இந்த வலையில் தேடவும்

Wednesday, August 24, 2011

அணு அண்டம் அறிவியல் -45

பிரம்மம் எத்தனை பிளவு பட்டாலும் பிரம்மமாகவே இருக்கிறது -உபநிஷத்

அணு அண்டம் அறிவியல் -45
உங்களை வரவேற்கிறது.

[என்ன, எல்லாரும் காலாண்டு பரீட்சைக்கு ரெடியா? நூற்றுக்கு நூறு வாங்குபவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. யார் யார் ஃ பெயில் ஆகிறார்களோ கோழிமுட்டை வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஒரு நாள் பூராம் இடைவிடாமல் டி.வி தமிழ் சீரியல்களைப் பார்க்கும் தண்டனை விதிக்கப்படும்]

E =MC2 இதன் FINISHING NOTES சில..

பெரியது, சிறியது இந்த விஷயங்கள் மனிதனை மிகவும் பாதித்து வந்துள்ளன. (முருகனையும் கூட ! அவ்வையே பெரியது என்ன? என்று கேட்டு அவ்வையாரை கடுப்பேற்றுவார். உலகம் பெரியது; உலகத்தை விட அதைத்தாங்கும் நாகம் பெரியது; அதை விட நாகத்தை விரல் மோதிரமாக அணியும் பார்வதி பெரியவள்;அவளை விட பார்வதியை இடப்பாகம் வைத்த சிவன் பெரியவன். அவனை விட சிவனை உள்ளத்தில் அடக்கிய தொண்டர்கள் பெருமை பெரியது என்று அவ்வையார் அருமையாக விளக்கம் அளிப்பார். )மனிதன் உலகில் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தன்னைச் சுற்றி உள்ள இந்த பூமி, வானம்,சூரியன் இவற்றைப் பகுத்தறிவோடு ஆராயத்தலைப்படவில்லை. பயம் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அப்போது அவனுக்கு பூமி மிகப் பெரியதாக இருந்திருக்கலாம். அல்லது அவனுக்கு வேறு சில வாழ்வாதாரத் தேவைகள் முக்கியமாக இருந்திருக்கலாம். தினமும் காலையில் சூரியன் வருகிறது.மாலையில் டியூட்டி முடிந்து எங்கோ போய் விடுகிறது அதை எதற்கு தேவையில்லாமல் ஆராய்வது? நம் கேர்ள் ஃபிரண்டை பக்கத்து வீட்டு சாரி பக்கத்து காட்டு முரடன் கடத்திக் கொண்டு போய் விடுவானோ என்பது மட்டுமே அவன் கவலையாக இருந்தது.
பூமி நான்கு மெகா சைஸ் ஆமைகளால் தாங்கப்படுகிறது என்றும் ஆதிசேஷன் தலைமேல் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் மதங்கள் சொல்லப்போய் அவன் அதை அப்படியே நம்பிக் கொண்டு 'மண்டலத்தைத் தாங்கும் மிக வல்லமை பெற்றாய்; மறவாமல் உள்ளம் களித்து ஆடு பாம்பே 'என்று புன்னாகவராளியில் பாடிக்கொண்டு மெளனமாக இருந்து விட்டான். அந்த ஆமை அல்லது நாகம் எதன் மேல் நிற்கிறது ?என்ற பகுத்தறிவுக் கேள்விகள் எல்லாம் அப்போதைக்கு அவனுக்கு டூ-மச்சாக இருந்திருக்கலாம். பூமியின் விளிம்பில் ஒரு மெகாசைஸ் வேலி போடப்பட்டிருக்கும் என்றும் THIS IS THE END என்று போர்டு இருக்கும் என்றும் நம்பினான். அதைத்தாண்டி போனால் அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்றும் நம்பினான். இந்தக் காரணத்தாலேயே மனிதன் கடல்பயணம் செய்து உலகை ஆராயத் தயங்கினான். (கப்பல் விளிம்பில் விழுந்து விட்டால்?) ஆனால் மனிதர்களில் புத்திசாலிகள் தோன்ற ஆரம்பித்தார்கள்.

பூமி தட்டையாக இருந்தால் பூமியில் எல்லாருக்கும் வானத்து நட்சத்திரங்களின் அமைப்பு ஒரே மாதிரி இருக்கும். ஆனால் அப்படி இருக்கவில்லை.பூமி தட்டையாக இருந்தால் கடலில் பயணிக்கும் கப்பல் ஒன்று திடீரென்று நம் பார்வையில் இருந்து மறைந்து விடும். (முதலில் அடிப்பகுதி மறைந்து கடைசியாக பாய்மரத்தின் நுனி மறையாது) .பூமி தட்டையாக இருந்தால் அது கிரகணத்தின் போது நிலவில் ஏற்படுத்ததும் நிழல் ஒரு கோடாக இருக்கும் இப்படியெல்லாம் யூகித்து ஒருவழியாக தனது தாய்பூமியைப் பற்றி (அது ஒரு கோளம் என்று) மனிதன் அறிந்து கொண்டான்.

தான் வாழும் பிரபஞ்சம் மிகப்பெரியது என்று அறிந்து கொள்ள மனிதன் போன நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது. இது எத்தனை பெரியது என்றால் ஒளியின் கற்றை ஒன்று பிரபஞ்சத்தின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனையை அடைய அதற்கு 26 பில்லியன் (பூமி) ஆண்டுகள் ஆகும். இந்த பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தமாக ஒருவர் பார்க்க முடிந்தால் அதில் நாமெல்லாம் தெரியமாட்டோம். நம்மை விடுங்கள்.மனிதன் கட்டி வைத்திருக்கும் ஈபில் டவர் , சி.என்.டவர் போன்ற விண் முட்டும் கட்டிடங்கள் தெரியாது; எவரெஸ்ட் தெரியாது; பசிபிக் மகாசமுத்திரம் தெரியாது.நம் பூமி கூட தெரியாது. பூமியை விடுங்கள்,1300 பூமிகளை உள்ளடக்கக்கூடிய வியாழன் ?,உஹூம்..நம் சூரியன் கூட மைக்ராஸ்கோப் வைத்துப் பார்த்தால் கூட தெரியாது. நம் பால்வெளி மண்டலம் வேண்டுமானாலும் நம் இரவுப் பயணத்தின் போது தூரத்தில் தெரியும் மங்கலான அறுபது வாட்ஸ் பல்பு போல குட்டியூண்டு தெரியலாம்.சுஜாதா சொல்வது போல நாளை பஸ்ஸில் இரண்டு ரூபாய் பாக்கி சில்லறை தரவில்லை என்று கண்டக்டருடன் சண்டை போட எத்தனிக்கும் போது நம் பிரபஞ்சத்தின் விஸ்தாரத்தை எண்ணிப்பாருங்கள் ஒருதரம்.

ஓஷோவின் ஒரு கதை இப்படிப் போகிறது.

பூமியில் மிகப் பிரபலமாக இருந்த போப் ஒருவர் இறந்ததும் மேலே செல்கிறார். தன்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் சொர்கத்தின் நுழைவாயிலில் தடபுடலாக மாலை மரியாதைகளுடன் வந்து தேவர்கள் தன்னை வரவேற்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டு சொர்கத்தின் கதவருகே செல்கிறார். அந்தக் கதவு நீள அகல உயரம் காணமுடியாமல் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவர் அதைத் தட்டிப் பார்த்து 'நான் தான் பூமியில் இருந்து போப் வந்திருக்கிறேன் (மாலை யானை எல்லாம் ரெடியா?) என்று அப்பாவியாகக் கேட்கிறார் . அவர் குரல் அந்த பிரம்மாண்டத்தில் அவருக்கே கேட்பதில்லை. கதவின் ஒரு சிறு துளை வழியே உள்ளே எட்டிப்பார்க்கிறார். கோடி சூரியன்களைப் பார்த்தது போல அவர் கண் கூசுகிறது.கதவு எதேச்சையாகத் திறந்து அப்போது ஒரு காவலாளி வெளியே வருகிறான். போப் உள்ளே போக முயற்சிக்கிறார். அவரை அவன் தடுத்து நிறுத்தி 'உள்ளே போக அனுமதி இல்லை' என்கிறான். அவர் கோபமாக நான் யார் தெரியுமா? நான் தான் போப் என்கிறார் . அவன் குழப்பமாக போப்பா ? இந்தப் பேரை இதுவரை கேட்டதே இல்லையே ?யார் அது? என்கிறான். போப் வலுக்கட்டாயமாக உள்ளே போக முயற்சிக்கிறார்.இதைப் பார்த்து விட்டு உள்ளே இருந்த சொர்கத்தின் அக்கவுண்டன்ட் வருகிறான். நீங்கள் யார்? என்று கேட்கிறான். நான் பூமியில் இருந்து வருவதாக அவர் சொல்கிறார்.எந்த பூமி என்று கேட்டதற்கு சூரிய மண்டலம் என்று சொல்கிறார் அவர். சூரிய மண்டலாமா? அதன் நம்பர் சொல்லுங்கள் என்கிறான் . போப்புக்கு நம்பர் எல்லாம் தெரியவில்லை.அய்யா நீங்கள் தயவு செய்து எந்த நம்பர் காலக்ஸி,எந்த நம்பர் சப்-காலக்ஸி எந்த நம்பர் சூரியன் எந்த நம்பர் கிரகம் என்று தெளிவாக சொல்லுங்கள்.இல்லை என்றால் வெளியே போங்கள் என்கிறான்.அவருக்கு அழுகை வருவது போல ஆகி விடுகிறது.எனக்கு ஜீசசைத் தெரியும் என்கிறார். 'ஜீசஸா' என்று அவன் கேட்டதும் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகிறார். அவரது சீரியல் நம்பர் என்ன? இப்போது தான் லட்சத்து நாற்பதாயிரத்து ஐநூறாவது ஜீசஸ் முக்தி அடைந்து இங்கே வந்திருக்கிறார். அவரா? என்று கேட்கிறான். போப் மயங்கி விழுகிறார்!

நாம் சில சமயங்களில் நம்மை மிகப்பெரியவர்கள் என்று நினைத்துக் கொள்கிறோம்.'நான் யார் தெரியுமா,நான் தான் அம்பத்தூர் ராஜசேகர்,' என்று வசனம் எல்லாம் பேசுகிறோம்.அப்படிப் பேசும் முன் கொஞ்சம் இந்தக்கதையை நினைவில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

சிறியது என்றால் அதற்கும் சிறியது இருக்கும். பெரியது என்றால் அதற்கும் பெரியது இருக்கும் (If N exists N-1 also exists, if N exists N+1 also exists) என்று மனிதனின் தர்க்க (logical ) மனம் நம்புகிறது. பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்று கையை நீட்டினால் என்ன வரும்? அதுவும் பிரபஞ்சம் தானே? என்று கேட்கிறார் ஒரு தத்துவ ஞானி. இன்றைய இயற்பியல், பிரபஞ்சம் எல்லையற்றது அல்ல என்று நம்புகிறது. ஒரு மீன் தொட்டியின் உள் பக்க விளிம்பில் மீன் இடித்துக் கொள்வதைப் போல நாம் பிரபஞ்சத்தின் விளிம்பில் இடித்துக் கொள்வோம்.(சுவர் இல்லாமலேயே!) அல்லது பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியில் இருந்து நேர்கோட்டில் போய்க்கொண்டே இருந்தால் மீண்டும் அதே புள்ளியை அடைந்து விட முடியும். (என்ன கொஞ்சம் லேட் ஆகும்!)

சில விஞ்ஞானிகள் இந்த பிரபஞ்சத்தை MULTIVERSE என்று அழைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது நம் பிரபஞ்சம் முடிந்ததும் இன்னொரு பிரபஞ்சம் துவங்குமாம் (நான் இந்த விளையாட்டுக்கு வரலை!) இன்னும் சில பேர் காலக்ஸிகள் பல இல்லை ..ஒன்று தான் இருக்கிறது. டெலஸ்கோப்பில் தெரியும் வேறு காலக்சிகள் நம் பால்வெளி காலக்ஸியின் ஈர்ப்பு லென்சு (GRAVITATIONAL LENS ) ஏற்படுத்தும் பிம்பங்கள் என்கிறார்கள். கண்ணாடிகளில் நம்மையே பார்த்து விட்டு பார் எத்தனை ஆள் என்று சொல்வது போல! (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?) சரி இப்போதைக்கு பெரியதன் வரம்பு பிரபஞ்சம் என்று வைத்துக் கொள்வோம்.
பிரபஞ்சம் விரிவடைகிறது என்றால் அது எதில் விரிவடைகிறது?? பிரபஞ்சம் அதைப் படைத்த ஒருவரை (ஒன்றை) விட சிறியது தானே? என்றெல்லாம் கேள்வி கேட்டால் உங்களை ஒருவாரம் க்ளாஸில் இருந்து சஸ்பண்ட் செய்து விடுவேன் ஆமாம்.

இதே போல சிறியது எது என்ற கேள்வியும் சுவாரஸ்யமானது. சிறியது என்ன என்ற கேள்வி முருகனின் questionnaire யில் இருந்ததா என்று தெரியவில்லை. கேட்டிருந்தால் அவ்வை இப்படி பதில் சொல்லி இருப்பாளோ?

சிறியது கேட்கின் நெறி வடிவேலோய்
சிறிது சிறிது சிட்டுக் குருவி
அதனினும் சிறிது குருவியின் சேயாம்
அதனினும் சிறிது சேயுண்ணும் அன்னம்
அன்னப் பருக்கையின் சிறியது கடுகு
அதனினும் சிறியது கடுகுற்ற அணுவாம்
அதனினும் சிறிது அடுத்தவர் புண்பட
அவதூறு பேசும் அன்னவர் மனமே!


ஆனால் அணு என்பது அதன் அணுக்கருவை விட பலமடங்கு பெரியது என்கிறது குவாண்டம் இயற்பியல். அணுக்கருவை விட சிறியவை அதன் துகள்களான ப்ரோடான் மற்றும் நியூட்ரான். அவை கூட குவார்க்குகளின் கட்டுமானங்கள் என்று சொல்கிறார்கள். அவற்றை விட சிறிய துகள்கள் நியூட்ரினோ எனப்படும் துகள்கள்.இவை ஃ போட்டான்களைப் போல நிறை அற்ற குட்டியூண்டு துகள்கள்.ஆனால் போட்டான்களைத் தனியாக நாம் பார்க்க முடியாது.(எப்போது ஆட்டுமந்தை போல ஒன்றாக தான் இருக்கும்.அந்த ஆட்டுமந்தை தான் ஒளியாக நம் கண்ணுக்குத் தெரிகிறது ) இந்த நியூட்ரினோவைப் பார்க்க முடியும் என்கிறார்கள்(நம்பிட்டோம்!)

சில பேர் நாமெல்லாம் ஒரு மெல்லிய கிடத்தட்ட பூஜ்ஜிய தடிமன் உள்ள ஒரு ஒருபரிமாண நூலில் (STRING THEORY ) ஏற்பட்ட முடிச்சுகள் தான் என்று ஏதேதோ சொல்லி
பயமுறுத்துகிறார்கள். இறைவனை குறிப்பிடும் போது கபட நாடக சூத்திர தாரி என்பார்கள் (REF : புரந்தரதாசரின் அபராதி நானல்ல அபராத எனகில்ல கபடநாடக சூத்ரதாரி நீனே[நான் நிரபராதி.நான் எந்த தவறும் செய்யவில்லை..நூல் உன் கையில் இருக்கிறது] ) .சூத்திரம் என்றால் கயிறு அல்லது நூல்.அதாவது இறைவன் கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய நூலால் நம்மை ஆட்டுவிக்கிறானாம். (ஆம்..ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே )பாவைக்கூத்து எனப்படும் பொம்மலாட்டத்தில் பொம்மைகள் அவையே ஆடுவது போல இருந்தாலும் ஒரு மெல்லிய நூல் அவற்றின் கைகால்களில் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். STRING THEORY வருவதற்கு எத்தனையோ காலங்களுக்கு முன் நம் ஆன்மீகப் பெரியவர்கள் இப்படி ஒரு 'க்ளூ' கொடுத்து விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது.
சரி.. ஒரு அசுரனுக்கும் பகவானுக்கும் (முருகனோ, கிருஷ்ணனோ, துர்க்கையோ ) கடுமையான சண்டை நடக்கிறது. அஸ்திர மழை பொழிகிறது! கடைசியில் பகவான் டென்ஷன் ஆகி ஏதோ ஒரு சக்தி வாய்ந்த அஸ்திரத்தை பிரயோகித்து (இதை முதல்லேயே செஞ்சிருக்கலாமே?) அந்த அசுரனை ஆயிரம் துண்டுகளாக பீஸ் பீஸ் ஆக்கி விடுகிறார் . சரி மேட்டர் முடிந்தது சொர்கத்துக்கு சென்று ஒரு ஆயிரம் வருடம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தேரை விட்டு கீழே இறங்கினால் அந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு அசுரனாக மாறி முன்னால் நின்று சிரிக்கிறது!

சரி இதை ஏன் இங்கே சம்பந்தம் இல்லாமல் சொல்கிறேன் (உளறுகிறேன்) என்றால் ஒன் நிமிட்! இது மாதிரி கற்பனைகள் ஃபிக்சன் என்று தோன்றினாலும் இயற்பியல் இதை உண்மை என்கிறது. அதாவது 'm ' நிறையுள்ள ஒரு பொருளைப்பிளந்தால் அது இரண்டாகப் பிளக்கப்பட்டு நமக்கு ஒவ்வொன்றும் 'm ' நிறையுள்ள இரண்டு பொருட்கள் கிடைக்கின்றன. (exactly அந்த அசுரன் செய்தது போல!) ஆனால் இது அசுரன் போன்ற MACROSCOPIC பொருட்களுக்கு நடப்பது அசாத்தியம். பொருட்களை உடைத்துக் கொண்டே போகும் போது ஒரு குறிப்பிட்ட மீச்சிறு எல்லைக்குப் பிறகு அந்த பொருளை உடைக்க நாம் செலுத்தும் ஆற்றல் நிறையாக மாற்றப்பட்டு துண்டுகளின் நிறையோடு சேர்கிறது.சில சமயம் துண்டுகளின் (தனித்தனி) நிறை முதலில் இருந்த பிளக்கப்படாத பொருளின் நிறையை விட அதிகமாக இருக்கிறது. இந்த நிறை-ஆற்றல் சமன்மை(MASS ENERGY EQUIVALENCE) எது உலகிலேயே மிகச் சிறியது என்ற கேள்வியை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. ஒரு எல்லைக்கு மேல் பொருளை நாம் பிளக்க நினைத்தால் அது எதிரியின் ஆற்றலை உள்வாங்கிக் கொள்ளும் வாலி போல , பிளந்த பின்னும் ஒட்டிக் கொள்ளும் ஜராசந்தன் போல செயல்பட்டு நமக்கு போக்குக் காட்டுகிறது.

சிவன் திருவிளையாடலில் கையை நீட்டியதும் எங்கிருந்தோ வீணை திடீரென்று வருமே? இது போன்ற நிகழ்வுகளையும் இயற்பியல் அனுமதிக்கிறது. வீனையையோ அல்லது மாஜிக் நிபுணரின் முயல் போல உயிருள்ள பொருட்களையோ சூனியத்தில் இருந்து கொண்டு வருவது கஷ்டம். ஆனால் PARTICLE ACCELERATOR எனப்படும் துகள் முடுக்கிகளில் இரண்டு துகள்களை எதிரெதிர் திசைகளில் இருந்து கிட்டத்தட்ட ஒளிவேகத்தில் மோத விடும் போது அவைகளின் இயக்க ஆற்றல் புதிய துகள்களாக மாற்றப்பட்டு அவை குவா குவா என்று அழுதவண்ணம் வெளிவருகின்றன. பொருட்களை கடவுள் தான் படைக்க முடியும் என்ற சித்தாந்தத்தை இது தவறு என்று நிரூபித்தது. கணிசமான ஆற்றல் இருந்தால் (WELL , அந்த ஆற்றலை கடவுள் தான் படைக்க வேண்டும்) அதிலிருந்து மனிதன் பொருளைப் படைக்கலாம்.எப்படி இருந்த போதிலும் மனிதன் ஒரு CREATOR அல்ல
CONVERTER தான் என்று சொல்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

துகள் முடுக்கி

மனிதனுக்கு ஒரு கெட்ட பழக்கம். ஏதாவது ஒன்று இருந்தால் அதற்கு எதிரானதும் இருக்கும் என்று நம்புவது. கடவுள்-சாத்தான், சொர்க்கம்-நரகம், ஒளி-இருட்டு , மானேஜர் -வேலை செய்வது என்றெல்லாம். அதே போல பொருளுக்கும் எதிர்ப்பொருள் ஒன்று இருக்கும் என்று நம்புகிறார்கள். (ANTI MATTER ) (தயவு செய்து AUNTY Matter என்று படிக்காதீர்கள்) ஒரு ஹைட்ரஜனை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு எலக்ட்ரானும் ஒரு ப்ரோடானும் மட்டுமே இருக்கின்றன. அதே போல எதிர் ஹைட்ரஜனில் ஒரு பாசிட்ரானும் (எலக்ட்ரானுக்கு எதிர்) ஆன்டி ப்ரோடானும் இருக்கலாம்.ஒரு மேட்டர் அதன் ஆன்டி-மேட்டருடன் மோதினால் இரண்டும் முற்றிலும் காணாமல் போய் நமக்குத் தூய ஆற்றல் கிடைக்கும் என்கிறார்கள்.ஆனால் இந்த ஆன்டி-மேட்டரை பிரபஞ்சம் எங்கும் சல்லடை போட்டு சலித்து தேடினாலும் கிடைக்கவில்லையாம்.(ஒரு பொருளை ஆற்றலில் இருந்து உருவாக்கும் போது அதன் எதிர்ப்பொருளும் நமக்கு இனாமாகக் கிடைக்கும் என்கிறார்கள். அப்படியானால் கடவுள் நமக்கெல்லாம் எதிர்பொருளை (ஆன்டி சமுத்ராவை) எங்கே வைத்திருக்கிறார்?)

முழுவதும் எதிர் துகள்களால் ஆன ஒரு பிரபஞ்சம் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.அங்கே எல்லாமும் உல்டா. (அஹா இதை வைத்து ஒரு அருமையான ஃபிக்சன் நாவல் எழுதலாமே?)அங்கே ஒரே மாதிரியான துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்(LIKE POLES ATTRACT ) . வெவ்வேறு துகள்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும். அங்கே ஈர்ப்பானது பொருட்களை ஒன்றை விட்டு ஒன்று விலக்கும். ஆண்கள் ஆண்களையும் பெண்கள் பெண்களையும் காதலித்து குழந்தை பெற்றுக் கொள்வார்கள்! கடவுள் சரி பேஜாராக இருக்கிறது இந்த பிரபஞ்சத்தை அழித்து விட்டு வேறு உருவாக்கலாம் என்று நினைத்தால் இந்த இரண்டு பிரபஞ்சங்களையும் அருகருகே கொண்டு வந்தால் போதும். இரண்டும் அழிந்து பயங்கர ஆற்றல் கிடைக்கும்.அந்த ஆற்றலை கடவுள் தன் DIVINE பேங்க்OF PARADISE இல் பத்திரமாக லாக்கரரில் வைத்துக் கொண்டு பின்னர் அதில் இருந்தே கால்கட்டை விரலை சப்பிய படி ஒரு புதிய பிரபஞ்சத்தை செய்வார். [அந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்கு கண்டிப்பாக ஐந்து அறிவு தான் கொடுப்பாராம்]

விண்மீன்களுக்கு இடையே பயணிக்கக்கூடிய INTERSTELLAR பயணங்களுக்கு எரிபொருளாக இந்த எதிர்ப்பொருளைப் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த எதிர்ப்பொருளை செய்வது தான் உலகிலேயே காஸ்ட்லியான விஷயமாம். அதாவது ஒரு பத்து பத்து மில்லிக்ராம் பாசிட்ரான்களை உருவாக்க நமக்கு எத்தனை பணம் வேண்டும் என்று தெரியுமா? ANY GUESS ? கம்மி தான். 1125 கோடி ரூபாய்.(ஸ்பெக்ட்ரம் பணத்தை விட கம்மி தான் என்கிறீர்களா?)

Bye Bye E=MC2 (சிலபஸ்ஸை சீக்கிரம் சீக்கிரமாக முடிக்க வேண்டி இருக்கு..#சமச்சீர் கல்வி!)

சமுத்ரா

18 comments:

VELU.G said...

present sir

பத்மநாபன் said...

பின்னி பின்னி எடுத்துப்போட்டு பிரபஞ்சத்தின் அத்தனை விஷயத்தையும் பின்றிங்களே... ANTI மேட்டர் ல் நான் தொபக்கடீர் .... என்னவொரு சிந்தனை ?

Katz said...

இந்த தமிழ் உலகிற்கு நீங்கள் ஆற்றும் தோண்டும் அளப்பரியது.

எப்படி பொறுமையாய் படம் எல்லாம் போட்டு விளக்குகிறீர்கள்?

எனக்கு டெக்னிகல் ஆக கொஸ்டின் கேட்க தெரியாது.

ஆனா படிக்க படிக்க இண்டரஸ்டிங் ஆக இருக்கிறது.

Mohamed Faaique said...

சுவாரசியமான பதிவு..

மற்றைய பால் வெளிகளிலும் இன்னும் நிறைய உலகங்கள் இருக்குமென்று நம்புகிறீர்களா???

பாரத்... பாரதி... said...

வணங்கங்களும், வாக்குகளும்..

சார்வாகன் said...

Nice

Chitra said...

இந்த எதிர்ப்பொருளை செய்வது தான் உலகிலேயே காஸ்ட்லியான விஷயமாம். அதாவது ஒரு பத்து பத்து மில்லிக்ராம் பாசிட்ரான்களை உருவாக்க நமக்கு எத்தனை பணம் வேண்டும் என்று தெரியுமா? ANY GUESS ? கம்மி தான். 1125 கோடி ரூபாய்.(ஸ்பெக்ட்ரம் பணத்தை விட கம்மி தான் என்கிறீர்களா?)


..... அப்படி போடு! :-)))

Abarajithan said...

// STRING THEORY வருவதற்கு எத்தனையோ காலங்களுக்கு முன் நம் ஆன்மீகப் பெரியவர்கள் இப்படி ஒரு 'க்ளூ' கொடுத்து விட்டுச் சென்றது வியப்பாக இருக்கிறது.//

விட்டால் "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி" என வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னமே Nuclear Fission ஐ கண்டுபிடித்தார் என்பீர்கள் போலிருக்கின்றதே?

//பிறகு அந்த பொருளை உடைக்க நாம் செலுத்தும் ஆற்றல் நிறையாக மாற்றப்பட்டு துண்டுகளின் நிறையோடு சேர்கிறது//

இது புதுசு.. நன்றி...

//ஒரே மாதிரியான துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்//

பூமியில் நடந்த சோதனைகளிலும் இது நிரூபிக்கப்படவில்லை. எதிர்ப்பொருளும் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்ததே.. ஆனால் பிரபஞ்ச ஆரம்பத்தில் பொருளை விட எதிர்ப்பொருள் கொஞ்சம் குறைவாக இருந்த காரணத்தினால், ஒன்ற ஒன்று அடித்துக்கொண்டு ஆற்றலாக மாற, மீந்துபோன கொஞ்சப் பொருளில்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம் என்கிறது பிக் பேங் தியரி.. (பிக் பேங்க்கே தவறென்றும் String, Membrane போன்ற பொருட்களிலும் தான் பிரபஞ்சம் தோன்றியிருப்பதாக இப்போது புலம்புகிறார்கள்)

எனவே, இப்பிரபஞ்சத்தை சேர்ந்த பொருள் ஆகையால் அதுவும் எமது விதிகளிலேயே செயற்படும்.. Negetron attracts positron...

பத்மநாபன் said...

//மற்றைய பால் வெளிகளிலும் இன்னும் நிறைய உலகங்கள் இருக்குமென்று நம்புகிறீர்களா??? // நிச்சயம் ...ஒன்றல்ல இரண்டல்ல கோடிக் கணக்கில் சாத்தியம் ... இரவு வானத்தில் தெரியும் / தெரியாத ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் குறைந்த பட்சம் ஓரு பூமி ( so called ) சாத்தியம் ......

சமுத்ரா said...

அபராஜிதன், எல்லாம் அப்போதே சொல்லி விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. JUST A COMPARISON.
இப்படி கொஞ்சம் சுவாரஸ்யமாக ஒப்பிட்டு சொல்லவில்லை என்றால் நிறைய பேர் படிக்கவே மாட்டார்கள்.

Abarajithan said...

உண்மைதான்.. ஆனால் அகத்தியத்தில் ஆல்பா செண்டாரியைப் பற்றி குரிப்பிருக்கிறது எனும் க்ரூப்பில் சேராவிட்டால் சரிதான்...

G.M Balasubramaniam said...

Interesting to read.

இராஜராஜேஸ்வரி said...

சிறியது என்றால் அதற்கும் சிறியது இருக்கும். பெரியது என்றால் அதற்கும் பெரியது இருக்கும் (If N exists N-1 also exists, if N exists N+1 also exists) என்று மனிதனின் தர்க்க (logical ) மனம் நம்புகிறது/

அருமையான விளக்கம். நிறையமுறை படிக்கவைத்த பகிர்வு. பாராட்டுக்கள்.

மஞ்சுபாஷிணி said...

அருமையான ரசிக்கவைத்த சுவாரஸ்யமான பதிவுப்பா...

அன்பு வாழ்த்துகள்.....

BASU said...

// மானேஜர் -வேலை செய்வது //

ஹ ஹா

BASU said...
This comment has been removed by the author.
BASU said...

// உண்மைதான்.. ஆனால் அகத்தியத்தில் ஆல்பா செண்டாரியைப் பற்றி குரிப்பிருக்கிறது எனும் க்ரூப்பில் சேராவிட்டால் சரிதான்... //

என்ன குரி? lol

சிந்தனையாளன் தனியனே. kroopu :P எல்லாம் இல்ல. ஹி ஹி

BASU said...

In a nutshell String theory agrees Time travel, extra dimensions, parallel worlds etc., through pure mathematical calculations !!!