இந்த வலையில் தேடவும்

Wednesday, August 3, 2011

அணு அண்டம் அறிவியல் -42

அணு அண்டம் அறிவியல் -42 உங்களை வரவேற்கிறது.

நான் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. அது சீக்கிரமே வந்து விடுகிறது

வெற்றியை A என்று கொண்டால் வெற்றிக்கான சூத்திரத்தை A = X + Y+ Z என்று சொல்லலாம். இங்கே X என்பது உழைப்பு Y என்பது விளையாட்டு. Z என்பது உங்கள் வாயை மூடிக்கொண்டிருத்தல்!

-ஐன்ஸ்டீன்

காலப் பயணத்திற்கு (குறிப்பாக கடந்த காலப் பயணம்) இரண்டு விஷயங்கள் இடைஞ்சலாக உள்ளன. ஒன்று Freewill எனப்படும் சுதந்திர முடிவு! இன்னொன்று ஜின்.. (JINN )

கடந்த காலத்தில் பயணிக்கும் ஒருவரால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியுமா? உதாரணமாக நாம் நிகழ்காலத்தில் சுதந்திரமாக எந்த முடிவு வேண்டுமானாலும் எடுக்க முடியும். இன்று ஆபீசுக்கு காரில் வேண்டாம் பஸ்ஸில் போகலாம் என்று முடிவெடுக்கலாம் . கோயிலுக்கு போவதாக பொய் சொல்லி விட்டு நண்பன் வீட்டில் நடக்கும் பார்ட்டிக்கு செல்லலாம் என்று
முடிவெடுக்கலாம்.
ஆனால் கடந்த காலத்தில்? நீங்கள் ஒரு அடர்ந்த காட்டுக்குள் கஷ்டப்பட்டு முள்ளை வெட்டி பாதை அமைத்துக் கொண்டு முன்னேறுகிறீர்கள் . நீங்கள் அதே காடு வழியாகத் திரும்பி வர நேர்ந்தால் நீங்கள் அமைத்த அதே பாதையை உபயோகிப்பீர்கள் தானே? அதாவது முதலில் வரும்போது பாதையை அமைக்கும் சுதந்திரம் உங்களிடம் அதிகமாக இருந்தது. திரும்பி சென்ற போது வெகுவாகக் குறைந்து விட்டது.அதே போல காலத்தில் திரும்பப் பயணிக்கும் போது ஏற்கனவே வரையப்பட்ட WORLD -LINE நாம் பின்தொடர வேண்டி வரலாம்.

கடந்த காலத்தில் எதையுமே மாற்ற முடியாமல் சும்மா வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்றாலும் கூட அது ஒரு திரில்லிங்-ஆன அனுபவமாகவே இருக்கும்.
அலெக்சாண்டர் புரிந்த போர்களை நாம் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கலாம். புத்தரின் 'வைர சூத்திரத்தை' நேரடியாக அவரது சீடர்களுக்கிடையே ஒளிந்து கொண்டு கேட்டு ரசிக்கலாம்.
எகிப்தின் பிரமிடுகளை எப்படி கட்டுகிறார்கள் என்று வேடிக்கை பார்க்கலாம்! கடந்த காலப் பயணம் என்பது ஏற்கனவே பார்த்த ஒரு சினிமாவை மீண்டும் பார்ப்பது போன்றது.சினிமா இரண்டாவது முறையும் அப்படித்தான் இருக்கும். 'டைட்டானிக்' கில் ஒவ்வொரு முறையும் ஹீரோ இறந்து தான் போவான் .

சரி இன்றும் இரண்டு ஃபிக்சன் கதைகளைப் பார்க்கலாம். ஒன்று:

Bill & Ted's Excellent Adventure (திரைப்படம்)

1989. பில் மற்றும் டெட் ஒரு இசைக்குழு வைத்திருக்கிறார்கள். காலேஜில் நடக்கும் 'History presentation ' இல் A + கிரேட் பெறாவிட்டால் டெட்டின் அப்பா அவனை மில்டரிக்கு அனுப்பு விடுவேன் என்று மிரட்டுகிறார். ஒருநாள் ஒரு போன் பூத்தில் இருந்து ஒருவர் (ஜார்ஜ் கார்லின்) வெளிப்பட்டு இருவரையும் சந்திக்கிறார். தான் 2688 ஆம் வருடத்தில் இருந்து வருவதாக சொல்கிறார்.அவரை இருவரும் நம்ப மறுக்கிறார்கள்.கார்லின் அவர்களுடைய ராக் இசை தங்கள் காலத்தில் மிகவும் பிரபலம் என்றும் அவர்கள் 'ராக் பேண்ட்' இசைக்குழுவை அமைக்க தான் உதவ வந்திருப்பதாகவும் சொல்கிறார். பில்லும் டெட்டும் தங்கள் எதிர்கால(எதிர்காலத்தில் இருந்து வந்த) உருவங்களை சந்திக்கிறார்கள். அந்த எதிர்கால பில்லும் டெட்டும் இந்த காலப்பயணம் உண்மை தான் என்று சொல்கிறார்கள். இருவரும் கார்லினை நம்புகிறார்கள்.

தங்கள் ஹிஸ்டரி ப்ராஜக்ட்டுக்காக இருவரும் கடந்த காலத்துக்கு சென்று சில வரலாற்றுப் புகழ் பெற்ற தலைவர்களை நிகழ்காலத்துக்கு கடத்தி (?) வர முடிவெடுக்கிறார்கள். அப்படியே பயணித்து நெப்போலியன், சிக்மன்ட் பிராய்ட், பீத்தோவான், சாக்ரடீஸ், லிங்கன் கென்கிஸ்கான் எல்லாரையும் கடத்தி நிகழ்காலத்துக்கு அழைத்து வருகிறார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு அழைத்து வரப்பட்ட தலைவர்கள் தடுமாறுகிறார்கள். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் கைது செய்யப்படுகிறார்கள். டெட்டின் அப்பா ஜெயிலில் தலைமை அதிகாரியாக இருக்கிறார். நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
பில் மற்றும் டெட்டின் ஹிஸ்டரி நிகழ்ச்சிக்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன. ஜெயில் சாவியைத் திருடி எல்லாரையும் வெளியே கொண்டு வரலாம் என்று பில் யோசனை சொல்கிறான். ஆனால் தன் தந்தை ஜெயில் சாவியைத் தொலைத்து விட்டதாக டெட் சொல்கிறான். கால இயந்திரத்தைப் பயன்படுத்தி இரண்டு நாள் முன்னே சென்று சாவியை எடுத்து வரலாம் என்று பில் சொல்கிறான். ஆனால் அதற்கு போதுமான நேரம் இருப்பதில்லை.அப்போது டெட் ஒரு ஐடியா சொல்கிறான்.ஹிஸ்டரி நிகழ்ச்சி நடந்து முடிந்த 'பின்' காலத்தில் பின்னோக்கி சென்று சாவியைத் திருடி அதை ஒரு குறிப்பிட்ட ஒரு சிலையின் பின்புறம் மறைத்து வைத்து விடலாம் என்கிறான். இருவரும் அந்த சிலைக்கு அருகில் (இப்போது) செல்கிறார்கள். அங்கே சாவி இருக்கிறது!!!! இருவரும் ஜெயிலுக்கு விரைந்து சென்று அங்கே அடைபட்டிருக்கும் தலைவர்களை விடுவிக்கிறார்கள். அவர்கள் நடத்தும் ப்ராஜக்ட் A + கிரேட் பெறுகிறது.நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் காலத்தில் பின்னோக்கி சென்று சாவியைத் திருடி சிலைக்கு பின்னே மறைத்து வைக்கிறார்கள். பின்னர் அவர்களின் ராக் பேண்ட் நிறுவப்பட்டு பெரும் புகழ் அடைகிறது.

இந்தக் கதையில் பில் மற்றும் டெட் Freewill கொண்டிருந்தார்களா? கடந்த காலத்தில் பயணிப்போம் என்று நினைத்துக் கொண்ட மாத்திரத்தில் சாவி அங்கே வந்து விடுமா?நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் சோம்பேறித் தனத்துடன் அதான் நிகழ்ச்சியே முடிந்து விட்டதே? நாம் கடந்த காலத்தில் பயணித்து சாவியைத் திருடி ஒளித்து வைக்கத்தான் வேண்டுமா என்று நினைத்தால் என்ன ஆகும்?

காலப் பயணங்கள் மூலம் CONSISTENT (முரண்பாடுகள் அற்றதாக) இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.அதாவது நீங்கள் கடந்த காலத்துக்கு சென்று உங்கள் இளவயது பாட்டியுடன் காபி சாப்பிடலாம் ; ஆனால் அவளைக் கொல்ல முடியாது. கடந்த காலத்துக்கு சென்று டைட்டானிக்கை காப்பாற்ற முயற்சிக்கலாம்.ஆனால் அந்த முயற்சி தோல்வி அடையும். டைட்டானிக் கேப்டன் உங்கள் பேச்சைக் கேட்காமல் 'பனிப்பாறையாவது மண்ணாவது' என்று சும்மா இருந்து விடுவார்! ஆகவே நடந்ததை யாராலும் மாற்ற முடியாது என்பது அவர்கள் வைக்கும் ஒரு வாதம். அவர்கள் ஒரு கொள்கை ஆய்வை நடத்தினார்கள். அதாவது ஒரு பந்தை கால இயந்திரத்துக்குள் வேகமாக அனுப்பி அதை கடந்த காலத்துக்கு அனுப்ப வேண்டியது.இந்த பந்து அதன் கடந்த கால உருவத்துடன் மோதி அதன் பாதையை விலக்கி அதை கால இயந்திரத்துக்குள் நுழையாமல் செய்ய வேண்டியது! ஆனால் ஒவ்வொரு முறை அந்த பந்து அதனுடனேயே மோதியபோதும் அந்த மோதல் மிதமாகவே இருந்தது. அதாவது பந்து ஒவ்வொரு முறையும் பாதை விலகாமல் இயந்திரத்துக்குள் நுழைந்தது.self consistent !


இப்போது இன்னொரு கதை . Somewhere in Time (1980 ) இந்தக் கதை 1972 இல் ஆரம்பிக்கிறது. ரீவ் ஒரு நாடக ஆசிரியர்.
அவனுடைய நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகிறது. நாடகம் முடிந்த பின் பார்வையாளர்கள் கலைந்து செல்கிறார்கள். அப்போது வயதான பெண்மணி ஒருத்தி ரீவிடம் வந்து அவனுக்கு ஒரு அழகான தங்க கடிகாரத்தை பரிசாக அளிக்கிறாள். 'என்னிடம் திரும்பி வா' என்கிறாள்! அவள் யாரென்றே ரீவுக்கு தெரியவில்லை. எட்டு வருடங்களுக்குப் பிறகு 1980 இல் மிசிகனில் உள்ள ஒரு ஹோட்டலில் விடுமுறையைக் கழிக்க ரீவ் தங்கி இருக்கிறான். அந்த ஹோட்டலில் அவன் ஒரு அழகிய பெண்ணின் போட்டோ மாட்டப்பட்டிருப்பதை பார்க்கிறான். அது யார் என்று ஹோட்டல் முதலாளியிடம் கேட்கிறான். அவர் அது எலிசா என்ற புகழ்பெற்ற நடிகை என்றும் அவள் 1912 ஆம் ஆண்டு இதே ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சிக்காக தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட
படம் என்றும் சொல்கிறார். ரீவ் எலிசாவின் மேல் காதல் கொள்கிறான். எலிசாவைப் பற்றி மேலும் தகவல் சேகரிக்க ரீவ் லைப்ரரிக்கு செல்கிறான். அங்கே அவளைப் பற்றிய ஒரு புத்தகத்தில் எலிசாவின் கடைசியாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இருக்கிறது. அதைப் பார்த்து ரீவ் அதிர்ச்சி அடைகிறான். அது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவனிடம் வந்து
கடிகாரத்தைப்
பரிசளித்த அதே பெண்மணி தான். ரீவ் அந்த புத்தகத்தை எழுதியவரை சந்திக்கிறான். அவர் எட்டு வருடங்களுக்கு முன்னர் ரீவை சந்தித்த அதே இரவில் எலிசா இறந்து விட்டாள் என்கிறார். ரீவ் எலிசாவின் வீட்டுக்கு செல்கிறான்.அங்கே காலப்பயணம் பற்றிய ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தை எழுதிய ப்ரொபசரை ரீவ் சந்தித்து காலப்பயணம் எப்படி செய்வது என்று கேட்கிறான்.

தன்னைத் தானே ஹிப்னடைஸ் செய்து கொள்வதன்
மூலம்
கடந்த காலத்துக்கு பயணிக்கலாம் என்று அவர் சொல்கிறார். எந்த காலத்துக்கு போகவேண்டுமோ அதற்குப் போவதாக மனதை ஒருமுகப்படுத்தி நமக்கு நாமே திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் அந்த காலத்துக்கு சென்று விடலாம் என்கிறார். இந்த முறையைப் பயன்படுத்தி ரீவ் 1912 ஆம் ஆண்டுக்கு
சென்று எலிசாவை சந்திக்க முடிவு செய்கிறான். ஹோட்டலுக்கு திரும்பி
வந்து அந்த ஹோட்டலின் 1912 ஆம் ஆண்டின் வருகைப் பதிவேட்டைப் பார்க்கிறான். அதில் எலிசாவின் கையெழுத்து இருக்கிறது. ரீவின் கையெழுத்தும் தான்! இதைப் பார்த்து ரீவுக்கு நம்பிக்கை வருகிறது. ரீவ் 1900 ஆம் ஆண்டு மாடலில் ஒரு கோட் தைத்து அணிந்து கொள்கிறான்.
தன் ரூமில் உள்ள அத்தனை புதியகால சாதனங்களையும் அப்புறப்படுத்துகிறான். எலிசா தந்த தங்க கடிகாரத்தை எடுத்துக் கொள்கிறான். கட்டிலில் படுத்துக் கொண்டு 1912 ஆம் வருடத்துக்கு போக வேண்டும் என்று தன்னைத் தானே ஹிப்னடைஸ் செய்து கொள்கிறான். கண்ணைத் திறந்து பார்க்கும்
போது அவன் 1912 ஆம் வருடத்தில் இருக்கிறான். ஹோட்டலின் வரவேற்பறைக்கு சென்று லெட்ஜரில் கையெழுத்து போடுகிறான். (சரியாக அதே நேரத்தில்)

அடுத்த நாள் ஹோட்டலில் ஒரு நடன நிகழ்ச்சிக்காக நடிகை எலிசா வருகிறாள். எலிசாவும் ரீவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கண்டதும் காதல் பிறக்கிறது. ரீவ் அவளை போட்டோ எடுக்கிறான். (அந்த போட்டோ தான் பின்னாளில் ஹோட்டலில் மாட்டப்படுகிறது) அன்று இரவு
ரீவும் எலிசாவும் இணைகிறார்கள்.மறுநாள் காலை இருவரும் கல்யாணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கிறார்கள். ரீவ் எலிசாவுக்கு அந்த தங்க கடிகாரத்தை பரிசளிக்கிறான். எலிசா ரீவின் கோட் மிகவும் பழையதாக இருப்பதாகவும் வேறு ஒரு புதிய கோட்டு இன்று வாங்கலாம் என்றும் சொல்கிறாள். காலை உணவுக்குப் பிறகு இருவரும் ஷாப்பிங் செல்வதாக முடிவெடுக்கிறார்கள். ரீவ் தன் கோட் மிகவும் அழகானது என்று கூறி அதன் ஒவ்வொரு பாக்கெட்டையும் வெளியே எடுத்து காட்டுகிறான்.ஒரு பாக்கெட்டில் ஏதோ ஒரு நாணயம் தட்டுப்படுகிறது. அது என்ன என்று எலிசா கேட்கிறாள். அந்த நாணயம் 1979 என்று காட்டுகிறது. நிகழ்காலத்தின் எல்லா அறிகுறிகளையும் அகற்றிய ரீவ் அந்த நாணயத்தை எப்படியோ மறந்து விடுகிறான். ரீவின் (மாய) இறந்த காலம் (அந்த நாணயத்தால்) கொஞ்ச கொஞ்சமாக அழிகிறது. எலிசா தேய்ந்து போய் மறைகிறாள். ரீவ் மீண்டும் 1980 ஆம் ஆண்டுக்கு வந்து விழுகிறான். ரீவ் மீண்டும் தன்னை ஹிப்னடைஸ் செய்து கொண்டு 1912 க்கு போக முயற்சி செய்கிறான். ஆனால் இப்போது அவனால் போக முடிவதில்லை. அதற்கு பிறகு அவன் மனநலம் இழந்து இறந்து போகிறான். மேல் உலகத்தில் எலிசா அவனை வெள்ளை தேவதை உடையுடன் வரவேற்க படம் இனிதே நிறைவடைகிறது.

இந்த கதையில் வரும் ரீவ் கடந்த காலத்தை எந்த விதத்திலும் மாற்றுவதில்லை. கடந்த காலத்தை அவன் அப்படியே நிறைவேற்றுகிறான்!
பூர்த்தி செய்கிறான்..அவனுக்கு Freewill எதுவும் இருப்பதில்லை.ஆனால் அந்த தங்க கடிகாரம் எங்கிருந்து வந்தது? ரீவ் அதை எலிசாவுக்கு கொடுக்கிறான். எலிசா கிழவியாகி அதை மீண்டும் ரீவிடம் சேர்க்கிறாள்.. ரீவ் காலப்பயணம் செய்து அதை மீண்டும் எலிசாவுக்கு கொடுக்கிறான்! அப்படியானால் அந்த கடிகாரம் எங்கே உருவாக்கபப்ட்டது? எங்கேயும் உருவாக்கப்படவில்லை! அது உற்பத்தி சாலையைப் பார்த்ததே இல்லை! கடவுள் போல ஆதி அந்தம் அற்றது அந்த வாட்ச்! நிறை அழிவின்மை விதிப்படி (Conservation of Mass)இது சாத்தியம் இல்லை! அந்த கடிகாரத்தின் உலகக் கோடு ஒரு தனித்த வளையமாக இருக்கிறது (independent circle ) இந்தக் கதையில் வரும் கடிகாரத்தை ஆராய்ச்சி செய்த இயற்பியலாளர்கள் அதற்கு 'ஜின்' என்று பெயர் வைத்துள்ளார்கள். இதை அரபி மொழியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அரபி மொழியிலும் இஸ்லாம் நம்பிக்கைகளின் படியும் ஜின் என்றால் அல்லாவால் படைக்கப்பட்ட மனிதனுக்கு இணையான உலகத்தில் வாழ்வதாகக் கருதப்படும் அமானுஷ்ய ஜீவிகள்! குரானின் 72 ஆவது சுராஹ் வில் (Al-Jinn ) இதைப் பற்றி வருகிறது. ஜின்கள் மனிதரின் கண்களுக்கு புலப்படாதவர்கள். மனிதனை விட அபாரமான வேகத்தில் வெளியிலும் (காலத்திலும்?) பயணிக்கும் சக்தி வாய்ந்தவர்கள் என்கிறது குரான்.இஸ்லாமின் இந்த கருத்து குவாண்டம் இயற்பியலின் Parallel Universe என்ற கருத்துடன் ஓரளவு ஒத்து வருகிறது.
ரீவ் மற்றும் எலிசாவின் உலகக்கோடுகள் .இருவரின் உலகக்கோடுகளும் இரண்டு இடங்களில்
சந்திக்கின்றன. 1972 மற்றும் 1912 ..படத்தில் A மற்றும் B இரண்டு புள்ளிகளுக்கு இடையே
ரீவின் கோடு மறைந்து போகிறது.


ரீவின் கடிகாரம் போன்ற MACROSCOPIC ஜின்களை இயற்பியல் அனுமதிப்பதில்லை. (ரீவ் கடிகாரத்துக்கு பதில் ஒரு எலக்ட்ரானை எடுத்து செல்கிறான் என்றால் கொஞ்சம் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!) காலத்தால் தேய்மானம் அடையாத எப்போது
ம் சரியான நேரம் காட்டும் கடிகாரத்தை வெப்பவியக்கவியலின் இரண்டாம் விதியும்(Second law of thermodynamics) மறுக்கிறது. கடிகாரத்தின் தேய்மானத்தை சரி செய்து ஒரு புத்தம் புது கடிகாரத்தை எலிசாவின் கையில் கொடுப்பதற்கு பிரபஞ்சம் ஆற்றலை வெளியில் இருந்து கொடுக்க வேண்டி வரலாம்.இது ஒரு நதியை கீழிருந்து உயரத்துக்கு அனுப்புவது போல,வெப்பம் குளிர்ச்சியான பகுதியில் இருந்து சூடான பகுதிக்கு நகர்வது போல இயற்கைக்கு எதிரானது ! துகள்கள் எதுவுமற்ற வெளியில் இருந்து மகாவிஷ்ணு போல தோன்றுவது குவாண்டம் இயற்பியலில் சாத்தியம் தான் என்றாலும் அதற்கு முதலில் தூய ஆற்றல் வேண்டும். ஒரு கடிகாரத்தைப் போன்ற கணிசமான நிறை உள்ள பொருளை உருவாக்க பயங்கர ஆற்றல் தேவைப்படும்.(ஒரு எலக்ட்ரானை உருவாக்கத் தேவையான ஆற்றல் E= MC2 = 9.10938188 × 10 ^-31 (3x10^8)2 = 81.9 x 10 ^ -15 ஜூல்)


சரி இங்கே நம் காலத்தைப் பற்றிய விவாதங்களுக்கு ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொள்வோம். நிறைக்கும் ஆற்றலுக்கும் என்ன தொடர்பு? E =MC2 என்றால் என்ன? நிறை ஆற்றலாகவும் ஆற்றல் நிறையாகவும் மாறுமா?
அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு நகரங்கள் அழிவதற்கு ஐன்ஸ்டீன் தான் காரணமா?இதைப் பற்றியெல்லாம் அடுத்த சில அத்தியாயங்களில் பேசலாம்.

சமுத்ரா

12 comments:

G.M Balasubramaniam said...

நான் உங்கள் தொடர்பாளனாக இருந்தும் இப்பதிவு என் டாஷ் போர்டில் வரவில்லை.இன்னுமொரு சிலரது பதிவுகளும் வரவில்லை. தமிழ்மணம் பார்க்கும்போது இது தென்பட்டது. காரணம் ஏதாவது கூறமுடியுமா.?நன்றி.

bandhu said...

//இப்பதிவு என் டாஷ் போர்டில் வரவில்லை.//
இது போன்ற ப்ரச்சனைகளுக்காகத்தான், நான் அணு அண்டம் அறிவியல் -41 படித்தவுடன் கால இயந்திரத்தில் வந்து இதையும் படித்து விட்டேன் :-)

Uma said...

To be frank, கொஞ்சம் 'போர்' அடிச்சுதுங்க.....

சமுத்ரா said...

'போர்' அடிக்கிறது என்று கருதுபவர்கள் ௮-௮-௮ வகுப்பில் இருந்து வெளியேற முழு சுதந்திரம்
அளிக்கப்படுகிறது :)

drgeethan said...

அருமையான பதிப்பு .. வாழ்த்துக்கள்

........./ / / காலப் பயணங்கள் மூலம் CONSISTENT (முரண்பாடுகள் அற்றதாக) இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.அதாவது நீங்கள் கடந்த காலத்துக்கு சென்று உங்கள் இளவயது பாட்டியுடன் காபி சாப்பிடலாம் ; ஆனால் அவளைக் கொல்ல முடியாது..........////

இது பற்றி என் மனதில் தோன்றும் கருத்து ... ( தவறாகவும் இருக்கலாம் .. விவாதத்திற்கு உரியது)
...
இயற்க்கை விதிகளின் படி நாம் கடந்த காலத்திற்கு சென்றால் , அவர்களுடன் காபி கூட குடிக்க முடியாது. ஏன்... ஒரு அணு / எலக்ட்ரான் அளவிற்கு கூட அக் காலகட்ட நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது.ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல - Silent Observer - ஆக தான் இருக்க முடியும்.உங்களையும் அவர்களால் உணர முடியாது.
உதாரணத்திற்கு >>>
கி.பி.3000 ல் (கால பயணம் தெரிந்த ) உள்ளவர்கள் , நம்மை தற்போது பார்த்து கொண்டிருக்கலாம் .அவர்களை நம்மால் உணரமுடியாது.அவர்களும் தற்போதைய நிகழ்வுகளில் எந்த தொடர்பையோ . பாதிப்பையோ ஏற்படுத்த முடியாது.அதாவது கி.பி.3000 ல் உள்ளவர் நான்கு பரிமாணங்களில் ( 3+காலம் .. அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணங்களில்) ஒரு உண்மை - LIVE- வரலாற்று தொடர் பார்ப்பது போல...

கற்பனையாக பார்க்கும் போது நாம் எதிர்காலத்திற்கு சென்றாலும் இதே போல் தான் ..
Eg.).. நம்மிடையே பழங்கால (கால பயணம் தெரிந்த ) சித்தர்கள் வாழ்வதாக / அல்லது நம் காலத்தை பார்த்து கொண்டிருப்பதாக வைத்து கொள்வோம் . நாம் அவர்களை பார்க்கவோ / உணரவோ முடியாது.ஆனால் நம் காலத்தை அவர்கள் - Silent Observer - களாக பார்த்துகொண்டிருக்கலாம். ( இப்படி பார்த்துதான் அகத்தியர் நாடி ஜோதிடம் எழுதி இருப்பாரா ?? ! )..

சித்தர்கள் / ஞானிகள் / மத குருமார்கள் போன்றோர் இறப்பு இல்லாதவர்கள் ... காலத்தை வென்றவர்கள் என்பது இப்படியாக இருக்கலாம் ..ஒரு வேலை இவர்களை போல் நாமும் " கால பயண அறிவு" பெற்றிருந்தால் எதிர் காலத்தை காண முடியுமோ ? அதை பார்த்து எதிர்காலத்தை (like-Nostradamus)கணிக்க முடியுமா - என தெரியவில்லை.

பொதுவாக இந்த உலகம் / இயற்க்கை / உயிர் - போன்றவை எல்லாம் எல்லையற்றது . ஆனால் மனித அறிவு என்பது ஒரு எல்லை உடையது.அது தான் நமக்கு உள்ள பிரச்சனையே ..மனிதன் என்பவன் உலகிலேயே ""அறிவுள்ள ஜீவி "" என்பதெல்லாம் உண்மையாக தெரியவில்லை.

Anonymous said...

That is REALITY

sathish434 said...

கடந்த காலத்துக்கு போவது பற்றி ஆசை மனிதனுக்கு எப்போதும் உண்டு. அவனை திருப்திபடுத்துவே ஐன்ஸ்டீன் இப்படி இருந்தால் போகலாம் என்று விஞ்சானரீதியாக ஏதோ சொல்லிட்டு போய்விட்டார். உண்மையிலே அது சாத்தியம் இல்லாதது. ஆனால் இது சாத்தியமில்லை என்று சொல்றவங்களை விட சாத்தியம் என்று சொல்றவங்களைதான் எல்லோருக்கும் பிடிக்குது. யாரும் தங்களுடைய சுவாரஸ்யமான கற்பனைகளை இழக்க தயாராக இல்லை. சில தீர்க்கதரிகள் எதிர்காலத்தில் நடக்க போவதை மனகண்ணால் கண்டறிந்து சொல்வார்கள். அது மாதிரி மன கண்ணால் கடந்த காலத்தில் என்ன நடந்திருக்கும் என்று காட்சிகளாக பார்த்து வேண்டுமானால் யாராவது சொல்லாம். மற்றபடி கடந்த காலத்துக்கு போய் வாழ்வது அங்கே உள்ளவர்களிடம் உரையாடலாம் என்பதெல்லாம் மனிதனுடைய நல்ல கற்பனைதான். மனம் தான் காலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. அதனால் நிகழ்காலத்தில் வாழ முடியவில்லை. அதனால் அது கடந்த கால நினைவுகளிலும் எதிர்கால கற்பனைகளிலுமே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அப்பாதுரை said...

தற்செயலாக உங்கள் பதிவில் இறங்க நேர்ந்தது. மிகவும் ரசித்தேன். இந்தத் தலைப்பில் நாற்பதுக்கு மேல் எழுதியிருக்கிறீர்களா? மொத்தத்தையும் படிக்கத் தூண்டியது.

இணையுலகப் பயணம் சாத்தியம் என்று தோன்றுகிறது. இதைப் பற்றியப் புரிதல் இன்னும் பரவலாகவும் ஆழமாகவும் வேண்டும். நுட்பமும் வேண்டும். சிறு superposition சோதனைகளை இன்றைக்குச் செய்து பார்க்க முடிகிறது.

எதிர்காலப்பயணம் - சில நிமிடங்களே என்றாலும் இன்றைக்கு முடியும். கடந்தகாலப் பயணம் நிறைய இயற்கை விதிகளுக்கு (இன்றைக்குத் தெரிந்த) முரணாவதால் முடியாது என்றே தோன்றுகிறது.

ஓசைப்படாமல் எழுதி வந்திருக்கிறீர்களே! :)

இராஜராஜேஸ்வரி said...

துகள்கள் எதுவுமற்ற வெளியில் இருந்து மகாவிஷ்ணு போல தோன்றுவது குவாண்டம் இயற்பியலில் சாத்தியம் தான் என்றாலும் அதற்கு முதலில் தூய ஆற்றல் வேண்டும். ஒரு கடிகாரத்தைப் போன்ற கணிசமான நிறை உள்ள பொருளை உருவாக்க பயங்கர ஆற்றல் தேவைப்படும்.//

பகிர்வு சுவாரஷ்யமாக இருக்கிறது.பாராட்டுக்கள்.

ஷர்புதீன் said...

PRESENT SIR!

waiting for MASS-ENERGY matters!!

VELU.G said...

தொடர்கிறேன்

ராக்கெட் ராஜா said...

எனக்கு space black holes பற்றி தெரிந்து கொள்ள ஆசை அதை பற்றிய பதிவை எதிர் பார்கிறேன் நண்பரே