இந்த வலையில் தேடவும்

Saturday, November 15, 2014

கலைடாஸ்கோப்-111

கலைடாஸ்கோப்-111 உங்களை வரவேற்கிறது

Without mathematics, there's nothing you can do. Everything around you is mathematics. Everything around you is numbers.
Shakuntala Devi


111 -என்ற நம்பர் ஸ்பெஷலா என்று தெரியாது. ஒரு படத்தில், வடிவேலு நான் பத்து போட்டதுக்கே இப்படி பீல் பண்றேளே , அங்க ஒருத்தர் --- போட்டுட்டு எப்படி நடந்து வரார் பாருங்கோ! என்பார். அந்த விதத்தில் வேண்டுமானால் இது ஸ்பெஷல் என்று சொல்லலாம்.

ஒரு முறை ராமானுஜன், கணித அறிஞர் ஹார்டியுடன் ஒரு  டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தாராம்.அந்த டாக்ஸியின் நம்பர் 1729. ஹார்டி, அதைப் பார்த்து விட்டு 'என்ன ஒரு சலிப்பான நம்பர்' என்றாராம். அதற்கு ராமானுஜன், 'இல்லை, இது மிகவும் சுவாரஸ்யமான எண் ,1729 என்பது இரண்டு நேர்க் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகவும் சிறிய எண் என்றாராம்.


1729 = 1^3 + 12^3 = 9^3 + 10^3


எந்த ஒரு எண்ணுமே சலிப்பான எண் இல்லை என்கிறது 'interesting number paradox '. எப்படி என்றால், சலிப்பான எண்களின் குழு(set ) ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்'...உங்களுக்கு சலிப்பான எண்கள் என்று தோன்றுவதை ஒரு செட்டில் எழுதுங்கள்...e .g { 19, 37, 43, 93, 113....} இதில் முதலில் வரும் எண் , (19) சலிப்பான எண்களில் சிறியது என்றாகிறது. ஆனால் 'சலிப்பான எண்களில்  சிறியது' என்ற பண்பே அந்த எண்ணை ஒரு விதத்தில் ஸ்பெஷல் ஆக்கி விடுகிறது. எனவே அந்த எண் சலிப்பான எண் அல்ல . அதை செட்டில் இருந்து நீக்கி விடுவோம். இப்போது அடுத்த எண் (37) இதே லாஜிக்கின் படி அடிபட்டுப் போகிறது. எனவே uninteresting எண்களின் set காலி என்று நிரூபிக்கப்படுகிறது. வேறு விதத்தில் சொன்னால் எல்லா எண்களுமே interesting தான்....

Happy number என்று இன்னொன்று உள்ளது. 13 என்பது happy நம்பர். எப்படி என்றால் அதன் இலக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகை கடைசியில் 1 என்று வர வேண்டும்.

13

1 ^ 2 + 3 ^ 2 = 10
1 ^ 2 + 0 ^ 2 = 1

இப்படி எண்களை வைத்து சும்மா விளையாடுவதை recreational mathematics என்கிறார்கள். சரி, சும்மா விளையாட்டுக்கு என்றால் பரவாயில்லை. எண்களுக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று சொல்லும் நியூமராலஜி-யை சுத்த பேத்தல் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். exam ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், மொபைல் நம்பர், கார் நம்பர், employee நம்பர் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்து 7 வருதா, அப்பாடா என்று பெருமூச்சு விடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதாவது ஒரு க்ரூப் 'எண்கள் நமது கண்கள்' என்கிறது. இன்னொரு க்ரூப் 'எண்கள் வெறும் எண்கள் 'என்கிறது. பண்டிட் ----என்று ஒரு ந்யூமராலாஜி நிபுணர். நிறைய clients போலிருக்கிறது அவருக்கு. ஒரு போர்டு, marker இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நன்றாக சம்பாதிக்கிறார். பேர் சொல்லுங்க,  பிறந்த தேதி சொல்லுங்க, நேரம் சொல்லுங்க, கல்யாண நாள் சொல்லுங்க என்கிறார், சீரியசாக அதை போர்டில் எழுதுகிறார்.

பேர் என்ன சார்?
 TS ராதாக்ருஷ்ணன்
சரி
டேட் ஆப் பர்த் ?
20-8-1953

(போர்டில் ஏதோ கணக்கு போடுகிறார்)

20 இல் பிறந்திருக்கீங்க...சந்திரன் ஆதிக்கம் அதிகம் இருக்கும்....2, 11, 20 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல பலன்களையே கொடுப்பார். ஆனா பாருங்க, உங்க பேருக்கு 44 நம்பர் வருது . 44 நம்பர் வந்தால் (8)வாழ்க்கையில் போராட்டங்களும், கடும் சோதனைகளும் வரும்... ரைட்டா என்கிறார். அவரும் ரொம்ப சரி என்கிறார்.கைதட்டல்....

நிற்க. நம்மிடம் பொதுவாக, யாராச்சும் 'உங்க வாழ்க்கையில் எப்போதும் போராட்டம் தானே, சோதனை தானே?' என்றால் நாம் பெரும்பாலும் ஆமாம் என்று தான் தலையாட்டி வைப்போம். Nobody's life is a bed of roses! அவர்களின் போராட்டம் என்ன என்று பார்த்தால் அதிகபட்சம் காலை ஏழரை மணிக்கு எழுந்து , எட்டேகால் பஸ்ஸை பிடிக்க ஓடுவதாக இருக்கும்! சில பேருக்கு காலையில் பெட்டை விட்டு எழுந்திரிப்பதே பெரும் போராட்டம் தான்.

உங்க நம்பர் 8 வருகிறது. எனவே வாழ்க்கையில் எப்போதும் சிக்கல் தான். எனவே இதை மாற்றி விடுங்கள். உங்கள் பேர் இன்றிலிருந்து  T.S.R ராதாக்ருஷ்ணன். 46 வருகிறது. கூட்டுத்தொகை 1. ஓஹோன்னு இருப்பீங்க என்கிறார். 46 நாட்களில் நீங்க எங்கேயோ போகப் போறீங்க(?) என்கிறார்.

well , வாழ்க்கையை மாற்றுவது இவ்வளவு சுலபமா என்று தெரியவில்லை. சும்மா பெயரில் ஒரு R சேருங்க எல்லாமே நலம்; இனிமேல் போராட்டம் இல்லை; சோதனை இல்லை;  என்று சொல்வது அபத்தமாகத் தோன்றலாம்.  நம் வாழ்க்கையின் சூட்சுமம் வேறு எங்கோ இருக்கிறது.எனக்கும் அபத்தமாகவே தோன்றுகிறது. பண்டிட்ஜி நடுநடுவே குட்டிக் குட்டி ஆன்மீகக் கதைகளை சொல்கிறார். அவை வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கின்றன.


எந்தப் பேச்சாளராக இருந்தாலும் அவ்வப்போது குட்டிக் குட்டி கதைகள் சொல்லி ஆடியன்ஸ்சை மகிழ்விப்பது முக்கியம். ஹரிகதையில்  இது மிகவும் முக்கியமான அம்சம். உதாரணத்துக்கு ஒன்று  பார்க்கலாம் . நாரத கர்வ பங்கம்.


நாரதர் எல்லாருக்கும் பஞ்சாயத்து பண்ணி வைப்பவர். எல்லாருடைய கர்வத்தையும் பங்கம் செய்பவர். டான்ஸ் ப்ரோக்ராம் களில் சில நேரம் சத்யபாமா கர்வ பங்கம் என்று பார்த்திருப்பீர்கள் . சத்யபாமாவுக்கு நான் தான் கண்ணனின் பேவெரெட் என்ற கர்வம் வந்து விடுகிறது.  இரண்டாம் தாரத்துக்கு இது இயல்பு தான். மூத்தவள்  ஏதோ ஒருவிதத்தில் சலித்துப் போய் விட்டதால்தான் நம்மிடம் வந்தார் என்ற ஒரு நினைப்பு!இதை நாரதர் அறிந்து கொண்டு அவளுக்குப் பாடம் புகட்ட வருகிறார்.

நாரதர்: நாராயண, நாராயண!

பாமா: வாரும் நாரதரே, என்ன இந்தப் பக்கம்?

நாரதர்: நாராயண, கழுதை கெட்டால் குட்டிச் சுவரம்மா, எனக்கு கண்ணனை தரிசிப்பதை விட வேறென்ன வேலை?

பா: இங்கே யார் கழுதை, யார் குட்டிச்சுவர்???சரி ..விடுங்க. கிருஷ்ணர் இங்கே இல்லையே? ருக்மிணி வீட்டில் அல்லவா இருக்கிறார்?

நா: ஓ , அப்படியா? தப்பான இடத்துக்கு வந்து விட்டேன், ஒரு புருஷனை அவன் முதல் தாரத்தின் வீட்டில் தான் முதலில் சென்று பார்க்க வேண்டும் என்ற அறிவு கூட எனக்கு இல்லை, வயதாகி விட்டது இல்லையா? மூளை மழுங்கி விட்டது...கிருஷ்ணனுக்கு ,புறப்படுவதற்கு முன் ஒரு missed call ஆவது விட்டிருக்க வேண்டும்!

பா: ஹலோ, நாரதரே,  ராத்திரி இங்கே தான் தங்குவார். அங்கே சும்மா ஒண்ணு ரெண்டு மணிநேரம் தான்...வம்சம் சீரியல் முடிஞ்சதும் வந்திருவார்.

நா:  என்னம்மா இப்படி வெள்ளந்தியா இருக்கியேம்மா?  வம்சம் சீரியல் பார்க்கிறார்னு நெனைக்கிறே..... அங்கே வம்சத்தை வளர்க்கிற காரியம் பார்த்துண்டிருக்கார். கொஞ்சல் என்ன, குலாவல் என்ன? முதல் மனைவி மேல அவ்ளோ பாசம்னா ரெண்டாவதை ஏன் கட்டிக்கணும்?

பா: (குழப்பம்) அப்படியா சொல்றேள்? அங்கே போய் சும்மா அட்டெண்ட்டன்ஸ் போட்டுட்டு வர்றார் னல்ல நினைச்சேன்.

நா:  அய்யோ மண்டு, கொஞ்சம் சுதாரிச்சுக்கோ...இப்ப கூட பாரு, ஏதோ பாரிஜாத மலராம், ரொம்ப ஒசத்தியாம்,,,எங்கோ கண்காணாத தேசத்தில் கிடைக்கிறதாம். அதை கொண்டுவந்து அவள் தலையில் சூட்டி அழகு பார்க்கிறார். உன்னிடம் அதைப் பற்றி மூச்சு விட்டிருப்பாரா? ஒருநாள் கனகாம்பரம் வாங்கித் தந்திருப்பரா?

(நாரதர் இப்போது ருக்மிணி வீட்டுக்கு வருகிறார்)

 நாராயண , நாராயண

ருக்மிணி: வாருங்கள், தேவரிஷி,,,,ஆசனத்தில் அமருங்கள்...

நா: என் ஆசனம் இருக்கட்டும் அம்மா, கிருஷ்ணனின் ஆசனம் காலியாய் உள்ளதே, எங்கே அவர்?

ரு :  இப்போதான் பாமா வீட்டுக்குப் போனார்.

நா: நீ சந்தோஷமாய் வழியனுப்பி வைத்தாயாக்கும், காலம் தெரியாதவளாய் இருக்கிறாயே, கையில் தான் சக்கரம் வைத்திருக்கார், காலிலுமா சக்கரம் கட்டியிருக்கார்? அங்க தான் 24x 7 இருக்காரே? அப்படி என்ன அவசரம்?
காலில் வெந்நீர் ஊற்றியது போல?

ரு : காலில் வெந்நீர் அல்ல. கங்கை என்னும் தண்ணீர்! இல்லை முனிவரே, என் மேல் தான் அபிமானம், இப்போகூட காஸ்ட்லியான ஒரு பூ வாங்கிக் கொடுத்திருக்கார்.

நா: அய்யோ அசடே, உனக்கு பூ கொடுக்கலேம்மா,அல்வா கொடுத்திருக்கார்

ரு : புரியலையே...

நா:  என்னமோ சொல்லிட்டேன், நான் ஏன் குட்டையை குழப்பணும்...உனக்கு பூ வாங்கிக் கொடுத்துட்டு அங்கே வாரா வாராம் ஷாப்பிங் கூட்டிட்டுப் போய் பர்கர் சாப்பிடறார், போன வாரம் கூட ரெண்டு பெரும் ஐ மாக்ஸ்ல Interstellar பார்த்துருக்கா...

இப்படி குட்டையைக் கிளப்பிய நாரதர் கலகம் கடைசியில் நன்மையிலேயே முடிந்தது. கிருஷ்ண துலாபாரக் கதையை நாமெல்லாம் கேட்டிருப்போம்.

எல்லாருடைய கர்வத்தையும் தீர்க்கிறேன் என்று அவருக்கே ஒருநாள் கர்வம் வந்து விட்டது..பூனைக்கு யார் மணி கட்டுவது? பூனைக்கு மணிகட்ட குரங்கை தேர்ந்தெடுத்தார் பகவான்.

ஒருநாள் ஹனுமாரை சந்திக்கிறார் நாரதர்

ஆஞ்சநேயா , உன் இசையைக் கேட்டு ரொம்ப நாளாச்சு, கொஞ்சம் பாடிக் காட்டேன்.

கையில் வீணை இல்லையே...

இந்தா, என் மகதி வீணை, இதில் பாடு,,,, ஹமீர் கல்யாணி பாடு, கேட்கணும் போலிருக்கு.

அனுமார் பாடுகிறார். அவர் இன்னிசையில் எதிரே இருந்த மலை ஒன்று குழம்பாக உருகி ஓடுகிறது. அப்படியே இவர்கள் உட்கார்ந்திருந்த இடம் வரை வருகிறது. வீணை அதில் மாட்டிக் கொள்கிறது. அனுமார் பாட்டை நிறுத்துகிறார். ஓடிய குழம்பு அப்படியே மீண்டும் உறைந்து பாறையாய் நின்று விடுகிறது.

அந்தோ என் வீணை ஆப்பட்டுடுத்தே? என்று கலங்குகிறார் நாரதர்,

அனுமார், நாரதர், 'நீர் பாடுமே, உங்கள் பாட்டில் நதி மீண்டும் உருகி வீணை வந்து விடும்' என்கிறார்.

நாரதர் பாடுகிறார். பாடினார், பாடினார், பாடிக் கொண்டே இருந்தார், நாட்கள் நகர்ந்தனவே தவிர நதி அசைந்து கொண்டுக்கவில்லை.

கடைசியில் தோல்வியை ஒப்புக் கொண்ட நாரதர், 'அப்பா, அனுமா, சங்கீதத்தில் என்னை மிஞ்சியவன் யாருமில்லை என்ற இறுமாப்பில் இருந்தேன், என் கண்களைத் திறந்தாய்!, தயவு செய்து மீண்டும் பாடி என் வீணையை மீட்டுக் கொடு' என்கிறார்.


இப்படி, கதைகள் மூலமே, ஹரிகதைகள் மூலமே இசை இந்தியாவில் பரவியது. கச்சேரிகள் மூலம் அல்ல. இன்றைய இந்த 'கச்சேரி format' , மிகவும் பிற்காலத்தில் வந்தது. 100, 120 வருடங்களுக்கு முன்! அதற்கு முன் கச்சேரி என்று கிடையாது. மும்மூர்த்திகள் காலத்திலும் கிடையாது. வயலின் கூட இந்திய இசையில் கிடையாது. வயலின் வெளி நாட்டில் இருந்து work permit வாங்கிக் கொண்டு வந்தது. பின்னர் மெட்ராஸ் பிடித்துப் போய் க்ரீன்கார்ட் வாங்கிக் கொண்டு விட்டது!

இப்போது இசைக்கு எப்படியோ ஒரு format வந்து விட்டது. முதலில் வர்ணம்...இப்போது சில ஆர்டிஸ்டுகள் கச்சேரிக்கு முன் உரையே நிகழ்த்துகிறார்கள். காதில் ஜிமிக்கி ஆடுகிறது. பட்டுச் சேலை பரபரக்கிறது. நன்றாகப் பாடுகிறார்களோ இல்லையோ,  ஒரு frequent interval இல் பக்க வாத்தியத்தைப் பார்த்து சில மைக்ரோ மீட்டர் மந்தகாசப் புன்னகை சிந்துகிறார்கள்.  தீம் எல்லாம் கூட வைத்துப் பாடுகிறார்கள்.

[ஒரு கவிதை:

நின்னே பஜன

இந்த வருடம் கலைமாமணி கிடைக்குமா?
சபாவில் கூட்டமே இல்லையே?
ஏனோ இந்த வருடமும்
மத்தியான ஸ்லாட் தான் கிடைக்கிறது
மைக் சரியாக வேலை செய்யுமா?
புடவைக்கு மேட்சாக எடுத்து வைத்த
நெக்லஸ் மறந்து விட்டதே!
'ராமா, உன்னை அல்லால் ஒரு நினைவே இல்லை'
என்ற பொருள் கொண்ட கீர்த்தனையை
பாடகி ஆரம்பித்தார்...]

மிகப்பொதுவாக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு தியாகராஜ ஸ்வாமிகள், தன் ஓட்டு வீட்டில் பசி பட்டினி கிடந்து உஞ்ச விருத்தி எடுத்து பக்தி ஒன்றே பிரதானமாகப் பாடிய பாடல்களை இங்கே பணத்துக்காய், புகழுக்காய் ஏசி ஹாலில் அமர்ந்து கொண்டு பகட்டுக்கும் டம்பத்துக்கும் மத்தியில் பாடுகிறார்களே என்பது.

உதாரணமாக, த்யாகராஜர் கிட்டத்தட்ட ஒரு கையறு கிளையில் இதைப் பாடுகிறார்.

ராமா , உனக்கு உபசாரம் செய்ய, பணிவிடை செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த சந்தடியில் என்னை மறந்து விடாதே,சீதை இருக்கிறாள், அந்தரங்கமாக சேவை செய்ய லக்ஷ்மணன் இருக்கிறான், நீ கட்டளை இடாமலே உன் தேவைகளைப் புரிந்து கொண்டு நிறைவேற்ற எல்லாவற்றுக்கும் மேலாக அனுமன், உன் கண் அசைவைப் புரிந்து கொண்டு சேவையாற்ற!

இத்தனை பேர் இருக்கிறார்கள் ; இந்த ஏழையால் நமக்கு ஆவதென்ன என்று நினைத்து விடாதே, உன் அருளை வேண்டி நான் ஒருத்தன் இங்கு கதறிக் கொண்டிருக்கிறேன் என்பதை மறந்து விடாதே

க்ருப காவெலன நின்னேனி
கீர்தினி பல்குசுனுன்டக

உபசாரமு ஜெசேவாரு உன்னாரனி மரவகுரா

ఉపచారము జేసేవారున్నారని మరవకురా

అ. కృప కావలెనని నే నీ
కీర్తిని పల్కుచునుండగ


ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்.இதைப் பாடும்போது த்யாகராஜர் he meant it !!பாடகர் பாடும் போது அதை mean செய்கிறாரா என்று அவரைத்தான் கேட்க வேண்டும்.


உனக்கு எல்லா ராகமும் தெரிந்திருந்து என்ன பயன்? சுஸ்வரமாகப் பாடி என்ன பயன்? தாள சுத்தம், சாகித்ய சுத்தம்,ராக சுத்தம் இருந்தென்ன?  உலகில் உள்ள வாத்தியங்கள் எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு திருவிளையாடல் பாலையா மாதிரி  பாடினாலும் என்ன பிரயோஜனம்? main ingredient பக்தி இல்லையே என்று கேட்கிறார் புரந்தர தாசர்.

'தாள மேளகளு இத்து பிரேம இல்லத கான

ஹரி கேளனு ; ஹரி தாளனு '


உங்களுக்கு ஒரு விருந்து வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் ...கார்ன் சூப், டொமேடோ சூப்,சப்பாத்தி,ரொட்டி ,பட்டர் நான்,குல்ச்சா, மசாலா பாப்பட் , நவரத்ன குருமா ,நீல்கிரி குர்மா, ஆலு கோபி, பிந்தி பிரை , கேப்பெஜ் பொரியல் ,பாலக் பன்னீர்,குஜராத்தி கடி,கீமா மட்டர் ,தால் ,ராஜ்மா, ஜீரா ரைஸ், கீ ரைஸ், சின்சுவான் பிரைட் ரைஸ், மலாய் கோப்தா , கேப்சிகம் கறி ,வெஜ் பிரியாணி,ஒயிட் ரைஸ், கேரளா ரைஸ்,மஸ்ரூம் நூடுல்ஸ், ராய்தா,சௌத் சாம்பார், பெப்பர் அண்ட் ஜீரா ரசம்,டொமேடோ ரசம்,  ரசம், கர்ட் ரைஸ்,ஜாமூன், ப்ரூட் சாலட்,கட் ப்ரூட்ஸ்,ஐஸ் க்ரீம், டிஸ்யூ, டூத் பிக், பிங்கர் போல், etc etc இத்தனையும் இருக்கிறது.

ஆனால் உங்களுக்கு சரியான வரவேற்பில்லை. முகம் கொடுத்துப் பேசுவதில்லை, மரியாதை இல்லை, சலித்துக் கொண்டே பரிமாறுகிறார்கள், வெறும் தங்கள் பகட்டைப் காட்ட, பார் நான் எத்தனை பணக்காரன் என்று காட்ட, show off ! ;  இத்தனை அயிட்டத்தை நீ பார்த்தும் இருக்க மாட்டாய் என்ற தோரணையுடன்..அப்படிப்பட்ட விருந்தை என்ன தான் சுவையாக இருந்தாலும் நாம் ரசிப்போமா?? மோப்பக் குழையும் அனிச்சம் என்று வள்ளுவர் சொல்வது மாதிரி.

பக்தி இல்லாமல் பேகடா என்ன? பகுதாரி என்னடா என்கிறார் தாசர்.


இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த கச்சேரி format இப்போது வந்தது, வர்ணம், அப்புறம் விநாயகர் பாட்டு, சின்ன கிருதிகள் இரண்டு, ராக மாலிகை , மெயின் அயிட்டம் , தனி ஆவர்த்தனம், ராகம் தானம் பல்லவி, தில்லானா, போனால் போகிறது என்று கடைசியில் தமிழில் திருப்புகழ் , மங்களம் இப்படி!


முதலில் இசை ஹரிகதை வடிவத்திலேயே இருந்தது, ஹரிகதை, பஜனை, இப்படித் தான் அது வளர்ந்தது. சங்கீதமும், கோயிலும் , பக்தியும் பிரிக்க முடியாத அம்சங்களாய்  இருந்தன. போன நூற்றாண்டில் தான் சங்கீதம் கோயில்களையும், ஏழை பக்தர்களின் ஓட்டு வீடுகளையும் தெருக் கோடிகளையும் விவாகரத்து செய்து விட்டு மெஜெஸ்டிக் சபாக்களை மேரேஜ் செய்து கொண்டு விட்டது .

நாடகம், தெருக்கூத்து இவைதான் சினிமாவுக்கு முன்னோடி; ஆனால் சினிமா வந்ததும் அவை வழக்கொழிந்து ஒபோய் விட்டன; அதே போல் தான் ஹரிகதை கச்சேரிக்கு முன்னோடி; இப்போது அது அருகி விட்டது; ஏதோ சில பேர் செய்கிறார்கள்...uniqueness , originality இல்லை,, யாரோ ஒரு ஹரிகதை பிரபலத்தைப்  பின்பற்றி அவர் voice , mannerism , பாணி எல்லாவற்றியும் காபி அடித்து..


சரி....back to the topic !


நம்பர், alphabet எல்லாம் மனிதன் கண்டுபிடித்தது; அது எப்படி வாழ்க்கையை பாதிக்கும்? இயற்கைக்கு எண்களைப் பற்றித் தெரியுமா? Does Nature know how to count? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால்,,,, சரி நமக்கு இஷ்டமான physics ஐ எடுத்துக் கொள்வோம் :) physics என்ன சொல்கிறது?

Martin Rees என்ற விஞ்ஞானி   JUST SIX NUMBERS என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். இயற்கை ஒரு கை தேர்ந்த mathematician என்கிறார்.

முக்கியமான ஆறு எண்கள் பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளன என்கிறார். அந்த எண்களில் ஒரு மிகச் சிறிய மைக்ரோ மாறுபாடுகள் இருந்திருந்தாலும் பிரபஞ்சம் உருவாகி இருக்காது. இந்த 6 மாறிலிகள் (constants) நம் பிரபஞ்சத்தின் இருப்புக்குக் காரணமாகின்றன. உதாரணமாக N என்பது அணுவில் உள்ள கூலூம் விசைகளுக்கும் ஈர்ப்பு விசைக்கும் உள்ள விகிதம். இது மிகப் பெரிய எண் . இதில் ஒரு ஜீரோ குறைந்தாலும் நாமெல்லாம் வந்திருக்க மாட்டோம்.

பிரபஞ்சம் ஏன் இவ்வளவு கச்சிதமாக இருக்கிறது என்ற கேள்விக்கு anthropic principle என்ற ஒன்றை காரணம் சொல்கிறார்கள். நாம் பூமியில் இருப்பது மிக மிக மிக அதிர்ஷ்ட வசத்தால். கொஞ்சம் சூரியனுக்குப் பக்கத்தில் இருந்தால் வெந்து போவோம். கொஞ்சம் தூரத்தில் இருந்தால் உறைந்து போவோம். பக்கத்தில் வியாழன் இல்லை என்றால் விண்கற்கள் தாக்கியே செத்துப் போவோம். நிலா இல்லை என்றால் நம் ஆர்பிட்  நிலையாய் இராது;ஏன் எப்படி கச்சிதமாக இருக்கிறது ; யாராச்சும் இதன் blueprint ஐ டிசைன் செய்தார்களா என்று கேட்டால் 'அது அப்படி இருப்பதால் தான் நீ தோன்றி இந்தக் கேள்வியைக் கேட்க முடிகிறது' என்கிறார்கள். எப்படி சரியாக வட்டத்துக்குள் அம்பை எய்தீர்கள் என்று கேட்டால் 'ரொம்ப சிம்பிள், முதலில் எய்து விட்டு பிறகு வட்டத்தை வரைந்து கொள்வது' ...ரொம்பவே careful ஆக tune செய்யப்பட்டு பிரபஞ்சம் உருவானதா இல்லை குருட்டாம்போக்கில் உருவாகி மனித மூளைக்கு tune செய்யப்பட்டது போன்ற பிரமையை உருவாக்குகிறதா?

answer :  தெரியாது !

இன்னொரு முக்கியாமன எண் இந்த மூன்று. ஆன்மீகத்தில் மும்மூர்த்தி, மூன்று கண் மூன்று உலகம்  என்று என்னென்னவோ சொல்கிறோம். இயற்பியலில் இது எப்படி முக்கியம் என்றால் நம் பிரபஞ்சத்தில் மூன்று பரிமாணங்கள் (spatial dimensions ) உள்ளன. குறைந்தோ அதிகமாகவோ இருந்தால் நம்மால் இருக்க முடியாது. உதாரணம் 5th dimension ...இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். Interstellar விமர்சனத்துடன் :)))))))))


ஓஷோ ஜோக்:


லிட்டில் எர்னி பள்ளியில் இருந்து சீக்கிரமே வந்து விட்டான் .
" ஏன் சீக்கிரமே  வந்துட்டே' எர்னி என்றாள் அவன் அம்மா.
ஒண்ணுமில்ல...டீச்சர் மேஜைக்கு கீழ டைனமைட் குச்சி வெச்சுட்டேன்...
'எர்னி,, இது தப்பு, உடனே ஸ்கூலுக்கு திரும்பிப் போய் மன்னிப்பு கேளு'

எர்னி :  எந்த ஸ்கூல்?சமுத்ரா..3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மிக சுவாரஸ்யமாக ரசித்துப்படித்தேன். அருமை.!

G.M Balasubramaniam said...

அதானே பார்த்தேன் பௌதிகம் இல்லாமல் சமுத்ராவின் பதிவா.? ரசித்தேன்

Unknown said...

அழகான எண்களோடு பயணித்தேன்!

அருமை..!

நியூமராலஜியைப்பற்றி மறைத்துவைக்கப்பட்ட சூரியன் 'நிக்கோலா தெஸ்லா' கூட சொல்லியிக்கார்.


"If you only knew the magnificence of the 3, 6 and 9, then you would have a key to the universe. -Tesla"


( https://www.youtube.com/watch?v=inWnhZp_A-M )