இந்த வலையில் தேடவும்

Tuesday, August 24, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்-VI





அது தான் நான்கு விசைகளைப் பற்றியும் சொல்லியாகி விட்டதே? இன்னும் எதற்கு 'ஆறாம்' பாகம் என்றால் இதில்தான் முக்கியமான மேட்டரே உள்ளது..இன்றைய அறிவியல் உலகின் 'Hot' topic என்னவென்றால் இந்த நான்கு விசைகளை எப்படி சம்பந்தப் படுத்துவது என்பதுதான்... இந்த விசைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் டி.வி.சீரியல்களில் வரும் மாமியார் மருமகள் போல விறைத்துக் கொண்டு உள்ளன... அதனால் இந்த விசைகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்னப்பா? என்று விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டு உள்ளார்கள்....


அறிவியலின் முக்கிய நோக்கம் என்ன என்றால் இயற்கையை ஆராய்ந்து அறிந்து அதில் நிலவும் மாறாத விதிகளைக் கண்டறிவது தான்.... இன்றைக்கு அறிவியலில் கிட்டத் தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட 'விதிகள்' உள்ளன....(ஆர்கிமிடிஸ் விதியில் இருந்து ஐன்ஸ்டீன் விதிகள் வரை) இத்தனையையும் ஒன்று படுத்தி ஒரே விதியில் அடக்கி விட முடியுமா (பார்வதி சிவனிடம் சகல வேதங்களையும் சுருக்கி ஓர் இரண்டு எழுத்தில் சொல்லுங்கள் என்றதற்கு அவர் கூலாக 'ராம' என்று கூறியது போல) என்று விஞ்ஞானிகள் நப்பாசைப் பட்டுக் கொண்டு உள்ளார்கள்... அதாவது பிரபஞ்சத்தின் ரகசியத்தை சுருக்கி (கதை கதையாக சிவப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்களில் எல்லாம் எழுதாமல்) ஒரு எட்டணா போஸ்ட் கார்டில் எழுதிவிட முடியுமா என்று சின்சியராக உழைத்துக் கொண்டு உள்ளார்கள்...அதற்கு 'theory of everything '(TOE )’ என்று இப்போதே அதிகப்பிரசங்கித் தனமாக பேரெல்லாம் வைத்து விட்டார்கள்...

இந்த 'விசை' என்றால் என்ன என்று முதலில் பாப்போம்...விசை என்றவுடன் அது என்னவோ போட்டோவில் 'வெங்கடாஜலபதி' கையில் இருந்து டார்ச் லைட் வெளிச்சம் மாதிரி ஒன்று வருமே ? அந்த மாதிரி ஒரு பொருளில் இருந்து கிளம்பும் என்று நினைக்க வேண்டாம்... விஞ்ஞானிகள் விசை என்பதை இரண்டு பொருட்களுக்கு இடையே நடக்கும் 'துகள்' பரிமாற்றம் என்கின்றனர்.... அதாவது இரண்டு பொருட்கள் இடை விடாமல் ஒன்று மாற்றி ஒன்று இந்தத் 'துகள்' களை 'exchange ' செய்து கொண்டே இருக்கும் போது அவை இரண்டுக்கும் நடுவே 'விசை' செயல் படுகிறது என்று வைத்துக் கொள்ளலாம்.... [உங்களுக்கு பாங்கில்(bank ) பற்று-வரவுப் பரிமாற்றம்(transactions ) இருக்கும் வரை உங்களுக்கும் பாங்குக்கும் ஒரு invisible 'விசை' இருப்பதாகக் கொள்ளலாம்... பாங்கில் எதையுமே போடவில்லை எதையுமே எடுக்கவில்லை என்றால் அந்த 'force ' முடிந்து விடுகிறது...]ஓகே... இந்தத் துகள் துகள் என்கிறீர்களே அப்படி என்றால் என்ன என்று கேட்டால், 'துகள்' என்பது மேலும் பிளக்க முடியாத 'இயற்கையின்' படைப்பு.... உதாரணமாக ரோட்டில் உள்ள ஒரு கல்லை இரண்டாக உடைக்க முடியும்....இந்த இரண்டு துண்டுகளையும் இரண்டாக உடைக்க முடியும்....அப்படியே உடைத்துக் கொண்டே போனால் கடைசியில் உங்களுக்கு ஒரு குட்டி 'சிலிகான்' அணு கிடைக்கலாம்(பிரஹலாதன் சொன்ன படி மஹா விஷ்ணு எல்லாம் இருப்பாரா என்பது தெரியாது....) ... அதாவது பதினாலு 'ப்ரோட்டான்' பதினாலு 'ந்யூட்ரான்' கொண்ட அமைப்பை (கரு) பதினாலு எலக்ட்ரான்கள் (2 ,8 ,4 என்ற மட்டங்களில் ) கடனே என்று சுற்றி வரும் ஒரு அமைப்பைப் பார்க்கலாம்... இதில் இந்த எலக்ட்ரானை மேலும் உடைக்க முடியாது.... எலக்ட்ரானுக்கு உள்ளே என்ன இருக்கும் என்று இதுவரை தெரியவில்லை.... எனவே எலக்ட்ரான் ஒரு 'துகள்' ஆகும்.... (அடிப்படைத் துகள்) இந்தப் ப்ரோடானையும் ந்யூட்ரானையும் நன்றாக சுத்தியல் வைத்து உடைத்துப் பார்த்தால்,அதற்கு உள்ளே 'குவா குவா' என்று 'குவார்க்குகள்' கும்மாளம் அடிப்பதைப் பார்க்கலாம்... அதாவது ப்ரோடான் என்பது இரண்டு 'மேல்' குவார்க் + ஒரு 'கீழ்' குவார்க் சேர்ந்தது... ந்யூட்ரான் என்பது ஒரு 'மேல்' குவார்க் + இரண்டு 'கீழ்' குவார்க் சேர்ந்தது...


இந்த 'குவார்க்' குகளுடன் சேர்ந்து 'லெப்டான்' எனப்படும் அடிப்படைத் துகள்கள் 'பெர்மியான்' (fermions) என்று அழைக்கப்படுகின்றன... இந்த 'பெர்மியான்'கள் (12 'பெர்மியான்'கள் + அவற்றின் 12 உல்டா 'பெர்மியான்' (anti fermions ) கள்....மொத்தம் 24 ) சேர்ந்து இந்த பிரபஞ்சத்தில் உள்ள அத்தனைப் பொருட்களையும் (உங்கள் வீட்டில் உள்ள பூனைக் குட்டியில் இருந்து அண்ட வெளியில் உலவும் விண்மீன்கள் வரை) உருவாக்குகின்றன.... அடுத்து 'போசான்' (boson) எனப்படும் அடிப்படைத் துகள்கள் நான்கு ஆதார விசைகளை உருவாக்குகின்றன... எனவே தான் அறிவியல் இந்த விசைகளை 'விசைகள்' என்று அழைக்காமல் 'பரிமாற்றங்கள்' என்று அழைக்கிறது... (fundamental interactions)


ஞானிகள் காலம் காலமாகக் கேட்கும் 'நான் யார்?' என்ற கேள்வியை அப்படியே அறிவியலிடம் கேட்டால் அது,அது வந்துப்பா, நீ யாரென்றால் பெர்மியான்களும் (fermions) போசான்களும் (bosons )சேர்ந்து உருவான ஒரு கலவை என்று ரொம்ப ஈசியாகக் கூறி விடும்....(இந்தப் பிரபஞ்சத்தில் பெர்மியான் மற்றும் போசானைத் தவிர எதுவுமே இல்லை.... டென்சன் ஆகாதீர்கள் ....அறிவியல் இப்படித் தான் சொல்கிறது.... ) அதாவது பெர்மியான்கள் எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்ற பொருளின் அடிப்படைத் துகள்களை உருவாக்குகின்றன.... போசான்கள் அவற்றுக்கு இடையே 'exchange ' செய்யப்பட்டு பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்த்தோ விலக்கியோ செய்து இந்தப் பிரபஞ்சத்தை நிலை நிறுத்துகின்றன... அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு திரைப்படமாகக் கற்பனை செய்தால் பெர்மியான்கள் தான் நடிகர்கள், நடிகைகள், காமெடியன்கள், வில்லன்கள் .... போசான்கள் என்பவை அவர்கள் பேசும் வசனங்கள், அவர்கள் பாடும் டூயட்டுகள், அவர்கள் போடும் சண்டைகள் என்று வைத்துக் கொள்ளலாம்... டைரக்டர் தான் யாரென்று தெரியவில்லை..... (அந்த ஆளைத் தான் கையில் அருவாளை வைத்துக் கொண்டு நிறைய பேர் தேடி வருவதாகக் கேள்வி...)

இங்கே ஒரு விஷயம்.... பெர்மியான்களும் போசான்களும் வேறு... பெர்மியான்கள் போசான்களைத் தோற்றுவிப்பது இல்லை...(சாமி ஆள விடு! தெரியாம இந்த பிளாக்குக்கு வந்துட்டேன்! என்றெல்லாம் புலம்பக் கூடாது ஆமாம்) நாம் பார்த்த உதாரணத்தில் பெர்மியான்கள் என்பவை நடிகர்கள் போல போசான்கள் என்பவை அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் போல என்று பார்த்தோம்.... இது அவ்வளவு சரி இல்லை (அப்புறம் ஏன் சொன்னாய் ? என்கிறீர்களா?) ஏன் என்றால் வசனங்கள் நடிகர்களிடம் இருந்தே வருகின்றன....(டப்பிங் தவிர) ஆனால் இந்த போசான்கள் பெர்மியான்களிடமிருந்து புறப்படுவது இல்லை.... இரண்டு பெர்மியான்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இந்த போசான்களை வெளியில் இருந்து எடுத்து உபயோகித்துக் கொள்கின்றன... கீழே பெர்மியான்களும் போசான்களும் கொடுக்கப் பட்டுள்ளன....

பெர்மியான்கள்
=============

குவார்க்குகள்- மேல்(up), கீழ்(down), அழகான(charm), வித்யாசமான(Strange), உயர்ந்த(top), அடங்கிய(bottom)

லெப்டான்கள் - எலக்ட்ரான், எலக்ட்ரான் நியூட்ரினோ ,ம்யுயான், ம்யுயான் நியூட்ரினோ, டவ், டவ் நியூட்ரினோ

போசான்கள்

=========

க்ளுஆன், W அண்ட்Z போசான், போடான், கிராவிடான்


இந்த அடிப்படைத் துகள்களுக்கு இருக்கும் ஒரு பண்பு 'SPIN ' எனப்படும் 'சுழற்சி' என்பது.(மற்ற பண்புகள் அதற்கு உள்ள 'மின்னூட்டம் ' (charge) அதன் நிலை நிறை (rest mass) போன்றவை .....பெர்மியான்கள் சுழற்சி "அரை முழு ஒற்றை எண் (half integer)" போசான்களின் சுழற்சி ஒரு "முழு எண்...(integer )" ஆகவும் உள்ளது... அதாவது சுழற்சி அரை என்பது (1 /2 SPIN ) அந்த துகளை இரண்டு தடவை ஒரு முழு சுற்று சுற்றினால் (720 டிகிரி) தான் அந்தத் துகள் முன்பு இருந்த மாதிரியே இருக்கும் என்பதாகும்... (அது எப்படி? 360 டிகிரியிலேயே,ஒரு சுற்றிலேயே, அது தனது பழைய நிலைக்கு வந்து விடுமே என்று நீங்கள் அதிகப் பிரசங்கித் தனமாகக் கேட்டால் அதற்கு ரெடிமேடாக probability amplitude என்றெல்லாம் கூறிக் குழப்பி விட்டு விடுவார்கள்...எனவே அவர்கள் எது சொன்னாலும் சரி சரி என்று தலையாட்டி விடுங்கள்) சுழற்சி ஒன்று (SPIN 1 ) என்பது அந்த துகளை ஒரு முழு சுற்று சுற்றினால்(360 டிகிரி) அது முதலில் இருந்த படியே இருக்கும் என்பது..


நாம் பார்த்த நான்கு ஆதார விசைகளும் (அணுக்கரு வலிய விசை,அணுக்கரு வலுக்குறைந்த விசை, மின் காந்த விசை, ஈர்ப்பு விசை) கீழ்க்கண்ட அடிப்படைத் துகள்கள் 'பெர்மியான்' களுக்கு இடையே கடத்தப்படுவதால் உருவாகின்றன...(ஐயோ எனக்கே இந்தப் பதிவை எப்போது முடிப்பேன் என்று உள்ளது!இதை எல்லாம் புட்டுப் புட்டு வைக்க வேண்டும் என்றால் quantum mechanics -இல் டாக்டர் பட்டம் எல்லாம் வாங்கி இருக்க வேண்டும் ....நாமெல்லாம் டாக்டர் விடுங்கள் ஆஸ்பத்திரியின் 'பியூன்' பட்டம் கூட வாங்க முடியாது )


அணுக்கரு வலிய விசை- க்ளுஆன்கள் அணுக்கரு மெலிய விசை - W மற்றும் Z போசான்கள் மின் காந்த விசை - போட்டான்கள் ஈர்ப்பு விசை - க்ராவிடான்கள் (இவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.... உங்கள் வீட்டின் கொல்லைப் பக்கத்தில் நாளை முதல் ஏதாவது துகள் அலைந்து கொண்டிருந்தால் அதைப் பார்த்து "ஏம்ப்பா, உன் பேர் க்ராவிடானா ? என்று கேட்கவும்....உம் என்றால் அப்படியே ஒரு சாக்குப் பையில் பிடித்து வைத்துக் கொண்டு 'stephen Hawking ' அவர்களுக்கு mail செய்யவும் ...

போசான்களை 'exchange ' செய்யும் கலவரத்தில் நம் 'பெர்மியான்களின்' திசை வேகம், மின்னூட்டம் முதலிய பண்புகள் சற்று மாற்றம் அடைந்து exchange முடிந்த பின் பெர்மியான்கள் கொஞ்சம் (சில சமயங்களில் முற்றிலுமாக ) மாறி விடுகின்றன,,,, இந்த 'மாறிய ' பெர்மியான்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவோ விலக்கவோ செய்யும்... சரி ஒரு எலக்ட்ரான் இன்னொரு எலக்ட்ரானை ஏன் விலக்க வேண்டும்? "மின் காந்த விசை","ஒரே மின் சுமை உள்ள துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கும்" என்றெல்லாம் நீங்கள் சிம்பளாகக் கூறி தப்பித்துக் கொள்ள முடியாது! அந்த மின் காந்த விசை என்றால் என்ன? நான்கு அடிப்படை விசைகளில் ஒன்று... அதாவது அடிப்படைத் துகளான எலக்ட்ரானும் இன்னொரு எலக்ட்ரானும் இன்னொரு அடிப்படைத் துகளான 'போடான்'' என்ற துகளைப் பரிமாறிக் கொள்ளும் போது அவற்றின் குவாண்டம் நிலைகள் (quantum states ) முன்பு இருந்ததை போல் இல்லாமல் மாறி விடுகிறது...

quantum mechanics -இல் ஒரு முக்கியமான விதி உள்ளது... அதை 'Pauli 's exclusion principle ' என்று கூறி பயமுறுத்துவார்கள்....அதாவது இரண்டு ஒரே மாதிரியான 'பெர்மியான்கள்' (ஒரே சுழற்சி உள்ளவை) ஒரே சமயத்தில் ஒரே குவாண்டம் நிலையில் இருக்க முடியாது....(இந்த குவாண்டும் நிலை என்றால் என்ன என்பதை இப்போதைக்கு என்னால் விளக்க முடியாது...ச்சே! மணி ஆறரை ஆகிறது ,இந்த தலை சுற்றும் விஷயங்களை எல்லாம் மூடி வைத்து விட்டு, கண் மூடிக் கொண்டு நேதுநூரியின் 'எவரி மாட' காம்போஜியில் கேட்டு மெய் மறக்கலாம் என்று தோன்றுகிறது...) போடான்களை உமிழ்ந்த பின் எலக்ட்ரான்களின் குவாண்டம் நிலைகள் மாறி விடுவதால் அவைகள் பவ்லியின் விதிக்கு உட்பட்டு “சரிப்பா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே குவாண்டம் ஸ்டேட்டாம்....எதுக்கு வம்பு! அப்பறம் அந்த பவ்லி மைக்ரோ ஸ்கோப்பை தூக்கிகினு வந்துரப் போறான் நம்ம அப்பால போயிறலாம்” என்று ஓடுகின்றன.... அது தான் வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு எலக்ட்ரான்கள் ஒன்றை ஒன்று விலக்குவதாகத் தெரிகிறது....


ஓகே இன்னும் சுலபமாகக் கூற வேண்டும் என்றால்... நீங்களும் உங்கள் நண்பரும் ஓர் ஏரியில் படகில் (boat ) சென்று கொண்டு இருப்பதாகக் கொள்வோம்... இருவரும் தனித்தனி படகில் ... அப்போது நீங்கள் உங்களிடம் உள்ள கனமான பந்து ஒன்றை உங்கள் நண்பரிடம் வீசினால் உங்கள் படகு பின்னால் (அவரது படகை விட்டு விலகி) செல்லும் அல்லவா? அதே போல உங்கள் நண்பர் உங்களை நோக்கி பந்தை எறிந்தால் அவரது படகும் உங்களை விட்டு விலகும்... இதைப் பார்த்து விட்டு 'இரண்டு படகுகளும்' ஒன்றை ஒன்று விலக்குகின்றன என்று சொல்ல முடியாது அல்லவா?(பந்தை தூரத்தில் இருந்து கவனிக்காமல்)ஓகே இங்கே 'படகு' என்பது நமது 'எலக்ட்ரான்' 'குவார்க்' போன்ற 'பெர்மியான்கள்'..பந்து தான் அவற்றுக்கு இடையே கடத்தப் படும் 'போசான்கள்'

இது ஓர் தோராயமான உதாரணம் தான்...குவாண்டம் உலகில் எல்லாம் கொஞ்சம் சொதப்பலாக உள்ளன.... அதே போல் ஒரு ப்ரோடானும் ஓர் எலக்ட்ரானும் ஏன் ஒன்றை ஒன்று ஈர்க்க வேண்டும் என்றால் நாம் quantum electrodynamics (QED ) பென்மேன் படங்கள் (Feynman diagram ) என்றெல்லாம் போக வேண்டும்... (நம்ம லெவலுக்கு இங்கேயே நிறுத்திக் கொள்வோம்...இன்னொரு பதிவில் quantum mechanics பற்றி விரிவாகப் (?) பார்க்கலாம் ) இப்போதைக்கு அந்த 'படகு' உதாரணத்தையே எடுத்துக் கொண்டால் இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் பந்தை எறிந்த பின் இரண்டு படகுகளும் ஒன்றை நோக்கி ஒன்று கிட்டத்தில் வருவதாக வேண்டுமானால்(common சென்சுக்கு எதிராக) வைத்துக் கொள்ளலாம்....

அறிவியலில் ஒரு லெவலுக்கு மேல் 'ஏன்' என்ற கேள்வியைக் கேட்க முடியாது..கேட்கக் கூடாது... அந்த லெவலுக்கு தான் 'விதி '(law ) என்று பெயர் இடுகிறார்கள்... உதாரணமாக பூமி ஏன் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கேட்டால் போன நூற்றாண்டில் நியூட்டன் முதல் விதிப்படி என்றார்கள் . அதாவது எந்த ஒரு பொருளும் வெளி விசை ஒன்று அதன் மேல் வந்து செயல்படும் வரை அது ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் என்பது(இங்கே 'விதி' வருவதால் அதை நீங்கள் ஏன் அப்படி நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் என்று கேட்கக் கூடாது )...பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு (universal law of gravitation ... )அந்த விசை பூமி சூரியனுக்குள் போய் விழுந்து விடும் அளவு பெரிசாகவும் இல்லாமல் ,பூமி சூரியனை விட்டு 'எஸ்கேப்' என்று கூறிக் கொண்டு ஓடி விடும் அளவு சிறியதாகவும் இல்லாமல் ஒரு மீடியமாக இருப்பதால் அந்த விசை பூமியின் நேர்கோட்டுப் பாதையை மாற்றி தொடர்ச்சியாக பூமியை ஒரு நீள் வட்டத்தில் சுற்றி வர வைக்கிறது... இந்த நூற்றாண்டில் 'ஐன்ஸ்டீன்' சொன்ன படி ஈர்ப்பு என்பது காலவெளியில் ஏற்படும் பள்ளங்கள்,,,,இங்கேயும் நீங்கள் 'ஏன்' என்று கேட்க முடியாது.... நாம் முன்பு கூறிய படி 'எல்லாவற்றிற்கும் ஆன கொள்கை' (TOE ) ஒன்று கண்டுபிடிக்கப் பட்டால் கூட அதையும் நாம் 'ஏன் 'என்று கேட்க முடியாது.... ஆனால் இதில் சிக்கல் என்ன என்றால் எல்லாவற்றிற்கும் ஆன கொள்கை (TOE ) என்றால் அது 'ஏன்' என்ற கேள்விக்கும் விடை அளிக்க வேண்டியிருக்கும்... விடை அளிக்கவில்லை என்றால் அது TOE இல்லை...அதாவது எல்லாவற்றிற்கும்...இன்றைக்கு காலையில் உங்கள் வீட்டுக்கு ஏன் வேலைக்காரி வரவில்லை என்பதிலிருந்து பிரபஞ்சத்தில் ஏன் விண்மீன்கள் 'red -shift ' காட்டி விலகி ஓடுகின்றன என்பது வரை எல்லாம்.....:-)

இப்போது இந்த நான்கு விசைகள் (sorry பரிமாற்றங்கள்) எந்த 'range ' வரை செல்லும் என்று பார்க்கலாம்...

------------------------------------------------------------------
விசை உச்ச வரம்பு
-------------------------------------------------------------
வலு விசை 10−15
மெலிய விசை 10−18
மி.கா. விசை முடிவிலா தூரம்
ஈர்ப்பு விசை முடிவிலா தூரம்
-------------------------------------------------

விசைகளின் ஒருங்கிணைப்பு
----------------------------------------
மேலே உள்ள டேபிளைப் பார்க்கவும்... வலுவான மற்றும் வலுக்குறைந்த அணு விசைகள் மிக மிக குறுகிய மனப்பான்மையுடன் செயல் படுகின்றன.... அதாவது அணுக்கருவின் விட்டம் வரை தான்,,,, அதைத் தாண்டினால் மி.கா.விசை மற்றும் ஈர்ப்பு இவை ரெண்டும் தான்... பின்னைய இந்த இரண்டு விசைகளும் முடிவிலாத தூரம் வரை பாயக் கூடியவை....(என்னே பரந்த மனப்பான்மை?) இந்த விஷயம் தான் இந்த நான்கு விசைகளையும் ஒருங்கிணைக்கிறேன் பேர்வழி என்று கிளம்பும் விஞ்ஞானிகளை பிரேக் போட்டு நிறுத்துகிறது.... அதாவது முதல் இரண்டு விசைகளும் (என்ன தான் வலுவாக இருந்தாலும்) குவாண்டம் தூரங்களில் செயல்படுகின்றன.....அந்த தூரங்களில் நடக்கும் விசயங்களை 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' மட்டுமே விளக்க முடியும்... 'குவாண்டம் மெக்கானிக்ஸ்' கூட 'இது தாம்பா ,இப்படி தாம்ப்பா' என்றெல்லாம் சூடம் அணைத்து சத்தியம் எல்லாம் செய்யாமல் இப்படி நடப்பதற்கு தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ரொம்ப தன்னடக்கத்துடன் கூறுகிறது....(sum over possibilities)

அதாவது ஒரு எலக்ட்ரான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் சென்றால் அது இப்படி தான் போச்சு என்று சர்வ நிச்சயமாக யாராலும் படம் வரைந்து காட்ட முடியாது...அது ஒரு கிறுக்கு பிடித்த துகள்....(ஏன் எல்லா அடிப்படை துகள்களும் கிறுக்கு தான்) சில சமயங்களில் 'short cut ' டில் செல்லும.... சில சமயத்தில் ஊரெல்லாம் சுற்றி விட்டு ,சிக்கன் பிரியாணிஎல்லாம் சாப்பிட்டு விட்டு மெதுவாக வந்து சேரும்...தேவை இருந்தால் அலையாக மாறி ஒரே எலக்ட்ரான் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பாதைகளில் (கிருஷ்ண பரமாத்மா சரச லீலை செய்வது போல்) பயணம் செய்து ஸ்டாப் வந்தவுடன் திரும்பவும் ஒரு துகளாக மாறி எதுவுமே தெரியாத மாதிரி உட்கார்ந்து கொள்ளு ம்..போதாக் குறைக்கு ஹைசன்பெர்க் என்ற ஆசாமி பொழுது போகாமல் கண்டு பிடித்த 'நிச்சயமில்லாத் தத்துவம்' (uncertainty principle ) வேறு....[நிச்சயமில்லாத் தத்துவம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்]


தூரம் அதிகரிக்க அதிகரிக்க எல்லாம் கொஞ்சம் தெளிவாகின்றன.... ஒரு கல்லை இங்கிருந்து அங்கு எறிந்து விட்டு அது எந்தப் பாதையில் சென்றது என்று 90 % சரியாகக் கூற முடியும்...(அடப் பாவி இங்கயும் 90 % தானா?) அல்லது பூமி சூரியனை இந்தப் பாதையில் தான் சுற்றுகிறது என்று துல்லியமாகக் கூற முடியும்....எனவே இங்கே சவால் என்ன என்றால் 'குட்டியூண்டு' தூரத்தில் செயல் படும் குவாண்டும் விதிகளையும் பிரம்மாண்ட தூரங்களில் ஆட்டம் போடும் ஈர்ப்பின் 'general theory of relativity ' யையும் எப்படி சம்பந்தப் படுத்துவது என்பது தான்....


காந்த விசையையும் மின் விசையையும் வெற்றிகரமாக இணைத்து 'மின் காந்த விசை' ஆக்கியது போல இப்போதைய பிளான் என்ன என்றால் 'அணுக்கரு மெலிய விசையையும் மி.கா.விசையையும் இணைத்து 'மின் மெலிய கொள்கை' (electro weak theory ) ஒன்றை உருவாக்குவது... இந்த மி.மெ. விசையை மின் வலிய விசையுடன் இணைத்து ஒரு 'பெரிய ஒருங்கிணைந்த கொள்கை' (grand unified theory ) யை உருவாக்குவது... இந்த பெ.ஒ. கொள்கையை குவாண்டம் ஈர்ப்புடன் (quantum gravity ) இணைத்து 'எல்லாவற்றிற்கும் ஆன கொள்கை' (theory of everything ) ஒன்றை உருவாக்குவது.... ஆஹா! ரொம்ப ஈஸி ஆகத் தெரிகிறதா? ஓகே try பண்ணுங்கள்...


குவாண்டம் விதிகளையும் மிக அதிக தூரங்களில் செயல்படும் ஈர்ப்பின் ரகசியங்களையும் ஒருங்கிணைக்க விஞ்ஞானிகள் 'கிராவிடான்' என்ற துகளை உற்சாகமாகத் தேடிக் கொண்டு உள்ளார்கள்...சற்று முன் சொன்ன படி உங்களுக்கு எங்காவது 'கிராவிடான்' கிடைத்தால் விட்டு விடாதீர்கள்... அதன் மூலம் உங்களுக்கு ஒரு பெரிய தொகை பரிசாகக் கிடைக்கலாம்...


(அப்பா ஒரு வழியாக இந்த பதிவும் 'பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்' தொடரும் இனிதே(?)முடிவடைந்தன...)


~சமுத்ரா

6 comments:

adhvaithan said...

அது எப்படி? 360 டிகிரியிலேயே,ஒரு சுற்றிலேயே, அது தனது பழைய நிலைக்கு வந்து விடுமே என்று நீங்கள் அதிகப் பிரசங்கித் தனமாகக் கேட்டால் அதற்கு ரெடிமேடாக probability amplitude என்றெல்லாம் கூறிக் குழப்பி விட்டு விடுவார்கள்...
+++++++++++++++++++++++++++++
i guess the path of rotation is not circle here.. it should be spherical hence 720 degree athagapatatu it is 4 radians.. naa mathematics la mokka poda virumbalai.. so ithu inganam nirka.. :):)

intha thodara mudichudrathunu mudivu paniacha.. na inum intha post fulla padikala.. kadaisi part padika mudila esaman. konjam perusu pani podunga :(:(

aprom positron pathilam inum eltina matri terilayae.. alpha, beta, gamma radiations, photon (ataan ba light ithulentu taan varutunu solrangalae.. atha pathilaam teliva eltunga..) enaku neraya doubts iruku ithula.. :):)

Anonymous said...

such a nice article...!! marvelous.

Rajakamal said...

really fantastic pls keep it up, i expect more articls from u.

Rajakamal said...

really fantastic pls keep it up, i expect more articls from u.

Rajakamal said...

really fantastic pls keep it up, i expect more articls from u.

Vijayan Durai said...

//
(சாமி ஆள விடு! தெரியாம இந்த பிளாக்குக்கு வந்துட்டேன்! என்றெல்லாம் புலம்பக் கூடாது ஆமாம்)//

//
ஐயோ எனக்கே இந்தப் பதிவை எப்போது முடிப்பேன் என்று உள்ளது!இதை எல்லாம் புட்டுப் புட்டு வைக்க வேண்டும் என்றால் quantum mechanics -இல் டாக்டர் பட்டம் எல்லாம் வாங்கி இருக்க வேண்டும் ....நாமெல்லாம் டாக்டர் விடுங்கள் ஆஸ்பத்திரியின் 'பியூன்' பட்டம் கூட வாங்க முடியாது ) //

//
இந்த குவாண்டும் நிலை என்றால் என்ன என்பதை இப்போதைக்கு என்னால் விளக்க முடியாது...ச்சே! மணி ஆறரை ஆகிறது ,இந்த தலை சுற்றும் விஷயங்களை எல்லாம் மூடி வைத்து விட்டு, கண் மூடிக் கொண்டு நேதுநூரியின் 'எவரி மாட' காம்போஜியில் கேட்டு மெய் மறக்கலாம் என்று தோன்றுகிறது.
//

இதை எழுத ரொம்ப சிரமப்பட்டிருப்பீங்க போல

:)