இந்த வலையில் தேடவும்

Friday, August 27, 2010

தமிழனென்று சொல்லடா!

பிளாக்குகளில் ஏதோ 'AdSense ' என்ற ஒரு சமாசாரம் இருக்கிறதாமே? அதாவது நம் blog -இல் விளம்பரம் எல்லாம் போட்டு அதை visitors யாராவது தப்பித்தவறி கிளிக் செய்தால் நமக்கு துட்டு கிடைக்குமாம்... முதலில் நம்ம ப்ளாக்குக்கெல்லாம் யாராவது விசிட் செய்வார்களா என்பதே சந்தேகம்....ஆனால் 'துட்டு' ஆசை யாரை விட்டது? சரி, செய்து தான் பார்க்கலாமே அன்று AdSense account ஒன்று தொடங்கினேன்... சிறிது நேரம் சென்றதும் எனது gmail முகவரிக்கு ஒரு மின்-தபால் வந்து தபால் என்று விழுந்தது ....அது கீழே...




Hello
------------------
Thank you for your interest in Google AdSense. Unfortunately, after reviewing your application, we're unable to accept you into Google AdSense at this time.
We did not approve your application for the reasons listed below.


Issues:
- Unsupported Language
---------------------
Further detail:
Unsupported Language: We've found that the majority of your site’s content is in a language we do not currently support.


ஓ! தமிழில் எழுதினால் இந்த சலுகைஎல்லாம் கிடையாது போலிருக்கிறது.... தமிழ் மட்டும் அல்ல..அந்த தபாலில் கொடுத்திருந்த 'supported language ' பட்டியலில் எந்த இந்திய மொழியும் இல்லை.... (ச்சே! குறைந்த பட்சம் ஹிந்தியாவது இருந்திருந்தால் 'என்னே தமிழனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை! மறத்தமிழா! மானம் காக்கப் பொங்கி எழு! என்று அரசியல்வாதி ரேஞ்சுக்கு சவுண்டு எல்லாம் கொடுத்திருக்கலாம்!)

சரி இந்த AdSense விஷயம் ஒரு புறம் இருக்கட்டும்.... 'நான் ஒரு blog - ஆரம்பித்திருக்கிறேன்' என்று ஆபீசில் சொன்னால் 'அப்படியா ரொம்ப சந்தோஷம்! URL கொடு! எப்பவாவது அழணும் போல் தோன்றினால் படிக்கிறேன்! என்று கேட்பார்கள்..."அது வந்து,அடியேன் தமிழில் தான் எழுதுகிறேன்” என்றால் 'அய்யே! தமிழா?‘என்கிறார்கள்....(தமிழர்களே கூட)


மேலும் 'இங்கிலீஷுல எழுத வராதா?' 'copy - paste பண்ணி எழுதறதெல்லாம் இங்கிலீஷுல எழுதுனா தெரிஞ்சுருமா?’ என்றெல்லாம் கேட்டு கடுப்பேற்றுகிறார்கள்... AdSense லிருந்து வந்த பதிலை இரண்டொருவரிடம் காட்டிய போது அவர்கள் அனுப்பிய விடைகள் கீழே:(
______________________________________________________
From: XXX
Sent: Thursday, August 26, 2010 4:15 PM
To: YYY;ZZZ
Subject: RE: unsupported language???:( :( :(

That is alien 's language ..pls use appropriate language
__________________________________________________________



From: YYY (WT01 - Testing Services)
Sent: Thursday, August 26, 2010 4:05 PM
To: XXX; ZZZ
Subject: RE: unsupported language???:( :( :(


Write in a language, which humans can understand.
___________________________________________________________
என்னதான் நாம் 'தமிழ் முதுமொழி', 'செம்மொழி' , 'டைனோசர் தோன்றி சிம்பான்சி தோன்றாக் காலத்திலேயே தமிழ் தோன்றி விட்டது' 'தமிழில் இருந்து தான் சமஸ்கிருதமே வந்தது'என்றெல்லாம் அரற்றிக் கொண்டு திரிந்தாலும் , 'fact ' என்ன என்றால் ஒரு தமிழன் தமிழ் நாட்டின் எல்லை தாண்டிச் சென்றால், ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்து விட்டவன் போல் தான் சிலர் அவனைப் பார்க்கிறார்கள்...


'விருந்தினர்கள் நம் வீட்டுக்கு வந்து எத்தனை நாள் ' டேரா' போட்டாலும் அவர்களை சிரித்த முகம் மாறாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்..கொஞ்சம் கூட பார்க்கும் பார்வையில் மாற்றம் இருந்து விடக் கூடாது' என்ற உயர்ந்த 'விருந்தோம்பல்' தத்துவத்தை உலகுக்கு சொன்னது தமிழ் தான்...

("மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து")


ஆனால் இன்று தமிழனுக்கு உள்ள பெயர் என்ன தெரியுமா? 'ஆதி வாசி' 'ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்து வந்தவன்' 'நாகரிகம் குறைந்தவன்' 'பொது இடத்தில் எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியாதவன்' .........(அதாவது தமிழ் நாட்டுக் காரர்கள் இலையில் விழுந்த எல்லா அயிட்டங்களையும் ஒன்றாகக் குழப்பி பத்து விரல்களையும் உபயோகித்துப் பிசைந்து அடிப்பவர்களாம்....)

ஆபீசில் நம் சீட்டுக்குப் பக்கத்தில் கிறுக்குவதற்கு என்று ஒரு போர்டு இருக்குமே? அங்கே நான் சும்மா இருக்காமல் கீழே உள்ள பாட்டை எழுதி வைத்திருந்தேன்...


"தமிழ் எங்கள் இளமைக்குப் பால்---அந்தத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -அந்தத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!"

இதைப் பார்த்து விட்டு தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் மாநிலத்துக்காரர்கள் (சக ஊழியர்கள் தான்) சிலர் வந்து "இதை இப்போதே அழிக்கிறாயா இல்லையா? " என்று மல்லுக்கு நின்றார்கள்... " இது என் சீட்டில் எனக்காக ஒதுக்கப் பட்ட சிறிய இடம்...அதில் எனக்குப் பிடித்த நாலு வரியை எழுதிக் கொள்ள இந்திய நாட்டில் எனக்கு சுதந்திரம் இல்லையா? என்று கேட்டு விட்டு "வேண்டுமானால் உங்கள் போர்டிலும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்... அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் அவர்கள் இல்லை....ஏளனமாக , "நாங்கள் கழுவி விடும் தண்ணீரை......" ஓகே வேண்டாம் அதையெல்லாம் எதற்கு எழுதிக் கொண்டு? “இந்த மொழியை இங்கே எழுத முடியாது அவ்வளவு தான் ...அழிக்கிறாயா இல்லையா?” என்றனர்.... நான் "சரி ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் ....கூடவே உங்கள் மொழியையும் எழுதி விடுகிறேன்..." என்றேன்.. ஓகே எங்கள் பாஷையை தான் முதலில் எழுத வேண்டும் என்று கூறி அரை மனதாக ஒப்புக் கொண்டனர்....


மத்தியானம் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்ததில் போர்ட் சுத்தமாக அழிக்கப் பட்டிருந்தது...


பிற மொழிகள் மீது துவேசம் காட்டுவதைத் தான் அவர்கள் மொழிக்கு செய்யும் மிகப் பெரிய சேவை என்று நினைக்கிறார்கள் போலும் .... இவ்வளவு தாய்மொழிப் 'பற்று' இருந்தால் உங்கள் மொழியில் உள்ள இலக்கியங்களை எல்லாம் படித்து அதில் ஏதாவது PhD செய்ய வேண்டியது தானே? உங்கள் மொழியில் கவிதை, அறிவியல் தொழில் நுட்ப கட்டுரைகளை எழுதி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக எதாவது செய்ய வேண்டியது தானே? உஹும் ..எதுவும் இல்லை... I understand ...அவர்களுக்குத் தங்கள் கண் முன்னால் தங்கள் நகரத்தில் பிற மாநிலத்தவர்கள் 'MNC ' களைக் காரணம் காட்டி வந்து சேர்ந்து கொண்டு,அதன் காரணமாகத், தங்கள் தாய்மொழி கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருவது வேதனையாகத் தான் இருக்கும்,,,, அதை எப்படி ஆக்கப்
பூர்வமாக சமாளித்து சரிப்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டுமே தவிர , இப்படி பிற மொழியினர் மீது பேதம் காட்டினால் அது மேலும் மோசமான பின் விளைவுகளைத் தான் உருவாக்கும் என்பதை அவர்கள் அறிய வேண்டும்...

அடுத்து எங்கள் 'ப்ராஜெக்ட்' ஒன்று வெற்றிகரமாக (?) முடிவடைந்தது என்று 'team outing ' குக்காக சென்றிருந்தோம்... அதில் நான் பாடுவதாக ஏற்பாடு.... (இது தெரிந்து 'ஏன் risk எடுக்க வேண்டும்' என்று பல பேர் அவுட்டிங்கே வேண்டாம் என்று வராமல் இருந்து விட்டதாகப் பின்னால் அறிந்து கொண்டேன்) அதில் 'ஒரு நாள் போதுமா' என்ற பாட்டைப் பாடி நம் இசைத்திறமை எல்லாம் வெளிப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் [[[மைக் முன்னால் நின்றவுடன் 'தோடி' 'மோகனம்' 'தர்பார்' எல்லாம் ஒரு மாதிரி வந்தது வேறு விஷயம்' மைக்கை பிடுங்கிக் கொள்ளாத குறை தான் :-( ]]] அதே கோஷ்டி என்னிடம் வந்து 'எந்த மொழியில் பாடுகிறாய்?' என்றனர்....'சந்தேகமே வேண்டாம் 'தமிழ்' தான் என்றேன்...(உங்க தமிழ்ப் பற்றுக்கு ஒரு அளவே இல்லையா? என்று கேட்கக் கூடாது ஆமாம்... )"சாரி அப்படியானால் உனக்கு மைக் இல்லை” என்று மீண்டும் மல்லுக்கு நின்றனர்.... எங்கள் மொழியில் ஏதாவது பாடு, அது கர்ண கடூரமாக இருந்தாலும் கை தட்டுவோம்...at least ஹிந்தியில் பாடு , தெலுங்கு என்றாலும் ஓகே... என்றனர்... "இது என்ன விதமான லாஜிக் என்று புரியவில்லை... தமிழ் மட்டும் என்ன பாவம் செய்தது?" என்றேன்.... "அது எல்லாம் எங்களுக்குத் தெரியாது, அந்த 'அசுர பாஷை' மட்டும் வேண்டாம்..." என்றனர்... "இல்லை எனக்கு அந்தப் பாட்டு ஒன்று தான் தெரியும் என்றதற்கு "சரி ஒரே பாட்டை இரண்டு மொழிகளிலும் பாடுவதானால் ஓகே" என்று ஒரு வழியாக ஒப்புக் கொண்டனர்...

'தமிழ்' 'தமிழன்' என்றால் என்ன இளக்காரம் என்று இன்னும் தெரியவில்லை.....(தமிழ் மக்களே! இன்னொரு மாநிலத்துக்கு வேலைக்குச் சென்றால் உங்கள் தாய் மொழிப் பற்றை ஓவராகக் காட்டாமல் இருக்கவும்... மேலும் அவர்கள் மொழியையோ அல்லது ஹிந்தியையோ 'முப்பது நாட்களில்' என்று தொடங்கும் பாலாஜி புத்தகம் வாங்கி அரை குறையாகவேனும் படித்துக் கொண்டு செல்லவும்)


இன்னொரு சம்பவம்...

தமிழ் நாட்டின் நகரங்களுக்கும் (சென்னை, கோவை, மதுரை....) பெங்களூருக்கும் இடையே கர்நாடக அரசு நடத்தும் பஸ் சர்வீஸ் உண்டு.... தமிழ் நாட்டின் நகரங்கள் இந்த ' குளு குளு ' நகரத்தை ஒப்பிடும் போது சற்று வெப்பமானவை தான்... ஒப்புக் கொள்ளலாம்...இந்த ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் அலப்பறை இருக்கிறதே? 'அந்த கிளைமேட்டில் மனுஷன் இருப்பானா' 'ஐயோ தப்பித் தவறி போய் விட்டேன், எப்ப தான் இங்கே திரும்பி வருவமோ என்று இருந்தது' ,” "நரகத்தில் வாணலிச் சட்டியில் வறுப்பது போல உடம்பெல்லாம் எரிந்தது" என்று இவர்கள் எல்லாம் 'சொர்கத்தில் இருந்து நேரடியாக வந்தது போல’ ஓவராக அலட்டிக் கொள்வது... இந்தக் கிளைமேட்டில் இருந்து கொண்டு இத்தனை காலம் குப்பை கொட்டியவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? என்று நமக்கே சந்தேகம் வருகிறது....பெங்களூருவில் வெய்யிலே வருவதில்லையா என்ன ? அடுத்து தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவில் யாருமே கறுப்பாகப் பிறப்பதில்லையா என்ன ? நம் கலரெல்லாம் தொட்டால் கையில் ஒட்டிக் கொள்கிற அட்டைக் கரியாம்... சரி தான், இவர்கள் தங்கள் அதிகப் படியான கலரைக் குறைத்துக் கொள்ள தினமும் 'sun bath ' எடுக்கிறார்களோ என்னவோ?


சரி சம்பவத்துக்கு வருவோம்...ஒரு நன்னாளில் , அந்த பஸ் சர்வீசில் வந்த தமிழ் மட்டுமே தெரிந்த அப்பாவிப் பயணி ஒருவர் பஸ் எப்போதும் நிறுத்தும் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதும் கண்டக்டரைப் பார்த்து 'என்னம்மா,இங்க நிறுத்துங்க" என்றார்....அதற்கு கண்டக்டர் பெண்மணி "இங்கே எல்லாம் ஸ்டாப் கிடையாது , அடுத்து மெஜஸ்டிக் தான் "என்று தமிழ் மாதிரி இருந்த ஒரு பாஷையில் அலட்சியமாகக் கூறினார்... மெஜஸ்டிக் என்பது இன்னும் ஆறேழு கிலோ -மீட்டர்கள் இருந்தது... அந்தப் பயணி கடுப்பாகி 'டிக்கெட்' ல போட்டிருக்கே ஸ்டாப் இருக்குன்னு? என்று கேட்டதற்கு அவ்வளவு தான் அந்த மாது சிரோன்மணி தன் திருவாய் திறந்து கன்னடத்தில் அர்ச்சனை செய்யத் தொடங்கினார்... "டேய் எங்க வந்து யாரை மிரட்டற? இவ்வளவு ரோசம் இருந்தால் உங்க கச்சடா ஊர்லையே (இவர்கள் ஊரெல்லாம் மயன் நிர்மாணித்த சொர்க்க புரியாம்)இருக்கே வேண்டியது தான? ...உனக்கு............ [நாகரிகம் கருதி கொடுக்கப்படவில்லை]” என்று மெஜஸ்டிக் வரும் வரை தன் அர்ச்சனையைத் தொடர்ந்தார்...



'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிய தமிழனுக்கு மதிப்பு இவ்வளவு தானா ??? அந்த பஸ்ஸில் இருந்த சொற்ப ஜனங்களும் (அடியேன் உட்பட) நமது கண்டக்டர் பெண்மணியின் ‘மஹா காளி’ அவதாரத்தை எதிர்க்கத் துணிவு இன்றி 'கப் -சிப்' என்று வேறு பக்கம் பார்த்த வண்ணம் உட்கார்ந்து கொண்டு விட்டனர்... கார்பரேசனில் இறங்க இருந்தவர்கள் கூட 'எதற்கு வம்பு' என்று மெஜஸ்டிக்கிலேயே இறங்கிக் கொண்டனர்...


யோசிக்க வேண்டிய சில விஷயங்கள் கடைசியில்:




* மலையாள மக்களின் முக்கியமான திருவிழாவான 'ஓணம்' இங்கே (பெங்களூருவில்) விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது... 'பூக்களம்' போட்டிகள், கேரளத்தின் பாரம்பரிய உடையணிதல் முதலியன....அதே போல ஒரு 'தமிழ் வருடப் பிறப்பையோ' 'பொங்கலையோ' விமரிசையாக இங்கே எடுத்துக் கொண்டு கொண்டாட முடியுமா என்று யோசிக்கிறேன்...


*தமிழ்நாட்டில் தான் பெரும்பாலும் த்யாகராஜருடைய தெலுங்குக் கீர்த்தனைகள் பாடப் படுகின்றன... தமிழ் நாட்டில் 'கன்னட' மாத்துவர்கள் அக்கிரஹாரம் இல்லாத ஊர்களே இல்லை எனலாம்... (அந்த மடங்கள் எல்லாம் தமிழ் நாட்டிலேயே இருந்தாலும் மடத்தின் உள்ளே ஒரு தமிழ் வார்த்தை கூட allow இல்லை) தமிழ் நாட்டில் மலையாள நாயர் இல்லாத டீக்கடைகள் இல்லை....இது போல எல்லாம் இல்லை என்றாலும் வேறு ஒரு மாநிலத்தில் குறைந்த பட்சம் ஸ்பீக்கரில் ஒரு தமிழ்ப் பாட்டு போட்டு விட முடியுமா?


*அண்டை மாநிலத்தில் ஒரு திருவள்ளுவர் சிலை ஜம்மென்று வைத்து விட்டால் போதும்... எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று நினைக்கிறார்களா அரசியல் வாதிகள்?தமிழை விட இங்கிலீஷ் அதிகம் பேசுகின்ற தமிழ் சினிமா ஒன்றை உலகம் முழுதும் திரையிடுவதன் மூலம் மட்டும் தமிழின் 'புகழ் ' பரவி விடும் என்று சினிமாக் காரர்கள் நினைக்கிறார்களா?

*வெளி மாநிலம் ஒன்றிலோ வெளி நாடு ஒன்றிலோ 'I 'm from Tamil Nadu ' என்றால் 'Oh ! Tamil Nadu ! ரஜினிகாந்த் ! கமலஹாசன்'! என்கிறார்கள்....
ஏன் " ஓ! தமிழ் நாடு! the great திருக்குறள்! M .S .சுப்புலக்ஷ்மி ,பாரதி! என்றெல்லாம் சொல்வதில்லை???


* நம்மிடையே ஏன் ஒற்றுமை இல்லை? குறைந்த பட்சம் அடுத்தவனை எதிர்க்கும் போது மற்ற மாநிலத்தவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்...தமிழர்கள் அது கூட இல்லை... நமக்கு ஏன் வம்பு? என்று தேவையானால் 'I don’t know Tamil' என்று சொல்வதற்குக் கூட தயாராய் இருக்கிறார்கள்...


* இதே போல பேருந்தில் ஒரு மலையாளியோ , கன்னடத்துக் காரரோ அவமானப் பட்டிருந்தால் (வேறு மாநிலமானாலும்) சக மொழிப் பயணிகள் பார்துக் கொண்டு சும்மா இருந்திருப்பார்களா? (நம்மிடையே ஏன் அந்த 'belongingness ' இல்லை?

*தமிழர்கள் ஏன் வேற்று மொழி ஒன்றைக் கற்றுக் கொள்வதில் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள்? தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும் போதும்...உலகம் முழுவதும் சுற்றி வந்து விடலாம் என்று நினைக்கிறார்களா? ஐந்து வருடம் டெல்லியில் இருந்தாலும் பத்து வருடம் பெங்களூருவில் இருந்தாலும் சிலர் அந்தந்த பாஷைகளைக் கற்றுக் கொள்வது இல்லையே? நாம் அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் அவர்கள் தமிழ் பேச வேண்டும் என்று நினைப்பது சரியா?

*அடுத்தது சிலர் பொதுவாகச் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு: தமிழ்நாட்டவர்கள் யாருடனும் 'mingle ' ஆவதில்லை....ஒரு 'குரூப்' அகவே திரிகிறார்கள் என்பது...இது நிஜமா?


இதையெல்லாம் யோசித்துப் பார்த்துக் கொஞ்சம் திருத்திக் கொண்டால்தான் நாம் நிஜமாகவே 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று சொல்ல முடியும்...




~Samudra


4 comments:

ananda said...

A worst blog which I have never seen

Anonymous said...

The statement -
@நம்மிடையே ஏன் அந்த 'belongingness ' இல்லை? @

is contrasting with
@*அடுத்தது சிலர் பொதுவாகச் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு: தமிழ்நாட்டவர்கள் யாருடனும் 'mingle ' ஆவதில்லை....ஒரு 'குரூப்' அகவே திரிகிறார்கள் என்பது...இது நிஜமா?@

Which is true ?

Dr.Dolittle said...

நான் பழகிய மற்றமாநிலதவர்களின் உழைப்பை விட தமிழனின் உழைப்பு அனைத்து மாநிலதவராலும் போற்றப்படுகிறது , இப்போது இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நாம் பெரிதாக பேர் வாங்குவோம் , அதுவரை ராசா , கனிமொழி போன்றோர் மானத்தை வாங்காமல் இருந்தால் சரி

arul said...

google adsense rejects even if you use a tag in tamil language it is my experience