இந்த வலையில் தேடவும்

Friday, August 20, 2010

எங்கே எதுகை???

ஸ்கூலில் ' எதுகை மோனை ' பற்றியெல்லாம் படிக்காதவர்களுக்கு ஓர் எளிய அறிமுகம்:

கீழ்க்கண்ட கவிதையைப் படிக்கவும்:

குப்பு சாமி எம் மவனே
தப்புத் தண்டா பண்ணாதே
அப்பா சட்டைப் பைலேர்ந்து
டப்பு திருடித் தின்னாதே!

முரட்டுப் பயக கூட சேந்து
சுருட்டுப் பத்த வெக்காதே
திருட்டுப் பயக சோடி சேந்து
இருட்டுனப்பறம் சுத்தாதே !

மாடா உழச்சு வர்றவரை
வாடா போடா என்காதே
பீடாக் கடை வாசலில் நின்னு
ஏடா கூடமாய் பேசாதே!

கலெக்டராக வராட்டியும்
களவாணியாய் வராதே
ஆபீசராய் ஆகாட்டியும்
அன்னக்காவடி ஆகாதே!


(இந்தக் 'கவிதையை' எழுதினது யார் என்று கூகுளில் எல்லாம் தேடவேண்டாம் ப்ளீஸ்)


இரண்டு சொற்களுக்கு முதல் எழுத்து வேறாக இருந்து இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி இருந்தால் அது 'எதுகை' ...அதாவது மேற்கண்ட கவிதையில் குப்பு' 'தப்பு' 'டப்பு' என்பவையெல்லாம் எதுகைகள்....(வேற உதாரணமே கிடைக்கலையா?) ' என்ன பண்றது, எதுகையைப் பற்றி விளக்க நான் பாட்டுக்கு

"அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ,
முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல்"
என்றெல்லாம் உதாரணம் காட்டினால் அடிக்க வருவீர்கள்...எனவே ஒரு சொந்தக் கவிதையை எடுத்து விட்டேன் ....

முதல் எழுத்து வேறாக இருந்து அதன் பின் எத்தனை எழுத்துக்கள் ஒன்றாக வருகின்றனவோ அந்த அளவு 'எதுகை' அழகாக இருக்கும்...

உதாரணமாக

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு...

என்ற திருக்குறளில் 'அகர' மற்றும் 'பகவன்' என்பவை எதுகைகள்... இதற்குப் பதிலாக வள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஓகே ஓகே
ஃபிகர கரெக்ட் பண்ணு ஃபஸ்டு...


என்று ஏடாகூடமாக எழுதினால் தான் full எதுகை வரும்....ஆனால் கீழ்க்கண்டபாட்டைப் பாருங்கள்



இரண்டு புலவர்கள்; நண்பர்கள்; ஒருவர் நொண்டி ;இன்னொருவர் குருடு..வறுமை வேறு !(great combination ! என்கிறீர்களா?)

அப்படியே கால்நடையாகப் போய் ஏதாவது ராஜாவைப் பார்த்துப் பாட்டுப் பாடிகாசு வாங்கி வரலாம் என்று இருவரும் புறப்படுகிறார்கள்....

குருடர் முடவரைச் சுமந்து கொள்ள ,முடவர் குருடருக்கு வழிசொல்லுவார்....வழியில் ஒரு சிறு நதி வருகிறது....இருவரும் அதில் இறங்கி குளித்து விட்டு , தங்கள் (ஒரே) துணியை துவைக்கிறார்கள்.... குருடர் ஏற்கனவே கிழிந்து போய் இருந்த தம் ஆடையை நன்றாக Surf excel எல்லாம்போட்டு தேய் தேய் என்று தேய்க்கிறார் ... அப்போது அது மேலும் கிழிந்து ஆறோடு ஆறாகப் போய் விடுகிறது.... இதைப் பார்த்துக் கொண்டிருந்தமுடவர் பாடுகிறார்...


அப்பிலே தேய்த்தெடுத்து அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?
(தோ பாருப்பா ராஜா முன்னாண்ட 'பளீச்சு' ன்னு போனுங்காண்டி இருந்த ஒத்தக் கைலியையும் தேச்சுச் தேச்சு ஆத்தோட உட்டுட்ட யேப்பா? படா பேஜாரா கீது)

குருடர் ஒரு 'மோனாலிசா' டைப் புன்னகையை உதிர்த்து விட்டு மீதிப்பாட்டைப் பாடுகிறார்...


செப்பக்கேள்

இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை....
(அய்யே லூசுல உடு தோஸ்து! கைலி தான எஸ்கேப் ஆச்சு? நம்மாண்ட அந்தமுனியாண்டி சாமி 'அருளு' கீதல்ல, அது காப்பாத்திக்கும்...நட ஜோலியப்பாக்கலாம்....) (வறுமையில் செம்மை என்பது இது தானா????)


இந்தக் கதையை எதற்காகக் ' கஷ்டப் பட்டு ' சொன்னேன் என்றால்இந்தப்பாட்டில் வரும் இக்கலிங்கம்
மற்றும் சொக்கலிங்கம் என்பவை perfect எதுகைகள்.....(முதல் எழுத்தைத்தவிரஅனைத்து எழுத்துக்களும் ஒன்றி வருவதால்)


ஓகே இப்போதெல்லாம் 'எதுகை'யைப் பார்ப்பது அரிதாகி வருகிறது...
புதுக் கவிதைகளில் உரை நடையையே பிய்த்துப் பிய்த்து ஏழெட்டு வரிகளில்எழுதி விட்டு 'கவிதை' என்கிறார்கள்.... எதுகை மோனை எல்லாம்வந்தால் எங்கே நம்மை 'பழைய' கேஸ், கர்நாடகம் என்றெல்லாம் சொல்லி விடுவார்களோ என்றுபயப்படுகிறார்களோ என்னவோ! மேலும் புதுக்கவிதைகளில் எதுகை மோனை வந்தால் அதன் கருத்து கொஞ்சம் குறைந்துதான் விடுகிறது... உதாரணமாக பொன். சுதா அவர்களின் ஒரு ஹைக்கூ :


என்
குழந்தை
உறங்கும் போது தான் தெரிகிறது
உலகம்
எத்தனை
என்று....
இரைச்சலானது என்று.....


இதில் வழ வழ கொள கொள என்று 'எதுகை' 'மோனை' எல்லாம் எங்கே சேர்ப்பது? எதுகையெல்லாம் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்றால் சொல்ல வந்த கருத்தில் 'சொதப்பல்' ஏற்பட்டு விடுகிறது.... அதாவது நாம் நினைக்கும் கருத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தால் அந்த சொல் 'எதுகை' க் குப் பொருந்துவதில்லை.... ஒரு perfect எதுகையைத் தேர்ந்தெடுத்தால் கருத்தில் குறைபாடு ஏற்படுகிறது....

இப்போது நாம் ஆங்கிலத்தில் வருவது போல 'Rhythm' அதாவது 'கடை எதுகை' யை கொஞ்சம் பயன்படுத்துகிறோம்....

.தா.

நந்த வனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி !


(என்னடா ஆண்டி , போண்டி என்றெல்லாம் வருகிறதே என்று எண்ண வேண்டாம்... இது ஓர் அற்புதமான தத்துவப் பாடல்.... அர்த்தம் தெரியாதவர்கள் உங்கள் பாட்டியைக் கேட்கவும்...)


சினிமா பாடல்களிலும் பல்லவியின் முதல் அடியும் அனு பல்லவியின் முதல்அடியும் 'எதுகை'யாக வர வேண்டும் என்ற
'கர்நாடக' விதிமுறையை எப்போதோ விட்டு விட்டோம் என்று தோன்றுகிறது....

சில அதரப் பழசான பாடல்களில் தான் இந்த விதி எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதி இருக்கிறார்கள்...


. தா

()
சிந்தனை செய் மனமே!- செய்தால்
தீவினை அகன்றிடுமே !! -சிவகாமி மகனை சண்முகனை


(. )

அந்தகன் வரும் போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே அரு மறை பரவிய சரவண பவ குகனை...


இதில் சிந்தனை, அந்தகன் மற்றும் மகனை, முகனை, வினை, துணை, குகனை என்பவை எல்லாம் பாட்டுக்கு அழகு சேர்க்கும் 'எதுகை' அணிகள்....

இப்போதைய சினிமாப் பாட்டுக்களில் இந்த மாதிரி எல்லாம் விட்டு விட்டு இங்கிலீஷ் போயம் லெவலுக்கு ரிதம் எல்லாம் வைத்து

'கண்ணும் கண்ணும் நோக்கியா
கொள்ளை கொள்ளும் மாஃபியா'

என்றெலாம் எழுதிக் கொண்டு இருக்கிறோம்....


எது எப்படியோ

யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப................



என்று கம்பீரமாகப் பாடிய இளங்கோவடிகளின் தமிழை

'நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட'


என்ற ரேஞ்சுக்கு கொண்டு வந்து இருக்கிறோம்... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?


~சமுத்ரா




1 comment:

Aba said...

ஆங்கிலக் கவிதைகளிலும் பலவற்றில் ரிதம் வருவதில்லை. கேட்டால் வேண்டுமென்றே கவிஞர் அவ்வணியினை (Regular rhyming Technique) பயன்படுத்தவில்லை என காரணங்களை அடுக்குகிறார்கள்.