
'Inception ' திரைப்படம் சமீபத்தில் பார்த்தேன்.. தியேட்டருக்குப் போவதென்றால் எப்படியும் late ஆகி விடுகிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் காலை 10 மணி காட்சிக்கு எட்டரை மணிக்கே கிளம்ப வேண்டியுள்ளது.. .(முந்தா நாள் ராத்திரி எட்டரைக்கே அல்ல...அந்த நிலைமையும் கூடிய சீக்கிரம் வந்து விடும் என்று நினைக்கிறேன்) எப்படியோ அரக்கப் பறக்க 10:10 மணிக்கு உள்ளே ஓடி வந்து 'அப்பாடா' என்று உட்கார்ந்தால் திரையில் 'கட்டா மிட்டா' படம் ஓடிக் கொண்டிருந்தது.(சே ரொம்ப plan செய்தால் இப்படி தான் ஆகுமோ?)பிறகு ஹால் மாறி 'Inception ' னுக்குப் போய் உட்கார்ந்தால் 20 நிமிட படம் போய் விட்டிருந்தது.. (ஐயோ மொதல்ல இருந்து பாத்தாலே அந்தப் படம் புரியாதே! என்று யாரோ புலம்புவது கேட்கிறது) என்ன செய்வது? கண்ணைக் கறுப்புத் துணி கட்டி காட்டில் விட்டார்ப் போல் இருந்தது.. எப்படியோ சுதாரித்துக் கொண்டு பார்த்ததில் கொஞ்சம் புரிந்தது..
ஆபீசில் சிலர் அந்தப் படத்தை பார்த்து விட்டு வந்து என்னவோ சிக்மண்ட் பிராய்டிடம் சிக்ஸ் years assistant -ஆக இருந்த லெவலுக்கு அலட்டிக் கொண்டார்கள்... நமக்கெலாம் படத்தைப் பார்த்து விட்டு வந்து 'விக்கிபீடியா'வில் ஒரு தரம் படித்தால் தான் படத்தின் கதையே புரிகிறது.. என்ன தான் 'Science fiction ' கதைகளை அவர்கள் அதிக செலவு செய்து வேலை மெனக்கெட்டு திரைப்படமாக எடுத்தாலும் நமக்கு அதனுடன் 'ஒன்றுவது' கஷ்டமாக உள்ளது... (ஒரு தற்காலிக 'excitement ' ஐ மட்டுமே நமக்குத் தருகிறது.."Titanic" படத்தையே 'காதல்' இல்லாவிட்டால் அத்தனை பேர் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்)
ஓகே படத்தின் சாரம் இது தான்: மனவியல் துறையில் வல்லுனர்கள் சிலர் "பிசினஸ்Magnet" ஒருவரை வசப்படுத்தி அவரின் கனவுக்குள் புகுந்து, அவரின் ஆழ் மனதுக்குள் சென்று 'இந்த பிசினஸ் எல்லாம் வேண்டாம்..விட்டு விடு' என்று கட்டளை இடுகிறார்கள்..அவரின் ஆழ் மனம் வரை செல்ல வேண்டும் என்றோ என்னவோ ஒரு கனவு போதாதென்று கனவு, கனவுக்குள் கனவு, கனவுக்குள் கனவுக்குள் கனவு , என்று கனவு உலகங்களில் கூட்டிச் சென்று படம் பார்க்கும் அப்பாவிகள் நாம் படம் பார்ப்பதே கனவா நனவா என்று குழம்பும் படி செய்து விடுகிறார்கள்...
அவர்கள் எடுத்துக் கொண்ட ஒரே லாஜிக் இதுதான்: "நிஜ வாழ்க்கையின் timings மற்றும் கனவின் timings ஒரே மாதிரி இருப்பதில்லை..அதாவது தூங்கும் போது ஒரு 'ஐந்து' நிமிடங்களுக்குக் கனவு காணும் ஒருவர் அந்தக் கனவில் தன் காதலியைச் சந்தித்து , இருவரும் பானி பூரி சாப்பிட்டு,'கண்கள் இரண்டால்...' என்று டூயட்டெல்லாம் பாடி மாதக் கணக்கில் லவ் பண்ணி ,ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு ஏன் அவர்கள் குழந்தை L.K.G போகும் வரை கூட அந்தக் கனவில் காணலாம்...(எல்லாம் அந்த 'ஐந்து' நிமிடங்களில்) [ 'மாயை' பற்றிய ஒரு புராணக் கதை கூட படித்திருக்கிறேன்... அதாவது: கிருஷ்ண பரமாத்மாவும் நாரதரும் ஒரு நீண்ட பாலைவனம் வழியாகப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.. (எதற்கு என்று எனக்குத் தெரியாது...பாலை வனத்திலும் ஒரு நங்கையை நம் கிருஷ்ணர் set -up செய்து விட்டாரோ என்னவோ) அப்போது கிருஷ்ணர் களைத்துப் போய் அப்படியே உட்கார்ந்து விடுகிறார்... 'நாரதா நாரதா, ரொம்ப தாகமாக உள்ளது.. நீ போய் பெப்சியோ,கோக்கோ கிடைக்கிறதா என்று பார்த்து வா' என்று நாரதரை அனுப்புகிறார்... நாரதரும் தண்ணீர் தேடி அலைகிறார்... அப்படியே பாலைவனம் தாண்டி ஊருக்குள் வந்து விடுகிறார்...அங்குள்ள கிணறு ஒன்றில் அழகான பெண் ஒருத்தி நீர் எடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.. "முதன் முதலில் பார்த்தேன் , காதல் வந்தது" கேஸ் ஆகி இருவரும் காதலில் விழுகிறார்கள்.. (கிருஷ்ணர் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும் , தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் அறவே மறந்து விடுகிறார் நாரதர்.. ) இருவரும் கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை குட்டிகளைப் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்....ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள் வெள்ளம் வந்து விடுகிறது... எல்லாரும் அடித்துச் செல்லப் படுகிறார்கள்..நாரதர் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களும் வெள்ளத்தில் சென்று விடுகிறார்கள்..நாரதர் அந்த அதிர்ச்சியில் மயங்கி விடுகிறார்... கண் விழித்துப் பார்கையில் தான் அவருக்குத் தான் கிருஷ்ணருக்காகத் தண்ணீர் தேடி வந்தது நினைவில் வருகிறது...உடனே நீர் எடுத்துக் கொண்டு அந்த இடத்துக்கு ஓடோடிச் சென்று பார்க்கிறார்... கிருஷ்ணர் இன்னமும் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்..."நாரதா ஏன் இவ்வளவு நேரம்? அரை மணி நேரமாகக் காத்திருக்கிறேன், என்கிறார் கிருஷ்ணர்..நாரதரின் குழப்பத்தை உணர்ந்த அவர், மகனே,உன் காலமும் என் காலமும் வேறு...உன்னுடையது மாயை என்னுடையது உண்மை என்கிறார்..(ஐன்ஸ்டீன் சொன்னதை அப்பவே சொல்லி விட்டார் பாருங்கள்...)நாரதர் அப்போது தான் "மாயை" என்றால் என்ன என்பதை உணர்கிறார்]
Ok back to Inception ... கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது...மனிதனுக்குப் புரியாமல் குழப்பும் விஷயங்களில் மரணத்தை அடுத்து வருவது கனவு தான் என்று நினைக்கிறேன்..எனவே பிராய்டு லெவலுக்கு கனவுகளை ஆராயாமல் Inception திரைப் படத்தில் வருவது போல் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா என்று மட்டும் பார்க்கலாம்...
* இன்னொருவர் கனவை அறிவது ( extraction ): நமக்கே நமக்கு என்று பிரத்யேகமாக உள்ள விஷயங்களில் கனவும் ஒன்று...அதையும் அடுத்தவன் பார்த்து விட்டால்? பிரச்சனை தான் (நீங்கள் நமீதாவுடன் கனவில் டான்ஸ் ஆடுவதை உங்கள் மனைவி அறிந்து கொள்ள முடியும்) இப்போதைய மனவியல் வளர்ச்சியின் படி, நீங்கள் கனவில் உளறினால் ஒழிய நீங்கள் என்ன கனவு காண்கிறீர்கள் என்று மற்றவர் அறிய முடியாது..கனவின் போது மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை மின்சாரமாக மாற்றி நீங்கள் எந்த விதமான கனவு( 'இன்பமானதா' 'பயமானதா' 'வேதனையானதா' )காண்கிறீர்கள் என்று வேண்டுமானால் ஊகிக்கலாமே ஒழிய கனவில் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு இருந்தீர்கள் என்றெல்லாம் கூற முடியாது..
* இன்னொருவர் கனவில் நுழைவது : அடுத்தவன் கனவை அறியவே முடியாத போது நுழைவதாவது?
* இன்னொருவர் கனவை தீர்மானிப்பது: நம் கனவையே நாம் தீர்மானிக்க முடியாத போது அடுத்தவன் கனவை எவ்வாறு தீர்மானிப்பது? வெளியிலிருந்து தூண்டுதல்கள் மூலம் சில விஷயங்களை கனவில் உணரும் படி செய்யலாமே தவிர, (உதாரணமாக தூங்கும் போது உங்கள் உள்ளங்காலில் பனிக்கட்டி ஒன்றை வைத்தால் நீங்கள் இமய மலையில் 'ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது' என்று பாடுவதாகக் கனவு வரலாம்.. ) வெளியிலிருந்து சில கெமிக்கல்களைக் கொடுத்து உங்கள் கனவை மணிரத்தினம் போல 'டைரக்ட்' எல்லாம் செய்ய முடியாது...
* கனவுக்குள் கனவு: கனவு என்பதே ஒரு மர்மப் பிரதேசம்.. மேகம் போல ரொம்ப 'Volatile ' கனவு வருவதற்குப் பின்னணியில் நிலையான ஒன்று தேவை...(உண்மை மட்டுமே கனவு காண முடியும்...மாயை அல்ல) மாஜிக்கில் வரும் கோழியை 'சிக்கன் 65 ' செய்ய முயல்வது போலத்தான்..எனவே கனவுக்குள் அதிக பட்சம் நாம் தூங்குவதாக வேண்டுமானாலும் வரலாம்.. கனவுக்குள் ஒரு கனவு வரும் அளவு,அந்த முதல் கனவு ஸ்திரமானது அல்ல...
*கனவின் மூலம் அடுத்தவருக்கு உத்தரவிடுவது: இதற்கு அவரை ஹிப்னாடிசம் செய்து அவரின் ஆழ் மனதிற்குக் கட்டளையிட்டு விடலாமே? எதற்கு கனவில் எல்லாம் புகுந்து கஷ்டப் பட வேண்டும்?
"நினைவு எங்கோ நீந்திச் செல்ல
கனவு வந்து கண்ணைக் கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே..." -உயிரின் உயிரே(காக்க காக்க)
இந்தப் பாடல் காதலின் அனுபவத்தை விளக்கும் படி எழுதப் பட்டிருந்தாலும் இதைக் கேட்கும் போதல்லாம் எனக்கு ஒருவித தியான அனுபவம் வருகிறது... தனக்குள் ஆழ்ந்து சென்று தியானிக்கும் ஒரு சாதகனின் ஆரம்ப கட்ட அனுபவங்களை விளக்குவது போல் இந்தப் பாடல் உள்ளது...இதை எழுதியவருக்கும் , இசை அமைத்தவருக்கும், பாடியவருக்கும் நன்றிகள்...
~சமுத்ரா
3 comments:
//இன்னொருவர் கனவை அறிவது//
//இன்னொருவர் கனவில் நுழைவது//
//இன்னொருவர் கனவை தீர்மானிப்பது//
சாத்தியம் என்று தான் நினைக்கிறேன்.. தற்போது மூளையிலிருந்து வெளிப்படும் அலைகள் மூலமாக ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் பின்கழுத்தின்(தண்டுவடத்தின்)மேல் லேசர் உணர்வு கருவிகளை பொருத்தி, ஒருவரது மூளையிலிருந்து கடத்தப்படும் சமிக்ஞைகளை அறியவோ அல்லது மாற்றவோ முடியுமாக இருக்கலாம் அல்லவா?
இன்றே, கனவுகளை ரெகார்ட் செய்யும் எலக்ட்ரானிக் அருவியை கண்டுபிடித்துவிட்டார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆர்த்தர் சி. கிளார்க் செய்மதிகள் பற்றிய யோசனையை முன்வைத்தபோது இப்படிதான் எல்லாரும் கிண்டல் செய்தார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
"நிஜ வாழ்க்கையின் timings மற்றும் கனவின் timings ஒரே மாதிரி இருப்பதில்லை..
அர்ஜுனனின் இந்திரலோக வாழ்கையின் ஒருநாள் , பூமியின் ஒரு வருடம் , பிரம்மாவின் ஒரு நாள் , மனிதனுக்கு ஒரு யுகம் , ......
அப்ப மனித வாழ்கையே கனவு / மாயை ?
லாஜிக் ஒத்து வரும் போல இருக்கே
//இன்னொருவர் கனவை அறிவது// //இன்னொருவர் கனவில் நுழைவது// //இன்னொருவர் கனவை தீர்மானிப்பது// சாத்தியம் என்று தான் நினைக்கிறேன்.. தற்போது மூளையிலிருந்து வெளிப்படும் அலைகள் மூலமாக ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் பின்கழுத்தின்(தண்டுவடத்தின்)மேல் லேசர் உணர்வு கருவிகளை பொருத்தி, ஒருவரது மூளையிலிருந்து கடத்தப்படும் சமிக்ஞைகளை அறியவோ அல்லது மாற்றவோ முடியுமாக இருக்கலாம் அல்லவா? இன்றே, கனவுகளை ரெகார்ட் செய்யும் எலக்ட்ரானிக் அருவியை கண்டுபிடித்துவிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆர்த்தர் சி. கிளார்க் செய்மதிகள் பற்றிய யோசனையை முன்வைத்தபோது இப்படிதான் எல்லாரும் கிண்டல் செய்தார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
Post a Comment