இந்த வலையில் தேடவும்

Tuesday, December 7, 2010

பிரஜா வாணி- 2 (சுழன்றும் ஏர் பின்னது உழவன்)

தன் பூமியை நாகரீக உலகத்தின் தேவைகளுக்குப் பறிகொடுத்து விட்டு பெருநகரம் வந்து பிழைக்கின்ற உழவனின் குரல்என் கைகள்
மண்ணைக் கும்பிட்டதுண்டே தவிர
மனிதரைக்
கும்பிட்டதில்லை...

மாட்டுச் சாணியை
மல்லிகையாய் மணந்த என் நாசி
மனிதர்களின்
செயற்கை வாசனைகளால்
செத்துப் போயிற்று

உங்கள் உடல்களில்
கொழுப்பு சேர்வதற்கு
எங்கள் உடல்கள்
வியர்வை சிந்தின!
உன்
பசியைத் தீர்த்த எனக்கு
நீ- அந்த
பசியையே பரிசளித்தாய் !

நான் யாரென்று இன்னும்
சொல்லவில்லை அல்லவா?
நான் அடையாளம் அற்றவன்
நன்றி மறந்தவர்களால்
நிராகரிக்கப் பட்டவன்

நான்-
உங்கள்
இரைப்பை நிறைவதற்கு
கலப்பை பிடிக்கும் உழவன்!

ஏரின் பின்னால் உலகம் என்று
புலவன் ஒருவன் பாட்டெழுதிப் போனான்
உண்மை சொன்னால்
ஏரின் பின்னால் இந்த
உழவன் மட்டும் தான்!
மாடுகள் கூட முன்னே இருக்கின்றன!

உனக்கு
நெல்லும் சோளமும் தந்த என்னை நீ
நிராகரித்த பொது கூட நான்
சுதாரித்துக் கொண்டேன்
நீ என்
நிலத்தையும் பிடுங்கி என்னை
நகரத்தின்
தெருக்களில் வீசினாய்
வயலைக் காத்த என்னை
மனிதரின்
வாசல் காக்க வைத்தாய்!

என்
கண்ணைப் பிடுங்கியிருந்தால்
குருடனாகவாவது இருந்திருப்பேன் -என்
மண்ணைப் பிடுங்கியதால்
பிணமாகி விட்டேன்!
சாமியைத் தொலைத்த
பக்தன் போல
பூமியைத் தொலைத்ததால்
புதையுண்டு போனேன்!

உனக்குத் தெரியுமா?
உங்கள் வாகனங்களுக்குக்
கதவைத் திறக்கும் போதெல்லாம் -என்
மனம் மூடிக் கொள்கிறது
வணக்கம் செய்ய
கை மேலே எழும் போது- உயிர்
கீழே விழுகிறது !

உனக்கு
சாலைகள் தேவை என்பதால்
என் வாழ்வின்
வரைபடத்தைக் கிழித்து விட்டாய்!
என்
கல்லறையின் கற்களைக் கொண்டு
உன் மாடமாளிகைக்கு
அடிக்கல் நாட்டினாய்!

என்
பயிர் போன நாளிலேயே
என்
உயிர் போய் விட்டது!
இன்று
உறவுகளுக்காய்
உடல் மட்டும் இருக்கிறது!

எனக்கு-
இதுவரை தெரிந்ததெல்லாம்
என் வயல்
என் மாடுகள்
கோழிகளின் பஞ்சாரம்
என் குடிசை
இவை மட்டும் தான்

இன்று
உன் நகரம் -எனக்கு
அந்நியமாய் இருக்கிறது
வண்டிகள்
வேகமாய் விரைந்தாலும்

வாழ்க்கை இங்கே
நின்று போய் விட்டது

மண்வாசனையை நுகர்ந்த மூக்கு
மனித வாசனையை வெறுக்கிறது
மாடுகளின் குரலை விட
மனிதர்களின் குரல்
முரடாய் இருக்கிறது
மழை பொய்த்தால் கூட
மாண்டு போகாத உள்ளம்-மனிதர்களின்
மனம் பொய்த்ததால்
மரித்து விட்டது!

அய்யா மனிதர்களே
உங்களுக்கு
கணிப்பொறி கடவுளாக இருக்கலாம் !
ஆனால் நீங்கள் கொறிக்க
கடலைப் பொரியாவது வேண்டும்
கருத்தில் கொள்ளுங்கள்!
பசி வந்தால்
உப்பு தொட்டு
சிப்புகளைத் தின்பீர்களா சொல்லுங்கள்

நாங்கள்
வயலில் கதிரை அறுத்தால் தான்
உங்கள் உயிர் உங்களோடு
ஒட்டிக் கொண்டிருக்கும்
இங்கே
பச்சை விளைந்தால் தான்
உங்களுக்கு
சிவப்பு ரத்தம் சுரக்கும்


உங்களுக்கு
ஒரு கோரிக்கை-
என் வயல் இருந்த பூமியில் மட்டும்
எனக்கு
வேலை தராதீர்கள்
வேர்களை இழந்து
என்
பயிர்கள் சிந்திய
கடைசிக் கண்ணீர்
ஒரு சுனாமியாய் மாறி
என்னை சாகடித்து விடும்

நானும் ஒரு
சிறுத்தொண்ட நாயனார் தான்
என் கண் முன்னேயே
என் மகவைப் பலியிட்டேனே !
அன்று அந்த
உயிரைக் காக்க அந்த ஈசன் வந்தான்
இன்று என்
பயிரைக் காக்க எந்தப் பரமன் வருவான்??

பால் தந்த
தாய் முலையை வெட்டி
பகட்டுக்காய் அலங்காரப் பொருளாக்கும் மனிதர்களே !!!!
இன்று
உங்கள் இறுகிய
முகங்களை இளக்கிக் கொண்டு
எனக்கு ஒரு பூச்செடியைத் தாருங்கள்
அது வளர்ந்து மலரும் போது
ஒரு வேளை நான்
மறுபடி பிறக்கக் கூடும்!


சமுத்ரா

5 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் நண்பரே.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_08.html

வானம் said...

வணக்கம் நண்பரே,
இன்று வலைச்சரத்தில் பன்னிக்குட்டி ராமசாமியார் அறிமுகப்படுத்தியதன்மூலம் உங்கள் தளத்தின் அறிமுகம் கிடைத்தது. உங்களது இயற்பியல் பற்றியதான கட்டுரைகள் அற்புதம்.

குவாண்டம் தியரி படித்தவனெல்லாம் பைத்தியம் பிடித்து பாயைப்பிராண்டும் நிலைக்கு போய்விடுவான் என்ற கருத்தையெல்லாம் நம்பியவன் நான். ஆனால் உங்கள் விளக்கங்கள் எளிமையாகவும்,பிரமாதமாகவும் இருந்தது.
போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் என்று கூறி நீங்கள் நிறுத்தியது எனக்கு ஏமாற்றம்தான்.வியாபாரத்திற்குத்தான் வரவேற்பு தேவைப்படும். சேவைக்கு அன்று. வரவேற்பு என்பது அந்த நேரத்திய போதைதானன்றி வேறொன்றுமில்லை. பூமிதான் சூரியனைச்சுற்றுகிறது என்று சொன்ன கலிலியோவுக்கு என்ன வரவேற்பு கிடைத்தது என்று தெரியுமல்லவா?
இறுதியாக,
இங்கு படித்தவர்கள் குறைவு, புரிந்துகொண்டவர்கள் மிக்க்குறைவு, சொல்லிக்கொடுப்பவர்கள் மிக மிகக்குறைவு, புரியும்படி சொல்லிக்கொடுப்பவர்கள் எங்கோ ஒன்றிரண்டுதான்.
ஆகவே, தொடருங்கள்.

சுபத்ரா said...

அருமை! அருமை!! அருமை!!! வேறென்ன சொல்ல???

Nagarajan T said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏனோ என் கண்கள் கலங்கியது.

Nagarajan T said...

வானம் said...
அவர் சொல்வது முற்றிலும் சரியே. கொஞ்சம் யோசிக்கவும்