இந்த வலையில் தேடவும்

Monday, December 20, 2010

பிரஜா வாணி- 5 (பாண்டவர்கள் சாகும் குருட்சேத்திரம்)
பரணி
ஆயிரம் ஆனைகளைக் கொன்றானாம்
அந்தப் போர்களில்
செத்துப் போனவர்களைப் பற்றி
செய்தி ஒன்றும் இல்லை!

ஆம்
உங்கள் அரியணைகள்
பிணங்களால் தாங்கப்படுகின்றன!
எங்கள்
உடல்களை உளிகளாக்கி
வெற்றிச் சிலை வடிக்கிறீர்கள்
எங்கள்
வலிகளை
வரிகளாக்கி
வெற்றிச் சரித்திரம் எழுதுகிறீர்கள்!

ஜனங்களை
நடுவீதியில் நிறுத்தி சுடுவது தான்
ஜனநாயகமா?
மக்களை
மண்ணோடு மண்ணாக மூடுவது தான்
மக்களாட்சியா?
ஆகாயத்தில் இருந்து
அணுகுண்டை வீசி
அப்பாவிகளைக் கொல்வதன் பெயர்
ஆண்மையா?

நரகாசுரனை அழிக்க
வெடிகளை வெடிப்பது தான் வழக்கம்
இங்கோ
நரகாசுரன்களே
வெடிகுண்டு வீசுகிறார்கள்!

ஏனோ
போர் என்று வந்து விட்டால்
கடவுள்கள் கூட கருணை இழந்து விடுகிறார்கள்
ஆம்!
போர்களத்தில்
கர்ம யோகத்தின் பெயரால்
கொலைகளைச் செய்யலாம்!

இடிச் சத்தம் கேட்டால்
அர்ஜுனனைக் கூப்பிடலாம்-தினமும்
வெடிச் சத்தம் கேட்டால்?
அடை மழை பொழிந்தால்
அருகினில் ஒதுங்கலாம்..
ஆயுத மழை பொழிந்தால்?

புத்தன் ஏதோ
புலம்பிவிட்டுப் போகட்டும்
நாம்
பீரங்கிகளைக் கவனிப்போம்
காந்தி ஏதோ
கத்திக் கொண்டிருக்கட்டும்
நாம்
குண்டுகளை சேகரிப்போம்
இயேசு என்னவோ
இரைந்து கொண்டிருக்கட்டும்
நாம்
ஏ.கே, 47 களைக் கவனிப்போம்!
ஆம்
புத்த வாசனை
வீசிய மண்ணில் இன்று
ரத்த வாசனை
வீசுகிறது
காவிகள் ஆண்ட மண்ணை
பாவிகள் ஆளும் படி ஆனது!

எங்கள் குழந்தைகள்
பிணி தாக்கி இறந்திருந்தாலும்
பொறுத்துக் கொண்டிருப்போம்
பீரங்கி தாக்கி இறக்க
பாவம் என்ன செய்தோம்?

நீங்கள்
குண்டுகளால் விளையாட
எங்கள்
வாழ்க்கை தான் கிடைத்ததா?
நீங்கள்
தோட்டாக்களை
விதைக்க
எங்கள் வீட்டு
தோட்டங்கள் தான் கிடைத்ததா?

அன்று
அனுமன் எரித்த நெருப்பு
சில
அரக்கர்களை
எரிக்காமல் விட்டதா?இல்லை
ராமன் அம்புக்கு
இரண்டொரு
ராட்சசர்கள் தப்பி விட்டார்களா?

நீங்கள்
எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க
கடிதம் எழுதிக் கொண்டிருங்கள்!
எங்கள்
உயிர் எழுத்துகளோ
ஒவ்வொன்றாக அழிந்து கொண்டிருக்கின்றன...
எங்களைப் பற்றி
மேடைகளில்
உரக்கப் பேசிக் கொண்டேயிருங்கள்!
எங்கள் குரல் நாண்கள்
கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன..
எங்களைப் பற்றிய
அறிக்கையை நீங்கள்
சமர்ப்பிக்கும் முன்னரே
சித்திர குப்தன்
எங்களுக்கான
பக்கங்களைத் திறந்து விடுகிறான்...
எங்களுக்காய் நீங்கள்
கவிதை எழுதிக் கொண்டிருங்கள்!
எமனும்
போட்டியாக எங்களுக்கு
ஒப்பாரி ஒன்றை எழுதட்டும்

உங்கள்
உடன் பிறப்புகள்
உடல்கள் சிதறி இறக்கும் போது
நீங்கள்
குத்துப் பாடல்களில்
குதூகலிக்கிறீர்கள்!
உங்கள்
சகோதரர்கள்
ரத்தத்தில் குளித்தாலும்
உங்கள் தலைவர்களுக்கு
பாலாபிஷேம் செய்வீர்கள்!
இசைப் பிரியாக்கள்
இறந்து கொண்டிருக்க நீங்கள் - டிசம்பரின்
இசை விழாக்களில்
இன்புறுவீர்கள்!

இறைவா
நெருப்புக்கு மத்தியில்
எங்களை
ஏன் நடமாட வைத்தாய்?
கண்ணி வெடிகளுக்கு நடுவில்
எங்கள்
கன்னிகளைக்
கற்பிழக்க
வைத்தாய்!

அமைதிக்கான
நோபல் பரிசு வாங்கியவர்கள்
மறந்து கூட
எங்கள் பக்கம் திரும்புவதில்லை!
பயிர்கள் அழிந்ததைக்
கணக்கு பார்ப்பவர்கள்
உயிர்கள் அழிந்ததை
உணர்வதே இல்லை!

பகையைக் காணாமல்
எங்கள்
பொழுதுகள் சாய்வதே இல்லை
புகையைக் காணாமல்
எங்கள் இரவுகள்
விடிவதே இல்லை..

இங்கே பிறப்பதற்கு
எங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தன?
விடுமுறை நாட்களில்
எங்கள் குழந்தைகளை
வெளியே அழைத்துச் சென்று
பீரங்கிகளையா
வேடிக்கை காட்டுவது?
வண்டுகளைப் பார்த்து
வியந்திடும் வயதில்
குண்டுகளைப் பார்பதை எந்தக்
கொடுமையில் சேர்ப்பது?
செடிகளுக்கு மத்தியில்
சிரித்து விளையாடும் வயதில்
வெடிகளுக்கு மத்தியிலா
வெந்து சாவது?
பொறுப்பு இழந்த
புல்லர்கள் பலரால்
உறுப்பு இழந்தா அவர்கள்
உடல்கள் நோவது?

பூக்களின்
சமாதியிலா
உங்கள் சிம்மாசனங்களை சமைப்பது ?
பட்டாம் பூச்சிகளின் ரத்தத்திலா
உங்கள்
பட்டாபிஷேகங்கள் நிகழ்வது?
எங்கள்
செந்நீரைக் கொண்டா
உங்கள்
செங்கோலைக் கழுவுவது?
சிட்டுக் குருவிகளின் இறகுகளைப்
பிய்த்தா உங்களுக்கு
சாமரங்கள் செய்வது?
மைனாக்களைக் கொன்றா
உங்கள்
மஞ்சங்களை அமைப்பது?

நீர் சூழ்ந்தால்
உதவிக்கரம் நீட்ட
ஓடி வரும் நேசங்களே
போர் சூழ்ந்தால் எங்களைப்
புறக்கணிப்பது ஏன்?
நிலம் நடுங்கினால்
நேசக் கரம்
நீட்டுபவர்கள் எங்கள்
உளம் நடுங்கினால்
உதவாதது ஏன்?

எங்களுக்கு ஏன்
அன்னை தெரசாக்கள்
அந்நியமாய்ப் போனார்கள்?
கல்கி அவதாரம்
குதிரையில் ஏறும் முன்பே
ஏவு கணைகள்
முந்திக் கொண்டு எங்கள்
உயிரைக் குடிக்கின்றன!


இறுதியாக ஒன்று
இந்த பூமி
குருட்சேத்திரம் அல்ல!
குருதிச் சேத்திரம்!
இங்கே
பாண்டவர்கள்
செத்துக் கொண்டிருக்கிறார்கள்!

சமுத்ரா!

1 comment:

Marcus Meyer said...

Business: Atcalgrain is the supplier of any kind of grain & fertilizer products. 10-20-10, and which nutrient aids growth of roots, stem and leaves in plants." Q's Product Line featuring starter fertilizers, grass seed, fertilizers for palm trees, plant foods, soils, and supplements. There are a wide variety of shades to choose from and we will discuss some of those here.