இந்த வலையில் தேடவும்

Thursday, July 14, 2011

அணு அண்டம் அறிவியல் -39

அணு அண்டம் அறிவியல் -39 உங்களை வரவேற்கிறது

காலப்பயணம் பற்றிய தரமான சயின்ஸ் Fiction கதைகள் தமிழில் இல்லையே என்ற வருத்தத்தை சமீபத்தில் தீர்த்து வைத்தது உமா அவர்கள் அறிமுகப்படுத்திய ஒரு நாவல் 'கேணிவனம்'.திரு.ஹரிஷ் நாராயணன் அவர்களால் எழுதப்பட்ட இந்த நாவலின் கதையை இப்போது பார்க்கலாம். ஹரிஷ் சினிமாவில் இருக்கிறவர் போலத் தெரிகிறது. இந்த நாவலை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.







தாஸ் (ஹீரோ) மற்றும் குணா இருவரும் ஒரு ரயில் பயணத்தின் போது நண்பர்கள் ஆகிறார்கள். ரயில் ஏதோ கோளாறு காரணமாக ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவே நின்று விடுகிறது. வண்டி கிளம்ப இன்னும் நான்கு மணிநேரம் ஆகும் என்று யாரோ (தவறாக) தகவல் சொல்வதால் இருவரும் காட்டுக்குள் கொஞ்சம் போய் வரலாம் என்று உள்ளே நடக்கிறார்கள்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ரயில் கிளம்பி விட இருவரும் நடுக்காட்டில் அனாதரவாக நிற்கிறார்கள். வானம் இருட்டி கடும் மழை பிடிக்கிறது. இருவரும் இரவைக் கழிக்க ஒரு பாழடைந்த காட்டுக் கோயிலுக்குள் ஒதுங்குகிறார்கள்.

தாஸ் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவன் என்பதால் அந்தக் கோயிலை ஆராய முற்படுகிறான். குணா ரயிலை தவற விட்டதால் தன்னைக் காட்டுக்குள் அழைத்த தாஸை திட்டுகிறான். கோயிலில் எழுதியிருக்கும் ஒரு செய்யுளை வைத்து அதன் பெயர் 'கேணிவன நாதர்' கோயில் என்று தாஸ் தெரிந்து கொள்கிறான். கருவறையில் ஒரு பாழடைந்த சிற்பம் இருக்கிறது. கூரையில் ஏதோ ஒரு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. அதை தாஸ் தன் மொபைலில் படம் பிடித்துக் கொள்கிறான். கருவறைப் பீடம் ஒரு வட்ட வடிவக் கல்லாக இருக்கிறது. அதன் மீது குணா எதேச்சையாக உட்கார அது நகர்ந்து வழிவிடுகிறது. உள்ளே ஒரு குழி இருப்பது தெரிகிறது. இருவரும் முயன்று கல்லை நகர்த்த உள்ளே ஒரு பெரிய கிணறு இருப்பது தெரிகிறது. ஆர்வத்தில் தாஸ் உள்ளே இறங்குகிறான் . குணா தனித்து விடப்படுகிறான். இரவில் ஒரு புலி மனித வாசனையை மோப்பம் பிடித்து கோயிலுக்குள் வருகிறது. அதனிடம் இருந்து தப்பிக்க குணாவும் கிணற்றில் குதிக்கிறான்.

கிணற்றுக்குள் விழும் தாஸ் விழித்துப் பார்க்கும் போது தான் ரயிலில் பயணிப்பதை உணர்கிறான். தேதியை கவனிக்கும் போது தான் ஒரு நாள் முன்னே வந்து சேர்ந்திருப்பதை உணர்கிறான்,அந்த கிணறு தன்னை கடந்த காலத்துக்கு அனுப்பி இருப்பதாக தெரிந்து கொள்கிறான். கிணற்றுக்குள் விழும் குணா அதன் மூடியை வேறு திசையில் திருப்புவதால் அவன் எதிர்காலத்தில்
பயணித்து தான் சேர வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான். கடந்த காலத்தில் வந்து சேரும் தாஸ் குணாவை சந்திப்பதைத் தவிர்த்து விட்டு அடுத்த நிறுத்தத்திலேயே ரயிலில் இருந்து இறங்கி விடுகிறான்.

தாஸின் அச்சிஸ்டன்டுகள் லிஷா மற்றும் சந்தோஷ் இருவரும் காதலர்கள். தான் ஒரு கிணற்றில் விழுந்து டைம் ட்ராவல் செய்ததாக அவர்களிடம் தாஸ் சொல்கிறான். லிஷா அதைப்பற்றிய தகவல்களைத் திரட்டி அது கிணறு அல்ல ஒரு WORM HOLE என்று சொல்கிறாள். அந்த கிணறின் மூடியை சரியான பாகைகளுக்கு மாற்றி அமைப்பதன் மூலம் நாம் நினைக்கும் காலத்துக்கு சென்று விட முடியும் என்று தாஸ் அறிந்து கொள்கிறான். வரலாற்று ப்ரொபசர் ஒருவரிடம் தான்
படம் எடுத்த அந்த ஓவியத்தைக் கொடுத்து அதை ஆராயும் படி சொல்கிறான். அதை ஆராய்ந்து அவர் அந்த ஓவியத்தின் மையத்தில் பிரம்மாவும், பக்கத்தில் ஒரு அரசனும், சித்தர் ஒருவரும் அதில் இருப்பதாக சொல்கிறார். தாஸ் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கிராமத்தில் வாழும் தன் தாத்தா வீட்டுக்கு செல்கிறான். அவர் பெயரும் தாஸ் தான். கோயிலில் கிடைத்த செய்யுளையும் ஓவியத்தையும் வைத்துக் கொண்டு அந்த சித்தர் பெயர் பிரம்ம சித்தர் என்றும் அவர் சென்னையில் உள்ள பரசுராம லிங்கேஸ்வரர் கோயிலில் சமாதி அடைந்திருக்கலாம் என்றும் இருவரும் கணிக்கின்றனர். அந்த கோயிலை தேடிச் சென்று ஒரு தகவலை தாஸ் தெரிந்து கொள்கிறான்: அந்தக் கோயிலின் கோபுரத்தில் திருடன் ஒருவன் ஒளிந்து கொள்ளும் போது அங்கே யோகா நிலையில் இருக்கும் சித்தர் ஒருவரின் உடலைப் பார்க்கிறான். அந்த பிரதேசத்தின் அரசனாக இருக்கும் ஒருவனது கனவில் வந்த அந்த சித்தர் தன் உடலை வேறு ஒரு இடத்தில் வைத்து விடும் படி ஆணையிடுகிறார். ஆனால் அந்த இடம் எது என்று தாஸுக்கு தகவல் கிடைக்கவில்லை.

குணா அந்த கிணற்றின் மர்மத்தைப் பற்றி தாஸிடம் இருந்து தெரிந்து கொள்கிறான். தான் புகழ் அடைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு டி.வி. சானலுக்கு தகவல் சொல்லி அவர்களுடன் கேணிவனம் செல்ல திட்டமிடுகிறான்.

தாஸின் ப்ரொபசர் அந்த சித்தரின் உடல் ஏன் கேணிவனக் கோவிலிலேயே இருக்கக்கூடாது என்று சந்தேகிக்கிறார். எனவே தாஸ் , லிஷா, சந்தோஷ், ப்ரொபசர், மேலும் அவர்கள் நண்பரான இன்ஸ்பெக்டர் ஒருவர், இன்னொரு புதிய ஆள் சக்ரவர்த்தியும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் எல்லாரும் அதே ரயிலில் அதே காட்டுக்கு பயணிக்கிறார்கள். அன்று இரவு வரை கோயிலை கண்டுபிடிக்க முடியாததால் காட்டிலேயே டென்ட் அமைத்துத் தூங்குகிறார்கள். காலையில் எழுந்து பார்த்ததும் தாஸுக்கு ஒருவித விஷக்காய்ச்சல் தொற்றியிருப்பது தெரியவருகிறது. அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் கோவிலைத் தேடுவது சரியல்ல என்று எல்லாரும் ஒருமனதாக முடிவெடுத்து திரும்பி வருகின்றனர். திரும்பி வந்ததும் சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகும் தாஸ், சந்தோஷிடம் தான் காட்டில் எடுத்த வீடியோவைக் காட்டுகிறார். அங்கே அசாதாரணமாக சந்தன மரங்கள் இருக்கின்றன. நாம் அங்கு போனபோது சந்தன மரங்கள் இருக்கவில்லையே என்று அவன் கேட்க, தாஸ் அந்த வீடியோவை தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எடுத்ததாக சொல்கிறான்.அவர்கள் குழம்பவே தாஸ் விளக்குகிறான்.

அன்று காலையில் எல்லாரும் எழுந்து கொண்டு கோயிலைத் தேடிச் செல்கிறார்கள். கோயிலை ஒருவழியாக அடைகிறார்கள் .இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியைத் திருடிக் கொள்ளும் சக்ரவர்த்தி, தாஸிடம் அந்தக் கோயிலின் ரகசியங்களை தன்னிடம் கூறுமாறு மிரட்டுகிறான்.
தாஸ் தயங்கவே, அவன் சந்தோஷையும் இன்ஸ்பெக்டரையும் சுட்டு விடுகிறான். லிஷா மூர்சையாகிறாள். ப்ரொபசர் கிணற்றில் தவறி விழுந்து விடுகிறார்.ஓவியத்தில் இருக்கும் ஒருவிதமான அமைப்பின் படி கிணற்றின் மூடியை வைக்கும் படி அவன் தாஸுக்கு சொல்கிறான். தாஸ் அப்படியே செய்து அதில் குதித்து விடுகிறான். தாஸ் பிரம்ம சித்தர் வாழ்ந்த பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு சென்று அவரை சந்திக்கிறார். அவர் அவனிடம் தான் வேண்டுமென்றே தான் அவனை தன் காலத்துக்கு வரவழைத்ததாக சொல்கிறார். ஒரு ராஜா ஒரு பெரிய போர் புரிந்து முடித்ததும் அதில் இறந்தவர்களை எண்ணி வருந்தியதாகவும் அந்த போர் நடைபெறாமல் தடுக்க அவர் காலத்தில் முந்திப் பயணிக்க வைக்கும் காலக் குழியை உருவாக்கியதாகவும் சொல்கிறார். அந்த ராஜாவின் மறுபிறவி தான் தாஸ் என்றும் அவன் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகிறார். அதற்கு பதிலாக தான் இழந்தவர்களைக் காப்பாற்றும் படி தாஸ் வேண்டுகிறான். சித்தர் இருபத்தி-ஒன்றாம் நூற்றாண்டில் இருக்கும் தன் உடலை காலக்குழியில் வீசி அதைத் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறு சொல்கிறார். காலக் குழியில் அமைக்க வேண்டிய பாகைகளை அவன் உள்ளங்கால்களில் பச்சை குத்துகிறார். தாஸ் எதிர்காலத்துக்கு திரும்பி வந்து சித்தர் உடலை கோயில் கூரையில் இருந்து பெயர்த்து எடுத்து குழியில் வீசுகிறான். (சித்தரை சந்தித்தபோது தாஸ் அவரை தன் வீடியோ கேமிராவில் படம் பிடித்துக் கொள்கிறான்.) பிறகு சில மணி நேரங்கள் முன்பாக கடந்த காலத்தில் பயணித்து எதுவுமே நடக்காதது போல டெண்டுக்கு சென்று படுத்துக் கொள்கிறான். இந்த காலப்பயணத்திற்கு அவன் உடல் ஒத்துக் கொள்ளாமல் ஜுரம் வருகிறது. இதை கவனிக்கும் மற்றவர்கள் முன்பே பார்த்தபடி கோயிலை அடையும் எண்ணத்தைக் கைவிட்டு தாஸை சுமந்து கொண்டு காட்டை விட்டு நீங்குகிறார்கள்.இப்படியாக தாஸ் இறந்தவர்களைக் காப்பாற்றுகிறான்.

சித்தரைப் படம் எடுத்த போது அவர் உடம்பில் இருந்த ஒரு செய்யுளில் இருந்து அதே போல இன்னும்
ஏழு காலக் குழிகள் இருப்பதை அறிந்து கொள்கிறான். கேணிவனம் பற்றிய ரகசியத்தை யாரிடமும் பகிரங்கமாக சொல்லப்போவதில்லை என்றும் அதை ஒரு புத்தகமாக எழுதுவது என்றும் முடிவெடுக்கிறான். இதற்கிடையில் அவன் தாத்தாவுக்கு மிகவும் உடம்பு முடியவில்லை என்று தகவல் வருகிறது. தாஸ் விரைந்து சென்று அவன் தாத்தாவைப் பார்க்கிறான். அவர் சாகும் தருவாயில் ஒரு உண்மையை அவனிடம் சொல்கிறார். தன் மகனையும் மருமகளையும் விபத்தில் இழந்து விடும் அவர் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்புகிறார். யாரோ ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு பதில் ஏன் தன்னையே (?) தத்து எடுக்கக் கூடாது என்று எண்ணி இன்னொரு காலக் கிணற்றின் உதவியுடன் அறுபது வருடம் முந்திப் பயணித்து தன்னை குழந்தையாக எடுத்து தானே வளர்க்கிறார். அந்தக் குழந்தை தான் தாஸ். அதாவது தாஸும் தாத்தாவும் ஒன்று தான்.தாத்தாவின் காலிலும் சித்தர் குத்திய பச்சை இருக்கிறது. தாத்தா தாஸிடம் இருந்து கண்ணீருடன் விடைபெறுகிறார். (இறந்து போகிறார்) தாஸ் அவரது பீரோவை திறந்து பார்க்கும் போது அதில் 'கேணிவனம்' என்ற புத்தகம் முழுவதும் முடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.


WELL ...இந்தக் கதை முழுவதும் Worm hole (புழுத்துளை) எனப்படும் ஒருவித சுரங்கத்தை வைத்து எழுதப்பட்டுள்ளது. இது எப்படி என்றால் உங்கள் வீதிக்கு அடுத்த வீதியில் உங்கள் பள்ளி இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். பள்ளிக்கு செல்ல நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு உங்கள் வீதியின் முனை வரை சென்று திரும்பி பின்னர் அடுத்த வீதியில் நுழைந்து மீண்டும் நடந்து உங்கள் பள்ளிக்கு செல்லலாம், இல்லை உங்கள் எதிர்வீட்டுக்குள் நுழைந்து அதன் பின் பக்க கதவு வழியே வெளி வந்து மிகக் குறைந்த நேரத்தில் உங்கள் பள்ளியை அடைந்து விடலாம். அதாவது அந்த எதிர்வீடு வெளியில் ஒரு சுரங்கம் அமைக்கிறது . அதே போல இந்த வார்ம் ஹோல்ஸ் என்பவை காலம் மற்றும் வெளி இரண்டுக்கும் சுரங்கம் அமைக்கின்றன. இவை ஒருவிதமான short cuts ! அதாவது நமக்கு நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்பா செஞ்சுரி என்ற விண்மீன் உண்மையில் நமக்கு மிக மிக அருகில் கூப்பிடு தூரத்தில் இருக்கலாம் என்கிறார்கள். என்ன நாம் இரண்டுக்கும் இடையே ஒரு சுரங்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்.அவ்வளவு தான். இதில் ஒரு விசித்திரம் என்ன என்றால் இந்த சுரங்கத்தின் ஒரு முனை ஒரு காலத்திலும் அதன் இன்னொரு முனை இன்னொரு காலத்திலும் (சில சமயம் கடந்த காலத்தில்) இருக்கிறது. (புழு ஒன்று ஆப்பிளைத் துளைத்துக் கொண்டு போவதைப் பார்த்த போது ஒரு வி
ஞ்ஞானிக்கு இந்த ஐடியா தோன்றியதாம். அதனால் புழுத்துளை என்று பெயர் வைத்தாராம்)


நீங்களும் ஒரு ஒளிக்கற்றையும் பூமியில் இருந்து புறப்படுவதாகக் கொள்வோம். யார் முதலில் ஆல்பாவை அடைவது என்ற போட்டி. இது ஒருவிதத்தில் பார்த்தால் விநாயகருக்கும் முருகனுக்கும் இடையே நடந்த போட்டி போன்றது. முருகன் சின்சியராக மயில் ஏறி மிக நீண்ட ரூட்டில் உலகை சுற்றி வர கிளம்பினார். ஆனால் விநாயகர் ஷார்ட் கட்டை தேர்ந்தெடுத்தார். அதே போல நீங்கள் ஒளி தன் அபார வேகத்தில் பூமியில் இருந்து கிளம்பிச் சென்றதும் ஆற அமர ஒரு காபி குடித்து விட்டு ஆமை வேகத்தில் நடந்து சென்று புழுத்துளைக்குள் விழுந்து விடவும். ஒளி விண்மீனை சென்று அடைய நான்கு வருடங்கள் ஆகும். ஆனால் துளைக்குள் விழும் நீங்கள் ஒரு சில நிமிடங்களில் அங்கே இருப்பீர்கள். சார்பியலின் படி ஒளியை ரன்னிங் ரேஸில் ஜெயிக்கும் எந்த ஒரு பொருளும் கடந்த காலத்தில் நுழையும் என்று பார்த்தோம். எனவே நீங்கள் கடந்த காலத்தில் நுழைவீர்கள்.

இந்த கான்செப்டை வைத்து எடுக்கப்பட்ட படம் ஒன்று உண்டு. அதன் பெயர் CONTACT ..அந்தப் படத்தின் ஹீரோயின் யெல்லி ஒரு SETI scientist .. அதாவது பிரபஞ்சத்தில் வேறு எங்காவது மனிதனைப் போன்ற உயிர்கள் வாழ்கிறார்களா என்று தேடுவது. ஒரு நாள் அவள் தன் இயந்திரத்தில் எங்கிருந்தோ ரேடியோ சிக்னல்கள் வந்து பதிவாவதைப் பார்க்கிறாள். அது 26 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வெகா என்ற நட்சத்திர மண்டலத்தில் இருந்து வருவதாக அறியப்படுகிறது. அதை Decode செய்து பார்க்கும் போது அதில் ஹிட்லர் நாஜிக்கள் கூட்டத்தில் பேசும் வீடியோ ஒன்று தெரிகிறது.என்னடா அங்கேயும் ஒரு ஹிட்லரா? என்று எல்லாரும் ஆச்சரியப்படும் போது
யெல்லி, அவர்கள் நம் பூமியில் இருந்து எடுத்த வீடியோவை நமக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் என்கிறாள்.மேலும் அவர்களிடம் இருந்து சிக்னல்கள் வருகின்றன. அவை என்ன என்றால் ஒரு விண்வெளி ஓடத்தை எப்படி செய்து அவர்களை அடைவது என்ற வழிமுறைகள். அந்த வழிமுறைகள் பக்கம் பக்கமாக வருகின்றன. அதை வைத்து இவர்கள் ஒரு விண்வெளி ஓடத்தை செய்யலாம் என்று முடிவெடுக்கிறார்கள். சில பேர் அதை செய்யக்கூடாது; செய்தால் அது அணுகுண்டாக மாறி உலகத்தையே அழித்து விடும் என்கிறார்கள்.ஆனாலும் அந்த இயந்திரம் செய்யப்படுகிறது. இயந்திரத்தில் யெல்லி அமர்கிறாள். இயந்திரம் ஒரு வார்ம் ஹோலை உருவாக்கி அவளை வெகா மக்களிடம்
அழைத்துச் செல்கிறது. அவர்களை சந்திக்கும்
யெல்லி, அவர்களிடம் இருந்து சில தகவல்களை சேகரித்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு அதே துளையில் பயணித்து திரும்புகிறாள். ஆனால் அவள் எந்த நேரத்தில் புறப்பட்டாளோ அதே நேரத்தில் திரும்புகிறாள். இதனால் மற்றவர்கள் அந்த இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும் யெல்லி எங்கேயும் போகவில்லை என்றும் கூறி அவளை நம்ப மறுக்கிறார்கள்.யெல்லி எவ்வளவோ சொல்லியும் அவர்கள் நம்புவதில்லை.கடைசியில் அவள் எடுத்துச் சென்ற ஒரு கேமரா 18 மணி நேரத்தை தன் திரையில் ரெகார்ட் செய்திருந்தது.இதை வைத்துக் கொண்டு அவளை எல்லாரும் நம்புகிறார்கள்; பாராட்டுகிறார்கள்.

வார்ம் ஹோல் என்பது ஒரு கற்பனை தான். அது இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. அதை ஒரு சித்தர் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. சித்தரை சந்தித்து திரும்பி வருவதுடன் ஆசிரியர் அந்த நாவலை முடித்திருக்கலாம். தாத்தா தன்னையே தத்தெடுத்து வளர்த்தார் என்ற அதீத பிக்சனை உள்ளே நுழைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.(
இருந்தாலும் நாவல் அபாரமாக இருக்கிறது. கண்டிப்பாக எல்லாரும் படித்துப் பார்க்கவும்.)நாம் கடந்த காலத்துக்கு செல்லும் போது நம்மை நாமே பார்க்க முடியுமா? நம்முடம் நாமே கைகுலுக்கி ஹலோ சொல்ல முடியுமா?நம்மை நாமே தாலாட்டி சீராட்டி வளர்க்க முடியுமா?கடந்த காலத்துக்கு திரும்பி சென்று இறந்தவர்களைக் காப்பாற்ற முடியுமா? இப்படிப் பட்ட அபத்தங்கள் நடக்காமல் இயற்பியலின் மூன்று அம்புகள் தடுக்கின்றன. இந்த அம்புகளைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில்..

சமுத்ரா


10 comments:

Aba said...

டவுட்டு..

//சார்பியலின் படி ஒளியை ரன்னிங் ரேஸில் ஜெயிக்கும் எந்த ஒரு பொருளும் கடந்த காலத்தில் நுழையும் என்று பார்த்தோம். எனவே நீங்கள் கடந்த காலத்தில் நுழைவீர்கள்.//

முடியாது என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே நாம் ஒளியை "ரன்னிங் ரேஸில்" ஜெயிக்கவில்லை. மாறாக அழுகுணி ஆட்டம் ஆடியிருக்கிறோம்...

நீங்கள் காட்டிய படத்தில் நீண்ட வழியின் தூரம் 4 light years எனவும், நமது குறுக்கு வழியின் தூரம் 200m ஆகவும் இருக்கும் என வைத்துக்கொள்வோம். ஒளி நான்கு வருடத்தில் நீண்ட வழியை கடந்து இலக்கை அடைகிறதென்றும் நாம் இருபது செக்கனில் குறுக்கு வழிமூலம் இலக்கை அடைகிறோம் எனவும் வைத்துக்கொள்வோம்.

இப்போது ஒளி பயணிக்கும் வேகம்: 4 LY / 4 years = 3x10^8 m/s
நமது வேகம்: 200m / 20s = 10m/s

இப்போதும் நாம் ஒளியைவிட மெதுவாகத்தான் செல்கிறோம். எனவே நாம் காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியாது... இல்லையா?

Aba said...

//அதாவது நமக்கு நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்பா செஞ்சுரி என்ற விண்மீன் உண்மையில் நமக்கு மிக மிக அருகில் கூப்பிடு தூரத்தில் இருக்கலாம்//

இதே இலக்கு நமக்கு உண்மையில் தூரத்தில் இருந்தாலும், நாம் ஏதேனும் கருவியைக் கொண்டு ஒரு வார்ம்ஹோலை உருவாக்கி (இடையே உள்ள வெளியை நீட்டி, சுருக்கி) விட்டால் வெளியில் பயணம் செய்ய முடியுமல்லவா??

adhvaithan said...

awesome.. will read the complete novel.. aana thala suthidum nu ninaikkaraen..

Aba said...

ஒருவேளை Parallel Universes (இருந்தால்) இற்கு இடையே வார்ம்ஹோல்கள் அமைக்க முடிந்தால் கடந்த காலப்பயணம் சாத்தியம். ஆனால் காலப்பயணம் செய்துவிட்டு அன்ன்கேயே சும்மா இருந்தால் நம்மால் நாம் வாழும் நிகழ்காலத்துக்கு இயற்கையாக வர முடியாது.. நிகழ்காலம் அங்கே வேறு ஒரு நிகழ்காலமாக மாரிவிட்டிருக்கும் என நம்புகிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது. சிலமாதங்களுக்கு முன் கேணிவனம் கதையை படித்து மிக பிடித்திருந்தது. ஒரேமூச்சில் படித்து முடித்தேன்.
இபோது கதைசுருக்கமும். கணபதி முருகன் உலாம் சுற்றியதையும் இணைத்து விளக்கிய விதம் அருமை. பாராட்டுக்கள்,

rajamelaiyur said...

மிக அருமை ...

rajamelaiyur said...

இன்று எனது வலையில் ...

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

Uma said...

கேணிவனம் நாவலை விஞ்ஞான பூர்வமா விளக்குனது அருமை...
// சித்தரை சந்தித்து திரும்பி வருவதுடன் ஆசிரியர் அந்த நாவலை முடித்திருக்கலாம். தாத்தா தன்னையே தத்தெடுத்து வளர்த்தார் என்ற அதீத பிக்சனை உள்ளே நுழைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.// எனக்கும் அப்படித்தானே தோணுச்சு .....

நெல்லி. மூர்த்தி said...

சுவாரசியமானத் தகவல்கள்! சிந்தனையினை தூண்டவைத்து எங்கள் மனஓட்டத்தில் கற்பனையாக ஓடவிட்டது உங்களின் எழுத்துக்கள்!

Unknown said...

ஸ்டிரிங் தியரி... போஸான்... நடராஜர்... பதஞ்சலி... பாபாஜி... அஸ்வத்தமர்... மல்டிவர்ஸ்... பாராலல் வேர்ல்ட்... ஸ்பேஸ்-டைம்... ☺