இந்த வலையில் தேடவும்

Thursday, December 30, 2010

உதட்டளவு வாழ்த்துக்கள்!

நம் வீட்டை எப்போதாவது சுத்தம் செய்யும் போது சில வஸ்துக்கள் அகப்படும். அவற்றை இருக்கட்டும் என்று வைத்துக் கொள்ளவும் முடியாது , வேண்டாம் என்று வீசி விடவும் முடியாது. (உதாரணமாக ஏதோ ஒரு அரதப் பழசான டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன்,மொபைல் வாங்கிய பழைய அட்டைப் பெட்டி, கல்யாணப் பத்திரிக்கை etc ., ) சில வீடுகள் இப்படி தேவை இல்லாத அதே சமயம் தேவையும் உள்ள பொருட்களாலேயே பாதி அடைக்கப்பட்டிருக்கும்.

ஓகே.இந்த பதிவு அதற்காக அல்ல. இன்றைக்கு நம் உறவுகளில் பெரும்பாலானவை இந்த நிலைமையில் தான் உள்ளன. உன் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கவும் முடியாது, அதே சமயம் நீ தான் எல்லாம் என்று போய் அப்பிக் கொள்ளவும் முடியாது. இன்றைக்கு ஒரு கல்யாணம் என்றாலோ காது குத்து என்றாலோ உண்மையான மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று மணமக்களையும் குழந்தைகளையும் வாழ்த்தும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. 'ஐயோ கூப்பிட்டு விட்டார்களே, நாளை நமக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் அவனது உதவி தேவைப் படுமே' என்று சுயநலம் கருதி தான் நிறைய பேர் கல்யாணங்களுக்குப் போகிறார்கள்.

கல்யாணத்தை நடத்துபவர்களும் இதற்கு ஒன்றும் குறைவில்லை. கூப்பிட்டவர்களில் ஒருவர் வராவிட்டாலும் "அந்த அம்புஜத்திற்கு என்ன திமிரு? புது வீடு கட்டிட்டாள்னு யாரையும் மதிக்கறதே இல்லை.. படி ஏறிச் சென்று கூப்பிட்டதற்கு (படி ஏறிச்செல்லாமல் எப்படி கூப்பிடுவது?!?!) வராமல் நல்லா அவமானப்படுத்திட்டா" என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்...அந்த நாளில் அவர்களுக்கு வேறு என்ன எமர்ஜென்சி வந்ததோ , யாருக்கு உடம்பு சரியில்லாமல் போச்சோ, வேறு என்ன அவசர வேலை இருந்ததோ என்றெல்லாம் யோசிப்பதே இல்லை.

இன்று கல்யாணம் கச்சேரிகளுக்கு செல்வதை (குறிப்பாக இளம் தலைமுறையினர்) பெரும் பேஜாராகக் கருதுகிறார்கள். அதற்கு ஏற்றபடி ஒரே முகூர்த்த நாளில் நாலைந்து அழைப்புகள் வருகின்றன. மேலும் கடுப்பு ஏற்றும் படி முகூர்த்தத்தை ஐந்து மணி ஆறு மணி என்று ரொம்ப சீக்கிரமாக (?) வைக்கிறார்கள். பெரியவர்கள் போக முடியவில்லை என்றால் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து 'சும்மா போய் தலையைக் காமிச்சிட்டு வந்துடு' என்கிறார்களே தவிர 'அவர் ரொம்ப நல்லவர்; அவங்க வீட்டு கல்யாணத்துக்குப் போய் மணமக்களை மனதார வாழ்த்தி விட்டு அவர்கள் நூறு வருடம் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்" என்றெல்லாம் சொல்வதில்லை.

கல்யாணங்களுக்கு நிறைய பேரை அழைப்பதே எல்லாருடைய ஆசிகளும் மணமக்களுக்குக் கிடைக்கட்டும் என்பதற்காகத் தான். ஆனால் கல்யாணங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் 'கெட்டி மேளம்' என்று சொன்னதும் இயந்திரத் தனமாக அட்சதையை இறைக்கிறார்களே தவிர உண்மையாக வாழ்த்துகிறார்களா என்று தெரியாது. (தாலி கட்டும் போது யாராவது ஏடாகூடமாக அமங்கல வார்த்தைகளைக் கூறி விட்டால் அது கேட்காமல் இருப்பதற்கு தான் கெட்டி மேளம் ஜோராக வாசிக்கிறார்களாம் )இதைத் தெரிந்து கொண்டு தான் நம் பெரியோர்கள் 'வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு வாழ்த்தும்' என்று கூறினார்கள். அதாவது கல்யாணத்திற்கு வந்தவர்கள் கஞ்சத்தனத்தால் மணமக்களை வாயார வாழ்த்தா விட்டாலும் அங்கே அவர்கள் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வயிறு தானாக வாழ்த்துமாம்.(இதனால் தான் அன்னதானத்தை தானங்களில் சிறந்தது என்றும் கூறுகிறார்கள் )ஆனால் இன்று சில கல்யாணங்களில் போடும் சாப்பாட்டைப் பார்த்தால் பாவம் அந்த மணமக்களுக்கு வயிறுகளின் வாழ்த்துக்களும் கிடைக்குமா என்பதே சந்தேகமாகி விட்டது.

கல்யாணம் என்றில்லை இன்று வாழ்த்துக்களும் பெயரளவில் நின்று விடுகின்றன..."Happy New year ' என்கிறோம்..'What do we mean?" இப்போதெல்லாம் சந்தோஷம் என்பது உள்ளே இருந்து வரும் ஒன்றாக இல்லாமல் வெளியே இருந்து தொற்றிக் கொள்ளும் காய்ச்சல் போலவே இருக்கிறது. சில மணி நேரக் காய்ச்சல்...வெளியே எல்லாரும் சந்தோசமாக ஆடுகிறார்கள் பாடுகிறார்கள்..அதனால் ஒரு பொய்யான மகிழ்ச்சி மேகம் நம்மைச் சுற்றி தற்காலிகமாக உருவாக்கப்படுகிறது. நியூ இயர் பார்ட்டி முடிந்து 'hang over ' எல்லாம் வெளியேறி அடுத்த நாள் காலையில் மீண்டும் நம்முடைய உண்மையான முகத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. எங்கேயோ படித்த ஒரு வாக்கியம் ஞாபகம் வருகிறது "மகிழ்ச்சி என்பது அனுபவிக்கும் போதே முடிந்து விடுவது; துயரம் என்பது முடிந்த பின்னும் அனுபவிக்கப்படுவது" ..


சரி ஒருவரை உண்மையிலேயே வாழ்த்துவது என்பது என்ன? " ஹாப்பி நியூ இயர்' 'happy b 'day ' போன்ற உதட்டளவிலான வாழ்த்துக்களை விட்டு விட்டுப் பார்த்தால் 'வாழ்த்து' என்பது என்ன? ஒருவரை உண்மையாகவே நேசித்தால் வாழ்த்துக்கள் கூட அனாவசியம் தான் என்று தோன்றுகிறது..ஆமாம் 'LOVE IS THE PROOF UNTO ITSELF .. . "

சமுத்ரா

4 comments:

கணேஷ் said...

சரி சொல்லுங்க ..இந்த நல்ல விசயத்தை அருமையாக சொன்னதுக்கு இப்ப நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல நினைக்கிறேன்..சொல்லலாமா வேண்டாமா)))

நிகழ்காலத்தில்... said...

\\சந்தோஷம் என்பது உள்ளே இருந்து வரும் ஒன்றாக இல்லாமல் \\

இதை சரியாகப் பிடித்துக்கொண்டால் போதும். எப்போதும் மகிழ்ச்சிதான்:))

நல்லது நண்பரே

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..........

இனியவன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்