இந்த வலையில் தேடவும்

Tuesday, July 6, 2010

பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்- I


பெண்ணே!

பிரபஞ்சத்தில் மொத்தம்

நான்கு விசைகள் தான் உண்டென

அறிவியல் கூறும்! -

உன்

கண்ணின்

கவர்ச்சி விசை

எந்த விசையில் சேரும்?

- இப்படியெல்லாம் அபத்தமாக கவிதை எழுதாமல் , (நான் தான் எழுதினேன்) பிரபஞ்சத்தின் ஆதார விசைகளை பற்றி கொஞ்சம் (அறிவியல் பூர்வமாக) பாப்போம்....


உங்களுக்கு உடனடியாக ஒரு நோபெல் பரிசு வேண்டும் என்றால், கீழே உள்ள எதாவது ஒன்றின் முடிச்சை அவிழ்க்கவும்.


> கரும் சக்தி அல்லது கரும் துளை

> எல்லாவற்றிற்குமான கொள்கை (Theory of everything) !

> பிரபஞ்சத்தின் நான்கு முக்கிய விசைகளுக்கு இடையே உள்ள தொடர்பு


இதில் கரும் துளை என்பது ஒரு மர்மமான பிரதேசம். இதைப்பற்றி ஆராய நீங்கள் ஒளியை அனுப்பினால் அந்த ஒளியையும்

இது விழுங்கி விடுகிறது.

ராம கிருஷ்ணர் கூறிய ஒரு கதை நினைவில் வருகிறது. "ஓர் உப்பு பொம்மை சமுத்திரத்தின் ஆழத்தை

அறிந்து வந்து எல்லாருக்கும் சொல்லலாம் என்று கிளம்பி கடலுக்கு உள்ளே சென்றதாம். ஆனால் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே கடலிலே கரைந்து கடலோடு கடலாக ஒன்றி விட்டதாம். அதே மாதிரி , ஒரு சாதகன் நான் கடவுளை அறிந்து வந்து எல்லோருக்கும் சொல்வேன் என்று உள்ளே (தனக்கு உள்ளே) கிளம்பினால் அந்தத் தேடுதலில் அவன் தன்னையே இழந்து விடுகிறான் "என்னும் கதை.


அதே போல் ஒரு ஒளிக் கற்றையை பார்த்து " நீ என் கண்ணு இல்ல? சமர்த்தா போயி உள்ள என்ன இருக்குனு பாத்துட்டு வந்து சொல்லு" என்று கூறி அனுப்பினால் அது திரும்பி வந்தால் தானே? அந்த படு பாவி கரும் துளை தன்னை வேவு பார்க்க வந்த ஒற்றனை

(கொஞ்சம் கூட ராஜ தர்மம் இல்லாமல்) விழுங்கி ஏப்பம் விட்டு விடுகிறது. செய்தி கேட்க வந்த புறாவை அந்த கரும் துளை ராஜா

புறாக்கறி ஆக்கி விழுங்கி விடுகிறான். :( :(


அதனால் இந்த கரும் துளை மற்றும் கரும் சக்தி ஆகிய வற்றை மறைமுகமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.


Hubble என்று ஒரு அறிவியல் ஆசாமி பிரபஞ்சம் விரிகிறது என்று ஒரு உண்மையைக் (?) கூறி குட்டையை நன்றாக குழப்பி விட்டு விட்டு சென்றார். ஹப்பிள் விதியை எளிமையாகச் சொன்னால், "ஒரு விண்மீன் நமக்கு எவ்வளவு தொலைவில் உள்ளதோ அது நம்மை விட்டு அவ்வளவு வேகமாக விலகி ஓடுகிறது. " (அய்யா சாமி, மனுசப் பயலே, ஆள விடு , நான் ஓடிடுறேன் , ஆராய்ச்சி பண்ண கிண்ண வந்துராதே, என்று நினைத்தோ என்னமோ?) . எது எது எது ( சாரி கொஞ்சம் உணர்ச்சி வசம் ஆயிட்டேன்) அதை அவ்வாறு ஓடவைக்கிறது? பிரபஞ்சத்தில் வியாபித்துப் பரவி இருக்கும் "கரும்" சக்தி என்கிறார்கள்.


உதாரணமாக , ஒரு பலூனை எடுத்துக் கொள்வோம். முதலில் ஒரு பெட்டிக் கடைக்குச் சென்று ஒரு பலூன் வாங்கவும்.

கடைக் காரரிடம் எதற்கும் ' நான்கு பரிமாண' பலூன் உள்ளதா ? என்று கேட்டுப் பார்க்கவும். அண்ணாச்சி அடிக்க வருவதற்கு முன்

கிடைத்த பலூனுடன் எஸ்கேப் ஆகி விடவும்.


இப்போது பலூனை மெதுவாக ஊதவும். (காரைக்குறிச்சி நாதஸ்வரத்தில் தோடி வாசிப்பது போல உற்சாகமாக ஊத வேண்டாம்.நம்மிடம் ஒரே ஒரு திருட்டு பலூன் தான் உள்ளது)

பலூன் பெரிதாக பெரிதாக , அதன் புள்ளிகள் , ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடுவதைக் காணலாம். அது போல தான் நம்

நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகி ஓடிக் கொண்டு உள்ளன)


பலூனை ஊத ஊத அதன் உள்ளே செல்லும் காற்று அதைப் பெரிதாக ஆக்க முயற்சி செய்கிறது. அதே சமயம், அதன் சவ்வின் இறுக்கம் (tension) அதை வெடிக்க விட்டு சிறிதாக ஆக்க முயற்சி செய்கிறது. எது வலுவானதோ அது வெற்றி பெறும். அதாவது காற்றின் விசை பலமானது என்றால், பலூன் பெரிதாகிக் கொண்டே போகும் (முடிவே இல்லாமல்) இறுக்கம் அதிகமானால் , பலூன் வெடித்து சிதறி விடும்.


அதே மாதிரி தான் , நம் பிரபஞ்சத்தில் இப்போது ஈர்ப்பு விசைக்கும் கரும் சக்திக்கும் 'நீயா? நானா? என்ற ரன்னிங் race

நடந்து கொண்டு உள்ளது. நம் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களின் மொத்த ஈர்ப்பு விசை (இறுக்கம்), அதைக் குறுக்கி அடக்கி, சிறிதாக்க

முயற்சி செய்து கொண்டு உள்ளது. ஆனால் கரும் சக்தியோ , (காற்று) அதற்கு எதிராக செயல் பட்டு , பிரபஞ்சத்தை விரிந்து ஓடச் செய்கிறது.

இரண்டில் எது வெற்றி பெறும் என்பதை, அறிவியல் வல்லுனர்களாலும் இப்போது கூற முடியவில்லை.


பிரபஞ்சம் விரிவதை இன்னொரு உதாரணம் மூலமாகப் பார்க்கலாம்.


ட்ரெயின் அல்லது பஸ்ஸில் செல்லும் போது ஜன்னல் வழியே கவனிக்கவும் ( figure- ரை அல்ல) அருகில் உள்ள கட்டிடங்கள் , மரங்கள் உங்களை விட்டு வேகமாக விலகி ஓடுகின்றன. அனால், தூரமாக உள்ள மரங்கள், கட்டிடங்கள், மெதுவாக உங்களை

விட்டுச் சென்று கொண்டு உள்ளது. இதற்கு நேர் எதிரான நிலை தான் நம் பிரபஞ்சத்தில் நிகழ்கிறது. அதாவது, தூர விண்மீன்

தூரம் தூரம் தூரமாக விலகி எட்டாக் கனியாக ஓடி விடுகிறது.....


Theory of everything

பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம். பிரபஞ்சத்தின் விசைகள் பற்றி விரிவாக பிரபஞ்சத்தின் ஆதார விசைகள்- II

இல் பார்க்கலாம்.



~சமுத்ரா







7 comments:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ரசுகி

அருமை அருமை - விளக்கங்கள் அருமை - ஆனால் சாதாரணமாகப் புரியாது - எவ்வளவுதான் விளக்கினாலும்

புரிந்து கொள்ள முயல்வோம்
நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா

Jerry Eshananda said...

congrats....

adhvaithan said...

yamma.. enaku thala suthutu padika padika.. ivlo iruka intha universela.. :O:O

Aba said...

இதே முறையில்தான் பூமியின் மிகத்தொரத்தில் இருக்கும் அண்டங்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக கூறுகிறார்கள். (ஐன்ஸ்டீனின்படி ஒளியை எதனாலும் மிஞ்ச முடியாவிட்டாலும்) ஏனெனில், இரண்டு பொருட்களுக்கிடையிலான வெளி(ஸ்பேஸ்) (ஒளியை விட குறைவான வேகத்தில்) அதிகரித்துக்கொண்டே செல்வதால், தூரத்தில் இருக்கும் பொருள் மிக வேகமாக எம்மைவிட்டு ஓடுவதுபோல் தெரிகிறது. (உண்மையில் அது மெதுவாகத்தான் விலகுகின்றது)

உதாரணமாக ஒரு வீதியில் நீங்களும் உங்கள் நண்பர்கள் எட்டு பேரும் 3x3 சதுர வடிவில் நிற்கும்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் இடையிலான வீதியின் மேற்பரப்பு தூரம் செக்கனுக்கு ஒரு மீட்டர் வேகத்தில் அதிகரிப்பதாக வைத்துக்கொள்வோம். வலது கீழ் மூலையில் நிற்கும் உங்களிடமிருந்து சதுரத்தின் நடுவில் நிற்கும் நண்பர்(x) வினாடிக்கு ஒரு மீட்டர் முடுக்கத்தில் விலகிச் செல்வார். ஆனால் இடது மேல் மூலையில் இருக்கும் நண்பர்(y) உங்களைவிட்டு வினாடிக்கு இரண்டு மீட்டர் முடுக்கத்தில் விலகிச் செல்வதுபோல உங்களுக்குத் தோன்றும். (உங்களிடமிருந்து x உம் x இடமிருந்து y உம் ஒரே நேரத்தில் விலகுவதால் உங்களிடமிருந்து y மிக வேகமாக விலகுவதாக நீங்கள் நினைப்பீர்கள்)

Aba said...

வலையில் நல்ல அறிவியல் பதிவுகளை தேடிக்கொண்டிருக்கும் நான், இன்றுதான் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். ஆரம்பமே அசத்தல் சார்.. இன்று முழுமூச்சாக உங்கள் மீதி பதிவுகளையும் படிக்கப்போகிறேன்.

Jayadev Das said...

\\அதே சமயம், அதன் சவ்வின் இறுக்கம் (tension) அதை வெடிக்க விட்டு சிறிதாக ஆக்க முயற்சி செய்கிறது.\\ இதில் சிறு திருத்தம் நண்பரே. பலூனில் உள்ள வாயு அழுத்தம் பலூனை பெரிதாக்க முயற்சி செய்கிறது, அதே சமயம் பலூனின் ரப்பர் தன்மை அதற்க்கு எதிராகச் செயல்பட்டு விரிவடைவதை தடுக்க முயற்சி செய்கிறது. இதில் எது பெரிதோ அது வெற்றியைடையும், பலூன் வெடிப்பது என்ற உதாரணம் இங்கே பொருந்தாது, ஏனெனில் அது வெடித்தால் அதனுள் இருக்கும் வாயு எஸ்கேப் ஆகிவிடும், சுருங்காது. அதே போல, பெரு வெடிப்பில் பருப் பொருட்கள் சிதறி ஒன்றை விட்டு ஒன்று வெளியே ஓடுகின்றன, ஆனால் அவற்றுக்கிடையே உள்ள போருளீர்ப்பு விசை -Gravitational Force [ஒவ்வொன்றும் மற்ற இன்னொன்றை ஈர்க்கிறது] இந்தி விரிவுக்கு எதிராகச் செயல்படுகிறது, அந்நாள் இதில் யார் பலசாலியோ அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

arul said...

good explanation