இந்த வலையில் தேடவும்

Sunday, November 2, 2014

பாருக்குள்ளே நல்ல நாடு

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் 
பாரத நாடு 



ஊழலிலே நிலை தாழலிலே 
தூற்றி வாழலிலே தீமை தாளலிலே
காலமெல்லாமும் அடுத்தவன் உழைப்பில் 
கழிப்பதிலே உயர் நாடு !

குப்பையிலே ஆண்கள் தொப்பையிலே -ரோட்டில் 
துப்பையிலே நேரம் தப்பையிலே 
நட்பின் பெயரால்  பகைவர்கள் சிரித்து 
நடிப்பதிலே உயர் நாடு!

குடியினிலே சண்டை அடியினிலே 
காசின் பிடியினிலே கொசுக் கடியினிலே 
அடிமைகள் போல் வேற்று நாட்டவர்க் குழைக்கும் 
அறிவினிலே உயர் நாடு!

தூக்கத்திலே மன ஏக்கத்திலே -லஞ்ச 
ஊக்கத்திலே பணிகள் தேக்கத்திலே 
மாக்களைப்  போலவே தாக்கி மடிந்திடும் 
மனிதரிலே உயர் நாடு 

கொலையினிலே யானை விலையினிலே 
ஏய்க்கும் கலையினிலே சதி வலையினிலே 
பழைய சாத்திரங்கள் பயனில்லை என்றறிந்தும் 
போற்றுவதில் உயர் நாடு!

காட்டத்திலெ போராட்டத்திலே -வெற்று 
ஆட்டத்திலே கட்சிக்  கூட்டத்திலே 
நாட்டினை ஆளும் நரிகளின் வஞ்சக 
நகைப்பினிலே உயர் நாடு 

கள்ளத்திலே தீமை உள்ளத்திலே -ஊரில் 
வெள்ளத்திலே சாலைப் பள்ளத்திலே 
நல்லவன் சுகமாய் வாழ விடாது 
நெருக்குவதில் உயர் நாடு!


பட்டியிலே மதுப் புட்டியிலே  -கஞ்சித் 
தொட்டியிலே கந்து வட்டியிலே 
வெட்டி வேலை செய்து வீண் வம்பு பேசும் 
வீரரிலே உயர் நாடு!


தூசியிலே தண்ணீர்ப் பாசியிலே - கயவர் 
ஆசியிலே விலை வாசியிலே 
ஊசியை வாங்கி ஒட்டகக் கணக்கெழுதும் 
ஊழலிலே உயர் நாடு!



மாசினிலே கோர்ட்டின் கேசினிலே 
ஆசிட் வீசினிலே ஸ்கூலின் பீஸினிலே 
பேசி மயக்கும் பெருந் தலைவர்கள் 
பிறப்பினிலே உயர் நாடு 


பகையினிலே போலி நகையினிலே 
மோச வகையினிலே மக்கள் தொகையினிலே 
புகையினில் திளைத்து புற்றுக்கு மாயும் 
பெருமையிலே உயர் நாடு 

சமுத்ரா 



4 comments:

தினேஷ்குமார் said...

மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிவிட்டீர்கள் மார்க்கம் உண்டாவது நாடு திண்டாடினாலும் முடியாது கருப்புபணக் கொல்லையர்கள் இருப்பில் வைத்ததை வைத்து நாட்டை விலைக்கு வாங்கினாலும் வாங்கி விடுவார்கள் ...

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைமிகு வரிகள் என்றாலும்
உண்மைதானே

G.M Balasubramaniam said...

பாரதி பாவம். இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

இரசிகை said...

bharathi meesaiyum kannum maari maari varuthu ovvoru variyilum.

nalla muyarchi..vertriyumthaan.

ippadillam kovathaik kotteetta bp lam varaathu.

vazhthukal.
:)