசிக் கொண்டு அப்புறம் போய் குழந்தையைத் தூக்கலாம் என்று நினைப்பாளா? அதே மாதிரி கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலா' என்று அழைத்த போது திருமால் அப்போது தான் தூங்கி எழுந்திருந்தாராம்.
எப்போதும் சர்வ அலங்காரங்களுடன் இருக்கும் அவர், சங்கு சக்கரம் அங்கவஸ்திரம் இது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சிதறிக் கிடக்க 'கருடா
புறப்படு ' என்று வண்டி ஏறி விட்டாராம். எனவே கஜேந்திர மோட்சம் போட்டோவில் விஷ்ணுவை சர்வ அலங்காரங்களுடன் சங்கு சக்கரம் கதை பத்மம் பீதாம்பரம் சகிதமாக 'பளிச்' என்று வரைந்திருந்தால்
அது தவறு. பாதி தூக்கத்தில் எழுந்து வந்தவர் போல சித்தரித்திருந்தால் அது தான் சரியான க.மோ. போட்டோ..இதை நான் சொல்லவில்லை..புரந்தரதாசர் ஒரு கிருதியில் சொல்கிறார்:

ஸிரிகெ ஹேளத முன்னே செரகனு தரிஸதெ
கருடன மேலெறதே கமனவாதே

மனைவியிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி விட்டாராம். கூப்பிட்டால் அப்படி கூப்பிட வேண்டும் பகவானை...வாயில் பஜ்ஜியை திணித்துக் கொண்டே 'கிருஷ்ணா ராமா' என்றால் அவனும் பஜ்ஜி போண்டா எல்லாம் சாப்பிட்டு விட்டு நிதானமாகத் தான் வருவான்..

3
==

சன் டி.வியில் ஒரு பெண்மணி(விஷால்??) பத்து வருடங்களுக்கும் மேலாக ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை நியூஸ் வாசிக்க ப்ரோமோஷன் கொடுத்து விட்டு சன் டி.வி அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடுவது நல்லது என்று தோன்றுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் சலிக்காமல் அந்த அம்மணி வருகிறார். கிழவி ஆகும் வரை அவரை விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஒரு பத்து பதினைந்து STANDARD பலன்களை வைத்திருக்கிறார். இருபத்து நான்கின் கீழ் ஐம்பத்து இரண்டு என்ற முகவரியில் வசிக்கும் ஜோசியர் இதைக் கணிக்கவில்லை என்று தோன்றுகிறது. அவரே மனப்பாடம் செய்து வைத்துள்ள பலன்களை மாற்றி மாற்றி சொல்லிவிடுவார் போலத் தெரிகிறது.உதாரணமாக மேஷ ராசி நேயர்களே 'இன்று பொன் பொருள் சேரும், புதிய நட்புக்கள் நம்பிக்கையைத் தருவர், பெண்களிடையே இருந்து வந்த மன சஞ்சலங்கள் தீரும் ரிஷப ராசி நேயர்களே 'வாகன யோகம் மனை யோகம் கைகூடும், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும்' மீன ராசி நேயர்களே 'இன்று வீண் சந்தேக உணர்வுகள் ஏற்பட்டு மறையும்' இன்று உங்கள் அதிர்ஷ்டமான ராசிகள் மேஷம், கும்பம் அனுகூலமான திசை வடக்கு ராசியான நிறம் மஞ்சள்.. பத்து வருடங்களுக்கும் மேலாக இதைத் தவிர வேறு சொன்னதாகத் தெரியவில்லை..சன் டி.வி நேயர்களும் இதை ஒரு சுகமான சுமையாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இன்று எனக்கு பொன் பொருள்
சேரவில்லையே என்று சன் டி.வி நிலையத்தை யாரும் முற்றுகை இட்டதாகத் தெரியவில்லை..டைலி காலண்டருக்கு கீழே எறும்பு எழுத்தில் மகரம்-மகிழ்ச்சி கும்பம்-அலைச்சல்
என்று பொதுவாக சொல்லிவிடும் படி அவ்வளவு எளிமை இல்லை வாழ்க்கை! Life is more than Astrology!


4
==

பெங்களூருவில் பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வார இறுதியில் சும்மா இருக்கும் ஐ.டி கம்பெனிகளின் பஸ்களை அப்போது PUBLIC TRANSPORT க்காக பயன்படுத்துவார்கள்.முன் பக்கம் ஒரே ஒரு கதவு இருக்கும். டிரைவரே (பொறுமையாக) டிக்கெட் கொடுப்பார். நீங்கள் பெங்களூர் வந்தால் அப்படிப்பட்ட பஸ்களில் தெரியாமல் கூட எறிவிடாதீர்கள்..கண்டக்டர் இருக்கின்ற இரண்டு பக்கமும் திறந்த பஸ்ஸில் ஏறுங்கள்..இங்கே பெண் கண்டக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆண்கள் அடைத்துக் கொண்டு நிற்கும் பகுதிகளிலும் கடமை உணர்ச்சியோடு நுழைந்து டிக்கெட் டிக்கெட் என்று கூவுகிறார்கள். பெரும்பாலான பஸ்சுகளில் பெண்கள் சீட் ஆண்கள் சீட் என்ற பேதம் மறைந்து வருகிறது. காலேஜ் பெண்கள் கடைசி சீட்
ஆண்களுக்கு மட்டுமே உரியதா ? நாங்களும் உட்காருவோம் என்று சில சமயம் கடைசி சீட்டில் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு ஆண் வந்து 'இது எங்க சீட்' என்று சொல்ல முடியாது.
ஆனால் ஒரு ஆண் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தால் ஒரு பெண் தன் ஹான்ட் - பேக்கை தூக்க முடியாத லக்கேஜாக கற்பித்துக் கொண்டு 'இது எங்க சீட்' என்று தைரியமாக சொல்லலாம்.ஆண்களுக்கு உரிய பல உரிமைகளையும் எடுத்துக் கொண்ட பெண்கள் 'தான் பெண்' என்ற சலுகையையும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.ஆண்கள் மட்டுமே செய்யக் கூடிய
வேலை உலகத்தில் எது என்றால் முகச்சவரம் செய்து கொள்வது என்று சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.


5
==
இப்போது ஒரு வாழ்க்கை வரைபடத்தைப் பார்க்கலாம் :)










6
==
ஓர் ஓஷோ ஜோக்.


ஒரு ஆள் எதையோ கொறித்துக் கொண்டு டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி திடீரென்று அவன் மண்டையில் கரண்டியால் அடித்தாள்..

"ஏன் என்னை அடித்தாய்?"

"உங்க பாக்கெட் டைரில ஜெஸ்ஸிகா ன்னு பேர் எழுதியிருந்தது"

"ஓ அதுவா, அது நான் ரேஸில் பணம் கட்டிய குதிரையின் பெயர்"

"ஓகே சாரி"

இன்னொரு நாள் அந்த ஆள் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி இப்போது பூரிக்கட்டையால் அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்

"ஹே, இப்போ எதுக்கு அடித்தாய்?"

"உங்க குதிரை இப்போ டெலிஃபோன் செய்தது"


முத்ரா


11 comments:

RVS said...

Astrology Amazing! Very Good. ;-)

Katz said...

யப்பா வாசனை பற்றி அசத்திட்டிங்க.

இதெல்லாம் மனப்பாடமா தெரியுமா? அல்லது காப்பி பேஸ்டா?

கலைடாஸ்கோப் தலைப்புக்கு ஏத்த மாதிரி எத்தனை விதமான விஷயங்கள். சூப்பர்.

Katz said...

ஸிரிகெ ஹேளத முன்னே செரகனு தரிஸதெ
கருடன மேலெறதே கமனவாதே


forgot to paste in previous commetn

bandhu said...

உணர்தல் - மதம் பற்றிய பார்வை பிரமாதம். லட்டில் வரும் முந்திரி பருப்பு போல /அவனுக்கு தான் எத்தனை
OPTIONs ?/ வாக்கியம் வெகு ருசி!

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுகள் அனைத்தும் ரசிக்க வைத்தன.
போன் பண்ணிய குதிரைக்காக அடிவாங்கிய கணவன் சிரிக்கவைத்தார்.

ஷர்புதீன் said...

sun-tv mattar அப்படியே சுஜாதா! கலக்கல் தொடருங்கள் இத போன்று!

G.M Balasubramaniam said...

பூர்வ ஜென்ம வாசனை என்று கூறும்போது குறிப்பிடப்படுவது நாசியினால் முகரப்படும் வாசனை அல்ல.

Sri said...

//அவனுக்கு தான் எத்தனை OPTIONs ?

அருமையான சிந்தனை.. மிகவும் ரசித்தேன்

Srini

Uma said...

ஆண்கள் சீட்'நு ஒண்ணு கிடையாது.. அது General seat...
//சன் டி.வியில் ஒரு பெண்மணி(விஷால்??) பத்து வருடங்களுக்கும் மேலாக ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.// எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லருந்து அந்தம்மாவ பாக்குறேன். நான் பாக்கும்போதெல்லாம் என்கிட்டே இல்லாத கலர்(டிரஸ்) தான் ராசியான கலர்ன்னு சொல்லும்..

adhvaithan said...

koodiya seekiram aangal seat kettu porada vendiyathu taan.

லதானந்த் said...

"எனப் படுவது” படித்ததன் inspirationஆ?