இந்த வலையில் தேடவும்

Thursday, March 8, 2012

கலைடாஸ்கோப்-57

லைடாஸ்கோப்-57 உங்களை வரவேற்கிறது.


ஏக
===

After thirty, a body has a mind of its own.
Bette Midler

Age is a very high price to pay for maturity.
Tom Stoppard

“That man never grows old who keeps a child in his heart”
-Richard steele

போன வாரம் பிறந்த நாள் வந்தது.மார்ச் இரண்டு. ஓர் அமாவாசையில் வெள்ளிக் கிழமையில் நள்ளிரவில் உதித்த (?) அரிய (?)குழந்தைகளில் அடியேனும் அடக்கம். இத்தனை வயதாகிறதே (எத்தனை வயது என்பது ராணுவ ரகசியம்) இன்னும் ஒண்ணுமே செய்யவில்லையே என்று வருத்தப்பட்டதற்கு
நண்பர் ஒருவர் 'என்ன நீங்க,இப்படி சொல்லறீங்க, LIFE STARTS AT THIRTY' என்றார். ஆனால் முப்பது வயதுக்கு மேல் ஆன ஆளை நம்பாதே என்று கூட ஒரு பொன்மொழி இருக்கிறது. எதை நம்புவது? மேலும்,ஆண் நாற்பது வயதிலும் பெண் முப்பது வயதிலும் தம் அழகின் உச்ச கட்டத்தில் இருக்கிறார்கள் என்று கூட சொல்கிறார்கள் (ஓ அதான் அஜீத்குமார் தனக்கு நாற்பது வயது என்று வெளிப்படையாக சொன்னாரா?) . சரி. இவையெல்லாம் வயதாகிறதே என்று கவலைப்படுபவர்களுக்கு ஆறுதல் தருவதற்காக ஏற்பட்டிருக்கலாம்.எல்லாரும் எல்லா வயதிலும் அழகு தான்.மலர் போன்று இருக்கும் குழந்தை அழகு என்றால் பழுத்த பழம் போல இருக்கும் தொண்ணூறு வயது தாத்தா ஒருவித அழகு.சும்மா, அழகையும் வயதையும் ஏன் கலப்படம் செய்ய வேண்டும்?

நம் மனதின் ஒரு பகுதி உனக்கு வயதாகிறது என்று எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. (வெய்யிலில் பேட் எடுத்துக் கொண்டு கிரிக்கெட் ஆடக் கிளம்பும் போதும், ஏதோ ஒரு உத்வேகத்தில் லிஃப்டை புறக்கணித்து மாடிப்படி ஏற எத்தனிக்கும் போதும், ஒரு வாரமாகியும் மாற்றாத எண்ணெயில் பொறித்த மிளகாய் பஜ்ஜியை சாப்பிட எத்தனிக்கும் போதும், ஆட்டோ எல்லாம் எதற்கு நடந்தே போகலாம் என்ற முரட்டு தைரியத்தில் உறவினர்களிடம் இயம்பும் போதும் இந்த மனம் அவசரமாக மேலே வந்து நம்மை எச்சரிக்கும். இன்னொரு பகுதி மனம் இருக்கிறது, 'நீ இன்னும் யூத்து தாண்டா கண்ணா , வாழ்க்கையை அனுபவி' என்று நம்மை அவ்வப்போது உற்சாகப்படுத்தும் இது.

என்னைப் பொறுத்த வரை 'வயது' என்பது ஒரு விதமான MENTAL PHENOMENON . உடலின் வயதை விட மனதின் வயது தான் முக்கியம். இருபது வயதே ஆன ஒரு இளைர் தாத்தா மாதிரி பேசுவதைப் பார்த்திருப்பீர்கள் (அல்லது கேட்டிருப்பீர்கள்). (அரட்டை அரங்கங்களில் குழந்தைகள் ஐம்பது வயதுக் கிழம் போல பேசுவது வேறு விஷயம். திருக்குறள் ஒப்புவிப்பதன் முன்னேறிய வடிவம் அது.அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.) அதே போல 50 + வயது ஆனாலும் டி-ஷர்ட் , ஜீன்ஸ் பேன்ட் எல்லாம் போட்டுக் கொண்டு தன்னை
இளைஞனாகக் காட்டிக்கொள்ள எத்தனிக்கும் பார்ட்டிகளையும் பார்த்திருக்கலாம். இது தவறு என்று சொல்லவில்லை. சில சமயம் மனது உடலை முந்திக் கொண்டு வளர்ந்து விடுகிறது. சில சமயம் உடல் வளர்ந்தாலும் மனம் மெதுவாக ஆமை வேகத்தில் வளர்கிறது. உடலும் மனமும் இந்தக் காலத்தில் ஒரே ரேட்டில் வளர்வது கொஞ்சம் அபூர்வம் தான். குழந்தைகள் சிலசமயம் பிஞ்சிலே பழுத்தது போல பேசுவதும், வயதானவர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதும் இயல்பு தான். ஆனால் அதுவே நிரந்தரம் ஆகி விடக் கூடாது.ONCE IN A WHILE , ok ...

அவ்வையார் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டு இருபதில் இருந்து அறுபதுக்கு ஒரேயடியாக ஜம்ப் ஆகி விட்ட கதை ஒன்று உண்டு.இயற்பியல் விதிகள் படி இது சாத்தியம் இல்லை.தனக்கு அறுபது வயது MATURITY வர வேண்டும் என்று வேண்டுமானால் பிள்ளையாரிடம் கேட்டிருக்கலாம்.

வயதானவர்கள் மீண்டும் குழந்தைகளாக மாறி விடுகிறார்கள் என்று சொல்வதுண்டு.இது பெரும்பாலும் உண்மைதான். குழந்தையாக இருக்கும் போது மனிதன் சின்னச் சின்ன விஷயங்களை விழைகிறான். சாக்லேட், கரடி பொம்மை , பஸ் பயணம், கோலிகுண்டு ..பிறகு பெரிய பெரிய விஷயங்களுக்கு ஆசைப்பட்டு (உலகை அளப்பேன், வானை வளைப்பேன் etc ), அது அபத்தம் என்று புரிந்து கொண்டு வயதானதும்
மீண்டும் நெய் முறுக்குக்கும் நேந்திரம் பழத்துக்கும் ஆசைப்பட ஆரம்பித்து விடுகிறான்.இப்போது ஒரு ஜோக். (so called மீள் ஜோக்)

எழுபது வயதான முல்லா நசுருதீன் தன் தொண்ணூறு வயதான தந்தையை அழைத்துக் கொண்டு ஒரு மனநல டாக்டரிடம் வந்தார்....

"டாக்டர்....எங்க அப்பா தினமும் நிறைய நேரம் பாத் ரூமில் ஒரு வாத்து பொம்மையை வைத்துக் கொண்டு தண்ணீரில் விளையாடுகிறார்" என்றார்....

டாக்டர் " முல்லா..பாருங்கள் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை....வயதானவர்கள் குழந்தை போல ஆகி விடுகிறார்கள் ....அவர் பிறரை தொந்தரவு செய்யாத வரை இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார்...

முல்லா "ஆனால் டாக்டர், அது என்னுடைய வாத்து பொம்மை" என்றார்....


த்வி
====

* இந்த தளத்தில் கவிதைகள் (சில) நன்றாக இருக்கின்றன. சேம்பிளுக்கு இரண்டு:

அப்போது,
டேய் புது ரேடியோ
நீ தொடாதே,
என்றார் என் அப்பா!
இப்போது,
அப்பா புது கம்ப்யூட்டர்
நீங்கள் தொடாதீர்கள்,
என்கிறான் என் மகன்!

காதலி: என்மீது உன் காதல் எவ்வளவு?
காதலன்: வானம் அளவு!
காதலி: இது எல்லாரும் சொல்றது!
காதலன்:கடலின் ஆழம்!
காதலி: இத யார்தான் சொல்லல?
காதலன்: பூமி அளவு
காதலி: ச்சச்ச
.
..
...
....

காதலன்:ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு!!
காதலி: அய்யோ ஐ லவ் யூ டா

** இன்று ஊர் உலகத்தில் இல்லாத அதிசயமாக காலையில் சீக்கிரமே (அதாவது ஏழு மணிக்கே) திருவிழி மலர்ந்து விட்டேன். வெளியே வந்து பார்த்த போது தான் அதிகாலையில் உலகம் (பெங்களூர்) எத்தனை அழகாக இருக்கிறது என்று தெரிந்தது. கண்ணை உறுத்தாத ஆரஞ்சு பந்து போல சூரியன், பறவைகள் கானம், மிக மிக லேசான பனி..(சரி சரி மேட்டர சொல்லு!)

அப்போது எதிரே இருந்த மரத்தில் வினோத பறவை ஒன்று வந்து அமர்ந்தது.பெயர் தெரியவில்லை.வெள்ளை நிறம். பறவை சின்னது தான். வால் மட்டும் மிக நீளம். சுமார் ஒரு அடி நீளத்துக்கு இரண்டாகப் பிளவு பட்ட வெள்ளை நிற வால்.அந்தப் பறவை பறப்பதைப் பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. வழக்கம் போல பறக்காமல் பாம்பு ஊர்வதைப் போல பறந்தது. வினோத வால் இருப்பதால் அப்படிப்பட்ட உந்துசக்தி கிடக்கிறது போலும்! கேமரா ரிப்பேர் ஆகி விட்டதால் படம் எடுக்க முடியவில்லை . பறவையின் பெயர் என்ன என்பதை இயற்கை ஆர்வலர்கள் யாராவது சொல்லவும். பெயர் தெரிந்து கொண்டால் மட்டும் என்ன பெரிதாக நிகழப் போகிறது? STILL அது இயற்கையின் அதிசயம் தான்.ஏன் காக்கா கூட அதிசயம் தான். என்ன அது அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும் தினமும் பார்ப்பதாலும் அதை நாம் கண்டுகொள்வதில்லை.போட்டோ எடுப்பதில்லை!


த்ரி
====

சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள். அது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். I DO ACCEPT ..ஆனால் இது எப்படி இருக்கிறது என்றால் ஜி.என்.பி கல்யாணி பாடி விட்டார்; சந்தானம் மோகனம் பாடிவிட்டார். இனிமேல் யாரும் கல்யாணி மோகனம் பாடக்கூடாது என்பது போல இருக்கிறது. ஒருமுறை நீங்கள்
ஜி.என்.பியின் 'வாசுதேவயெனி ' யையோ சந்தானத்தின் 'நன்னு பாலிம்ப' வோ கேட்டு விட்டால் நீங்கள் பாடும் போது அந்த INFLUENCE வராமல் தவிர்க்க முடியாது. அவ்வளவு PERFECT ஆகப் பாடி இருப்பார்கள்.அது போல ஜனரஞ்சகமாக எழுதும் அல்லது எழுத முயற்சிக்கும் எல்லாருக்கும் சுஜாதா பாணி கொஞ்சம் இருந்தே தீரும். அது அச்சு அசல் அப்படியே இருந்து
படிப்பவர்களை எரிச்சலடையச் செய்யாமல் அங்கங்கே எட்டிப் பார்த்தால் அது 100 % OK என்றே தோன்றுகிறது.

சதுர்
=====
அவ்வப்போது தமிழ் இலக்கணம் பார்த்து வருகிறோம்.இன்று 'விகாரம்' என்றால் என்ன என்று பார்க்கலாம்.

செய்யுளில் எதுகை மோனை தளை இவையெல்லாம் சரியாக வர வேண்டும் என்று தவிர்க்க முடியாமல் (கவனிக்கவும் எப்போதும் அல்ல) சில சமயங்களில் வார்த்தைகளை வேண்டுமென்றே மாற்றுவது.வெட்டுவது, ஓட்டுவது, நீட்டுவது.நகை செய்யும் போது கற்களை எப்படி அடித்து திருத்தி பொருத்துகிறோமோ அப்படி செய்யுளில் அழகு வரவேண்டும் என்று எழுத்துகளை நம் இஷ்டம் போல மாற்றுவதற்கு தமிழ் இலக்கணம் அனுமதி அளிக்கிறது.உதாரணம்:

ஈசன் எந்தை இணையடி நீழலே ! - நிழல் என்பதை நீழல் என்று நீட்டலாம். குழந்தைகளைப் பார்த்து ச்சோஓ
ஓ ஸ்வீட் என்று பெண்கள் சொல்வது இதில் சேருமா என்று தெரியவில்லை.அது அளபெடை என்று நினைக்கிறேன். தமிழ் அறிந்தவர்கள் சொல்லவும்.

கம்பர் சில இடங்களில் குரங்கு என்று சொல்லாமல் குரக்கு என்று சொல்வார்.இதற்கு வலித்தல் விகாரம் என்று பெயர். டேய் குரக்கு, இன்னிக்கு அடிக்கலாமா சரக்கு என்று உங்கள் நண்பர்களிடம் நீங்கள் கவிதை பேசலாம். தமிழ் இலக்கணப்படி 100 % allowed !

தேவையென்றால் சில வார்த்தைகளின் தலையையே வெட்டி விடலாம். உதாரணம் தாமரை விழி என்பதை மரை விழி என்று சுருக்கலாம்.

நினைத்தேன் என்பதை நினைந்தேன் என்று சொல்வதும் விகாரம் தான்.

பஞ்ச
=====

கையை நட்புக்கு ஒப்பிடுவார் வள்ளுவர்.(உடுக்கை இழந்தவன் கைபோல) . நமக்கெல்லாம் முதலில் உற்ற நண்பன் நம் (வலது) கைதான். அதற்கப்புறம் தான் கணேஷ், சுரேஷ், கமலேஷ் எல்லாரும்.ஆனால் அந்தக் கையே நமக்கு எதிரியானால் ? தன் கையே தனக்கெதிரி. இதற்குப் பெயர்
Alien hand syndrome ...நம்முடைய கை மூளையின் கட்டுப்பாட்டை விட்டு விலகி அதுபாட்டுக்கு செயல்படுவது. (கொடுமை இல்லையா?) .மூளையின் இரண்டு அரைக் கோளங்களுக்கு இடையே ஏற்படும் Communication gap -ஆல் இது ஏற்படுகிறதாம். இந்தக் கை எனக்கு வேண்டாம். இது எதையாவது செய்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. (சில சமயத்தில் போய் நெருப்பை தொட்டு விடுமாம்!)இதை சர்ஜரி செய்து எடுத்து விடுங்கள் என்று இந்த சின்ட்ரோம்-பாதித்த நோயாளிகள் டாக்டர்களிடம் கெஞ்சி இருக்கிறார்களாம்.

நம்மில் பலருக்கு வன்முறைகளின் போது இந்த
Alien hand syndrome எங்கிருந்தோ வந்து விடுகிறது.புத்தியைக் கேட்காமல் நீ கொஞ்ச நேரம் கம்முன்னு கட என்று சொல்லி விட்டு கை, அதுபாட்டுக்கு கற்களை எடுத்து வாகனங்கள் மேல் எறிகிறது.அது பாட்டுக்கு தீக்குச்சியை உரசி தீ வைக்கிறது. அருவாளைத் தூக்குகிறது.Yes , we all have an alien hand at times!

ஷஷ்
=====

ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி '
நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'

முத்ரா


16 comments:

Kumaran said...

தங்களது பதிவுகளை படிப்பதே அதிக சுவாரஸ்யம்.பல தகவல்களை ஒன்றினைத்த நல்ல தொகுப்பாக இருக்கும்.மிக்க நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

Jayadev Das said...

முல்லா நசுருதீன் , [ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி] இரண்டு ஜோக்குகளும் ... எதிர்பாராத முடிவுகள்......சூப்பர்.... :))

Jayadev Das said...

\\சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள். அது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.\\ நான் அவர் தினமணிக் கதிரில் ஒரு தொடர் எழுதியிருந்தார், கிரிக்கெட் + காதல் பற்றி. அதற்க்கப்புறம் அவ்வளவாக அவரது எழுத்துக்கள் எதுவும் படித்ததில்லை, எனவே எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. ஹா..ஹா..ஹா...

Jayadev Das said...

\\இன்று 'விகாரம்' என்றால் என்ன என்று பார்க்கலாம்.\\ ரிலையன்ஸ் காரன் என்னென்னவெல்லாம் அவன் கம்பனிக்கு சாதகமோ அதையெல்லாம் நாட்டில் சட்டமாக்கி விடுவான். எந்த ஆட்சி வந்தாலும் இது நடக்கும். அவன் செய்வது எல்லாம் 'சட்டப் படி' சரியாகிவிடும். அதே மாதிரி, இவங்க எதை எழுதினாலும் அதற்க்கு ஒரு இலக்கண விதியை ஏற்ப்படுத்தி விட்டால் முடிந்தது கதை. 'இலக்கணப் படி' எல்லாம் சரியாகி விடும். :))

Jayadev Das said...

\\இன்னொரு பகுதி மனம் இருக்கிறது, 'நீ இன்னும் யூத்து தாண்டா கண்ணா , வாழ்க்கையை அனுபவி' என்று நம்மை அவ்வப்போது உற்சாகப்படுத்தும் இது.\\ மனம் எப்பவுமே யூத்துதான், வயசாவதாக நினைப்பது நாமாக இம்போஸ் செய்துகொண்டது அல்லது அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே நம்மை மெஸ்மரைஸ் செய்வது தானே தவிர வேறொன்று மில்லை.

அகல்விளக்கு said...

எலக்ட்ரிகல் என்ஜினியர் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்...

எல்லாமே சூப்பர்... :-)

Uma said...

//சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள்//
எனக்கு அப்படி ஒண்ணும் தோணலை...
//இந்த தளத்தில் கவிதைகள் (சில) நன்றாக இருக்கின்றன// பல கவிதைகள் நல்லா இருக்கு...

Aba said...

ஜோக்ஸ் சூப்பர்.. இப்படி A-யை விட்டு திருந்திவிட்டீர்கள் என நினைக்கும் வேளையில் அடுத்த கலைடாஸ்கோப் ஏமாற்றிவிடுகிறது...

Mental Age, பலநேரங்களில் (வெட்டியாக இருக்கும் நேரங்களில்) நான் மனதளவில் விவாதிக்கும் விஷயம். சில காட்சிகளிலும் புத்தகங்களிலும் வயதைக் காரணம்காட்டி ஒரு குறிப்பிட்ட குழுவினரை தடைசெய்வது எனக்கு நியாயமாகப்படவில்லை. ஐம்பது வயதிலும் மனமுதிர்ச்சியற்ற பலரை நான் நேரில் கவனித்திருக்கிறேன்... இந்த சென்சார்களுக்கு வேறு ஒரு reasonable வகையில் எல்லைகளை விதித்தல் நலம்.

சார்வாகன் said...

super

ஹாலிவுட்ரசிகன் said...

எக்கச்சக்கமான விடயங்களை பற்றி அழகான எழுத்துநடையில் சொல்லியிருக்கிறீங்க. பதிவு பெரிசானாலும், இன்ட்ரஸ்டிங்கான ரைட்டிங் தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறது.

Philosophy Prabhakaran said...

// சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள். அது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். //

இது பொறாமையுணர்ச்சியின் ஒருவித வெளிப்பாடு என்று குஜிலி குசும்பன் தன்னுடைய புத்தகத்தில் Hulle is jaloers op jou என்று ஆப்பிரிக்க மொழியில் குறிப்பிட்டிருக்கிறார்... ஹாரிஸ் ஜெயராஜ் ஓ மகசியா ஓ கியாலா என்று சொன்னதும் இதுவும் ஒன்றா என்று தெரியவில்லை... ஆப்பிரிக்க மொழி அறிந்தவர்கள் சொல்லவும்...

Philosophy Prabhakaran said...

ஒரு வாரமா பதிவை மட்டும் படிச்சிட்டு, குறிப்பா

http://www.samudrasukhi.com/2012/03/blog-post.html

இந்த பதிவை படிச்சிட்டு சமுத்ராவுக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சுன்னு நினைச்சேன்... இப்பதான் பின்னூட்டங்களை படித்தேன்... செம காமெடி...

suvanappiriyan said...

எல்லாமே சூப்பர்... :-)

adhvaithan said...

ekaha, dwihi, trihu, chathurthaha, panchaha, sashtihi is the actual counting if you have intended to make it in sanskrit.

ஸ்ரீராம். said...

இவ்வளவும் யோசித்து எப்படித்தான் எழுதுகிறீர்களோ....! பாகிஸ்தானியின் தனக்குத் தானே ஆப்பு படிக்கப் பாவமாய் + சிரிப்பாய் இருந்தது! முல்லாவும்.

அப்பாதுரை said...

பைசீஸா நீங்களும்? வாழ்த்துக்கள்.
பாகிஸ்தானி... why?