இந்த வலையில் தேடவும்

Tuesday, December 14, 2010

பிரஜா வாணி-3 (இறைவன் எழுதிய இடையினம்)




பெண் பாதி-
ஆண் பாதி என்று
சிவன் இருந்தால் அது ஆன்மிகம்
ஒரு
சீவன் இருந்தால்
அது அசிங்கம்!

மண்புழு ஒன்று
ஆணாயும் பெண்ணாயும் இருந்தால் அது
உயிரியல் அதிசயம்
மனிதப் புழு ஒன்று அவ்வாறு இருந்தால்- அது
உயிரியல் அருவருப்பு!

ஆம்
நான் தான்-
புழுவினும் கீழாகிவிட்ட ஒரு பிறவி
தெரு நங்கையாய் மாறி விட்ட
திருநங்கை !

நாங்கள்
இறைவன்
உயிர்க் கவிதையை எழுதும் போது
ஏற்பட்ட எழுத்துப் பிழைகள்!
தமிழ் எழுத்து பிழையானால்
தாங்கிக் கொள்ளலாம்
தலை எழுத்தே பிழையானால்?

எனக்கு
மீசை முளைத்த போதே
மலர் சூட
ஆசையும் முளைத்தது

உடற்கூறு ஆணாய் இருந்தாலும்
உயிர்கூறு பெண்ணாய் இருந்தது
மனம் பெண்ணினுடையதாய் இருந்தாலும்
மணம் ஆணுடையதாய் இருந்தது

ஆம்!
எனக்கு
உள்ளே ஒரு
பெண் வாசம் செய்தாலும்
வெளியே
ஆண் வாசம் வீசியது

பெண் ஒருத்தி
கட்டிய சேலை பிடிக்கவில்லை என்றால்
உடனே
கழற்றி எறியலாம்
எனக்கோ
இயற்கை அளித்த இந்த
ஆண் உடையை
அவிழ்க்க முடியவில்லை!

ஆணின் ஆடைக்குள்
அகப்பட்டு நான் அழுதேன்
நூல் ஆடை நீக்கி
நிர்வாணமாய் நின்றாலும்
தோல் ஆடை நீங்காமல்
தளர்ந்து போனேன்!

இறைவன்
வல்லினம் என்று ஆணையும்
மெல்லினம் என்று பெண்ணையும் வைத்தான்
ஆனால்
இடையினமாக என்னை ஏன் தன்
எழுத்தில் சேர்த்தான்?
இந்த
இடையினத்தைக் கண்டு
வல்லினங்கள் வம்பு செய்வதற்கா ?
இல்லை
மெல்லினங்கள் முகம் சுளிப்பதற்கா ?

அகம் வேறு
புறம் வேறாய்
ஆண்டவன்-
ஏன் என்னைப் படைத்தான்
உலக மேடையில்
எனக்கு மட்டும் ஏன்
இரட்டை வேடம் கொடுத்தான்?

இறைவன் வடித்த உயிர்
இலக்கணத்தில்
நான் வழுவாக இருக்கலாம்
எனக்கு ஒரு
வழுவமைதி இல்லையா?
வாசம் வீசாத பூக்களை
நீங்கள்
நுகர வேண்டாம்
காலில் இட்டு கசக்குவது சரியா?

ஊன் குறை என்றால்
ஏற்றுக் கொள்ளும் நீங்கள் -ஏன்
ஜீன் குறை என்றால்
சீறுவது தகுமா?

அரவாணிகளை
அரவணைத்து ஏற்க
அரவான் ஒருவன் தான்
உண்டா?
அறவான்கள் வேறு யாரும்
அகிலத்தில் இல்லையா?

உலகில் எல்லாரும்
பெண் பாதி ஆண் பாதி
சரி சமமாய்
சேர்த்துப்
பிசைந்த பிண்டங்கள் தான்
எனக்கு மட்டும்
பெண்ணின் ரசம்
கொஞ்சம்
அதிகமாய் வழிந்தது
அதனாலேயே
வாழ்வின் ரசம்
வறண்டு விட்டது!

பெண்ணும் ஆணும் கலந்ததால்
பெண்ணின் உரிமையும் மறுக்கப்பட்டது
ஆணின் உரிமையும் மறுக்கப்பட்டது
பிச்சை எடுப்பதே எங்கள்
பணி என்று ஒதுக்கப்பட்டது

பால் குழப்பத்தால்
எங்கள் வாழ்வே
பாலைவனமானது!

அடியாழத்தில் ஓர்
அடையாளம் இல்லாததால்
நான் யார் என்று குழம்பும்
ஞானியின் நிலையானது!
அடையாளம் இழந்ததால்
நானும் ஒரு ஞானியோ?
அரை உடம்பு நாரி என்பதால்
நானும் அர்த்த நாரீஸ்வரனோ?

என்னை
ஞானியாக நடத்தவேண்டாம்
இறையாக எண்ணி
இசைக்கவும் வேண்டாம்
ஒரு
மனித
உயிராக எண்ணி
மதித்தால் போதும்!


எனக்கு ஆசைகள் இல்லையா?
ஓர் ஆணின்
அன்புக் கடலில் மூழ்கி
குழந்தை முத்தை குனிந்தெடுக்க?
களைத்து வரும்
கணவனை உள்ளே
அழைத்து வந்து
அமுதூட்ட?
வாசலில் கோலமிட்டு
வானத்து தேவதைகளை
வீட்டுக்குள் அழைக்க?
விருந்து அதிகமாயும்
மருந்து குறைவாயும்
நல்லறம் கொண்ட ஓர்
இல்லறம் நடத்த?


சமூகம் எனக்கு
இந்த
சுகங்களை மறுத்தது
ஏனென்றால் நான் ஓர்
அரைப் பெண்!
ஆண் வெளியே தெரிவதால்
ஆணுக்கு தான் அதிக மதிப்பெண்

ன்
அக உரிமைகளை மறுத்தது சரி
ன்
புற உரிமைகளையும் ஏன்
புறக்கணித்தீர்கள்?
பொது இடங்களில்
நாங்கள் புலப்பட்டால்
ஏதோ
அசிங்கத்தைக் கண்டது போல் ஏன்
அங்கம் சுருக்குகுகிறீர்கள்?

உங்கள் நகைகளையே
ன் எனக்கு
நகையாக அணிவிக்கிறீர்கள்?
பிறரை
சிரிக்க வைத்த புண்ணியம்
எனக்கு
கிடைக்கட்டும் என்றா?

எனவே
சகோதரர்களே
சகோதரியரே
இந்த இடையினத்திற்கும்
எழுத்து என்ற
அங்கீகாரம் கொடுங்கள்
எங்களை
பாலுணர்வோடு
பொருத்திப் பார்ப்பதை விடுங்கள்!
மூன்றாம் பால்
என்பதால் மட்டுமே
நாங்கள் என்ன
காமத்துப் பாலா?

இயற்கை
எங்களை வஞ்சித்தது போதும்
நீங்களாவது
வெந்த புண்ணில்
வேலை பாய்ச்சாமல்
அன்பென்ற
களிம்பெடுத்து
ஆதரவாய்த் தடவுங்கள் !

கண்ணீர் துடைக்கா விட்டாலும்
எங்களைக்
காட்சிப் பொருளாக்கி
களிப்பதை நிறுத்துங்கள்
எங்கள் சிரிப்புக்குப்
பின்னே
துன்பத்தின் எரிமலை
ஒன்று மறைந்திருப்பதை
உங்கள் இதயத்தின் கண் கொண்டு
உணர்ந்து கொள்ளுங்கள்!

ஆம்
நீங்கள் ஆதரித்தால்
நாங்களும் சாதிப்போம்!
திருவோ
திருமதியோ
இல்லை திருநங்கையோ
சாதனைகள் செய்ய
கோள் தடையாய் இருந்தாலும்
பால் ஒரு தடையல்ல
என்று பாருக்கு உணர்த்த
ஒரு பாதை அமையுங்கள்!



சமுத்ரா

3 comments:

Unknown said...

//பெண் பாதி-
ஆண் பாதி என்று
சிவன் இருந்தால் அது ஆன்மிகம்
ஒரு
சீவன் இருந்தால்
அது அசிங்கம்!//
அருமை!

tamil blogs said...

உங்கள் பதிவை இணைத்ததற்கு நன்றி..

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்களுக்கு இணைப்புக்கொடுக்க விரும்பினால்..
http://tamilblogscorank.blogspot.com/

நன்றி..