இந்த வலையில் தேடவும்

Thursday, February 3, 2011

வரது மாமாவின் கச்சேரி (சிறுகதை)

வரது மாமா திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார்.

தெருவில் சந்தானம் அய்யங்கார் வந்து கொண்டிருந்தார்... அவர் வரது மாமா வீட்டுக்கு தான் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து " என்ன மாமா, இந்த பங்குனி வெய்யில்ல நடந்து வர்றேள், போஜனம் ஆச்சா? சொல்லி விட்டிருந்தா நானே வந்திருப்பேனே? கையில் என்ன? வேலை செய்யலையா?" என்றார் வரது மாமா...

அவர் கேட்ட நாலைந்து கேள்விகளில் கடைசிக் கேள்விக்கு மட்டும் அய்யங்கார் பதிலளித்தார்.கையில் ஒரு டேபிள் ஃபேன் இருந்தது.. அவ்வளவு பெரிய சரீரம் ஃபேனைத் தூக்கிக் கொண்டு வந்ததால் அவருக்கு மூச்சு வாங்கியது : "ஆமாம் வரது..சுவிட்சைப் போட்டால் 'கொய்'ன்னு ஒரு சத்தம் வர்றது..ஓட மாட்டேங்கறது..இது இல்லாம இந்த வெய்யக் காலத்துல தூங்கவே முடியலை..கொஞ்சம் சீக்கிரமாப் பாரு " என்றார்

"வைச்சுட்டுப் போங்க மாமா.பாத்து வெக்கறேன்..ரேடியோ வேற ரெண்டு மூணு இருக்கு.ரெண்டு நாளைக்குள்ள பாத்துர்றேன் " என்றார் வரது மாமா.

என்ன? ஓ வரது மாமாவைப் பத்திக் கேட்கறேளா? சொல்றேன்..அவர் கல்யாணமே பண்ணிக்கலை..ஏன் என்றெல்லாம் தெரியாது..அவருக்கு வயசான சித்தி ஒருத்தி இருக்கா..அவ வீட்ல தான் தங்கியிருக்கார் மாமா.அவ பேரு பங்கஜம் பாட்டி..புருஷன் இல்லை...பிள்ளைகளும் விட்டுப் போயிட்டா. வரது மாமா தான் கடைசி காலத்துல அவளைப் பார்த்துக்கறார்..பங்கஜம் பாட்டிக்கு கொஞ்சம் பென்ஷன் வர்றது..அதெல்லாம் இப்ப விக்கற விலைவாசிக்கு எம்மூலை செம்மண்ணு சொல்லுங்கள்? வரது மாமாவுக்கு தெரிஞ்சதெல்லாம் நிறைய சங்கீதமும் அரை-குறை எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக் வேலைகளும் தான்..முன்னது சோறு போடவில்லை..மனசுக்கு மட்டுமே சோறு போட்டது..இந்தக் காலத்துல பக்தியா பகவானை உருகிப் பாடுறவா எல்லாம் முன்னுக்கு வர முடியறதில்லை பாருங்கோ..சும்மா பகட்டு காட்டிக்கிட்டு, எல்லாரையும் தாஜா பண்ணிக்கிட்டு, எதையோ அரைகுறையா கத்தறவா எல்லாம் சங்கீத கலாநிதி வாங்கிண்டு ஃபாரின் எல்லாம் போறா..புரந்தர தாசர் "ஸ்ரீ காந்த எனகிஸ்டு" ல சொல்ற மாதிரி "பணத்துக்காக புகழுக்காக செல்வந்தர் வீட்டுக் கடைவாசலில் கைகட்டி நின்னுக்கிட்டு"...

யார் என்ன வேலை கொடுத்தாலும் தயங்காம செய்வார் வரது மாமா..ரொம்ப அப்பாவி..எத்தனை ரூபா கொடுத்தாலும் முகம் கோணாம வாங்கிக்குவார்..பீஸ் போயிருச்சுன்னா அக்ரகாரத்துல முதலில் ஞாபகம் வர்றது வரது மாமா தான்..மிக்சி, ஃபேன், ரேடியோ, சில சமயத்துல டி.வி. கூட ரிப்பேர் பண்ணுவார்..சங்கீதத்துல நல்ல ஞானம்..சின்ன வயசுல தஞ்சாவூர் பாகவதர் வீட்ல இவர் அம்மா சமையல் வேலை செய்தாங்களாம்..இவரும் டெய்லி அம்மா கூடப் போயி கேள்வி ஞானத்துலையே சங்கீதம் கத்துக்கிட்டார்..பாகவதர் கிட்ட சங்கீதம் படிக்க குரு தட்சிணை ரொம்ப ஜாஸ்தின்னு சொல்லுவா..பாவம் சமையல் காரிக்கு எப்படி கட்டும்? வரது மாமாவுக்கு படிப்பு ஒண்ணும் பெருசா ஏறலை..இவர் சிநேகிதன் பட்டாபி டவுனுல ஒரு ரேடியோ கடை வச்சிருந்தான்...அங்க தான் இந்த ரிப்பேர் வேலை எல்லாம் கத்துக்கிட்டார்..அது தான் இப்ப அவருக்கு சோறு போடறது

சரி அவர் புராணம் போதும்..இதுக்கு மேல சொல்றதுக்கும் அவர் வாழ்க்கைல எதுவும் இல்லை..ஒரு விஷயம்..அவர் முழுப்பேரு வரதராஜன்.கொழந்தை பொறந்து புண்யார்ச்சனை பண்றப்ப மூணு தடவை வரதராஜன்னு சொன்னதோட சரி..அதுக்கு அப்பறம் எப்பவுமே அவர் பேரு "வரது" தான்...

வரது மாமா மறுபடியும் ரேடியோவைக் குடைய ஆரம்பித்தார்.. ஒரு கம்பியை எடுத்து ஏதோ இரண்டு இடங்களுக்கு இடையே ஓட்ட வைத்து சால்டரிங் பண்ண ஆரம்பித்தார்..அவருக்கு ஓம்ஸ் லா எல்லாம் தெரியாட்டியும் எங்க எதை ஓட்ட வைத்தால் எது வேலை செய்யும்கற விஷய ஞானம் இருந்தது...அது போறுமே? அப்போது நிமிர்ந்து பார்த்தால் முன்னால் கிருஷ்ணமூர்த்தி மாமா நின்று கொண்டிருந்தார் ..கையில் தூக்கமுடியாமல் இரண்டு பைகள்..மாமா யாருன்னு கேட்கறேளா? அவர் எங்க கிராமத்துல இருக்கற யோக நரசிம்மர் கோவில் கமிட்டி மெம்பெர்...

மறுபடியும் வரது மாமா "வாங்க மாமா...பையை அப்படி வையுங்கோ.. இந்த பங்குனி வெய்யில்ல...."

"ஒண்ணும் இல்லை வரது..டவுனுக்குப் போயிட்டு சாமானெல்லாம் வாங்கிட்டு வரேன்...அதான் அப்படியே வர்றேன்..இந்த வருஷம் நம்ம நரசிம்ம ஜெயந்தி பொறுப்பெல்லாம் என்கிட்ட தான் ஒப்படச்சிருக்கா..நீ தான் நல்ல பாடுவியே, இந்த வருஷம் உன் கச்சேரி ஒண்ணு அப்படியே ஏற்பாடு பண்ணலாம்னு ஒரு யோசனை " என்றார்

வரது மாமாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..வருஷா வருஷம் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி நடக்கிறது..ஒரு தடவை கூட யாரும் இவரை கச்சேரி செய் என்று ஹாஸ்யமாகக் கூடச் சொன்னதில்லை..பந்தியில் இலை போடுவது, உப்பு, தண்ணீர் பரிமாறுவது, வெளியூர்க் காரர்களை தங்க வைத்துக் கவனித்துக் கொள்வது போன்ற வேலைகளைத்தான் வருஷா வருஷம் இவர் செய்வார்..ராத்திரி நடக்கும் பஜனைகளில் ஏதோ ஓரிரு பாடல்களைப் பாடுவார் அவ்வளவு தான்..இந்த வருஷம் கிருஷ்ண மூர்த்தி மாமா பொறுப்பு எடுத்திருக்கிறார்..அவர் கொஞ்சம் சங்கீத ரசனை உள்ள மனிதர்..அதிர்ந்து பேசத் தெரியாத நல்ல மனிதர்..அதனால் தான் வரது மாமாவுக்கு கச்சேரி சான்ஸ் கொடுக்கிறார்..

"கச்சேரியா? அதெல்லாம் எதுக்கு மாமா" என்றார் உள்ளே ஆசை இருந்தாலும்

இருக்கட்டும்..நம்ம ஊர்க்காராளை நாமே மதிக்கலைன்னா எப்படி ?"

"அதில்லை மாமா..கச்சேரின்னா பக்க வாத்தியம் எல்லாம் வேணுமே?"

"அதெல்லாம் நீயே எப்படியோ ஏற்பாடு பண்ணிண்டுடு வரது..எனக்கு இருக்கற வேலைகள்ல அதையும் பார்க்க முடியாது"

கிருஷ்ண மூர்த்தி மாமா விடைப் பெற்றுப் புறப்பட்டதும் உடனே வரது மாமாவுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டு விட்டது. உடனே போட்டது போட்ட படி உள்ளே போய் தூங்கிக் கொண்டிருந்த சித்தியை எழுப்பி விஷயத்தை சொன்னார்..நரசிம்ம ஜெயந்திக்கு இன்னும் பத்து நாள் தான் இருந்தது..அதற்குள் பக்க வாத்தியத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமே என்ற கவலை அவருக்கு

ரெண்டு தெரு தள்ளி அவருடன் கூடப்படித்த சிநேகிதன் பாலாஜி இருக்கிறான்..ஓரளவு வயலின் வாசிப்பான்..அவனை எப்படியாவது கேட்டுக் கொண்டால் வாசிப்பான் ..மிருதங்கம் தான் நம் அம்புஜம் மாமி பேரன் கத்துக்கரானே? அட தாளம்லாம் வாசிக்கறானாமே? அவனை எப்படியாது கூட்டி வந்து விடுவது என்று ஒரு மனதாக ஒரு முடிவுக்கு வந்தார்...

ரெண்டு நாளாக ரேடியோ ரிப்பேர் எல்லாம் மறந்து விட்டார்..சில பாடல்களை எப்போதும் முணுமுணுக்க ஆரம்பித்தார்..சந்தானம் அய்யங்கார் கூட வந்து ஃபேன் இன்னும் ரிப்பேர் ஆகவில்லை என்று கடிந்து கொண்டார்..

வரது மாமாவுக்கு நினைவில் இருந்ததெல்லாம் "கச்சேரி, கச்சேரி, கச்சேரி"

அவர் இது வரை மேடை ஏறி
ப் பாடியதெல்லாம் இல்லை...இது தான் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது

வரது மாமா டவுனுக்குப் போய் 'ஓடு ஒழுகுகிறது ,ரிப்பேருக்காக' என்று எடுத்து வைத்திருந்த ரூபாயில் ஒரு நல்ல வேட்டி, வெள்ளை சட்டை , அங்க வஸ்திரம் இவற்றை எல்லாம் வாங்கி வந்து விட்டார்...சித்தியிடம் இன்னும் சொல்லவில்லை..

வரது மாமாவுக்கு சங்கீதத்தில் தோழி என்றால் கோடி வீட்டில் இருக்கும் துளசிப் பாட்டி தான்..சங்கீதத்தில் என்ன சந்தேகம் என்றாலும் அவளிடம் தான் போவார்..சில சமயங்களில் இரண்டு பேரும் மணிக்கணக்காகப் பேசிக் கொண்டு இருப்பார்கள்..'மாமி முகாரி கரகரப்ரியா ஜன்யம், பைரவி நடபைரவி ஜன்யம் ,அப்புறம் எப்படி ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு?' 'யதுகுல காம்போதீல த்யாகராஜர் க்ருதி என்ன இருக்கு? நேத்து பூரா யோசிச்சும் ஞாபகம் வரலையே?' என்றெல்லாம்...

சரி வரது ..கச்சேரில என்ன பாடப்போற?

"இன்னும் யோசிக்கலை மாமி"

"ஒரு வர்ணம், அப்பறம் விநாயகர் மேலே ஏதாவது பாடிட்டு, அப்பறம் ரெண்டு கிருதி பாடிடு
அப்பறம் ஒரு பிரதான ராகம் பாடிட்டு கடசில மத்யமாவதியோ, சுருட்டியோ பாடி முடிச்சுடு போதும்"

"வர்ணம் எது பாடறது மாமி?" விரிபோனி முயற்சி பண்ணட்டா?

"அதுக்கெல்லாம் பக்க வாத்தியம் பக்காவா இருக்கணும்..அட தாளம் வேற...பேசாம "சாமி நின்னே" பாடிரு

"என்ன மாமி மொதல்ல எடுத்ததுமே ஸ்ரீ ராகம் எப்படி பாடறது?"

"ஒ அதை மறந்தே போயிட்டேன் பாரு..அப்படின்னா ஆபோகில எவரி போதன பாடிடு"

"சரி மாமி, மெயின் ராகம் என்ன பாடறது"

'கல்யாணி'?

'ஐயோ,,அது ஜொய்யுன்னு வாழை இலை மேல மழை பெய்யற மாதிரி இருக்கும்'

"அப்படின்னா கம்பீரமா கேதார கௌளை பாடிடு"

"என்ன மாமி என் குரல் நல்லா இருக்கறது உங்களுக்குப் புடிக்கலையா, அதையெல்லாம் மூச்சை அடக்கிப் பாடணும்"

இப்படியாக விவாதம் நீண்டுகொண்டே போய் கடைசியில் மெயின் ராகமாக பந்துவராளி பாடிவிட்டு 'அப்ப ராம பக்தி' பாடுவதாக முடிவானது

"அப்புறம் வரது,, மறக்காம பிலஹரி ராகம் பாடு,,,அது நரசிம்மருக்கு உகந்த ராகம்"

"சரி மாமி"

வரது மாமா எல்லார் வீட்டுக்கும் போய் நரசிம்ம ஜெயந்தி ரெண்டாம் நாள் தன் கச்சேரி இருப்பதாக பத்திரிக்கை வைக்காத குறையாக சொல்லி விட்டு வந்தார்..

அவர் சித்தி சொன்னாள்: வரது ரெண்டாம் நாள் தஞ்சாவூர்ல இருந்து அந்த வாழத் தோட்டம் சுப்புராவ் வந்தாலும் வருவாராம்..அவர் தான் சபாவுல கார்யதரிசியா இருக்காராமே? உன் பாட்டக் கேட்டுட்டு உனக்கு சான்ஸ் கொடுத்தாலும் கொடுப்பார்...வரது நமக்கு நல்ல காலம் ஆரம்பமாயிட்டது டா.." என்றாள்


நரசிம்ம ஜெயந்தி வந்தது...அந்த விழா இங்கே மிகவும் பிரசித்தி என்பதால் கூட்டம் முதல் நாளே அலை மோதியது..கிருஷ்ண மூர்த்தி மாமாவைக் கண்ணிலேயே காண முடியவில்லை..மூணு நாள் விழா நடத்துவது என்றால் சும்மாவா? வசூல் பண்ண வேண்டும்..வரவு செலவுக் கணக்கு, சமையல் காரர்களை ஏற்பாடு செய்வது, சாமான் வாங்கிப் போடுவது, கோயில் சத்திரத்தில் வெளியூர் காரார்கள் தங்க ஏற்பாடு செய்வது, மைக் செட் என்றெல்லாம்..ஒரு கல்யாணம் போல..

முதல் நாள் விழா முடிவடைந்தது...கோவிலில் ரெண்டு வேளை சாப்பாடு..ராத்திரி பத்து மணிக்கு மேல் கிருஷ்ணமூர்த்தி மாமா வரதுமாமா வீட்டுக்கு வந்தார்..

"ச்சே, என்ன மனசங்கப்பா , சுவாமி கும்பிட வர்றாளா இல்லை சாப்பாட்டுக்கு வர்றாளான்னே தெரியலை..சாதம் கொளஞ்சு போச்சுன்னு புகார்..மொதல் பந்தியே ரெண்டரை மணி ஆச்சுன்னு ஒரு புகார்..சத்திரத்துல தண்ணி வரலைன்னு ஒரு புகார்..ஐநூறு ரூபாய் கொடுத்தேன்..அர்ச்சனை பண்ணலைன்னு ஒரு புகார்..போதும்டா சாமி..இந்த மனுசங்களுக்கு மத்தியில் எப்படி அந்த நரசிம்மர் யோகம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கார்னு தெரியலை" என்றார்

அப்புறம் வரது, உன் கச்சேரிய கடைசி நாள் வச்சுக்கலாமா ?, ஆட்சேபனை இல்லையே? நாளைக்கு காலைல லட்சார்ச்சனை..அதுக்கே ஒரு மணி ஆயிரும்..சாயங்காலம் அஹோபில சுவாமிகளை நம்ம அனந்து அழைச்சிட்டு வரப்போறாராம்..அவர் ஏதோ உபன்யாசம் கொடுக்கப் போறாராம்..நடு நாள்னா என்ன? கடைசி நாள்னா என்ன? சரி தானே? வருத்தம் இல்லையே ? என்றார்

வரது மாமா சரி என்றார்..ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆறுதலாக இருந்தது..நடு நாளுக்கு பயங்கர கூட்டம் வரும்..கடைசி நாள் என்றால் தேவலாம்..கொஞ்சம் ஆசுவாசமாய்ப் பாடலாம்

நடு நாள் நரசிம்ம ஜெயந்திக்கு கிராமமே அல்லோலகல்லோலப் பட்டது..எங்கு பார்த்தாலும் ஜனங்கள்..காவேரிக்காகவே வரும் ஜனங்கள் சிலர் ..ராத்திரி போடும் கத்திரிக்காய் தொக்குக்காகவே வருவார்கள் சிலர் .. வருஷா வருஷம் வருகிறோமே, இந்த வருஷம் தவறிப் போய் விடக்கூடாதே என்று வருவார்கள் சிலர் ..வெகு சிலர் நரசிம்மருக்காக வருவார்கள்..ஒரு ரயில்வே பிளாட்பாரத்தைப் போல விதம் விதமான மனிதர்களை அப்போது பார்க்கலாம் ..கோயிலைச் சுற்றி அமைதியாக எதையோ மந்திரம் போல முணுமுணுத்துக் கொண்டு வலம் வருபவர்கள்..அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை அடக்கி அமர வைக்கும் அம்மாக்கள், அப்பாக்கள்...தலைக்கு முக்காடு போட்ட மடிப் பெண்மணிகள்..ராக்கெட் விடும் லெவலுக்கு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள்...ஒரு மூலையில் அமர்ந்து சகஸ்ர நாமம் படிப்பவர்கள்..'இந்த சேலை எப்ப வாங்குனே? பார்டர் நல்லா இருக்கே ''கோமதி மகளுக்கு வரன் அமைஞ்சுதா?' என்று பகவத் விஷயத்தை விட்டு விட்டு வேறு எல்லாவற்றையும் பேசும் பெண்கள், யாரைப் பற்றியும் கவலைப் படாமல் ஒரு கோஷ்டியாக பஜனை செய்பவர்கள், இலை போட்டாகி விட்டதா என்று அவ்வப்போது எட்டிப் பார்க்கும் உள்ளூர்க் காரர்கள்...

அன்றும் சில சின்னச் சின்ன டென்ஷன்கள்,சண்டைகள்..சமையல் அறையில் யாரோ சட்டை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டார் என்ற கலவரம்..வாழை இலை போரவில்லை என்று ஒரு கலவரம்..எல்லாம் முடிந்து முதல் பந்தி முடியவே மூனரை மணி ஆகி விட்டது..

சுவாமிகளின் பக்தி உரையுடன் இரண்டாம் நாளும் முடிந்தது...

கடைசி நாள் காலை நான்கு மணிக்கெலாம் வரது மாமா எழுந்து கொண்டு விட்டார்..கொஞ்சம் பதற்றமாகக் காணப்பட்டார்...காலை பதினொரு மணி சுமாருக்கு கச்சேரி இருந்தது..
முந்தா நாளே பாலாஜியிடம் போய் ஒத்திகை பார்த்து வந்திருந்தார்...நேற்று வரை வருவதாகத் தான் ஒப்புக் கொண்டிருந்தான்...பத்து மணிக்கு கோவிலுக்கு வந்து விடுவான்...
வரது மாமா ஐந்து மணிக்கே காவேரிக் கரைக்குப் போய்க் குளித்து வந்தார்..கோடைக்காலம் ஆனாலும் காலைக் குளிரில் உடம்பு உதறியது..வயசாச்சுல்ல என்று எண்ணிக் கொண்டார்..."கபி வாரிதி தாட்டுனா" என்ற வரியை மனதில் ஆயிரம் தடவை நிரவல் செய்தார்..

பதினொரு மணிக்கு வரது மாமாவுக்கு இன்னொரு ஏமாற்றம் காத்திருந்தது..தஞ்சாவூரில் இருந்து பிரபல உபன்யாசகர் மைதிலி ராஜகோபாலன் திடீரென்று வந்திருக்கிறாராம்..எல்லாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இரண்டு மணி நேரம் "பிரகலாத பக்தி விஜயம்" என்ற தலைப்பில் பேசுகிறாராம்..கிருஷ்ண மூர்த்தி மாமாவைக் காணவே இல்லை..வரது மாமா அப்படியே உபன்யாசம் கேட்க உட்கார்ந்து விட்டார்..நடுவே கி.மு. மாமா ஒரே ஒரு தரம் தலையைக் காட்டி "வரது, சாயங்காலம் ஆறு மணிக்கு கண்டிப்பா உன் கச்சேரி, ரெடியா வந்துரு " என்று கூறி மறைந்தார்

தீர்த்தப் பிரசாதம் சாப்பிட்டு விட்டு வரது மாமா கோவிலிலேயே இருந்தார்..."இந்த வரதுவுக்கு இந்த வருஷம் என்ன வந்துது? ஒரு வேலை செய்யலை...நேத்தைக்கு பந்தில ஜலம் கூடப் பரிமாறலையே,என்ன ஒரு மாதிரி மிதப்புலையே திரியறான்" என்ற கம்ப்லையன்ட் வேறு..

ஐந்து மணி வரை பாலாஜி வரவில்லை..ஏனென்று தெரியவில்லை..மகேஷை அனுப்பி பார்த்து வரச் சொன்னதில் அவர் பெரியப்பா தவறி விட்டார் என்று உடனே கிளம்பி தஞ்சாவூர் போய் விட்டதாகத் தகவல் வந்தது..

மிருதங்கம் வாசிக்கும் பையன் மட்டும் வந்தான்

கடைசி நாள் என்பதால் கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தது...நிறைய பேர் பந்தி முடிந்ததும் பஸ் ஏறி விட்டார்கள்..ஆயிரமாக இருந்த கூட்ட வெள்ளம் நூறாக வடிந்து விட்டிருந்தது...

ஆறரை மணிக்கு வரது மாமா மேடை ஏறினார்..ஒரே ஒரு மைக் இருந்தது...ம்ம்ம்ம் என்று பாடி சுருதி சேர்த்துக் கொண்டார்..மைக் சில நொடிகளுக்கு ஓய்ய்ய் என்று கூவி விட்டு அடங்கியது...மைக் செட்டு பாலு வேறு முன்னால் நின்று கொண்டு சீக்கிரம் செட்டை எல்லாம் எடுத்துட்டு நான் திருச்சி போணும் என்று அவசரப் படுத்தினான்...

வரது மாமா ப்ளானின் படி ஆபோகி வர்ணத்தைத் தொடங்கினார்...இருந்த நூறு பேரில் பாதிப் பேர் கிளம்பத் தொடங்கியிருந்தனர்...இப்போதும் கி.மு மாமாவைக் காணோம்..

தனி வாசிக்கும் பையன் அவன் பாட்டுக்கு தனியாக வாசித்துக் கொண்டிருந்தான்...எங்கெல்லாம் நிறுத்த வேண்டுமோ அந்த இடங்களில் விடாது வாசித்தான்.. எங்கெல்லாம் வாசிக்க வேண்டுமா அங்கெல்லாம் நிறுத்தி விட்டு வேடிக்கை பார்த்தான்...பாவம் அவனுக்கும் முதல் கச்சேரி போல இருந்தது..

வரது மாமாவின் சங்கீத வாழ்வுக்கு வந்த சோதனையாக அந்த நேரம் பார்த்து கரண்ட் போய் விட்டது..

இது தான் சாக்கு என்று அது வரை உட்கார்ந்திருந்த சிலரும் கிளம்பத் தயாரானார்கள்..."இருங்கோ அஞ்சு நிமிஷத்துல கரண்ட் வந்துரும் இருங்கோ..இவர் நல்லாப் பாடுவார்" என்று யாரோ அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தனர்..

அஞ்சு நிமிஷத்தில் கரண்ட் வரவில்லை...

இது தான் சாக்கு என்று பாலுவும் தன் மைக் செட்டை பேக் செய்து விட்டான்....அவனுக்கு வீட்டில் என்ன அவசரமோ பாவம்..

வரது மாமா ஏதோ முடிவுக்கு வந்தவராக மைக் இல்லாமலேயே சுருதியை ஏற்றி சத்தமாகப் பாட ஆரம்பித்தார்...அவர் பாடிய 'அப்ப ராம பக்தி' மிருதங்கம் வாசிக்கும் பையனுக்கும் அப்பன் ராமனுக்கும் மட்டும் கேட்டது

இப்போது மேடையைச் சுற்றி வரது மாமா , அவர் சித்தி, துளசி மாமி, மேலும் சில பொடிப் பையன்கள் மட்டும் இருந்தனர்..

அப்போது நாகராஜா மாமா எங்கிருந்தோ வந்து கட்டைக் குரலில் மிரட்டினார்..சரி சரி நேரம் ஆறது ..ஸ்வஸ்தி சொல்லி உற்சவத்தை முடிக்கணும்..சீக்கிரம் என்றார்..

"வரது போதும்..மங்களம் பாடிடு" என்றார்

வரது மாமா அவர் கம்பீரமான குரலை மீற முடியாமல் ' மங்களம் பாடம் பண்ணலை மாமா" என்றார்

எங்கிருந்தோ ஒரு பொடுசு மேடையில் ஏற்றி விடப்பட்டு அது உச்ச ஸ்தாயியில் "பவமான சுதடு பட்டு" என்று பாடியது

இப்படியாக வரது மாமாவின் (முதல்) கச்சேரி இனிதே முடிவடைந்தது...

வரது மாமா கோயிலில் இருந்து திரும்பி வருகையில் "இன்னிக்கு ராத்திரியே சந்தானம் மாமாவின் ஃபேனை ரிப்பேர் பண்ணிறனும்..காயில் தான் போயிருக்கும்" என்று நினைத்துக் கொண்டார்.


முத்ரா

3 comments:

Chitra said...

கதை சொல்லும் விதம் பிடித்து இருக்கிறது.

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

hareaswar said...

yathukula kamboji la nejamavae tyagarajar krithi terilaya da unaku...