இந்த வலையில் தேடவும்
Wednesday, August 4, 2010
ஒரு நிமிஷம் Mr.ஹீரோ!
சில நாட்களுக்கு முன் விகடனிலோ எதிலோ படித்த ஒரு கவிதை
ஞாபகம் வருகிறது:(வார்த்தைகள் மாறி இருக்கலாம்)...
வில்லன் பத்து பேரை அடித்தால்
ஹீரோ நூறு பேரை அடிக்கிறான்
வில்லன் பெண்கள் ஆடும் குத்தாட்டத்தை ரசிக்கிறான்
ஹீரோவும் ரசிக்கிறான்
வில்லன் குடித்து விட்டு டான்ஸ் ஆடுகிறான்
ஹீரோவும் ஆடுகிறான்-ஆனால்
படத்தின் கடைசியில் ஹீரோ மட்டும் வெற்றி பெற்று
ஹீரோயினை மணக்கிறான்...
இது இந்தக் காலத் திரைப் படங்களுக்கு எவ்வளவு உண்மை என்று
நினைத்துப் பார்க்கவும்....
நமது மண்ணின் மைந்தர்களான "ஹீரோ' க்களின் கடமை என்ன?
ஆட்டு மந்தைகள் போல் ரசிகர்களை வரவழைத்து அவர்களை
இரண்டு மணி நேரம் 'பன்ச்' டயலாக்குகளால் 'Entertain ' செய்வது மட்டும் தானா?
இல்லை 'எனக்கு எதிலும் கிக் இருக்க வேண்டும்' 'எனக்கு எல்லாமே பெஸ்ட் தான்
வேண்டும்' என்ற நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத தத்துவங்களை ரசிகர்களின் மனத்தில் விதைப்பதா?
ஒரு சாதாரண, நடுத்தரக் குடும்பத்தின் இளைஞன், ஒரு திரைப் படத்தைப் பார்க்கும் போது அந்த ஹீரோவுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான் என்ற சாதாரண "Psychology ' கூட
அவர்களுக்கு ஏன் தெரிவதில்லை? ஹீரோ திரைப்படத்தில் இயற்பியல் விதிகளை எல்லாம் மீறி
பறந்து பறந்து நூறு பேரை அடிக்கும் போது நம் பாவப் பட்ட இளைஞன் மனத்தில் 'நாமும் இவன் போல எதிரிகளை (?) அடித்து நொறுக்க வேண்டும்" என்ற ஆசை முளைத்து அடி மனதில் குடி புகுந்து கொள்ளலாம். ஆனால் நிஜ வாழ்கையில் அவனுக்குப் பாவம் எதிரிகள் தான் கிடைப்பதில்லை.. அந்த "ஆழ் மன" வன்முறையை அவன் மறை முகமாகத் தன் குழந்தைகளிடம் காட்டலாம்... அலுவலகத்தில் காட்டலாம்... தன் மனைவியிடம் காட்டலாம்... என் கேள்வி என்ன என்றால் நமது ஹீரோக்களின் லூசுத்தனமான நடவடிக்கைகளால்,மித மிஞ்சிய 'ஹீரோயிசத்தால்' சமுதாயத்தில் ஏற்படும் மனவியல் ரீதியான விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?
Of course , தன் இயல்பு வாழ்கையில் நடை பெறாத சுவாரஸ்யமான , அசாத்தியமான விஷயங்கள் சிலவற்றை திரைப்படத்தின் மூலம் ஒரு சாதாரணன் எதிர் பார்கிறான்.
அங்கேயும் நமது ஹீரோ டெய்லி ஆபீஸ்- சென்று ஒரே வேலை செய்து 17 -B பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து அம்மா அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து என்று இருந்தால் , அந்தப் படத்தை யார் பார்பார்கள்?
ஆனாலும் சினிமாவில் விஷயங்கள் எந்த அளவிற்கு நடை முறையை விட்டு விலகி இருக்கலாம்
என்ற 'Deflection index ' ஐ யார் தீர்மானிப்பது? ("A good movie is one that not only entertains but also enlightens " )
உதாரணமாக, சமீபத்திய திரைப் படம் ஒன்றில் (பெயர் வேண்டாம்) வரும் பிரபலமான 'பன்ச்':
'ஓங்கி அடிச்சா ஒன்ட்ற டன் வைட்டு டா" என்பது... வெளி நாட்டிலெல்லாம்
சாதாரண அறிவியலின் முன்னேற்றமாக, "Science Fiction " கதைகளை படமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது நம் ஹீரோக்கள் என்னடா என்றால்
சாதாரண அறிவியல் கூடத் தெரியாமல் பன்ச் டயலாக்குகள் விடுகிறார்கள்..என்னதான் ஓங்கி அடித்தாலும் 'ஒண்ணரை' டன் வெயிட் எப்படி வரும்? மேலும் ஒருவரை அடிக்கும் போது உணரப் படுவது
விசையே (Force ) தவிர எடை (weight ) அல்ல...சரி நம் ஹீரோ,
"ஐன்ஸ்டீன்" எப்படி gravity யும் acceleration ம் ஒன்று தான் என்று கண்டு பிடித்தாரோ அது மாதிரி ஏதாவது ஆராய்ச்சி கீராய்சி செய்து 'விசையும்' 'எடையும்' ஒன்று தான் என்று கண்டு பிடித்து விட்டார் என்றே வைத்துக் கொண்டால் , வில்லனை அடிக்கும் போது 'ஒண்ணரை' டன் நியூட்டன் விசை எப்படி வரும்? ஹீரோ அப்படியே வில்லன் மீது விழுவதாக வைத்துக் கொண்டாலும் ,வில்லன் உணரும் விசை
ஹீரோவை பூமி இழுக்கும் விசைக்குச் சமம்... அதாவது நியூட்டன் இரண்டாம் விதிப்படி , F=MA ...ஹீரோ 70kg என்று வைத்துக் கொண்டால்
M = 70 / 9 .8 kg , A = 9 .8 M /S2 எனவே F = 70N ..70 நியூட்டன் தானே வருகிறது? மேலும் நியூட்டன் மூன்றாவது விதிப்படி ,ஹீரோ 'ஒண்ணரை' டன் விசையுடன் வில்லனை அடித்தால் அதே விசையை ஹீரோவும்
தன் கையில்/உடலில் உணர மாட்டாரா? இதையெல்லாம் யோசிக்காமல் நாம் தியேட்டரில் உட்கார்ந்து கொண்டு என்னவோ நம் ஹீரோ பிரபஞ்ச ரகசியத்தை விடுவித்து விட்டது போல கைகள் தேயும் வரை கைதட்டிக் கொண்டு இருக்கிறோம்..
அடுத்தது, திரைப் படங்களில் வரும் கல்லூரிகள்.... பாடம் நடத்தும்
Professors எல்லாம் பெரும்பாலும் லூசுகளாக இருக்கும், மாணவர்களுடன் சேர்ந்து lady professors ஆட்டம் போடும் கல்லூரிகள் நிஜ வாழ்க்கையில் எங்கே இருக்கின்றன? இந்த மாதிரி கல்லூரிகளைத் திரைப்படங்களில் பார்த்து விட்டு தன் 'day -to -day ' காலேஜுக்குச் செல்லும் ஒரு இளைஞன்
ஏமாற்றம் அடைகிறான்... படத்தில் வருவது போல தமன்னா போன்ற பெண் ஒருத்தி அவனிடம் வந்து 'நான் அழகா இருக்கேனா? என்றெல்லாம்
கேட்பதில்லை... ஹும் இன்னொன்று நம் தமிழ்த் திரையுலகின் ஹீரோயின்கள்...ஹீரோக்களாவது படம் முழுக்க ரவுடிகள் போலத் திரிந்தாலும் படத்தின் இறுதியில் சமர்த்தாக பிரதமர்/ முதல் அமைச்சர் கைகளால் விருது வாங்கி விடுகிறார்கள்... ஹீரோயின்கள் படம் முழுவதும் அறை லூசுகளாகவே உலா வருகிறார்கள்... ஹீரோக்களை
அடிக்கடி வந்து entertain செய்வதற்கு sixth sense , common sense எல்லாம் எதற்கு தேவையில்லாமல்? என்று டைரக்டர் நினைத்து விடுகிறார் போலும்..(பெண்களை இப்படி லூசுகளாகக் காட்டுவதை ஏன் 'பெண்ணீய
வாதிகள்' எதிர்க்கவில்லை? )ஒரு பெண்ணை மையமாக வைத்து ஏன் ஒரு திரைப்படம் கூட இல்லை? ஹீரோவுக்கு ஊறுகாயாக வருவதை விட்டு
அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லையா? இதன் 'பழி வாங்கலாகவோ'
என்னவோ சின்னத் திரையில் (மெகாஆஆஆ சீரியல்கள்) எல்லா கதைகளும் பெண்களை மையமாகக் கொண்டு 'கோகிலா' , 'காவேரி'
'முனியம்மா' என்ற டைட்டில்களுடன் வந்து , அதன் டைட்டில் சாங்குகளில்
பெண்கள் 'slow motion ' னில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்... ( டைட்டில் சாங்கில் 'உலகை வெல்வோம்' 'தடைகளை காலில் போட்டு மிதிப்போம்' என்றெல்லாம் ஜான்சி ராணி லெவலுக்குப் பாடி விட்டு சீரியலில் வீட்டின் மூலையில் உட்கார்ந்து கொண்டு மூக்கைச் சிந்திக் கொண்டிருப்பது வேறு விஷயம்)
அடுத்தது "காமெடியன்கள்' ....ஓகே இவர்களை விட்டு விடலாம் பாவம்...
(சிரிப்பதற்கு Logic பார்க்க வேண்டாம் என்பதால் அவர்கள் சொல்லும்
'இப்பவே கண்ணக் கட்டுதே' ' கெளம்பிட்டாய்ங்க' போன்றவை நன்றாகவே உள்ளன...Keep it up .. )
தமிழன் 'மூவாயிரம்' ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் எழுதி விட்டான், மனிதன் குரங்காக இருந்து விட்டு வால் அறுந்து 'மனுஷப்'
பயலாக மாறிய அடுத்த நாளே 'நாலடியார்' எழுத ஆரம்பித்து விட்டான் என்று
முழங்கும் அரசியல் வாதிகள் பேச்சைக் குறைத்துக் கொண்டு
கீழ்க்கண்ட விசயங்களை தமிழ்த் திரைப் படங்களில் தடை செய்ய உத்தரவு போட வேண்டும்(போர்க் கால அடிப்படையில்)
* "நான் அடிச்சா தாங்க மாட்ட , நாலு மாசம் டாய்லெட் போக மாட்ட" போன்ற பன்ச் டையலாக்குகள்
* எம் பேரு "சாமி' பக்கத்து வீட்ல 'மாமி ' என்றெல்லாம் (மொக்கை எதுகை மோனைகளுடன்) தன்னைத் தானே
அறிமுகம் செய்து உயர்த்திக் கொண்டு பாடும் டைட்டில் சாங்குகள்
* கதைக்கு சம்பந்தமே இல்லாமல் லாரிகள் மேலேயும் ரயில் மேலேயும் கும்பலாக நின்று கொண்டு ஆண் குரலில் பெண் பாடகிகள் பாடும் 'கரடி வந்தால் என்ன செய்வ , கரப்பாம் பூச்சி வந்தால் என்ன செய்வ" ? என்று கேட்கும் பாட்டுக்கள்..
* கிருஷ்ண பரமாத்மா வாய் திறந்து அகில உலகங்களும் காட்டியது போல
க்ளோசப்பில் வாய் பிளந்து 'வாஆஆஅ டாஆஆஆ' என்று வில்லன்கள்
கத்தும் காட்சிகள் (அகில உலகங்களாவது? வாயில் உள்ள சொத்தைபல் தான் தெளிவாகத் தெரிகிறது) (இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு அழும் குழந்தைகளை சமாளிப்பது பாவம் தாய்மார்களுக்கு
எவ்ளோ கஷ்டம்?)
* ஞான சூன்யமாக ஹீரோவைக் காட்டி விட்டு ஒரு சமயத்தில் ஹீரோயின் முன்பு ( 'காளி தாசன்' அருள் பெற்றது போல) ஹீரோ
செந்தமிழ்க் கவிதைகளை மூச்சு விடாமல் பாடும் பாடல்கள்...
* கிளைமாக்ஸ் நெருங்கி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக
தேவை இல்லாமல் 'Formula -1 ' ரேஞ்சுக்கு நடக்கும் கார் சேசிங்குகள்
தேவை இல்லாமல் உருட்டப்படும்,எரிக்கப்படும் வாகனங்கள்...
* Not to mention , புவி ஈர்ப்பு விசையை மீறி நடக்கும் சண்டைகள்...
etc
~சமுத்ரா
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கள் எங்கள் நாட்டில் இருக்க தகுதி இல்லாதவர் அதனால், உங்களை நாடு கடத்துகிறோம்.
//M = 70 / 9 .8 kg , A = 9 .8 M /S2 எனவே F = 70N ..70 நியூட்டன் தானே வருகிறது? மேலும் நியூட்டன் மூன்றாவது விதிப்படி ,ஹீரோ 'ஒண்ணரை' டன் விசையுடன் வில்லனை அடித்தால் அதே விசையை ஹீரோவும்
தன் கையில்/உடலில் உணர மாட்டாரா?//
ஏன்சார் இப்படி? படத்துக்கு வசனம் எழுதரவன்லாம் இதெல்லாம் படிச்சிருந்தா அவனும் வேற வேலைக்கு போயிருப்பானே....
F=MA ...ஹீரோ 70kg என்று வைத்துக் கொண்டால்
அப்பா தனுஷ் ? 30 kg , 'ஒண்ணரை' டன் விசையுடன் வில்லனை அடித்தால் ?
தனுஷ் சுக்குநூறாகி விடுவாரா ?
தமிழ்ப்படம் (2010)மற்றும் Superhero Movie (2008)-ல் நீங்கள் சொன்னது போலவே ரசிக்கும்படியும் ஏற்றுக்கொள்ளும்படியும் கூறியிருப்பார்கள்.
தயவுசெய்து,
அணு அண்டம் அறிவியல் - 76,77,78,........,100,.....,150++++ஐ உடனடியாக பதிவிடுங்கள் ஆர்வம் தாங்கமுடியவில்லை.
Post a Comment