இந்த வலையில் தேடவும்

Wednesday, August 24, 2011

மெல்லத் தமிழ் இனி வாழும்!!!

இது மணற்கேணி- 2010 இற்கு அனுப்பிய கட்டுரை. வழக்கம் போல ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை. எனவே 'யான் பெற்ற
துன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நல்ல எண்ணத்தில் இதை வெளியிடுகிறேன்.


மெல்லத் தமிழ் இனி வாழும்
===============================

முதலில் என்னை ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது தான். ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகக் கேட்டிருக்கிறோம் ...தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. தமிழுக்கு இணையான தொன்மையுடையதாய்க் கருதப்படும் சமஸ்கிருதம் கூட இன்று பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே உயிர் வாழ்கிறது.

ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல் (continuously updated ) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்பு மேலிடுகிறது.

இன்றைய ஆதிக்க மொழிகள் பல விதை வடிவில் தூங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ் விருட்சமாக வளர்ந்து நின்று "எழுத்து எனப்படுவ அகரம் முதல்" என்று ஆரம்பித்து செம்மையான ஒரு இலக்கண நூலை வடிக்கும் அளவு உயர்ந்திருந்தது என்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயம்.

அரிதான ஒரு பொருள் நம் அருகில் இருந்தால் அதன் மதிப்பு நமக்குத் தெரியாது என்பார்கள்.நம் தாய்மொழியைப் பொறுத்தவரை அது உண்மையென்றே தோன்றுகிறது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஓர் உயர்ந்த மொழியைப் பேசுகிறோம் என்ற கர்வம் கலந்த பெருமை தமிழ்நாட்டில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழ் நாட்டிலேயே திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.நாடாளுமன்றங்களில் தமிழில் பேச மந்திரிகள் தர்மசங்கடமாக உணர வேண்டியுள்ளது

"மெல்லத் தமிழினி வாழும்"- இந்த வாக்கியத்தை இப்போது கொஞ்சம் அலசலாம்..இப்போது தமிழ் எங்கெல்லாம் 'வாழ்ந்து' கொண்டிருக்கிறது என்று முதலில் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.பாடப் புத்தகங்களில் தமிழ் பன்னிரண்டாம் வகுப்பு வரை வாழ்ந்து விட்டு பின்னர் மறைந்து விடுகிறது. மொழிப் பாடமாகக் கூட தமிழை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை .அப்படியே போனால் போகட்டும் தமிழையும் படிப்போம் என்று தேர்ந்தெடுத்தாலும் மதிப்பெண்களுக்காக மட்டும் "தேரா மன்னா செப்புவதுடையேன்" என்று மனப்பாடம் செய்து விட்டு, தேர்வு முடிந்த மறுநாளே மாணவர்கள் கண்ணகியை மறந்து விடுகிறார்கள். "வாயிற் கடைமணி நடுநா நடுங்க" என்று வாசிக்கும் போது எத்தனை பேருக்கு பரவசத்தில் மனதுக்குள் மணி ஒலிக்கும் என்பது தெரியவில்லை.

அறிவியல் தமிழின் நிலைமை இன்னும் பரிதாபம். "Mass Density Variation " என்பதை 'பிண்டத் திணிவு ஏற்ற இறக்கம்" என்றெல்லாம் சொல்ல வேண்டி வருமோ என்று பயந்தே மாணவர்கள் பலர் தமிழ் வழிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பதில்லை போலும்..

தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டியதுமே தமிழ் தன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது என்பதுதான்.வணிக மயமாகிவிட்ட இன்றைய உலகத்தில் ஆங்கிலம் போன்ற "வணிக ரீதியான" மொழிகளுக்கு முன் தமிழ் போன்ற "கவித்துவமான" மொழிகள் "Utilitarianism" என்ற கொள்கையின் படி பின் தள்ளப்பட்டு விடுகின்றன.

தமிழ்த் திரைப்படங்களில் தமிழ் வாழ்கிறதா என்றால் அவைகளின் தலைப்பிலும் அவ்வப்போது அரிதாகக் கேட்கும் "முன்பே வா என் அன்பே வா" போன்ற பாடல்களிலும் ஓரளவு வாழ்கிறது எனலாம். பாடப் புத்தகங்களால் செய்ய முடியாதவற்றை திரைப்படப் பாடல்கள் சில சமயங்களில் செய்து விடுகின்றன. "குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்" என்ற திருவாசகமும் "வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆண்டாள் திருவாய்மொழியும் திரையிசை இல்லாவிட்டால் இளைஞர்களின் வாயில் நுழைந்திருக்குமா என்பது சந்தேகம்.

தொலைக்காட்சிகளில் தமிழ் வாழ்கிறதா என்றால் 'சீரியல்கள்' மூலம் ஓரளவு வாழ்கிறது என்று தோன்றுகிறது. பொதிகை போன்ற சானல்கள் மட்டும் திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் அவ்வப்போது விடாப்பிடியாக நினைவுபடுத்துகின்றன. சில சானல்கள் தமிழ் பேசினால் தங்கக் காசு என்றெல்லாம் கூட அறிவிக்கின்றன.. புத்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் தமிழ் ஓரளவு செழிப்புடனேயே இருக்கிறது. என்ன தான் ஆங்கில நாளிதழ்கள் இருந்தாலும் கையில் ஒரு டம்ளர் தேநீருடன் தமிழ் நாளிதழ் ஒன்றைக் காலை வேளையில் புரட்டும் சுகமே தனி அல்லவா?

சரி இனி தமிழிசைக்கு வருவோம்..இது விவாதத்திற்கு உரிய ஒரு தலைப்பு. சுருக்கமாகச் சொன்னால் கச்சேரிகளில் போனால் போகட்டும் என்று பாடகர்கள் பாடும் "யாரோ இவர் யாரோ", "தாயே யசோதா" போன்ற பாடல்களில் தமிழின் உயிர் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் தாளத்தோடு ஒட்டி வர வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை பகுபத உறுப்பிலக்கணம் செய்து விடுகிறார்கள் பாடகர்கள்..

ஆச்சரியப் படுத்தும் இன்னொரு விஷயம் பேச்சு வழக்கில் எவ்வளவோ மருவி கொச்சைப்படுத்தப்பட்டு பல இடங்களில் பலவாறு பேசப்பட்டு வந்தாலும் எழுதுவதற்கு எல்லாரும் "செந்தமிழ்" என்ற 'standard ' ஐ பயன்படுத்துவது தான். பேச்சு வழக்கில் 'உன் மகன் எங்கே?' என்று கேட்டல் 'சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்" என்று ஆரம்பித்து கவிதை பாடுவது என்பது அசாதாரணமான ஒன்று தான்.

அடுத்தபடியாக 'blogspot ' என்று அழைக்கப்படும் வலைப்பூக்களில் தமிழ் கொஞ்சம் தவழ்கிறது. அவற்றில் பெரும்பாலானவை பொழுதுபோக்குக்காக எழுதப்பட்ட குப்பைகள் என்று ஒரு கருத்து நிலவினாலும் தமிழார்வம் கொண்ட வலைப்பதிவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சரி, இவைகளால் மட்டும் தமிழ் இனி வாழ்ந்து விடும் என்று நாம் மெத்தனமாக இருந்து விட முடியுமா? 'மெல்லத் தமிழினி வாழும்' என்று நூறு சதவிகிதம் நம்பிக்கையுடன் நாம் சொல்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.

'மொழி' என்பது வெறுமனே நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சாதனம் மட்டும் அன்று. (நிறைய பேர் அப்படி நினைப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று) மொழி என்பது நம்முடன் மனோதத்துவ ரீதியாக இணைக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. முன்பின் தெரியாத வெளிநாடு ஒன்றில் எங்கேனும் நம் தாய்மொழி கேட்டால் நாம் பாலைவனச் சோலை போல உணர்வது இதனால் தான். கவிஞர்கள் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று புளகாங்கிதமடைந்து பாடுவதும் இதனால் தான்.

ஆனால் தாய்மொழியின் மீது உள்ள அதீதமான உணர்ச்சிப்பூர்வமான பற்றே அதன் வளர்ச்சிக்கு சில சமயம் தடையாக அமைந்து விடலாம் என்பதை நாம் மறுக்கக் கூடாது. உதாரணமாக உலகெங்கிலும் வியாபித்திருக்கும் மொழியான ஆங்கிலத்தில் எந்த ஒரு கவிஞரும் குறைந்த பட்சம் "I Love English " என்று பாடியிருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் இந்த அதீதமான தமிழ்ப் பற்று ஏனோ சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும், ஆதாயம் தேடும் கவிஞர்களிடமும் ,இலக்கிய வாதிகளிடமும் மட்டுமே மிகுதியாக இருக்கிறது. மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்களுக்கு தமிழ் என்பது வெறும் உணர்சிகளை வெளிக்காட்டும் ஒரு சாதனமாகவே இருக்கிறது. அரசியலில் இல்லாத,கவிஞரல்லாத,இலக்கிய வாதியாக இல்லாத ஒருவர் சிறிதே தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினாலும் அவரை தனிமைப்படுத்திப் பார்க்கும் மனோபாவம் ஏனோ நம்மிடம் இருக்கிறது. உதாரணமாக சமீபத்திய நாளிதழ் ஒன்றில் படித்த ஒரு சம்பவம்: தமிழ்ப்பற்று கொண்ட
பேருந்து நடத்துனர் ஒருவர் பயணிகளிடம் தூய தமிழில் "ஐயா, அமருங்கள், அனைவரும் பயணச் சீட்டு வாங்கி விட்டீர்களா" என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாராம். அவர் அப்படிப் பேசுவதைக் கேட்டு பயணிகள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம். தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் சிரிக்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனைக்குரிய ஒரு செய்தி? இதே பிரான்சு நாட்டில் பிரெஞ்சில் பேசினாலோ, வட மாநிலம் ஒன்றில் ஹிந்தியில் பேசினாலோ இவ்வளவு ஏன் , கர்நாடகத்தில் "சீட்டி தொகளி" என்று ஆங்கிலம் கலக்காமல் பேசினாலோ யாரும் சிரிப்பதாகத் தெரியவில்லை.

எனவே "மெல்லத் தமிழினி சாகும்" என்று பாரதி பயந்தது நடந்து விடாமல் இருக்க நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். முதலாவது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். தமிழர்கள் தான் உலகின் பூர்வீகக் குடிகள்...தமிழைப் பழிப்பவனை வெட்டு, குத்து என்றெல்லாம் உணர்ச்சிப் பூர்வமாக மக்களை உசுப்பி விடுவதை நிறுத்த வேண்டும். அரசியல் சேர்க்கை காரணமாக தமிழனுக்கு வெளி மாநிலங்களில் மதிப்பும் வரவேற்பும் குறைகிறது என்பதை மறுக்க முடியாது. சென்னையில் சர்வக்யர் சிலையை வைத்த பின்னரே பெங்களூருவில் திருவள்ளுவரின் சிலையை நம்மால் திறக்க முடிகிறது.

தமிழர்கள் 'இந்தி' எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது முன்னோக்குப் பார்வையற்ற ஒரு செயல் என்று கருதுகிறேன். இதன் காரணமாகவே தமிழன் என்றால் முரடன்; பிற மொழிகளை வெறுப்பவன் என்ற முத்திரை நம் மீது குத்தப்பட்டு விட்டது. உண்மை என்னவென்றால் தமிழை உண்மையாக ஒருவர் நேசித்தால் அவர் மற்ற மொழிகளையும் நேசிப்பார் என்பது தான். 'தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளையும் விரட்டு' என்று கூக்குரலிட்டால் அவர் தமிழையும் நேசிக்கவில்லை என்று சொல்ல முடியும்.

அடுத்து தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் தமிழை வலுக்கட்டாயமாக நுழைக்க முயல்வது. அறிவியல் நூல்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் படுத்தப்பட்டு தொல்காப்பியம் போன்று எழுதப்பட்டிருந்தால் அவற்றை யார் தான் படிப்பார்கள்?..எழுதியவர் கூட இன்னொரு முறை படிக்க மாட்டார். "Magnetic Dipole Reversal simulation "என்பதை "காந்த இரட்டை துருவ திருப்புதலின் போலி கணித வடிவம்" என்றெல்லாம் கூறுவது. சில சமயங்களில் பாடப் புத்தகங்களில் கூட இப்படியே கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று மாணவர்களிடையே தமிழின் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறோம் நாம். தமிழ் போன்ற மொழிகள் கவித்துவமான மொழிகள். உணர்வு சார்ந்த மொழிகள். இவற்றை தொழில்நுட்ப மொழிகளின் தரத்திற்கு உயர்த்துவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவது தேவையற்ற ஒரு செயல். அவ்வாறு செய்வதன் மூலம் நம் மொழியின் இயற்கை அழகையே நாம் அழித்து விடுவோம். உதாரணமாக தமிழில் அன்பு,பாசம்,காதல்,நேசம் என்று பல சொற்கள் இருந்தாலும் ஆங்கிலத்தில் 'love ' மட்டுமே.ஆங்கிலத்தில் ஆதார துகள்களை சொல்லும் போது Electron,Quark,Proton,Neutron,Neutrino,Photon,Muon,Lepton என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தமிழில் அதிக பட்சம் 'துகள்' என்று மட்டுமே கூற முடியும். எனவே மாணவர்கள் அறிவியலை, தொழில்நுட்பத்தை ஆங்கிலத்திலேயே படிக்கட்டும். இது ஒன்றும் தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி அல்ல. புரியவில்லை என்றால் ஓரளவு தமிழ்ப்படுத்தி எடுத்துச் சொல்லுங்கள். இது அவர்களின் வருங்காலத்திருக்கும் உதவியாக இருக்கும்

அப்புறம் தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் வரவேற்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படும் ஒரு வாதம். பாரதி காலத்தில் இருந்தே இது தொடர்வதாகத்தான் தெரிகிறது. தாகூரின் எழுத்துகளுக்கு நிகராக, ஏன் ஒரு படி மேலேயே சென்று நோபல் பரிசு பெரும் தரம் பாரதியின் எழுத்துகளுக்கு இருந்தாலும் அவரது காலத்தில் அவர் கவனிப்பாரற்று தான் இருந்தார். இன்றும் தமிழ் நாட்டில் ஒரு திரைப்பட நடிகருக்கு, ஒரு அரசியல்வாதிக்கு கிடைக்கும் வரவேற்பு தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாடலாசிரியர்கள் ஒரு லட்சம் கேட்டால் 'அவ்வளவா?' என்று கேட்கிறார்களாம்

"தமிழ்" இனி வாழ்வதற்கு நாம் தமிழ் மீதான ஈடுபாட்டை குழந்தைப் பருவத்தில் இருந்தே விதைக்க வேண்டும். குழந்தை திருக்குறள் ஒப்புவித்தால் "இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் ரைம்ஸ் சொல்லு" என்று சொல்லும் மனோபாவத்தை நாம் விட வேண்டும். உண்மை என்னவென்றால் இன்று தமிழ் நாட்டில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் பேருந்துகளில் தமிழில் எழுதியிருக்கும் வழித்தடங்களைக் கூட படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். வெளி மாளிலம் ஒன்றுக்கு செல்லும் போது அந்த மொழியைப் படிக்க முடியவில்லை என்றால் நியாயம். நம் மாநிலத்தில் நம் மொழியையே படிக்க முடியவில்லை என்றால்?

பிள்ளைகளை தமிழ் புத்தகங்கள் , செய்தித்தாள்கள்(ளையும்) படிக்கும் படி பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். என்ன தான் சில தமிழ் நாளிதழ்கள் நாங்கள் தான் விற்பனையில் முதலிடம் என்று கூவினாலும் இளைஞர்களில் பெரும்பாலானோர் இன்று தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைக்கிறார்கள். இது ஏன்? தமிழ் நாட்டுக்குள்ளேயே நடக்கும் நிகழ்ச்சிகளையே கூட "Tamilnadu education minister inagurated Tamil sangam " என்று ஆங்கிலத்தில் படிக்கும் நிலைமையே இருக்கிறது

பள்ளிகளில் மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால் மறுபடியும் 'utilitarianism '.. இயற்பியல் படித்தால் பொறியாளராகலாம். ஆங்கிலம் படித்தால் உலகின் எந்த மூலைக்கும் சென்று வரலாம். உயிரியல் படித்தால் மருத்துவராகலாம். தமிழ் படித்தால் ? கிரிக்கெட் போட்டி ஒன்று வைத்தால் வகுப்பில் பாதி மாணவர்கள் உடனே பெயரைப் பதிவு செய்கிறார்கள். "கவிதைப் போட்டி" வைத்தால் , ஒரு மாணவன் பதிவு செய்தாலே பெரிய விஷயம். அதுவும் அந்த மாணவன் ஒரு 'stand out ' போல நடத்தப்படுவதும் வேதனை.

சரி. மெதுவாகவோ, வேகமாகவோ தமிழ் இனி வாழ்வதற்கு ஒவ்வொருவரும் செய்தே ஆக வேண்டிய சில கடமைகள்:

ஆசிரியர்கள்
============
இதில் ஆசிரியர்களின் பங்கு தான் மிக அதிகம் . அவர்கள் கடமைக்காக தமிழைக் கற்றுத் தராமல் ஒரு தெய்வீக மொழியைப் போதிக்கிறோம் என்ற உணர்வுடன் சங்கீதம் கற்றுத் தருவதைப் போல பாடங்களை அனுபவித்து நடத்த வேண்டும். "நேர் நேர் தேமா நிறை நேர் புளிமா, எல்லாரும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்" என்று ஆசிரியரே கூறினால் மாணவர்களுக்கு எவ்வாறு தமிழின் மீது ஈடுபாடு வரும்? தமிழின் எழிலையும் இலக்கியத்தின் நளினங்களையும் நடிகர்.சிவக்குமார் "கம்பன் என் காதலன்" என்ற தலைப்பில் உணர்சிப்பட பேசியிருப்பாரே அது போல சொல்லித் தர வேண்டும். தமிழில் வெளியாகும் நல்ல படைப்புகளை மாணவர்களுக்கு அவர்களே அறிமுகப்படுத்த வேண்டும். இலக்கியங்கள் குறித்து வகுப்பறைகளில் சுவையான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழில் தரமான கதை, கட்டுரைகளை எழுத மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அரசாங்கம்
==========
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்து விட்டால் போதும்.உள்ளே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். தமிழைக் கொலை செய்யும் பாடல்களையும் வசனங்களையும் தயவு தாட்சிண்யம் இன்றி தடை செய்ய வேண்டும். (இன்னும் தமிழ் நாட்டில் நிறைய பேர் தமிழில் ஒரே ஒரு லகரம் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். (பாடலாசிரியர்கள் உட்பட)) .அரசியல் கலக்காத செம்மொழி மாநாடுகளை நிறைய நடத்த வேண்டும். கருத்தரங்குகள் சலிப்பு மிக்க இலக்கிய அரங்குகளாக மட்டும் இல்லாமல் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் படி சுவையாக அமைக்கப்பட வேண்டும். தமிழ்ப் பாடப் புத்தகத்தை இன்னும் எளிமையாகவும் சுவையாகவும் அமைக்க வேண்டும். அரசியல் வாதிகளையும் ஒரு குறிப்பிட்ட கவிஞரையும் மட்டுமே சதா புகழ்ந்து கொண்டிருக்காமல் ,தமிழில் எழுதும் புதிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். தமிழின் படைப்புகளை மொழிபெயர்த்து உலகுக்கு அறிவிக்க முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்
==============================
===========
இவர்கள் தங்கள் தமிழ் எழுத்துகளால் மக்களை வசீகரிக்க வேண்டும். இளங்கோவடிகள் காலத்து தமிழை எழுதி மக்களை சலிப்புறச் செய்யாமலும் ,'நாக்க முக்க' அளவுக்கு கீழே இறங்காமலும் தமிழை ஓரளவு தரத்துடன் வழங்க வேண்டும். தமிழ் இவ்வளவு அழகான மொழியா என்று படிப்பவர்கள் நினைக்கும் படி எழுத வேண்டும். எழுத்தாளர். சுஜாதா செய்தது போல் புறநானூறு போன்ற இலக்கியங்களை அவற்றின் சுவை மாறாமல் புரியும் படி மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

பொதுமக்கள்
===========
இரண்டு பேர் சந்திக்கும் போது இருவருக்கும் தமிழ் தெரிந்திருந்தால் அலட்டிக் கொள்ளாமல் தமிழிலேயே பேச வேண்டும். சினிமாவுக்கும், ஓட்டல்களுக்கும் செலவழிப்பதில் ஒரு பகுதியையாவது நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த இலக்கியங்களையும், தமிழ்ப்பாடல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்

மாணவர்கள்
============
தமிழை மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்காமல் அதன் அருமை பெருமைகளைத் தெரிந்து கொண்டு மொழிப்பற்றுடன் கற்க வேண்டும்

தொழில் அதிபர்கள், அலுவலர்கள், என்.ஆர்.ஐ கள்
==============================
==============
தமிழுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை;நாம் பங்குச் சந்தை நிலவரத்தை கவனிப்போம் என்றில்லாமல் தமிழை வளர்க்க பொருளாதார ரீதியாக இவர்கள் உதவி செய்ய வேண்டும். கவிதை எழுதத் தெரியாவிட்டாலும் தமிழை ரசிக்கும் தன்மையையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும்

தமிழ் நாட்டின் இசைக் கலைஞர்கள்
==============================
=
திரும்பத் திரும்ப அருணாச்சலக் கவியையும் ,ஊத்துக்காடு பாடல்களையும் பாபநாசம் சிவனையும் பாடிக் கொண்டிருக்காமல் தமிழில் புதிய தெய்வீகப் பாடல்களை அறிமுகப்படுத்த வேண்டும். சாகித்தியம் எழுதுவதற்கு ஒருவர் முற்றும் துறந்த முனிவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனத்தூய்மையுடன் இறைவனை நினைத்து எழுதினால் தமிழ் பலவித ராகங்களில் அருவியாகப் பொழியாதா என்ன? கர்நாடக இசை என்றாலே தெலுங்கு தான் என்ற நிலையை இவர்கள் மாற்றிக் காட்ட வேண்டும்.

சமுத்ரா

24 comments:

கோவி.கண்ணன் said...

//இது மணற்கேணி- 2010 இற்கு அனுப்பிய கட்டுரை. வழக்கம் போல ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்//

முயற்சிக்கு பாராட்டுகள்

priyamudanprabu said...

//இது மணற்கேணி- 2010 இற்கு அனுப்பிய கட்டுரை. வழக்கம் போல ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்//

முயற்சிக்கு பாராட்டுகள்

முனைவர் இரா.குணசீலன் said...

தகுதியான கட்டுரைக்கும் தங்கள் முயற்சிக்கும் முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொளகிறேன்.

பரிசு என்பது தகுதிக்கான முழு அடையாகமாக இருக்காது.

நல்லதொரு சமூகத்தின் பிரதிபலிப்பாகத் தங்கள் கட்டுரை திகழ்கிறது.

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றைய ஆதிக்க மொழிகள் பல விதை வடிவில் தூங்கிக் கொண்டிருந்த காலத்திலேயே தமிழ் விருட்சமாக வளர்ந்து நின்று "எழுத்து எனப்படுவ அகரம் முதல்" என்று ஆரம்பித்து செம்மையான ஒரு இலக்கண நூலை வடிக்கும் அளவு உயர்ந்திருந்தது என்பது தமிழர்கள் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயம்.


ரொம்ப அழகாகச் சொன்னீங்க.

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு துறைகளையும் ஆராய்ந்து கட்டுரை வழங்கியிருக்கிறீர்கள்.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு துறைகளையும் ஆராய்ந்து கட்டுரை வழங்கியிருக்கிறீர்கள்.

மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

நான் தங்களுக்களிக்கும் பரிசு...

தங்கள் வலைப்பதிவையும் தங்களையும் குறிப்பிட்டு..

என்னிடம் பயிலும் தமிழ் மாணவர்களுக்குத் தங்கள் கட்டுரையைப் படித்துக்காட்டுவது.

தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

சமுத்ரா said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன்

VELU.G said...

நல்ல பயனுள்ள கட்டுரை

வாழ்த்துக்கள்

தமிழ் வளரும்

Aba said...

மெல்லத் தமிழிச் சாகும் என்பதை நீங்களும் தவறாகப் புரிந்து கொண்டதாக கருதுன்றேன். உண்மையில் பாரதியார் சொன்னது:

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் ;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை"

"சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை ;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசைஎனக்கு எய்திட லாமோ !
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் !

அவ்வாறு கூறிய ஒருவனுக்காக கொடுத்த பதிலடியே பாரதியாரின் பாடல்.

ஷர்புதீன் said...

எனக்கென்னவோ, சமுத்த்ராவின் உரைநடை ஸ்டைல் இப்போது உள்ளது போல் இல்லாததும் ( ஆறுதல் பரிசுக்காவது) பரிசு பெறாத காரணங்களுள் ஒன்றாக நினைக்கிறேன்
உதாரணம்
//உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால்//
//கொடுக்கப்படுவதும் தமிழாசிரியர்களுக்கு தான். ஏனென்றால்//

ஷர்புதீன் said...

உங்க கமெண்ட் பாக்ஸின் டைமிங் சியாட்டில் நகரத்தின் நேரக்கணக்கில் உள்ளது!

சமுத்ரா said...

அபராஜிதன், தப்பாகப் புரிந்து கொள்ளவில்லை. பாரதியாரை
படிக்காமல் தமிழைப் பற்றி எழுதத் துணியும் அளவு நான் முட்டாள் அல்ல என்று நினைக்கிறேன்.
'மெல்லத்தமிழ் இனி சாகும்' என்று தன் கதாபாத்திரம் சொல்வதாக (அவனை அவர் பேதை என்று சுட்டுவதாக) பாரதியார் சொன்னார் என்று எழுதினால் நீளமாக இருக்கும் என்று எழுதவில்லை.சில பேர் எப்போது அடுத்தவர் தப்பு செய்வார் என்று பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு பார்ப்பது போல உணர்கிறேன்.

சமுத்ரா said...

உங்க கமெண்ட் பாக்ஸின் டைமிங் சியாட்டில் நகரத்தின் நேரக்கணக்கில் உள்ளது!---Who cares???

Aba said...

அறிவியலில் தமிழ் தொடர்பான உங்கள் எண்ணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தியாவிலேயே அதிக தொழிநுட்பச் சொற்கள் கொண்ட மொழி நம் தமிழ்தான். அறிவியலை ஆங்கிலத்தில் படித்தால், பின் தமிழ் எதற்கு? வெறும் பொழுதுபோக்குக்கும் அன்றாடப் பயன்பாட்டிற்கும் மட்டும்தானா?

தமிழ் அறிவியலில் புகுத்தப்பட வேண்டும். நீங்கள் கூறிய உதாரணங்கள் போல அல்லாமல் எளிய அன்றாட உபயோகத்தில் இருக்கும் வார்த்தைகளே சற்று திருத்தப்பட்டு (ஆங்கிலம் போலவே) தமிழ் அறிவியல் சீர்திருத்தப்படவேண்டும்..

மற்றும் செந்தமிழில் பேசுதலும் அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் இலக்கியப் படைப்புக்களில் பயன்படுத்தப்படும் மொழியில் அங்கு பேசினால் நிச்சயம் சிரிப்பார்கள். நமது பேச்சுத்தமிழிலேயே ஆங்கிலம் கலக்காமல் பேச முயலவேண்டும்..

சமுத்ரா said...

ஹி ஹி, முதல் பரிசு கிடைத்தால் சிங்கப்பூர் மலேசியா எல்லாம் சுற்றி காட்டுவார்களாமே?
அது தான் கொஞ்சம் அடக்கி வாசித்தேன்! :)

G.M Balasubramaniam said...

தமிழ் இன்னுமொருமுறை சோறு போட அழைக்கிறது. .!!! என்ன சொல்லுகிறீர்கள் ?

ரிஷபன் said...

இரண்டு பேர் சந்திக்கும் போது இருவருக்கும் தமிழ் தெரிந்திருந்தால் அலட்டிக் கொள்ளாமல் தமிழிலேயே பேச வேண்டும். சினிமாவுக்கும், ஓட்டல்களுக்கும் செலவழிப்பதில் ஒரு பகுதியையாவது நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்குவதற்கு உபயோகிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தங்களுக்குத் தெரிந்த இலக்கியங்களையும், தமிழ்ப்பாடல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்

சொல்லப்பட்டிருக்கும் எல்லாமே ஒப்புக் கொள்ளத் தக்கவை.

Aba said...

எனக்கு ஒன்று புரியவில்லை.. இன்றை சினிமாப்பாடல்கள் சொற்களை வெட்டி வெட்டி படப்படுவதாக எல்லோரும் கண்டிக்கிறார்கள். உ+ம்: கம்ப நாட்டா ரும் கவியரசி அவை நல் லாளும் (செம்மொழி பாடல்)

மேற்கூறிய பாடலின் உச்சரிப்பு ஆங்கிலமயப்பட்டிருத்தல் தவறுதான். ஆனால் சொற்களை சந்தத்திர்கேற்ப பிரித்துப் பாடுதல் வெண்பாக்களிலும் காணப்படுகின்றதே?

அத்துடன் ஓசை நயத்திற்காக சில பொருளற்ற வார்த்தைகளை பிரயோகிப்பதும் கண்டனத்துக்குள்ளாகிறது (ஓமகசீயா, ஹசிலி பிசிலி) ஆனால் ஆராரோ ஆரிரரோ எல்லாம் பொருள் கொண்டவையா? கந்தசஷ்டிக் கவசத்தில் வரும் ''டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு'' க்கு என்ன பொருள்?

Chitra said...

முன்பின் தெரியாத வெளிநாடு ஒன்றில் எங்கேனும் நம் தாய்மொழி கேட்டால் நாம் பாலைவனச் சோலை போல உணர்வது இதனால் தான்

..... அதை நான் உணர்ந்து இருக்கிறேன். உடனே மனதில் ஒரு உற்சாகம் தோன்றுவதை தவிர்க்க முடியாது.

Rathnavel Natarajan said...

முதலாவது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் பகடைக்காயாக பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். தமிழர்கள் தான் உலகின் பூர்வீகக் குடிகள்...தமிழைப் பழிப்பவனை வெட்டு, குத்து என்றெல்லாம் உணர்ச்சிப் பூர்வமாக மக்களை உசுப்பி விடுவதை நிறுத்த வேண்டும்.
தமிழர்கள் 'இந்தி' எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது முன்னோக்குப் பார்வையற்ற ஒரு செயல் என்று கருதுகிறேன்
தமிழைக் கொலை செய்யும் பாடல்களையும் வசனங்களையும் தயவு தாட்சிண்யம் இன்றி தடை செய்ய வேண்டும்

அருமையான பதிவு.
மனந்தளராதீர்கள்
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

HVL said...

இப்போ இல்லைன்னா என்ன! அடுத்தவருஷம் ஒரு கை பார்த்துடுங்க. அவங்க பரிசு கொடுக்கற வரைக்கும் அவங்கள விடாதீங்க!
உங்கள் கட்டுரை நன்றாயிருந்தது.

கதம்ப உணர்வுகள் said...

தமிழில் பேசுவது மிக இனிமையான விஷயம்....

ஆங்கிலம் என்பது கம்யூனிகிஷன் பிராப்ளம் வராமல் இருக்க மட்டுமே...

நான் இங்கு எங்க ஆபிசுக்கு வரும் தமிழர்களிடம் அவர்கள் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினாலும் நான் தமிழிலேயே தான் பதில் உரைப்பது....

எல்லாம் பேசிவிட்டு பின் கேட்பேன் யூ ஆர் ஃப்ரம் ப்ளீஸ்??

முகத்தில் டன் டன்னாய் அசடு வடிவதை பார்க்கவேண்டுமே...

உங்க பாசிட்டிவ் அப்ரோச் பிடிச்சிருக்குப்பா...

அன்பு வாழ்த்துகள்....

sathish said...

உங்களை போன்றோர் தமிழில் கலையை வளர்க்கும் பொழுது தமிழ் எப்படி சாகும்.
உங்கள் அ.அ.அ மிகவும் அருமை முழுவதும் படித்தேன்.
தமிழில் / தாய் மொழியில் படிக்கும் பொழுது புரிந்தது கூட ஆங்கிலத்தில் படிக்கும் பொது புடியவில்லை.