இந்த வலையில் தேடவும்

Tuesday, December 28, 2010

பிரஜா வாணி-6 (கனாக் கண்டேன் தோழி! )

ஆயிரம் காலத்துப் பயிருக்கு
ஏன்
இத்தனை வேலிகள்?
தங்கத்தைக் காட்டினால் மட்டுமே
கழுத்தில்
தங்குகின்றன தாலிகள்!

இன்னார்க்கு
இன்னார் என்று
எழுதி வைத்த இறைவன்
ஏனோ
சில பெயர்களை
மறந்து விட்டான்

மனிதர்களே!
என்
திருமணத்தை
சொர்கத்தில் நிச்சயிக்கக் கேட்கவில்லை..
என் வீட்டு முற்றம்
காலியாகத் தான் இருக்கிறது!
நாங்கள்
எத்தனை நாள் தான்
காகுத்தன் வருவான் என்று
கன்னி மாடத்தில் காத்திருப்பது ?

ஆண்களே !
சீதை போன்ற அழகிகள்
மனைவிகளாக வேண்டும் என்ற ஆசை
நியாயம் தான்
ஆனால் நீங்கள்
எத்தனை முனிவர்களின் யாகங்களைக் காத்தீர்கள்?
அந்த-
ருக்மிணியைக்
கடத்திப் போக ஒரு
கண்ணன் வருவான்
எங்களை
நடத்திப் போகவேனும் ஒரு
நாயகன் என்று வருவான்?

எனக்கு
அழகு குறைவாக இருக்கலாம்
ஆனால்
அன்பு குறைவாக இல்லை!
முகம் கறுப்பாக இருக்கலாம்
ஆனால்
அகம் கறுப்பாக இல்லை!
மணமாலைகள்
சீதைகளுக்கே போனால்
சூர்பணகைகள்
அறுந்த மூக்குகளையா
அணிந்து கொள்வது?

கூரைப் புடவையை
என்று தான் நாங்கள் உடுத்துவது?
என்று தான்
ஓமப் புகை
எங்கள் கண்களில் புகுந்து
சுகமாக உறுத்துவது?

இங்கே
சூடிக் கொடுத்த சுடர்க் கொடிகள்
பாவை படிக் கொண்டிருக்க
அங்கே கண்ணனோ
ருக்மிணியைக் கடத்த
ரதத்தைத் தயார் செய்கிறான்!

நான் அக்கினியை
வலம் வருவதற்குள்
என்னை துன்பத்தின் தீ
சூழ்ந்து கொண்டு விட்டது
நான் அருந்ததியைப்
பார்க்கும் முன்
கிரகங்கள் போட்டி போட்டுக் கொண்டு
என்னைப் பார்த்து விட்டன!

எனது
கல்யாணக் கனவுகள்
காற்றில் கரைகின்றன
என்
குழந்தைக்கு நான் எழுதிய
தாலாட்டு வரிகள்-என்
கண்ணீரில் அழிகின்றன!
முதல் இரவுக்கு
மயங்கி
என் இரவுகள்
முடியாத இரவுகளாகின்றன!
வாழைத் தோரணத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் வீட்டு
வாசல்களும் சோர்ந்து விட்டன...

மத்தளம் கொட்டுகிறது
வரி சங்கம் நின்றூதுகிறது
ஏனோ
முத்துடைத் தாம நிறைப் பந்தலின் கீழ்
மதுசூதனன் வரும் முன்னர்
என் வீட்டுக் கோழிகள் கூவி
என்னை
எழுப்பி விட்டு விடுகின்றன

எத்தனை நாள்
தான்
பெற்றவர்களுக்கு பெரும்
பாரமாய் இருப்பது?
நான் மிதிக்க வேண்டிய
அம்மி
என்னைப் பெற்றவர்கள்
தலை மீது போய் அமர்ந்து கொண்டது!

மஞ்சள் இடிக்க
என் வீட்டுக் கொல்லையில் வைத்த
உரல் -இன்று
என் மனத்தை இடிக்கிறது ...
கன்னிக் கால் ஊன்றாத
என் வீட்டு
ஈசானியம் என்னை
ஏளனம் செய்கிறது!

ஏழு அடிகள் எடுத்து வைத்து
என்று தான் நான்
இல்வாழ்வைத் தொடங்குவது?
என்று தான்
என் தலை வகிடு
குங்குமத்தால் சிவப்பது?
என்று தான்
மெட்டியின் ஒலி
என் காதுகளில்
மௌன ராகம் இசைப்பது?

மழலைகளுக்கு
மணம் செய்து வைக்கும் சமூகம்
ஏனோ
இந்த
முதிர்கன்னிகளை
மறந்து விடுகிறது..
கோவில்களில்
கல்யாண உற்சவங்கள் நடந்து கொண்டிருக்க
எங்கள்
வாழ்க்கையோ
வறண்டு கிடக்கிறது

அம்மா
கோவிலில் நேர்ந்து கொண்டு
மாலை ஒன்று வாங்கி வந்தாள்..
மாலை
முழுவதும் வாடுவதற்குள்
மணாளன் ஒருவன் வருவானாம்!
மாலை வாடுவதைப்
பார்ப்பவர்கள்
என்
மனம் வாடுவதைப் பார்ப்பதில்லை!

தரகர்களிடம்
நடந்தே
என்
தந்தையின் காலணிகள் தேய்கின்றன!
காதலிக்கவாவது செய்திருக்கலாமே
என்று
கேட்கிறாள் தங்கை!
என் செல்களை
பூரிக்கச் செய்ய வேண்டிய
கல்யாணக் கனவுகள்
இன்று-
எரிமலையாய் மாறி என்
இதயத்தை எரிக்கின்றன!
ஆம்
இந்த
கல்யாணச் சந்தையில்
விலை போகாத காய்கறிகள்
வீதியில் வீசப்படும்!

நகை இல்லாததால்
என் வாழ்க்கை
நகைப்பாய்ப் போனது
பட்டு இல்லாத காரணத்தால்
வாழ்க்கை
பட்டுப் போனது!
இரு
மனங்களை ஓட்ட
பணம் என்ற
கோந்தையா பயன்படுத்துவது?
சவரனை வைத்தா
மனங்களின்
சந்தோஷங்களை நிர்ணயிப்பது?

உடலின் சேர்க்கைக்கா நான்
உள்ளம் குமுறுகிறேன்?
ஒரு பெண்ணுக்கு
முத்தங்களை விட
மழலையின்
சத்தங்கள் தானே சங்கீதம்
தழுவல்களை விட
இல்லறத்தின்'
அலுவல்கள் தானே ஆனந்தம்
சரசங்களை விட
சமையல்கள் தானே சந்தோஷம் ?
ஏனோ
வாசுகிகள் தயாராக இருந்தாலும்
வள்ளுவன் தான்
கிடைப்பதில்லை இங்கே!

என்
உள்ளத்தின் குரல்களை யாரிடம்
உரைப்பது?
கிளியையும் குயிலையும்
தூது விடுவது
புராணங்களுக்கு மட்டுமே
பாந்தமாக இருக்கும்!
இருந்தாலும்
இதயம் தாங்காமல் கூறுகிறேன்
மதவாதிகள்
மன்னித்துக் கொள்ளுங்கள்!
ஜோடியுடன்
கூடிக் குலாவிக் களிக்கும் என்
வீட்டுக் கூண்டுக் கிளியே
உன் கதவைத் திறக்கிறேன்
பறந்து செல்!
கோதை காத்திருக்கிறாள்
என்று
கண்ணனிடம் சொல்!
அவன்
கீதாசாரத்தில்
மும்முரமாக இருந்தால்
அவன்
தோழர்கள் யாராவது
தயாராக இருக்கிறார்களா கேள்!


சமுத்ரா

7 comments:

கணேஷ் said...

திருமணம் ஆக முடியாமல் இருக்கும் பெண்ணின் எல்லா மனநிலை..

நல்லா இருக்கு...கொஞ்சம் நீளம் அதிகம்..

சொன்னது போல காதல் ஒருவகையில் தீர்வாக இருக்கலாம்..இதில் பல மூட நம்பிக்கைகள் அழியகூடும்..

அரசன் said...

நல்ல கவி வரிகள் ....

நிறைய விசயங்களை சாடிருக்கின்றிர் ..

வாழ்த்துக்கள் ... நல்ல பதிவு தொடரட்டும்

RVS said...

கவிதையின் நீளம் அகலம்.. ஆனால் கருத்து ஆழம். ;-)
காகுத்தன் -- நல்ல வார்த்தை பிரயோகம்.
நல்லாருக்கு ப்ரதர். ;-)

வானம் said...

திருமணம் என்பதுதான் ஒரு பெண் வாழ்க்கையின் அர்த்தமுள்ள முற்றுப்புள்ளி என்பது போலவே எழுதியிருக்கிறீர்கள்.ஒரு ஆணின் பார்வையிலான பெண்ணின் உணர்ச்சிகள்தான் கவிதையாக இருக்கிறது. சொல்லாடல் அருமையாக இருந்தாலும் பொருளடக்கத்தில் ஒன்ற முடியவில்லை.

polurdhayanithi said...

nalla aakkam parattugal nanbare

ரேவா said...

எனது
கல்யாணக் கனவுகள்
காற்றில் கரைகின்றன
என்
குழந்தைக்கு நான் எழுதிய
தாலாட்டு வரிகள்-என்
கண்ணீரில் அழிகின்றன!
முதல் இரவுக்கு
மயங்கி
என் இரவுகள்
முடியாத இரவுகளாகின்றன!
வாழைத் தோரணத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் வீட்டு
வாசல்களும் சோர்ந்து விட்டன...

வாழ்த்துக்கள் ... நல்ல பதிவு தொடரட்டும்

Bharathiraja said...

Very good!