வெளியில் முன்னும் பின்னும் நம்மால் நகர முடிவது போல காலத்தில் நகர முடியாததற்கு அதன் திசை (DIRECTION ) ஒரு காரணம் என்கிறார்கள்.அதன் திசை எப்போதும் எதிர்காலத்தை நோக்கியே இருக்கிறது. நம்மால் ஏன் கடந்த காலத்தை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது? ஏன் எதிர்காலம் நமக்குத் தெரியவில்லை என்ற கேள்விகளுக்கு இது விடையளிக்கிறது.
ஆனால் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற பாகுபாடு கிடையாது. காலம் என்பது வெளியின் ஒரு பண்பு (property of space ) அவ்வளவு தான். மனிதன் என்ற தர்க்கரீதியான ஒரு உயிரினம் பிரபஞ்சத்தில் வந்ததால் தான் காலத்தை கடந்த காலம் எதிர்காலம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டி வந்தது. Eternalism (சாசுவதம்)
என்பது காலத்துக்கான ஒரு தத்துவம். அது என்ன சொல்கிறது என்றால் கடந்த காலம் , நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் இவையெல்லாம் கால வரைபடத்தில் வெவ்வேறு புள்ளிகள்.காலம் என்று ஒன்று (பின்னணியில்) நகர்வதே இல்லை. அது முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒரு GRAPH என்கிறது .ஒரு வரைபடத்தில் எப்படி எல்லாப் புள்ளிகளும் முதலிலேயே குறிக்கப்பட்டு விடுகின்றனவோ அதே போல காலமும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு (நான்காவது) பரிமாணம். மனித மூளையின் சில வரம்புகள் (limitations ) காரணமாக நமக்கு காலம் வெளியில்(SPACE ) இருந்து வேறுபட்ட ஒன்றாகத் தெரிகிறது. ஆம் நம் மூளை காலவெளியை கற்பனை செய்யும் படி வடிவமைக்கப்படவில்லை.
இந்திய வரைபடத்தில் எப்படி சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை எல்லாம் ஒரே சமயத்தில் சேர்ந்து குறிக்கப்பட்டிருக்கின்றனவோ அது போல உங்கள் வாழ்க்கை வரைபடத்தில் இறந்த காலம் , நிகழ் காலம் , எதிர்காலம் எல்லாம் சேர்ந்தே இருக்கின்றன. காலம் சாசுவதமான ஒரு நான்காவது பரிமாணம் என்ற கருத்தை ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்கும்
முன்னரே நம் ஜோதிடர்கள் அறிந்து கொண்டு விட்டார்கள் போலும். இதனால் தான் ஜோதிடம் 'பாதி அறிவியல்' என்று அழைக்கப்படுகிறது. உங்கள் ஜாதகத்தை வைத்துக் கொண்டு நாளை என்ன நடக்கும் என்று சொல்வதை முட்டாள்தனமாக கருதுபவர்களா நீங்கள்? உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். காலத்துக்கான வரைபடத்தில் எதிர்காலத்தை
படிப்பது என்பது ஒரு இந்திய வரைபடத்தில் டெல்லியைத் தேடுவது போல ரொம்ப சுலபம் தான். இதற்கு ஓஷோவின் இரண்டு உதாரணங்கள் பார்க்கலாம்: (பகவத்கீதை ஒரு தரிசனம்)
ஒரு மரத்தின் கீழே ஒருவன் நிற்கிறான். மரத்தின் மேலே உச்சாணிக் கொம்பில் இன்னொருவன் உட்கார்ந்திருக்கிறான். மரத்தின் மேலே இருப்பவன் தெருக்கோடியில் வந்து கொண்டிருக்கும் ஒரு மாட்டு வண்டியைப் பார்கிறான். அது அவனுக்கு நிகழ் காலம். ஆனால் மரத்தின் கீழே இருப்பவனுக்கு அந்த வண்டி தெரிவதில்லை. அவனுக்கு வண்டி என்பது இன்னும் நிகழாத எதிர்காலம். அதே போல வண்டி இருவரையும் கடந்து தெருக்கோடியில் மறைந்ததும் அது கீழே இருப்பவனுக்கு இறந்த காலம் ஆகிவிடுகிறது. ஆனால் மேலே உட்கார்ந்திருப்பவன் அந்த வண்டியை இன்னும் பார்க்க முடிவதால் அவனுக்கு அது இன்னும் நிகழ்காலம் தான்.அதே போல அர்ஜுனன் கீழ்நிலையில் இருப்பதால் அவனுக்கு நிகழ்காலம் மட்டும் தெரிகிறது. கிருஷ்ணன் ஞானத்தின் உயரிய நிலையில் இருப்பதால் அவனுக்கு இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாம் ஒரே பார்வையில் தெரிகிறது.அர்ஜுனா, உன் கடந்த பிறவிகள் அனைத்தையும் இனிமேல் நீ எடுக்கப்போகும் பிறவிகள் அனைத்தையும் நான் அறிவேன்
என்று கிருஷ்ணன் சொல்வதை கவனிக்கவும்.
ஸ்ரீ பகவானுவாச
பஹூனி மே வ்யதீதானி ஜன்மானி தவசார்ஜுன
தான்யஹம் வேத சர்வாணி ந த்வம் வேத்த பரந்தப 4 -5
ஒரு அறையில் ஒருவன் அடைக்கப்பட்டிருக்கிறான். அதன் சாவித்துவாரத்தின் வழியே வெளியே நடப்பதை அவன் பார்க்கிறான். வெளியே ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார்.அவரை(நடப்பவரை) அறையின் வெளியே இருக்கும் இன்னொருவனும் பார்க்கிறான்.வெளியே இருக்கும் ஒருவன் நடப்பவரை நிகழ் காலத்தில் பார்க்கிறான். ஆனால் உள்ளே இருப்பவனுக்கு அவர் சாவித்துவாரத்தின் வழியே கண்ணுக்குத் தெரியும் வரை அது எதிர்காலம் தான். அதே போல அவர் சாவித்துவாரத்தில் தோன்றி மறைந்து விட்டதும் அது அவனுக்கு இறந்த காலம் ஆகி விடுகிறது. வெளியே இருப்பவனுக்கு அது இன்னும் நிகழ் காலம் தான். மனித அறிவு என்பது ஒரு சாவித்துவாரம் போன்றது. மிகவும் குறுகியது.அதன் வழியே நாம் குறுகிய பார்வை பார்த்தால் நிகழ்காலம் தான் தெரியும். சாவித்துவாரத்தின் வழியே பார்ப்பவன் வெளியே இருப்பவனை பார்த்து உனக்கு எதிர்காலம் எப்படித் தெரியும் என்று கேட்டால் எப்படி இருக்கும்? நாம் குறுகிய துவாரத்தின் வழியே பார்த்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்களை போலி என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.கவனிக்கவும் உண்மையான ASTROLOGY தெரிந்தவர்கள். அரைகுறையாகத்தெரிந்து கொண்டு காசுபார்க்க ஆசைப்படும் 'டுபாக்கூர்கள்' அல்ல.
படத்தைப் பாருங்கள். ஒரு வரைபடம் என்பது பொதுவாக வெளியின் ஒரு பரிமாணத்தை X அச்சிலும் இன்னொரு பரிமாணத்தை Y அச்சிலும் வைத்து வரையப்படும். காலமும் வெளியின் நான்காவது பரிமாணம் என்பதால் அதற்கும் இப்படி வரைபடம் வரையலாம். அப்போது எதிர்காலம் இறந்தகாலம் என்ற வேறுபாடுகள் மறைந்து எல்லாம் ஒரே வரைபடத்தில் சமகாலப் புள்ளிகளாக (simultaneous points ) மாறி விடும். இப்போது எதிர்காலத்தை அறிய இறந்த காலத்தின் புள்ளியில் இருந்து ஒரு கோடை இழுத்து விட்டால் போதும்.
ஒருவருக்கு நிகழ்காலமாக இருக்கும் ஒன்று இன்னொருவருக்கு எதிர்காலமாக இருக்கலாம். ஐன்ஸ்டீனின் இந்த கொள்கை ஆய்வை (Thought Experiment) நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ஓடும் ரயில் ஒன்றின் சரியான மையத்தில் இருந்து கொண்டு ஒருவர் ஒரு ஒளிக்கற்றையை இருபுறமும் அனுப்புகிறார்.அவரைப் பொறுத்தவரை ரயில் நிலையாக இருப்பதால் இரண்டு கற்றைகளும் ஒரே சமயத்தில் அதாவது நிகழ்காலத்தில் ரயிலின் இருமுனைகளை அடைகின்றன. ஆனால் ரயிலுக்கு வெளியே இருப்பவருக்கு கற்றை R1 புறப்பட்டதும் ரயிலின் முன்பக்க முனை அதை விட்டு முன்னே நகர்வதாகவும் கற்றை R2 புறப்பட்டதும் பின்பக்க முனை அதை நோக்கி வருவதாகவும் தெரியும்.எனவே R2 முதலிலும் R1 சிறிது நேரம் கழித்தும் முனைகளை சென்று முட்டும். அதாவது ஒன்று நிகழ்காலத்திலும் இன்னொன்று எதிர்காலத்திலும் நடக்கும்.
J. M. E. McTaggart என்ற தத்துவ அறிஞர் (சாசுவதக் கொள்கையின் தந்தை) காலம் என்பதை ஒரு மாயை (unreality ) என்கிறார். நம்முடைய மொழிகள் Tense less ஆக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது 'நேற்று மழை பெய்தது' என்று சொல்லாமல் '2011 ஜூலை 18 அன்று மழை பெய்கிறது' என்று சொல்ல வேண்டுமாம்.காலம் என்ற ஒன்று உண்மையிலேயே நம் பின்புலத்தில் நகர்ந்து கொண்டிருந்தால் அதன் வேகம் என்ன?என்று அவர் கேட்கிறார். வேகம் = வெளி/காலம் என்று நாம் வரையறை செய்கிறோம். ஆனால் காலத்திற்கும் வேகம் இருக்குமா? It seems circular ! காலத்தின் வேகம் என்பது என்ன ? ஒரு நொடிக்கு ஒரு நொடியா? இது அபத்தமாகத் தெரிகிறது.
சரி நிகழ்காலம் என்பதை உங்களால் வரையறுக்க முடியுமா? நிகழ்காலத்தை உணரத் தொடங்கும் முன்னரே அது இறந்த காலமாகி விடுகிறது. Eternalism எனப்படும் கொள்கைக்கு எதிரான ஒரு தத்துவம் Presentism எனப்படும் இன்னொரு இஸம். நிகழ்காலம் மட்டுமே உண்மை என்று அது சொல்கிறது. பரந்து விரிந்த கடந்த காலமும் புதிரான எதிர்காலமும் இந்த நிகழ்காலம் என்ற தக்குனூன்டு புள்ளியில் சந்தித்து பிரிகின்றன. காலத்தை அளக்க உதவும் மணல் கடிகாரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? மேலே இருக்கும் மணல் கண்ணுக்குத் தெரிகிறது (எதிர்காலம்) கீழே விழுந்த மணல் தெரிகிறது (இறந்த காலம்) ஆனால் இரண்டுக்கும் இடையே மணல் பயணிக்கும் அந்த குறுகிய நிகழ் காலத்தை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
ஜென் ஞானி ஒருவரை எதற்கோ ஒரு அரசன் கைது செய்து மரண தண்டனை விதிக்கிறான். அவரைப் பார்த்து 'உனக்கு இன்னும் இருபத்து நான்கு மணிநேரத்தில் மரண தண்டனை' என்கிறான். அதற்கு அவர் பலமாகக் சிரிக்கிறார் "நான் இந்த நொடியில் வாழ்கிறேன்..இந்த நொடி தான் எனக்கு உலகம்.நொடிக்கு நொடி வாழும் ஒருவனுக்கு இருபத்து நான்கு மணிநேரம் கழித்து மரணம் வந்தால் என்ன? இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து வந்தாலென்ன? எனக்குத் தெரிந்ததெல்லாம் இந்த ஒரு
நொடி தான்..அதுவே எனக்கு அதிகம். இதைக் கொடுத்ததற்காக நான் இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்" என்றாராம்.
Slaughterhouse-Five என்ற நாவலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே நின்று பார்க்கும் போது உங்களுக்கு வெளியில் எல்லா இடங்களும் தெரியும்.இன்னும் உயரமாகப் போனால் ஒரு நகரமே தெரியும். இன்னும் உயரமாகப் போனால் நம் பூமி முழுவதையும் பார்க்க முடியும். இதே போல நாம் காலத்தின் பரிமாணத்திலும் ஒரு WATCH TOWER ஐ கண்டுபிடிக்க வேண்டும், அங்கிருந்து கீழே (?) பார்த்தால் நம் முன்னோர்கள் வாழ்ந்ததைப் பார்க்க முடியும். நம் சந்ததிகள் பூமியில் வாழ்வதைப் பார்க்க முடியும். ஆனால் என்ன, அவர்கள் வாழ்க்கையுடன் நாம் குறுக்கிட முடியாது. அவர்களை சந்திக்க கீழே இறங்கி வந்தால் அவர்கள் நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவார்கள். ஒரு விதத்தில் பார்த்தால் யாருமே இறக்கவில்லை. நம் பரிமாணத்தின் பார்வையில் இருந்து அவர் மறைந்து விட்டார் என்று மட்டுமே நாம் சொல்ல முடியும். இங்கிருந்து நம்மால் டெல்லியைப் பார்க்க முடியவில்லை என்றால் அது இல்லை என்று முடிவெடுப்பது எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் ஒருவர் இறந்து விட்டார் என்று முடிவெடுப்பதும். டெல்லியும் சென்னையும் ஒன்றாகத் தெரியும் படி ஒரு உயரிய பார்வை கோபுரத்தை கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவு தான்.ஸ்லாட்டர் ஹவுஸ் ஃபைவ் இந்த தத்துவத்தை வைத்து எழுதப்பட்டது. அதன் ஹீரோ பில் வேற்றுக்கிரக வாசிகளால் கடத்தப்படுகிறான். அந்த வேற்றுக்கிரக வாசிகளின் மூளை நான்காவது பரிமாணத்தைப் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. அவர்களால் காலத்தின் எல்லா இடங்களுக்கும் சாதாரணமாகப் போய் வர முடிகிறது. அவர்கள் ஹீரோவை கடத்திக் கொண்டு போய் 'மூன்று பரிமாண பிராணி' என்று கேலி செய்து ஒரு ஜூ-வில் அடைத்து விடுகிறார்கள். அங்கே வருடக்கணக்கில் அவனை சிறைவைக்கும் அவர்கள் பிறகு ஹீரோவை கடத்திக் கொண்டுவந்த நாளுக்கு மீண்டும் பயணித்து (?) வந்து அவனை பூமிக்கு அனுப்பி விடுகிறார்கள். இங்கே பூமியில் அவன் காணாமல் போய் ஒரு சில வினாடிகளே ஆகியிருக்கின்றன.திரும்பி வரும் ஹீரோ தன் வாழ்வில் தொடர்பில்லாத சம்பவங்களை சந்திக்கிறான். அதாவது அவன் இறந்த பின்னும் வாழ முடிகிறது.சில சமயம் நாளை நடக்க இருப்பது தெரிகிறது . நேற்று நடந்தது மறந்து விடுகிறது! இந்த கான்சப்டை வைத்துக் கொண்டு நான்கூட ஒரு பிக்ஷன் நாவல் எழுதலாம் போலிருக்கிறது. (என்ன எழுதட்டுமா? :-))
நம்மை இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பேர் 'மூன்று பரிமாண பிராணி' என்று கேலி செய்து கொண்டிருக்கிறார்களோ?
சமுத்ரா
17 comments:
அறிவியலை இவ்வளவு எளிமையாக எழுதித் தரும்
தங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
சமுத்திரத்திலிருந்து கருத்துக்களை அலை அலையாகக்
கரை சேர்க்கும் தங்களின் பணி மகத்தானது, மிக்க நன்றி.
நண்பரே!
வணக்கம்,
முதற் கண் என் வலை காண
வந்ததற்கு நன்றி
உங்கள் பதிவு மிகவும்
சிறப்பாக உள்ளது ஆழ்ந்து படிக்க
வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
good post
கண்டிப்பாக..! ஒரு பிக்ஷன் நாவல் எழுதுங்கள்.
அப்படியென்றால் நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லையா? நாம் எடுக்கும் முடிகள் யாவும் predefined ஆ? so, கடவுள் இருக்காரோ?
சிக்கலான கருத்துக்களை மிக எளிமையாக தந்திருக்கிறீர்கள். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! சீக்கிரம் பிக்ஷன் எழுத வாருங்கள்!
Very nice example for Present, Past and the Future. Weldon, keep it up.
மூன்று பரிமாணங்களும் காலத்தை மட்டுமே கொண்டது அப்படித்தானே?
அப்படியென்றால் நான்காவது பரிமாணத்தில் காலம் என்பது இல்லையா?
காலம் என்பது இல்லையென்றால் அங்கே ஒளி என்பதும் இல்லையா?.
நமக்கு ஒளி தானே காலத்தை நிர்ணயிக்கிறது.
அது உண்மையென்றால் மிக கவ்விய இருள் உள்ள இடங்களில் காலம் இல்லையா?.
சிந்தனையை தூண்டும் பதிவு சார்... மூளை நான்காவது பரிமாணத்தைப் பார்த்தா எதிர்காலத்தின் மேல் எதிர்பார்ப்பு இருக்காதா? வாழ்க்கை ஒரு விடை தெரிஞ்ச புதிரா இருக்குமோ?
கதை எழுதுங்க...பட் கரெக்ட்'அ முடிக்கணும்
சில விஷயங்களை நேராக கிரகித்துக் கொள்வது கஷ்டமாக இருந்தாலும், சூப்பர்ப் பதிவு. மிக்க நன்றி!
//நம்மை இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பேர் 'மூன்று பரிமாண பிராணி' என்று கேலி செய்து கொண்டிருக்கிறார்களோ?//
இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்பட்ட சமிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லையாம், நீங்கள் கூறுவதுபோல இருந்திருந்தால் ஏதேனும் பதில் வந்திருக்க வேண்டுமல்லவா?
@ Mr. Carbon,
இந்தப் பிரபஞ்சம் பரந்து விரிந்தது கார்பன் சார் (பல பில்லியன் ஒளி ஆண்டுகள்).. இங்கு அனைத்துமே தற்செயல் விளைவுகளால் உருவாகியிருப்பதால் (உருவாக்கியிருந்தால்) மிகவும் சிக்கலான உயிர்களும் இயற்கையில் உச்சக்கட்ட சாதனையான புத்திசாலி உயிர்களும் அடிக்கொன்றாக கொட்டிக்கிடக்க வாய்ப்பு மிகக்குறைவு.. (எத்தனை கன ஒளியாடுகளுக்கு ஒரு புத்திசாலி உயிர் இருக்கலாம் என அறிய ஒரு பார்முலா உருவாக்கி வைத்திருக்கிறார்கள்)
எனவே, புத்திசாலி உயிர்கள் இருந்தால் அவை பல கோடி ஒளியாண்டுகள் தள்ளியே வாழ்ந்துகொண்டிருக்கும். நாம் அனுப்பும் சிக்னல் அங்கே போய் திரும்பி வருவதற்குள் எட்டாம் உலகப்போரில் மனிதகுலம் அடித்துக்கொண்டு ஹைட்ரஜன் குண்டுகளுக்கு இரையாகி விட்டிருக்கும்..
அல்லது வேண்டுமென்றே அவர்கள் நம்மைத் தொடர்பு கொள்ளாமல், தமது இருப்பை வெளிக்காட்டாமல் இருக்க விரும்பலாம்.. இன்றும் நமக்குத் தெரியாமல் நம்மை ஆய்வுக்கூடல் எலிகளாக பரிசோதித்துக் கொண்டிருக்கலாம்.. யார் கண்டது?
இவைகள் ஊகங்கள்தான்.. கண்டிப்பாக பல தனித்தனி சிந்திக்கும் உயிர்கள் பிரபஞ்சத்தில் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடின் "பிரபஞ்சம் பிறந்தது நமக்காக.. இயற்பியல் விதிகளும் நமக்காக.." எனும் Anthropic தத்துவம் மெய்யாகிவிடும் அபாயம் உள்ளது..
[நான் கடவுளை (அனைத்தையும் படைத்த அந்த புத்திசாலி உயிரியை) நம்புவதில்லை.. எனவே வேறு சிந்திக்கும் உயிர்களும் பிரபஞ்சத்தில் வாழ்கின்றன என நம்புகிறேன்]
சஹோ. Abarajithan.
//இவைகள் ஊகங்கள்தான்.. கண்டிப்பாக பல தனித்தனி சிந்திக்கும் உயிர்கள் பிரபஞ்சத்தில் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடின் "பிரபஞ்சம் பிறந்தது நமக்காக.. இயற்பியல் விதிகளும் நமக்காக.." எனும் Anthropic தத்துவம் மெய்யாகிவிடும் அபாயம் உள்ளது.//
ஒரு தத்துவத்தை பொய்யாக்க வேண்டும் என்பதாலேயே பிரபஞ்சத்தில் வேறு உயிரினம் இருக்க வாய்ப்புண்டு என்று கூறுவது அபத்தமாக உள்ளது.
பறக்கும் தட்டு, ஏலியன் என பல கதைகள் உலவினாலும் எதற்கும் சரியான ஆதாரம் இல்லை.
//[நான் கடவுளை (அனைத்தையும் படைத்த அந்த புத்திசாலி உயிரியை) நம்புவதில்லை.. எனவே வேறு சிந்திக்கும் உயிர்களும் பிரபஞ்சத்தில் வாழ்கின்றன என நம்புகிறேன்]//
வேறு உயிரினங்கள் இருக்கின்றன என்று எனக்கு நம்பிக்கை இல்லை.
உங்கள் நாவலுக்கு நான் முதல் வாசகன்... என்ன? எழுதுரீங்களா???
//ஒரு தத்துவத்தை பொய்யாக்க வேண்டும் என்பதாலேயே பிரபஞ்சத்தில் வேறு உயிரினம் இருக்க வாய்ப்புண்டு என்று கூறுவது அபத்தமாக உள்ளது.//
பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கின்றன என நான் நம்புகின்றேன்.. பல விஞ்ஞானிகளும் நம்புகின்றார்கள்.. அவ்வளவே.. மற்றும்படி Antrophic ஐ பொய்யாக்குவதற்காக மட்டுமே இந்தி கொள்கை சரியானது என நான் வாதிடவில்லை...
//வேறு உயிரினங்கள் இருக்கின்றன என்று எனக்கு நம்பிக்கை இல்லை.//
ஒவ்வொருவருடைய நம்பிக்கை அப்படி.. எப்படியோ, ஒரு விடயம் நிரூபிக்கப்படுமுன் அது உண்மையாவதர்கான வாய்ப்புக்கள் 50-50 (Uncertain) தானே...
பரிணாமக் கொள்கையின் படி பிரபஞ்சத்தில் நீர், carbon/silicon/germanium மூலகங்கள், energy source, மூலகங்கள் பல்வேறு சேர்மங்களை உருவாக்குவதற்குரிய வெப்பநிலை போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்கும் எங்கும் உயிர் தழைக்க வாய்ப்பிருக்கின்றது... அதைவிட்டு மனிதன் போல ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய், தலையில் இரண்டு அன்ட்டெனாக்கள் கொண்ட உயிரினம் வாழும் 20-30 C வெப்பமும் திடப் பாறைகளும் ஆக்சிஜன் வாயுவும் அசப்பில் பூமியை மாதிரியே ஒரு கிரகத்தை தேடினால் எப்படி? நமது விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகத் தேடுவது நல்லது..
சமுத்ரா உங்கள் பதிவுகள் எனக்கு பிரமிப்பையே தருகிறது. எப்படி எல்லா விசயத்தையும் அழகாய் கோட்கிறீர்கள்? நிறைய விசயங்களை அறிந்து கொள்வது அற்புதமானது. உங்களை நேரில் சந்தித்தால் நிறைய பேச வைத்து கேட்பேன்.
//நாம் குறுகிய துவாரத்தின் வழியே பார்த்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்களை போலி என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.கவனிக்கவும் உண்மையான ASTROLOGY தெரிந்தவர்கள். அரைகுறையாகத்தெரிந்து கொண்டு காசுபார்க்க ஆசைப்படும் 'டுபாக்கூர்கள்' அல்ல//
சகோ சமுத்ரா உங்களுக்கு தெரிந்த the best ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்கள் இருக்கின்றனரா?
பிறந்தநாள் கிழமை நேரத்தை வைத்து என்னென்னலாம் தீர்மானிப்பார்கள்?
நான் மூன்று ஜாதகங்களை எடுத்துட்டு வரேன் ஒன்னு இறந்தவருடையது இன்னொன்னு உயிரோடு இருப்பவருடையது மூன்றாவது போலியாக உருவாக்காபட்டது உங்களால் உங்களுக்கு தெரிந்த ஜோதிடகாரரால் அதை சரியாக அடையாளம் காண்பிக்கமுடியும்னா சொல்லுங்க!?
Post a Comment