இந்த வலையில் தேடவும்

Friday, July 16, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்-III


விசைகளில் மூன்றாவதாக இருக்கும் ' வலுக் குறைந்த' அணு விசை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.


நமது அணுக்கரு 'ப்ரோட்டான்' மற்றும் 'ந்யூட்ரான்' களால் ஆனது என்று தெரியும்.அணுக்கருவினுள்ளே நாம் முந்தைய பதிவில் பார்த்த படி, 'வலுவான அணு விசை' ('ப்ரோட்டான்', 'ப்ரோட்டான்', மற்றும் 'ந்யூட்ரான்' களை உள்ளே பிணைத்து வைக்கும் விசை,விசை-I) மற்றும் மின் காந்த விலக்கு விசை ( ஒரே மின் சுமை கொண்ட ப்ரோட்டானையும் ப்ரோட்டானையும் விலகி ஓடச் செய்யும் விசை,விசை-II) இவை இரண்டுக்கும் இடையே இடை விடாமல் 'நீயா? நானா?' என்ற யுத்தம் நடந்து வருகிறது.


பெரும்பாலும் (சிறிய அணுக்களில்) விசை-I வெற்றி பெற்று வாகை சூடி விடுகிறது.


விசை-I மிக மிக வலுவானது என்றாலும் அது கொஞ்ச தூரத்துக்குள் தான் வேலை செய்யும். (10 ^−15 மீட்டர்) [வீட்ல புலி, வெளியிலே எலி என்ற கதை தான் பாவம்] ஆனால் நம் விசை-II முடிவே இல்லாத தூரத்திற்குப் பாயும் வல்லமை கொண்டது. ( தூர்தர்ஷன் சக்திமான் மாதிரி)


ஒரு வஸ்து ஹைட்ரஜனா , ஆக்ஸிஜனா, கார்பனா, அல்லது கந்தசாமியா என்று தீர்மானிப்பது adhan உள்ள 'ப்ரோட்டான்' களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக அணுக்கருவில் ஒரு 'ப்ரோட்டான்' (மட்டும்) இருந்தால் அது ஹைட்ரஜன் ,இரண்டு என்றால் ஹீலியம், ஆறு என்றால் கார்பன் .....அந்த வஸ்து மற்ற தனிமங்களுடன் எவ்வாறு சேர்ந்து கூட்டுப் பொருளாக (உதாரணம்: தண்ணீர் , H மற்றும் O சேர்ந்தது) மாறுகிறது என்பதை அணுவின் வெளிக் கூட்டில் உலாவிக் கொண்டு இருக்கும் 'எலக்ட்ரான்கள்' நிர்ணயிக்கின்றன ....



சரி இந்த ந்யூட்ரான் என்ன செய்கிறது என்று கேட்டால் :-

(இயற்கை எந்தப் பொருளையும் காரணமின்றி படைப்பதில்லை....)


"ப்ரோட்டான்" எண்ணிக்கை குறைவாக உள்ள அணுக்கள் லேசாகவும் பெரும்பாலும் வாயுக்களாகவும் உள்ளன...அனால் நாமெல்லாம் வருவதற்கு (உயிர் வாழ்வதற்கு) நீர்மம் மற்றும் திட வடிவிலான அணுக்கள் வேண்டும்.... அதற்க்கு அணுக்கரு கனமாகவும் உள்ளே ப்ரோட்டான் களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்க வேண்டி உள்ளது.


ஆனால் இதில் ஒரு சிக்கல்... ப்ரோட்டான் -கள் எப்போதும் 'அக நானூறில்' தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிகள் போல விரக தாபத்தில் இருக்கின்றன.

'குஷி' படத்தில் 'ஜோதிகா' பாடுவது போல, "பெண்களைப் பார்த்தால் எரிச்சல் வரும்" என்ற கேஸ் தான்... எனவே ஒரு ப்ரோட்டான் இன்னொன்றை வெறுக்கிறது, விலக்கித் தள்ள முயல்கிறது... (விசை-II)அனால் , கனமான அணுக்களில் அதிக ப்ரோட்டான்-கள் இருக்க வேண்டி உள்ளது. அதே சமயம் அதன் விலக்கு விசைகளை யும் சமாளிக்க வேண்டி உள்ளது. என்ன செய்வது? இப்போது 'ந்யூட்ரான்' கள் உள்ளே வருகின்றன. நம் தலைவியின் விரக்தியை ஓரளவு தணிக்க உதவும் 'பாங்கிகள்' போல (சரியான உதாரணம் வேண்டும் என்றால் 'அரவாணிகள்' போல )...ஏனென்றால் நம் 'ந்யூட்ரான்' கள் பரமாத்மாவைப் போல ஆண்-பெண் நிலை கடந்த ஞானிகள்... (neutral charge)

இந்த 'ந்யூட்ரான்' கள் ப்ரோட்டானுக்கும் ப்ரோட்டானுக்கும் இடையே வந்து அதன் விலக்கு விசையின் வலிமையை ஓரளவு குறைக்கின்றன. கிரிக்கெட்டில் அம்பயர் போல அல்லது குத்துச்
சண்டையில் 'ரெபரி ' போல....ந்யூட்ரான் மட்டும் இல்லை என்றால் ப்ரோட்டான்-கள் செய்யும் அலப்பறையில் அணு எப்போதோ சுக்கு நூறாக உடைந்திருக்கும்.. எனவே இயற்கை ந்யூட்ரான்-களை சமாதானத் தூதர்களாக நியமித்து உள்ளது. பொதுவாக ஒரு அணுக்கருவில் ப்ரோட்டான் மற்றும் ந்யூட்ரான் களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சமமாக உள்ளது.

ஒரு தனிமத்தின் (Element) அணுக்கருவில் ப்ரோட்டான் -களும் ந்யூட்ரான்-களும் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் இருக்கும் வரை அந்தத் தனிமத்தின் அணு(கரு) 'நிலையான' தாக இருக்கிறது. (இது ஏனென்று இன்னும் சரியாகத் தெரியவில்லை )தனிம வரிசை அட்டவணையில் (periodic table ) பார்த்தால் லெட்-208, (அதாவது 126 ந்யூட்ரான் 82 ப்ரோட்டான்)

என்ற தனிமம் கனமான அதே சமயம் நிலையான அணு என்கிறார்கள்...


ந்யூட்ரான்-கள் அளவுக்கு மீறிப் போகும் போது , நம் அணுக்கரு வலுக் குறைந்த விசை வருகிறது. (எதற்கு இத்தனை அம்பயர்கள்? என்று நினைத்தோ என்னமோ)

ந்யூட்ரான்-கள் அளவுக்கு மீறிப் போகும் போது ஒரு ந்யூட்ரானை வெளியே தள்ளி விட்டு விட வேண்டியது தானே? என்று கேட்டால் அது ஆகாது. ஏனென்றால் ,கனமான தனிமத்தில் அணுக்கள் நெருக்கமாக இருப்பதால் இந்த புறக்கணிக்கப்பட்ட ந்யூட்ரான், இன்னொரு அணுக்கருவில் மோதி விட்டால் ?அது ஏற்கனவே அதிக ந்யூட்ரான்களுடன் தத்தளித்துக் கொண்டு உள்ளது... இந்த ந்யூட்ரான் அதில் போய் மோதி விட்டால் அந்த அணு சிதைந்து , ஒரு 'கட்டுப் படுத்த முடியாத 'அணுக்கருப் பிளவில்' போய் முடிந்து விடலாம். (uncontrollable nuclear fission)

இப்படியெல்லாம் ஏதாவது ஏடாகூடமாக நடந்து தொலைத்து விடாமல் இருக்க நம் ' வலுக் குறைந்த' அணு விசை உதவி புரிகிறது. அதாவது இந்த விசை செயல்பட்டு அளவுக்கு அதிகமாக உள்ள ஒரு ந்யூட்ரானை ஒரு ப்ரோட்டானாக மாற்றி விடுகிறது. இந்த மாற்றத்தின் போது ஒரு எலக்ட்ரானும் வெளி வருகிறது (இப்போதைக்கு ந்யூட்ரான் = ப்ரோட்டான் + எலக்ட்ரான் என்று வைத்துக் கொள்வோம்) ஒரு ந்யூட்ரானின் நிறை ப்ரோட்டான் + எலக்ட்ரான் னை விட கொஞ்சம் அதிகம்... ஒரு ந்யூட்ரான் , ப்ரோட்டான் ஆக மாறியதும் இந்த எஞ்சியிருக்கும் நிறை (ஐன்ஸ்டீன் சொன்ன மாதிரி E=M*C*C) ஆற்றலாக மாற்றப் பட்டு வெளியே ஓடும் எலக்ட்ரானை விரைவாக அனுப்புகிறது. இதனை அறிவியல் 'Beta Decay ' என்கிறது.இந்த மாற்றத்தின் பிறகு அந்த அணு வேறு ஒரு தனிமமாக மாறி விடுகிறது. உதாரணமாக 'டிரிடியம்' என்ற தனிமம் மூன்று ந்யூட்ரான் களை யும் ஒரு ப்ரோட்டான் -ஐயும் கொண்டு உள்ளது. அணுக்கரு வலுக் குறைந்த விசை செயல் பட்டு ஒரு ந்யூட்ரானை ப்ரோட்டானாக மாற்றி விடுகிறது. இப்போது அது இரண்டு ப்ரோட்டான் மற்றும் ஒரு ந்யூட்ரான் உள்ள 'ஹீலியம்' மாக மாறி விடுகிறது. (ஒரு எலெக்ட்ரானை உமிழ்ந்த பின்)

அதாவது

3H1 => 3He2 + 0e-1

வலுக் குறைந்த அணு விசை பற்றி ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மற்ற இரண்டு விசைகள் பற்றி அடுத்த பதிவுகளில்....


பி. கு: பதிவில் போடப் பட்ட படத்திற்கும் வலுக் குறைந்த அணு விசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டாம் ப்ளீஸ்....

10 comments:

இளந்தென்றல் said...

//'டிரிடியம்' என்ற தனிமம் மூன்று ந்யூட்ரான் களை யும் ஒரு ப்ரோட்டான் -ஐயும் கொண்டு உள்ளது. அணுக்கரு வலுக் குறைந்த விசை செயல் பட்டு ஒரு ந்யூட்ரானை ப்ரோட்டானாக மாற்றி விடுகிறது. இப்போது அது இரண்டு ப்ரோட்டான் மற்றும் ஒரு ந்யூட்ரான் உள்ள 'ஹீலியம்' மாக மாறி விடுகிறது. (ஒரு எலெக்ட்ரானை உமிழ்ந்த பின்)//

அப்போ இன்னொரு நியூட்ரான் எங்கே ?

சமுத்ரா said...

நன்றி இளந்தென்றல்.... டிரிடியத்திற்கு இரண்டு ந்யூட்ரான் மற்றும் ஒரு ப்ரோடான் என்று படிக்கவும்....thanks for pointing out ...

Jegan said...

நன்றாக உள்ளது. ஆனால்..எழுத்து நடையில் சுஜாதாவை காப்பியடிப்பதால், படிக்கும்போது எரிச்சல் வருது. நீங்கள் நீங்கலாக இருக்க முயற்ச்சி செய்யுங்கள். சுயதர்மமே அழகு. ஒரு சுஜாதா போதும்.

சமுத்ரா said...

எரிச்சலாக இருந்தால் ஏன் படிக்கிறீர்கள் ஜகன்?

Jegan said...

டியர் சமுத்ரா, தங்கள் பதிலுக்கு நன்றி. தாங்கள் என்னை தவறாக புரிந்துக்கொண்டதாக கருதுகிறேன். உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை. எல்லோரும் சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் இது மொக்கை, மொண்ணை என்று உளறிக்கொண்டிருக்கும் வேலையில் இப்படி பொறுப்பாக அறிவியல் பற்றி தேவையான விஷயங்களை புரியும்படி எழுதியிருப்பது அருமை. நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால்...இதுபோன்ற கட்டுரைகளில் சுவாரஸ்யம் என்ற பெயரில் இடையிடையே தேவையில்லாத வர்ணனைகள் வரும்போது its disturbing. சுஜாதா கூட ஒரு அளவோடுதான் அதை செய்திருப்பார். அதுவும் அடித்தட்டு நபருக்கும் புரியவேண்டிய காரணத்தால்.. ஆனால் இங்கு அது தேவையில்லை. உங்கள் முயற்சிக்கு hats off. கிட்டத்தட்ட உங்கள் எல்லா இடுகையும் படித்துவிட்டேன். ஒரு நலம் விரும்பியாகதான் இதை சொல்கிறேன். ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் உங்கள் வசம். Osho பற்றி எழுதியிருந்தது அருமை. I too an Osho follower. ஓஷோவை இன்னும் நிறைய எழுதுங்கள்.

Love,

Jegan.

சமுத்ரா said...

thanks Jagan..sorry if i sounded rude...I accept your comment..I try to be myself when I write but if it resembles someone I can hardly help.

Aba said...

@Jegan

ஆனால், வலையிலும் எம்மைப்போல் பல பாமர்களுக்கு இவ்வகை அறிவியல் புரிவதில்லை. சுஜாதாவின் அறிவியலுக்கும் இவ்வகை அறிவியலுக்கும் ஏராளமான வித்தியாசங்கள். இது சாதாரணமான பொது அறிவியல் இல்லை. மாறாக, நன்கு கற்ற மென்பொருள் வல்லுனர்கள். போன்றவர்களுக்கே இவற்றைப் புரிந்து கொள்வது மகா கஷ்டம். ஏன் அறிவியல் துறையிலேயே உயிரியல், வேதியியல் துறையாளர்களுக்கு இவை வேப்பங்காய். (அதற்குக் காரணம் பலர் இவை வாழ்வுக்கு வேண்டாத விடயங்கள் எனக் கருதுகின்றார்கள்) அவர்களுக்கு புரியும்படி எழுதுவதாயின் இவ்வாறுதான் எழுத வேண்டும்.

Jegan said...

Dear Samthra, தற்போது உங்கள் எழுத்தில் ஒரு maturity தெரிகிறது. நன்றி. தொடரவும்.

@ Abarajithan,
தங்கள் பதிலுக்கு நன்றி திரு.அபரஜிதன். சமுத்ராவின் விளக்கங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது. நான் சொல்ல வந்தது சில இடங்களில் வர்ணனைகள் அதிகம் வரும் பொது படிக்கும் வேகம் தடைபடுகிறது என்பதுதான்.

ரிஷபன்Meena said...

சமுத்ரா,

ஒரு பின்னூட்டம் மூலம் உங்கள் பதிவு எனக்கு அறிமுகமானது.


பின்னூட்டங்களில் தென்படும் பல பதிவுகளுக்கு சென்றாலும் அத்திபூத்தாற் போல் எப்போதேனும் தான் படிப்பதற்கு சரக்குள்ள நல்ல தளங்கள் கிடைக்கிறது.

ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள். ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்வதற்கும் அடுத்தவர்களுக்கு புரிய வைப்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. அடுத்தவர்களுக்கு புரிய வைப்பது அத்தனை எளிதல்ல.

அடுத்தடுத்த பதிவுகளில் அளவோடு நகைச்சுவை வந்திருப்பது பதிவை இன்னுமும் மெருகேற்றியிருக்கிறது.

Kristyxitw said...

Dear Samthra, தற்போது உங்கள் எழுத்தில் ஒரு maturity தெரிகிறது. நன்றி. தொடரவும். @ Abarajithan, தங்கள் பதிலுக்கு நன்றி திரு.அபரஜிதன். சமுத்ராவின் விளக்கங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளது. நான் சொல்ல வந்தது சில இடங்களில் வர்ணனைகள் அதிகம் வரும் பொது படிக்கும் வேகம் தடைபடுகிறது என்பதுதான்.